பூமி முழுவதிலும் சுறுசுறுப்பாய் செயல்படும் ராஜ்ய அறிவிப்பாளர்கள்
“பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8.
1. என்ன செய்தியை நம்முடைய நாளில் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் அறிவிப்பார்கள் என்று அவர் சொன்னார்?
யெகோவா தம்முடைய குமாரனை பூமியில் செய்யும்படி அனுப்பிய வேலையைப் பற்றி விவரிக்கையில், இயேசு சொன்னார்: “நான் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும்.” (லூக்கா 4:43, NW) அதேவிதமாக, அவர் அரச அதிகாரத்தோடு திரும்பி வருகையில் பூமியில் தம்முடைய சீஷர்கள் செய்யப்போகும் வேலையைக்குறித்துச் சொல்கையில், இயேசு சொன்னார்: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14, NW.
2. (அ) ராஜ்ய செய்தியை பரந்தவிதத்தில் பிரச்சாரம் செய்வது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது? (ஆ) நாம் எல்லாரும் நம்மைநாமே என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
2 கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய செய்தி ஏன் அவ்வளவு முக்கியமானது? அந்த ராஜ்யத்திற்கு அப்படிப்பட்ட விரிவான பிரச்சாரம் ஏன் தேவைப்படுகிறது? ஏனென்றால், அந்த மேசியானிய ராஜ்யமே யெகோவாவின் சர்வலோக அரசாட்சியை நியாயநிரூபணம்செய்யும். (1 கொரிந்தியர் 15:24-28) அதன்மூலம், யெகோவா இந்தத் தற்போதைய சாத்தானிய காரிய ஒழுங்குமுறைக்கு விரோதமாக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி பூமியில் இருக்கிற சகல குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதற்குத் தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார். (ஆதியாகமம் 22:17, 18; தானியேல் 2:44) இந்த ராஜ்யம் சம்பந்தமாக சாட்சி கொடுக்கப்படும்படி செய்திருப்பதன் மூலம், யெகோவா தம்முடைய குமாரனோடு உடன் சுதந்தரவாளிகளாக இருப்பதற்காக அதன்பிறகு அபிஷேகம் செய்தவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார். ராஜ்ய அறிவிப்பின் மூலம், ஒரு பிரிக்கும் வேலையும் இன்று செய்யப்பட்டு வருகிறது. (மத்தேயு 25:31-33) யெகோவா தம்முடைய நோக்கத்தைக்குறித்து சகல தேசத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார். அவர்கள் தம்முடைய ராஜ்யத்தின் குடிமக்களாக, ஜீவனைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற அவர் விரும்புகிறார். (யோவான் 3:16; அப்போஸ்தலர் 13:47) இந்த ராஜ்யத்தை அறிவிப்பதில் நீங்கள் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருக்கிறீர்களா?
புறஜாதியாரின் காலங்களுடைய முடிவிற்கான எதிர்பார்ப்புடன்
3. (அ) பொருத்தமாகவே, பைபிள் படிப்பிற்காக குழுக்களை அமைப்பதற்கான ஓர் ஆரம்ப பயணத்தில் C. T. ரஸல் சிறப்பித்துக்காட்டிய பேச்சுப்பொருள் என்ன? (ஆ) அந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள், கடவுளுடைய ராஜ்யம் தங்கள் வாழ்க்கையில் வகிக்கும் பாகத்தைக் குறித்து எதை உணர்ந்தார்கள்?
3 உவாட்ச் டவர் பத்திரிகையின் முதல் பதிப்பாளர், சார்ல்ஸ் டேஸ் ரஸல், 1880-ல், பைபிள் படிப்பிற்காகக் குழுக்களை உருவாக்குவதற்கு ஊக்குவிப்பைக் கொடுக்க வடகிழக்கு ஐக்கிய மாகாணங்கள் வழியாகப் பயணம் செய்தார். பொருத்தமாகவே, “கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தமான காரியங்கள்” என்பது அவருடைய பேச்சுப் பொருளாகும். உவாட்ச் டவர்-ன் ஆரம்ப பிரதிகளில் காண்பிக்கப்பட்டபடி, பைபிள் மாணாக்கர்கள் (யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறு அறியப்பட்டிருந்தனர்), கடவுளுடைய ராஜ்யத்தில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்குத் தகுதியுள்ளவர்களாய் தங்களை நிரூபிக்கப்போகிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கை, தங்கள் திறமைகள், தங்கள் வளங்கள் ஆகியவற்றை சந்தோஷமாக அதன் சேவையில் பயன்படுத்தி, ராஜ்யத்தை அவர்களுடைய முதலாவது அக்கறையாக வைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். வாழ்க்கையில் வேறு எதுவும் இரண்டாம் இடத்தைப் பெற வேண்டும். (மத்தேயு 13:44-46) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதையும் அவர்களுடைய பொறுப்பு உட்படுத்தியது. (ஏசாயா 61:1, 2) 1914-ல் புறஜாதியாரின் காலங்களுடைய முடிவிற்கு முன் அவர்கள் எந்த அளவிற்கு அதைச் செய்தனர்?
4. 1914-க்கு முன் பைபிள் மாணாக்கர்களின் அந்தச் சிறிய தொகுதி எந்த அளவிற்கு பைபிள் பிரசுரத்தை விநியோகித்தது?
4 1870-களிலிருந்து 1914 வரை, பைபிள் மாணாக்கர்கள் எண்ணிக்கையில் ஒருசிலரே இருந்தார்கள். வெளியரங்கமாக சாட்சி கொடுப்பதில், 1914-ற்குள், சுமார் 5,100 பேர் மட்டுமே சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அது என்னே ஒரு மாபெரும் சாட்சிகொடுக்கும் வேலை! உவாட்ச் டவர் முதன்முதலாகப் பிரசுரிக்கப்பட்டு, இரண்டே வருடங்களுக்குப் பிறகு, 1881-ல், சிந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கு உணவு (Food for Thinking Christians) என்ற 162-பக்க பிரசுரத்தைச் சகோதரர்கள் விநியோகிக்கத் துவங்கினார்கள். ஒருசில மாதங்களுக்குள், 12,00,000 பிரதிகளை விநியோகித்தார்கள். ஒருசில வருடங்களில், கோடிக்கணக்கான துண்டுப்பிரதிகள் வருடாவருடம் அநேக மொழிகளில் விநியோகிக்கப்பட்டன.
5. கால்போர்டர்கள் யாவர், அவர்கள் என்ன வகையான மனநிலையை வெளிக்காட்டினர்?
5 மேலும் 1881-ல் துவங்கி, சிலர் கால்போர்டர் (colporteur) சுவிசேஷகர்களாக தங்கள் சேவைகளை அளித்தனர். இவர்களே இன்றைய பயனியர்களின் (முழு நேர சுவிசேஷகர்கள்) முன்னோடிகள். சில கால்போர்டர்கள், கிட்டத்தட்ட அவர்கள் வசித்துவந்த நாட்டின் ஒவ்வொரு பாகத்திற்கும் கால்நடையாகவோ சைக்கிளிலோ சென்று தனிப்பட்ட விதமாக சாட்சிகொடுத்தார்கள். மற்றவர்கள் அயல் நாடுகளுக்குச் சென்றார்கள்; பின்லாந்து, பார்படாஸ், பர்மா (இப்போது மயன்மார்) போன்ற நாடுகளுக்கு முதன்முதலாக நற்செய்தியை எடுத்துச்சென்றவர்கள் அவர்களே. அவர்கள் இயேசு கிறிஸ்துவுடையதையும் அவருடைய அப்போஸ்தலருடையதையும் ஒத்த மிஷனரி வைராக்கியத்தை வெளிக்காட்டினர்.—லூக்கா 4:43; ரோமர் 15:23-25.
6. (அ) பைபிள் சத்தியத்தைப் பரப்புவதற்கு சகோதரர் ரஸலின் பயணங்கள் எந்த அளவிற்கு விரிவானவையாய் இருந்தன? (ஆ) புறஜாதியாருடைய காலங்களின் முடிவிற்குமுன் அயல்நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை முன்னேற்றுவிப்பதற்கு வேறு எதுவும் செய்யப்பட்டது?
6 சகோதரர் ரஸல்தாமே சத்தியத்தைப் பரப்ப விரிவான பயணத்தை மேற்கொண்டார். அடிக்கடி கனடாவுக்கு அவர் சென்றார்; பனாமா, ஜமைக்கா, கியூபா ஆகிய இடங்களில் பேசினார்; ஐரோப்பாவுக்குப் பன்னிரண்டு தடவைகள் பயணம் செய்தார்; இவ்வாறு ஒரு சுவிசேஷக சுற்றுப்பயணமாக உலகைச் சுற்றிவந்தார். அயல் நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதைத் துவக்கி வைக்கவும் முன்நின்று வழிநடத்தவும் மற்ற ஆட்களையும் அவர் அனுப்பினார். ஆடால்ஃப் வேபெர் என்பவர் மத்திப 1890-களில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டார்; அவருடைய ஊழியம் ஸ்விட்ஸர்லாந்தில் துவங்கி பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, மற்றும் பெல்ஜியத்தைச் சென்றெட்டியது. E. J. கெளயர்ட் என்பவர் கரிபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டார். ராபர்ட் ஹால்லஸ்டர் என்பவர் 1912-ல் கீழைநாடுகளுக்கு நியமிக்கப்பட்டார். அங்கு, பத்து மொழிகளில் விசேஷ துண்டுப்பிரதிகள் தயாரிக்கப்பட்டன; லட்சக்கணக்கான துண்டுப்பிரதிகள் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா முழுவதும் அந்தந்த நாட்டிலுள்ள விநியோகஸ்தர்களால் கொடுக்கப்பட்டன. நீங்கள் அப்போது வாழ்ந்திருந்தீர்களென்றால், நற்செய்தியுடன் உங்கள் சமுதாயத்திலுள்ள மற்றவர்களையும் அதற்கு அப்பாலும் சென்றெட்ட உள்ளார்வத்துடன் முயற்சி செய்யும்படி உங்கள் இருதயம் உங்களைத் தூண்டியிருக்குமா?
7. (அ) சாட்சிகொடுப்பதை தீவிரப்படுத்த செய்தித்தாள்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? (ஆ) “சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடகம்,” என்பது என்ன, ஒரேவொரு வருடத்தில் எத்தனை மக்கள் அதைப் பார்த்தனர்?
7 புறஜாதியாரின் காலங்கள் அவற்றின் முடிவை நெருங்கியபோது, சகோதரர் ரஸலால் கொடுக்கப்பட்ட பைபிள் பிரசங்கங்களைப் பிரசுரிப்பதற்கு செய்தித்தாள்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் முக்கியமான அழுத்தம் 1914 என்ற வருடத்தின் மேலல்ல, ஆனால் மாறாக, கடவுளுடைய நோக்கத்தின்மீதும் அதன் நிறைவேற்றத்தின் உறுதியின்மீதுமாக இருந்தது. ஒரே சமயத்தில் ஏறத்தாழ 2,000 செய்தித்தாள்கள், 1,50,00,000 வாசகர்களைச் சென்றெட்டி, இந்தப் பிரசங்கங்களை ஒழுங்காய் வெளியிட்டு வந்தன. பிறகு, 1914-ம் வருடம் பிறந்தபோது, சங்கம் “சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடகம்” என்ற படத்தைப் பொது மக்களுக்குக் காட்டத் துவங்கியது. நான்கு 2-மணிநேர ஒலிப்படக் காட்சிகளில், சிருஷ்டிப்பு முதல் ஆயிர வருட ஆட்சிக்குட்செல்லும் வரையாக உள்ள பைபிள் சத்தியங்களை அது அளித்தது. ஒரேவொரு வருடத்திற்குள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூ ஜீலாந்து ஆகிய இடங்களில் இருந்து மொத்தமாக 90 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் அதைப் பார்த்திருந்தனர்.
8. 1914-ற்குள், எத்தனை தேசங்களை பைபிள் மாணாக்கர்கள் நற்செய்தியுடன் சென்றெட்டியிருந்தனர்?
8 கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி, 1914-ன் பிற்பகுதிக்குள், இந்த வைராக்கியமுள்ள சுவிசேஷகர்கள் அடங்கிய அணி 68 நாடுகளில் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய அறிவிப்பைப் பரப்பியிருந்தார்கள்.a ஆனால் அது வெறும் ஒரு துவக்கமே!
ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தை வைராக்கியத்துடன் அறிவித்தல்
9. சீடர் பாய்ன்ட் மாநாடுகளில், ராஜ்ய சாட்சி கொடுக்கும் வேலைக்கு எவ்வாறு விசேஷித்த உந்துவிப்பு கொடுக்கப்பட்டது?
9 1919-ல், பைபிள் மாணாக்கர்கள் ஒஹாயோவிலுள்ள சீடர் பாய்ன்ட்டில் கூடிவந்தபோது, அப்போது உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவராயிருந்த J. F. ரதர்ஃபர்ட் இவ்வாறு அறிவித்தார்: “மேசியாவின் வரவிருக்கிற மகிமையான ராஜ்யத்தை அறிவிப்பதே நம்முடைய வேலையாக இருந்தது, இன்னும் இருக்கிறது.” சீடர் பாய்ன்ட்டில் நடந்த இரண்டாம் மாநாட்டில், 1922-ல், சகோதரர் ரதர்ஃபர்ட் புறஜாதியாருடைய காலங்களின் முடிவில், 1914-ல், ‘மகிமையின் அரசர் தம்முடைய மிகுந்த அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, ஆளத் துவங்கிவிட்டார்,’ என்ற உண்மையைச் சிறப்பித்துக் காட்டினார். அடுத்ததாக, அவர் இவ்வாறு சொல்வதன்மூலம் பிரச்னையை நேரடியாக பார்வையாளரின் முன்வைத்தார்: “மகிமையின் அரசர் ஆளத் தொடங்கிவிட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் மகா உன்னத கடவுளின் புத்திரரே, மீண்டும் களத்தில் இறங்குங்கள்! . . . செய்தியை எங்கும் அறிவியுங்கள். யெகோவா கடவுள் என்பதையும் இயேசு கிறிஸ்துவே ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் என்று உலகம் அறியட்டும். இதுவே மகத்தான நாள். இதோ, ராஜா அரசாளுகிறார்! நீங்களே அவருடைய பிரசித்திப்படுத்தும் முகவர்கள்.”
10, 11. வானொலி, ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார்கள், விளம்பர அட்டைகள் ஆகியவை அனைத்தும் ராஜ்ய சத்தியத்துடன் மக்களைச் சென்றெட்ட எவ்வாறு திறம்பட்டவிதத்தில் பயன்படுத்தப்பட்டன?
10 அந்தச் சீடர் பாய்ன்ட் மாநாடுகள் முடிந்து 70-க்கும் மேற்பட்ட வருடங்கள் கடந்துவிட்டன—யெகோவா தம் குமாரனுடைய மேசியானிய ஆட்சியின் மூலம் தம்முடைய அரசாட்சியைச் செயல்படுத்த துவங்கி கிட்டத்தட்ட 80 வருடங்கள் கடந்துவிட்டன. யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையில் தங்களுக்காக வரையறுக்கப்பட்ட வேலையை உண்மையில் எந்தளவிற்குச் செய்துமுடித்திருக்கிறார்கள்? தனிப்பட்டவர்களாக நீங்கள் அதில் என்ன பங்கைக் கொண்டிருக்கிறீர்கள்?
11 1920-களின் ஆரம்பத்தில் ராஜ்ய செய்தியை மிகவும் பிரஸ்தாபப்படுத்த பயன்படுத்தப்படக்கூடிய ஒரு கருவியாக வானொலி கிடைத்தது. 1930-களின்போது, ராஜ்யமே உலகிற்கு நம்பிக்கை என்பதைச் சிறப்பித்துக்காட்டிய மாநாட்டுப் பேச்சுக்கள், ரேடியோ இணைப்புகள் அல்லது சங்கிலித்தொடர்பு ஒலிபரப்புகள் மேலும் உலகமெங்குமிருந்த டெலிஃபோன் கம்பிகள் மூலம் கடத்தப்பட்டன. பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுக்களைப் பொது இடங்களில் கேட்கச் செய்வதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட கார்களும் பயன்படுத்தப்பட்டன. பின்னர், 1936-ல், ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் நம்முடைய சகோதரர்கள் பொதுப் பேச்சுக்களை விளம்பரப்படுத்துவதற்கு வியாபார பகுதிகள் வழியாக விளம்பர அட்டைகளை அணிந்துகொண்டு அணிவகுத்துச் செல்லத் துவங்கினார்கள். நம்முடைய எண்ணிக்கைகள் மிகவும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில், அநேகருக்குச் சாட்சி கொடுக்க இவை எல்லாமே திறம்பட்ட ஏதுக்களாய் இருந்தன.
12. வேத எழுத்துக்கள் காண்பிக்கிறபடி, நாம் தனிப்பட்ட விதத்தில் சாட்சி கொடுப்பதற்கு மிகத் திறம்பட்ட வழிகளில் ஒன்று எது?
12 கிறிஸ்தவர்களாக, சாட்சிகொடுப்பதற்கு தனிப்பட்ட விதத்தில் நமக்குப் பொறுப்பிருப்பதை வேத எழுத்துக்கள் தெளிவாகக் காட்டுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அந்த வேலையை வெறுமனே செய்தித்தாள் கட்டுரைகளோ வானொலி ஒலிபரப்புகளோ செய்வதற்கு நாம் விட்டுவிடமுடியாது. ஆயிரக்கணக்கான உண்மையுள்ள கிறிஸ்தவர்கள்—ஆண்கள், பெண்கள், மேலும் இளைஞர்—அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அதன் பலனாக, வீட்டுக்கு வீடு ஊழியம் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஓர் அடையாளக் குறியாகி இருக்கிறது.—அப்போஸ்தலர் 5:42; 20:20.
குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சென்றெட்டுவது
13, 14. (அ) ஏன் சில சாட்சிகள் மற்ற நகரங்களுக்கு, மற்ற நாடுகளுக்கும்கூட தங்கள் ஊழியத்தைத் தொடரும்படி குடிபெயர்ந்து செல்கின்றனர்? (ஆ) தாங்கள் சொந்த நாட்டிலுள்ள மக்கள்மீதுள்ள அன்பான அக்கறை நற்செய்தியைப் பரப்புவதற்கு எவ்வாறு உதவி செய்திருக்கிறது?
13 யெகோவாவின் சாட்சிகளில் சிலர், ராஜ்ய செய்தி குடியிருக்கப்பட்ட பூமி எங்கும் பிரசங்கிக்கப்படவேண்டும் என்பதை அறிந்தவர்களாய், தங்களுடைய சொந்த சமுதாயத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளைச் சென்றெட்ட தனிப்பட்ட விதத்தில் என்ன செய்யலாம் என்பதைக் கவனமாகச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.
14 அநேகர் தங்களுடைய சொந்த ஊரைவிட்டு குடிபெயர்ந்து சென்ற பிறகு சத்தியத்தைக் கற்றிருக்கிறார்கள். அவர்கள் பொருளாதார பயனுக்காகக் குடிபெயர்ந்து சென்றிருக்கக்கூடும் என்றாலும், அதிக விலையுயர்ந்த ஏதோவொன்றைக் கண்டடைந்திருக்கிறார்கள்; மேலும் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள சிலர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு அல்லது சமூகத்திற்கு திரும்பிவர உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு, இந்த நூற்றாண்டின் முற்பகுதியில், நற்செய்தியைப்பற்றிய பிரசங்கிப்பு, ஸ்கான்டிநேவியா, கிரீஸ், இத்தாலி, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள நாடுகள் மற்றும் வேறுபல பகுதிகளில் விரிவடைந்தது. இப்போதும்கூட, 1990-களில், ராஜ்ய செய்தி அதேவிதத்தில் பரவுகிறது.
15. 1920-களிலும் 1930-களிலும், ஏசாயா 6:8-ல் குறிப்பிடப்பட்டதைப் போன்ற மனநிலையை உடைய சிலரால் என்ன நிறைவேற்றப்பட்டது?
15 கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனையைத் தங்கள் வாழ்க்கையில் அப்பியாசித்து வருகையில், சிலர், தாங்கள் முன்னர் வாழ்ந்திராத இடங்களில் சேவைசெய்ய தங்களையே முன்வந்து அளித்திருக்கிறார்கள். W. R. ப்ரெளன் என்பவர் (அடிக்கடி “பைபிள் ப்ரெளன்” என்று அழைக்கப்பட்டவர்) இவர்களில் ஒருவர். இவர் சுவிசேஷ வேலையை முன்னேற்றுவிப்பதற்காக 1923-ல் ட்ரினிடாடிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 1930-களில், ஃப்ராங்க் மற்றும் க்ரே ஸ்மித், ராபர்ட் நிஸ்பட் மற்றும் டேவட் நார்மன் ஆகியோர் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரத்திற்கு ராஜ்ய செய்தியைக் கொண்டுசென்றோரில் உட்படுவர். மற்றும் சிலர் தென் அமெரிக்காவில் சாட்சிகொடுக்க உதவினர். கனடா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் யங் என்பவர், 1920-களின் முற்பகுதியில் அர்ஜன்டினா, பிரேஸில், பொலிவியா, சிலி, மற்றும் பெரு ஆகிய இடங்களில் இந்த வேலையில் பங்குகொண்டார். ஸ்பெய்னில் சேவைசெய்துவந்த க்வான் மியூனிஸ் என்பவர் அர்ஜன்டினா, சிலி, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளிலும் தன் சேவையைத் தொடர்ந்துசெய்தார். இவை யாவும் “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா 6:8-ல் குறிப்பிடப்பட்டதைப் போன்ற மனநிலையை வெளிக்காட்டியது.
16. போருக்கு முன்னான வருடங்களில், மக்கள்தொகை நிறைந்த முக்கியமான மையங்களைத் தவிர வேறெங்கும் சாட்சிகொடுக்கப்பட்டு வந்தது?
16 இன்னும் அதிக தொலைவிலுள்ள பகுதிகளிலும் நற்செய்தியைப்பற்றிய பிரசங்கிப்புச் சென்றெட்டிக்கொண்டிருந்தது. சாட்சிகள் ஓட்டிச்சென்ற படகுகள், நியூபெளண்ட்லாந்தின் எல்லா இதர துறைமுகங்களுக்கும் ஆர்க்டிக்கில் உள்ள நார்வீஜிய கரையோரப் பகுதிகளுக்கும் பசிபிக்கில் உள்ள தீவுகளுக்கும் மேலும் தென்கிழக்கு ஆசியாவின் துறைமுகங்களுக்கும் சென்றுவந்தன.
17. (அ) 1935-ற்குள், எத்தனை தேசங்கள் சாட்சிகளால் சென்றெட்டப்பட்டிருந்தன? (ஆ) அந்தச் சமயத்தில் வேலை ஏன் முடிவு பெறவில்லை?
17 ஆச்சரியந்தரும் விதமாக, யெகோவாவின் சாட்சிகள் 1935-க்குள், 115 நாடுகளில் மும்முரமாய் பிரசங்கித்து வந்தார்கள்; மேலும் அவர்கள் சாட்சிகொடுக்கச்செல்லும் பயணங்கள் மூலமாகவோ தபாலில் பிரசுரங்களை அனுப்பியதன் மூலமாகவோ இன்னும் 34 நாடுகளைச் சென்றெட்டியிருந்தார்கள். இருந்தாலும், வேலை முடிவடையவில்லை. அந்த வருடம், யெகோவா, தம்முடைய புதிய உலகிற்குள்ளே தப்பிப்பிழைக்கும் ‘ஒரு திரள் கூட்டத்தை’ கூட்டிச்சேர்க்கும் தம் நோக்கத்திற்கு அவர்கள் கண்களைத் திறந்தார். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) இன்னும் அதிக சாட்சிக்கொடுக்கப்பட வேண்டியதாய் இருந்தது!
18. ராஜ்ய அறிவிப்பு வேலையில், கிலியட் பள்ளி, ஊழியப் பயிற்சி பள்ளி ஆகியவை என்ன பாகத்தை நிறைவேற்றியிருக்கின்றன?
18 இரண்டாம் உலகப் போர் பூமியைச் சூழ்ந்துகொண்டு, பல தேசங்களில் பிரசுரங்களுக்கு அல்லது யெகோவாவின் சாட்சிகளின் வேலைக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தபோதுகூட, சர்வதேச ராஜ்ய அறிவிப்பைக் குறித்த இன்னும் ஒரு பெரிய வேலையை நிறைவேற்றுவதற்கு எதிர்கால மிஷனரிகளைப் பயிற்றுவிக்க உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி துவங்கியது. இது வரை, 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் கிலியட் பட்டதாரிகள் சேவை செய்திருக்கிறார்கள். வெறுமனே பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிடுவதற்கும் மேலாக அதிகத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் பைபிள் படிப்புகளை நடத்தி, சபைகளை அமைத்து, தேவராஜ்ய பொறுப்பை ஏற்றுக்கொள்ள மக்களைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். மிக சமீபத்தில், ஊழியப் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட மூப்பர்களும் உதவி ஊழியர்களும், ஆறு கண்டங்களில், இந்த வேலை சம்பந்தமான அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியும் உதவியிருக்கின்றனர். தொடர்ச்சியான வளர்ச்சிக்காக உறுதியான அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது.—2 தீமோத்தேயு 2:2-ஐ ஒப்பிடவும்.
19. தேவை அதிகமிருக்கும் இடங்களில் சேவை செய்வதற்கான அழைப்பிற்கு யெகோவாவின் ஊழியர்கள் எந்த அளவிற்குப் பிரதிபலித்திருக்கின்றனர்?
19 ஊழியம் செய்யப்படாத சில பிராந்தியங்களைக் கவனித்துக்கொள்ள மற்றவர்கள் உதவிசெய்ய முடியுமா? 1957-ல், உலகமுழுவதிலும் நடைபெற்ற மாநாடுகளில், தனிப்பட்ட ஆட்களும் குடும்பத்தினர்களும்—யெகோவாவின் முதிர்ச்சிவாய்ந்த சாட்சிகள்—அதிக தேவையிருக்கிற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்று, அங்குத் தங்கி தங்களுடைய ஊழியத்தைத் தொடர்வதைக் குறித்துச் சிந்திக்கும்படி உற்சாகமளிக்கப்பட்டார்கள். இந்த அழைப்பு, அப்போஸ்தலன் பவுலுக்குக் கடவுள் அளித்த தரிசனத்துக்கு ஒத்திருந்தது; ‘மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும்’ என்று ஒரு மனிதன் தன்னை வேண்டிக்கொண்டதை அவர் கண்டார். (அப்போஸ்தலர் 16:9, 10) சிலர் 1950-களில் குடிபெயர்ந்து சென்றார்கள்; மற்றவர்கள் அதற்குப் பிறகு சென்றார்கள். ஏறத்தாழ ஆயிரம் சாட்சிகள் அயர்லாந்துக்கும் கொலம்பியாவுக்கும் குடிபெயர்ந்து சென்றார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் வேறுபல இடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றார்கள். பத்தாயிரக்கணக்கான ஆட்கள் தங்களுடைய சொந்த நாட்டில் அதிக தேவையிருக்கும் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றார்கள்.—சங்கீதம் 110:3.
20. (அ) 1935 முதற்கொண்டு, மத்தேயு 24:14-லுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக என்ன செய்துமுடிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) கடந்த ஒருசில வருடங்களின்போது, இந்த வேலை எவ்வாறு தீவிரமாக்கப்பட்டிருக்கிறது?
20 யெகோவாவின் மக்களுக்கு அவருடைய ஆசீர்வாதத்துடன், ராஜ்ய அறிவிப்பு வேலை அசாதாரணமான வேகத்தில் தொடர்ந்து முன்னேறுகிறது. 1935 முதற்கொண்டு, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய எண்பது மடங்காக அதிகரித்திருக்கிறது; பயனியர் அணிகளின் அதிகரிப்பு வீதம், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு வீதத்தைவிட 60 சதவீதம் அதிகமாகியிருக்கிறது. வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாடு 1930-களில் தொடங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 45 லட்சத்திற்கும் அதிகமான படிப்புகள் நடத்தப்படுகின்றன. 1935-லிருந்து, 1,500 கோடிக்கும் அதிகமான மணிநேரங்கள் ராஜ்ய அறிவிப்பு வேலைக்குச் செலவிடப்பட்டிருக்கின்றன. தற்போது 231 தேசங்களில் ஒழுங்கான பிரசங்க வேலை செய்யப்பட்டு வருகிறது. கிழக்கு ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள பிராந்தியங்கள் நற்செய்தியைச் சுதந்திரமாய்ப் பிரசங்கிப்பதற்குத் திறக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு முன்பாக ராஜ்ய செய்தியை முக்கியமானதாகக் காண்பிக்க சர்வதேச மாநாடுகள் திறம்பட உபயோகிக்கப்பட்டு வருகின்றன. ஏசாயா 60:22-ல் யெகோவா வெகு காலத்திற்கு முன்பாக வாக்குக் கொடுத்ததுபோல, அவர் நிச்சயமாகவே ‘ஏற்றகாலத்தில் இந்த வேலையைத் தீவிரப்படுத்தி’ வருகிறார். அதில் நாம் பங்குகொள்வது என்னே ஒரு மகத்தான சிலாக்கியம்!
சென்றெட்டமுடிந்த எல்லாரையும் நற்செய்தியுடன் அணுகுவது
21, 22. நாம் எங்கு சேவை செய்வதாலும், அதிக திறம்பட்ட சாட்சிகளாக இருப்பதற்குத் தனிப்பட்டவர்களாக என்ன செய்யலாம்?
21 வேலை முடிந்தது என்று கர்த்தர் இன்னும் சொல்லவில்லை. பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் மெய் வணக்கத்தை ஏற்கின்றனர். ஆகவே, இந்தக் கேள்வி எழும்புகிறது, இந்த வேலைக்காக யெகோவாவின் பொறுமை அனுமதித்திருக்கும் காலத்தை நன்கு பயன்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோமா?—2 பேதுரு 3:15.
22 அரிதாகவே பிரசங்கிக்கப்பட்ட பிராந்தியத்திற்கு எல்லாராலும் குடிபெயர்ந்து செல்ல முடியாது. ஆனால் உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் சக வேலையாட்களிடம் சாட்சிபகருகிறீர்களா? உங்கள் ஆசிரியர்களிடம் உங்கள் பள்ளி சகாக்களிடம் சாட்சிபகருகிறீர்களா? உங்கள் பிராந்தியத்தின் மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றியமைத்திருக்கிறீர்களா? மாறிக்கொண்டிருக்கும் வேலை முறைகளின் காரணமாக, பகலில் வெகு சில மக்களே வீட்டில் இருக்கிறார்கள் என்றால், மாலை வேளையில் அவர்களைச் சந்திக்கும்படி உங்கள் அட்டவணையை மாற்றியமைத்திருக்கிறீர்களா? அழைக்கப்படாத சந்திப்பாளர்கள் கட்டடங்களுக்குள் செல்லமுடியாதபடி தடுக்கப்பட்டிருந்தால், தொலைபேசிமூலம் சாட்சி கொடுப்பதையோ கடிதம் மூலம் சாட்சி கொடுப்பதையோ செய்கிறீர்களா? காண்பிக்கப்பட்ட அக்கறையைத் தொடர்ந்து, வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தும்படி முன்வருகிறீர்களா? உங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுகிறீர்களா?—ஒப்பிடவும் அப்போஸ்தலர் 20:21, NW; 2 தீமோத்தேயு 4:5, NW.
23. யெகோவா, நாம் அவருடைய சேவையில் என்ன செய்கிறோம் என்பதை நோக்கும்போது, நம்முடைய காரியத்தில் எது தெளிவாக இருக்கவேண்டும்?
23 இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலங்களில் யெகோவாவின் சாட்சிளாய் இருக்கும் மகத்தான சிலாக்கியத்தை நாம் உண்மையிலே போற்றுகிறோம் என்பதைத் தெளிவாக அவருக்குக் காண்பிக்கும் விதத்தில் நாம் எல்லாரும் நம்முடைய ஊழியத்தைத் தொடருவோமாக. ஊழல்மிக்க பழைய ஒழுங்குமுறையின்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி, இயேசு கிறிஸ்துவின் மகிமை பொருந்திய ஆயிர வருட ஆட்சியைக் கொண்டுவரும்போது அதற்குக் கண்கண்ட சாட்சிகளாவது நம்முடைய சிலாக்கியமாக இருப்பதாக!
[அடிக்குறிப்புகள்]
a ஆரம்ப 1990-களில் பூமி பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
மறுபார்வையாக
◻ ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பது ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது?
◻ 1914 வரையாக நற்செய்தி எந்த அளவிற்குப் பிரசங்கிக்கப்பட்டது?
◻ ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு எவ்வளவு மும்முரமான சாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது?
◻ ஊழியத்தில் நம்முடைய சொந்த பங்கை எது அதிக பலனுள்ளதாக்கக்கூடும்?
[பக்கம் 16, 17-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளர்கள்
உலகெங்கும் 1993-94-ல் நடைபெற்ற நூற்றுக்கணக்கான மாநாடுகளில், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளர்கள் (Jehovah’s Witnesses—Proclaimers of God’s Kingdom) என்ற தலைப்பை உடைய புதிய புத்தகம் ஒன்று வெளியிடுவதுபற்றி அறிவிப்பு செய்யப்பட்டது. இது மிகவும் தகவல் நிறைந்த, யெகோவாவின் சாட்சிகளைப்பற்றிய விரிவான சரித்திரமாக இருக்கிறது. இது 96 வித்தியாசப்பட்ட தேசங்களிலிருந்து திரட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேலான படங்களோடுகூடிய அழகான விளக்கப்படங்களை உடைய 752-பக்க புத்தகம். 1993-ன் முடிவிற்குள்ளாக, இது ஏற்கெனவே 25 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு, இன்னுமதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைக் காலத்திற்கேற்றதாக்குவது எது? சமீப வருடங்களில், உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் ஆகியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தாங்கள் தொடர்புகொண்டிருக்கிற அமைப்பின் வரலாற்றைப்பற்றி நன்கு அறிந்தவர்களாய் இருக்கவேண்டும். மேலுமாக, அவர்களுடைய பிரசங்கிப்பும் வழிபாட்டுமுறையும் உலகெங்குமுள்ள தேசிய மற்றும் இனத் தொகுதிகளை ஊடுருவிச் சென்றும், எல்லாவித பொருளாதார மற்றும் கல்வி தகுதி நிலையில் உள்ள இளையோர் முதியோர் ஆகிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறது. அதன் பலனாக, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்கும் அநேகர் சாட்சிகளைப்பற்றி—அவர்களுடைய நம்பிக்கைகளைப்பற்றி மட்டுமல்லாமல், அவர்களுடைய தொடக்கம், அவர்களுடைய வரலாறு, அவர்களுடைய அமைப்பு, அவர்களுடைய குறிக்கோள்கள் ஆகியவற்றைப்பற்றி—பல கேள்விகளை உடையவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள், ஆனால் எப்போதும் பாரபட்சமின்றி அல்ல. என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன நாளைய வரலாற்றைப்பற்றி சாட்சிகள் தாங்களே அறிந்திருப்பதைவிட வேறு எவரும் அதிகமாக அறிந்தவர்களாய் இல்லை. இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியர்கள் அந்த வரலாற்றை பொருளுணர்த்தும் வகையிலும், தெளிவாகவும் அளிக்க முயன்றிருக்கின்றனர். அவ்வாறு செய்கையில், மத்தேயு 24:14-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள கிறிஸ்துவின் வந்திருத்தலைப் பற்றிய அடையாளத்தின் மிக முக்கியமான அம்சத்தின் தற்போதைய நிறைவேற்றம் வரையாகவும் தொகுத்து அளித்திருக்கின்றனர்; மேலும், அங்கு முன்னறிவிக்கப்பட்டுள்ள வேலையில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளவர்களால் மட்டுமே கொடுக்கப்பட முடிந்த விவரங்களுடன் அதைச் செய்திருக்கின்றனர்.
இந்தப் புத்தகம் ஏழு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது:
பிரிவு 1: இந்தப் பகுதி யெகோவாவின் சாட்சிகளுடைய வரலாற்றுப்பூர்வ வேர்களை ஆராய்கிறது. அது 1870 முதல் 1992 வரையான அவர்களுடைய நவீன நாளைய வரலாற்றின் சுருக்கமான, தகவல்நிறைந்த ஒரு தொகுப்பை உள்ளடக்குகிறது.
பிரிவு 2: மற்ற மதத் தொகுதிகளிலிருந்து யெகோவாவின் சாட்சிகளை வித்தியாசப்படுத்திக் காட்டுகிற நம்பிக்கைகளின் படிப்படியான வளர்ச்சியைப் பற்றிய வெளிப்படையான ஆய்வு இங்கு இருக்கிறது.
பிரிவு 3: அவர்களுடைய அமைப்பிற்குரிய முறையின் வளர்ச்சியை புத்தகத்தின் இந்தப் பாகம் ஆராய்கிறது. அது அவர்களுடைய சபை கூட்டங்கள், மாநாடுகள் பற்றியும், ராஜ்ய மன்றங்கள், பெரிய அசெம்பிளி மன்றங்கள், மற்றும் பைபிள் பிரசுரங்களைப் பிரசுரிப்பதற்கான வசதிகள் ஆகியவற்றைப்பற்றி அக்கறைக்குரிய உண்மைகளை எடுத்துரைக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிவிக்கும் வைராக்கியத்தையும், நெருக்கடியான காலங்களில் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளும்போது வெளிக்காட்டப்படும் அன்பையும் தெரியப்படுத்துகிறது.
பிரிவு 4: உலகெங்குமுள்ள பெரிய நாடுகளுக்கும் தொலைவிலுள்ள தீவுகளுக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அறிவிப்பு எப்படி சென்றெட்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கவனத்தைக் கவரும் விவரங்களை இங்கு காண்பீர்கள். 1914-ம் வருடத்தில் 43 தேசங்களில் பிரசங்கித்துவிட்டு, 1992-ற்குள் 229 தேசங்களில் பிரசங்கிப்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! இந்த உலகளாவிய விரிவாக்க வேலையில் பங்கெடுத்திருப்பவர்களின் அனுபவங்கள் உண்மையிலேயே உள்ளங்கனியச் செய்கின்றன.
பிரிவு 5: ராஜ்ய அறிவிப்பு சம்பந்தமான இந்த எல்லா வேலையையும் நிறைவேற்றுவது, இருநூறு மொழிகளுக்கும் மேலாக பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் வெளியிடுவதற்காக சர்வதேச கட்டட வசதிகளின் வளர்ச்சியைத் தேவைப்படுத்தியிருக்கிறது. அவர்களுடைய வேலையின் அந்த அம்சத்தைக் குறித்து நீங்கள் இங்கு கற்றுக்கொள்வீர்கள்.
பிரிவு 6: சாட்சிகள் சோதனைகளையும்—சில மனித அபூரணத்தினிமித்தமாகவும், மற்றவை கள்ள சகோதரர்களினிமித்தமாகவும், இன்னுமதிகமாக நேரடியான துன்புறுத்தலினிமித்தமாகவும்—எதிர்ப்பட்டிருக்கின்றனர். இது இவ்வாறு நடக்கும் என்று கடவுளுடைய வார்த்தை எச்சரித்தது. (லூக்கா 17:1; 2 தீமோத்தேயு 3:12; 1 பேருரு 4:12; 2 பேதுரு 2:1, 2) உண்மையில் என்ன சம்பவித்திருக்கிறது என்பதையும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசம் எவ்வாறு அவர்களை வெற்றிகரமாக வெளிவரச் செய்திருக்கிறது என்பதையும் புத்தகத்தின் இந்தப் பிரிவு தெளிவாகச் சொல்லுகிறது.
பிரிவு 7: முடிவாக, யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் பாகமாக இருக்கும் அமைப்பு கடவுளால் உண்மையில் வழிநடத்தப்படுகிறது என்று ஏன் உறுதியாக நம்புகிறார்கள் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. மேலும் அவர்கள் அமைப்பாகவும் தனிப்பட்டவர்களாகவும் ஏன் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்கிறார்கள் என்பதையும் அது சிந்திக்கிறது.
மேற்சொன்னவற்றோடுகூட, கவரக்கூடிய விதத்தில் திட்டமைக்கப்பட்ட இந்தப் புத்தகம், யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்பட்டுவரும் உலகத் தலைமை அலுவலகத்தையும் உலகெங்குமுள்ள கிளை அலுவலகங்களையும் காட்டக்கூடிய அழகான, அதிக தகவல்நிறைந்த வண்ணப்படங்களடங்கிய 50-பக்க பிரிவையும் உள்ளடக்குகிறது.
நீங்கள் ஏற்கெனவே இந்தக் கவரக்கூடிய பிரசுரத்தின் பிரதி ஒன்றைப் பெற்று வாசித்திராவிட்டால் அவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயமாகவே பயனடைவீர்கள்.
அதை வாசித்திருக்கும் சிலரிடமிருந்து குறிப்புகள்
இந்தப் புத்தகத்தை ஏற்கெனவே வாசித்திருப்போரின் பிரதிபலிப்புகள் யாவை? இதோ, இங்கே சில:
“யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளர்கள் என்ற கவரக்கூடிய, உயிரூட்டமுள்ள தொகுப்புரையை இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன். சத்தியத்திற்காக உண்மையோடும் மனத்தாழ்மையோடும் கட்டுப்பட்ட ஓர் அமைப்பால் மட்டுமே இவ்வளவு வெளிப்படையாக, தைரியமாக, உணர்ச்சி ததும்ப எழுதமுடியும்.”
“அது கபடற்ற, நேர்மையான தன்மையுடன் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தைப்போல் இருக்கிறது.”
“என்னே ஓர் ஆவலைத் தூண்டும் புதிய பிரசுரம்! . . . அது ஒரு சிறந்த வரலாற்று படைப்பு.”
அந்தப் புத்தகத்தில் சுமார் பாதியை வாசித்தப் பிறகு, ஒரு மனிதன் எழுதினார்: “நான் வியப்புற்று, செயலற்றுப்போனேன், கண்ணீர் ததும்பியது. . . . என் முழு வாழ்க்கையிலும், வேறெந்த பிரசுரமும் இவ்வளவாக என் உணர்ச்சிகளைத் தொடவில்லை.”
“இளைஞர் மற்றும் இன்று அமைப்பிற்குள் வரும் புதியவர்களின் விசுவாசத்தை இந்தப் புத்தகம் எவ்வளவு பலப்படுத்தும் என்று நான் ஒவ்வொரு முறை சிந்திக்கும்போதும், என் உள்ளம் ஆனந்தக்களிப்பில் பாடும்.”
“நான் எப்போதும் சத்தியத்தைப் போற்றியிருக்கிறேன்; ஆனால் இந்தப் புத்தகத்தை வாசித்தது என்னை உணர்வுள்ளவனாக்கி, அதற்குப்பின்னால் இருப்பது யெகோவாவின் பரிசுத்த ஆவியே என்பதை இல்லாத அளவிற்கு உணர உதவிசெய்திருக்கிறது.”
[பக்கம் 18-ன் படங்கள்]
சாட்சிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதுகூட, அநேக மக்கள் ராஜ்ய செய்தியால் சென்றெட்டப்பட்டனர்