உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாவின் மேல் வைத்துவிடுங்கள்
“ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6, 7.
1. கவலை நம்மை எவ்வாறு பாதிக்கக்கூடும், இதை எவ்வாறு உதாரணத்தால் விளக்கலாம்?
கவலை நம்முடைய வாழ்க்கையை ஆழ்ந்தவிதத்தில் பாதிக்கக்கூடும். இதை வானொலியில் கேட்கும் அழகான இன்னிசையை சில சமயங்களில் கெடுக்கும் மின்தடங்கலினால் உண்டாகும் சப்தத்துக்கு ஒப்பிடலாம். வானொலி அலைகளில் எந்தக் குறுக்கிடுதலும் இல்லாவிட்டால், இனிமையான இன்னிசையை அனுபவித்து மகிழமுடியும், இது கேட்டுக்கொண்டிருப்பவரை அமைதிப்படுத்த முடியும். இருந்தபோதிலும், மின்தடங்கலினால் உண்டாகும் உராய்வொலி மிக அழகான ராகத்தையும்கூட சிதைத்து எரிச்சலையும் ஏமாற்றத்தையும் உண்டுபண்ணக்கூடும். கவலையும்கூட நம்முடைய அமைதியான மனநிலையின் மீது இதே போன்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தியாவசியமான காரியங்களைக் கவனிக்க முடியாதபடி அது அவ்வளவாக நம்மை ஒடுக்கிவிடக்கூடும். ஆம், “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்.”—நீதிமொழிகள் 12:25.
2. ‘வாழ்க்கையின் கவலைகளைப்’ பற்றி இயேசு கிறிஸ்து என்ன சொன்னார்?
2 இயேசு கிறிஸ்து மிதமிஞ்சிய கவலையினால் கவனம் சிதறடிக்கப்படும் ஆபத்தைக் குறித்துப் பேசினார். கடைசி நாட்களைப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில் அவர் பின்வருமாறு துரிதப்படுத்தினார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் [வாழ்க்கையின், NW] கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.” (லூக்கா 21:34-36) அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் அதிகமாக குடிப்பதும் மந்தமான ஒரு மனநிலையை ஏற்படுத்துவது போலவே, ‘வாழ்க்கையின் கவலைகளினால்’ பாரமடைந்தவர்களாவது காரியங்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மனதில் காணத்தவறும்படி செய்து துயரமான விளைவுகளைக் கொண்டுவரலாம்.
கவலை என்பது என்ன
3. “கவலை” எவ்விதமாக விவரிக்கப்பட்டுள்ளது, அதற்கு சில காரணங்கள் யாவை?
3 “கவலை” என்பது “எக்கணமும் நிகழவிருக்கும் அல்லது எதிர்பார்க்கப்படும் ஓர் இன்னலைக் குறித்த வேதனைமிகுந்த அல்லது அச்சமுண்டாக்கும் மன உலைவு” என்பதாக பொதுவாய் விவரிக்கப்படுகிறது. அது “அச்சத்தை ஏற்படுத்தும் அக்கறையாக அல்லது ஈடுபாடாகவும்,” “அச்சுறுத்தும் விஷயத்தின் மெய்ம்மை மற்றும் தன்மையைப் பற்றிய சந்தேகத்தினாலும் அதைச் சமாளிப்பதற்கு ஒருவருடைய திறமையைப் பற்றிய சுய சந்தேகத்தினாலும் (வியர்த்துக்கொட்டுதல், பதற்றம் மற்றும் வேகமான நாடித்துடிப்பு போன்ற) சரீர சம்பந்தமான அறிகுறிகளாலும் குறிப்பிட்டுக் காட்டப்படும் விபரீதமானதும் சமாளிக்கமுடியாததுமான அச்ச மற்றும் பய உணர்வாகவும்கூட” இருக்கிறது. (வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷனரி) ஆகவே கவலை சிக்கலான ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடும். வியாதி, வயோதிபம், குற்றச்செயல் பற்றிய பயம், வேலை இழப்பு, ஒருவருடைய குடும்பத்தின் நலனைக் குறித்த அக்கறை போன்றவை அதற்கு காரணங்களாக இருக்கலாம்.
4. (அ) ஆட்களையும் அவர்களுடைய கவலைகளையும் குறித்து எதை நினைவில் கொள்வது நல்லது? (ஆ) நாம் கவலையை அனுபவித்துக் கொண்டிருந்தால், என்ன செய்யப்படலாம்?
4 கவலையை ஏற்படுத்தும் நிலைமைகள் அல்லது சூழ்நிலைமைகள் பல்வேறுபட்டவையாக இருப்பது போலவே கவலையும் பல்வேறு அளவுகளில் ஏற்படலாம். எல்லா ஆட்களும் ஒரு நிலைமைக்கு ஒரே விதமாக பிரதிபலிப்பதில்லை. ஆகவே, ஏதோவொன்று நம்மைத் தொந்தரவு செய்யாவிட்டாலும்கூட, அது நம்முடைய யெகோவாவின் உடன்வணக்கத்தாரில் சிலருக்கு அதிகமான கவலைக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை நாம் உணருவது அவசியமாகும். கடவுளுடைய வார்த்தையின் இணக்கமான மற்றும் இன்பமளிக்கும் சத்தியங்களின்பேரில் நம்மால் கவனத்தை ஊன்ற வைக்கமுடியாத அளவை நம்முடைய கவலை எட்டுமானால் என்ன செய்யப்படலாம்? யெகோவாவின் அரசுரிமை மற்றும் கிறிஸ்தவ உத்தமத்தைப் பற்றிய விவாதங்களின்மேல் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாதபடி நாம் கவலையினால் அல்லல்பட்டுக்கொண்டிருந்தால் அப்போது என்ன? நாம் நம்முடைய சூழ்நிலைமைகளை மாற்றிக்கொள்ள முடியாமல் இருக்கலாம். மாறாக, வாழ்க்கையின் தொல்லைதரும் பிரச்சினைகள் உண்டுபண்ணும் அனாவசியமான கவலையைச் சமாளிக்க நமக்கு உதவக்கூடிய வேதப்பூர்வமான குறிப்புகளை நாம் எடுத்துப்பார்ப்பது அவசியமாகும்.
உதவி கிடைக்கிறது
5. சங்கீதம் 55:22-க்கு இணக்கமாக நாம் எவ்வாறு நடந்துகொள்ள முடியும்?
5 கிறிஸ்தவர்கள் கவலைகளினால் பாரமடைந்து ஆவிக்குரிய உதவி தேவையாக இருப்பதை உணரும் சமயத்தில் அவர்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம். அது நம்பகமான வழிநடத்துதலை அளித்து யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாக நாம் தனிமையில் இல்லை என்பதற்கு அநேக உறுதிமொழிகளை நமக்குத் தருகிறது. உதாரணமாக, சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு பாடினார்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) இந்த வார்த்தைகளுக்கு இணக்கமாக நாம் எவ்வாறு நடந்துகொள்ள முடியும்? நம்முடைய எல்லா கவலைகள், மனகலக்கங்கள், பயங்கள் மற்றும் ஏமாற்றங்களை நம்முடைய அன்புள்ள பரலோக தந்தையின்மீது வைத்துவிடுவதன் மூலம். இது பாதுகாப்பான உணர்வையும் மன அமைதியையும் நமக்கு கொடுக்க உதவிசெய்யும்.
6. பிலிப்பியர் 4:6, 7-ன் பிரகாரமாக, ஜெபம் நமக்கு என்ன செய்யக்கூடும்?
6 நம்முடைய எல்லா கவலைகள் உட்பட நம்முடைய பாரத்தை யெகோவாவின் மீது வைத்துவிட வேண்டுமானால், ஒழுங்கான இருதயப்பூர்வமான ஜெபம் இன்றியமையாததாகும். இது நமக்கு உள்ளான சமாதானத்தைக் கொண்டுவரும், ஏனென்றால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) ஈடிணையில்லாத “தேவசமாதானம்” என்பது, மிக அதிக சோதனையான நிலைமைகளிலும்கூட யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் அனுபவித்து மகிழும் அசாதாரணமான ஒரு சாந்தியாகும். இது கடவுளோடுள்ள நம்முடைய தனிப்பட்ட நெருக்கமான உறவினால் வருகிறது. நாம் பரிசுத்த ஆவிக்காக ஜெபித்து அது நம்மை உந்துவிக்கும்படியாக நாம் அதை அனுமதிக்கையில், நாம் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டவர்களாகிவிடுவதில்லை, ஆனால் நாம் ஆவியினுடைய சமாதான கனியை நிச்சயமாகவே அனுபவிக்கிறோம். (லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) யெகோவா தம்முடைய உண்மையுள்ள மக்கள் அனைவரையும் ‘சுகமாய்த் தங்கப்பண்ணி’ நமக்கு நிரந்தரமான தீங்கை விளைவிக்கக்கூடிய எதுவும் சம்பவிப்பதை அவர் அனுமதிக்கமாட்டார் என்பதை நாம் அறிந்திருப்பதால் நாம் கவலையில் ஆழ்ந்துவிடுவதில்லை.—சங்கீதம் 4:8.
7. கவலையைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்வதில் கிறிஸ்தவ மூப்பர்கள் என்ன பங்கை வகிக்கலாம்?
7 என்றபோதிலும், நாம் வேதவார்த்தைகளைத் தியானித்து ஜெபத்தில் உறுதியாக தரித்திருந்தாலும்கூட நம்முடைய கவலை நீங்காதிருந்தால் அப்போது என்ன? (ரோமர் 12:12) சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களும்கூட ஆவிக்குரிய விதத்தில் நமக்கு உதவிசெய்ய யெகோவாவின் ஏற்பாடாக இருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமும் நம்மோடும் நமக்காகவும் ஜெபிப்பதன் மூலமும் அவர்கள் நமக்கு ஆறுதலளித்து உதவிசெய்ய முடியும். (யாக்கோபு 5:13-16) அப்போஸ்தலன் பேதுரு கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும், முன்மாதிரியான விதத்திலும் மேய்க்கும்படியாக தன்னுடைய உடன் மூப்பர்களைத் துரிதப்படுத்தினார். (1 பேதுரு 5:1-4) இந்த மனிதர்கள் உண்மையிலேயே நம்முடைய நலனில் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர், மேலும் நமக்கு உதவிசெய்ய விரும்புகின்றனர். நிச்சயமாகவே, மூப்பர்களின் உதவியிலிருந்து முழுமையாகப் பயனடைவதற்கும் சபையில் ஆவிக்குரிய விதமாக நல்ல நிலையில் இருப்பதற்கும் பேதுருவின் புத்திமதியை நாம் அனைவரும் பொருத்திப் பின்பற்றுவது அவசியமாகும்: “இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—1 பேதுரு 5:5.
8, 9. ஒன்று பேதுரு 5:6-11-லிருந்து என்ன ஆறுதலைப் பெற்றுக்கொள்ள முடியும்?
8 பேதுரு மேலுமாகச் சொன்னார்: “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.”—1 பேதுரு 5:6-11.
9 அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால், நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடலாம் என்பதை அறிவது எத்தனை ஆறுதலளிப்பதாக இருக்கிறது! மேலும் துன்புறுத்தலையும் மற்ற துன்பங்களையும் நம்மேல் கொண்டுவருவதன் மூலம் யெகோவாவோடுள்ள நம்முடைய உறவை அழிப்பதற்கு பிசாசினுடைய முயற்சிகளினால் நமக்கு ஒரு சில கவலைகள் ஏற்பட்டிருந்தால், உத்தமத்தைக் காப்பவர்களுக்கு எல்லாம் நல்லபடியாக முடியும் என்பதை அறிந்திருப்பது அற்புதமான விஷயமாக இல்லையா? ஆம், கொஞ்சக்காலம் நாம் பாடனுபவித்தப் பிறகு, சகல கிருபையும் பொருந்திய தேவன் நம்மைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்துவார்.
10. ஒன்று பேதுரு 5:6, 7 நம்முடைய கவலையைக் குறைப்பதற்கு நமக்கு உதவக்கூடிய எந்த மூன்று பண்புகளைக் குறிப்பிடுகிறது?
10 ஒன்று பேதுரு 5:6, 7 கவலையைச் சமாளிக்க நமக்கு உதவக்கூடிய மூன்று பண்புகளைக் குறிப்பிடுகிறது. ஒன்று பணிவு அல்லது “மனத்தாழ்மை”யாக இருக்கிறது. வசனம் 6 பொறுமைக்கான தேவையைக் குறிப்பிடுவதாய் “ஏற்றகாலத்தில்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. வசனம் 7 ‘தேவன் நம்மை விசாரிக்கிறவரானபடியால்’ நம்முடைய எல்லா கவலைகளையும் அவர்மீது நம்பிக்கையோடு வைத்துவிடலாம் என்பதைக் காட்டுகிறது, இந்த வார்த்தைகள் யெகோவாவின் மீது முழு நம்பிக்கை வைக்கும்படியாக நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆகவே மனத்தாழ்மையும், பொறுமையும் கடவுளில் முழு நம்பிக்கையும் எவ்வாறு கவலையைக் குறைக்க நமக்கு உதவக்கூடும் என்பதை நாம் பார்க்கலாம்.
மனத்தாழ்மை எவ்வாறு உதவக்கூடும்
11. கவலையைச் சமாளிக்க மனத்தாழ்மை நமக்கு எவ்வாறு உதவக்கூடும்?
11 நாம் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருந்தால், கடவுளுடைய எண்ணங்கள் நம்முடைய சொந்த எண்ணங்களைவிட மிகவும் சிறந்தவை என்பதை ஒப்புக்கொள்வோம். (ஏசாயா 55:8, 9) மனத்தாழ்மையானது, அனைத்தையும் காணமுடிகிற யெகோவாவின் பரந்த பார்வையுடன் ஒப்பிட நம்முடைய சிந்திக்கும் திறமை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை காண நமக்கு உதவிசெய்கிறது. நீதிமானாகிய யோபுவின் விஷயத்தில் காட்டப்பட்டிருக்கிறபடி, நாம் காணமுடியாத காரியங்களை அவர் பார்க்கிறார். (யோபு 1:7-12; 2:1-6) “அவருடைய பலத்த கைக்குள் அடங்கி” நம்மைத் தாழ்த்துவதன் மூலம் உன்னதமான பேரரசரின் சம்பந்தமாக நம்முடைய தாழ்ந்த நிலையை நாம் ஒத்துக்கொள்கிறோம். முறையே இது, அவர் அனுமதிக்கும் சூழ்நிலைமைகளைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்கிறது. நம்முடைய இருதயங்கள் உடனடியான விடுதலைக்காக ஏங்கக்கூடும், ஆனால் யெகோவாவின் பண்புகள் பரிபூரண சமநிலையில் இருப்பதால், எப்போது மற்றும் எவ்விதமாக நம் சார்பாக செயல்படவேண்டும் என்பதை அவர் துல்லியமாக அறிவார். அப்படியென்றால் அவர் நம்முடைய கவலைகளைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்வார் என்ற நம்பிக்கையோடு சிறு பிள்ளைகளைப் போல, யெகோவாவின் பலத்தக் கரத்தை மனத்தாழ்மையுடன் பற்றிக்கொண்டிருப்போமாக.—ஏசாயா 41:8-13.
12. மனத்தாழ்மையோடு எபிரெயர் 13:5-ல் உள்ள வார்த்தைகளை நாம் பொருத்தினால், பொருளாதார பாதுகாப்பைப் பற்றிய கவலையால் எவ்வாறு பாதிக்கப்படலாம்?
12 மனத்தாழ்மை கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் புத்திமதியைப் பொருத்துவதற்கு மனமுள்ளவராயிருப்பதை உட்படுத்துகிறது, இது அநேக சமயங்களில் கவலையைக் குறைக்கக்கூடும். உதாரணமாக, நம்முடைய கவலை பொருளாதார நாட்டங்களில் நமக்கிருக்கும் ஆழமான ஈடுபாட்டின் காரணமாக ஏற்பட்டிருந்தால், பவுலின் புத்திமதியைச் சிந்திப்பது நமக்கு நன்மையாக இருக்கும்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” (எபிரெயர் 13:5) இப்படிப்பட்ட புத்திமதியை மனத்தாழ்மையோடு பொருத்துவதன் மூலம், அநேகர் பொருளாதார பாதுகாப்பைப் பற்றிய பெரும் கவலையிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருளாதார நிலைமை மேம்பட்டிராவிட்டாலும், அவர்களுக்கு ஆவிக்குரிய தீங்கை உண்டுபண்ணும் அளவுக்கு அது அவர்களுடைய எண்ணங்களில் மேலோங்கியிருப்பதில்லை.
பொறுமையின் பங்கு
13, 14. (அ) பொறுமையான சகிப்புத்தன்மையைப் பற்றியதில், யோபு என்ன முன்மாதிரியை வைத்தார்? (ஆ) யெகோவாவின் பேரில் பொறுமையாக காத்திருப்பது நமக்கு என்ன செய்யக்கூடும்?
13 ஒன்று பேதுரு 5:6-ல் உள்ள “ஏற்றகாலத்தில்” என்ற சொற்றொடர் பொறுமையோடு சகித்திருக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிடுகிறது. சில சமயங்களில் ஒரு பிரச்சினை நீண்ட காலம் நீடிக்கிறது, அது கவலையை அதிகரிக்கக்கூடும். விசேஷமாக அப்படிப்பட்ட நிலைமைகளில்தான் காரியங்களை யெகோவாவின் கரங்களில் விட்டுவிடுவது அவசியமாகும். சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) யோபு பொருளாதார நஷ்டத்தை அனுபவித்தார், மரணத்தில் பத்து பிள்ளைகளை இழந்தார், அருவருப்பான நோயினால் துன்புற்றார், பொய்யான தேற்றரவாளர்களால் தவறாக கண்டனம் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் இயல்பாகவே ஓரளவு கவலையாவது இருக்கும்.
14 எப்படியிருந்தாலும், யோபு பொறுமையான சகிப்புத்தன்மையில் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். நாம் விசுவாசத்தின் ஒரு கடுமையான பரீட்சையை அனுபவித்துக்கொண்டிருந்தால், அவர் செய்தது போலவே நாம் விடுதலைவரும் வரையாக காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் கடைசியில் யோபுவை அவருடைய துன்பங்களிலிருந்து விடுவித்து அவரை அபரிமிதமாக ஆசீர்வதித்து அவர் சார்பாக கடவுள் நிச்சயமாகவே செயல்பட்டார். (யோபு 42:10-17) யெகோவாவின் பேரில் பொறுமையாக காத்திருப்பது நம்முடைய சகிப்புத்தன்மையை வளர்த்து அவரிடமாக நம்முடைய பக்தியின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.—யாக்கோபு 1:2-4.
யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்
15. நாம் ஏன் யெகோவாவில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்?
15 பேதுரு தன் உடன் விசுவாசிகளை ‘தேவன் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்’ என்று துரிதப்படுத்தினார். (1 பேதுரு 5:7) ஆகவே நாம் யெகோவாவில் முழு நம்பிக்கை வைக்கலாம், வைக்கவும் வேண்டும். நீதிமொழிகள் 3:5, 6 சொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” கடந்தகால அனுபவங்களின் காரணமாக, கவலைகள் நிறைந்த சிலர் மற்ற மனிதர்களை நம்புவதைக் கடினமாகக் காண்கின்றனர். ஆனால் நம்முடைய உயிருக்கு மூலகாரணரும் அதைக் காப்பவருமாக இருக்கும் நம்முடைய படைப்பாளரை நம்புவதற்கு நமக்கு நிச்சயமாகவே காரணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நம்முடைய சொந்த பிரதிபலிப்பை நாம் நம்பாவிட்டாலும்கூட, நம்முடைய ஆபத்துக்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு நாம் எப்போதும் யெகோவாவின் மீது சார்ந்திருக்கலாம்.—சங்கீதம் 34:18, 19; 36:9; 56:3, 4.
16. பொருள் சம்பந்தமான காரியங்களைப் பற்றிய கவலையைக் குறித்து இயேசு கிறிஸ்து என்ன சொன்னார்?
16 கடவுளில் நம்பிக்கையாயிருப்பது தம்முடைய தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டதையே போதித்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதையும்கூட உட்படுத்துகிறது. (யோவான் 7:16) யெகோவாவைச் சேவிப்பதன் மூலம் ‘பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கும்படியாக’ இயேசு தம்முடைய சீஷர்களைத் துரிதப்படுத்தினார். ஆனால் உணவு, உடை மற்றும் உறைவிடத்தை உட்படுத்தும் பொருள்சம்பந்தமான தேவைகளைப் பற்றி என்ன? “கவலைப்படாதிருங்கள்” என்று இயேசு புத்திமதி கூறினார். கடவுள் பறவைகளுக்கு உணவளிப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அவர் புஷ்பங்களை அழகாக உடுத்துவிக்கிறார். கடவுளுடைய மனித ஊழியர்கள் இவற்றைக் காட்டிலும் விசேஷித்தவர்கள் இல்லையா? நிச்சயமாகவே விசேஷித்தவர்கள். ஆகவே இயேசு இவ்விதமாக துரிதப்படுத்தினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய [தேவனுடைய] நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” தொடர்ந்து இயேசு சொன்னார்: “ஆகையால், நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.” (மத்தேயு 6:20, 25-34) ஆம், நமக்கு உணவு, பானம், உடை, உறைவிடம் தேவை, ஆனால் நாம் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்தால், இந்தக் காரியங்களைக் குறித்து நாம் அனாவசியமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.
17. ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கான அவசியத்தை நாம் எவ்வாறு உதாரணத்தால் விளக்கலாம்?
17 இராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கு, நாம் கடவுளில் நம்பிக்கையாயிருந்து நம் வாழ்க்கையில் முன்னுரிமை பெறவேண்டியவற்றை சரியான வரிசையில் வைக்கவேண்டும். உள்ளே முத்தைக் கொண்ட ஒரு சிப்பியைத் தேடிக்கண்டுபிடிப்பதற்காக சுவாசிப்பதற்குக் கருவிகள் எதுவுமில்லாமல் நீரில் மூழ்கும் ஒருவர் நீர்பரப்புக்குக் கீழே மூழ்கக்கூடும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற இது அவருடைய வழிமூலமாக இருக்கிறது. வெகுவாக முன்னுரிமைப் பெறவேண்டிய ஒன்று! ஆனால் அதைவிட எது அதிக முக்கியம்? காற்று! அவர் தன்னுடைய நுரையீரலைக் காற்றினால் நிரப்பிக்கொள்ள ஒழுங்காக நீர்பரப்புக்கு வரவேண்டும். காற்று அதைவிட முன்னுரிமைப் பெறவேண்டிய காரியம். அதேவிதமாகவே, வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்தக் காரிய ஒழுங்குமுறையில் நாம் ஓரளவு உட்பட வேண்டியிருக்கலாம். என்றபோதிலும், ஆவிக்குரிய காரியங்கள் முதலிடத்தைப் பெறவேண்டும், ஏனென்றால் நம்முடைய குடும்பத்தினரின் ஜீவனே இந்தக் காரியங்களின்மீது சார்ந்திருக்கிறது. பொருளாதார தேவைகளைக் குறித்து அனாவசியமான கவலையைத் தவிர்ப்பதற்கு, நாம் கடவுளில் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கவேண்டும். மேலுமாக, ‘கர்த்தருடைய கிரியையில் செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருப்பது,’ கவலையைக் குறைக்க உதவக்கூடும், ஏனென்றால், “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே” நம்முடைய பெலனாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 15:58; நெகேமியா 8:10.
தொடர்ந்து யெகோவாவின் மீது உங்கள் கவலைகளை வைத்துக்கொண்டிருங்கள்
18. நம்முடைய எல்லா கவலைகளையும் யெகோவாவின்மீது வைத்துவிடுவது உண்மையில் நமக்கு உதவக்கூடும் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18 ஆவிக்குரிய காரியங்களில் கவனத்தை எப்பொழுதும் ஊன்றவைத்தவர்களாக நிலைத்திருப்பதற்கு, நாம் தொடர்ந்து நம்முடைய எல்லா கவலைகளையும் யெகோவாவின் மீது வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர் தம்முடைய ஊழியர்களின்பேரில் உண்மையாகவே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைக்கவேண்டும். இதை விளக்குவதற்கு: தன்னுடைய கணவன் தனக்கு உண்மையற்றவராய் இருந்த காரணத்தால், ஒரு கிறிஸ்தவ பெண்ணின் கவலை, அவளால் தூங்க இயலாத அளவுக்கு அதிகரித்தது. (சங்கீதம் 119:28-ஐ ஒப்பிடவும்.) என்றாலும், படுக்கையில் அவள் தன்னுடைய எல்லா கவலையையும் யெகோவாவின்மீது வைத்துவிடுவாள். அவள் தன் இருதயத்தைக் கடவுளுக்கு முன்பாக ஊற்றி, அவரிடம் தானும் தன்னுடைய இரண்டு சிறிய மகள்களும் படும் வேதனையைத் தெரிவிப்பாள். யெகோவா தன்னையும் தன் பிள்கைளையும் கவனித்துக்கொள்வார் என்று அவள் நம்பினதால் விடுதலைவேண்டி ஊக்கத்தோடு சப்தமாக ஜெபித்தபிறகு, அவள் எப்போதும் தூங்கிவிட்டாள். வேதப்பூர்வமாக மணவிலக்கு செய்யப்பட்ட இந்தப் பெண் இப்போது ஒரு மூப்பரைத் திருமணம்செய்து மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
19, 20. (அ) கவலையை நாம் சமாளிப்பதற்குரிய சில வழிகள் யாவை? (ஆ) நம்முடைய எல்லா கவலைகளோடும் நாம் எதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்?
19 யெகோவாவின் மக்களாக, கவலையைச் சமாளிப்பதற்கு நமக்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. கடவுளுடைய வார்த்தையைப் பொருத்திப் பின்பற்றுதல் விசேஷமாக பயனுள்ளதாக இருக்கிறது. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையில் வெளியாகும் பயனுள்ள மற்றும் புத்துயிரளிக்கும் கட்டுரைகள் உட்பட, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமாக கடவுள் அளித்துவரும் நிறைவான ஆவிக்குரிய உணவு நமக்கு இருக்கிறது. (மத்தேயு 24:45-47, NW) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவி நமக்கு இருக்கிறது. ஒழுங்கான மற்றும் ஊக்கமான ஜெபம் நமக்கு வெகுவாக உதவிசெய்கிறது. நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்கள் ஆவிக்குரிய உதவியையும் ஆறுதலையும் அளிக்க தயாராகவும் மனமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
20 நம்மை நெருக்கித் தாக்கக்கூடிய கவலையைச் சமாளிப்பதில் நம்முடைய சொந்த மனத்தாழ்மையும் பொறுமையும் வெகுவாக பயனுள்ளதாக இருக்கின்றன. அவருடைய உதவியையும் வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கும்போது நம்முடைய விசுவாசம் கட்டியெழுப்பப்படுவதால், யெகோவாவின் மீது முழு நம்பிக்கை விசேஷமாக முக்கியமாகும். முறையே, கடவுளில் விசுவாசமானது அனவாசியமாக கலக்கமடைவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடும். (யோவான் 14:1) விசுவாசமானது ராஜ்யத்தை முதலில் தேடவும் கர்த்தருடைய சந்தோஷமான வேலையில் சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்ளவும் நம்மைத் தூண்டுகிறது, இது கவலையைச் சமாளிப்பதற்கு நமக்கு உதவக்கூடும். இப்படிப்பட்ட வேலைகள் கடவுளுடைய துதிகளை எல்லா நித்தியத்துக்குமாக பாடப்போகிறவர்களின் மத்தியில் நம்மைப் பாதுகாப்பாக உணரச்செய்கிறது. (சங்கீதம் 104:33) ஆகவே நாம் நம்முடைய எல்லா கவலைகளையும் தொடர்ந்து யெகோவாவின்மீது வைத்துக்கொண்டிருப்போமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கவலை எவ்வாறு விவரிக்கப்படலாம்?
◻ கவலையை நாம் சமாளிப்பதற்குரிய சில வழிகள் யாவை?
◻ மனத்தாழ்மையும் பொறுமையும் கவலையைக் குறைக்க எவ்வாறு உதவக்கூடும்?
◻ கவலையைச் சமாளிக்கையில், யெகோவாவில் முழு நம்பிக்கையாயிருப்பது ஏன் அத்தியாவசியமானது?
◻ ஏன் தொடர்ந்து நம்முடைய எல்லா கவலைகளையும் யெகோவாவின்மீது வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
இயேசு “கவலைப்படாதிருங்கள்” என்று ஏன் சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா?