“குழந்தைகளுடைய வாயினாலும்”
சாமுவேல் சிறு பையனாக இருந்தபோது, பிரதான ஆசாரியனாகிய ஏலியின் குமாரர்களுடைய துன்மார்க்கத்தின் மத்தியிலும் அவர் சரியான நியமங்களுக்கு உறுதியாக நின்றார். (1 சாமுவேல் 2:22; 3:1) எலிசாவின் நாட்களில் சீரியாவில் இருந்த சிறைபிடிக்கப்பட்ட ஒரு சிறுபெண் தன் எஜமானிக்குத் தைரியமான சாட்சிகொடுத்தாள். (2 இராஜாக்கள் 5:2-4) இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது அவர் இஸ்ரவேலின் போதகர்களிடம் தைரியமாகப் பேசினார். அவர் கேள்விகளைக் கேட்டதும் பதில்களை அளித்ததும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. (லூக்கா 2:46-48) வரலாறு முழுவதிலும் யெகோவா தம்முடைய இளம் வணக்கத்தாரால் உண்மையோடு சேவிக்கப்பட்டு வந்திருக்கிறார்.
இன்றைய இளம்வயதினர் அதே உண்மையான மனநிலையைக் காண்பிக்கின்றனரா? ஆம், நிச்சயமாக! அநேகர், விசுவாசமுள்ள அநேக இளம்வயதினர், யெகோவாவின் சேவையில் ‘மனப்பூர்வமாய் தங்களை அர்ப்பணிக்கின்றனர்’ என்று உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகங்களிலிருந்து வரும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. (சங்கீதம் 110:3, NW) அவர்களுடைய மனமார்ந்த முயற்சிகளின் நல்ல பலன்கள் இளம் மற்றும் முதிர்வயதான அனைத்து கிறிஸ்தவர்களையும், “நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல்” இருக்க உற்சாகப்படுத்துகின்றன.—கலாத்தியர் 6:9.
ஆறுவயதில் பிரஸ்தாபியாகிய ஆயூமீ என்ற ஜப்பானிய சிறுமி ஒரு நல்ல உதாரணம். அவள் வகுப்பில் ஒவ்வொருவருக்கும் சாட்சிகொடுப்பதைத் தன் இலக்காகக் கொண்டாள். வகுப்பறை நூலகத்தில் அநேக பிரசுரங்களை வைப்பதற்கு அனுமதி பெற்று, பள்ளிசகாக்கள் கேட்கக்கூடிய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்செய்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அவளுடைய வகுப்புசகாக்கள் ஆசிரியர் ஆகிய அனைவரும் பிரசுரங்களைப் பற்றி அறிந்து கொண்டனர். ஆயூமீ தன்னுடைய ஆறாண்டு நடுநிலைப்பள்ளி படிப்பின் போது 13 பைபிள்படிப்புக்களுக்கு ஏற்பாடு செய்தாள். நான்காம் வகுப்பிலிருந்த போது அவள் முழுக்காட்டப்பட்டாள், அவள் பைபிள்படிப்பு நடத்திய தோழிகளில் ஒருத்தி ஆறாவது வகுப்பிலிருக்கும்போதே முழுக்காட்டப்பட்டாள். மேலுமாக இந்த பைபிள் மாணவியின் அம்மாவும் இரண்டு அக்காமார்களும் படித்து, முழுக்காட்டுதல் பெற்றனர்.
நன்னடத்தை ஒரு சாட்சி
‘புறஜாதிகளுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பேதுரு 2:12) இந்தக் கட்டளையை இளம் கிறிஸ்தவர்கள் கருத்தூன்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன் விளைவாக அவர்களுடைய நன்னடத்தை அநேகதரம் நற்சாட்சிகொடுக்கிறது. ஆப்பிரிக்க நாடாகிய காமரூனில் ஒரு மனிதர் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டத்திற்கு இரண்டாவது முறையாக வந்தார், ஒரு சிறுமிக்குப் பக்கத்தில் உட்கார நேர்ந்தது. பேச்சாளர் பைபிள் வசனம் ஒன்றைப் பார்க்கும்படி பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்ட போது, அந்தச் சிறுமி தன்னுடைய பைபிளில் வசனத்தை விரைவாகக் கண்டுபிடித்து கவனமாகப் பார்த்ததை அந்த மனிதர் கவனித்தார். அவளுடைய செயல் அவரை அவ்வளவாகக் கவர்ந்ததினால், கூட்டத்தின் முடிவில் அவர் பேச்சாளரிடம் சென்று சொன்னார்: “இந்தச் சிறுமி நான் உங்களோடு பைபிள் படிக்கும்படியான ஆசையைத் தூண்டினாள்.”
தென் ஆப்பிரிக்காவில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது, அங்கு 25 மாணவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள். அவர்களுடைய நன்னடத்தை யெகோவாவின் சாட்சிகளுக்கு நற்பெயரைக் கொண்டுவந்திருக்கிறது. ஒரு ஆசிரியை, விசேஷமாக இளம் பிள்ளைகளுக்கு உதவிசெய்வதில் தன்னுடைய சொந்த சர்ச் திறமையற்றதாக நிரூபித்திருந்ததால், சாட்சிகள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை அவ்வளவு நன்றாகப் பயிற்றுவித்துள்ளனர் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சாட்சியாக இருக்கும் ஒரு பெற்றோரிடம் மனம்விட்டு தெரிவித்தார். புதிதாக ஆசிரியை ஒருவர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். உடனே, சாட்சி பிள்ளைகளின் நன்னடத்தையைக் கண்டுகொண்டார். அவர் சாட்சிப் பையன்களில் ஒருவனிடத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவதற்கு தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அவர் பைபிள் படிப்பு ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் விளக்கி, தன்னுடைய பெற்றோர் அவருடைய அக்கறையைத் தொடர்ந்து வளர்க்க ஏற்பாடு செய்தான்.
கோஸ்டா ரிகாவில், திரித்துவம், ஆத்துமா, எரிநரகம் பற்றிய தன்னுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க வகுப்பு சகாக்கள் இரண்டுபேர் பைபிளைப் பயன்படுத்தியபோது ரிகோபெர்ட்டோ சத்தியத்தின் தொனியைத் தெரிந்து கொண்டான். அவர்கள் சொன்ன காரியங்கள் அவன் மீது சாதகமான பாதிப்பை ஏற்படுத்தின. ஏனென்றால் வசனங்களைப் பயன்படுத்துவதில் அவர்களுடைய திறமை மட்டும் அன்றி, கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் அவன் பார்த்ததிலிருந்து வித்தியாசப்பட்ட அவர்களுடைய சிறந்த நடத்தையும் காரணம் ஆகும். குடும்பத்தினருடைய எதிர்ப்பின் மத்தியிலும் ரிகோபெர்ட்டோ தன் பைபிள் படிப்பில் நன்கு முன்னேறி வருகிறான்.
ஸ்பெய்னில் இரண்டு யெகோவாவின் சாட்சிகள்—அவர்களில் ஒருவருக்கு வயது ஒன்பது—ஓனோஃப்ரெ என்னும் பெயருடைய மனிதனை சந்தித்தார்கள். வயதில் பெரியவரான சாட்சி பெரும்பகுதி பேசிக்கொண்டிருந்த போதிலும், வசனங்களைப் படிக்கும் போது இளம் சாட்சி தன்னுடைய பைபிளில் பார்த்துக்கொண்டிருந்தான். தன் ஞாபகத்திலிருந்து சில வசனங்களை மேற்கோள்காட்டினான். ஓனோஃப்ரெ கவர்ந்திழுக்கப்பட்டார். அந்தச் சிறுவன் பைபிளை அவ்வளவு நன்றாக பயன்படுத்த எங்கு கற்றானோ, அதேயிடத்தில் பைபிளைப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே தொடர்ந்துவந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலமே ராஜ்ய மன்றத்திற்குச் சென்றார். பிற்பகல்வரை அவர் வெளியே காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது சாட்சிகள் தங்கள் கூட்டத்திற்கு வந்தனர். அன்றுமுதல் அவர் நல்ல முன்னேற்றங்களைச் செய்துகொண்டு சமீபத்தில் தன்னுடைய ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் அடையாளப்படுத்தினார்.
திறம்பட்ட இளம் சாட்சிகள்
ஆம், யெகோவா இளம் வயதினரையும் மூத்தவர்களையும், சாந்த இருதயம் உள்ளோரை அடைவதற்கு உபயோகிக்கிறார். ஹங்கேரியிலிருந்து வரும் அனுபவத்திலிருந்து இது மேலும் புலப்படுகிறது. அங்கு மருத்துவமனை நர்ஸ், ஒரு பத்துவயது நோயாளியைக் காணவருபவர்கள், வரும்போதெல்லாம் படிப்பதற்கு ஏதோவொன்றையும், உணவையும் கொண்டுவருவதைக் கவனித்தார். அந்தச் சிறுமி எதைத்தான் இப்படி படிக்கிறாளோ என்று ஆச்சரியமடைந்தார். அது பைபிள் என்பதைக் கண்டு கொண்டார். நர்ஸ் அவளிடத்தில் பேசி, பின்னர் கூறினார்: “ஆரம்பத்திலிருந்தே அவள் உண்மையில் எனக்குப் போதித்துவந்தாள்.” சிறுமி மருத்துவமனையை விட்டு செல்லும் போது, மாநாட்டிற்கு வருமாறு நர்ஸை அழைத்தாள், ஆனால் நர்ஸ் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இருந்தபோதிலும் பிறகு “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டிற்கு வருவதற்கு ஒத்துக்கொண்டார். வெகு விரைவில் அவர் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்து, ஒரு வருடத்திற்குப் பின்பு முழுக்காட்டப்பட்டார்—இதெல்லாம் அந்தச் சிறுமி மருத்துவமனையில் தன்னுடைய நேரத்தை பைபிள் பிரசுரங்களைப் படிப்பதற்கு உபயோகித்ததன் விளைவாகவே.
எல் சால்வடாரில் ஆன்னா ரூத் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் வேண்டுமென்றால் படித்துக்கொள்ள பைபிள் பிரசுரங்களைத் தன்னுடைய மேசையின் மேல் விட்டுச் செல்லும் பழக்கம் உடையவளாய் இருந்தாள். பிரசுரம் மறைவதையும் கொஞ்ச காலத்திற்கு பிறகு மீண்டும் தோன்றுவதையும் கவனித்தாள். அதை தன் வகுப்பு மாணவி ஈவ்லின் படிப்பதை ஆன்னா ரூத் கண்டுபிடித்தாள். சிறிது காலத்திற்குப் பின், ஈவ்லின் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு சபை கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள், இறுதியாக அவள் முழுக்காட்டப்பட்டாள். இப்பொழுது ஒரு ஒழுங்கானத் துணைப் பயனியராக சேவிக்கிறாள். ஆன்னா ரூத் ஒழுங்கானப் பயனியராக இருக்கிறாள்.
பனாமாவில் ஒரு சகோதரி ஒரு பெண்ணுடன் படிப்பைத் துவங்கினார். அவளுடைய கணவன், படிப்பானது கிட்டத்தட்ட நிற்கும் அளவுக்குச் சத்தியத்தை எதிர்க்க ஆரம்பித்தார். என்றபோதிலும் கணவனின் மனநிலை மெல்ல மெல்ல இளகியது. கொஞ்சக் காலத்திற்கு பிறகு, சாட்சியாக இருந்த அவருடைய அண்ணன் தன்னுடைய வீட்டில் திருடர் எச்சரிப்பு மணியைப் பொருத்திக் கொடுக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டார். அவர் எச்சரிப்பு மணியைப் பொருத்திக்கொண்டிருக்கும் போது, அண்ணனுடைய ஒன்பது வயது மகள் கவலை தோய்ந்த முகத்தோடு வீட்டிற்கு வந்தாள். அவளிடம் அவர் என்ன நடந்தது என்று கேட்டார், அவள் தானும் தன் அக்காவும் பைபிள் படிப்பு நடத்தச் சென்றதாகவும், ஆனால் அந்த நபர் வீட்டில் இல்லை, ஆகவே அன்று அவளால் யெகோவாவிற்கு ஒன்றுமே செய்யமுடியவில்லை என்று கூறினாள். அவளுடைய சித்தப்பா: “ஏன் எனக்குப் பிரசங்கிக்கக்கூடாது? அப்பொழுது யெகோவாவிற்கு நீ ஏதாகிலும் செய்யலாம்,” என்றார். அவருடைய அண்ணன் மகள் சந்தோஷமாகத் தன்னுடைய பைபிளைக் கொண்டுவர ஓடினாள், படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அவளுடைய அம்மா (அந்த நபரின் மதினி) கேட்டுக்கொண்டிருந்தார். அவர் எல்லாமே ஒரு நடிப்புக்காகத்தான் என்று நினைத்தார், ஆனால் அந்த மனிதர் அவளுடைய வீட்டிற்கு வரும்போதெல்லம் அண்ணன் மகளிடம் பைபிள் படிக்க வேண்டும் என்று கேட்டார். தன்னுடைய கொழுந்தனார் விளையாட்டிற்கு அல்ல என்பதையும் சில கடினமான கேள்விகளை உடையவராக இருக்கிறார் என்பதையும் அம்மா கண்டபோது தானே தன் மகளின் முன்னிலையில் படிப்பை நடத்த தீர்மானித்தார். வாரம் இருமுறை படிக்க ஆரம்பித்து விரைவான முன்னேற்றங்களை செய்து கொண்டார். இறுதியில், ஒப்புக்கொடுத்தல் நிலையை அடைந்து, தன்னுடைய மனைவி முழுக்காட்டப்பட்ட அதே மாநாட்டில் அவரும் முழுக்காட்டப்பட்டார்—இளம் அண்ணன் மகளின் நல்ல மனப்பான்மையின் காரணமாக.
இளம் வயதினரின் தைரியம் நற்சாட்சிகொடுக்கிறது
பைபிள் சொல்கிறது: “தைரியமாய் இரு, உன் இருதயத்தை ஸ்திரப்படுத்து. ஆம், யெகோவாவுக்கே காத்திரு.” (சங்கீதம் 27:14, NW) கடவுளின் அனைத்து ஊழியர்களுக்கும் இவ்வார்த்தைகள் பொருந்தும். இளையோரும் முதியோரும் கடந்த வருடத்தின் போது இவற்றைப் பொருத்திப் பிரயோகித்தனர். ஆஸ்திரேலியாவில் ஐந்து வயது சிறுமி ஒருத்தி புதிய பள்ளிக்கூடத்திற்குப் போகத் தொடங்கும் போது, அவளுடைய அம்மா, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை விளக்கிச் சொல்வதற்காக ஆசிரியையிடம் சென்றார். ஆசிரியை கூறினார்: “நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். உங்கள் மகள் அனைத்தையும் எனக்கு விளக்கிக் கூறினாள்.” இந்தச் சிறுமி தானாகவே ஆசிரியையை அணுகி தன்னுடைய விசுவாசத்தை விளக்கிக்கூற அவ்வளவு தைரியமுடையவளாக இருந்தாள்.
ருமேனியாவில் ஐந்து வயது ஆன்ட்ரேயாவும்கூட தைரியம் காட்டினாள். அவளுடைய அம்மா ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை விட்டு விட்டு ஒரு சாட்சியாக மாறியபோது, அயலகத்தார் அவருக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டனர். ஒரு நாள் சபை புத்தகப்படிப்பில் ஒருவருடைய அயலகத்தாருக்குப் பிரசங்கிக்கும் தேவையை ஊழியக்கண்காணி வலியுறுத்தியதை ஆன்ட்ரேயா கேட்டாள். இதைப்பற்றி கருத்தூன்றி சிந்தித்தாள். வீட்டிற்குத் திரும்பிய போது, அவளுடைய அம்மாவிடம் அவள் கூறியதாவது: “நீங்க வேலைக்கு போனதுக்கப்புறம் நான் எழுந்திட்டு, நீங்க செய்ற மாதிரியே என் பையில் பிரசுரங்களை எடுத்துவைத்துக்கிட்டு, சத்தியத்தை என் அயலகத்தாருக்குப் பிரசங்கிக்க எனக்கு உதவி செய்யுமாறு யெகோவாவிடம் ஜெபம்பண்ணுவேனம்மா.”
மறுநாள் ஆன்ட்ரேயா தான் எதை வாக்களித்தாளோ அதையே செய்தாள். தைரியத்தையெல்லாம் ஒன்றுதிரட்டிய பிறகு அயலகத்தார் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். அவளுடைய அயலகத்தார் கதவைத் திறந்தபோது இந்தச் சிறுமி: “எனக்குத் தெரியும் என் அம்மா ஒரு சாட்சியாக மாறியதிலிருந்து நீங்க அவங்களை விரும்புறதில்லை. அவங்க அநேக தடவ உங்களோட பேச முயற்சிசெய்தாங்க, ஆனா நீங்க அவங்க சொல்றதைக் கேக்க விரும்புறதில்ல. இது அவங்க மன அமைதியக் கெடுக்குது. ஆனா உங்கள நாங்க நேசிக்கிறோம் என்றத நீங்க தெரிஞ்சக்கனும்னு எனக்கு ஆசையா இருக்கு.” பிறகு ஆன்ட்ரேயா தொடர்ந்து நல்ல சாட்சிகொடுத்தாள். ஒரே நாளில் அவள் ஆறு புத்தகங்கள், ஆறு பத்திரிகைகள், நான்கு சிறுபுத்தகங்கள், நான்கு துண்டுப்பிரதிகள் ஆகியவற்றை விநியோகித்தாள். அன்றிலிருந்து அவள் ஒழுங்காக வெளி ஊழியத்தில் பங்குகொள்கிறாள்.
ருவாண்டாவில் உள்ள மோதல்களைப் பார்க்கும் போது, நம் சகோதரர்கள் அதிகப்படியான தைரியத்தைக் காட்டவேண்டியவர்களாக உள்ளனர். ஒரு சமயம் சாட்சி குடும்பம் ஒன்றை இராணுவத்தினர் ஒரு அறையில் அடைத்து அங்கு அவர்களைக் கொல்ல தயாரானார்கள். முதலில் ஜெபிப்பதற்கு குடும்பம் அனுமதி கேட்டது. அனுமதியளிக்கப்பட்டது, ஒரு அறிக்கையின்படி ஆறுவயது மகள் டெபராளைத் தவிர அனைவரும் அமைதியாக ஜெபித்தனர். டெபராளோ சத்தமாக ஜெபித்தாள்: “யெகோவாவே நானும் அப்பாவும் இந்த வாரம் அஞ்சி பத்திரிகைகளை அளித்தோம். நாங்க எப்படி மறுபடியும் அவுங்ககிட்டபோய் சொல்லிக்கொடுத்து, அவுங்க ஜீவனைப் பெற உதவிசெய்ய முடியும்? அதுவுமில்லாமல், இப்போ நான் எப்படி ஒரு பிரஸ்தாபியாக முடியும்? உங்கள சேவிக்க நான் முழுக்காட்டுதல்பெற ஆசைப்படறேன்.” இதைக்கேட்ட இராணுவ வீரர் ஒருவர் கூறினார்: “இந்தச் சிறுமியின் நிமித்தம் உங்களைக் கொல்ல எங்களுக்கு மனம்வரவில்லை.” “உங்களுக்கு நன்றி,” என்று டெபராள் பதிலுரைத்தாள். குடும்பம் காப்பாற்றப்பட்டது.
தன்னுடைய பூலோக வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், இயேசு எருசலேமுக்கு வெற்றிபவனி வரும்போது, பெரும் திரளான ஆர்ப்பரிக்கும் கூட்டத்தினரால் அவர் வரவேற்கப்பட்டார். பிள்ளைகளும் பெரியவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். பதிவின்படி சிறுவர்கள் ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரித்தார்கள்.’ பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இதை எதிர்த்தபோது இயேசு: “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா,” என்று பதிலளித்தார்.—மத்தேயு 21:15, 16.
இயேசுவின் இவ்வார்த்தைகள் இன்றும் உண்மையாய் இருப்பதை காண்பது கிளர்ச்சியூட்டவில்லையா? “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும்”—இவர்களோடே, பருவ வயதினர், வாலிப பையன்கள், பெண்கள் ஆகியோரின் வாயினாலும் என்று நாம் சேர்த்துக்கொள்ளலாம்—யெகோவா துதி உண்டாகும்படி செய்திருக்கிறார். நிச்சயமாகவே யெகோவாவுக்குத் துதிசெலுத்துவது என்று வரும்போது குறைந்தபட்ச வயதுவரம்பு ஏதும் கிடையாது.—யோவேல் 2:28, 29.