“பயப்படாதே சிறுமந்தையே”
“பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.”—லூக்கா 12:32.
1. “பயப்படாதே சிறுமந்தையே” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஆதாரம் என்னவாக இருந்தது?
“தொடர்ந்து [தேவனுடைய] ராஜ்யத்தையே தேடுங்கள்.” (லூக்கா 12:31, NW) இயேசு இந்த வார்த்தைகளைத் தம்முடைய சீஷர்களிடம் சொன்னபோது, அவருடைய நாளிலிருந்து நம்முடைய நாள் வரையாக கிறிஸ்தவர்களின் சிந்தனையை வழிநடத்தியிருக்கும் ஒரு நியமத்தை வெளிப்படுத்தினார். கடவுளுடைய ராஜ்யம் நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். (மத்தேயு 6:33) என்றபோதிலும், லூக்காவின் பதிவில், இயேசு நம்பிக்கையூட்டும் அன்புமிக்க வார்த்தைகளைக் கிறிஸ்தவர்களின் ஒரு விசேஷித்த தொகுதியிடமாக தொடர்ந்து பேசினார். அவர் சொன்னார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (லூக்கா 12:32) நல்ல மேய்ப்பராகிய இயேசு, தம்முடைய நெருக்கமான சீஷர்கள் கொந்தளிப்பான காலங்களை எதிர்ப்பட வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார். ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தை அவர்கள் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தால் பயப்படுவதற்குக் காரணம் எதுவும் இல்லை. ஆகவே, இயேசுவின் அறிவுரை ஒரு கடுமையான கட்டளையாக இருக்கவில்லை. மாறாக, நம்பிக்கையையும் தைரியத்தையும் தோற்றுவிக்கும் ஓர் அன்புமிக்க வாக்குறுதியாக இருந்தது.
2. சிறுமந்தையை உண்டுபண்ணுகிறவர்கள் யார், அவர்கள் ஏன் விசேஷித்த சிலாக்கியம் பெற்றவர்கள்?
2 இயேசு தம்முடைய சீஷர்களிடம் பேசிக்கொண்டிருந்தார், அவர்களை அவர் “சிறுமந்தை” என்பதாக அழைத்தார். யெகோவா ‘ராஜ்யத்தைக் கொடுக்கப்போகிறவர்களிடமாகக்கூட’ அவர் பேசிக்கொண்டிருந்தார். பிற்காலங்களில் இயேசுவை ஏற்றுக்கொள்ளவிருந்த திரளான கூட்டத்தாரோடு ஒப்பிடுகையில், இந்தத் தொகுதியினர் எண்ணிக்கையில் சிலராக இருப்பர். ராஜரீக சேவையில் பயன்படுத்தப்பட குறிப்பிடத்தக்க எதிர்காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் அருமையானவர்களாகவும்கூட கருதப்பட்டனர். அவர்களுடைய தகப்பன், பெரிய மேய்ப்பராகிய யெகோவா, கிறிஸ்துவின் மேசியானிய ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பரலோக சுதந்தரத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அழைத்திருக்கிறார்.
சிறுமந்தை
3. சிறுமந்தையின் என்ன மகிமையான தரிசனத்தை யோவான் கண்டார்?
3 அப்படியானால், இப்படிப்பட்ட அதிசயமான எதிர்பார்ப்பை உடைய இந்தச் சிறுமந்தையை உண்டுபண்ணுகிறவர்கள் யார்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள். (அப்போஸ்தலர் 2:1-4) அவர்களைத் தங்கள் கைகளில் சுரமண்டலங்களை வைத்திருக்கும் பரலோக பாடகர்களாக காண்பவராய் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “பின்பு நான் பார்த்தபோது, இதோ! சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக்கண்டேன். ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.”—வெளிப்படுத்துதல் 14:1, 4, 5.
4. இன்று பூமியில் சிறுமந்தை என்ன ஸ்தானத்தைக் கொண்டிருக்கின்றனர்?
4 பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டும் ஆவியினால் பிறப்பிக்கப்பட்டும் இருக்கும் இவர்கள் கிறிஸ்துவுக்கு ஸ்தானாதிபதிகளாக பூமியில் சேவை செய்து வந்திருக்கின்றனர். (2 கொரிந்தியர் 5:20) இன்று, அவர்களில் மீதியானோர் மட்டும் தான் ஒருங்கிணைந்து “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரின் அங்கத்தினர்களாக சேவிக்கின்றனர். (மத்தேயு 24:45, NW; வெளிப்படுத்துதல் 12:17) குறிப்பாக 1935-ஆம் வருடம் முதற்கொண்டு இப்பொழுது எண்ணிக்கையில் இலட்சக்கணக்கானோராக இருக்கும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள், ‘வேறே ஆடுகள்,’ அவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் பூமி முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் உதவுகின்றனர்.—யோவான் 10:16.
5. சிறுமந்தையைச் சேர்ந்த மீதியானவர்களின் மனநிலை என்ன, அவர்கள் ஏன் பயப்படவேண்டிய அவசியமில்லை?
5 இன்னும் பூமியில் இருந்துகொண்டிருக்கும் இந்தச் சிறுமந்தையைச் சேர்ந்த மீதியானவர்களின் மனநிலை என்ன? ‘அசைக்கமுடியாத ராஜ்யத்தை’ தாங்கள் பெறப்போவதைக் குறித்து அறிந்திருப்பதால், அவர்கள் தங்கள் பரிசுத்த சேவையைத் தேவபயத்தோடும் பயபக்தியோடும் செய்துவருகின்றனர். (எபிரெயர் 12:28) அவர்கள் தங்கள் சிலாக்கியம் மதிப்பிடப்பட முடியாதது என்றும், கட்டிலடங்கா மகிழ்ச்சியில் விளைவடைகிறது என்றும் மனத்தாழ்மையோடு உணருகின்றனர். இயேசு ராஜ்யத்தைப்பற்றி பேசியபோது குறிப்பிட்ட “விலையுயர்ந்த ஒரு முத்தை” அவர்கள் கண்டடைந்திருக்கின்றனர். (மத்தேயு 13:46) மிகுந்த உபத்திரவம் நெருங்கி வருகையில், கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்டோர் பயமின்றி உறுதியாக இருக்கின்றனர். “யெகோவாவுடைய பெரிதும் பிரகாசமுமான நாள்” வரும்போது மனிதவர்க்க உலகத்தின்மீது ஏற்படப்போகும் காரியங்கள் இருப்பினும், அவர்களுக்கு எதிர்காலத்தைப்பற்றி வருத்தம் தோய்ந்த பயம் எதுவும் இல்லை. (அப்போஸ்தலர் 2:19-21, NW) அவர்கள் ஏன் பயப்படவேண்டும்?
எண்ணிக்கை குறைந்துவருகிறது
6, 7. (அ) இன்னும் பூமியிலிருக்கும் சிறுமந்தையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக இருக்கிறது? (ஆ) ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தான் கொண்டிருக்கும் நம்பிக்கையை எவ்வாறு கருதவேண்டும்?
6 சமீப ஆண்டுகளில் இன்னும் பூமியில் இருந்துகொண்டிருக்கும் சிறுமந்தையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இது 1994 நினைவு ஆசரிப்பு அறிக்கையில் தெளிவாக இருந்தது. உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் மக்களின் சுமார் 75,000 சபைகளில் நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்குகொள்வதன் மூலம் 8,617 பேர் மட்டுமே அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரைச் சேர்ந்தவர்களென காண்பித்தனர். (மத்தேயு 26:26-30) இதற்கு மாறாக, மொத்த ஆஜர் எண்ணிக்கை 1,22,88,917 ஆக இருந்தது. இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே என்பதை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அறிவார்கள். சிறுமந்தையை உண்டுபண்ணும் எண்ணிக்கை 1,44,000 என்பதை யெகோவா நிர்ணயித்திருக்கிறார், மேலும் அவர் அதை பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு கூட்டிச்சேர்த்து வருகிறார். நியாயமாகவே, எண்ணிக்கை முற்றுப்பெறும் தருவாயில் இருக்கையில் சிறுமந்தையை அழைப்பது முடிவுக்கு வரும். விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்ட இவர்கள் பொதுவாக கூட்டிச்சேர்க்கப்படுவது 1935-ல் முடிவுக்கு வந்தது என்பது உண்மையாக இருக்கிறது. என்றபோதிலும், முடிவு காலத்தின்போது, வேறே ஆடுகள் ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரள்கூட்டமாக’ வளரும் என்பது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்தது. 1935 முதற்கொண்டு யெகோவா பொதுவாக கூட்டிச்சேர்த்திருப்பது இந்தத் திரள்கூட்டத்தினராக இருக்கின்றனர், இவர்களுடைய நம்பிக்கை பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனாகும்.—வெளிப்படுத்துதல் 7:9; 14:15, 16; சங்கீதம் 37:29.
7 சிறுமந்தையைச் சேர்ந்தவர்களுள் பூமியில் இன்னும் இருக்கும் அநேகர் இப்போது வயதில் 70-களில், 80-களில் அல்லது 90-களில் இருக்கின்றனர். சிலர் 100 வயதையும் தாண்டி விட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும், அவர்களுடைய வயது என்னவாக இருப்பினும், ஒரு பரலோக உயிர்த்தெழுதலின் மூலம், இறுதியில் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, அவருடைய மகிமையான ராஜ்யத்தில் அவரோடுகூட அரசாளுவர் என்பதை அறிந்திருக்கிறார்கள். திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜாவாகிய கிறிஸ்துவின் பூமிக்குரிய குடிமக்களாக இருப்பர். ஒவ்வொருவரும் யெகோவா தம்மை நேசிப்பவர்களுக்காக எதிர்காலத்தில் வைத்திருப்பவற்றைக் குறித்து களிகூருவாராக. எந்த நம்பிக்கையை வைத்திருப்பது என்பதை ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தீர்மானித்துக் கொள்வதில்லை. அதை யெகோவா தாமே தீர்மானம் செய்வார். இரண்டு வகுப்பினரும், பரலோக ராஜ்யத்தில் இருந்தாலும் சரி அல்லது அந்த ராஜ்யத்தின்கீழ் பரதீஸிய பூமியில் இருந்தாலும் சரி, ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருப்பதில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைக் குறித்து சந்தோஷப்படலாம்.—யோவான் 6:44, 65; எபேசியர் 1:17, 18.
8. 1,44,000 பேர் முத்திரையிடப்படுவது எவ்வளவு அதிகமாக முன்னேறிய நிலையில் இருக்கிறது, அது முடிவுக்கு வரும்போது என்ன சம்பவிக்கும்?
8 கடவுளுடைய நோக்கங்களில் இயற்கையான இஸ்ரவேலருக்கு பதிலாக இருக்கும் “தேவனுடைய இஸ்ரவேல”ராக சிறுமந்தையைச் சேர்ந்த 1,44,000 பேர் உள்ளனர். (கலாத்தியர் 6:16) ஆகையால், மீதியானோர் பூமியில் இன்னும் உயிரோடிருக்கும் கடவுளின் ஆவிக்குரிய இஸ்ரவேலில் மீந்திருப்பவர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட மீதியானோர் யெகோவாவின் அங்கீகாரத்துக்காக முத்திரையிடப்பட்டு வருகின்றனர். ஒரு தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவான் இது நடப்பதைக் கண்டு இவ்வாறு அறிவிப்பு செய்தார்: “ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; [ஆவிக்குரிய] இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.” (வெளிப்படுத்துதல் 7:2-4) ஆவிக்குரிய இஸ்ரவேலை முத்திரையிடும் இந்த வேலை முடிவுக்கு வருவது இப்போது அதிகமாக முன்னேறிய நிலையில் இருப்பதால், கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் விரைவில் நிகழப்போவதை இது குறிப்பிட்டுக்காட்டுகிறது. ஒரு காரியமானது, பூமியின்மீது அழிவுண்டாக்கும் அந்த நான்கு காற்றுகள் கட்டவிழ்த்துவிடப்படும் போது சம்பவிக்கும் ‘மிகுந்த உபத்திரவம்’ வெகு அருகாமையில் இருக்கவேண்டும்.—வெளிப்படுத்துதல் 7:14.
9. திரள்கூட்டத்தார் எண்ணிக்கையில் அதிகரித்துவருவதை சிறுமந்தை எவ்வாறு நோக்குகிறது?
9 ஏற்கெனவே கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கும் திரள்கூட்டத்தார் எண்ணிக்கையில் இலட்சக்கணக்கானோராக இருக்கின்றனர். இது மீதியானோரின் இருதயங்களுக்கு எவ்வாறு அனலூட்டுகிறது! இன்னும் பூமியிலிருக்கும் சிறுமந்தையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே இருந்தாலும், விரிவாகிக்கொண்டே செல்லும் கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பின் சம்பந்தமாக உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் திரள்கூட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆண்களைப் பயிற்றுவித்து தயார் செய்திருக்கின்றனர். (ஏசாயா 61:5) இயேசு குறிப்பிட்டவிதமாகவே, மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள்.—மத்தேயு 24:22.
“பயப்படாதே”
10. (அ) கடவுளுடைய ஜனங்கள் மீது என்ன தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது, அது எதற்கு வழிநடத்தும்? (ஆ) நம் ஒவ்வொருவரிடமாகவும் என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன?
10 சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமியின் அருகாமையில் தாழ்த்தப்பட்ட நிலையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். யெகோவாவின் ஜனங்கள்மீது முழு வேகத்துடன் தாக்குதல் நடத்த சாத்தானும் அவனுடைய கும்பலும் வழிநடத்தப்பட்டு வருகின்றனர். பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மாகோகின் கோகானவனுடைய தாக்குதல் என்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யார்மீது சாத்தான் தன் தாக்குதலை ஒருமுகப்படுத்துகிறான்? ‘பூமியின் நடுவில்’ சமாதானமாய் வசித்துக்கொண்டிருக்கும் சிறுமந்தையின் கடைசி அங்கத்தினர்களான கடவுளுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலர்மீது அல்லவா அவன் தாக்குதல் செய்கிறான்? (எசேக்கியேல் 38:1-12) ஆம், ஆனால் சாத்தானின் தாக்குதல் எவ்வாறு யெகோவா தேவனின் பங்கில் வியக்கத்தக்க ஒரு பிரதிபலிப்பை உண்டுபண்ணுகிறது என்பதை உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட வகுப்பாரும் அவர்களுடைய பற்றுமாறா தோழர்களாகிய வேறே ஆடுகளும் சேர்ந்து நேரில் காண்பர். அவர் தம்முடைய ஜனங்களைப் பாதுகாப்பதற்காக தலையிடுவார், இது ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளை’ ஆரம்பித்து வைக்கும். (யோவேல் 2:31, NW) இன்று, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை யெகோவா தலையிடப்போவதைக் குறித்து எச்சரித்து, இன்றியமையாத உயிர்காக்கும் சேவையைச் செய்துவருகிறது. (மல்கியா 4:5; 1 தீமோத்தேயு 4:16) யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொண்டு அந்த ஊழியத்தை நீங்கள் சுறுசுறுப்பாக ஆதரித்துவருகிறீர்களா? பயமற்ற ஒரு ராஜ்ய அறிவிப்பாளராக நீங்கள் அதைத் தொடர்ந்து செய்வீர்களா?
11. தைரியமான ஒரு மனநிலை இன்று ஏன் அத்தியாவசியமாக இருக்கிறது?
11 தற்போதைய உலகநிலைமைகளின் காரணமாக, இயேசு அவர்களிடமாக சொன்ன வார்த்தைகளுக்குக் கவனம்செலுத்துவது சிறுமந்தைக்கு எவ்வளவு காலத்துக்கு ஏற்றதாய் இருக்கிறது: “பயப்படாதே சிறுமந்தையே”! யெகோவாவின் நோக்கத்தின்படி இப்போது நடைபெறும் எல்லாக் காரியங்களையும் பார்க்கையில், இப்படிப்பட்ட தைரியமான மனநிலை இருப்பது அவசியம். தனிப்பட்டவர்களாக, சிறுமந்தையைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் முடிவு வரை சகித்திருக்க வேண்டிய அவசியத்தை உணருகின்றனர். (லூக்கா 21:19) சிறுமந்தையின் எஜமானும் ஆண்டவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்து, தம் பூமிக்குரிய வாழ்க்கை முடியும்வரை எப்படி சகித்திருந்து உண்மையுள்ளவராக நிரூபித்தாரோ, அதே போன்று மீதியானோரில் ஒவ்வொருவரும் சகித்திருந்து உண்மையுள்ளவராக நிரூபிக்கவேண்டும்.—எபிரெயர் 12:1, 2.
12. இயேசுவைப் போல, பவுல் எவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பயப்படாதிருக்கும்படியாக அறிவுரை கூறினார்?
12 அப்போஸ்தலன் பவுலுக்கு இருந்த அதே மனநிலை அபிஷேகம் செய்யப்பட்ட எல்லாருக்கும் இருக்கவேண்டும். பயப்படாதிருக்கும்படி இயேசு கொடுத்த புத்திமதிக்கு இசைவாக எவ்வாறு, உயிர்த்தெழுதலைப்பற்றி பகிரங்கமாக அறிவித்த அபிஷேகம் செய்யப்பட்டவராகிய அவருடைய வார்த்தைகள் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். பவுல் எழுதினார்: “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பம் அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன். இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்க மாட்டார்.”—2 தீமோத்தேயு 2:8-13.
13. சிறுமந்தையின் அங்கத்தினர்கள் என்ன ஆழமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர், இது என்ன செய்யும்படியாக அவர்களை உந்துவிக்கிறது?
13 அப்போஸ்தலன் பவுலைப் போன்று அபிஷேகம் செய்யப்பட்ட சிறுமந்தையைச் சேர்ந்த மீதியானோர், கடவுளுடைய வார்த்தையில் அடங்கியிருக்கும் வல்லமைவாய்ந்த செய்தியை அறிவிக்கையில் துன்பத்தைச் சகிப்பதற்கு மனமுள்ளவர்களாய் இருக்கின்றனர். இரட்சிப்பைப் பற்றிய தெய்வீக வாக்குறுதிகளின் பேரிலும், மரணம் வரை உண்மையுள்ளவர்களாக நிரூபித்தால் ‘ஜீவகிரீடம்’ தங்களுக்குக் கொடுக்கப்படும் என்பதன் பேரிலும் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதால், அவர்களுடைய நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 2:10) உடனடியான உயிர்த்தெழுதலையும் மாற்றத்தையும் அனுபவிப்பதன் மூலம், அவர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, அவரோடுகூட ராஜாக்களாக ஆட்சி செய்வர். உலகத்தை ஜெயிப்பவர்களாக, அவர்கள் உத்தமத்தன்மையுள்ள வாழ்க்கைப் போக்கை மேற்கொண்டதற்கு என்னே ஒரு வெற்றி!—1 யோவான் 5:3, 4.
தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நம்பிக்கை
14, 15. சிறுமந்தையின் உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வாறு தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது?
14 சிறுமந்தை மனதில் கொண்டிருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. என்ன வழிகளில்? ஒரு காரியமானது, “நீதிமான்களும் அநீதிமான்களும்” உயிர்ப்பிக்கப்படும் பொதுவான உயிர்த்தெழுதலுக்கு முந்தி இது நடைபெறுகிறது. (அப்போஸ்தலர் 24:15) உண்மையில், 1 கொரிந்தியர் 15:20, 23-ல் காணப்படும் இந்த வார்த்தைகளில் தெளிவாக சொல்லப்பட்டபடி, அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் உயிர்த்தெழுதல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் நடைபெறுகிறது: “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” இயேசு வெளிக்காட்டிய சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் கொண்டிருப்பதன் மூலம், தாங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்போது, குறிப்பாக, உண்மையான ஆண்டவர் 1918-ல் நியாயத்தீர்ப்புக்காக தம் ஆலயத்துக்குள் வந்த சமயத்திலிருந்து தங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை சிறுமந்தை அறிந்திருக்கிறது.—மல்கியா 3:1.
15 இந்த உயிர்த்தெழுதலைத் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக நோக்குவதற்கு பவுல் ஒரு கூடுதலான காரணத்தைக் கொடுக்கிறார். ஒன்று கொரிந்தியர் 15:51-53-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி, அவர் எழுதினார்: “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். . . . அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.” கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது மரணமடையும் சிறுமந்தையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்துகின்றன. நீண்ட ஒரு காலத்துக்கு மரணத்தில் உறங்கவேண்டிய அவசியமின்றி, அவர்கள் “ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே” அழியாமையைத் தரித்துக்கொள்கின்றனர்.
16, 17. தங்களுடைய உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் சம்பந்தமாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்று எவ்வாறு விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
16 இந்தப் புரிந்துகொள்ளுதலின் வெளிச்சத்தில், வெளிப்படுத்துதல் 14:12, 13-ல் உள்ள அப்போஸ்தலன் யோவானின் வார்த்தைகளின் உட்கருத்தை நாம் அறிந்துகொள்ளலாம். அவர் எழுதினார்: “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்.”
17 சிறுமந்தையில் இருக்கும் மீதியானோருக்கு எப்படிப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த வெகுமதி காத்திருக்கிறது! அவர்களுக்கு உயிர்த்தெழுதல் சீக்கிரத்தில் ஏற்பட்டுவிடுகிறது, அவர்கள் மரணத்தில் நித்திரையடைந்த உடனேயே அது நடைபெறுகிறது. இவ்வாறு, ஆவிப்பிரதேசத்தில் தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் வேலையை எடுத்துக்கொள்கையில், எப்பேர்ப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை மீதியானோர் அனுபவிப்பர்! சிறுமந்தை இவ்வாறு மகிமைப்படுதல் இப்போது நடந்தேறிவருவதாலும், முக்கிய பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் முழுமையடைந்து வருவதாலும், சிறுமந்தையில் மீந்திருக்கும் கடைசி அங்கத்தினர்கள் உண்மையில் ‘பயப்படவேண்டிய’ அவசியமே இல்லை. அவர்கள் பயமின்றி இருப்பது திரள்கூட்டத்தாரை உற்சாகப்படுத்துகிறது. இப்பூமி ஒருபோதும் அறிந்திராத பெருங்கஷ்டமான காலத்தின்போது, விடுதலையை எதிர்பார்த்திருக்கும் திரள்கூட்டத்தாரும்கூட பயமின்றி இருக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
18, 19. (அ) நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் ஏன் அவசரமானது? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டோரும் வேறே ஆடுகளும் ஆகிய இரு சாராருமே ஏன் பயப்படாதிருக்க வேண்டும்?
18 சிறுமந்தையின் வேலைகளைத் திரும்பவும் எண்ணிப்பார்ப்பது, அவர்களும், திரள்கூட்டத்தாரும் தொடர்ந்து மெய்க்கடவுளுக்குப் பயப்படும்படி செய்விக்கிறது. அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. மீந்திருக்கும் சாதகமான காலமும் அருமையானதாய் இருக்கிறது. மற்றவர்கள் செயல்படுவதற்கு இருக்கும் காலம் உண்மையிலேயே வெகு குறைவு. ஆனால், நாமோ கடவுளுடைய நோக்கம் தவறிவிடும் என்று பயப்படுவதில்லை. அது நிச்சயமாக நிறைவேறும்!
19 ஏற்கெனவே, சப்தமான பரலோக குரல்கள் பின்வருமாறு சொல்வது கேட்கப்பட்டுவிட்டது: “அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.” (வெளிப்படுத்துதல் 11:15) நிச்சயமாகவே, பெரிய மேய்ப்பராகிய யெகோவா தம் ஆடுகள் அனைத்தையும் “தம்முடைய நாமத்தினிமித்தம் நீதியின் பாதைகளில்” வழிநடத்திச் செல்கிறார். (சங்கீதம் 23:3) சிறுமந்தை பரலோக வெகுமதியை நோக்கி இலக்குத் தவறாது வழிநடத்திச் செல்லப்பட்டுவருகிறது. வேறே ஆடுகளாகிய ஆட்கள் மிகுந்த உபத்திரவத்தினூடே பாதுகாப்பாய் காப்பாற்றப்பட்டு, கடவுளுடைய மகிமையான ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் கிறிஸ்து இயேசுவின் ஆட்சியின்கீழ் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கு வழிநடத்தப்படுவர். ஆகவே, இயேசுவின் வார்த்தைகள் சிறுமந்தையினிடமாக பேசப்பட்ட போதிலும், பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் அவருடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க காரணமிருக்கிறது: “பயப்படாதே.”
உங்களால் விளக்கமுடியுமா?
◻ சிறுமந்தையைச் சேர்ந்த மீதியானவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பதை நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
◻ அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோரின் நிலைமை இன்று என்னவாக இருக்கிறது?
◻ மாகோகின் கோகுவின் தாக்குதல் நெருங்கிவருகிறபோதிலும், கிறிஸ்தவர்கள் ஏன் பயமின்றி இருக்கவேண்டும்?
◻ 1,44,000 பேரின் உயிர்த்தெழுதல் நம்பிக்கை, விசேஷமாக இன்று ஏன் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது?