ஒப்புக்கொடுக்கப்பட்டிருத்தல்—யாருக்கு?
“அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.”—யாத்திராகமம் 24:7.
1, 2. (அ) சில ஜனங்கள் எதற்கு தங்களை அர்ப்பணித்திருக்கின்றனர்? (ஆ) மத சம்பந்தமான பிணைப்புகளை உடையோருக்கு மட்டும் ஒப்புக்கொடுத்தல் மட்டுப்பட்டதாய் இருக்கிறதா?
பிப்ரவரி 1945-ல், ஜப்பானின் யாட்டாபே ஃபிலையிங் கார்ப்ஸ் என்ற இராணுவ உட்பிரிவைச் சேர்ந்த சீரோ-ஃபைட்டர் என்ற இராணுவ விமானத்தின் ஓட்டுநர்கள் ஒரு அரங்கத்தில் ஒன்றுகூடினர். கமிக்கேஸ் தாக்குதல் படையின் ஒரு அங்கத்தினராக ஆவதற்கு முன்வருவார்களா என்பதை எழுதிக்கொடுப்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு சிறிய துண்டு காகிதம் கொடுக்கப்பட்டது. “தேசிய நெருக்கடி சமயத்தின்போது என்னையே தியாகம் செய்வதற்கு எனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு என்று நினைத்தேன்,” என்று அந்தச் சமயத்தில் அங்கிருந்த அதிகாரி ஒருவர் சொல்கிறார். “நான் உதவியாயிருக்க வேண்டுமென்று உணர்ச்சிப்பூர்வமாய் கட்டாயப்படுத்தப்பட்டு, அப்பணிக்காக நான் என்னையே அளித்தேன்.” விரோதியின் போர்க்கப்பலுக்குள் மோதித்தகர்ப்பதற்கென்று ஓக்காவை (தற்கொலை ராக்கெட் விமானத்தை) இயக்குவதற்கும் ஓட்டுவதற்கும் அவர் பயிற்சியளிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவ்வாறு செய்து தன் நாட்டுக்காகவும் பேரரசருக்காகவும் மரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமுன்பே போர் முடிந்துவிட்டது. ஜப்பான் போரில் தோல்வியுற்றபோது, பேரரசரின் பேரில் அவருக்கு இருந்த நம்பிக்கை நொறுக்கப்பட்டது.
2 ஒரு சமயம் ஜப்பானில் இருந்த அநேகர் பேரரசருக்கென்று தங்களை அர்ப்பணித்தனர், உயிருள்ள ஒரு கடவுளாக அவரை அவர்கள் நம்பினர். மற்ற தேசங்களில், வழிபாட்டுக்கென்று வேறு பொருட்கள் இருந்திருக்கின்றன, இன்னும் இருக்கின்றன. இலட்சக்கணக்கானோர் மரியாள், புத்தர், அல்லது மற்ற தெய்வங்கள் பேரில் பக்தியுள்ளவர்களாய் இருக்கின்றனர்—பெரும்பாலும் அவர்கள் விக்கிரகங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர். சிலர் மனவெழுச்சியைத் தூண்டும் சொற்பொழிவினால் கவரப்பட்டு, இருதயப்பூர்வமான ஆதரவைத் தரும் விதத்தில், கடினமாக-உழைத்து சம்பாதித்த பணத்தை டிவி சுவிசேஷகர்களுக்குக் கொடுக்கின்றனர், அது பக்திக்குச் சமமாக இருக்கிறது. போருக்குப் பின் ஏமாற்றமடைந்த ஜப்பானியர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கு ஒரு புதிய பொருளைத் தேடினர். சிலருக்கு, வேலை அந்தப் பொருளாக ஆனது. கிழக்கத்திய நாடுகளோ மேற்கத்திய நாடுகளோ, எதுவாயிருப்பினும், செல்வங்களைக் குவித்து வைப்பதற்கு அநேகர் தங்களையே அர்ப்பணிக்கின்றனர். இளம் நபர்கள் சில இசைக்கலைஞர்களைத் தங்கள் வாழ்க்கையின் மையமாக ஆக்கிக்கொள்கின்றனர், அவர்களுடைய வாழ்க்கை பாணியைப் பார்த்து பின்பற்றுகின்றனர். இன்று பெரும்பாலானவர்கள் தங்களையே வணங்குபவர்களாக ஆகியிருக்கின்றனர், தங்கள் சொந்த விருப்பங்களையே தங்கள் பக்தியின் பொருளாக ஆக்கியிருக்கின்றனர். (பிலிப்பியர் 3:19; 2 தீமோத்தேயு 3:2) ஆனால் இப்படிப்பட்ட காரியங்கள் அல்லது ஜனங்கள், ஒரு நபரின் முழு-ஆத்துமாவோடுகூடிய பக்திக்குத் தகுதியானவர்களாக இருக்கின்றனரா?
3. பக்திக்குரிய சில பொருட்கள் எப்படி பயனற்றவையாய் நிரூபித்திருக்கின்றன?
3 மெய்ம்மையை எதிர்ப்படுகையில், விக்கிரக வணக்கத்தார் அவ்வப்போது குழப்பமடைகின்றனர். தங்கள் விக்கிரகங்கள் வெறுமனே ‘மனுஷருடைய கைவேலையாயிருக்கிறதை’ அவ்வணக்கத்தார் உணரும்போது, அப்படிப்பட்ட விக்கிரகங்களுக்குச் செலுத்தப்படும் வணக்கம் ஏமாற்றத்தில் விளைவடைகிறது. (சங்கீதம் 115:4) பிரபலமான சுவிசேஷகர்களைப் பற்றிய அவதூறுகள் அம்பலமாகும்போது, உண்மை மனதுள்ள ஜனங்கள் தாங்கள் எதிர்பார்த்தபடி நடவாமல் போனதன் காரணமாக ஏமாற்றமடைகின்றனர். “ஏமாறச்செய்யும்” பொருளாதாரம் முடிவடைந்தபோது, வேலையிலிருந்து விலக்கி வைத்திருக்கும் ஆட்களின் பட்டியலில் தொழிலாளிகள் தங்கள் பெயரைக் கண்டபோது, மனசம்பந்தமான கோளாறுகளை அனுபவித்தனர். சமீபத்திய பொருளாதார நிலையின் பின்னடைவுகள், மாமோனை வணங்குபவர்களுக்குக் கடுமையான அதிர்ச்சியைத் தந்தன. நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன்களுக்கு உள்ளாவது, கடனைத் திருப்பிக்கொடுக்க இயலாமல் ஒரு பாரமாக ஆகிறது. (மத்தேயு 6:24, NW, அடிக்குறிப்பு) பெரிதும் போற்றி வழிபட்ட ராக் இசை நட்சத்திரங்களும் மற்ற பொழுதுபோக்கு கலைஞர்களும் மரித்தாலோ அல்லது அவர்களுடைய மதிப்பு குறைந்து போனாலோ, அவர்களை வணங்குபவர்கள் கைவிடப்பட்டவர்களாக உணருகின்றனர். சுய-திருப்தியுள்ள வாழ்க்கை முறையை பின்பற்றியவர்கள் கசப்பான கனிகளை அறுவடை செய்கின்றனர்.—கலாத்தியர் 6:7.
4. பயனற்ற காரியங்களுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கு எது ஜனங்களைத் தூண்டுகிறது?
4 அப்படிப்பட்ட பயனற்ற காரியங்களுக்கு தங்களை அர்ப்பணிப்பதற்கு எது ஜனங்களைத் தூண்டுகிறது? பிசாசாகிய சாத்தானின்கீழ் இவ்வுலகத்தின் ஆவி பெரும் அளவில் அவ்வாறு செய்கிறது. (எபேசியர் 2:2, 3) இந்த ஆவியின் செல்வாக்குப் பல்வேறு வழிகளில் காணப்படுகிறது. ஒரு நபர் தன் மூதாதையர்களிடமிருந்து கடத்தப்பட்டிருக்கும் குடும்ப பாரம்பரியத்தினால் கட்டுப்படுத்தப்படலாம். கல்வியும், வளர்ப்பு முறையும் சிந்தனையின் பேரில் பலமாக செல்வாக்கு செலுத்தலாம். வேலை செய்யும் இடங்களில் உள்ள சூழ்நிலைமைகள் “நிறுவனத்தில் வேலை செய்யும் வீரர்களை” கட்டாயப்படுத்தி அதிகமாக வேலை செய்ய உந்துவிக்கலாம், அது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இவ்வுலகின் பொருளாசையான மனநிலை, அதிகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டுபண்ணுகிறது. அநேகருடைய இருதயங்கள் அசுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றன, தங்கள் சொந்த சுயநல விருப்பங்களுக்குத் தங்களை அர்ப்பணித்துவிட உந்துவித்திருக்கின்றன. இந்த நாட்டங்கள் இத்தகைய பக்திக்குத் தகுதியானவையா என்பதை ஆராய அவர்கள் தவறிவிடுகின்றனர்.
ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு தேசம்
5. யெகோவாவுக்கு என்ன ஒப்புக்கொடுத்தல் 3,500-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டது?
5 ஒரு தேசத்தைச் சேர்ந்த ஜனங்கள் 3,500-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு தங்கள் பக்திக்கு அதிக தகுதிவாய்ந்த ஒரு பொருளைக் கண்டுபிடித்தனர். அவர்கள் சர்வலோக பேரரசராகிய யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். ஒரு தொகுதியாக, இஸ்ரவேல் தேசம் கடவுளுக்கு அதன் ஒப்புக்கொடுத்தலை சீனாய் வனாந்தரத்திலே அறிவித்தது.
6. இஸ்ரவேலருக்குக் கடவுளுடைய பெயர் என்ன முக்கியத்துவமுடையதாய் இருந்திருக்க வேண்டும்?
6 இந்த முறையில் செயல்படுவதற்கு இஸ்ரவேலர்களை எது உந்துவித்தது? அவர்கள் எகிப்தில் அடிமைத்தனத்தின்கீழ் இருந்தபோது, அவர்களை விடுதலைக்கு வழிநடத்தும்படி யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டார். தன்னை அனுப்பிய கடவுள் யார் என்பதை அவர் எவ்வாறு விவரிக்க வேண்டும் என்று மோசே கேட்டபோது, “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்” என்று கடவுள் தம்மை வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் புத்திரரிடம் இவ்வாறு சொல்லும்படி அவர் மோசேக்கு கட்டளையிட்டார்: “நிரூபிப்பேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார்.” (யாத்திராகமம் 3:13, 14, NW) யெகோவா தம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எது தேவைப்படுகிறதோ அதுவாக ஆகிறார் என்பதை இந்தச் சொற்றொடர் குறிப்பிட்டுக் காட்டியது. வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவராக அவர் தம்மை வெளிப்படுத்திக் காண்பிப்பார், இஸ்ரவேலரின் முற்பிதாக்கள் ஒருபோதும் அறிந்திராத விதத்தில் அதைச் செய்வார்.—யாத்திராகமம் 6:2, 3.
7, 8. யெகோவா இஸ்ரவேலருடைய பக்திக்குத் தகுதியான கடவுள் என்பதற்கு அவர்கள் என்ன அத்தாட்சியைக் கொண்டிருந்தனர்?
7 பத்து வாதைகளின் மூலம் எகிப்து தேசமும் அதன் ஜனங்களும் அனுபவித்த இன்னல்களை இஸ்ரவேலர் நேரில் கண்டனர். (சங்கீதம் 78:44-51) பின்பு, பெண்கள், பிள்ளைகள் உட்பட முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மூட்டைக் கட்டிக்கொண்டு கோசேன் தேசத்திலிருந்து ஒரே இரவில் புறப்பட்டுச் சென்றனர், அது தானே ஒரு குறிப்பிடத்தக்க வியப்பூட்டும் செயலாக இருந்தது. (யாத்திராகமம் 12:37, 38) அடுத்து, யெகோவா சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்து இஸ்ரவேலர்களை கடந்து செல்ல வைப்பதன் மூலமாகவும் அதற்குப் பின்பு அவர்களைப் பின்தொடர்ந்து வந்த எகிப்தியர்களை மூழ்கடிப்பதற்கு அதை மூடுவதன் மூலமாகவும் தம் ஜனங்களை பார்வோனின் சேனைகளிடமிருந்து பாதுகாத்தபோது, தம்மை ‘யுத்தத்தில் வல்லவராக’ வெளிப்படுத்திக் காண்பித்தார். அதன் விளைவாக, “கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.”—யாத்திராகமம் 14:31; 15:3; சங்கீதம் 136:10-15.
8 கடவுளுடைய பெயர் அர்த்தப்படுத்தும் காரியத்தைக் குறித்து அத்தாட்சி இன்னும் குறைவுபடுவது போல், இஸ்ரவேலர் உணவும் தண்ணீரும் குறைவுபட்டதைக் குறித்து யெகோவாவுக்கு எதிராகவும் அவருடைய பிரதிநிதியாகிய மோசேக்கு எதிராகவும் முறுமுறுத்தார்கள், யெகோவா காடையை அனுப்பினார், மன்னாவைப் பொழியப் பண்ணினார், மேரிபாவில் ஒரு கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படும்படி செய்தார். (யாத்திராகமம் 16:2-5, 12-15, 31; 17:2-7) அமலேக்கியரின் தாக்குதலிலிருந்தும்கூட யெகோவா இஸ்ரவேலரை விடுவித்தார். (யாத்திராகமம் 17:8-13) பின்னால் யெகோவா மோசேக்கு அறிவித்ததை இஸ்ரவேலர்கள் எந்த விதத்திலும் மறுக்க முடியவில்லை: “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.” (யாத்திராகமம் 34:6, 7) உண்மையிலேயே, யெகோவா அவர்களுடைய பக்திக்கு தகுதியானவராக தம்மைத் தாமே நிரூபித்தார்.
9. யெகோவா இஸ்ரவேலர்கள் அவரைச் சேவிப்பதற்கு தங்கள் ஒப்புக்கொடுத்தலைத் தெரியப்படுத்த ஏன் சந்தர்ப்பத்தை அளித்தார், அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
9 எகிப்திலிருந்து இஸ்ரவேலரை அவர் மீட்டுக்கொண்டதன் காரணமாக, அவர்களை சொந்தமானவர்களாக கருத யெகோவாவுக்கு உரிமை இருந்தபோதிலும், அவர் தயவும் இரக்கமுமுள்ள கடவுளாக, அவரைச் சேவிப்பதற்கு தங்கள் விருப்பத்தை மனமுவந்து தெரிவிக்க அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை அளித்தார். (உபாகமம் 7:7, 8; 30:15-20) அவருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே இருந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளையும்கூட அவர் அறிவித்தார். (யாத்திராகமம் 19:3-8; 20:1–23:33) இந்த நிபந்தனைகளை மோசே எடுத்துக்கூறிய போது இஸ்ரவேலர்கள் இவ்வாறு அறிவித்தனர்: “கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்.” (யாத்திராகமம் 24:3-7) அவர்களுடைய சொந்த சுய-தெரிவின்படி, உன்னத பேரரசராகிய யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு தேசத்தினராக ஆனார்கள்.
போற்றுதல் ஒப்புக்கொடுத்தலுக்கு வழிநடத்துகிறது
10. யெகோவாவுக்கு நம்முடைய ஒப்புக்கொடுத்தல் எதன் பேரில் சார்ந்திருக்க வேண்டும்?
10 படைப்பாளராகிய யெகோவா, நம் முழு ஆத்துமாவோடுகூடிய பக்திக்கு தொடர்ந்து தகுதியுள்ளவராக இருக்கிறார். (மல்கியா 3:6; மத்தேயு 22:37; வெளிப்படுத்துதல் 4:11) ஆயினும் நம்முடைய ஒப்புக்கொடுத்தல் எதையும் எளிதில் நம்பும் குணத்தின் பேரிலோ, தற்காலிக உணர்ச்சிகளின் பேரிலோ, அல்லது பிறரிடமிருந்து, பெற்றோரிடமிருந்தும்கூட வரும் வற்புறுத்தலின் பேரிலோ சார்ந்திருக்கக்கூடாது. அது யெகோவாவைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து திருத்தமான அறிவின் பேரிலும் யெகோவா நமக்குச் செய்திருப்பவற்றின் பேரில் உள்ள போற்றுதலின் பேரிலும் சார்ந்திருக்க வேண்டும். (ரோமர் 10:2; கொலோசெயர் 1:9, 10; 1 தீமோத்தேயு 2:4) இஸ்ரவேலர்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தலை தாங்களே முன்வந்து தெரியப்படுத்த யெகோவா அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது போல, நாமும் மனமுவந்து நம்மையே ஒப்புக்கொடுத்து, அந்த ஒப்புக்கொடுத்தலை யாவரறிய பகிரங்கமாக்குவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறார்.—1 பேதுரு 3:21.
11. நாம் பைபிளைப் படித்ததானது யெகோவாவைப் பற்றி எதை வெளிக்காட்டியிருக்கிறது?
11 பைபிளைப் படிப்பதன் மூலம் நாம் கடவுளை ஒரு நபராக அறிய வந்திருக்கிறோம். படைப்பில் பிரதிபலிக்கும் அவருடைய குணங்களைத் தெளிவாக உய்த்துணர அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது. (சங்கீதம் 19:1-4) அவர் புரிந்துகொள்ளப்பட முடியாத விளங்காத ஒரு திரித்துவம் அல்ல என்பதை அவருடைய வார்த்தையிலிருந்து நாம் காணமுடிகிறது. அவர் யுத்தங்களில் தோல்வியடைவதில்லை, எனவே தம் தேவத்துவத்தை துறந்துவிட வேண்டிய தேவையில்லை. (யாத்திராகமம் 15:11; 1 கொரிந்தியர் 8:5, 6; வெளிப்படுத்துதல் 11:17, 18) அவர் தம் வாக்குகளை நிறைவேற்றியிருப்பதால் அவருடைய அழகான பெயராகிய யெகோவா எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைக் குறித்து நாம் நினைப்பூட்டப்படுகிறோம். அவர் மகத்தான நோக்கமுடையவர். (ஆதியாகமம் 2:4, NW, அடிக்குறிப்பு; சங்கீதம் 83:17; ஏசாயா 46:9-11) பைபிளைப் படிப்பதன் மூலம் நாம் அவர் எவ்வளவு உண்மையுள்ளவராயும் நம்பத்தகுந்தவராயும் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.—யாத்திராகமம் 7:9; சங்கீதம் 19:7, 9; 111:7.
12. (அ) எது யெகோவாவிடமாக நம்மைக் கவர்ந்திழுக்கிறது? (ஆ) பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மெய்-வாழ்க்கை அனுபவங்கள், யெகோவாவை சேவிக்க வேண்டும் என்று எவ்வாறு ஒரு நபரை உந்துவிக்கின்றன? (இ) யெகோவாவை சேவிப்பதைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
12 யெகோவாவிடமாக நம்மை விசேஷமாக கவர்ந்திழுப்பது அவருடைய அன்பான ஆளுமையாகும். மானிடர்களோடு அவர் செயல் தொடர்புகொள்கையில் எவ்வளவு அன்பான, மன்னிக்கக்கூடிய, மற்றும் இரக்கமுள்ள கடவுளாக இருக்கிறார் என்பதை பைபிள் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. யோபு தன் உத்தமத்தன்மையை உண்மையோடு காத்துக்கொண்டதற்குப் பிறகு அவர் எவ்வாறு யோபுவை செழித்தோங்கச் செய்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். ‘கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறார்’ என்பதை யோபுவின் அனுபவம் சிறப்பித்துக் காட்டுகிறது. (யாக்கோபு 5:11; யோபு 42:12-17) தாவீது விபச்சாரமும் கொலையும் செய்தபோது யெகோவா அவரை எவ்வாறு கையாண்டார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஆம், பாவம் செய்தவர் “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்”தோடு அவரை அணுகும்போது, யெகோவா வினைமையான பாவங்களையும்கூட மன்னிப்பதற்கு தயாராயிருக்கிறார். (சங்கீதம் 51:3-11, 17) கடவுளின் ஜனங்களைத் துன்புறுத்துவதில் முதலில் தீர்மானமாயிருந்த தர்சு பட்டணத்து சவுலை யெகோவா கையாண்ட விதத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட உதாரணங்கள் கடவுளின் இரக்கத்தையும் மனந்திரும்பிய நபர்களை உபயோகிப்பதற்கு தாராளமாக தாமே விருப்பம் தெரிவிப்பதையும் சிறப்பித்துக் காண்பிக்கின்றன. (1 கொரிந்தியர் 15:9; 1 தீமோத்தேயு 1:15, 16) இந்த அன்பான கடவுளை சேவிப்பதற்குத் தன் சொந்த ஜீவனையே ஒப்படைக்கக்கூடும் என்பதாக பவுல் உணர்ந்தார். (ரோமர் 14:8) நீங்கள் அவ்விதமாகவே உணருகிறீர்களா?
13. யெகோவாவின் பங்கில் என்ன மிகப் பெரிய அன்பின் வெளிக்காட்டு, சரியான இருதயமுள்ள நபர்கள் தங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது?
13 யெகோவா இஸ்ரவேலருக்கு எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சிப்பை ஏற்பாடு செய்தார், பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை இரட்சிப்பதற்கு அவர் ஒரு வழியை ஆயத்தம் செய்திருக்கிறார்—இயேசு கிறிஸ்துவின் மீட்பின் கிரயபலி. (யோவான் 3:16) பவுல் சொல்கிறார்: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8) இந்த அன்பான ஏற்பாடு, சரியான இருதயமுள்ள நபர்கள் தங்களை யெகோவாவுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் ஒப்புக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்.”—2 கொரிந்தியர் 5:14, 15; ரோமர் 8:35-39.
14. யெகோவாவின் செயல் தொடர்புகளைப் பற்றிய அறிவு மட்டுமே நம்முடைய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்க நம்மை உந்துவிப்பதற்குப் போதுமானதாக இருக்குமா? விளக்குங்கள்.
14 அப்படியிருப்பினும், யெகோவாவின் ஆளுமையையும், மனிதவர்க்கத்தோடு அவர் கொண்டுள்ள செயல் தொடர்புகளையும் பற்றி அறிவைக் கொண்டிருப்பது மட்டும் போதுமானதல்ல. யெகோவாவுக்காக தனிப்பட்ட போற்றுதல் வளர்க்கப்பட வேண்டும். அது எவ்வாறு செய்யப்படலாம்? கடவுளுடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசிப்பதன் மூலமும், அதில் காணப்படும் நியமங்கள் உண்மையில் பலனளிப்பவை என்பதை நேரடியான அனுபவத்தின் வாயிலாக உணருவதன் மூலமும் செய்யப்படலாம். (ஏசாயா 48:17) சாத்தானின் ஆட்சியின் கீழிருக்கும் இந்தப் பொல்லாத உலகின் இக்கட்டுக்களிலிருந்து யெகோவா நம்மை பாதுகாத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். (1 கொரிந்தியர் 6:11-ஐ ஒப்பிடுக.) சரியானதைச் செய்வதற்கு நமக்கிருக்கும் போராட்டத்தில், யெகோவாவின் பேரில் சார்ந்திருக்க நாம் கற்றுக்கொள்கிறோம், யெகோவா உயிருள்ள கடவுள், ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதையும் நாம் தாமே அனுபவிக்கிறோம். (சங்கீதம் 62:8; 65:2) அவரிடமாக நாம் நெருங்கி வந்திருக்கிறோம் என்பதை விரைவில் உணருகிறோம், நம்முடைய உள்ளார்ந்த உணர்ச்சிகளை அவரிடம் நம்பிக்கையோடு தெரிவிக்க நம்மால் முடிகிறது. யெகோவாவின் பேரில் அன்பு என்ற அனலான உணர்ச்சி நம்மில் வளருகிறது. இது சந்தேகமின்றி அவருக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நம்மை வழிநடத்தும்.
15. முன்பு உலகப்பிரகாரமான வேலைக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருந்த ஒரு மனிதனை எது யெகோவாவை சேவிக்கத் தூண்டியது?
15 இந்த அன்பான கடவுளாகிய யெகோவாவை அநேகர் அறிய வந்திருக்கின்றனர், அவரைச் சேவிப்பதற்கென்று தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கின்றனர். மின் தொழிலாளி ஒருவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்குச் செழித்தோங்கும் வியாபாரம் ஒன்று இருந்தது. அவர் அதிகாலையிலேயே வேலை ஆரம்பித்து அந்த நாள் முழுவதும் இரவு முழுவதும் வேலை செய்து, அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் சமயங்கள் இருந்திருக்கின்றன. ஒருமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்ட பிறகு, அவர் அடுத்த வேலைக்குச் செல்வார். “நான் என் வேலைக்கு என்னை ஒப்புக்கொடுத்திருந்தேன்,” என்று அவர் நினைவுபடுத்திக் கூறுகிறார். அவருடைய மனைவி பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, அவர் அவளோடு சேர்ந்துகொண்டார். அவர் சொல்கிறார்: “அந்தச் சமயம் வரை நான் அறிந்திருந்த கடவுட்கள் அனைவரும் வெறுமனே அவர்களைச் சேவிக்க வேண்டும் என்று காத்திருந்தார்கள், நமக்கு நன்மையளிக்க எதையும் செய்யவில்லை. ஆனால் யெகோவா தாமே முதற்படியெடுத்து தம்முடைய ஒரேபேறான குமாரனை பூமிக்கு அனுப்பி பெரும் தனிப்பட்ட தியாகத்தைச் செய்தார்.” (1 யோவான் 4:10, 19) பத்து மாதங்களுக்குள், இந்த மனிதன் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அதற்குப் பிறகு, அவர் உயிருள்ள கடவுளைச் சேவிப்பதன் பேரில் முழு கவனத்தையும் செலுத்தினார். அவர் முழுநேர ஊழியத்தை எடுத்துக்கொண்டு, தேவை அதிகமாயிருக்கும் இடத்தில் சேவை செய்வதற்கென்று சென்றார். அவர் அப்போஸ்தலரைப் போல, ‘எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின்பற்றினார்.’ (மத்தேயு 19:27) இரண்டு மாதங்களுக்குப் பின்பு, மின் வேலை செய்வதற்கு உதவியாயிருக்க அவரும் அவருடைய மனைவியும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த தேசத்தின் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் கிளைக்காரியாலயத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டனர். அவர் 20 வருடங்களுக்கும் மேலாக கிளைக்காரியாலயத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார், அவர் நேசிக்கிற வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்—தனக்காக அல்ல ஆனால் யெகோவாவுக்காக.
உங்களுடைய ஒப்புக்கொடுத்தலை அனைவரும் அறிந்துகொள்ளும்படி செய்யுங்கள்
16. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு ஒருவர் எடுக்கவேண்டிய சில படிகள் யாவை?
16 சிறிது காலம் பைபிளைப் படித்த பின்பு, இளைஞரும் வயோதிபரும் யெகோவாவையும், அவர் தங்களுக்காக செய்திருப்பவற்றையும் குறித்து போற்றுதல் தெரிவிக்க ஆரம்பிப்பர். இது கடவுளுக்கு அவர்கள் தங்களை ஒப்புக்கொடுக்க உந்துவிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களில் நீங்கள் ஒருவராக இருக்கலாம். நீங்கள் எவ்வாறு உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கலாம்? பைபிளிலிருந்து திருத்தமான அறிவை எடுத்துக்கொண்ட பிறகு, அந்த அறிவின் பேரில் நீங்கள் செயல்பட வேண்டும், யெகோவாவிலும் இயேசு கிறிஸ்துவிலும் விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டும். (யோவான் 17:3) கடந்தகால பாவமுள்ள வாழ்க்கைப் போக்கிலிருந்து விலகி மனந்திரும்புங்கள். (அப்போஸ்தலர் 3:20) அப்போது நீங்கள் ஒப்புக்கொடுத்தல் என்ற நிலைக்கு வருவீர்கள், அதை யெகோவாவிடத்தில் பயபக்தியான வார்த்தைகள் அடங்கிய ஜெபத்தில் சொல்ல வேண்டும். இந்த ஜெபம் உங்களுடைய மனதில் நிரந்தரமான பதிவை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் இது யெகோவாவோடு நீங்கள் கொண்டிருக்கும் ஒரு புதிய உறவின் ஆரம்பமாக இருக்கும்.
17. (அ) புதிதாக ஒப்புக்கொடுத்திருக்கும் நபர்களோடு மூப்பர்கள் ஏன் தயார் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை மறுபார்வை செய்கின்றனர்? (ஆ) ஒருவர் ஒப்புக்கொடுத்தல் செய்தவுடனேயே என்ன முக்கியமான படி எடுக்க வேண்டும், என்ன நோக்கத்துக்காக?
17 யெகோவாவோடு ஒரு உடன்படிக்கை உறவுக்குள் பிரவேசிப்பதற்கு வேண்டிய நிபந்தனைகளை மோசே இஸ்ரவேலருக்கு விளக்கியது போல, சமீபத்தில் ஒப்புக்கொடுத்தவர்கள் அதில் சரியாக உட்பட்டிருப்பவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் இருக்கும் மூப்பர்கள் உதவி செய்கின்றனர். ஒவ்வொருவரும் பைபிளின் அடிப்படை சத்தியங்களை முழுமையாக புரிந்துகொண்டிருக்கின்றனரா என்பதையும் யெகோவாவுக்குச் சாட்சியாய் இருப்பதில் உட்பட்டிருப்பவற்றைக் குறித்து அறிந்திருக்கின்றனரா என்பதையும் உறுதி செய்துகொள்வதற்கு அவர்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை உபயோகிக்கின்றனர். பின்பு, ஒப்புக்கொடுத்தலைப் பகிரங்கமாக ஆக்குவதற்கு ஒரு முறைப்படியான நிகழ்ச்சி அதிகப் பொருத்தமானதாயிருக்கிறது. இயற்கையாகவே, புதிதாக ஒப்புக்கொடுத்த ஒரு நபர் தான் யெகோவாவோடு இந்தச் சிலாக்கியமான உறவுக்குள் வந்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் அறிய வேண்டும் என்று ஆவலாயிருக்கிறார். (எரேமியா 9:24-ஐ ஒப்பிடுக.) ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்வதன் மூலம் இது சரியாகவே செய்யப்படுகிறது. தண்ணீருக்குள் மூழ்குவது அதற்குப் பிறகு மேலே எழும்பி வருவது, அவர் தன் பழைய சுயநலம்-தேடும் வாழ்க்கையைத் துறந்து விட்டு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கென்று ஒரு புதிய வாழ்க்கை முறைக்குள் எழும்புவதை அடையாளப்படுத்துகிறது. அது ஒரு புனிதச்சடங்கு அல்ல, மிசோகி என்ற ஷின்ட்டோ வழிபாட்டைப் போன்ற சமயச்சடங்கும் அல்ல, அதில் ஒரு நபர் தண்ணீரால் கழுவப்படுவதாக சொல்லப்படுகிறது.a மாறாக, அது ஏற்கெனவே ஜெபத்தில் செய்யப்பட்டிருந்த ஒப்புக்கொடுத்தலின் வெளிப்படையான அறிவிப்பாய் இருக்கிறது.
18. நம்முடைய ஒப்புக்கொடுத்தல் வீணாய்ப் போகாது என்று நாம் ஏன் நம்பிக்கையாய் இருக்கலாம்?
18 இந்தப் பயபக்தியான சமயம் மறக்க முடியாத ஒரு அனுபவம், கடவுளுடைய புதிய ஊழியர் யெகோவாவோடு இப்போது கொண்டிருக்கும் நிரந்தரமான உறவை அது நினைப்பூட்டுகிறது. கமிக்கேஸி விமானி தன் தேசத்துக்கும் பேரரசருக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தது போல் அல்லாமல், யெகோவாவுக்கு செய்யப்படும் இந்த ஒப்புக்கொடுத்தல் வீணாய்ப் போகாது, ஏனென்றால் அவர் நித்தியமான சர்வவல்லமையுள்ள கடவுளாக தாம் செய்யவேண்டும் என்று எண்ணும் அனைத்தையும் நிறைவேற்றுபவராக இருக்கிறார். அவரே, அவர் மட்டுமே, நம்முடைய முழு-ஆத்துமாவோடுகூடிய பக்திக்குப் பாத்திரராயிருக்கிறார்.—ஏசாயா 55:9-11.
19. அடுத்த கட்டுரையில் என்ன கலந்தாராயப்படும்?
19 என்றபோதிலும், ஒப்புக்கொடுத்தலில் அதிகம் உட்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒப்புக்கொடுத்தல் எவ்வாறு நம்முடைய அன்றாடக வாழ்க்கையைப் பாதிக்கிறது? இது அடுத்த கட்டுரையில் கலந்தாராயப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பக்கங்கள் 194-5-ஐப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ உலகத்தில் நடைபெறும் ஒப்புக்கொடுத்தல் ஏன் ஏமாற்றத்தில் விளைவடைகிறது?
◻ இஸ்ரவேலர்கள் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க எது அவர்களை உந்துவித்தது?
◻ இன்று யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க எது நம்மை உந்துவிக்கிறது?
◻ நாம் எவ்வாறு நம்மை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்?
◻ தண்ணீர் முழுக்காட்டுதலின் முக்கியத்துவம் என்ன?
[பக்கம் 10-ன் படம்]
சீனாயிலே இஸ்ரவேல் தன்னையே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறது