யெகோவாவின் பயங்கரமான நாள் அண்மையில் இருக்கிறது
“கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”—மல்கியா 3:16.
1, 2. என்ன பயங்கரமான நாளை மல்கியா முன்னெச்சரிக்கிறார்?
பயங்கரம்! ஆகஸ்ட் 6, 1945 அன்று விடியற்காலையில், ஒரு பெரிய நகரம் நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டது. சுமார் 80,000 பேர் மாண்டனர்! ஆயிரக்கணக்கானோர் குற்றுயிராய் கிடந்தனர்! சீறி எழுந்தது தீ! அந்த அணுகுண்டு தன் வேலையை செய்துவிட்டிருந்தது. அந்தக் கோர சம்பவத்தின் போது யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நேரிட்டது? ஹிரோஷிமாவில் ஒரே ஒரு சாட்சி மட்டுமே இருந்தார்—அவரும் தன் கிறிஸ்தவ உத்தமத்தன்மையினிமித்தம் பாதுகாப்பான சிறைச்சாலையின் சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலை இடிந்து தரைமட்டமாகியது, ஆனால் நம் சகோதரருக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அவரே விவரித்தபடி, அவர் அணுகுண்டு தாக்குதலால் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்—ஒருவேளை அந்த அணுகுண்டு சாதித்த ஒரே நல்ல காரியம் அதுதான்.
2 அந்தக் குண்டுவெடிப்பு பயங்கரமானதாய் இருந்தபோதிலும், அண்மையில் உள்ள ‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளுடன்’ ஒப்பிடுகையில் அது அற்பமானதாக ஆகிவிடுகிறது. (மல்கியா 4:5) ஆம், உண்மைதான், பண்டைய சரித்திரத்தில் பயங்கரமான நாட்கள் இருந்திருக்கின்றன. ஆனால் யெகோவாவின் இந்த நாள் அவற்றை எல்லாம் விஞ்சிவிடும்.—மாற்கு 13:19.
3. ஜலப்பிரளயம் வரும் வரைக்கும் ‘மாம்சமான யாவருக்கும்’ நோவாவின் குடும்பத்திற்கும் இடையே என்ன வித்தியாசம் கவனிக்கப்படலாம்?
3 நோவாவின் நாளில், “மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்,” இதனால் கடவுள் அறிவித்தார்: “அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.” (ஆதியாகமம் 6:12, 13) மத்தேயு 24:39-ல் பதிவுசெய்யப்பட்டபடி, “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் [மக்கள்] உணராதிருந்தார்கள்” என்று இயேசு சொன்னார். ஆனால் “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” உண்மையுள்ள நோவா தன்னுடைய தேவபயமுள்ள குடும்பத்தாரோடு அந்த ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தார்.—2 பேதுரு 2:5.
4. சோதோம் கொமோராவினால் என்ன எச்சரிப்பின் உதாரணம் அளிக்கப்படுகிறது?
4 யூதா 7 விவரிக்கிறது, “அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், . . . விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.” அந்த அவபக்தியான ஆட்கள் அவர்களுடைய அருவருக்கத்தக்க ஒழுக்கம்கெட்ட வாழ்க்கை முறையின் காரணத்தால் அழிந்தார்கள். இந்த நவீன உலகின் பாலுறவு-நாட்டமுடைய சமுதாயங்களுக்கு அது எச்சரிக்கையாயிருக்கட்டும்! ஆயினும், தேவபயமுள்ள லோத்தும் அவருடைய மகள்களும் பேரழிவின்போது உயிரோடு காப்பாற்றப்பட்டார்கள் என்பதைக் கவனியுங்கள். இதைப்போலவே விரைவாக வந்து கொண்டிருக்கும் மகா உபத்திரவத்தின்போது யெகோவாவின் வணக்கத்தார் பாதுகாக்கப்படுவர்.—2 பேதுரு 2:6-9.
5. எருசலேம்மீது தீர்க்கப்பட்ட நியாயத்தீர்ப்புகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5 அப்படியே, ஒரு காலத்தில் ‘பூமியின் மகிழ்ச்சியாயிருந்த’ மகிமைபொருந்திய எருசலேம் நகரத்தை, படையெடுத்து வந்த சேனைகளைக் கொண்டு யெகோவா முற்றிலுமாக அழித்ததன்மூலம் கொடுத்த எச்சரிக்கையின் மாதிரிகளையும் கவனியுங்கள். (சங்கீதம் 48:2) இத்தகைய கோர சம்பவங்கள் முதலில் பொ.ச.மு. 607-லும் மீண்டும் பொ.ச. 70-லும் நடந்தேறின. ஏனென்றால் கடவுளுடைய ஜனங்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் மெய் வணக்கத்தைக் கைவிட்டார்கள். சந்தோஷகரமாக, யெகோவாவின் உத்தம ஊழியர்கள் தப்பித்தார்கள். பொ.ச. 70-ன் அந்த அழிவு (பின்பக்க படத்தில் காட்டப்பட்டுள்ளது) இவ்வாறாக விவரிக்கப்படுகிறது: ‘தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராத உபத்திரவம் அந்நாட்களில் உண்டாகும்.’ அது விசுவாசதுரோக யூத காரிய ஒழுங்குமுறையை முற்றும் முடிய தகர்த்தெறிந்தது. அந்த விதத்தில், நிச்சயமாகவே அது, ‘இனிமேலும் சம்பவியாதது.’ (மாற்கு 13:19) ஆனால் இந்தத் தெய்வீக நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றமும்கூட, இப்பொழுது இந்த உலக காரிய ஒழுங்குமுறை முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘மகா உபத்திரவத்தின்’ வெறும் ஒரு நிழலே.—வெளிப்படுத்துதல் 7:14, NW.
6. பேரழிவுகளை யெகோவா ஏன் அனுமதிக்கிறார்?
6 எத்தனையோ உயிர் இழப்புக்குள்ளாகும் பயங்கரமான பேரழிவுகளைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்? நோவா காலத்தின், சோதோம் கொமோராவின், எருசலேமின் சம்பவங்களில், தங்களுடைய வழியைப் பூமியிலே கெடுத்துக் கொண்டவர்கள்மீதும் சொல்லர்த்தமான தூய்மைக்கேட்டாலும் ஒழுக்க சீரழிவாலும் இந்த அழகிய பூமியைக் கறைப்படுத்தியவர்கள்மீதும் மெய் வணக்கத்திலிருந்து விசுவாசதுரோகிகளானவர்கள் அல்லது மெய் வணக்கத்தைப் புறக்கணித்தவர்கள்மீதும் யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். முழு உலகத்திற்கும் பரவவிருக்கும் அனைத்தையும் உட்படுத்தும் நியாயத்தீர்ப்பின் விளிம்பில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம்.—2 தெசலோனிக்கேயர் 1:6-10.
“கடைசிநாட்களில்”
7. (அ) பண்டை காலத்திய தெய்வீக நியாயத்தீர்ப்புகளெல்லாம் எதற்கு ஒரு தீர்க்கதரிசன மாதிரியை அளிக்கின்றன? (ஆ) என்ன மகிமையான எதிர்பார்ப்பு நமக்கு முன்பிருக்கிறது?
7 பண்டை காலத்திய அந்த அழிவுகளெல்லாம் 2 பேதுரு 3:3-13-ல் விவரிக்கப்பட்டுள்ள பயங்கரமான மகா உபத்திரவத்துக்குத் தீர்க்கதரிசன மாதிரிகளாகும். அப்போஸ்தலன் சொல்கிறார்: ‘முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடப்பார்கள்.’ பின்னர் நோவாவின் நாளுக்கு கவனம்செலுத்துபவராக பேதுரு எழுதுகிறார்: ‘அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.’ அனைத்து உபத்திரவத்திலும் மிகப் பெரிய உபத்திரவத்திற்குப்பின், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த மேசியானிய ராஜ்ய ஆட்சி, “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்” என்னும் புதிய பரிமாணங்களை எடுத்துக்கொள்ளும். என்னே ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு!
8. உலக சம்பவங்கள் எவ்வாறு உச்சக்கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கின்றன?
8 நம்முடைய 20-ம் நூற்றாண்டில், உச்சக்கட்டத்தை நோக்கி உலக சம்பவங்கள் படிப்படியாக முன்னேறி இருக்கின்றன. ஹிரோஷிமாவின் பேரழிவு ஒரு தெய்வீக சோதனையிடுதலாக இல்லாத போதிலும், முடிவின் காலத்தைப் பற்றி தீர்க்கதரிசனமாக இயேசு உரைத்த ‘பயங்கரமான தோற்றங்களுள்’ ஒருவேளை அதை சேர்க்கலாம். (லூக்கா 21:11) அது ஆரம்பித்த அணு ஆயுத பயம், இன்னும்கூட மனித சமுதாயத்தின் மேல் புயல்மேகம் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக தி நியூ யார்க் டைம்ஸ் நவம்பர் 29, 1993-ன் தலைப்புச் செய்தி வாசிப்பதாவது: “துப்பாக்கிகள் ஒரு வேளை சிறிது துருப்பிடித்திருக்கலாம், ஆனால் அணு ஆயுதங்கள் இப்பொழுதும் மெருகேற்றப்படுகின்றன.” இதற்கிடையே தேசங்களுக்கு இடையேயும் இனத்திற்கு இடையேயும் பழங்குடியினர் இடையேயும் நடைபெறும் போர்கள் தொடர்ந்து பயங்கரமான விளைவுகளில் முடிவடைந்து கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படுவோரில் பெரும் பகுதியினர் இராணுவ வீரர்களே. இன்றோ, யுத்தத்தால் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதத்தினர் இராணுவத்தைச் சாராதவர்கள் என்றும் மேலும் தங்கள் தாயகத்திலிருந்து அகதிகளாக ஓடும் இலட்சக்கணக்கானோரும் தான் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
9. மதத் தலைவர்கள் உலக சிநேகத்தை எவ்வாறு வெளிக்காட்டியுள்ளனர்?
9 மதத் தலைவர்கள் ‘உலக சிநேகத்தை’ போர்களிலும் இரத்தம் தோய்ந்த புரட்சிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதன் மூலம் அநேகமுறை காட்டியிருக்கிறார்கள், தொடர்ந்தும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். (யாக்கோபு 4:4) சிலர் வர்த்தக உலகின் பேராசைபிடித்த பெரிய புள்ளிகளோடு இணைந்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் பெரும் அளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்கிறார்கள் மற்றும் போதை வஸ்துக்களின் சாம்ராஜ்யங்களையும் கட்டுகிறார்கள். உதாரணமாக தென் அமெரிக்க போதைப் பொருள் பெரும் புள்ளி ஒருவரின் படுகொலையைப் பற்றிய அறிக்கையில், தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டதாவது: “கொடையாளர் மற்றும் சட்டரீதியான தொழில் செல்வம் என்னும் தகுதியின் போர்வையில் தன் போதைப் பொருள் விற்பனையை மறைத்தார். அவர் தன்னுடைய சொந்த ரேடியோ விளம்பர நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்தார் மற்றும் ஒலிபரப்பில் அடிக்கடி ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களும் சேர்ந்து கொண்டார்கள்.” போதைப் பொருளுக்கு அடிமைகளாக மாறிய லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையைப் பாழாக்கியதோடு, இந்தப் போதைப் பொருள் பெரும் புள்ளி ஆயிரக்கணக்கானோரை நேரடியாகக் கொலை செய்யவும் ஏவினார் என்பதாக தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவித்தது. தி டைம்ஸ் ஆஃப் லண்டன் குறிப்பிடுகிறது: “இந்தக் கொலையாளிகள் நன்றி செலுத்துவதற்காக விசேஷ பிரார்த்தனைச் செய்ய அடிக்கடி பணம் கொடுக்கிறார்கள் . . . அதே சமயத்தில் பலியானவருடைய சவ அடக்க பிரார்த்தனை வேறிடத்தில் நடந்து கொண்டிருக்கும்.” கொடுமையிலும் கொடுமை!
10. மோசமாகிக் கொண்டிருக்கும் உலக நிலைமைகளை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
10 இன்னும் என்ன என்ன பேரழிவை பேய்களால் ஏவப்பட்ட மனிதர்கள் இந்தப் பூமியின் மீது கொண்டு வருவார்கள் என்று யாருக்குத் தெரியும்? 1 யோவான் 5:19 குறிப்பிடுவதைப் போல், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள்,’ பிசாசாகிய சாத்தானுக்குள் ‘கிடக்கிறது.’ இன்று “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல்12:12) மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் ரோமர் 10:13 “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்,” என்று நமக்கு உறுதியளிக்கிறது.
கடவுள் நியாயத்தீர்ப்புச் செய்ய சீக்கிரத்தில் வருகிறார்
11. இஸ்ரவேலில் இருந்த என்ன நிலைமைகள் மல்கியாவின் தீர்க்கதரிசனத்தை உரைக்க வைத்தன?
11 மனிதவர்க்கத்தின் அண்மை எதிர்காலத்தில் என்ன நிகழவிருக்கிறது என்பதைக் குறித்து மல்கியாவின் தீர்க்கதரிசனம் தெளிவாக்குகிறது. பூர்வ எபிரெய தீர்க்கதரிசிகளின் நீண்ட வரிசையில் மல்கியா கடைசியாக பட்டியலிடப்பட்டிருக்கிறார். பொ.ச.மு. 607-ல் எருசலேம் பாழாக்கப்பட்டதை இஸ்ரவேல் அனுபவித்தது. ஆனால் 70 வருடங்களுக்குப் பின்னர் அத்தேசத்தவரை தங்கள் சொந்த தேசத்தில் மறுபடியும் ஸ்தாபித்து, கிருபைபொருந்திய அன்புள்ள தயவை யெகோவா காண்பித்தார். ஆயினும், நூறு ஆண்டுகளுக்குள்ளாக, இஸ்ரவேல் மறுபடியும் அக்கிரமம், விசுவாசதுரோகம் இவற்றினிடமாக வழுவிக்கொண்டிருந்தது. ஜனங்கள் யெகோவாவின் பெயரை அவமதித்து, அவருடைய நீதியான சட்டங்களை அசட்டைசெய்து, குருடும் ஊனமும் நோயுற்றதுமான மிருகங்களை பலியிட கொண்டுவருவதன் மூலம் அவருடைய ஆலயத்தை அசுத்தப்படுத்திக் கொண்டும் இருந்தனர். பிற தேசத்து பெண்களை விவாகம் செய்துகொள்வதற்காக அவர்கள் தங்கள் இளம் வயதில் மணந்த மனைவிகளை விவாகரத்து செய்துகொண்டும்கூட இருந்தனர்.—மல்கியா 1:6-8; 2:13-16.
12, 13. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரிய தொகுதியினருக்கு எத்தகைய சுத்திகரிப்பு தேவைப்பட்டிருக்கிறது? (ஆ) எவ்வாறு திரள் கூட்டத்தினரும்கூட சுத்திகரிப்பின் மூலம் பயனடைகின்றனர்?
12 ஒரு சுத்திகரிக்கும் வேலை தேவைப்பட்டது. இது மல்கியா 3:1-4-ல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பண்டைய இஸ்ரவேலர்களைப்போல் யெகோவாவின் நவீன-நாளைய சாட்சிகளுக்குச் சுத்திகரிப்பு தேவையாக இருந்தது, ஆகவே மல்கியா விவரித்த சுத்திகரிப்பு செய்யும் வேலையை இவர்களுக்குப் பொருத்தலாம். முதல் உலகப் போர் முடிந்து கொண்டிருந்த தறுவாயில், அப்பொழுது பைபிள் மாணாக்கர்கள் என்று அறியப்பட்டிருந்த சாட்சிகளில் சிலர், உலக காரியங்களில் நடுநிலை வகித்தலை உறுதியோடு கடைப்பிடிக்கவில்லை. 1918-ல் தம் வணக்கத்தாரின் சிறு தொகுதியை உலக கறைகளிலிருந்து சுத்திகரிப்புச் செய்வதற்காக, யெகோவா தம்முடைய ‘உடன்படிக்கையின் தூதன்,’ கிறிஸ்து இயேசுவை அவருடைய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டினிடமாக அனுப்பினார். தீர்க்கதரிசனமாக யெகோவா கேட்டார்: “அவர் வரும் [அந்தத் தூதனுடைய] நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் [அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரிய தொகுதி] சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும் படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” சுத்திகரிக்கப்பட்ட ஜனமாக அவர்கள் அதையே செய்தார்கள்!
13 அந்த அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரிய தொகுதியின் எண்ணிக்கை 1,44,000 மட்டுமே. (வெளிப்படுத்துதல் 7:4-8; 14:1, 3) ஆயினும், இன்றுள்ள மற்ற ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? இப்பொழுது இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவர்கள் ‘திரள் கூட்டத்தை’ உருவாக்குகிறார்கள். இவர்களும்கூட, ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்து,’ உலகப்பிரகாரமான வழிகளிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டும். (வெளிப்படுத்துதல் 7:9, 14) இவ்வாறக, ஆட்டிக்குட்டியானவராகிய கிறிஸ்து இயேசுவின் கிரயபலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் அவர்களால் யெகோவாவிற்கு முன் சுத்தமான நிலைநிற்கையைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. மகா உபத்திரவம் முழுவதையும், யெகோவாவின் பயங்கரமான நாளை அவர்கள் தப்பிப்பிழைக்க வாக்களிக்கப்பட்டுள்ளனர்.—செப்பனியா 2:2, 3.
14. புதிய ஆளுமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்போது இன்றுள்ள கடவுளின் ஜனங்கள் என்ன வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்?
14 ஆசாரிய வகுப்பின் மீதியானோருடன் கூடசேர்ந்து, இந்தத் திரள் கூட்டத்தினர் கடவுளுடைய கூடுதலான வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும்: “நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் . . . நான் கர்த்தர், நான் மாறாதவர்.” (மல்கியா 3:5, 6) இல்லை, யெகோவாவின் தராதரங்கள் மாறுவதில்லை. ஆகவே யெகோவாவுக்கு பயப்படுகிற பயத்தினால், இன்று அவருடைய ஜனங்கள் எல்லா விதமான விக்கிரக வணக்கத்தையும் விட்டுவிட வேண்டும். கிறிஸ்தவ ஆளுமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்போது உண்மையோடும் நேர்மையோடும் பெருந்தன்மையோடும் இருத்தல் வேண்டும்.—கொலோசெயர் 3:9-14.
15. (அ) யெகோவா என்ன தயவான அழைப்பை விடுக்கிறார்? (ஆ) நாம் எவ்வாறு யெகோவாவை ‘வஞ்சிப்பதை’ தவிர்க்கலாம்?
15 யெகோவாவினுடைய நீதியான வழிகளை ஒருவேளை விட்டுவிலகியவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து கூறுகிறார்: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்.” “நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும்” என்று அவர்கள் ஒருவேளை கேட்டால், அவர் பதிலளிக்கிறார்: “நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்.” மேற்கொண்டு கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது: “எதிலே உம்மை வஞ்சித்தோம்”? தம் ஆலய சேவைக்குக் காணிக்கையாக மிகச் சிறந்ததைக் கொண்டுவரத் தவறியதன் மூலம் தம்மை வஞ்சித்ததாக யெகோவா குறிப்பிடுகிறார். (மல்கியா 3:7, 8) யெகோவாவின் ஜனத்தின் ஒரு பாகமாக சேர்ந்த பின்னர், நம்முடைய ஆற்றல்கள், திறமைகள், பொருட்செல்வங்கள் இவற்றில் மிகச் சிறந்த பகுதியை யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணிக்க உண்மையிலேயே நாம் விரும்பவேண்டும். இவ்வாறாகக் கடவுளை வஞ்சிப்பதற்கு மாறாக, நாம் ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவோம்.’—மத்தேயு 6:33.
16. என்ன உற்சாகமூட்டுதலை மல்கியா 3:10-12-ல் நாம் காண்கிறோம்?
16 “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்,” என்று மல்கியா 3:10-12-ல் குறிப்பிடுவதைப் போல இவ்வுலகத்தின் தன்னூழியத்தையும் பொருளாசைமிக்க வழிகளையும் நிராகரித்த அனைவருக்கும் பெரும் வெகுமதி இருக்கிறது. ஆவிக்குரிய வளத்தையும் செழுமையையும் மதித்துணருபவர்கள் அனைவருக்கும் யெகோவா வாக்களிக்கிறார். அவர் மேலும் கூறுகிறார்: “எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும்.” இன்று பூமி முழுவதிலும் இலட்சக்கணக்கான கடவுளின் நன்றியுள்ள ஜனங்கள் மத்தியில் இது நிரூபிக்கப்படவில்லையா?
ஜீவபுஸ்தகத்திலுள்ள உத்தமத்தைக் காத்துக்கொண்டோர்
17-19. (அ) ருவாண்டாவின் கலவரம் எவ்வாறு அங்குள்ள நம் சகோதரர்களைப் பாதித்துள்ளது? (ஆ) என்ன நம்பிக்கையுடன் இந்த உண்மையுள்ள அனைவரும் தொடர்ந்து முன்னேறியிருக்கின்றனர்?
17 இச்சமயத்தில், ருவாண்டாவைச் சேர்ந்த நம் சகோதர சகோதரிகளின் உத்தமத்தை நாம் போற்றக்கூடும். வழிபாட்டிற்கான யெகோவாவின் ஆவிக்குரிய வீட்டிற்கு, அவர்கள் எப்பொழுதும் சிறந்த ஆவிக்குரிய காணிக்கைகளையே கொண்டு வந்துள்ளனர். உதாரணமாக டிசம்பர் 1993-ன் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டில், அவர்களுடைய 2,080 ராஜ்ய பிரஸ்தாபிகள், வருகைதந்தோரின் மொத்த எண்ணிக்கையான 4,075-ஐக் கொண்டிருந்தனர். அதில் 230 புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்டார்கள். அடுத்து வந்த மாதத்தில், அவர்களில் கிட்டத்தட்ட 150 பேர் துணைப் பயனியர் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
18 ஏப்ரல் 1994-ல் இனவெறி வெடித்தெழுந்தபோது, அதின் தலைநகராகிய கிகலியில் இருந்த நகரக் கண்காணியும் அவரின் முழுக்குடும்பமும் உட்பட, குறைந்தபட்சம் 180 சாட்சிகள் கொல்லப்பட்டார்கள். கிகலியிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் அலுவலகத்திலிருந்த ஆறு மொழிபெயர்ப்பாளர்களில் நான்கு பேர் ஹூட்டூக்கள், இருவர் டூட்ஸிகள். டூட்ஸிகள் தப்பிக்க ஓட வேண்டியதாகிய போதிலும் சோதனைச்சாவடியருகே கொல்லப்பட்டார்கள். அதுவரை பயங்கரமான அச்சுறுத்தலின் கீழும் பல வாரங்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். இறுதியாக எஞ்சியிருந்த தங்களுடைய கம்ப்யூட்டர்களை எடுத்துக்கொண்டு ஜயரிலுள்ள கோமாவிற்குத் தப்பியோடினார்கள். அங்கு அவர்கள் உத்தமத்தோடு காவற்கோபுரத்தை கின்யார்வன்டா மொழியில் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் செய்தார்கள்.—ஏசாயா 54:17.
19 இந்த அகதி சாட்சிகள், தங்களுடைய கொடிய சூழ்நிலைமைகள் மத்தியிலும், எப்பொழுதுமே பொருள்சம்பந்தமான தேவைகளுக்கு முன்னால் ஆவிக்குரிய உணவையே கேட்டார்கள். பல்வேறு இடங்களிலிருந்து, அன்பான சகோதரர்களின் பெரும் தியாகத்தினால், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முடிந்தது. இந்த அகதிகள் இக்கட்டான நிலையின் கீழும் வார்த்தையின் மூலமும் ஒழுங்கமைப்பின் மூலமும் அற்புதமான சாட்சி கொடுத்திருக்கிறார்கள். நிச்சயமாகவே யெகோவாவின் வணக்கத்திற்குத் தங்களிடத்திலிருந்து மிகச் சிறந்ததைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். “நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்,” என்று ரோமர் 14:8-ல் தெரிவிக்கிற பவுலின் நம்பிக்கையைப்போல் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.
20, 21. (அ) யாருடைய பெயர்கள் யெகோவாவின் ஞாபகப் புஸ்தகத்தில் எழுதப்பட மாட்டா? (ஆ) யாருடைய பெயர்கள் புஸ்தகத்தில் காணப்படுகின்றன, ஏன்?
20 தம்மை உத்தமத்தோடு சேவிப்பவர்கள் அனைவரின் பதிவையும் யெகோவா வைக்கிறார். மல்கியாவின் தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”—மல்கியா 3:16.
21 யெகோவாவின் நாமத்திற்கு கனத்தைச் செலுத்துகையில் நாம் தேவ பயத்தைக் காட்டுவது இன்று எவ்வளவு முக்கியமானது! அவ்வாறு செய்கையில் இந்த உலக ஒழுங்குமுறைகளை வியந்து ஆதரவளிப்பவர்கள் பாதகமான நியாயத்தீர்ப்பில் துன்புறுவதைப்போல் நாம் துன்புற மாட்டோம். ‘ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராதவர்கள்,’ என வெளிப்படுத்துதல் 17:8 விவரிக்கிறது. பொருத்தமாகவே ஜீவாதிபதி, கடவுளின் சொந்த குமாரர், இயேசு கிறிஸ்துவின் பெயரே யெகோவாவின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்ட ஒப்பற்ற பெயராகும். மத்தேயு 12:21 குறிப்பிடுகிறது: “அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்.” இயேசுவின் கிரயபலி அதில் விசுவாசம் வைப்பவர்கள் அனைவருக்கும் நித்திய ஜீவனை உத்தரவாதம் அளிக்கிறது. அந்தப் புஸ்தகத்தில் இயேசுவின் பெயரோடுக்கூட நம்முடைய தனிப்பட்ட பெயர்களும் சேர்க்கப்படுவது என்னே ஒரு சிலாக்கியம்!
22. யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது என்ன வித்தியாசம் வெளிப்படையாகத் தெரியும்?
22 எவ்வாறு கடவுளின் ஊழியர்கள் இந்த நியாயத்தீர்ப்பைச் சமாளிப்பர்? மல்கியா 3:17, 18-ல் யெகோவா பதிலளிக்கிறார்: “ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.” அந்தப் பிரிவினை அனைவருக்கும் தெளிவாக இருக்கும்: துன்மார்க்கர் நித்திய அழிவிற்காகப் பிரித்தெடுக்கப்படுவார்கள். நீதிமான்கள் ராஜ்ய ஆட்சியின்கீழ் நித்திய ஜீவனுக்காக அங்கீகரிக்கப்படுவார்கள். (மத்தேயு 25:31-46) இவ்விதமாக செம்மறியாட்டைப்போன்ற திரள் கூட்டமான நபர்கள் யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளில் தப்பிப் பிழைப்பார்கள்.
நீங்கள் நினைவுபடுத்துகிறீர்களா?
◻ பைபிள் காலங்களில் யெகோவா என்ன நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றினார்?
◻ நிலைமைகள் இன்று எவ்வாறு பண்டைய காலத்திலிருந்தவற்றுடன் இணையாக உள்ளன?
◻ மல்கியாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக என்ன சுத்திகரிப்பு நடைபெற்றிருக்கிறது?
◻ யாருடைய பெயர்கள் கடவுளின் ஞாபகப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன?