கிறிஸ்தவப் பெண்கள் கனமும் மரியாதையும் பெறத் தகுதியுடையவர்கள்
“அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், . . . விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.”—1 பேதுரு 3:7.
1, 2. (அ) சமாரியப் பெண்ணோடு கிணற்றருகே இயேசு கொண்டிருந்த சம்பாஷணை என்ன அக்கறையைத் தூண்டியது, ஏன்? (அடிக்குறிப்பைக் காண்க.) (ஆ) சமாரியப் பெண்ணிடம் பிரசங்கிப்பதன் மூலம் இயேசு எதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்?
பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று தாம் உணர்ந்ததை இயேசு பொ.ச. 30-ஆம் ஆண்டின் முடிவின் சமயத்தில் சீகார் பட்டணத்துக்கு அருகே இருந்த பழைய கிணற்றண்டையில் ஒரு நண்பகல் வேளையில் வெளிக்காட்டினார். குன்றுகள் நிறைந்த சமாரியா தேசத்து வழியாய் அவர் அந்நாள் காலை முழுவதும் பிரயாணம் செய்து கிணற்றருகே வந்துசேர்ந்தபோது களைப்பாகவும் பசியாகவும் தாகமாகவும் இருந்தார். அவர் கிணற்றருகே வந்து அமர்ந்தபோது, தண்ணீர் இறைப்பதற்காக ஒரு சமாரியப் பெண் அங்கு வந்தாள். “தாகத்துக்குத் தா,” என்று இயேசு அவளைக் கேட்டார். அப்பெண் இயேசுவை ஆச்சரியத்தோடு கூர்ந்து நோக்கியிருக்க வேண்டும். அவள் கேட்டாள்: “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.” பின்பு அவருடைய சீஷர்கள் உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது, இயேசு ஏன் ஒரு ‘ஸ்திரீயுடனே பேசுகிறார்’ என்று ஆச்சரியமடைந்தனர்.—யோவான் 4:4-9, 27.
2 எது இந்தப் பெண்ணின் கேள்வியையும் சீஷர்களின் அக்கறையையும் தூண்டியது? அவள் ஒரு சமாரியப் பெண்ணாக இருந்தாள், யூதர்கள் சமாரியர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொண்டில்லை. (யோவான் 8:48) ஆனால் அக்கறைகொள்வதற்கு மற்றொரு காரணமும் இருந்தது என்பதாகத் தோன்றுகிறது. பொதுமக்கள் பார்வையில் ஆண்கள் பெண்களிடம் பேசுவதை அந்தச் சமயத்தில் இருந்த ரபீக்களின் பாரம்பரியம் தடைசெய்தது.a இருந்தபோதிலும், இயேசு இந்த உண்மைமனதுள்ள பெண்ணிடம் வெளிப்படையாய் பிரசங்கித்தார், அவர் தாம் மேசியா என்பதையும்கூட அவளுக்கு வெளிப்படுத்தினார். (யோவான் 4:25, 26) பெண்களை அலட்சியப்படுத்திய வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களால் தம்மைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதை இயேசு இவ்வாறு காண்பித்தார். (மாற்கு 7:9-13) அதற்கு மாறாக, இயேசு தாம் செய்தவற்றின் மூலமும் தாம் கற்பித்தவற்றின் மூலமும் பெண்கள் கனத்தோடும் மரியாதையோடும் நடத்தப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
இயேசு எவ்வாறு பெண்களை நடத்தினார்
3, 4. (அ) இயேசு தம்முடைய வஸ்திரத்தைத் தொட்ட பெண்ணிடம் எவ்வாறு பிரதிபலித்தார்? (ஆ) கிறிஸ்தவ ஆண்களுக்கு, விசேஷமாக கண்காணிகளுக்கு, இயேசு எவ்வாறு ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார்?
3 இயேசு ஜனங்களுக்காகக் கொண்டிருந்த கனிவான இரக்கம் அவர் பெண்களைக் கையாண்டவிதத்தில் பிரதிபலித்தது. ஒரு சமயம் இரத்தப்போக்கின் காரணமாக 12 வருடங்களாக துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் ஒரு ஜனக்கூட்டத்துக்குள் இயேசுவைத் தேடினாள். அவளுடைய நிலைமை ஆசாரமுறைப்படி அவளை அசுத்தமாக்கியிருந்தது, ஆகையால் அவள் அங்கு இருந்திருக்கக்கூடாது. (லேவியராகமம் 15:25-27) ஆனால் அவள் அதிக மோசமான நிலையில் இருந்தபடியால் இயேசுவுக்குப் பின்னால் மெல்லப் புகுந்தாள். அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, அவள் உடனடியாக குணமடைந்தாள்! யவீருவின் மகள் அதிகக் கடுமையாக நோயுற்றிருந்ததால் இயேசு அவருடைய வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதிலும், உடனடியாக நின்றார். அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றதை அவர் உணர்ந்ததால் அவரைத் தொட்ட நபருக்காக அவர் எல்லா பக்கங்களிலும் சுற்றிப் பார்த்தார். இறுதியில் அந்தப் பெண் நடுக்கத்தோடு அவரிடம் வந்து அவருக்கு முன்பாக விழுந்தாள். ஜனக்கூட்டத்தில் இருந்ததற்காக அல்லது அனுமதியின்றி அவருடைய வஸ்திரத்தைத் தொட்டதற்காக இயேசு அவளைத் திட்டுவாரா? அதற்கு மாறாக, அவர் அதிக அன்புமிக்கவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்ததை அவள் கண்டாள். “மகளே” என்று சொல்லி, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். இயேசு ஒரு பெண்ணை “மகளே” என்று நேரடியாக அழைத்தது இந்தத் தடவை மட்டுமே. அவ்வார்த்தைகள் அவளுடைய இருதயத்தை எப்படி ஆறுதல்படுத்தியிருக்கும்!—மத்தேயு 9:18-22; மாற்கு 5:21-34.
4 இயேசு நியாயப்பிரமாணச் சட்டத்தின் மேலோட்டமான தோற்றத்தைவிட அதிகமானதைக் கண்டார். அதற்குப் பின்னாலிருந்த நோக்கத்தையும், இரக்கம் மற்றும் கருணையின் அவசியத்தைக் கண்டார். (மத்தேயு 23:23-ஐ ஒப்பிடுக.) இயேசு வியாதியாயிருந்த அப்பெண்ணின் நம்பிக்கையிழந்த சூழ்நிலையையும், விசுவாசத்தால் அவள் உந்துவிக்கப்பட்டிருந்தாள் என்பதையும் கவனித்தார். இவ்வாறு அவர் கிறிஸ்தவ ஆண்களுக்கு, விசேஷமாக கண்காணிகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார். ஒரு கிறிஸ்தவ சகோதரி பிரச்சினைகளை அல்லது கடினமான அல்லது கடும் சோதனையான சூழ்நிலையை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தால், உடனடியாக வரும் சொற்கள் அல்லது செயல்களுக்கு பின்னாலிருப்பவற்றை மூப்பர்கள் காண முயற்சிசெய்ய வேண்டும், மேலும் சூழ்நிலைமைகளையும் உள்நோக்கங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். புத்திமதி மற்றும் திருத்தம் கொடுப்பதற்குப் பதிலாக பொறுமை, புரிந்துகொள்ளுதல், இரக்கம் ஆகியவை தேவைப்படுகின்றன என்பதை இப்படிப்பட்ட உட்பார்வை சுட்டிக்காட்டலாம்.—நீதிமொழிகள் 10:19; 16:23; 19:11.
5. (அ) ரபீக்களின் பாரம்பரியங்களால் எந்த விதத்தில் பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்? (அடிக்குறிப்பைக் காண்க.) (ஆ) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பார்த்தவர்களிலும் சாட்சி கொடுத்தவர்களிலும் முதலாவதாக இருந்தவர்கள் யார்?
5 ரபீக்களின் பாரம்பரியங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக, இயேசு பூமியிலிருந்தபோது வாழ்ந்துகொண்டிருந்த பெண்கள் சட்டப்பூர்வமான சாட்சிகளாக சேவிப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தனர்.b பொ.ச. 33, நிசான் 16 அன்று காலை இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டதற்கு சற்று பின்னர் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். தங்களுடைய ஆண்டவர் உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார் என்று மற்ற சீஷர்களிடம் சாட்சி கொடுப்பதற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை முதலாவது யார் காண்பார்கள்? கழுமரத்தில் அறையப்பட்ட இடத்தில் அவர் இறந்துபோகும் வரை பார்க்கும் தூரத்தில் இருந்த பெண்களே அவ்விதம் காண நேரிட்டது!—மத்தேயு 27:55, 56, 61.
6, 7. (அ) கல்லறைக்கு வந்த பெண்களிடம் இயேசு என்ன சொன்னார்? (ஆ) பெண்களின் அத்தாட்சிக்கு இயேசுவின் ஆண் சீஷர்கள் முதலில் எவ்வாறு பிரதிபலித்தனர், இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப்படலாம்?
6 வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலையில், மகதலேனா மரியாளும் மற்ற பெண்களும் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்களிடும்படி கல்லறைக்குச் சென்றனர். கல்லறை காலியாய் இருந்ததைக் கண்டபோது, மரியாள் பேதுருவிடமும் யோவானிடமும் சொல்வதற்காக ஓடினார்கள். மற்ற பெண்கள் அங்கேயே தங்கிவிட்டனர். விரைவில் ஒரு தேவதூதன் தோன்றி, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார் என்று அவர்களிடம் சொன்னார். “சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்,” என்று அந்தத் தேவதூதன் கட்டளையிட்டார். இந்தப் பெண்கள் அச்செய்தியைச் சொல்வதற்கு விரைந்து செல்கையில், இயேசு தாமே அவர்களுக்குக் காட்சியளித்தார். ‘நீங்கள் போய் என் சகோதரரிடத்தில் அறிவியுங்கள்,’ என்று அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 28:1-10; மாற்கு 16:1, 2; யோவான் 20:1, 2) தேவதூதர் சந்தித்ததைக் குறித்து அறியாததாலும் துயரத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்ததாலும், மகதலேனா மரியாள் காலியாயிருந்த கல்லறைக்குத் திரும்பி வந்தார்கள். இயேசு அங்கு அவர்களுக்குத் தோன்றினார், இறுதியில் அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டபோது, அவர், “நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு,” என்றார்.—யோவான் 20:11-18; மத்தேயு 28:9, 10.
7 இயேசு முதலாவது பேதுரு, யோவான் அல்லது மற்ற ஆண் சீஷர்களில் ஒருவருக்குத் தோன்றியிருக்கக்கூடும். அதற்கு மாறாக, பெண்களை, அவருடைய உயிர்த்தெழுதலை முதலாவது கண்கூடாகக்கண்ட சாட்சிகளாக ஆக்குவதன் மூலமும், அதைக் குறித்து அவருடைய ஆண் சீஷர்களிடம் அவர்கள் சாட்சி கொடுக்கும்படி அனுப்பி வைப்பதன் மூலமும் அவர் இந்தப் பெண்கள் பேரில் தயவு காண்பிக்கத் தெரிந்துகொண்டார். அந்த ஆண்கள் முதலில் எவ்வாறு பிரதிபலித்தனர்? “இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.” (லூக்கா 24:11) அந்த சாட்சியம் பெண்களிடமிருந்து வந்தபடியால் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் கடினமாகக் கண்டிருக்கக்கூடுமா? அப்படியென்றால், இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதைக் குறித்து ஏராளமான அத்தாட்சியை நாளடைவில் அவர்கள் பெற்றுக்கொண்டனர். (லூக்கா 24:13-46; 1 கொரிந்தியர் 15:3-8) இன்று கிறிஸ்தவ ஆண்கள் தங்கள் ஆவிக்குரிய சகோதரிகளின் அபிப்பிராயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது ஞானமாக செயல்படுகின்றனர்.—ஆதியாகமம் 21:12-ஐ ஒப்பிடுக.
8. இயேசு பெண்களைக் கையாண்ட விதத்தின் மூலம் எதை வெளிக்காட்டினார்?
8 இயேசு பெண்களைக் கையாண்ட விதத்தைக் கவனிப்பது உண்மையிலேயே இருதயத்துக்கு அனலூட்டுவதாய் உள்ளது. அவர் பெண்களைக் கையாளுவதில் எப்போதும் இரக்கத்தோடும் முழுவதுமான சமநிலையோடும் இருந்தார், அவர்களை உயர்த்தவோ அல்லது சிறுமைப்படுத்தவோ இல்லை. (யோவான் 2:3-5) அவர்களுடைய கண்ணியத்தைப் பறித்தெடுத்து கடவுளுடைய வார்த்தையைப் பயனற்றதாக்கிய ரபீக்களின் பாரம்பரியங்களை அவர் ஒதுக்கித் தள்ளினார். (மத்தேயு 15:3-9-ஐ ஒப்பிடுக.) பெண்களைக் கனத்தோடும் மரியாதையோடும் நடத்துவதன் மூலம், அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று யெகோவா தேவன் உணருவதை இயேசு நேரடியாக வெளிக்காட்டினார். (யோவான் 5:19) கிறிஸ்தவ ஆண்கள் பார்த்துப் பின்பற்றுவதற்கு இயேசு ஒரு மிகச் சிறந்த உதாரணத்தையும்கூட வைத்தார்.—1 பேதுரு 2:21.
பெண்களைக் குறித்து இயேசுவின் போதனைகள்
9, 10. பெண்கள் சம்பந்தமாக ரபீக்களின் பாரம்பரியங்களை இயேசு எவ்வாறு தவறென்று வாதிட்டார், விவாகரத்தைப் பற்றி பரிசேயர்கள் ஒரு கேள்வியை எழுப்பிய பிறகு அவர் என்ன சொன்னார்?
9 இயேசு தம்முடைய செயல்களின் மூலமாக மட்டுமல்ல தம்முடைய போதனைகளின் மூலமாகவும்கூட ரபீக்களின் பாரம்பரியங்களைத் தவறென வாதிட்டு பெண்களுக்கு மதிப்பு கொடுத்தார். உதாரணமாக அவர் விவாகரத்தைப் பற்றியும் விபசாரத்தைப் பற்றியும் என்ன கற்பித்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
10 விவாகரத்தைக் குறித்து இயேசுவிடம் இக்கேள்வி கேட்கப்பட்டது: “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா?” மாற்குவின் பதிவின்படி, இயேசு சொன்னார்: “[வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி] எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள்.” (மாற்கு 10:10-12; மத்தேயு 19:3, 9) எளிமையாகக் கூறப்பட்ட அச்சொற்கள் பெண்களின் மதிப்புக்கு மரியாதை காண்பித்தன. எவ்வாறு?
11. “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்ற இயேசுவின் வார்த்தைகள் விவாகப் பந்தத்தைக் குறித்து என்ன குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
11 முதலாவது, “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” (மத்தேயுவின் சுவிசேஷப் பதிவில் காணப்படுகிறது) என்ற சொற்களின் மூலம் விவாகப் பந்தத்தை இலேசானதாக அல்லது எளிதில் முறிக்கக்கூடிய ஒன்றாக கருதக்கூடாது என்று இயேசு குறிப்பிட்டார். மனைவி ஒரு உணவு பதார்த்தத்தைக் கெடுத்து விடுவது அல்லது முன்பின் தெரியாத ஒரு ஆணிடம் பேசுவது போன்ற அற்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்வதை அப்போது நடப்பிலிருந்த ரபீக்களின் போதனை அனுமதித்தது. ஏன், ஒரு கணவன் தன் பார்வைக்கு அதிக அழகுள்ள பெண்ணைக் கண்டாலும்கூட விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. பைபிள் கல்விமான் ஒருவர் குறிப்பிடுகிறார்: “இயேசு அவ்விதம் பேசியபோது . . . விவாகத்தை அதற்குரிய ஸ்தானத்தில் திரும்பவும் வைப்பதற்கு முயற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு தம் ஆதரவைக் கொடுத்து உதவினார்.” உண்மையில் ஒரு பெண் பாதுகாப்பாக உணரும் வகையில் விவாகம் ஒரு நிரந்தரமான இணைப்பாக இருக்க வேண்டும்.—மாற்கு 10:6-9.
12. “அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்” என்ற சொற்களின் மூலம் என்ன கருத்தை இயேசு அறிமுகப்படுத்தினார்?
12 இரண்டாவது, “அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்,” என்ற சொற்றொடரின் மூலம் ரபீக்களின் நீதிமன்றங்களில் கண்டுணரப்படாத ஒரு கருத்தை இயேசு அறிமுகப்படுத்தினார்—ஒரு கணவர் வேசித்தனம் செய்வது தன் மனைவிக்கு விரோதமானது என்ற கருத்து. தி எக்ஸ்பாசிட்டர்ஸ் பைபிள் கமென்ட்டரி விளக்குகிறது: “ரபீனிய யூத மதத்தில் ஒரு பெண் தன் கணவனிடம் உண்மையுள்ளவளாக நடந்துகொள்ளாததன் காரணமாக தன் கணவனுக்கு விரோதமாய் விபசாரம் செய்யக்கூடும்; ஒரு ஆண் மற்றொரு மனிதனின் மனைவியோடு பாலுறவு கொள்வதன் மூலம் அவருக்கு விரோதமாக விபசாரம் செய்யக்கூடும். ஆனால் ஒரு ஆண் தான் எந்தக் காரியத்தைச் செய்தாலும் தன் மனைவிக்கு விரோதமாய் விபசாரம் செய்யவே முடியாது. இயேசுவோ மனைவிக்கு இருக்கும் அதே ஒழுக்கசம்பந்தமான கடமையின் கீழ் கணவனையும் வைப்பதன் மூலம் பெண்களின் ஸ்தானத்தையும் மதிப்பையும் உயர்த்தினார்.”
13. விவாகரத்தைக் குறித்ததில், கிறிஸ்தவ ஒழுங்குமுறையின்கீழ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தராதரம் இருக்கும் என்று இயேசு எவ்வாறு காண்பித்தார்?
13 மூன்றாவது, “மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு,” என்ற சொற்றொடரின் மூலம், உண்மையற்ற கணவனை விவாகரத்து செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு இருந்த உரிமையை இயேசு கண்டுணர்ந்தார். அந்த உரிமை அந்நாட்களில் அறியப்பட்டிருந்தபோதிலும் யூத சட்டத்தின் கீழ் பொதுப்படையான வழக்கமாய் இல்லாத ஒரு பழக்கமாய் இருந்தது.c “ஒரு பெண் அவளுடைய ஒப்புதலோடு அல்லது ஒப்புதலின்றி விவாகரத்து செய்யப்படலாம், ஆனால் ஒரு ஆண் அவனுடைய ஒப்புதலோடு மட்டுமே விவாகரத்து செய்யப்படலாம்,” என்று சொல்லப்பட்டது. என்றபோதிலும், இயேசுவின்படி, கிறிஸ்தவ அமைப்பின்கீழ், ஒரே தராதரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.
14. இயேசு தம்முடைய போதனைகளின் மூலம் எதை பிரதிபலித்தார்?
14 பெண்களின் நலனின் பேரில் ஆழ்ந்த அக்கறையை இயேசுவின் போதனைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. ஆகையால், இயேசுவின் பேரில் ஏன் சில பெண்கள் அப்படிப்பட்ட அன்பை காட்டி அவர்களுடைய சொந்த உடைமைகளைக்கொண்டு அவருடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டனர் என்பதை புரிந்துகொள்வது கடினமாயில்லை. (லூக்கா 8:1-3) “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது,” என்று இயேசு சொன்னார். (யோவான் 7:16) இயேசு தாம் கற்பித்தவற்றின் மூலம், பெண்களுக்காக யெகோவா கொண்டிருந்த கனிவான கவனிப்பை பிரதிபலித்தார்.
“அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்”
15. கணவர்கள் தங்கள் மனைவிகளை நடத்தவேண்டிய விதத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு என்ன எழுதினார்?
15 இயேசு பெண்களைக் கையாண்ட விதத்தை அப்போஸ்தலனாகிய பேதுரு நேரடியாக கவனித்திருந்தார். சுமார் 30 வருடங்கள் கழித்து பேதுரு மனைவிகளுக்கு அன்பான புத்திமதி கொடுத்த பின்பு இவ்வாறு எழுதினார்: “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) “அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” என்ற சொற்களின் மூலம் பேதுரு எதை அர்த்தப்படுத்தினார்?
16. (அ) “கனம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க பெயர்ச்சொல்லின் அர்த்தம் என்ன? (ஆ) இயேசு மறுரூபமாக்கப்பட்டபோது யெகோவா எவ்வாறு அவரைக் கனப்படுத்தினார், இதிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?
16 ஒரு சொற்களஞ்சிய ஆசிரியரின்படி, “கனம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க பெயர்ச்சொல் (டிமே) “விலை, மதிப்பு, கனம், மரியாதை” ஆகியவற்றை அர்த்தப்படுத்துகிறது. இந்தக் கிரேக்க சொல்லின் பல்வேறு வகைகள் “வெகுமதிகள்,” “விலையேறப்பெற்ற” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (அப்போஸ்தலர் 28:10; 1 பேதுரு 2:7) அதே சொல்லின் மற்றொரு வடிவத்தை 2 பேதுரு 1:17-ல் பேதுரு உபயோகிப்பதை நாம் ஆராய்ந்தோம் என்றால், ஒருவரை கனப்படுத்துவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதன் பேரில் நாம் உட்பார்வையைப் பெற்றுக்கொள்கிறோம். அங்கு அவர் இயேசுவின் மறுரூபமாகுதலைக் குறித்து சொன்னார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றார்.” இயேசு மறுரூபமானபோது, இயேசுவை அங்கீகரித்ததாக சொல்வதன் மூலம் யெகோவா தம் குமாரனைக் கனப்படுத்தினார், மற்றவர்கள் கேட்கும்படி கடவுள் அதைச் சொன்னார். (மத்தேயு 17:1-5) அப்படியென்றால் தன் மனைவியைக் கனம்பண்ணுகிற மனிதன் அவளைத் தாழ்வுபடுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ மாட்டார். மாறாக, அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுமக்கள் பார்வையிலும் தன்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் அவளை உயர்வாகக் கருதுவதை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.—நீதிமொழிகள் 31:28-30.
17. (அ) கிறிஸ்தவ மனைவியை கனப்படுத்துவது ஏன் தகுதியானதாயிருக்கிறது? (ஆ) கடவுளின் பார்வையில் பெண்ணைக் காட்டிலும் தனக்கு அதிக மதிப்பு உள்ளது என்று ஏன் ஒரு ஆண் உணரக்கூடாது?
17 இந்தக் கனத்தை கிறிஸ்தவக் கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்குச் ‘செலுத்தவேண்டும்,’ என்று பேதுரு சொல்கிறார். அதை ஒரு தயவாகக் கருதாமல் மனைவிகளின் உரிமைப்படி செலுத்த வேண்டிய கடனாக செலுத்த வேண்டும். அப்படிப்பட்ட கனத்தைப் பெற்றுக்கொள்ள ஏன் மனைவிகள் தகுதியுள்ளவர்களாய் இருக்கின்றனர்? ஏனென்றால் “அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால்,” என்று பேதுரு விளக்குகிறார். பொ.ச. முதலாம் நூற்றாண்டில் பேதுருவின் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவோடு உடன் சுதந்தரவாளிகளாக இருக்கும்படி அழைக்கப்பட்டனர். (ரோமர் 8:16, 17; கலாத்தியர் 3:28) அவர்கள் சபையில் ஒரே உத்தரவாதங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்கள் இறுதியில் கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதில் பங்குகொள்வர். (வெளிப்படுத்துதல் 20:6) இன்றும்கூட, கடவுளுடைய ஜனங்களில் பெரும்பாலானோர் பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கும்போது, எந்த ஒரு கிறிஸ்தவ மனிதனும் சபையில் தனக்கிருக்கும் சிலாக்கியங்களின் காரணமாக கடவுளுடைய பார்வையில் பெண்களைக் காட்டிலும் அவர் அதிக மதிப்பைக் கொண்டிருக்கிறார் என்று எண்ணுவது வினைமையான தவறாகும். (லூக்கா 17:10-ஐ ஒப்பிடுக.) கடவுளுக்கு முன்பாக ஆண்களும் பெண்களும் சமமான ஆவிக்குரிய நிலைநிற்கையைக் கொண்டிருக்கின்றனர், ஏனென்றால் இயேசுவின் பலிக்குரிய மரணம் ஆண்களுக்கும் பெண்களுக்கும்—நித்திய ஜீவனை அடையும் நம்பிக்கையுடன் பாவம் மற்றும் மரணம் என்ற கண்டனத்தீர்ப்பிலிருந்து விடுதலை பெறும்—ஒரே வாய்ப்பை திறந்து வைத்தது.—ரோமர் 6:23.
18. ஒரு கணவர் தன் மனைவியைக் கனம்பண்ணுவதற்கு என்ன வலியுறுத்தும் காரணத்தை பேதுரு கொடுக்கிறார்?
18 ஒரு கணவன் ஏன் தன் மனைவியைக் கனம் பண்ணவேண்டும் என்பதற்கு பேதுரு மற்றொரு வலியுறுத்தும் காரணத்தைக் கொடுக்கிறார், அதாவது, ‘அவர்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு.’ ‘தடைவரும்படிக்கு’ என்ற சொற்றொடர் (என்கோப்டோ) கிரேக்க வினைச்சொல்லிலிருந்து வருகிறது. அது சொல்லர்த்தமாக “குறுக்கிட்டுத் தடைசெய்” என்று பொருள்படுகிறது. வைனுடைய எக்ஸ்பாசிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ்-ன்படி அது, “சாலையை அழிப்பதன் மூலமாகவோ அல்லது பாதையில் செங்குத்தாக ஒரு தடங்கலை வைப்பதன் மூலமாகவோ தடுக்கும் ஆட்கள் சம்பந்தமாக பயன்படுத்தப்பட்டது.” எனவே தன் மனைவியை கனப்படுத்தத் தவறும் ஒரு கணவன், தன் ஜெபங்களுக்கும் கடவுள் அதைக் கேட்பதற்கும் இடையே ஒரு தடை இருப்பதாகக் காணக்கூடும். அவர் கடவுளை அணுகுவதற்குத் தகுதியற்றவராக உணரக்கூடும், அல்லது யெகோவா செவிகொடுத்துக் கேட்பதற்கு ஒருவேளை மனமுள்ளவராயிருக்க மாட்டார். ஆண்கள் பெண்களை நடத்தும் விதத்தைக் குறித்து யெகோவா பெரிதும் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பது தெளிவாயிருக்கிறது.—புலம்பல் 3:44-ஐ ஒப்பிடுக.
19. சபையில் இருக்கும் ஆண்களும் பெண்களும் பரஸ்பர மரியாதையோடு எவ்வாறு ஒன்றாக சேவிக்கலாம்?
19 கனப்படுத்த வேண்டிய கடமை கணவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு கணவன் தன் மனைவியை அன்போடும் கண்ணியத்தோடும் நடத்துவதன் மூலம் தன் மனைவியைக் கனப்படுத்த வேண்டும், கீழ்ப்படிந்திருப்பதன் மூலமும் ஆழ்ந்த மரியாதையைக் காண்பிப்பதன் மூலமும் ஒரு மனைவி தன் கணவனை கனப்படுத்த வேண்டும். (1 பேதுரு 3:1-6) கூடுதலாக, ‘ஒருவருக்கொருவர் கனம்பண்ணுங்கள்’ என்று பவுல் கிறிஸ்தவர்களுக்குப் புத்திமதி கூறினார். (ரோமர் 12:10) இது சபையில் உள்ள ஆண்களும் பெண்களும் பரஸ்பர மரியாதையோடு ஒன்றாக சேவிக்கும்படி கொடுக்கப்படும் ஓர் அழைப்பு. அப்படிப்பட்ட மனநிலை மேலோங்கியிருக்கும்போது, முன்நின்று நடத்துபவர்களின் அதிகாரத்தைக் கெடுக்கும்விதத்தில் கிறிஸ்தவ பெண்கள் பேசமாட்டார்கள். மாறாக, அவர்கள் மூப்பர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களோடு ஒத்துழைப்பார்கள். (1 கொரிந்தியர் 14:34, 35; எபிரெயர் 13:17) அவர்களுடைய பங்கில், கிறிஸ்தவ கண்காணிகள் “முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப் போலவும்” நடத்துவார்கள். (1 தீமோத்தேயு 5:1, 2) ஞானமாக மூப்பர்கள் தங்கள் கிறிஸ்தவ சகோதரிகளின் கருத்துக்களுக்குத் தயவான கவனிப்பைக் கொடுப்பர். இவ்வாறு ஒரு சகோதரி தேவராஜ்ய தலைமைஸ்தானத்துக்கு மதிப்பு கொடுத்து மரியாதையோடு ஒரு கேள்வி கேட்டாலோ அல்லது கவனிக்கப்பட வேண்டிய ஏதோவொன்றைச் சுட்டிக் காண்பித்தாலோ, மூப்பர்கள் அச்சகோதரியின் கேள்விக்கு அல்லது பிரச்சினைக்கு சந்தோஷமாக கவனம் செலுத்துவர்.
20. வேதப்பூர்வமான பதிவின்படி, பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்?
20 ஏதேனில் பாவம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்திலிருந்து, பெரும்பாலான கலாச்சாரங்களில் உள்ள பெண்கள் அவமதிப்பான ஸ்தானத்துக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அவ்விதமாக நடத்தப்படவேண்டும் என்பது யெகோவா ஆரம்பத்தில் விரும்பியதல்ல. பெண்களைக் குறித்து எப்படிப்பட்ட கலாச்சார கருத்துக்கள் நிலவியிருந்தாலும், கடவுள் பற்றுள்ள பெண்கள் கனத்தோடும் மரியாதையோடும் நடத்தப்பட வேண்டும் என்று எபிரெய மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் பதிவுகள் இரண்டும் தெளிவாகக் காண்பிக்கின்றன. அது அவர்களுக்குரிய கடனாக கடவுளே நிர்ணயித்திருக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “பெண்கள் ஆண் விருந்தினரோடு உண்ணவில்லை, பெண்களோடு பேசுவதிலிருந்து ஆண்கள் தடைசெய்யப்பட்டனர். . . . பொதுமக்கள் பார்வையில் ஒரு பெண்ணோடு பேசுவது குறிப்பாக கெட்ட பெயர் உண்டுபண்ணுவதாய் இருந்தது.” ரபீக்களுடைய போதனைகளின் ஒரு தொகுப்பு, யூத மிஷ்னா இவ்வாறு புத்திமதி கூறியது: “பெண்வர்க்கத்தினரோடு அதிகம் பேசாதீர்கள். . . . பெண்வர்க்கத்தினரோடு அதிகம் பேசும் ஒரு ஆள் தன்மீது தீமையை வருவித்துக்கொள்கிறான், நியாயப்பிரமாணம் படிப்பதைப் புறக்கணிக்கிறான், இறுதியில் கெஹன்னாவை அடைவான்.”—ஆபோத் 1:5.
b கிறிஸ்துவின் காலத்திலிருந்த பலஸ்தீனா (ஆங்கிலம்) என்ற புத்தகம் பின்வருமாறு சொல்கிறது: “சில விஷயங்களில் ஒரு பெண் அடிமைக்கு சமமாய் வைக்கப்பட்டாள். உதாரணமாக, அவள் தன் கணவனின் இறப்புக்குச் சாட்சி கொடுப்பதைத் தவிர ஒரு நீதிமன்றத்தில் சாட்சி கொடுக்கமுடியாது.” லேவியராகமம் 5:1-ஐக் குறித்து தி மிஷ்னா இவ்வாறு விளக்குகிறது: ‘சாட்சியாக தெரிவிப்பதைக்’ [குறித்த சட்டம்] ஆண்களுக்குப் பொருந்துகிறது, பெண்களுக்கல்ல.”—ஷிபோத் 4:I.
c ஏரோது ராஜாவின் சகோதரி சலோமே, “தன் விவாகத்தை முடிவுறச்செய்யும் ஒரு பத்திரத்தை தன் கணவருக்கு அனுப்பினாள், அது யூத சட்டத்துக்கு முரணாக இருந்தது. இதைச் செய்வதற்கு ஆண் (மட்டுமே) எங்களால் அனுமதிக்கப்படுகிறான்,” என்று முதல் நூற்றாண்டு சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ் அறிக்கை செய்கிறார்.”—ஜூயிஷ் அன்டிகுட்டீஸ், XV, 259 [vii, 10].
உங்களுடைய பதில் என்ன?
◻ இயேசு பெண்களைக் கனத்தோடும் மரியாதையோடும் நடத்தினார் என்பதை என்ன உதாரணங்கள் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன?
◻ இயேசுவின் போதனைகள் எவ்வாறு பெண்களின் மதிப்புக்கு மரியாதையைக் காண்பித்தன?
◻ ஒரு கணவர் தன் கிறிஸ்தவ மனைவிக்கு ஏன் கனத்தைச் செலுத்த வேண்டும்?
◻ கனப்படுத்தல் சம்பந்தமாக என்ன கடமையை எல்லா கிறிஸ்தவர்களும் கொண்டிருக்கின்றனர்?
[பக்கம் 17-ன் படம்]
கடவுள் பற்றுள்ள பெண்கள் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை முதலாவது பார்த்து மகிழ்ச்சியடைந்தனர், அவர்கள் அவருடைய சகோதரர்களிடம் சாட்சி கொடுக்கும்படி அவர் செய்தார்