கொடுக்கும்—மனப்பான்மை உங்களுக்கு உள்ளதா?
கொடுப்பதற்கு ஜனங்களைத் தூண்டுவிக்க ஒரு உள்ளெண்ணத்தைக் காட்டிலும் கூடுதலான உள்ளெண்ணங்கள் உள்ளன என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அன்பு, தாராள குணம், போற்றுதல் போன்றவற்றை ஒரு வெகுமதி வெளிப்படுத்துவதாக இருக்கலாம். இருப்பினும், ஒருவர் மற்றொருவருடைய ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடும்கூட ஒரு வெகுமதி வரக்கூடும் என்பதை நீங்கள் கவனித்ததில்லையா? அல்லது அது கடமை உணர்வோடு கொடுக்கப்படலாம் அல்லது கொடுப்பவர் திரும்ப ஏதாவது பெற்றுக்கொள்வதற்காக கொடுக்கலாம்.
அந்த வெகுமதி ஒரு அழகிய ரிப்பனைக் கொண்டு சுற்றப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு நேர்த்தியான வெகுமதி, மலர்க்கொத்து, ஒரு உணவு வகை, அல்லது ஒரு தயவான செயல் போன்றவையாகக்கூட இருக்கலாம் அல்லவா? உண்மையில், மிகவும் உயர்வாய் போற்றப்படும் வெகுமதிகள், ஒருவர் தன்னையே அளிப்பதை பெரும்பாலும் உட்படுத்துகிறது.
நீங்கள் ஆதரவை நாடும் எவராவது ஒருவர் இருக்கிறாரா?
நீங்கள் ஆதரவை நாடும் ஒருவருக்கு, ஒரு வெகுமதியைக் கொடுப்பது, ஒரு அசாதாரணமான காரியம் அல்ல. சில தேசங்களில், ஒரு இளம் மனிதன் தான் மணம் செய்துகொள்ளப்போகும் துணைவியின் நேசத்தை சம்பாதிப்பதற்கு அவளுக்கு பூக்களைக் கொண்டு வரலாம். ஆனால் ஞானமான பெண்ணோ அந்த வெகுமதிக்குப் பின்னாலிருக்கும் குணத்தைப் பார்க்கிறாள். அந்த இளம் மனிதன் வெகுமதி கொடுப்பதன் நோக்கம் அன்பானதாக உள்ளதா என்பதை அவள் சிந்தித்துப் பார்க்கிறாள், ஏனென்றால் அதுவும்கூட அவரை ஒரு சிறந்த கணவராக ஆக்கும். அப்படிப்பட்ட ஒரு வெகுமதி, தேவபக்திக்குரிய தூண்டுதலைப் பிரதிபலித்தால், அது கொடுப்பவருக்கும் அதைப் பெற்றுக்கொள்பவருக்கும் அதிக சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள வழிநடத்தக்கூடும்.
நாபாலின் மனைவியாகிய அபிகாயில், எதிர்காலத்தில் இஸ்ரவேலுக்கு ராஜாவாக இருக்கும்படி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தாவீதை அடையாளம் கண்டுகொண்டு, விரைவாக ஒரு தாராளமான வெகுமதியை அவருக்கு தயாரித்தாள் என்ற சம்பவத்தைப் பற்றி பைபிள் கூறுகிறது. அவளும் அவருடைய ஆதரவைப் பெற நாடினாள். தாவீதை அவளுடைய கணவன் வெறுத்து ஒதுக்கி, தாவீதின் மனிதரை கடிந்துகொண்டு கூச்சல் போட்டான். ஆயுதந்தரித்த சுமார் 400 பேரடங்கிய குழு ஒன்றுக்கு தலைவராக தாவீது, நாபாலையும் அவனுடைய வீட்டாரையும் அழிவுக்குக் கொண்டுவர தீர்மானித்திருந்தார். அபிகாயில் குறுக்கிட்டு தாவீதுக்கு உணவுப் பொருட்களை தாராளமாய் வெகுமதியாக அவருடைய மனிதர்களுக்காக அனுப்பினார். வெகுமதியை அனுப்பிவிட்டு அதைப் பின்தொடர்ந்து அவளே சென்றாள், அவளுடைய கணவர் செய்தவற்றுக்காக மனத்தாழ்மையோடு மன்னிப்புக் கேட்டு, தாவீதோடு நியாயமாகப் பேசுகையில் அவள் பகுத்துணர்வை பெருமளவில் வெளிப்படுத்திக் காண்பித்தாள்.
அவளுடைய குறிக்கோள் உயர் பண்புடையதாய் இருந்தது, அதன் விளைவு நன்றாக இருந்தது. தாவீது அவளுடைய வெகுமதியைப் பெற்றுக்கொண்டு அவளிடத்தில் சொன்னார்: “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன்.” பின்னர் நாபால் மரித்தப் பின்பு, தாவீது அபிகாயிலை விவாகம் செய்துகொள்ளவும்கூட விருப்பம் தெரிவித்தார், அதை அவள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டாள்.—1 சாமுவேல் 25:13-42.
இருப்பினும், சில விஷயங்களில் ஒரு நபர் நாடும் ஆதரவு பட்சபாதம் காண்பிப்பதை உட்படுத்தக்கூடும், நியாயத்தைப் புரட்டுவதாயும்கூட இருக்கக்கூடும். அப்படிப்பட்ட விஷயத்தில், அந்த வெகுமதி ஒரு லஞ்சம். அதைக் கொடுப்பவர் அதிலிருந்து பயனடையலாம் என்று நினைக்கிறார், ஆனால் அவர் தன் மனசமாதானத்தை இழந்துவிடுகிறார். மற்றவர்கள் அதைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம் எப்போதும் இருக்கும், அவருடைய செயல்களுக்காக அவர் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அதை நாடியவர் அவர் விரும்பிய ஆதரவைப் பெற்றுக்கொண்டாலும்கூட, தன்னுடைய உள்நோக்கங்கள் சந்தேகத்துக்குரியவை என்ற பெயரை அவர் இப்போது பெற்றிருப்பார். தெய்வீக ஞானத்தைப் பிரதிபலிக்கும் பைபிள் அப்படிப்பட்ட வெகுமதிகளைக் குறித்து எச்சரிக்கிறது.—உபாகமம் 16:19; பிரசங்கி 7:7.
மனப்பூர்வமான இருதயத்திலிருந்து வெகுமதி வருகிறதா?
இதைக் குறித்து சந்தேகமேயில்லை—நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பிக் கொடுப்பது அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, நீங்கள் கொடுக்க வேண்டும் என்று மற்றவர்கள் உங்களை உணர்த்துவதால் வரும் மகிழ்ச்சியைக் காட்டிலும் அது அதிகமாக உள்ளது.
பொருள் சம்பந்தமாக தேவையிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு இடருதவி பொருட்களை சேகரிக்கும் விஷயத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் தேவபக்திக்குரிய கொடுத்தலின் பேரில் மிகச்சிறந்த நியமங்கள் சிலவற்றை கொடுத்தார். “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.” அவர் கூடுதலாக சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 8:12; 9:7) ஆகையால் உங்கள் பேரில்தான் அதிகம் சார்ந்துள்ளது. வெகுமதிகள் அளவுக்குமீறி கொடுப்பதனால் கடனுக்குள் விழுந்துவிடுவதற்கு பதிலாக, உங்களுடைய வருவாய்க்கு ஏற்ப நீங்கள் செலவழிக்கிறீர்களா? சமுதாயம் சார்ந்த அல்லது வியாபார உலகிலிருந்து வரும் அழுத்தத்தின் காரணமாக கொடுப்பதற்கு முக்கியமாய் கட்டாயப்படுத்தப்படுவதற்கு மாறாக, உங்களுடைய இருதயத்தில் தீர்மானித்துள்ளபடி நீங்கள் செய்கிறீர்களா? அப்படிப்பட்ட தெய்வீக நியமங்களைப் பொருத்திய பூர்வ கிறிஸ்தவர்களைப் பற்றி பவுல் எழுதினார்: “தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.”—2 கொரிந்தியர் 8:4.
அதற்கு நேர் எதிர்மாறாக, நவம்பர்/டிசம்பர் 1994 தேதியிட்ட ராயல் பாங்க் லெட்டர், கிறிஸ்மஸுக்கு வழிநடத்திய வாரங்களைப் பற்றி இவ்வாறு சொன்னது: “வியாபார நோக்கங்களால் தூண்டப்பட்ட போலி கிளர்ச்சி நிலையாக இந்த விழாக்காலம் காணப்படும், மற்றபடி நுகர்வோர் வாங்காத பொருட்களை வாங்கும்படி அது அவர்களை துரிதப்படுத்தும்.” கடன் பேரில் பொருட்கள் வாங்கப்பட்டது என்றால், வெகுமதிகளைக் கொடுப்பதனால் வரும் திருப்தி எவ்வளவாக இருந்தாலும், அதற்காக பணம் கட்ட வேண்டிய நேரம் வருகையில் அந்த திருப்தி விரைவில் மறைந்துவிடும்.
உங்களுடைய முக்கிய அக்கறை—நிகழ்ச்சியா? அல்லது அன்பின் வெளிக்காட்டுதலா?
நீங்கள் வெகுமதிகளைக் கொடுக்கும் சமயம் பெரும்பாலும் அது தேவைப்படுத்தும் சமயங்களில் மட்டும்தான் கொடுப்பதாக நீங்கள் காண்கிறீர்களா? அப்படியென்றால், மனமுவந்து கொடுப்பதனால் வரும் சந்தோஷத்தை நீங்கள் இழந்துகொண்டிருக்கலாம்.
குறிப்பிட்ட தினங்களில் வெகுமதி கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து அநேக ஜனங்கள் மகிழ்ச்சியடைவதில்லை. வெகுமதிகள் எதிர்பார்க்கப்பட்ட நாள் நெருங்கியபோது, அவர்களுடைய பிள்ளைகள் பேராசையான குணத்தைக் காண்பித்தனர் என்று எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு தாய் ஒப்புக்கொண்டார்கள். ஒரு அழகான வெகுமதியை தானே அனுபவிப்பது கெட்டுவிட்டது, ஏனென்றால் அவள் வேறு ஏதோவொன்றை பெற்றுக்கொள்ளப் போவதாக நம்பிக் கொண்டிருந்தாள். களியாட்டங்களையும் வெகுமதிகள் கொடுத்துக்கொள்வதையும் முக்கியமானதாகக் கருதும் கொண்டாட்டங்கள், அதிகப்படியான உணர்ச்சிசம்பந்தப்பட்ட மனச்சோர்வும் மது துர்ப்பிரயோகமும் இருக்கும் சமயங்களாகவும்கூட இருக்கின்றன என்று அநேக அறிக்கைகள் சொல்கின்றன.
விடுமுறை நாட்களில் வெகுமதி கொடுப்பதன் பேரில் அழுத்தம் கொடுப்பது பிள்ளைகளை சில சமயங்களில் எதிர்மாறாக பாதிக்கிறது என்பதை கவனித்த உளவியல் பேராசிரியர் ஒருவர், தி நியூ யார்க் டைம்ஸில் மேற்கோள் காட்டியிருந்ததை சிபாரிசு செய்கிறார்: “அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒரு வழியாக மற்ற நாட்களில் வெகுமதிகள் கொடுப்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.” அது ஒரு நல்ல பாதிப்பைக் கொண்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
கிறிஸ்மஸ் மற்றும் பிறந்தநாட்களைக் கொண்டாடாத குடும்பத்தில் இருக்கும் டேமி என்ற 12 வயது சிறுமி இவ்வாறு எழுதினாள்: “நீங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் ஒரு வெகுமதியைப் பெற்றுக்கொள்வது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும்.” வருடத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் வெகுமதிகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவளுடைய பெற்றோர் அவளுக்கும் அவளுடைய சகோதரனுக்கும் வருடமுழுவதும் கொடுப்பர். ஆனால் அந்த வெகுமதிகளைக் காட்டிலும் அவளுக்கு அதிக முக்கியத்துவமுள்ள ஒன்று உள்ளது. “எனக்கு அதிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை உள்ளது” என்று அவள் சொல்கிறாள்.
பலமான குடும்பங்களின் இரகசியங்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது: “நம்மில் அநேகர் பிறந்த நாட்கள், ஆண்டு நிறைவுநாட்கள், அல்லது கொண்டாட்டங்களின் சமயங்களில் நாம் நேசிக்கும் ஆட்களுக்கு கொடுப்பதற்காக அதிக பொருத்தமான வெகுமதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு வருடத்தில் அநேக தடவைகள் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறோம். எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் சிறப்பான வெகுமதிக்கு பணம் தேவைப்படுவதில்லை. நீங்கள் அதை சுற்ற வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான ஆட்கள் நினைப்பதைப் போல் நீங்களும் உணர்ந்தால், உங்களுடைய வாழ்க்கைதானே அதிக மதிப்புவாய்ந்த உடைமையாக உள்ளது, உங்களுடைய நேரத்தில் சிறிதளவை நீங்கள் கொடுப்பதுதானே அதிக மதிப்புவாய்ந்த வெகுமதியாக உள்ளது. நாம் அந்த மதிப்புவாய்ந்த வெகுமதியை நம்முடைய அன்பானவர்களுக்கு கொடுக்கிறோம்.”
நீங்கள் அதை உங்களுடைய சொந்த குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். மற்றவர்கள் கொண்டிருக்கும் தேவையை பூர்த்திசெய்வதற்கு மனமுவந்து கொடுத்தல் விசேஷ திருப்தியைக் கொண்டு வரக்கூடும். இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட அன்பான அக்கறையை ஏழைகள், முடவர், குருடர் போன்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று நம்மை ஊக்குவித்தார்: “அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்.”—லூக்கா 14:12-14.
ராக்லண்ட் ஜெர்னல்-நியூஸ் (அ.ஐ.மா.), அப்படிப்பட்ட கொடுத்தலைப் பற்றி சமீபத்தில் ஒரு உதாரணத்தை அறிக்கை செய்தது. ஒரு வயதான குருட்டுப் பெண்ணின் வீடு இடிந்துவிட்டபோது, அவளுடைய நண்பர்கள் ஒரு புதிய வீட்டை அவர்களுக்கு கட்டினார்கள். அநேக உள்ளூர் வியாபார நிறுவனங்கள் நன்கொடைகள் அளித்தன, ஒரு உள்ளூர் அரசாங்க ஏஜென்சி பண உதவி அளித்தது. “ஆனால் அதிமுக்கியமான காரியம், 150 அல்லது அதற்கும் மேற்பட்ட ஹாவர்ஸ்ட்ரா யெகோவாவின் சாட்சிகளுடைய சபையைச் சேர்ந்த அநேகர் வீட்டைக் கட்டுவதற்கு நேரத்தை அளித்தனர்,” என்று அந்த செய்தித்தாள் கூறியது.
அந்தக் கட்டுரை தொடர்ந்து சொன்னது: “கட்டடம் கட்டும் இடத்தில் உணவு நிரம்பியிருந்த மேஜைகளுக்கு பக்கத்தில் பொருட்கள் குவியலாகக் கிடந்தன. இரண்டு நாட்களில் வேலையாட்கள் இரண்டு வீடுகள் கொண்ட மூன்று மாடி கட்டடத்தை எழுப்பினர். . . . யெகோவாவின் சாட்சிகள் கட்டடங்களை விரைவாக எழுப்புவதில் திறமை பெற்றிருக்கும் ஜனங்கள் என்று நன்கு அறியப்பட்டிருக்கின்றனர். . . . ஆனால் அப்படி விரைவாக கட்டுவது, அவர்களுடைய குறிக்கோளின் நிரந்தரத்தன்மைக்கு எதிர்மாறானதாய் உள்ளது: அன்பின் வெளிக்காட்டுதலாக இருக்கும் வேலைக்கு நிலைத்து நிற்கக்கூடிய தன்மையை அளிப்பது. Ms. பிளேக்லி தன் புதிய வீட்டை காணமுடியாமல் இருக்கலாம், ஆனால் அவளுடைய கைகள் அதை உணர முடியும், தன்னலமற்ற இந்த செயலால் அவர்களுடைய இருதயம் எந்த அளவுக்கு ஆழமாக உந்தப்பட்டது என்பதை அவளுடைய இருதயம் அறியும்.”
வருடமுழுவதும் தாராள மனப்பான்மையைக் காண்பித்தல்
தாராள மனப்பான்மையை உண்மையிலேயே கொண்டிருப்பவர்கள் விசேஷ நாட்களுக்காகக் காத்திருப்பதில்லை. அவர்களுடைய வாழ்க்கை அவர்களைச் சுற்றியே அமைந்திருப்பதில்லை. அவர்கள் நன்மையான ஏதோவொன்றைப் பெற்றுக்கொண்டால், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோஷப்படுகின்றனர். இது அவர்கள் தங்களைக் கட்டாயப்படுத்தி, மற்றவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுப்பவர்கள் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அவர்கள் அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கொடுப்பதால் தங்களுடைய குடும்பங்களுக்கு இல்லாமல் போகும் நிலை ஏற்படுவதை அது அர்த்தப்படுத்துவதில்லை. பெற்றுக்கொள்பவர் மீது ஏற்படும் பாதிப்பைப் பற்றி சிந்திக்காமலேயே அவர்கள் கொடுப்பர் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. இருப்பினும், இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி, அவர்கள் ‘கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கும்’ ஆட்களாய் இருக்கின்றனர்.—லூக்கா 6:38, NW.
வயதானவர்களாகவோ வியாதிப்பட்டவர்களாகவோ அல்லது மற்றவிதத்தில் உற்சாகம் தேவைப்படுபவர்களாகவோ இருக்கும் நண்பர்கள் மற்றும் அயலகத்தாரின் சூழ்நிலையை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அவர்களுடைய “வெகுமதி,” கடைக்குச் செல்வது அல்லது வீட்டு வேலையில் உதவுவதாக இருக்கலாம். அது விறகை வெட்டுவது அல்லது பனிக்கட்டிகளை அள்ளிப்போடுவதாக இருக்கலாம். அது தயாரிக்கப்பட்ட உணவாகவோ அல்லது அவர்களை சந்திப்பதற்கும் ஒன்றாக சேர்ந்து வாசிப்பதற்கும் ஒரு மணிநேரத்தை செலவழிப்பதாக இருக்கலாம். அவர்களுடைய சொந்த வாழ்க்கையே அதிக வேலைகள் நிறைந்ததாக இருக்கும், ஆனால் உதவிசெய்வதற்கு அதிக வேலைகள் நிறைந்தது அல்ல. “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்பதை அவர்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டிருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 20:35.
ஆனால் எல்லாரைக்காட்டிலும் கொடுப்பதில் மிகப்பெரியவர், நம்முடைய படைப்பாளராகிய யெகோவா தேவனே. அவர் ‘எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறார்.’ (அப்போஸ்தலர் 17:25) அவர் துன்மார்க்கம், வியாதி, மரணம் ஆகியவற்றுக்கு முடிவைக் கொண்டுவந்து, இந்த பூமியை பரதீஸாக்குவதற்கான அவருடைய நோக்கத்தின் பேரில் உட்பார்வையையும்கூட நமக்கு பைபிளில் அளிக்கிறார். (சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:4, 5) ஆவியில் உதாரகுணமுள்ளவர்கள், இதைக் குறித்து கற்றறியும்போது, அந்த நற்செய்தியை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்வதில்லை. அவர்களுடைய மிகப்பெரிய இன்பங்களில் ஒன்று, அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது ஆகும். அவர்களுடைய கொடுக்கும் மனப்பான்மை உண்மையிலேயே தேவபக்தியுள்ள தன்மையுள்ளது. நீங்கள் அப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களா?
[பக்கம் 7-ன் படங்கள்]
மதிப்புமிக்க வெகுமதிகள் சிலவற்றுக்கு பணம் தேவையில்லை