கல்வி—யெகோவாவைத் துதிக்க அதைப் பயன்படுத்துங்கள்
“சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்.”—யோவான் 7:18.
1. எப்போது மற்றும் எப்படி கல்வியின் செயல்முறை அதனுடைய ஆரம்பத்தைக் கொண்டிருந்தது?
கல்வி நெடுங்காலத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. மிகத்தேர்ந்த கல்விபுகட்டுபவரும் போதனையாளருமாகிய யெகோவா தேவன் தம்முடைய முதற்பேறான குமாரனை படைத்தபோது கல்விமுறை தொடங்கியது. (ஏசாயா 30:20, NW; கொலோசெயர் 1:15) மிகத்தேர்ந்த கல்விபுகட்டுபவரிடமிருந்தே கற்றுக்கொண்ட ஒரு நபர் இவரே! இயேசு கிறிஸ்து என்றழைக்கப்படலான அந்தக் குமாரன், பிதாவோடு நெருங்கிய தோழமையிலிருந்த எண்ணிலடங்கா லட்சக்கணக்கான ஆண்டுகளின்போது, யெகோவா தேவனின் பண்புகள், செயல்கள், நோக்கங்கள் சம்பந்தமாக விலையேறப்பெற்ற கல்வியைப் பெற்றார். பிற்பாடு, பூமியிலிருக்கும் மனிதனாக, இயேசுவால் இவ்வாறு சொல்ல முடிந்தது: ‘நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.’—யோவான் 8:28.
2-4. (அ) யோவான் அதிகாரம் 7-ன்படி, பொ.ச. 32-ல் கூடாரப் பண்டிகையின்போது இயேசு அங்கே ஆஜராயிருந்ததைச் சுற்றி என்ன சூழ்நிலைமைகள் இருந்தன? (ஆ) இயேசுவினுடைய போதிக்கும் திறமையைக் குறித்து ஏன் யூதர்கள் அதிசயப்பட்டார்கள்?
2 தாம் பெற்ற கல்வியை இயேசு எவ்வாறு பயன்படுத்தினார்? தாம் கற்றுக்கொண்ட காரியங்களை தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது மூன்றரை ஆண்டுகளாக, பிறரிடம் சோர்வில்லாமல் பகிர்ந்து கொண்டார். என்றபோதிலும், மனதில் ஒரு பிரதான நோக்கத்துடன் இதை செய்தார். அது என்ன? யோவான் 7-ம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் வார்த்தைகளை நாம் ஆராய்வோமாக. தம்முடைய போதகத்தின் மூலத்தையும் நோக்கத்தையும் அங்கே அவர் விளக்கினார்.
3 சூழமைப்பைப் பாருங்கள். அது பொ.ச. 32-ன் இலையுதிர் காலம், இயேசு முழுக்காட்டுதல் பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. கூடாரப் பண்டிகைக்காக யூதர்கள் எருசலேமில் கூடிவந்திருந்தனர். அந்தப் பண்டிகையின் முதல் ஒருசில நாட்களின்போது இயேசுவைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வந்தது. அந்தப் பண்டிகை பாதி முடிந்தபோது, இயேசு ஆலயத்திற்கு சென்று போதிக்க ஆரம்பித்தார். (யோவான் 7:2, 10-14) எப்போதும்போல, அவர் பெரிய போதகராக தம்மை நிரூபித்தார்.—மத்தேயு 13:54; லூக்கா 4:22.
4 யோவான் அதிகாரம் 7-ல் 15-ம் வசனம் சொல்கிறது: “அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.” ஏன் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இயேசு ரபீக்கள் சென்ற பள்ளிகளுக்கு செல்லாததால், கல்லாதவராயிருந்தார்—அல்லது அவ்வாறாக அவர்கள் நினைத்தனர்! எனினும், எபிரெய எழுத்துக்களிலிருந்த பகுதிகள் எங்கிருக்கின்றன என்று கண்டுபிடித்து எளிதாக இயேசுவால் வாசிக்க முடிந்தது. (லூக்கா 4:16-21) ஏன், இந்தக் கலிலேய தச்சர் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து போதிக்கவுஞ்செய்தார்! (யோவான் 7:19-23) இதை அவரால் எப்படிச் செய்ய முடிந்தது?
5, 6. (அ) தம்முடைய போதனையின் ஊற்றுமூலத்தை இயேசு எவ்வாறு விளக்கினார்? (ஆ) தம்முடைய கல்வியை இயேசு எந்த விதத்தில் பயன்படுத்தினார்?
5 நாம் 16, 17 வசனங்களில் வாசிக்கிறவண்ணம், இயேசு விளக்கினார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்வான்.” இயேசு யாரால் கல்வி புகட்டப்பட்டார் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினர். இதனால் அவர் தெளிவாக அவர்களிடம், தம்முடைய கல்வி தேவனிடமிருந்து வருவதாகச் சொன்னார்!—யோவான் 12:49; 14:10.
6 இயேசு தம் கல்வியை எவ்வாறு பயன்படுத்தினார்? யோவான் 7:18-ல் பதிவுசெய்யப்பட்டபடி அவர் பதிலளித்தார்: ‘சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.’ “பூரண ஞானமுள்ளவ”ராகிய யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவர இயேசு தம் கல்வியை பயன்படுத்தியது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!—யோபு 37:16.
7, 8. (அ) கல்வி எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும்? (ஆ) ஒரு சமநிலையான கல்வியின் நான்கு அடிப்படை குறிக்கோள்கள் யாவை?
7 எனவே இயேசுவிலிருந்து நாம் ஒரு பயனுள்ள பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்—கல்வி நம்முடைய மகிமைக்காக அல்லாமல் யெகோவாவுக்கு துதி கொண்டுவர பயன்படுத்தப்பட வேண்டும். கல்வியை பயன்படுத்துவதற்கு வேறு சிறந்த வழியே கிடையாது. ஆகவே, யெகோவாவுக்கு துதியைக் கொண்டுவருவதற்கு கல்வியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தமுடியும்?
8 கல்வி புகட்டுதல் என்றால், “விசேஷமாக ஒரு திறனில், வேலையில், அல்லது உத்தியோகத்தில் முறைப்படியான போதனையாலும் மேற்பார்வையிடப்பட்ட பழக்கத்தாலும் பயிற்றுவிப்பது” என்றர்த்தப்படுத்தும். சமநிலையான கல்வியின் நான்கு அடிப்படை குறிக்கோள்களையும் ஒவ்வொன்றையும் யெகோவாவைத் துதிக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் இப்போது சிந்திக்கலாம். சமநிலையான கல்வி (1) நன்றாக வாசிப்பதற்கும் (2) தெளிவாக எழுதுவதற்கும் (3) மனப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் வளருவதற்கும், மேலும் (4) அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நடைமுறை பயிற்சியை பெறுவதற்கும் உதவவேண்டும்.
நன்றாக வாசிக்க கற்றுக்கொள்வது
9. ஒரு நல்ல வாசகராக இருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?
9 பட்டியலில் முதலாவதாக இருப்பது நன்றாக வாசிக்க கற்றுக்கொள்வது. நல்ல வாசகராக இருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்? தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது: “வாசிப்பது . . . கற்றுக்கொள்வதற்கு அடிப்படையாக இருக்கிறது, அன்றாட வாழ்க்கையில் அதிக முக்கியமான திறன்களில் ஒன்றாகவும் இருக்கிறது. . . . செழுமையான, பலன்தரும் சமுதாயத்தை உருவாக்குவதற்கு திறம்பட்ட வாசகர்கள் துணைபுரிகின்றனர். அதே சமயத்தில், அனுபவமிக்க, அதிக மனநிறைவான வாழ்க்கையை அவர்கள்தாமே அனுபவித்து மகிழ்கின்றனர்.”
10. கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது அனுபவமிக்க, அதிக மனநிறைவான வாழ்க்கையை அனுபவித்து மகிழ எவ்வாறு உதவுகிறது?
10 பொதுவாக வாசிப்பது “அனுபவமிக்க, அதிக மனநிறைவான வாழ்க்கையை” அனுபவித்து மகிழ உதவுகிறதென்றால், கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதைக் குறித்து இது எந்தளவு உண்மையாயிருக்கிறது! அத்தகைய வாசிப்பு யெகோவாவின் சிந்தைகளுக்கும் நோக்கங்களுக்கும் நம் மனங்களையும் இருதயங்களையும் திறக்கிறது, இவற்றை தெளிவாக புரிந்துகொள்வது நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது. கூடுதலாக, ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாக’ இருப்பதாய் எபிரெயர் 4:12 சொல்கிறது. கடவுளுடைய வார்த்தையை வாசித்து அதன் பேரில் தியானம் செய்தால், அதன் ஆசிரியரிடம் நாம் வரும்படி இழுக்கப்படுகிறோம். அவருக்கு அதிக பிரியமுள்ளவர்களாவதற்கு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய தூண்டப்படுகிறோம். (கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 4:22-24) வாசிக்கும் அருமையான சத்தியங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் நாம் உந்துவிக்கப்படுகிறோம். மிகத்தேர்ந்த கல்விபுகட்டுபவராகிய யெகோவா தேவனுக்கு இதெல்லாம் துதியைக் கொண்டுவருகிறது. நிச்சயமாகவே, வாசிப்பதற்கான நம் திறத்தை பயன்படுத்த வேறு சிறந்த வழியே கிடையாது!
11. சமநிலையான தனிப்பட்ட படிப்பு திட்டத்தில் எதை உட்படுத்தவேண்டும்?
11 இளைஞராயிருந்தாலும் முதியோராயிருந்தாலும் நாம் நன்றாய் வாசிக்க கற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தப்படுகிறோம். ஏனெனில் கிறிஸ்தவ வாழ்க்கையில் வாசித்தல் முக்கியமான பங்கு வகிக்கிறது. கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக வாசிப்பதோடுகூட, தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து பைபிள் வசனத்தை சிந்திப்பது, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை கவனமாகப் படிப்பது மற்றும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தயார் செய்வது போன்றவை சமநிலைப்படுத்தப்பட்ட தனிப்பட்ட படிப்பு திட்டத்தில் உட்பட்டவையாயிருக்கின்றன. கிறிஸ்தவ ஊழியத்தைக் குறித்ததிலென்ன? தெளிவாகவே, பொது மக்களுக்குப் பிரசங்கம் செய்வது, மறுசந்திப்புகள் செய்வது, வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவது ஆகிய இவையெல்லாம் நல்ல வாசிக்கும் திறனைக் கேட்கிறது.
தெளிவாக எழுத கற்றுக்கொள்வது
12. (அ) தெளிவாக எழுதுவதற்கு கற்றுக்கொள்வது ஏன் அவ்வளவு முக்கியம்? (ஆ) எக்காலத்திலும் எழுதப்பட்டவற்றிலும் மிகப்பெரிய எழுத்துவேலை எது?
12 நாம் மனதில் வைக்கவேண்டிய இரண்டாம் குறிக்கோளானது, சமநிலையான கல்வி தெளிவாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ள நமக்கு உதவவேண்டும். எழுதுவது நம்முடைய வார்த்தைகளையும் கருத்துக்களையும் பிறருக்கு அளிப்பது மாத்திரமன்றி, அவற்றை பத்திரப்படுத்தியும் வைக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், சுமார் 40 யூத ஆண்கள், ஏவப்பட்ட வேதவசனங்களை உருவாக்கிய வார்த்தைகளை நாணல் சுவடியில் அல்லது தோல் சுருளில் பொறித்தனர். (2 தீமோத்தேயு 3:16) உண்மையில் எக்காலத்தில் எழுதப்பட்டவற்றிலும் இதுவே மிகப்பெரிய எழுத்துவேலையாயிருந்தது! நூற்றாண்டுகளினூடே அந்தப் பரிசுத்த வார்த்தைகள் நகலெடுக்கப்படுவதற்கும் மறுநகலெடுக்கப்படுவதற்கும் யெகோவா வழிநடத்தினார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆதலால்தான் நம்பத்தகுந்த உருவில் அவை நம்மை வந்தடைந்திருக்கின்றன. வாய்மொழியால் கடத்தப்படுவதை நம்புவதற்கு மாறாக யெகோவா தம்முடைய வார்த்தைகளை எழுதி வைத்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் அல்லவா?—யாத்திராகமம் 34:27, 28-ஐ ஒப்பிடுக.
13. எழுதுவதை இஸ்ரவேலர் அறிந்திருந்தனர் என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
13 பூர்வீக காலங்களில், மெசப்படோமியாவிலும் எகிப்திலும் இருந்த வேதபாரகர்களைப்போல, குறிப்பிட்ட தனி சலுகைகள் பெற்ற வகுப்பார் மாத்திரமே கல்வியறிவுள்ளவர்களாக இருந்தனர். நேர் முரணாக, இஸ்ரவேலில் உள்ள அனைவரும் கல்வியறிவுள்ளவர்களாக இருக்கும்படி உற்சாகமளிக்கப்பட்டனர். தங்கள் வீட்டின் நிலைகளில் எழுதும்படி உபாகமம் 6:8, 9-ல் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை அடையாள அர்த்தமுடையதாயிருந்தாலும், எழுதுவதை இஸ்ரவேலர் அறிந்திருந்தனர் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியது. ஆரம்ப பருவத்திலேயே பிள்ளைகள் எழுத கற்றுத்தரப்பட்டனர். பூர்வ எபிரெய எழுத்தின் மிகப் பழமையான உதாரணங்களில் ஒன்று கேசேர் காலண்டர் ஆகும். இது ஒரு பள்ளி சிறுவனின் ஞாபகசக்திக்கான பயிற்சியாக சில வல்லுனர்களால் கருதப்படுகிறது.
14, 15. என்ன சில பயன்தரத்தக்க, ஆரோக்கியமான முறைகளில் எழுதும் திறனை பயன்படுத்தலாம்?
14 ஆனால் பயன்தரத்தக்க, ஆரோக்கியமான முறையில் நாம் எப்படி இந்த எழுதும் திறனை பயன்படுத்தலாம்? கிறிஸ்தவ கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் குறிப்புகள் எடுப்பதன் மூலமாகவே. “சுருக்கமாய்” எழுதப்பட்டாலும், ஒரு கடிதம் நோய்வாய்ப்பட்டிருக்கிறவருக்கு உற்சாகத்தை அளிக்கலாம், அல்லது நம்மிடத்தில் தயவாகவோ உபசரிப்புத் தன்மையோடோ நடந்துகொண்ட சகோதரருக்கோ சகோதரிக்கோ நன்றி தெரிவிக்கலாம். (1 பேதுரு 5:12) சபையிலுள்ள ஒருவர் நேசமான ஒருவரை மரணத்தில் இழந்திருந்தால், நம் சார்பாக சுருக்கமான ஒரு கடிதமோ கார்டோ ‘தேற்றுதலளிக்கும்’ விதமாக பேசும். (1 தெசலோனிக்கேயர் 5:14) புற்றுநோயினால் தன் தாயை இழந்த ஒரு சகோதரி விளக்கினாள்: “ஒரு நண்பர் நல்லவொரு கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார். அது உண்மையில் உதவியது, ஏனென்றால் அதை திரும்பவும் திரும்பவும் வாசிக்க முடிந்தது.”
15 எழுதுவதற்கான திறத்தை பயன்படுத்துவதன் மிகச் சிறந்த முறை, ராஜ்ய சாட்சி கொடுப்பதற்காக ஒரு கடிதத்தை எழுதுவதன் மூலமாக யெகோவாவிற்கு துதியைக் கொண்டுவருவதே ஆகும். சில சமயத்தில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வாழக்கூடிய புதிதாக அக்கறை காட்டும் மக்களுடன் தொடர்புகொள்வது அவசியப்படலாம். வீடுவீடாய் செல்வதை நோய் தற்சமயம் கடினமானதாக்கலாம். அப்போது, நேரில் பார்த்து சாதாரணமாக என்ன சொல்வீர்களோ அதை கடிதமானது எழுத்தில் சொல்லலாம்.
16, 17. (அ) ராஜ்ய சாட்சி கொடுக்க கடிதம் எழுதுவதன் மதிப்பை எந்த அனுபவம் மெய்பித்துக் காட்டுகிறது? (ஆ) அதே விதமான ஒரு அனுபவத்தை உங்களால் எடுத்துரைக்க முடியுமா?
16 ஓர் அனுபவத்தை கவனியுங்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் இறந்ததாக உள்ளூர் செய்தித்தாளில் அறிக்கை செய்யப்பட்டிருந்த மனிதனின் விதவைக்கு ஒரு சகோதரி ராஜ்ய சாட்சி கொடுத்து ஒரு கடிதம் எழுதினார்கள். பதில் வரவேயில்லை. பின்னர் நவம்பர் 1994-ல் 21 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பிறகு, அந்தப் பெண்ணின் மகளிடமிருந்து சகோதரி ஒரு கடிதத்தைப் பெற்றார்கள். மகள் எழுதியதாவது:
17 “ஏப்ரல் 1973-ல், என் அப்பாவின் இறப்புக்கு பின்னர், ஆறுதலாக என் அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தீர்கள். அப்போது எனக்கு வயது ஒன்பது. என் அம்மா பைபிளை படித்தார்கள், ஆனால் இது வரை யெகோவாவின் ஊழியராகவில்லை. என்றபோதிலும், அவர்கள் படித்தது, கடைசியில் நான் சத்தியத்துடன் தொடர்புகொள்வதற்கு வழிநடத்தியது. 1988-ல் என் பைபிள் படிப்பை தொடங்கினேன்—உங்கள் கடிதம் பெற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு. மார்ச் 9, 1990 அன்று முழுக்காட்டப்பட்டேன். அநேக ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் எழுதிய கடிதத்திற்காக உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன். நீங்கள் போட்ட விதைகள் யெகோவாவின் உதவியோடு வளர்ந்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கடிதத்தை நான் வைத்துக்கொள்ளும்படியாக அம்மா என்னிடம் கொடுத்தார்கள். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள நான் ஆசைப்படுகிறேன். இந்தக் கடிதம் உங்கள் கைக்கு எட்டும் என்று நம்புகிறேன்.” தன் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து அனுப்பிய இந்த மகளின் கடிதம், அநேக ஆண்டுகளுக்கு முன்னால் அவர்களுடைய அம்மாவுக்கு எழுதிய சகோதரியை உண்மையிலேயே சென்றெட்டியது. சகோதரியிடமிருந்து தொலைபேசி அழைப்பை அந்த இளம் பெண் பெற்றபோது அவருக்கு உண்டான வியப்பை கற்பனை செய்து பாருங்கள்—பிறரிடம் ராஜ்ய நம்பிக்கையை பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் இந்தச் சகோதரி கடிதங்களை எழுதுகிறார்!
மனப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் மற்றும் ஆவிக்குரியபிரகாரமாகவும் வளருவது
18. பைபிள் காலங்களில், பிள்ளைகளின் மனப்பிரகாரமான, ஒழுக்கப்பிரகாரமான கல்வியை பெற்றோர் எவ்வாறு கவனித்துக்கொண்டனர்?
18 மூன்றாம் குறிக்கோளானது சமநிலையான கல்வி மனப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் வளர நமக்கு உதவ வேண்டும். பைபிள் காலங்களில், பிள்ளைகளின் மனப்பிரகாரமான, ஒழுக்கப்பிரகாரமான கல்வி பெற்றோரின் பிரதான கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. எப்படி வாசிப்பது, எப்படி எழுதுவது என்பது மாத்திரம் பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படாமல், ஆனால் அதிமுக்கியமாக தங்களுடைய வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளையும் உட்படுத்திய கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் அவர்கள் கல்வி புகட்டப்பட்டனர். இவ்வாறு, தங்கள் மத கடமைகளைப் பற்றிய அறிவுரையையும் திருமணத்தையும் குடும்ப உறவுகளையும் பாலுறவு ஒழுக்கத்தையும் கட்டுப்படுத்தும் நியமங்களையும் தங்கள் சக மனிதரிடமான கடமைகளையும் கல்வி உட்படுத்தியது. அத்தகைய கல்வி வெறுமனே மனப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் வளருவதற்கு உதவாமல் ஆவிக்குரியபிரகாரமாகவும் வளர உதவியது.—உபாகமம் 6:4-9, 20, 21; 11:18-21.
19. வாழ்வதற்கான சிறந்த ஒழுக்க மதிப்பீடுகளை காட்டி, ஆவிக்குரியபிரகாரமாக வளருவதற்கு உதவுகிற கல்வியை நாம் எங்கே கண்டடையலாம்?
19 இன்றைய காலத்தைப் பற்றியென்ன? நல்ல உலகப்பிரகாரமான கல்வி முக்கியமானதே. அது மனப்பிரகாரமாக வளருவதற்கு நமக்கு உதவுகிறது. ஆனால் வாழ்வதற்கான சிறந்த ஒழுக்க மதிப்பீடுகளை காட்டி, ஆவிக்குரியபிரகாரமாக வளருவதற்கு உதவுகிற கல்விக்காக நாம் எங்கே திரும்பலாம்? கிறிஸ்தவ சபைக்குள்ளாக, தேவராஜ்ய கல்வி திட்டம் நமக்கு கிடைக்கிறது, இது பூமியில் வேறு எங்கேயும் கிடைக்காது. பைபிள் மற்றும் பைபிள் சார்ந்த பிரசுரங்களின் தனிப்பட்ட படிப்பின் மூலமும் சபைக் கூட்டங்கள், அசெம்பிளிகள், மற்றும் மாநாடுகள் மூலம் கிடைக்கும் அறிவுரை மூலமும் இந்த விலையேறப்பெற்ற, தொடர்ந்து புகட்டப்படும் கல்வியை—தெய்வீக கல்வியை—இலவசமாக நாம் பெறலாம்! அது நமக்கு எதைப் போதிக்கிறது?
20. தெய்வீக கல்வி நமக்கு எதை போதிக்கிறது, அதனால் உண்டாகும் பலன் என்ன?
20 பைபிளை படிக்க ஆரம்பிக்கையில், ‘மூல உபதேசங்களாகிய’ அடிப்படை வேதப்பூர்வ போதனைகளை நாம் கற்றுக்கொள்கிறோம். (எபிரெயர் 6:1) தொடர்ந்து கற்கையில், நாம் ‘பலமான ஆகாரத்தை,’ அதாவது, ஆழமான சத்தியங்களை பெறுகிறோம். (எபிரெயர் 5:14) என்றாலும், அதற்கும் மேலாக, கடவுள் நாம் எப்படி வாழவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படி வாழ்வதற்கு போதிக்கும் கடவுளுடைய நியமங்களை கற்றுக்கொள்கிறோம். உதாரணமாக, ‘மாம்சத்தை அசுசிப்படுத்தும்’ பழக்கவழக்கங்களையும் செயல்களையும் தவிர்க்கவும் அதிகாரத்திற்கும் உடலுக்கும் பிறருடைய சொத்துக்கும் மரியாதை காட்டவும் கற்றுக்கொள்கிறோம். (2 கொரிந்தியர் 7:1; தீத்து 3:1, 2; எபிரெயர் 13:4) மேலும், நம்முடைய வேலையில் நேர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தையும் பாலுறவு ஒழுக்கத்தின் பேரிலான பைபிள் கட்டளைகளின்படி வாழ்வதன் மதிப்பையும் போற்ற ஆரம்பிக்கிறோம். (1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 4:28) நம்முடைய வாழ்க்கையில் இந்த நியமங்களை பொருத்துவதில் முன்னேற்றம் செய்கையில், ஆவிக்குரியபிரகாரமாக வளருகிறோம், கடவுளோடு நம்முடைய உறவும் ஆழமாகிறது. மேலுமாக, நம்முடைய தெய்வீக நடத்தை நாம் எங்கே வாழ்ந்தாலும் நம்மை நல்ல குடிமக்களாக்கும். மேலுமாக தெய்வீக கல்வியின் ஊற்றுமூலராகிய யெகோவா தேவனை துதிக்க மற்றவர்களையும் இது தூண்டுவிக்கக்கூடும்.—1 பேதுரு 2:12.
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நடைமுறை பயிற்சி
21. பைபிள் காலங்களில் என்ன நடைமுறையான பயிற்சியை பிள்ளைகள் பெற்றனர்?
21 ஒரு சமநிலையான கல்வியின் நான்காவது குறிக்கோளானது, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நடைமுறை பயிற்சியை ஒருவருக்கு அளிப்பதாகும். பைபிள் காலங்களில் பெற்றோர் அளித்த கல்வி, நடைமுறையான பயிற்சியை உட்படுத்தியது. பெண்களுக்கு வீட்டு வேலைகள் கற்றுத் தரப்பட்டன. பற்பல, வித்தியாசப்பட்ட வேலைகளாக இவை இருந்திருக்க வேண்டும் என்று நீதிமொழிகள் புத்தகத்தின் கடைசி அதிகாரம் காட்டுகிறது. இவ்வாறாக, நூல் நூற்றல், நெசவு வேலை செய்தல், சமைத்தல், பொதுவாக வீட்டை நிர்வகிப்பதை கவனித்துக்கொள்ளுதல் மற்றும் வீடு, மனை வாங்குவதன் விவகாரங்களைக் கையாளுதல் போன்ற வேலைகளைச் செய்ய பெண்கள் தகுதியுள்ளவர்கள் ஆயினர். பையன்களுக்கு அவர்களுடைய தந்தையின் வேலை—விவசாயமோ அல்லது ஏதோவொரு தொழிலோ அல்லது திறமையோ—கற்றுத் தரப்பட்டது. இயேசு, தத்தெடுத்த தந்தையாகிய யோசேப்பிடமிருந்து தச்சுவேலையைக் கற்றுக்கொண்டார்; இவ்வாறு, அவர் “தச்சனுடைய குமாரன்” என்று மாத்திரம் அழைக்கப்படாமல், “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார்.—மத்தேயு 13:55; மாற்கு 6:3.
22, 23. (அ) கல்வி பிள்ளைகளை எதற்காக தயார் செய்ய வேண்டும்? (ஆ) அவசியமாக தோன்றினால், கூடுதலான கல்வியைத் தெரிந்துகொள்வதில் நம்முடைய உள்நோக்கம் என்னவாயிருக்கவேண்டும்?
22 இன்றும்கூட, குடும்பத்தின் தேவைகளை ஒரு காலத்தில் கவனித்துக்கொள்வதற்கான தயாரிப்பை, நன்கு சமநிலைப்படுத்தப்பட்ட கல்வி உட்படுத்துகிறது. தங்களுடைய குடும்பத்தாரை பராமரிப்பது ஒரு பரிசுத்த கடமை என்பதை 1 தீமோத்தேயு 5:8-ல் காணப்படும் பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவர் எழுதினார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” ஆகவே, கல்வி, பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளக்கூடிய பொறுப்புகளுக்கு அவர்களை தயார்செய்ய வேண்டும். மேலுமாக சமுதாயத்தின் கடினமாக உழைக்கக்கூடிய அங்கத்தினர்களாக ஆவதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தவேண்டும்.
23 நாம் எவ்வளவு உலகப்பிரகாரமான கல்வியை நாடவேண்டும்? இது தேசத்திற்கு தேசம் மாறக்கூடும். ஆனால் சட்டம் தேவைப்படுத்தும் குறைந்தபட்ச கல்வியோடுகூட, வேலைவாய்ப்பு சந்தையானது பயிற்சியை தேவைப்படுத்தினால், துணைக் கல்வியை அல்லது பயிற்சியைக் குறித்து ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக தங்களுடைய பிள்ளைகளை வழிநடத்தி, இப்படிப்பட்ட கூடுதலான படிப்பினுடைய நிகழக்கூடிய நன்மைகளையும் குறைகளையும் மதிப்பிடுவது பெற்றோர்களுக்குரியது. எனினும், அவசியமாகத் தோன்றுவதாக தெரியும்போது கூடுதலான கல்வியை தேர்ந்தெடுப்பதில் ஒருவருடைய உள்நோக்கம் என்னவாக இருக்கவேண்டும்? நிச்சயமாகவே ஐசுவரியங்கள், சுயமகிமை, அல்லது தற்புகழ்ச்சி ஆகியவை அல்ல. (நீதிமொழிகள் 15:25; 1 தீமோத்தேயு 6:17) இயேசுவினுடைய முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தை நினைவுபடுத்திப்பாருங்கள்—கல்வி யெகோவாவிற்கு துதி கொண்டுவர பயன்படுத்தப்பட வேண்டும். நாம் கூடுதலான கல்வியை தேர்ந்தெடுத்தால், கிறிஸ்தவ ஊழியத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முழுமையாக யெகோவாவை சேவிப்பதற்காக தேவையான அளவு நம்மையே பொருளாதாரபூர்வமாக ஆதரிப்பதே நம்முடைய நோக்கமாய் இருக்கவேண்டும்.—கொலோசெயர் 3:23, 24.
24. இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்ட எந்த பாடத்தை நாம் மறவாதிருக்கவேண்டும்?
24 ஆகவே, நாம் சமநிலையான உலகப்பிரகாரமான கல்வியைப் பெறும் நம் முயற்சிகளில் ஊக்கமாயிருப்போமாக. யெகோவாவின் அமைப்புக்குள் அளிக்கப்படுகிற தொடர்ச்சியான தெய்வீக கல்வி திட்டத்தை முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்வோமாக. மேலும், எவரையும்விட இந்தப் பூமியில் நடந்த மிகச் சிறந்த கல்விபெற்ற மனிதனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொண்ட மதிப்புவாய்ந்த பாடத்தை ஒருகாலும் மறவாதிருப்போமாக—கல்வியை நம்மை மகிமைப்படுத்துவதற்காக அல்ல, எல்லோரையும்விட மிகப்பெரிய கல்விபுகட்டுபவராகிய யெகோவா தேவனுக்கு துதி கொண்டுவருவதற்கு பயன்படுத்த வேண்டும்!
உங்களுடைய பதில் என்ன?
◻ இயேசு எவ்வாறு தம்முடைய கல்வியை பயன்படுத்தினார்?
◻ நன்றாக வாசிக்க கற்றுக்கொள்வது ஏன் அவ்வளவு முக்கியம்?
◻ எழுதுவதற்கான திறத்தை எவ்வாறு யெகோவாவிற்கு துதியைக் கொண்டுவர நாம் பயன்படுத்தலாம்?
◻ தெய்வீக கல்வி எவ்வாறு மனப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் வளர நமக்கு உதவும்?
◻ ஒரு சமநிலையான கல்வி என்ன நடைமுறையான பயிற்சியை உட்படுத்தவேண்டும்?
[பக்கம் 13-ன் பெட்டி]
கல்விபுகட்டுபவர்களுக்கு நடைமுறையான உதவி
1995/96-ன்போது “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகளில் உவாட்ச் டவர் சொஸைட்டி யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற ஒரு புதிய ஆங்கில சிற்றேட்டை வெளியிட்டது. இந்த 32-பக்க, முழு வண்ண சிற்றேடு கல்விபுகட்டுபவர்களுக்காக விசேஷமாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதுவரையாக இது 58 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கல்விபுகட்டுபவர்களுக்கு ஏன் ஒரு சிற்றேடு? யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளாயிருக்கக்கூடிய மாணாக்கர்களின் நம்பிக்கைகளை இன்னும் நன்றாக புரிந்துகொள்வதற்காகும். சிற்றேடு எதைக் கொண்டிருக்கிறது? துணைக் கல்வி, பிறந்த நாட்கள், கிறிஸ்மஸ், மற்றும் கொடி வணக்கம் போன்ற இப்படிப்பட்ட விவாதங்களின் பேரிலுள்ள நம்முடைய கருத்துக்களை அது தெளிவான, சாதகமான தொனியில் விளக்குகிறது. பிள்ளைகள் தங்களுடைய பள்ளிப்படிப்பை முழுமையாக அனுகூலப்படுத்திக்கொள்ள நாம் விரும்புகிறோம் என்பதையும் நம்முடைய பிள்ளைகளுடைய கல்வியில் ஒரு ஊக்கமான அக்கறை எடுத்து கல்விபுகட்டுபவர்களோடு ஒத்துழைக்க உண்மையாகவே விரும்புகிறோம் என்பதையும் இந்த சிற்றேடு உறுதிசெய்கிறது.
கல்வி சிற்றேடு எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? இது கல்விபுகட்டுபவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருப்பதால், ஆசிரியர்கள், பள்ளித்தலைவர்கள், மற்றும் மற்ற பள்ளி அதிகாரிகளோடு இதைப் பகிர்ந்துகொள்வோமாக. நம்முடைய கருத்துக்களையும், நம்பிக்கைகளையும், சில சமயங்களில் வித்தியாசமாயிருப்பதற்கான உரிமையை ஏன் கோருகிறோம் என்பதையும் இப்படிப்பட்ட எல்லா கற்பிப்பவர்களும் புரிந்துகொள்ள இந்தப் புதிய சிற்றேடு உதவிசெய்யட்டும். தங்கள் பிள்ளைகளுடைய கல்விபுகட்டுபவர்களோடு தனிப்பட்ட கலந்தாலோசிப்பு செய்ய ஒரு அடிப்படையாக இந்த சிற்றேட்டைப் பயன்படுத்த பெற்றோர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
[பக்கம் 10-ன் படம்]
பண்டைய இஸ்ரவேலில் கல்வி உயர்வாக மதிக்கப்பட்டது