உங்கள் திருமண உறுதிமொழிக்கு இணங்க வாழுதல்!
திருமண நாள் ஒரு மகிழ்ச்சியான நாள். இது மிகவும் பொறுப்புணர்ச்சி வாய்ந்த வைபவமும் ஆகும். மணமகளும் மணமகனும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி, அவர்களின் எஞ்சிய வாழ்நாளை பாதிக்கும். திருமணத்திற்கு விருந்தினர்களாக வந்த அனைவரும் இந்த உறுதிமொழிக்குச் சாட்சிகள், ஆனால் யெகோவா தேவன்தாம் முதன்மையான சாட்சி.
குறிப்பிட்ட செயல்முறைகளையோ விசேஷ வகையான திருமண வைபவத்தையோ பைபிள் கோருவதில்லை. ஆயினும், அதன் தெய்வீக துவக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், மத வைபவம் நடக்கையில் திருமண உறுதிமொழிகளை ஏற்று திருமணம் வழக்கமாக நடத்தப்படுகிறது. பல வருடங்களாகவே யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் திருமண உறுதிமொழியை ஏற்று வந்திருக்கிறார்கள்: “——ஆகிய நான் ——ஆகிய உங்களை என்னுடைய விவாகம் செய்யப்பட்ட (மனைவி/கணவன்)-ஆக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவ (மனைவிகளுக்காக/கணவர்களுக்காக), பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தெய்வீக சட்டத்தின்படி, நாம் இருவரும் தேவனுடைய விவாக ஏற்பாட்டுக்கு இணங்க, பூமியில் வாழும் காலமெல்லாம் நேசித்தும், அருமையானவராக ஆதரித்தும் (மணமகள்: ஆழ்ந்த மரியாதைக்காண்பிக்கவும்) வர ஒப்புக் கொள்கிறேன்.”a
ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய காரியம்
ஒருவேளை நீங்கள் திருமணம் செய்ய நினைத்துக்கொண்டிருந்தால் திருமண நாளுக்கு முன்பே, இந்த உறுதிமொழியின் ஆழத்தையும் அர்த்தத்தையும் குறித்து சிந்திப்பது மிகவும் மதிப்புவாய்ந்ததாக இருக்கும். சாலொமோன் கூறினார்: “தேவசமுகத்தில் [“உண்மை கடவுளுக்கு முன்,” NW] நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு.” (பிரசங்கி 5:2) ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே திருமணமானவராக இருந்தால்? அப்படியானால், யெகோவாவின் முன்னிலையில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் முக்கியத்துவத்தைத் தியானிப்பதன் மூலம் நன்மையடையலாம். நீங்கள் அதற்கு இணங்க வாழ்கிறீர்களா? கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளைக் கருத்தூன்றி ஏற்கிறார்கள். சாலொமோன் தொடர்ந்து கூறினார்: “நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே.”—பிரசங்கி 5:4-6.
இந்தத் திருமண உறுதிமொழியை வார்த்தைக்கு வார்த்தை கலந்தாராய்வதனால் இந்த உறுதிமொழியைப்பற்றிய உங்களுடைய புரிந்துகொள்ளுதல் மெருகேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.
“நான் ——உங்களை . . . ஏற்றுக்கொண்டு”: இவை உறுதிமொழியின் ஆரம்ப வார்த்தைகள். திருமணம் புரியவேண்டும் என்ற உங்களுடைய தீர்மானத்திற்கு நீங்களே தனிப்பட்ட பொறுப்பை ஏற்கிறீர்கள் என்பதை அவை கோடிட்டுக்காட்டுகின்றன.
கிறிஸ்தவ ஏற்பாட்டின் கீழ், திருமணம் புரிய வேதப்பூர்வமான கட்டாயம் ஏதுமில்லை. இயேசு கிறிஸ்துதாமே திருமணமின்றி இருந்தார், ‘ஏற்றுக்கொள்ள வல்லவர்களுக்கு’ திருமணமின்றி இருத்தலை சிபாரிசு செய்தார். (மத்தேயு 19:10-12) மறுபட்சத்தில் இயேசுவின் அப்போஸ்தலரில் பலர் திருமணமான ஆண்கள். (லூக்கா 4:38; 1 கொரிந்தியர் 9:5) திருமணம் புரிவதற்கான தீர்மானம் தனிப்பட்டது என்பது தெளிவாக உள்ளது. திருமணம் புரியவேண்டும் என்று மற்றொருவரை கட்டாயப்படுத்த வேதப்பூர்வமான அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.
இவ்வாறாக, திருமணம் புரிய தெரிவுசெய்ததற்கு நீங்களே பொறுப்பாளி. திருமணம் புரிய இருப்பவரை ஒருவேளை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். “நான் உங்களை . . . ஏற்றுக்கொண்டு,” என்று சொல்லி நீங்கள் உறுதிமொழியை ஏற்கையில், அந்த நபரை அவர் அல்லது அவளின் நற்குணங்களோடு—ஆனால் அவர் அல்லது அவளின் குறைபாடுகளோடுங்கூட—நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லது உடன்படுகிறீர்கள்.
பிற்பட்டு, உங்கள் துணைவரின் ஆளுமையில் நீங்கள் சந்தேகித்திராத அம்சங்களை ஒருவேளை கண்டடையலாம். எப்பொழுதாவது ஏமாற்றங்களும் நிகழலாம். பைபிள் சொல்கிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவனுடைய மகிமையில் குறைவுபடுகிறார்கள்.” (ரோமர் 3:23, NW) ஆகவே, உங்கள் துணைவருடன் ஒத்துப்போக நீங்கள் ஒருவேளை திருத்தங்களைச் செய்ய அவசியம் இருக்கலாம். இது ஒருவேளை கடினமாக இருக்கலாம், சிலநேரங்களில் நீங்கள் பின்வாங்கவும்கூட நினைக்கலாம். ஆனால், திருமண உறுதிமொழி யெகோவாவின் முன்னிலையில் செய்யப்பட்டது என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் வெற்றிபெற அவரால் உதவ முடியும்.
“என்னுடைய விவாகம் செய்யப்பட்ட (மனைவி/கணவன்)-ஆக”: ஆதாமுக்கு ஏவாளை மணமுடித்துக் கொடுத்த அந்த முதல் திருமணத்தின்போது, “அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்,” என்று யெகோவா தேவன் கூறினார். (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:4-6) இவ்வாறாக, திருமண இணைப்பானது, இரண்டு நபர்களுக்கிடையே நிலவும் மிக நெருக்கமான உறவாகும். திருமணம் உங்களை ஒரு புதிய பந்தத்திற்குள் சேர்க்கிறது. நீங்கள் யாரோ ஒருவரை உங்களுடைய “விவாகம் செய்யப்பட்ட மனைவியாக” அல்லது “விவாகம் செய்யப்பட்ட கணவனாக” ஏற்றுக்கொள்கிறீர்கள். இது மற்ற உறவைப்போன்றது அல்ல. மற்ற உறவுகளில் சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள், இந்தத் திருமண ஏற்பாட்டிற்குள் மிக ஆழமான புண்ணை ஏற்படுத்தலாம்.
உதாரணத்திற்கு, எபேசியர் 4:26-ல் காணப்படுகின்ற வேதப்பூர்வமான ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு பைபிள் சொல்கிறது: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” ஒருவேளை உங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் உங்களுக்கு இருந்த பிரச்சினைகளை எவ்வளவு விரைவாகத் தீர்த்திருக்கவேண்டுமோ அவ்வளவு விரைவாக எப்போதும் தீர்த்திருக்கமாட்டீர்கள். ஆனால், உங்கள் துணைவர், எந்த ஒரு உறவினரையோ நண்பரையோ காட்டிலும் மிக நெருங்கி இருப்பவர். உங்கள் துணைவருடன் காரியங்களை விரைவாகத் தீர்க்க தவறுவது, உங்கள் இடையே இருக்கும் விசேஷமான பந்தத்தை ஆபத்திற்குள்ளாக்கக்கூடும்.
உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையே இருக்கும் கருத்துவேறுபாடுகள், எந்நாளும் வெறுப்புக்கு அல்லது விரக்திக்கு ஊற்றுமூலமாக உருப்பெறும் அளவுக்கு விட்டுவிடுகிறீர்களா? தப்பெண்ணங்களும் சங்கடப்படுத்தும் சூழ்நிலைகளும் நாட்கணக்கில் தொடர்ந்து இருக்கின்றனவா? உங்களுடைய உறுதிமொழிக்கு இணங்க வாழ்வதற்காக, கஷ்டங்கள் வரும்போது உங்கள் துணைவருடன் சமாதானம் செய்துகொள்ளாமல் ஒருநாளைக்கூட கடத்தவேண்டாம். அது மன்னிப்பதையும் மறப்பதையும், கூடவே உங்களுடைய சொந்த தவறுதல்களையும் பிழைகளையும் ஒத்துக்கொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது.—சங்கீதம் 51:5; லூக்கா 17:3, 4.
“பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தெய்வீக சட்டத்தின்படி”: தெரிவு செய்யும் மற்றும் செயல்படும் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். திருமண வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் சட்டங்களின் விலாவாரியான பட்டியலைக் கொடுத்து நம்மை அவர் பாரமாக்கவில்லை. இருப்பினும், நம்முடைய சொந்த நன்மைக்காகப் பின்பற்றத்தக்க சில வழிமுறைகளை அவர் அமைத்துள்ளார்.
இன்று திருமணத்தின் பேரில் அச்சிடப்பட்ட பல்வேறு சாதனங்கள் திரளாக உள்ளன, பல ஆட்கள் தங்களுடைய சொந்த தத்துவங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜாக்கிரதை! திருமணம் என்ற பொருளில், புழக்கத்தில் விடப்படும் செய்தி, பைபிளுக்கு முரணாக உள்ளது.
ஒரு தம்பதிக்கும் மற்றொரு தம்பதிக்கும் சூழ்நிலைகள் வித்தியாசப்படுகின்றன என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள். திருமணமான தம்பதிகள் ஒருவிதத்தில், வெண்பனித்திவலையைப் போல் இருக்கிறார்கள்; தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அவை ஒன்றுபோல் தோன்றும், ஆனால், மெய்மையில், ஒவ்வொன்றும் பிரத்தியேகமானவை, மற்றவற்றிலிருந்து வித்தியாசமானவை. உங்களுடைய ஆளுமை உங்கள் துணைவரின் ஆளுமையுடன் கலந்திருக்கும் நிலையை உலகத்தில் திருமணமான வேறொரு தம்பதியால் நகல் எடுக்கப்படுவதில்லை. ஆகவே, மற்றவர்களின் தனிப்பட்ட நோக்குநிலைகளை ஏற்றுக்கொள்ள அவசரப்படாதீர்கள். அனைத்து திருமணத்திற்கும் பொருந்தக்கூடிய மனிதனால் செய்யப்பட்ட சுருக்க விதிமுறை (formula) ஏதும் கிடையாதே!
அதற்கு நேரெதிராக, பைபிளின் கட்டளைகள் அனைத்தும் உண்மையானவை மற்றும் பொருந்தக்கூடியவை. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17; சங்கீதம் 119:151) நீங்கள் பைபிளை வாசித்து, அதன் போதனைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக ஏற்பீர்களானால், உங்கள் திருமண உறுதிமொழிக்கு இணங்க வாழ உங்களால் முடியும்.—சங்கீதம் 119:105.
“தேவனுடைய விவாக ஏற்பாட்டுக்கு இணங்க”: திருமணம் யெகோவா தேவனிடமிருந்து கிடைத்த ஒரு பரிசு, அவரே இந்தத் திருமண ஏற்பாட்டை அமைத்தவர். (நீதிமொழிகள் 19:14) இந்த ஏற்பாட்டை பின்பற்றத் தவறுவது, உங்கள் திருமண மகிழ்ச்சியை அச்சுறுத்துவதோடு சிருஷ்டிகருடன் உங்களுக்கிருக்கும் உறவையும் அச்சுறுத்தும். மறுபட்சத்தில், கணவனும் மனைவியும் யெகோவாவுடன் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு, அவருடைய ஏற்பாட்டிற்குக் கீழ்ப்படிவதன் மூலம் வெளிக்காட்டுகையில், இருவருக்குள்ளும், மற்றவர்களுடனும் சமாதானமான உறவுகளைக் கொண்டிருப்பார்கள்.—நீதிமொழிகள் 16:7.
“நாம் இருவரும் . . . பூமியில் வாழும் காலமெல்லாம்”: இது நீண்டகாலத்திற்கு ஒன்றாகயிருத்தலை சுட்டிக்காட்டுகிறது. “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்.” (ஆதியாகமம் 2:24) நீங்கள் இணைந்திருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். கடவுளை இணைந்தே சேவியுங்கள். அவருடைய வார்த்தையை இணைந்தே படியுங்கள். இணைந்தே நடப்பதற்கும், இணைந்தே உட்காருவதற்கும், இணைந்தே சாப்பிடுவதற்கும் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையை இணைந்தே அனுபவியுங்கள்!
ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கென்றே, ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குவதற்காக சில தம்பதியர்கள் முயற்சி எடுக்கிறார்கள். திருமணமாகி பல வருடங்களுக்குப் பின்னரும் இந்த இணைந்திருத்தல், திருமண மகிழ்ச்சிக்கு மிகவும் அவசியம்.
“நேசித்தும்”: கணவராகப்போகிறவர் தன்னுடைய மணமகளை “நேசித்தும், அருமையானவராக ஆதரித்தும் வர” உறுதிமொழி எடுக்கிறார். இந்த நேசம் ஒருவேளை அவர்களை ஒன்றாக இணைத்த காதலையும் உட்படுத்துகிறது. ஆனால் காதல் மாத்திரம் போதாது. அவர் அல்லது அவள், துணைவருக்காக ஒரு கிறிஸ்தவர் உறுதிமொழியாக மொழியும் நேசம் ஆழமானது, முழுமையானது.
எபேசியர் 5:25 (NW) சொல்கிறது: ‘புருஷர்களே, கிறிஸ்து சபையினிடம் அன்புகூர்ந்ததுபோல உங்கள் மனைவிகளிடத்தில் அன்புகூருங்கள்.’ நிச்சயமாகவே, இயேசு சபைக்காகக் கொண்டிருந்த அன்பு, இருபாலரிடையே நிலவும் காதலின் வகையைச் சார்ந்தது அல்ல. இந்த வசனங்களில் உபயோகிக்கப்பட்டுள்ள “அன்புகூரு” “அன்புகூர்ந்தது” போன்ற பதங்கள் அகாப்பே என்னும் பதத்திலிருந்து வருகிறது, அது நியமத்தால் வழிநடத்தப்படும் அன்பைக் குறிக்கிறது. இங்கே, கணவர்கள் தங்கள் மனைவிகளின் மேல் மாறாத, ஸ்திரமான, நிலைத்திருக்கும் அன்பை பொழியவேண்டும் என்று பைபிள் கட்டளையிடுகிறது.
இது வெறுமனே, “நீ நேசிப்பதால் நான் நேசிக்கிறேன்” போன்ற உணர்ச்சி வகையும் அல்ல. ஒரு கணவன் தன் மனைவியின் நலனை தன்னுடைய நலனுக்கு முன் தேடுகிறான், அதேவிதமாக மனைவியும் அவளுடைய கணவனை நேசிக்கிறாள். (பிலிப்பியர் 2:4) உங்கள் துணைவரின்பால் நீங்கள் வளர்க்கும் ஆழமான அன்பு, உங்கள் திருமண உறுதிமொழிக்கு இணங்க வாழ உதவும்.
“அருமையானவராக ஆதரித்தும்”: ஒரு அகராதியின் பிரகாரம் “ஆதரிக்க” என்பதன் அர்த்தமானது ‘அருமையாகப் பற்றிக்கொள்ளுதல், பாசத்தை உணருதல் அல்லது காட்டுதல்.’ உங்களுடைய அன்பை வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படுத்த வேண்டும்! விசேஷமாக, மனைவிக்குத் தன் கணவனுடைய அன்பின் வெளிக்காட்டுதலை இடைவிடாமல் பெற்றுக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. அவளுடைய கணவன் ஒருவேளை பொருள்சம்பந்தமான தேவைகளை நன்கு பராமரிப்பவராக இருக்கலாம், ஆனால் இது போதுமானதல்ல. போதுமான உணவு, வசதியான வீடுகள் உடைய மனைவிமார்கள் இருக்கிறார்கள். ஆனால், தங்கள் திருமண துணைவர்களால் அசட்டைசெய்யப்படுவதால் அல்லது புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் உச்சளவில் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள்.
மறுபட்சத்தில், தான் நேசிக்கப்படுவதாக, ஆதரிக்கப்படுவதாக அறிந்துள்ள மனைவிக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. நிச்சயமாகவே இது கணவனுக்கும் பொருந்தும். களங்கமற்ற நேசமான வார்த்தைகளால் உண்மை அன்பு பெருமளவில் மெருகேற்றப்படும். சாலொமோனின் உன்னதப்பாட்டில் இடையன் காதலன் வியந்துரைக்கிறான்: “உன் நேசம் [“நேசமான வார்த்தைகள்,” NW] எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!”—உன்னதப்பாட்டு 4:10.
“ஆழ்ந்த மரியாதை காண்பிக்கவும்”: பெண்களைத் துர்ப்பிரயோகம் செய்து, இழிவாக நடத்திய ஆண்கள் பல நூற்றாண்டுகள்தோறும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலக சுகாதாரம் (ஆங்கிலம்) பத்திரிகையின் பிரகாரம் இன்றும்கூட, “ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமுதாய, பொருளாதார வர்க்கத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்கிறது. பல கலாச்சாரங்களில், மனைவியை அடிப்பது ஆண்மகனின் உரிமையாகக் கருதப்படுகிறது.” ஒருவேளை பல ஆண்கள் அத்தகைய நடத்தைக்குக் குற்றமற்றவர்களாக இருக்கலாம். இருப்பினும், பல ஆண்கள் பெண்களைக் கவலையுறச்செய்யும் வழக்குகளில் உண்மையான அக்கறையைக் காட்டத் தவறுவதாகத் தெரிகிறது. அதன் விளைவாக பல பெண்கள், ஆண்கள் பேரில் எதிர்மறையான மனப்பான்மையை வளர்த்திருக்கிறார்கள். “நான் என் கணவரை நேசிக்கிறேன், ஆனால் அவருக்கு மரியாதை காண்பிக்க என்னால் முடியாது!” என்று சில மனைவிமார்கள் சொல்வது கேட்கப்பட்டது.
ஆயினும், தன் கணவனுக்கு—சில சமயங்களில் அவளுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறியபோதிலும்கூட—மரியாதைகாட்ட கடும் முயற்சி செய்யும் பெண்ணை யெகோவா தேவன் உயர்வாக மதிக்கிறார். கடவுளால் கொடுக்கப்பட்ட நியமிப்பை அல்லது ஸ்தானத்தை அவர் வகிக்கிறார் என்பதை அவள் ஒப்புக்கொள்கிறாள். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:23) இவ்வாறாக, தன் கணவனுக்குக் காட்டும் ஆழ்ந்த மரியாதை யெகோவாவுக்கான அவளுடைய வணக்கத்தின் மற்றும் கீழ்ப்படிதலின் பாகமாக இருக்கிறது. பரிசுத்த ஸ்திரீகளின் கீழ்ப்படிதலை கடவுள் கவனியாமல் விட்டுவிடவில்லை.—எபேசியர் 5:33; 1 பேதுரு 3:1-6; எபிரெயர் 6:10-ஐ ஒப்பிடுக.
மரியாதையானது திருமணத்தில் பரஸ்பரமாக இருக்கவேண்டும், அதனை வெறுமனே எதிர்பார்ப்பதற்கோ அதட்டி கேட்பதற்கோ மாறாக சம்பாதிக்க வேண்டும். உதாரணமாக, திருமண ஏற்பாட்டில் குத்தலான அல்லது புண்படுத்தும் பேச்சுக்கு இடமே கிடையாது. உங்களுடைய கணவனைப்பற்றியோ மனைவியைப்பற்றியோ சிறுமைப்படுத்தும் கருத்துக்களைச் சொல்வது அன்புகூருவதாக அல்லது மரியாதைக்காட்டுவதாக இருக்காது. உங்கள் துணைவரின் குறைகளை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்துவதினாலோ அவற்றை பலரறிய பேசுவதினாலோ ஒரு நன்மையும் விளையாது. வேடிக்கையாகப் பேசுவதிலும்கூட ஒருவர் பெருமளவில் மரியாதைக் குறைவை இவ்விஷயத்தில் காட்டக்கூடும். எபேசியர் 4:29, 32-ல் உள்ள வார்த்தைகள் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் பொருந்தும். அங்கே பைபிள் சொல்கிறது: ‘கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே . . . பேசுங்கள். . . . ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருங்கள்.’
உங்களுடைய திருமண உறுதிமொழிக்கு யெகோவாவே முதன்மையான சாட்சி என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். இந்த உறுதிமொழிக்கு இணங்க தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருங்கள், உங்களுடைய திருமணம் யெகோவா தேவனுக்குத் துதியையும் மகிமையையும் கொண்டுவரும் ஊற்றுமூலமாக இருக்கும்!
[அடிக்குறிப்பு]
a உள்ளூர் சட்டங்களுக்கு உடன்படுவதற்காக இந்த உறுதிமொழியின் சற்று திருத்தப்பட்ட பதிப்பை உபயோகிக்கவேண்டிய தேவை சில இடங்களில் இருக்கக்கூடும். (மத்தேயு 22:21) ஆயினும், பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவ தம்பதி மேற்கூறிய உறுதிமொழியை ஏற்கிறார்கள்.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு/படம்]
திருமணமான தம்பதிகள் ஒருவிதத்தில், வெண்பனித்திவலையைப் போல் இருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அவை ஒன்றுபோல் தோன்றும், ஆனால், மெய்மையில், ஒவ்வொன்றும் பிரத்தியேகமானவை, மற்றவற்றிலிருந்து வித்தியாசமானவை
[படத்திற்கான நன்றி]
Snow Crystals/Dover