பரிசின் மீது கண்களையும் இதயத்தையும் ஊன்றவைத்தல்
ஈடித் மைக்கல் சொன்னபடி
ஆரம்ப 1930-களில், நாங்கள் அ.ஐ.மா., மிசௌரி, செயின்ட் லூயிக்கு அருகே வசித்துக்கொண்டிருந்தோம், அந்தச் சமயம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்களை வந்து சந்தித்தார். அப்போதுதான் துணி உலர்த்தும் கொடி அறுந்து போனது, என் அம்மாவின் பளிச்சிடும் வெண்ணிற ஆடைகள் சேற்றுக்குள் விழுந்தன. அந்தச் சாட்சி போய்விடுவார் என்பதற்காக அளிக்கப்பட்ட புத்தகங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அப்புத்தகங்களை ஷெல்ஃபில் வைத்துவிட்டு பின்னர் அவற்றை மறந்துபோனார்கள்.
அவை பொருளாதார மந்தநிலை நிலவிய ஆண்டுகளாக இருந்தன, என் அப்பாவுக்கு வேலை இல்லை. வாசிப்பதற்கு வீட்டில் ஏதாவது இருக்கிறதா என்று அவர் ஒருநாள் கேட்டார். அம்மா அவரிடம் அப்புத்தகங்களைப் பற்றி சொன்னார்கள். அவர் அவற்றை வாசிக்க ஆரம்பித்தார், அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்துக்குள், “இதுதான் அம்மா சத்தியம்!” என்று ஆச்சரியத்தோடு கூறினார்.
“ஓ, அது மற்ற எல்லா மதங்களைப் போலவே பணம் கேட்கும் ஒரு மதம்,” என்று அம்மா பதிலளித்தார்கள். என்றபோதிலும், தன்னோடு உட்கார்ந்து வேதவசனங்களை எடுத்துப் பார்க்கும்படி அம்மாவை அப்பா உற்சாகப்படுத்தினார். அவர்கள் அவ்வாறு எடுத்துப் பார்த்தபோது அவர்களும்கூட அதை நம்பினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் சாட்சிகளைத் தேட ஆரம்பித்தார்கள், மத்திப செயின்ட் லூயிக்கு அருகே நடனங்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும்கூட பயன்படுத்தப்பட்ட ஒரு மன்றத்தை அவர்கள் வாடகைக்கு எடுத்து அதில் ஒன்றுகூடினதைக் கண்டுபிடித்தனர்.
அப்பாவும் அம்மாவும் என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள்—எனக்கு அப்போது வயது சுமார் மூன்று—நாங்கள் அந்த மன்றத்தைக் கண்டுபிடித்தோம், ஆனால் அங்கே ஒரு நடன நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கூட்டங்கள் நடத்தப்படும் நேரத்தை அப்பா விசாரித்தார், பின்னர் நாங்கள் கூட்டங்கள் நடந்த சமயம் திரும்பி வந்தோம். நாங்கள் வசித்துவந்த இடத்துக்கு அருகே நடைபெற்றுக்கொண்டிருந்த வாராந்தர பைபிள் படிப்புக்கும்கூட நாங்கள் ஆஜராக ஆரம்பித்தோம். எங்களை முதலில் வந்து சந்தித்த பெண்ணின் வீட்டில் அது நடத்தப்பட்டது. “நீங்கள் ஏன் உங்கள் மகன்களையும் அழைத்து வரக்கூடாது?” என்று அவர்கள் கேட்டார்கள். மகன்களுக்கு அணிந்துகொள்ள ஷூக்கள் இல்லை என்று சொல்வதற்கு அம்மாவுக்கு வெட்கமாயிருந்தது. கடைசியில் அவர்கள் அதை விளக்கிச் சொன்னபோது, சாட்சிகள் ஷூக்களைக் கொடுத்தார்கள், என்னுடைய சகோதரர்கள் எங்களோடு சேர்ந்து கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தார்கள்.
எங்கள் வீட்டுக்கு அருகாமையில் பிரசங்கிப்பதற்கு என் அம்மாவுக்கு பிராந்தியம் கொடுக்கப்பட்டது, அவர்கள் முதலில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். நானும் அவர்களோடுகூட சென்று, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வேன். அவர்கள் கார் ஓட்டக் கற்றுக்கொள்வதற்கு முன்பு, செயின்ட் லூயியில் நடந்த கூட்டங்களுக்கு ஆஜராக பஸ்ஸைப் பிடிப்பதற்கு நாங்கள் சுமார் ஒரு மைல் தூரம் நடப்போம். பனிக்கட்டியும் வெண்பனியும் இருந்தாலும் நாங்கள் கூட்டங்களைத் தவறவிட மாட்டோம்.
1934-ல் அம்மாவும் அப்பாவும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். நானும் முழுக்காட்டுதல் பெற விரும்பினேன், அதைக் குறித்து வயதுசென்ற சாட்சி என்னிடம் பேசும்வரை நான் அம்மாவை தொடர்ந்து விடாப்பிடியாக கேட்டுக்கொண்டே இருந்தேன். நான் புரிந்துகொள்ளும்விதத்தில் அவர் அநேக கேள்விகளைக் கேட்டார். நான் முழுக்காட்டுதல் பெறுவதை அவர்கள் தடை செய்யக்கூடாது என்றும் அது என் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் அவர் பின்னர் என் பெற்றோரிடம் கூறினார். ஆகையால் அதற்கு அடுத்து வந்த கோடைகாலத்தில் நான் ஆறு வயதாயிருக்கையிலேயே முழுக்காட்டப்பட்டேன்.
வீடும் மகிழ்ச்சியும் என்ற சிறு புத்தகத்தை நான் மிகவும் விரும்பினேன், அதை நான் எல்லா சமயங்களிலும் என்னோடு வைத்திருந்தேன், என் தலையணைக்குக்கீழ்கூட அதை வைத்து உறங்கியிருக்கிறேன். என் அம்மா அதை வாசித்துக் காண்பித்து எனக்கு மனப்பாடமாகும்வரை நான் திரும்பத்திரும்ப கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தேன். பரதீஸில் ஒரு சிறுமி சிங்கத்தோடு இருப்பது போல் அதன் பின்பக்கத்தில் ஒரு படம் இருந்தது. நான்தான் அந்த சிறுமி என்று சொல்லிக்கொண்டேன். கடவுளுடைய புதிய உலகில் ஜீவன் என்ற பரிசின் மீது என் கண்களை வைப்பதற்கு அந்தப் படம் எனக்கு உதவியிருக்கிறது.
நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்தேன், நடுங்கிக்கொண்டிருந்தாலும், சபை காவற்கோபுர படிப்பில் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளித்தேன்.
விசனகரமாக, சாட்சியாக இருந்ததால் தன் வேலையை இழந்துவிடுவோமோ என்று அப்பா பயந்ததால் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்வதை நிறுத்திவிட்டார். என் சகோதரர்களும் அவ்வாறே செய்தனர்.
முழுநேர ஊழியம்
எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் பயனியர்கள் அல்லது முழுநேர ஊழியர்கள் தங்கள் டிரெய்லரை நிறுத்தி வைக்கும்படி என் அம்மா அனுமதித்தார்கள், பள்ளி முடிந்த பிறகு நான் அவர்களோடு ஊழியத்தில் சேர்ந்துகொண்டேன். விரைவில் நான் பயனியர் செய்ய விரும்பினேன், ஆனால் உலகப்பிரகாரமான கல்வியை நான் கூடுதலாக கற்க வேண்டும் என்று அப்பா நினைத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். நான் பயனியர் செய்வதற்கு அனுமதிக்கும்படி அவரை அம்மா கடைசியில் ஏற்கும்படி செய்தார்கள். ஆகையால் ஜூன் 1943-ல், நான் 14 வயதாயிருக்கையில் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். வீட்டு செலவுகளுக்கு உதவுவதற்காக, நான் பகுதி-நேர உலகப்பிரகாரமான வேலையைச் செய்தேன், சில சமயங்களில் முழுநேரமும் செய்தேன். இருப்பினும், பிரசங்க வேலையில் மாதாந்திர இலக்காகிய 150 மணிநேரங்களை செய்துமுடித்தேன்.
காலப்போக்கில் நான் டாரத்தி க்ரேடன் என்ற பயனியர் கூட்டாளியை கண்டுபிடித்தேன், அவள் ஜனவரி 1943-ல் 17 வயதாயிருக்கையில் பயனியர் செய்ய ஆரம்பித்திருந்தாள். அவள் கடவுள் பற்றுள்ள கத்தோலிக்க பெண்ணாக இருந்தாள், ஆனால் ஆறு மாத பைபிள் படிப்புக்குப் பின் அவள் முழுக்காட்டப்பட்டாள். பல வருடங்களாக அவள் எனக்கு உற்சாகத்துக்கும் பலத்துக்கும் மூலகாரணமாக இருந்தாள், அதே போல் நானும் அவ்வாறே அவளுக்கு இருந்தேன். நாங்கள் உடன்பிறந்த சகோதரிகளைக் காட்டிலும் மிகவும் நெருக்கமாக ஆனோம்.
நாங்கள் 1945-ன் ஆரம்பத்தில் மிசௌரியில் சபைகளே இல்லாத சிறு பட்டணங்களில் ஒன்றுசேர்ந்து பயனியர் செய்தோம். நாங்கள் பௌலிங் கிரீனில் கூட்டங்கள் நடத்துவதற்காக ஒரு மன்றத்தை ஒழுங்குபடுத்தினோம்; அம்மா அங்கு வந்து எங்களுக்கு உதவி செய்தார்கள். பின்னர் நாங்கள் பட்டணத்தில் இருந்த எல்லா வீடுகளையும் ஒவ்வொரு வாரமும் சந்தித்தோம், செயின்ட் லூயிலிருந்த சகோதரர்கள் வந்து பொது பேச்சு கொடுக்கும்படி ஏற்பாடு செய்து அதற்காக ஜனங்களை அழைத்தோம். 40-லிருந்து 50 பேர் வரை ஒவ்வொரு வாரமும் ஆஜரானார்கள். பின்னர் நாங்கள் லூசியானாவில் அதேபோல் செய்தோம், அங்கு நாங்கள் கூட்டுரிமைக் கழக மன்றம் ஒன்றை வாடகைக்கு எடுத்தோம். மன்றங்களை வாடகைக்கு எடுப்பதற்காக தேவைப்படும் பணத்தை சேகரிப்பதற்கு நாங்கள் நன்கொடை பெட்டிகளை வைத்தோம், ஒவ்வொரு வாரமும் எல்லா செலவுகளையும் கவனித்துக்கொண்டோம்.
அடுத்து நாங்கள் மெக்ஸிக்கோவில் மிசௌரி சென்றோம், அங்கே நாங்கள் கடைகள் இருந்த கட்டடம் ஒன்றில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தோம். அங்குள்ள சிறிய சபை அதைப் பயன்படுத்த நாங்கள் ஏற்பாடு செய்தோம். அந்தக் கட்டடத்தோடு சேர்ந்து அறைகள் இருந்தன, நாங்கள் அதில் வசித்தோம். மெக்ஸிக்கோவில் பொது பேச்சுகளை ஏற்பாடு செய்வதற்கும்கூட நாங்கள் உதவி செய்தோம். பின்பு நாங்கள் மாநிலத்தின் தலைநகரான ஜெஃபர்ஸன் பட்டணத்துக்கு சென்றோம், ஒவ்வொரு வார நாள் காலையிலும் நாங்கள் பொதுநல அதிகாரிகளை அவர்களுடைய அலுவலகங்களில் சந்தித்தோம். நாங்கள் ராஜ்ய மன்றத்துக்கு மேலிருந்த ஓர் அறையில் ஸ்டெல்லா வில்லி என்பவரோடு வசித்தோம், அவர்கள் எங்களுக்குத் தாயைப் போல் இருந்தார்கள்.
அங்கிருந்து நாங்கள் மூவரும் அருகருகே இருந்த ஃபெஸ்ட்டஸ் மற்றும் கிரிஸ்ட்டல் பட்டணங்களுக்கு சென்றோம். நாங்கள் அக்கறை காண்பித்த ஒருவருடைய வீட்டுக்குப் பின்புறம், கோழி அடைக்கும் கூண்டை வசிப்பிடமாக மாற்றி அதில் வசித்தோம். முழுக்காட்டுதல் பெற்ற ஆண்கள் அங்கு இல்லாததால் நாங்களே எல்லா கூட்டங்களையும் நடத்தினோம். பகுதி நேர வேலையாக, நாங்கள் ஒப்பனைப்பொருள்களை விற்பனை செய்தோம். பொருள்சம்பந்தமாக எங்களிடம் மிகவும் குறைவாகவே இருந்தது. உண்மையை சொன்னால், எங்கள் ஷூக்களின் அடிப்பாகத்தை ரிப்பேர் செய்ய எங்களால் முடியவில்லை, ஆகையால் ஒவ்வொரு நாள் காலையும் புதிய அட்டையை அவற்றுக்குள் வைப்போம், இரவுகளில் எங்களிடமிருந்த ஒரே ஆடையை இருவரும் துவைப்போம்.
1948-ன் ஆரம்பத்தில் எனக்கு 19 வயதிருக்கையில், மிஷனரிகளுக்கான உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 12-வது வகுப்புக்கு டாரத்தியும் நானும் அழைப்பிதழ்களை பெற்றுக்கொண்டோம். ஐந்து-மாத தொடர்பயிற்சிக்குப் பின், நூறு மாணவர்கள் பிப்ரவரி 6, 1949-ல் பட்டதாரிகளாக ஆனோம். அது மகிழ்ச்சிமிக்க சமயமாய் இருந்தது. என் பெற்றோர் கலிபோர்னியாவில் குடியேறியிருந்தனர், என் அம்மா அந்நிகழ்ச்சிக்கு ஆஜராக அங்கிருந்து பிரயாணப்பட்டு வந்தார்கள்.
எங்கள் நியமிப்புக்கு
இருபத்தெட்டு பட்டதாரிகள் இத்தாலிக்கு நியமிக்கப்பட்டார்கள்—டாரத்தியும் நானும் உட்பட ஆறு பேர் மிலான் பட்டணத்துக்கு நியமிக்கப்பட்டோம். மார்ச் 4, 1949-ல் நாங்கள் வல்க்கேனியா என்ற இத்தாலிய கப்பலில் நியூ யார்க்கை விட்டுப் புறப்பட்டோம். அந்தப் பயணம் 11 நாட்கள் எடுத்தது, கொந்தளிப்பாய் இருந்த கடல் எங்களில் அநேகருக்கு கடற்பயண நோயை ஏற்படுத்தியது. சகோதரர் பனான்ட்டி எங்களை சந்திப்பதற்கு ஜெனோவா துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து மிலானுக்கு இரயிலில் மறுபடியும் கூட்டிச்செல்வதற்காக வந்தார்.
நாங்கள் மிலானில் இருந்த மிஷனரிகள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, எங்கள் அறைகள் ஒவ்வொன்றிலும் பூக்களை ஓர் இளம் இத்தாலிய பெண் வைத்திருந்ததை நாங்கள் கண்டோம். பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் பெண், மரியா மராஃபெனா, கிலியடுக்கு சென்று, பின்னர் இத்தாலிக்கு திரும்பினாள், நானும் அவளும் மிஷனரி வீட்டில் ஒன்றுசேர்ந்து சேவை செய்தோம்!
மிலானுக்கு சென்ற அடுத்த நாள் காலை, நாங்கள் குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே பார்த்தோம். எங்கள் வீட்டுக்குப் பின்னால் குண்டுகளால் தாக்கப்பட்ட பலமாடி கட்டடம் ஒன்று இருந்தது. ஒரு அமெரிக்க வெடிகுண்டு விமானம் எதிர்பாராதவிதமாக ஒரு குண்டை வீசியது, அங்கு வசித்துக்கொண்டிருந்த 80 குடும்பங்களையும் அது கொன்று போட்டது. மற்றொரு சமயம், ஒரு தொழிற்சாலையின் மீது குறிவைக்கப்பட்ட குண்டுகள் தவறிப்போய் ஒரு பள்ளியைத் தாக்கி 500 பிள்ளைகளைக் கொன்று போட்டன. ஆகையால் மக்கள் அமெரிக்க நாட்டவரை விரும்பவில்லை.
மக்கள் போரைக் குறித்து மிகவும் சோர்வுற்றிருந்தனர். மற்றொரு போர் துவங்கினால், அவர்கள் குண்டுகளிலிருந்து பாதுகாக்கப்படும் மறைவிடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்து காஸை திறந்துவிட்டு தற்கொலை செய்துகொள்வோம் என்று அநேகர் கூறினர். நாங்கள் ஐக்கிய மாகாணங்களையோ அல்லது வேறு எந்த மனிதர்கள் ஏற்படுத்திய அரசாங்கத்தையோ பிரதிநிதித்துவம் செய்வதற்கு அங்கு இல்லை, அதற்கு மாறாக, எல்லா போர்களையும் அவை கொண்டுவரும் எல்லா துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவரப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்கே நாங்கள் இருக்கிறோம் என்று அவர்களுக்கு உறுதி கூறினோம்.
பெரிய பட்டணமாயிருந்த மிலானில் சுமார் 20 பேர் அடங்கியிருந்த ஒரே சபை மிஷனரி வீட்டில் ஒன்றுகூடியது. அங்கே பிரசங்கிப்பதற்கு அதுவரை பிராந்தியங்கள் நியமிக்கப்படவில்லை, ஆகையால் நாங்கள் ஒரு பெரிய பலமாடி கட்டடத்தில் சாட்சி கொடுக்க ஆரம்பித்தோம். முதல் வீட்டில் நாங்கள் திருவாளர் ஜன்டிநோட் என்பவரைச் சந்தித்தோம், அவர் தன் மனைவி சர்ச்சை விட்டு விலகும்படி விரும்பினார், ஆகையால் நம் பிரசுரங்களில் ஒன்றை அவர் எடுத்துக்கொண்டார். திருமதி ஜன்டிநோட் உண்மைமனதுள்ள பெண்ணாக இருந்தார், அநேக கேள்விகளைக் கேட்டார். “இத்தாலிய மொழியை நீங்கள் கற்றுக்கொண்டால் நான் சந்தோஷப்படுவேன், அப்போது நீங்கள் எனக்கு பைபிளை கற்றுக்கொடுக்கலாம்,” என்று அவர்கள் சொன்னார்கள்.
அவர்களுடைய அடுக்குமாடியின் கூரை மிகவும் உயரமாயும் விளக்கு ஒளி மங்கலாயும் இருந்தது, ஆகையால் அவர்கள் வெளிச்சத்துக்கு அருகாமையில் இருந்து பைபிளை வாசிப்பதற்காக இரவில் நாற்காலியை மேஜை மீது போட்டு அந்த நாற்காலியில் உட்கார்ந்து வாசிப்பார்கள். “நான் உங்களோடு பைபிளை படித்தால், தொடர்ந்து சர்ச்சுக்கு போகலாமா?” என்று அவர்கள் கேட்டார்கள். அவர்கள்தான் அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சர்ச்சுக்கும் மாலைகளில் நம் கூட்டங்களுக்கும் வந்தார்கள். பின்பு ஒருநாள் அவர்கள் சொன்னார்கள், “நான் இனிமேலும் சர்ச்சுக்கு போகப்போவதில்லை.”
“ஏன்?” என்று நாங்கள் கேட்டோம்.
“ஏனென்றால் அவர்கள் பைபிளைக் கற்பிக்கிறதில்லை, உங்களுடன் பைபிளைப் படிப்பதன் மூலம் நான் சத்தியத்தை கண்டடைந்திருக்கிறேன்.” அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் சர்ச்சுக்கு சென்ற அநேக பெண்களோடு படிப்பு நடத்தினார்கள். சர்ச்சுக்கு செல்ல வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் சொல்லியிருந்தால், அவர்கள் படிப்பதை நிறுத்திவிட்டு சத்தியத்தை ஒருவேளை கற்றுக்கொண்டிருக்கவே மாட்டார்கள் என்று பின்னர் அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
புதிய நியமிப்புகள்
காலப்போக்கில் நானும் டாரத்தியும் வேறு நான்கு மிஷனரிகளோடு சேர்ந்து இத்தாலிய பட்டணமாகிய டிரீஸ்ட்டுக்கு நியமிக்கப்பட்டோம், அது அப்போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. அங்குச் சுமார் பத்து சாட்சிகள் மட்டுமே இருந்தனர், ஆனால் இந்த எண்ணிக்கை வளர்ந்தது. நாங்கள் டிரீஸ்ட்டியில் மூன்று வருடங்கள் பிரசங்கித்தோம், அவ்விடத்தை விட்டு புறப்பட்டபோது அங்கு 40 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தனர், அதில் 10 பேர் பயனியர்களாக இருந்தனர்.
எங்களுடைய அடுத்த நியமிப்பு, சபையே இல்லாத வெரோனா பட்டணமாகும். ஆனால் உலகப்பிரகாரமான அதிகாரிகள் மீது சர்ச் அழுத்தம் கொடுத்தபோது, நாங்கள் அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டோம். டாரத்தியும் நானும் ரோமுக்கு நியமிக்கப்பட்டோம். தேவையான சாமான்கள் அனைத்தும் இருந்த அறையை நாங்கள் அங்கு வாடகைக்கு எடுத்தோம், வத்திக்கனுக்கு அருகாமையில் இருந்த பிராந்தியத்தில் சேவை செய்தோம். நாங்கள் அங்கு இருந்த சமயத்தில்தானே, ஜான் சிமிக்லிஸ் என்பவரை திருமணம் செய்துகொள்ள டாரத்தி லெபனானுக்கு சென்றார். நாங்கள் இருவரும் ஏறக்குறைய 12 வருடங்கள் ஒன்றாக இருந்தோம், அவருடைய பிரிவு எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.
1955-ல் ரோமின் மற்றொரு பகுதியில் ஒரு புதிய மிஷனரி வீடு நியூ ஏப்பியன் வே என்றழைக்கப்பட்ட தெருவில் திறக்கப்பட்டது. அவ்வீட்டில் இருந்த நான்கு பேரில் ஒருவர் மரியா மராஃபெனா, நாங்கள் மிலானுக்கு வந்துசேர்ந்த இரவில் எங்கள் அறைகளில் பூக்களை வைத்த அதே பெண். பட்டணத்தின் இந்தப் பகுதியில் ஒரு புதிய சபை ஸ்தாபிக்கப்பட்டது. அந்தக் கோடைகாலத்தின்போது ரோமில் நடந்த சர்வதேச மாநாட்டுக்குப் பிறகு, நியுரெம்பர்க், ஜெர்மனியில் நடந்த மாநாட்டுக்கு ஆஜராகும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. ஹிட்லரின் ஆட்சியின்கீழ் மிகுதியான துன்புறுத்தலைச் சகித்துக்கொண்ட நபர்களை சந்திப்பதில் என்னே ஒரு கிளர்ச்சி!
ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பிச் செல்லுதல்
1956-ல் உடல்நல பிரச்சினைகளின் காரணமாக, விடுப்பு எடுத்துக்கொண்டு நான் ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பிச் சென்றேன். ஆனால் யெகோவாவை இப்போதும் அவருடைய புதிய உலகில் என்றென்றுமாக சேவிப்பதற்கும் பரிசின் மீது வைத்த கண்களை நான் ஒருபோதும் எடுக்கவேயில்லை. இத்தாலிக்கு திரும்பி வருவதைக் குறித்து நான் திட்டமிட்டிருந்தேன். என்றபோதிலும், புருக்லின், நியூ யார்க்கில் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தில் சேவித்துக்கொண்டிருந்த ஆர்வெல் மைக்கல் என்பவரை நான் சந்தித்தேன். நியூ யார்க் பட்டணத்தில் நடைபெற்ற 1958 சர்வதேச மாநாட்டுக்குப் பின்னர் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
அதற்குப் பிறகு கொஞ்ச காலத்துக்குள் நாங்கள் ஃபிரன்ட் ராயல், வெர்ஜீனியா என்ற இடத்துக்குச் சென்றோம், அங்கே ஒரு சிறிய சபையோடு சேவை செய்வதில் மகிழ்ச்சியடைந்தோம். நாங்கள் ராஜ்ய மன்றத்துக்குப் பின்புறத்திலிருந்த சிறிய அடுக்குமாடி வீட்டில் வசித்தோம். இறுதியில், மார்ச் 1960-ல் எங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு புருக்லினுக்குத் திரும்பி உலகப்பிரகாரமான வேலை தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாங்கள் முழுநேர சேவையில் நிலைத்திருப்பதற்காக வித்தியாசமான வங்கிகளில் இரவு நேரங்களில் வேலை செய்தோம்.
நாங்கள் புருக்லினில் இருக்கையில் என் அப்பா இறந்துவிட்டார், என் கணவருடைய அம்மாவுக்கு தாக்கம் நோய் ஏற்பட்டது. ஆகையால் எங்கள் அம்மாமாரின் அருகில் நாங்கள் இருப்பதற்காக ஆரிகானுக்கு செல்ல தீர்மானித்தோம். நாங்கள் இருவரும் உலகப்பிரகாரமான பகுதி-நேர வேலை செய்து அங்குப் பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்து செய்தோம். 1964-ன் இலையுதிர்க்காலத்தில் நாங்களும் எங்கள் அம்மாமாரும் ஐக்கிய மாகாணத்தில் பிட்ஸ்பெர்க், பென்சில்வேனியாவில் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் வருடாந்தர கூட்டத்துக்கு காரில் சென்றோம்.
ரோட் ஐலன்டுக்கு நாங்கள் விஜயம் செய்தபோது, ராஜ்ய பிரஸ்தாபிகளுக்குத் தேவை மிகுதியாயிருந்த மாவட்ட தலைநகர், பிராவிடன்ஸ்-க்கு செல்லுமாறு வட்டார கண்காணி, ஆர்லன் மேர் என்பவரும் அவருடைய மனைவியும் எங்களை உற்சாகப்படுத்தினர். இந்தப் புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்ளும்படி எங்கள் அம்மாமார் எங்களை ஊக்குவித்தனர், ஆகையால் ஆரிகனுக்கு திரும்பிச் சென்றபோது, நாங்கள் எங்கள் வீட்டிலிருந்த பொருட்களில் பெரும்பாலானவற்றை விற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
மறுபடியும் கிலியட் பள்ளிக்கு
1965-ன் கோடைகாலத்தின்போது, நாங்கள் யாங்கி ஸ்டேடியத்தில் ஒரு மாநாட்டுக்கு ஆஜரானோம். அங்கு நாங்கள் திருமணமான தம்பதியாக கிலியட் பள்ளிக்கு விண்ணப்பித்தோம். சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு, நாங்கள் விண்ணப்ப நமூனாக்களை பெற்றுக்கொண்டபோது ஆச்சரியப்பட்டோம், அது 30 நாட்களுக்குள்ளாக திருப்பி அனுப்பப்பட வேண்டியிருந்தது. அம்மாவுக்கு உடல்நிலை நன்றாக இல்லாமல் இருந்த காரணத்தால் தூர தேசத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததைக் குறித்து நான் கவலைப்பட்டேன். ஆனால் அவர்கள் என்னை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்கள்: “அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள். யெகோவா அளிக்கும் எந்த ஊழிய சிலாக்கியத்தையும் நீங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!”
அது விஷயங்களை சரிசெய்தது. நாங்கள் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து அவற்றை அனுப்பி வைத்தோம். ஏப்ரல் 25, 1966-ல் ஆரம்பமான 42-வது வகுப்புக்கு அழைப்பிதழ்களை பெற்றுக்கொண்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தோம்! கிலியட் பள்ளி அப்போது புருக்லின், நியூ யார்க்கில் இருந்தது. அதற்குப் பிறகு ஐந்து மாதங்களுக்குள்ளாக, நாங்கள் 106 பேரும் செப்டம்பர் 11, 1966-ல் பட்டம் பெற்றுக்கொண்டோம்.
அர்ஜன்டினாவுக்கு நியமிக்கப்பட்டோம்
பட்டம் பெற்று இரண்டு நாட்கள் ஆனபிறகு, நாங்கள் பெரு விமானப் போக்குவரத்தில் அர்ஜன்டினாவுக்கு சென்றோம். நாங்கள் போனஸ் அயர்ஸ்-க்கு வந்துசேர்ந்தபோது, கிளை கண்காணி, சார்ல்ஸ் ஐஸ்னோவர் எங்களை விமான நிலையத்தில் சந்தித்தார். அவர் எங்களுக்கு கஸ்டம்ஸ் விஷயங்களில் உதவிசெய்து, பின்னர் கிளை அலுவலகத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைத்து குடியேறுவதற்கு ஒரு நாள் கிடைத்தது; பின்னர் ஸ்பானிய மொழி வகுப்புகள் எங்களுக்கு ஆரம்பமாயின. நாங்கள் முதல் மாதத்தில் ஒரு நாளுக்கு 11 மணிநேரங்கள் ஸ்பானிய மொழி கற்றுக்கொண்டோம். இரண்டாவது மாதம், ஒரு நாளுக்கு நான்கு மணிநேரங்கள் படித்து வெளி ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பித்தோம்.
நாங்கள் போனஸ் அயர்ஸ்-ல் ஐந்து மாதங்கள் தங்கியிருந்தோம், பின்னர் ரோசாரியோ என்ற இடத்துக்கு நியமிக்கப்பட்டோம், அது இரயில் மூலம் சுமார் நான்கு மணிநேரங்கள் வடக்கே பயணம் செய்ய வேண்டிய தூரத்தில் இருந்த ஒரு பெரிய பட்டணம். அங்கு 15 மாதங்கள் சேவித்த பின்பு, வடக்கே தொலைதூரத்தில் மிகவும் உஷ்ணமான பாலைவன பிராந்தியத்தில் இருந்த சான்ட்டியாகோ டெல் எஸ்ட்ரோ என்ற பட்டணத்துக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். நாங்கள் அங்கு இருக்கையில் ஜனவரி 1973-ல் என் அம்மா இறந்து போனார்கள். நான் அவர்களை நான்கு வருடங்களாக பார்க்கவேயில்லை. உயிர்த்தெழுதல் உண்டு என்ற நிச்சயமான நம்பிக்கையும், நான் எங்கே இருக்க வேண்டுமென்று என் அம்மா விரும்பினார்களோ அங்கே நான் இருந்ததுமே என் துக்கத்தைத் தாங்கிக்கொள்வதற்கு எனக்கு உதவியது.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
சான்ட்டியாகோ டெல் எஸ்ட்ரோவில் இருந்த ஜனங்கள் சிநேகப்பான்மையாக இருந்தார்கள், ஆகையால் பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு சுலபமாக இருந்தது. நாங்கள் 1968-ல் வந்து சேர்ந்தபோது, சுமார் 20 அல்லது 30 பேர் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தனர், ஆனால் எட்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் சபையில் நூறு பேருக்கு மேல் இருந்தனர். கூடுதலாக, 25 முதல் 50 பிரஸ்தாபிகள் அடங்கிய இரண்டு புதிய சபைகள் அருகாமையிலிருந்த பட்டணங்களில் இருந்தன.
ஐக்கிய மாகாணங்களுக்கு மறுபடியும் திரும்புதல்
உடல்நல பிரச்சினைகளின் காரணமாக 1976-ல் நாங்கள் மறுபடியும் விசேஷ பயனியர்களாக ஐக்கிய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டோம்—ஃபெயட்வில், வட கரோலினா. அங்கு மத்திப மற்றும் தென் அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, பியோர்ட்டோ ரீக்கோ மற்றும் ஸ்பெய்னிலிருந்தும்கூட வந்திருந்த ஸ்பானிய-மொழி பேசிய மக்கள் அநேகர் இருந்தனர். எங்களுக்கு அநேக பைபிள் படிப்புகள் கிடைத்தன, காலப்போக்கில் ஸ்பானிய மொழி சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் அந்த நியமிப்பில் ஏறக்குறைய எட்டு வருடங்கள் செலவழித்தோம்.
என்றபோதிலும், மிகவும் வயதான மற்றும் பலவீனமாயிருந்த மாமியாருக்கு அருகாமையில் இருக்க வேண்டியிருந்தது. அவர்கள் போர்ட்லண்ட், ஆரிகான்-ல் வசித்து வந்தார்கள், ஆகையால் நாங்கள் போர்ட்லண்டிலிருந்து அதிக தூரத்தில் இல்லாத வான்கூவர், வாஷிங்டனில் இருந்த ஸ்பானிய மொழி சபையில் சேவிப்பதற்கு புதிய நியமிப்பை பெற்றுக்கொண்டோம். டிசம்பர் 1983-ல் நாங்கள் வந்துசேர்ந்தபோது சபை சிறியதாக இருந்தது, ஆனால் நாங்கள் அநேக புதிய நபர்கள் கூட்டங்களுக்கு ஆஜராவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஜூன் 1996-ல் நான் முழுநேர ஊழியத்தில் 53 வருடங்களும், ஜனவரி 1, 1996-ல் என் கணவர் 55 வருடங்களும் செய்து முடித்திருக்கிறோம். இந்த அநேக ஆண்டுகளின்போது, நூற்றுக்கணக்கான ஆட்கள் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அறிந்து தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு உதவியிருக்கும் சிலாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன். இவர்களில் அநேகர் இப்போது மூப்பர்களாகவும் முழுநேர ஊழியர்களாகவும் சேவித்து வருகின்றனர்.
எனக்கு பிள்ளைகள் இல்லாததைக் குறித்து வருத்தப்படுகிறேனா என்று என்னிடம் சில சமயங்களில் கேட்கின்றனர். உண்மை என்னவெனில், யெகோவா எனக்கு அநேக ஆவிக்குரிய பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். ஆம், யெகோவாவின் சேவையில் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் பலனளிப்பதாகவும் இருந்திருக்கிறது. தன் வாழ்க்கையை ஆலய சேவையில் செலவழித்த யெப்தாவின் குமாரத்தியை நான் தொடர்புபடுத்தி சொல்லமுடியும், அவள் தான் பெற்றிருந்த பெரும் ஊழிய சிலாக்கியத்தின் காரணமாக பிள்ளைகளைக் கொண்டிருக்கவில்லை.—நியாயாதிபதிகள் 11:38-40.
நான் சிறுமியாக இருந்தபோதே யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது பரதீஸைப் பற்றிய படம் என் மனதில் எப்படி பிரகாசமாய் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது. கடவுளுடைய புதிய உலகில் முடிவில்லா வாழ்க்கை என்ற பரிசின்மீது என் கண்களும் இதயமும் இன்னும் ஊன்றியிருக்கின்றன. ஆம், வெறும் 50 வருடங்களுக்கு மட்டுமல்ல, ஆனால் என்றென்றுமாக யெகோவாவை அவருடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் சேவிப்பதே என் விருப்பம்.
[பக்கம் 23-ன் படம்]
என் தோள்களின் மீது கைகளை வைத்துக்கொண்டு டாரத்தி க்ரேடனும் உடன் பயனியர்களும் 1943-ல்
[பக்கம் 23-ன் படம்]
ரோம், இத்தாலியில் உடன் மிஷனரிகளுடன் 1953-ல்
[பக்கம் 25-ன் படம்]
என் கணவருடன்