சீகேம்—பள்ளத்தாக்கிலுள்ள அந்தப் பட்டணம்
கடவுள் தம்முடைய ஜனத்துக்காக தெரிந்துகொண்ட தேசத்தின் தொலைவான மையப்பகுதியில், ஏபால் மலைக்கும் கெரிசீம் மலைக்குமிடையே பாதி மறைந்தும் மறையாமலும் சீகேம் பட்டணம் அமைந்திருந்தது. இங்கேதானே—சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக—யெகோவா ஆபிரகாமிடம் இவ்வாறு வாக்களித்தார்: “உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்.”—ஆதியாகமம் 12:6, 7.
அந்த வாக்குறுதிக்கு இசைவாக, ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபு சீகேமில் கூடாரம் போட்டு ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு ‘இஸ்ரவேலின் தேவனே தேவன்’ என்று பெயரிட்டார். யாக்கோபு இந்தப் பகுதியில்தானே தன்னுடைய குடும்பத்துக்கும் மந்தைகளுக்கும் தண்ணீருக்காக ஒரு கிணற்றை தோண்டியிருக்கவேண்டும்; பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் “யாக்கோபுடைய கிணறு” என அறியப்பட இருந்த ஒரு கிணறாக இது இருந்தது.—ஆதியாகமம் 33:18-20, NW அடிக்குறிப்பு; யோவான் 4:5, 6, 12.
இருப்பினும், யாக்கோபுடைய குடும்பத்தின் எல்லா அங்கத்தினர்களும் உண்மை வணக்கத்துக்கு வைராக்கியத்தைக் காண்பிக்கவில்லை. அவருடைய மகள் தீனாள், சீகேமிலிருந்த கானானிய பெண்களின் மத்தியில் தோழிகளைக் கொண்டிருக்க நாடினாள். இன்னும் இளவயதிலிருந்த தீனாள், தன்னுடைய குடும்பத்தினர் கூடாரமிட்டிருந்த இடத்தில் பாதுகாப்பாய் இருப்பதை விட்டுவிட்டு அருகாமையிலுள்ள பட்டணத்துக்குச்சென்று அங்கே நண்பர்களை உண்டுபண்ணிக்கொண்டிருந்தாள்.
அந்தப் பட்டணத்திலுள்ள இளவயது ஆண்கள் ஒருவேளை துணையின்றி தங்கள் பட்டணத்துக்கு வழக்கமாய் வந்து போய்க்கொண்டிருந்த இந்த இளம் கன்னிப் பெண்ணை எவ்வாறு கருதுவர்? அத்தேசத்தின் பிரபு அவளைக் “கண்டு, அவளைக்கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.” ஒழுக்கங்கெட்ட கானானியரோடு கூட்டுறவு கொள்வதன் மூலம் தீனாள் ஏன் நெருப்போடு விளையாடினாள்? தன்னுடைய வயதிலுள்ள பெண்களின் தோழமை தனக்குத் தேவை என்பதாக அவள் நினைத்ததாலா? அவளுடைய சில சகோதரர்களைப் போல அவள் தலைக்கனம் பிடித்தவளாகவும் தனித்தியங்குபவளாகவும் இருந்தாளா? ஆதியாகம பதிவை வாசித்து, யாக்கோபும் லேயாளும் தங்களுடைய மகள் சீகேமுக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட துயரமான பின்விளைவுகளின் காரணமாக அவர்கள் அனுபவித்த வேதனையையும் அவமானத்தையும் புரிந்துகொள்ள முயன்றுபாருங்கள்.—ஆதியாகமம் 34:1-31; 49:5-7; 1985 ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, பக்கம் 31-ஐயும் காண்க.
சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்பு, தேவாட்சிக்கடுத்த வழிகாட்டு குறிப்புகளை அவமதிப்பதனால் ஏற்படும் விளைவுகள் மறுபடியுமாக தெளிவாக காட்டப்பட்டன. சீகேமில் யோசுவா இஸ்ரவேலரின் வரலாற்றிலேயே எளிதில் மறக்கமுடியாத மாநாடுகளில் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். பள்ளத்தாக்கில் அந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்—ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும்—இஸ்ரவேலின் ஆறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் கெரிசீம் மலைக்கு முன்பாக நிற்கின்றனர். பள்ளத்தாக்கின் அடுத்த பக்கத்தில் மற்ற ஆறு கோத்திரங்களைச் சேர்ந்த ஏறக்குறைய அதே எண்ணிக்கையான ஆட்கள் ஏபால் மலைக்கு எதிராக நிற்கின்றனர்.a அங்கே உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகிலேயும் இஸ்ரவேலின் இரண்டு ஜனக்கூட்டத்துக்கு இடையிலேயும் ஆசாரியர்களும் யோசுவாவும் நிற்கின்றனர். என்னே ஒரு காட்சி!—யோசுவா 8:30-33.
இந்த மாபெரும் கூட்டத்துக்கு மேலாக உயர்ந்தோங்கி நிற்பதாய், இரண்டு மலைகளும் வனப்பும் வறட்சியுமாக ஒன்றுக்கொன்று நேர் எதிர்மாறாக காட்சியளிக்கின்றன. கெரிசீமின் மேற்புற சரிவுகள் பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கையில் ஏபாலின் சரிவுகள் வெறும் சாம்பல் நிறமாகவும் வறட்சியாகவும் காணப்படுகின்றன. யோசுவா பேசப்போகும் அந்தக் கணத்துக்காக இஸ்ரவேலர் காத்திருக்கையில் ஏற்படும் பரபரப்பை உங்களால் உணரமுடிகிறதா? இயற்கையாய் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் ஒவ்வொரு சப்தமும் எதிரொலிக்கிறது.
‘மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்திலிருந்து’ வாசிப்பதற்கு யோசுவா எடுத்துக்கொள்ளும் நான்கு முதல் ஆறு மணிநேரங்களின்போது ஜனங்களும் அதில் பங்குகொள்கின்றனர். (யோசுவா 8:34, 35) கெரிசீமுக்கு எதிரே நிற்கும் இஸ்ரவேலர் ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பிறகு ‘ஆமென்!’ என்று சொல்லுகையில், ஏபாலுக்கு எதிரே நிற்பவர்களின் ‘ஆமென்!’ ஒவ்வொரு சாபத்தையும் வலியுறுத்திக்கூறுவதாய் உள்ளது. ஒருவேளை ஏபால் மலையின் வறட்சியான தோற்றம், கீழ்ப்படியாமையின் நாசகரமான விளைவுகளை மக்களுக்கு நினைப்பூட்ட உதவுகிறது.
“தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்,” என்பதாக யோசுவா எச்சரிக்கிறார். பத்து லட்சத்துக்கும் மேலான குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து “ஆமென்” என்று பதிலளிக்கின்றன. “பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன்,” என்று தொடர்ந்து சொல்வதற்கு முன்பாக இடியோசைப் போன்ற பதில் படிப்படியாக மறைந்துபோவதற்காக யோசுவா காத்திருக்கிறார். மறுபடியுமாக ஆறு கோத்திரத்தாரும் அவர்களோடு வந்திருந்த அந்நியர்களும் ‘ஆமென்!’ என்று சப்தமாகச் சொல்கின்றனர். (உபாகமம் 27:16, 17) நீங்கள் அங்கே இருந்திருந்தால், மலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தை எப்போதாவது மறந்துவிட்டிருப்பீர்களா? கீழ்ப்படிவதன் அவசியம் உங்கள் மனதில் அழியாத முத்திரையாக பதிந்துவிட்டிருக்காதா?
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, யோசுவா மரிப்பதற்கு சற்று முன்பு, அவர் தேசத்தாரை தங்களுடைய தீர்மானத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்படியாக சீகேமில் மறுபடியுமாக கூடிவரப்பண்ணினார். ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தெரிவை அவர்களுக்கு முன்வைத்தார். “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்” என்பதாக அவர் சொன்னார். “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.” (யோசுவா 24:1, 15) தெளிவாகவே சீகேமில் நடைபெற்ற விசுவாசத்தைப் பலப்படுத்தும் இந்த மாநாடுகள் ஆழமாக மனதில் பதிந்துவிட்டிருக்க வேண்டும். யோசுவா மரித்து பல வருடங்களான பிறகும் இஸ்ரவேலர் அவருடைய உண்மையுள்ள முன்மாதிரியைப் பின்பற்றி வந்தனர்.—யோசுவா 24:31.
சுமார் 15 நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு கெரிசீம் மலையின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த போது, உற்சாகமூட்டும் ஒரு உரையாடல் இடம்பெற்றது. நீண்ட தூர பயணத்தினால் களைப்புற்றவராய் இயேசு யாக்கோபின் கிணற்றண்டையில் உட்கார்ந்திருந்தபோது தண்ணீர் ஜாடியோடு ஒரு சமாரிய பெண் அங்கே வந்தாள். இயேசு அவளிடம் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது, அந்தப் பெண் மிகவும் ஆச்சரியப்பட்டாள்; ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களிடம் பேச்சு வார்த்தைக்கூட வைத்துக்கொள்ளாதிருந்த காரணத்தால், அவர்களுடைய பாத்திரங்களிலிருந்து நிச்சயமாகவே பருகவும் மாட்டார்கள். (யோவான் 4:5-9) இயேசுவின் அடுத்த வார்த்தைகள் அவளை இன்னும் அதிகமாக ஆச்சரியப்படுத்தின.
“இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்.” (யோவான் 4:13, 14) அந்த வாக்குறுதியில் அந்தப் பெண்ணுக்கிருந்த ஆர்வத்தைக் கற்பனை செய்துபாருங்கள், ஏனென்றால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டுவருவது கஷ்டமான வேலையாக இருந்தது. வரலாற்றில் முக்கியத்துவமுள்ள இடங்களாக இருந்தபோதிலும் எருசலேமோ கெரிசீம் மலையோ கடவுளை அணுகுவதற்கு அத்தியாவசியமாக இருக்கும் மத சம்பந்தமான இடங்களாக இல்லை என்பதை இயேசு மேலுமாக விளக்கினார். முக்கியத்துவமுடையதாய் இருந்தது, இடமல்ல, இருதய மனநிலையும் நடத்தையுமே. “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும்,” என்பதாக அவர் சொன்னார். “தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.” (யோவான் 4:23) அந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலளிப்பவையாய் இருந்திருக்க வேண்டும்! மறுபடியுமாக இந்தப் பள்ளத்தாக்கு யெகோவாவை சேவிக்கும்படியாக மக்களைத் துரிதப்படுத்திய இடமாக ஆனது.
சீகேமின் பண்டைய இடிபாடுகளின் அருகே இன்று நேப்ளஸ் நகரம் உள்ளது. கெரிசீம் மலையும் ஏபால் மலையும் இன்னும் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த கால சம்பவங்களுக்கு மெளனமாக சாட்சிபகர்ந்துகொண்டு நிற்கின்றன. இந்த மலைகளின் அடிவாரத்திலுள்ள யாக்கோபின் கிணற்றை இன்றும் சென்று பார்க்க முடியும். அங்கு நடந்த சம்பவங்களை நாம் தியானிக்கையில், யோசுவாவும் இயேசுவும் நமக்குக் கற்பித்த விதமாகவே, மெய் வணக்கத்தை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்து நாம் நினைப்பூட்டப்படுகிறோம்.—ஏசாயா 2:2, 3-ஐ ஒப்பிடுக.
[அடிக்குறிப்புகள்]
a கெரிசீம் மலைக்கு முன்னால் நின்றவர்கள் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய ஆறு கோத்திரத்தவர் ஆவர். ஏபால் மலைக்கு முன்னால் நின்றவர்கள் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் ஆறு கோத்திரத்தவர் ஆவர்.—உபாகமம் 27:12, 13.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.