“எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை”
“தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
1, 2. கடவுளிடமாக நம்முடைய கடமையைக் குறித்து சிந்திப்பது ஏன் பொருத்தமாயுள்ளது?
“என்னத்தை கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்”? பண்டைய தீர்க்கதரிசி ஒருவர் இந்தக் கேள்வியை எழுப்பினார். பின்னர் யெகோவா என்ன தேவைப்படுத்தினார் என்பதை—நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனோடு மனத்தாழ்மையாய் நடக்கவேண்டும் என்பதை—திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.—மீகா 6:8.
2 தனித்தன்மையோடும் தன்னிச்சையோடும் செயல்படுகிற இந்த நாட்களில், கடவுள் தங்களிடம் எதையாவது கேட்கும் எண்ணத்தைப்பற்றி அநேகர் விருப்பமற்றதாக உணருகின்றனர். அவர்கள் கட்டுப்படுத்தப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் இறுதியாக பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் வந்த முடிவைப் பற்றி என்ன? “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
3. பிரசங்கி புத்தகத்துக்கு நாம் ஏன் கருத்தூன்றிய சிந்தனையைச் செலுத்தவேண்டும்?
3 வாழ்க்கையில் நம்முடைய சூழ்நிலைமைகளும் நோக்குநிலையும் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த முடிவின் பின்னணியைப் பற்றி சிந்திப்போமானால் நாம் மிகவும் பயனடைவோம். ஏவப்பட்டெழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் எழுத்தாளரான சாலொமோன் அரசன், நம்முடைய அன்றாடக வாழ்க்கையின் பாகமாக இருக்கும் ஒருசில காரியங்களைப் பற்றியே சிந்தித்தார். ஆனால் அவருடைய இந்த ஆய்வு அடிப்படையில் எதிர்மறையானதாகவே உள்ளது என்பதாக சிலர் அவசரப்பட்டு முடிவுசெய்துவிடலாம். எனினும், அது கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது; ஆகவே நம்முடைய நடவடிக்கைகளையும் முன்னுரிமைகளையும் மதிப்பிடுவதற்கு இது நமக்கு உதவக்கூடும், இதனால் அதிகமான சந்தோஷம் விளைவடையும்.
வாழ்வின் அதிமுக்கிய அக்கறைகளை கவனித்தல்
4. பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் எதைப்பற்றி ஆராயவும் கலந்தாலோசிக்கவும் செய்கிறார்?
4 சாலொமோன், ‘மனுபுத்திரர் செய்யும் வேலைகளை’ (NW) ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தார். “வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம் பண்ணினேன்.” ‘வேலை’ என்று சொல்லும்போது சாலொமோன் கட்டாயமாகவே ஒரு அலுவலை அல்லது உத்தியோகத்தை அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் மாறாக ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணங்களை அவர்களுடைய வாழ்நாள் முழுவதிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் முழு நடவடிக்கையையும் அர்த்தப்படுத்துகிறார். (பிரசங்கி 1:13) அதிமுக்கியமான அக்கறைகள் அல்லது வேலைகள் ஒருசிலவற்றை சிந்தித்துப்பார்த்து, பின்பு அதோடு நம்முடைய சொந்த நடவடிக்கைகளையும் முன்னுரிமைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமாக.
5. மனிதர்களின் முக்கியமான அலுவல்களில் ஒன்று என்ன?
5 நிச்சயமாகவே பணமே மனித அக்கறைகள் மற்றும் நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. ஒருசில பணக்காரர்களைப் போல பணத்தைக் குறித்து அசட்டையான மனப்பான்மையை சாலொமோன் கொண்டிருந்தார் என எவருமே நியாயமாக சொல்லமுடியாது. கொஞ்சம் பணம் அவசியம் என்பதை அவர் முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்; செளகரியங்களும் வசதிகளும் இல்லாமல் அல்லது வறுமையில் வாழவேண்டியதைவிட போதுமான பணத்தைக் கொண்டிருப்பது மேலானது. (பிரசங்கி 7:11, 12) ஆனால் பணத்தால் வாங்கக்கூடிய உடைமைகளோடுகூட பணம் வாழ்க்கையில்—ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும்கூட—ஒரு பிரதான குறிக்கோளாகிவிட முடியும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
6. இயேசுவின் உவமைகள் ஒன்றிலிருந்தும் சாலொமோனின் சொந்த அனுபவத்திலிருந்தும் பணத்தைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 ஒருபோதும் திருப்தியடையாதவனாய் ஒரு பணக்காரன் இன்னும் அதிகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வேலை செய்ததைப் பற்றிய இயேசுவின் உவமையை நினைவுபடுத்திப்பாருங்கள். கடவுள் அவனை நியாயமற்ற ஒரு மனிதனாக தீர்த்தார். ஏன்? ஏனென்றால் ‘நமக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது நமக்கு ஜீவன் அல்ல.’ (லூக்கா 12:15-21) நம்முடையதைவிட ஒருவேளை அதிகமானதாக இருந்த சாலொமோனின் அனுபவம் இயேசுவின் வார்த்தைகளை உறுதிசெய்கிறது. பிரசங்கி 2:4-9-லுள்ள விவரிப்பை வாசியுங்கள். கொஞ்ச காலத்துக்கு சாலொமோன் ஐசுவரியங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தார். அவர் மிக நேர்த்தியான வீடுகளையும் தோட்டங்களையும் அமைத்தார். அழகான பெண் தோழிகளை வைத்துக்கொள்ளும் வசதியும் அவருக்கு இருந்தது, அவர்களை வைத்துக்கொண்டார். செல்வமும் அந்தச் செல்வத்தால் அவர் செய்யமுடிந்த காரியங்களும் ஆழ்ந்த மனநிறைவையும், மெய்யான சாதனை உணர்வையும் அவருடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் கொண்டுவந்ததா? அவர் ஒளிவுமறைவின்றி பதிலளித்தார்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.”—பிரசங்கி 2:11; 4:8.
7. (அ) பணத்தின் மதிப்பைப்பற்றி அனுபவம் எதை நிரூபிக்கிறது? (ஆ) சாலொமோனின் முடிவை ஆதரிக்கும் எதை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்கள்?
7 அது வாஸ்தவமாக இருக்கிறது, அநேகருடைய வாழ்க்கையில் உறுதிசெய்யப்பட்ட ஒரு உண்மையாக உள்ளது. அதிக பணம் வைத்திருப்பதுதானே எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவது கிடையாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். உணவையும் உடையையும் பெற்றுக்கொள்வதை எளிதாக்குவது போன்ற சிலவற்றை அது தீர்க்கக்கூடும். ஆனால் ஒரு ஆளால், ஒரே சமயத்தில் ஒரே உடையை மாத்திரமே அணிந்துகொள்ளவும், ஓரளவு உணவையும் பானத்தையும் மாத்திரமே அனுபவிக்கவும் முடியும். திருமண விலக்கு, மதுபானம், அல்லது போதைப்பொருள் துர்ப்பிரயோகம் மற்றும் உறவினர்களோடு விரோதங்கள் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருக்கும் பணக்காரர்களுடைய வாழ்க்கையைப்பற்றி நீங்கள் வாசித்திருப்பீர்கள். கோடீஸ்வரனாகிய ஜே. பி. கெட்டி சொன்னார்: “பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் கட்டாயமாகவே சம்பந்தம் இருக்கவேண்டியதில்லை. மகிழ்ச்சியின்மையோடு ஒருவேளை அது சம்பந்தப்பட்டிருக்கலாம்.” நல்ல காரணத்தோடுதானே, சாலொமோன் வெள்ளியை நேசிப்பதை மாயையோடு வகைப்படுத்தினார். அந்த உண்மையை சாலொமோனின் கருத்தோடு வேறுபடுத்திப் பாருங்கள்: “வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.”—பிரசங்கி 5:10-12.
8. பணத்தின் முக்கியத்துவத்தை தகுதிக்கு மேற்பட்டு மதிப்பிட்டுவிடாதிருப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது?
8 பணமும் உடைமைகளும்கூட எதிர்காலத்தைக் குறித்ததில் திருப்தியான ஒரு உணர்வைக் கொண்டுவருவதில்லை. உங்களுக்கு அதிகமான பணமும் உடைமைகளும் இருந்தால், அவற்றை பாதுகாப்பதை பற்றிய கூடுதலான கவலை உங்களுக்கு இருக்கும்; மேலும் அடுத்த நாள் என்ன ஏற்படும் என்பதை இன்னும் அறியாமலேயே இருப்பீர்கள். உங்களுடைய உயிரோடுகூட அவை அனைத்தையும் நீங்கள் இழந்துவிடக்கூடுமா? (பிரசங்கி 5:13-17; 9:11, 12) இது இப்படி இருப்பதால், நம்முடைய வாழ்க்கை, அல்லது வேலை பணத்தையும் உடைமைகளையும் காட்டிலும் அதிக மேலான, அதிக நிலையான அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதைக் காண்பது கடினமாக இருக்கக்கூடாது.
குடும்பம், புகழ் மற்றும் அதிகாரம்
9. குடும்ப வாழ்க்கையை சாலொமோன் ஏன் சரியாகவே ஆராய்ச்சியில் எடுத்துக்கொண்டார்?
9 வாழ்க்கையைப் பற்றி சாலொமோன் செய்த ஆராய்ச்சி, குடும்பத்தின் அக்கறைகளிலேயே ஆழ்ந்துவிடும் விஷயத்தையும் உட்படுத்தியது. பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதில் இருக்கும் சந்தோஷம் உட்பட, குடும்ப வாழ்க்கையை பைபிள் உயர்த்திப்பேசுகிறது. (ஆதியாகமம் 2:22-24; சங்கீதம் 127:3-5; நீதிமொழிகள் 5:15, 18-20; 6:20; மாற்கு 10:6-9; எபேசியர் 5:22-33) ஆனால் இதெல்லாம்தான் வாழ்க்கையா? ஒருசில கலாச்சாரங்களில் திருமணத்துக்கும், பிள்ளைகளுக்கும், குடும்ப பந்தங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கையில் அநேகர் அவ்விதமாக யோசிப்பது தெரிகிறது. ஆனால் பிரசங்கி 6:3 நூறு பிள்ளைகளைக் கொண்டிருப்பதும்கூட வாழ்க்கையில் திருப்தியைப் பெற இன்றியமையாததாக இல்லை என்பதைக் காண்பிக்கிறது. தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையை சுலபமானதாக ஆக்கவேண்டும் என்பதற்காக எத்தனை பெற்றோர் தியாகங்களைச் செய்திருக்கின்றனர் என்பதை எண்ணிப்பாருங்கள். அது பெருந்தன்மையான குணமாக இருந்தாலும், வாழ்க்கையில் நம்முடைய முக்கிய நோக்கம், உயிரினங்கள் தொடர்ந்திருப்பதற்காக மிருகங்கள் இயல்புணர்ச்சியால் செய்வதுபோல, உயிரை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதாக மாத்திரமே இருக்கும்படி நிச்சயமாகவே நம்முடைய படைப்பாளர் நோக்கங்கொள்ளவில்லை.
10. குடும்பத்தின்மீது மட்டுக்குமீறிய கவனம் ஊன்றவைப்பது ஏன் மாயையாக நிரூபிக்கலாம்?
10 குடும்ப வாழ்க்கையின் ஒருசில யதார்த்தங்களை உணர்ந்துகொள்ளும்விதமாக சாலொமோன் தெரிவித்தார். உதாரணமாக, ஒரு மனிதன் தன்னுடைய பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் சேமித்து வைப்பதில் தன் கவனத்தை ஊன்றவைக்கலாம். ஆனால் அவர்கள் ஞானமுள்ளவர்களாக நிரூபிப்பார்களா? அல்லது அவர்களுக்காக அவர் சேகரித்துவைத்தவற்றை வீணாக செலவழித்துவிடுவார்களா? பின்கூறப்பட்டது சம்பவிக்குமானால், அது எத்தனை “மாயையும் பெரிய தீங்குமாய்” இருக்கும்!—பிரசங்கி 2:18-21; 1 இராஜாக்கள் 12:8; 2 நாளாகமம் 12:1-4, 9.
11, 12. (அ) வாழ்க்கையில் என்ன நாட்டங்களின்மீது சிலர் கவனத்தை ஒருமுகப்படுத்தியிருக்கின்றனர்? (ஆ) முக்கியத்துவமுள்ளவராக இருக்க நாடுவது ‘காற்றை வேட்டையாடுவதே’ என்பதாக ஏன் சொல்லப்படலாம்?
11 மறுபட்சத்தில், அநேகர் இயல்பான குடும்ப வாழ்க்கையைக் குறைந்த முக்கியத்துவமுள்ளதாக கருதி புகழையும் அல்லது மற்றவர்கள்மீது அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளும் தங்களுடைய குறிக்கோளுக்கு அதை இரண்டாம்பட்சமானதாக வைத்திருக்கிறார்கள். இது ஆண்கள் மத்தியில் அதிக சாதாரணமாக காணப்படும் தவறாகும். இந்த மனச்சாய்வை உங்கள் பள்ளி சகாக்களிடமும், உடன் வேலை செய்பவர்களிடமும் அல்லது அயலகத்தாரிடமும் பார்த்திருக்கிறீர்களா? கவனிக்கப்படவேண்டும், முக்கியத்துவமுள்ளராக ஆகவேண்டும் என்பதற்காக அல்லது மற்றவர்கள்மீது அதிகாரம் செலுத்தவேண்டும் என்பதற்காக அநேகர் ஒருவித வெறியோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மையில் எந்தளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது?
12 சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ பிரபலமாவதற்காக சிலர் எப்படி போராடுகிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இதை நாம் பள்ளியில், நம்முடைய சுற்றுப்புறத்தில் மற்றும் பல்வேறு சமுதாய குழுக்களில் காண்கிறோம். கலைகள், பொழுதுபோக்கு மற்றும் அரசியலில் பிரபலமானவராய் ஆக விரும்புகிறவர்களுக்கு இது ஒரு தூண்டியியக்கும் சக்தியாகவும்கூட இருக்கிறது. என்றபோதிலும், பிரபலமாவதற்கு போராடுவது அடிப்படையில் ஒரு வீணான முயற்சி அல்லவா? சாலொமோன் சரியாகவே அதை “காற்றை வேட்டையாடுவதே” என்பதாக அழைத்தார். (பிரசங்கி 4:4, திருத்திய மொழிபெயர்ப்பு) ஒரு இளைஞன் மனமகிழ் மன்றத்தில், ஒரு விளையாட்டு அணியில், ஒரு இசைக் குழுவில் பிரசித்தி பெற்றாலும்—யாரோ ஒரு ஆண் அல்லது பெண் வியாபாரத்தில் அல்லது சமுதாயத்தில் புகழ் அடைந்தாலும்—எவ்வளவு பேருக்கு உண்மையில் அது தெரியப்போகிறது? கோளத்தின் அடுத்தப் பக்கத்திலுள்ள பெரும்பாலானவர்களுக்கு (அல்லது அதே தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும்கூட) அப்படிப்பட்ட ஒரு நபர் இருக்கிறார் என்பதாவது தெரியுமா? அல்லது அவனோ அல்லது அவளோ பெற்றிருக்கக்கூடிய கொஞ்சம் புகழைப்பற்றி முற்றிலும் அறியாதவர்களாக அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? வேலையில், பட்டணத்தில் அல்லது ஒரு தொகுதியின் மத்தியில் ஒரு நபர் முயன்று அடையக்கூடிய செல்வாக்கு அல்லது அதிகாரத்தைப்பற்றியும்கூட இதுவே சொல்லப்படலாம்.
13. (அ) முக்கியத்துவத்துக்காக அல்லது அதிகாரத்துக்காக பாடுபடுவதைப் பற்றியதில் சரியான நோக்குநிலையைக் கொண்டிருப்பதற்கு பிரசங்கி 9:4, 5 எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறது? (ஆ) இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதான் என்றால் நாம் என்ன உண்மைகளை எதிர்ப்பட வேண்டும்? (அடிக்குறிப்பைக் காண்க.)
13 இப்படிப்பட்ட முக்கியத்துவமும் அல்லது அதிகாரமும் கடைசியில் எதில் விளைவடையும்? ஒரு தலைமுறைப் போய் மற்றொன்று வருகையில், முக்கியமான அல்லது செல்வாக்குள்ள ஆட்கள் காட்சியைவிட்டு மறைந்துபோகின்றனர், மறக்கப்பட்டும் போகின்றனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத் தலைவர்களின் விஷயத்தில் உண்மையாக இருப்பது போலவே, இது கட்டடம் கட்டுபவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் மற்ற கலைஞர்கள், சமுதாய சீர்திருத்தவாதிகள் போன்றவர்களின் விஷயத்திலும் உண்மையாகவே உள்ளது. அந்த வேலைகளைச் செய்தவர்களில் 1700 மற்றும் 1800 ஆண்டுகளுக்கு இடையில் வாழ்ந்தவர்களில் குறிப்பாக தனிப்பட்ட விதமாக எத்தனை ஆட்களை உங்களுக்குத் தெரியும்? சாலொமோன் சரியாகவே காரியங்களை மதிப்பிட்டு சொன்னதாவது: “செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.” (பிரசங்கி 9:4, 5) இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதான் என்றால், முக்கியத்துவத்தை அல்லது அதிகாரத்தை நாடிக்கொண்டிருப்பது உண்மையில் மாயையாக இருக்கிறது.a
நம்முடைய முக்கிய நடவடிக்கையும் கடமையும்
14. பிரசங்கி புத்தகம் ஏன் நமக்கு தனிப்பட்டவிதமாக உதவிசெய்யவேண்டும்?
14 சாலொமோன், மக்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமாக கவனத்தை ஊன்ற வைக்கும் அநேக நடவடிக்கைகளையும் இலக்குகளையும் இன்பங்களையும் பற்றி குறிப்பு சொல்லவில்லை. என்றபோதிலும் அவர் எழுதியது போதுமானதாக உள்ளது. இப்புத்தகத்தை நாம் சிந்திப்பது விசனகரமாக அல்லது எதிர்மறையானதாக தோன்ற வேண்டியதில்லை, ஏனென்றால் யெகோவா தேவன் நம்முடைய நன்மைக்காக வேண்டியே இவ்வாறு ஏவப்பட்டு எழுதப்படும்படியாக செய்த பைபிளின் புத்தகத்தை யதார்த்தமாக மறுபார்வை செய்திருக்கிறோம். இது நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய நோக்குநிலையையும் நம்முடைய கவனத்தை ஊன்றவைக்கும் காரியத்தையும் சரிப்படுத்திக்கொள்ள நமக்கு உதவிசெய்யலாம். (பிரசங்கி 7:2; 2 தீமோத்தேயு 3:16, 17) சாலொமோன் இந்த முடிவுகளுக்கு வருவதற்கு யெகோவா அவருக்கு உதவிசெய்த காரணத்தால் விசேஷமாக இது இப்படியிருக்கிறது.
15, 16. (அ) வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதைக் குறித்ததில் சாலொமோனின் கருத்து என்ன? (ஆ) வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு எது தேவை என்பதாக சாலொமோன் பொருத்தமாகவே சொன்னார்?
15 சாலொமோன் திரும்பத் திரும்ப சொன்ன குறிப்பு என்னவென்றால், மெய் கடவுளின் ஊழியர்கள் அவருக்கு முன்பாக தங்களுடைய நடவடிக்கைகளில் சந்தோஷத்தைக் காணவேண்டும் என்பதே ஆகும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.” (பிரசங்கி 2:24; 3:12, 13; 5:18; 8:15) சாலொமோன் களியாட்டத்தை ஊக்குவித்துக்கொண்டில்லை என்பதை கவனியுங்கள்; அல்லது ‘புசித்து, குடித்து, பூரிப்பாயிரு, ஏனென்றால் நாளை நாம் மரிப்போம்,’ என்ற மனநிலையையும் ஆதரிக்கவில்லை. (1 கொரிந்தியர் 15:14, 32-34) ‘நம்முடைய வாழ்க்கையில் நன்மைசெய்துகொண்டிருக்கையில்’ புசிப்பது, குடிப்பது போன்ற இயல்பான இன்பங்களில் நாம் மகிழ்ச்சியைக் காணவேண்டும் என்றே அவர் அர்த்தப்படுத்தினார். எது உண்மையில் நன்மையானது என்பதைத் தீர்மானிக்கும் படைப்பாளரின் சித்தத்தின்மேல் அது நம்முடைய வாழ்க்கையில் கவனத்தை ஊன்றவைக்கிறது.—சங்கீதம் 25:8; பிரசங்கி 9:1; மாற்கு 10:17, 18; ரோமர் 12:2.
16 சாலொமோன் எழுதினார்: “நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.” (பிரசங்கி 9:7-9) ஆம், உண்மையில் ஒரு சிறந்த மற்றும் சாதனை உணர்வுள்ள வாழ்க்கையையுடைய ஆண் அல்லது பெண் யெகோவா மகிழ்ச்சியைக் காணும் வேலைகளில் சுறுசுறுப்பாயிருக்கிறார். அது எப்போதும் அவரைக் கருத்தில் கொள்வதை நம்மிடத்தில் தேவைப்படுத்துகிறது. மனித நியாயங்களின் அடிப்படையில் வாழ்க்கையை அணுகும் பெரும்பாலான ஆட்களுடைய நோக்குநிலையிலிருந்து இது எவ்வளவு வித்தியாசமாக உள்ளது!
17, 18. (அ) வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அநேகர் எவ்விதமாக பிரதிபலிக்கின்றனர்? (ஆ) என்ன பலனை நாம் எப்போதும் மனதில் கொண்டிருக்கவேண்டும்?
17 ஒருசில மதங்கள் இனிவரும் ஓர் உலகைப்பற்றி போதித்தாலும், அநேக ஆட்கள் இந்த வாழ்க்கையைப்பற்றிதானே உண்மையில் தாங்கள் நிச்சயமாய் இருக்கமுடியும் என்பதாக நம்புகின்றனர். சாலொமோன் விவரித்த விதமாக அவர்கள் பிரதிபலிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்: “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.” (பிரசங்கி 8:11) தீய செயல்களில் மூழ்கிவிடாதவர்களும்கூட தாங்கள் இங்கே இருப்பதிலும் இப்போதைய வாழ்க்கையிலுமே முக்கியமாய் அக்கறையுள்ளவர்கள் என்பதைக் காட்டுகின்றனர். பணம், உடைமைகள், அந்தஸ்து, மற்றவர்கள்மீது அதிகாரம், குடும்பம் அல்லது இதுபோன்ற மற்ற அக்கறைகள் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியமானவையாய் ஆகிவிடுவதற்கு இது ஒரு காரணமாகும். இருந்தபோதிலும் சாலொமோன் அந்தக் கருத்தை அதோடு முடித்துக்கொள்வதில்லை. அவர் மேலுமாக இவ்வாறு சொன்னார்: “பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாக பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்குமுன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.” (பிரசங்கி 8:12, 13) தெளிவாகவே, நாம் ‘மெய் கடவுளுக்குப் பயந்திருந்தால்’ அது நன்மையாய் முடியும் என்பதை சாலொமோன் உறுதியாக நம்பினார். எந்தளவுக்கு நன்மையாய் முடியும்? அவர் வேறுபடுத்திக் காண்பித்ததில் நாம் பதிலைக் காணமுடியும். யெகோவா ‘நம்முடைய வாழ்நாளை நீடிக்க’முடியும்.
18 ஒப்பிடுகையில் இன்னும் இள வயதிலுள்ளவர்கள் தாங்கள் கடவுளுக்குப் பயந்திருந்தால் அது அவர்களுக்கு நன்மையாக முடியும் என்ற முற்றிலும் நம்பத்தக்க உண்மையை விசேஷமாக நன்கு சிந்திக்கவேண்டும். நீங்கள் ஒருவேளை நேரில் பார்த்திருக்கும் விதமாகவே, மிகவும் வேகமாக ஓடும் ஓட்டக்காரன் இடறிவிழுந்து பந்தயத்தில் தோற்றுப்போகலாம். மிகவும் பலமான ஒரு இராணுவப்படை தோல்வியடையலாம். மிகவும் சாமர்த்தியமுள்ள ஒரு வியாபாரி வறுமையில் தன்னைக் காணலாம். மற்ற அநேக அநிச்சயங்கள் வாழ்க்கையை மிகவும் முன்னறிந்து கூறமுடியாத ஒன்றாக ஆக்கலாம். ஆனால் இதைக் குறித்து நீங்கள் முழுவதுமாக நிச்சயமாய் இருக்கலாம்: கடவுளுடைய ஒழுக்க சட்டங்களின் எல்லைக்குள்ளும் அவருடைய சித்தத்திற்கிசைவாகவும் நன்மைசெய்துகொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே மிகவும் ஞானமுள்ள மற்றும் நிச்சயமான போக்காக இருக்கிறது. (பிரசங்கி 9:11) கடவுளுடைய சித்தம் என்ன என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு, அவருக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவனாக மாறுவதை இது உட்படுத்துகிறது.—மத்தேயு 28:19, 20.
19. இளைஞர்கள் எவ்விதமாக தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தலாம், ஆனால் ஞானமுள்ள போக்கு என்ன?
19 படைப்பாளர் இளைஞரை அல்லது மற்றவர்களை தம்முடைய வழிநடத்துதலைப் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தமாட்டார். அவர்கள் கல்வி கற்பதில் மூழ்கிவிடலாம், ஒருவேளை வாழ்நாள் முழுவதும் உலகப்பிரகாரமான கல்விபயிலும் மாணவர்களாகவே இருக்கலாம். அது கடைசியில் சரீரத்துக்கு களைப்பூட்டுவதாக இருக்கலாம். அல்லது அவர்கள் தங்கள் அபூரண மனம்போன போக்கில் நடக்கலாம் அல்லது கண்களுக்கு கவர்ச்சியாய் இருப்பதைப் பின்பற்றலாம். அது நிச்சயமாக தொந்தரவையே கொண்டுவரும்; இப்படியாக வாழ்ந்த ஒரு வாழ்க்கை காலப்போக்கில் வெறும் மாயையாக நிரூபிக்கும். (பிரசங்கி 11:9–12:12; 1 யோவான் 2:15-17) ஆகவே சாலொமோன் வாலிபருக்கு ஒரு வேண்டுகோளை—நம்முடைய வயது என்னவாக இருந்தாலும் நாம் முக்கியமாக எண்ணிப்பார்க்கவேண்டிய ஒரு வேண்டுகோளை—விடுக்கிறார்: “நீ உன் வாலிபப்பிரயாயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும் . . . அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.”—பிரசங்கி 12:1.
20. பிரசங்கி புத்தகத்திலுள்ள செய்தியைப் பற்றிய சமநிலையான நோக்கு என்ன?
20 அப்படியென்றால் என்ன முடிவுக்கு நாம் வருகிறோம்? சரி, சாலொமோன் என்ன முடிவுக்கு வந்தார்? “சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.” (பிரசங்கி 1:14) பிரசங்கி புத்தகத்தில் நாம் குறைகாணும் அல்லது மகிழ்ச்சியும் திருப்தியுமற்ற ஒரு மனிதனின் வார்த்தைகளைக் காண்பதில்லை. அவை கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையின் பாகமாக உள்ளன, நாம் அவற்றை சிந்திப்பது தகுதியானதே.
21, 22. (அ) வாழ்க்கையின் என்ன அம்சங்களை சாலொமோன் கவனத்தில் எடுத்துக்கொண்டார்? (ஆ) அவர் என்ன ஞானமுள்ள முடிவுக்கு வந்தார்? (இ) பிரசங்கி புத்தகத்திலுள்ள பொருளடக்கத்தை ஆராய்வது உங்களை எவ்வாறு பாதித்திருக்கிறது?
21 மனிதர் பாடுபடுவதையும், மனித துன்பங்களையும் ஆவல்களையும் சாலொமோன் ஆராய்ந்துபார்த்தார். சாதாரணமான பழக்கப்பட்ட செயல்முறையில் காரியங்கள் அமைந்துவிடும் முறையையும் மனிதர்களில் அநேகர் அனுபவிக்கும் ஏமாற்றமளிக்கும் மற்றும் வெறுமையான விளைவுகளையும் பற்றி அவர் சிந்தித்துப்பார்த்தார். மனித அபூரணம் மற்றும் அதன் பலனாக விளையும் மரணத்தின் நிஜத்தைப்பற்றி அவர் சிந்தித்தார். மரித்தோரின் நிலைமையைப் பற்றியும் எதிர்கால வாழ்க்கைக்கான எந்தவொரு எதிர்பார்ப்பைப் பற்றியும் அவர் கடவுளிடமிருந்து பெற்றிருந்த அறிவை கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தார். இவையனைத்தும் கடவுளால் கூட்டப்பட்டிருந்த ஞானத்தையுடைய ஒரு மனிதனால், ஆம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய ஞானியினால் மதிப்பிடப்பட்டிருந்தன. பின்னர் அவர் செய்த முடிவு பரிசுத்த வேதாகமத்தில், உண்மையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ விரும்பும் அனைவரின் நன்மைக்காகவும் சேர்க்கப்பட்டுள்ளது. அதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டாமா?
22 “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”—பிரசங்கி 12:13, 14.
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம் (ஆங்கிலம்) ஒரு சமயம் இந்த உட்பார்வையுள்ள குறிப்பைக் கொடுத்தது: “நாம் இந்த வாழ்க்கையை மாயைகளில் வீணாக்கிவிடக்கூடாது . . . இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதான் என்றால், எதுவுமே முக்கியமல்ல. இந்த வாழ்க்கை, மேலே தூக்கியெறிப்படுகையில் மறுபடியுமாக கீழே மண்ணில் வந்து விழும் ஒரு பந்தைப் போல இருக்கிறது. அது மறைந்துபோகும் ஒரு நிழலாக, வாடிவிடும் ஒரு மலராக, சீக்கிரத்தில் வெட்டப்பட்டு காய்ந்துபோகும் ஒரு புல்லின் இதழாக உள்ளது. . . . நித்தியத்தின் தராசுத்தட்டில் நம்முடைய வாழ்க்கை காலம் புறக்கணிக்கக்கூடிய ஒரு புள்ளியாக இருக்கிறது. காலம் என்னும் அருவியில் அது ஒரு பெரிய நீர்த்துளியாகக்கூட இல்லை. வாழ்க்கையில் மனிதனின் பல அக்கறைகளையும் நடவடிக்கைகளையும் விமர்சித்து அவற்றை மாயை என்று அறிவிப்பதில் நிச்சயமாகவே அவர் [சாலொமோன்] சரியாக இருக்கிறார். நாம் பிறந்ததில் பிரயோஜனமே இல்லை என தோன்றும்படி நாம் வெகு சீக்கிரமாகவே இறந்துவிடுகிறோம்; நாம் இங்கே இருந்ததையே வெகு சிலரே அறிந்திருக்க, வந்து போகிற கோடிக்கணக்கானோரில் ஒருவராக இருக்கிறோம். இது நன்மையில் நம்பிக்கையற்ற, அல்லது சோர்வான, அல்லது விசனகரமான அல்லது எதிர்மறையான எண்ணமாக இல்லை. இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதான் என்றால், அது உண்மையில் ஒரு நிஜமாக, நடைமுறையான ஒரு நோக்காக இருக்கிறது.”—ஆகஸ்ட 1, 1957, பக்கம் 472.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ உங்கள் வாழ்க்கையில் உடைமைகளின் பங்கைக் குறித்த ஞானமான மதிப்பீடு என்ன?
◻ குடும்பத்தின்மீது, புகழின்மீது, அல்லது மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்துவதற்கு நாம் ஏன் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை வைக்கக்கூடாது?
◻ மகிழ்ந்தனுபவிப்பதைக் குறித்து கடவுள் கொடுத்த என்ன நோக்குநிலையை சாலொமோன் ஊக்குவித்தார்?
◻ பிரசங்கி புத்தகத்தை சிந்திப்பதிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறீர்கள்?
[பக்கம் 15-ன் படம்]
பணமும் உடைமைகளும் திருப்திக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை
[பக்கம் 17-ன் படம்]
இளைஞர் தாங்கள் கடவுளுக்குப் பயந்திருந்தால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்பதைக் குறித்து
உறுதியாக இருக்கலாம்