என் சிறுவயதுமுதல் யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
ருடால்ஃப் கிரேய்க்கன் சொன்னபடி
நான் 12 வயதே ஆகியவனாக இருந்தபோது, திடீர் இடிமின்னலைப்போல் என் குடும்பத்தினரை பெரும் துன்பம் தாக்கியது. முதலாவதாக, என் தகப்பன் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டார். பின்பு, என் சகோதரியும் நானும் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்டு அந்நியர்களுடன் வாழும்படி அனுப்பப்பட்டோம். பின்னால், என் தாயாரும் நானும் கெஸ்டாப்போ காவற்படையினரால் கைதுசெய்யப்பட்டோம். நான் சிறைச்சாலைக்குச் சென்றேன், கடைசியாக என் தாய் கான்சென்ட்ரேஷன் முகாமில் தள்ளப்பட்டார்கள்.
ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த அந்த நிகழ்ச்சிகள், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக என் சிறு வயதில் நான் அனுபவித்த வேதனை துன்புறுத்தல் நிறைந்த காலத்தொடக்கத்தை மாத்திரமே குறித்தன. கொடுமை வாய்ந்த நாஜி கெஸ்டாப்போவும், பின்பு கிழக்கு ஜெர்மன் இரகசிய போலீஸாரான ஸ்டாசியும், கடவுளிடம் கொண்டிருந்த என் உத்தமத்தை முறித்துப்போட முயன்றனர். அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிற 50 ஆண்டுகளின் சேவைக்குப் பின்னான இப்போது, சங்கீதக்காரன் சொன்னபடி நான் சொல்ல முடிகிறது: “என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.” (சங்கீதம் 129:2) யெகோவாவுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!
நான் ஜூன் 2, 1925-ல், ஜெர்மனியில், லீப்ஸிக்கின் அருகிலுள்ள சிறிய பட்டணமாகிய லூக்யாவில் பிறந்தேன். நான் பிறப்பதற்கு முன்பாகவே, என் பெற்றோராகிய ஆல்ஃபிரடும் தெரேஸாவும், பைபிள் மாணாக்கர் என்று அப்போது அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் பிரசுரங்களில் பைபிள் சத்தியத்தின் தொனியைக் கண்டுகொண்டனர். பைபிள் விஷயங்களை வருணிப்பவையாக எங்கள் வீட்டின் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்த படங்களை நான் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், புலியும் வெள்ளாட்டுக்குட்டியும், கன்றுகுட்டியும் பால சிங்கமும்—எல்லாம் சமாதானமாக, ஒரு சிறு பையனால் நடத்தப்படுவதை ஒரு படம் காட்டியது. (ஏசாயா 11:6-9) அத்தகைய படங்கள் என்னில் நிலையான எண்ணப்பதிவை உண்டாக்கின.
கூடியபோதெல்லாம், சபை நடவடிக்கைகளில் என் பெற்றோர் என்னையும் சேர்த்துக்கொண்டனர். உதாரணமாக, பிப்ரவரி 1933-ல், ஹிட்லர் அதிகாரத்தை ஏற்ற ஒருசில நாட்களுக்குப் பின்புதானே, “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்பது—அதன் ஸ்லைடுகளுடனும், ஓடும் நிழற்படங்களுடனும், பதிவுசெய்யப்பட்ட விளக்கவுரையுடனும்—எங்கள் சிறிய பட்டணத்தில் காட்டப்பட்டது. ஏழு வயதே ஆகியிருந்த சிறுவனாக, திறந்த லாரியின் பின்புறத்தில் உட்கார்ந்து பட்டணத்தினூடே ஃபோட்டோ டிராமாவை விளம்பரம் செய்யும் அணிவகுப்பின் பாகமாகச் செல்வதில் நான் எவ்வளவாய்ப் பரப்பரப்படைந்தவனாக இருந்தேன்! நான் இளம் வயதினனாக இருந்தபோதிலும் சபையின் பயனுள்ள ஓர் உறுப்பினனைப்போல் உணரும்படி இந்தச் சந்தர்ப்பத்திலும் மற்ற சந்தர்ப்பங்களிலுங்கூட, சகோதரர்கள் என்னைச் செய்வித்தனர். ஆகையால், மிகவும் இளம் வயதிலேயே, நான் யெகோவாவால் கற்பிக்கப்பட்டு, அவருடைய வார்த்தையால் செல்வாக்கு செலுத்தப்பட்டேன்.
யெகோவாவில் நம்பிக்கை வைக்கும்படி பயிற்றுவிக்கப்பட்டது
உறுதியான கிறிஸ்தவ நடுநிலைமை வகிப்பின் காரணமாக யெகோவாவின் சாட்சிகள், நாஜி அரசியலில் தங்களை உட்படுத்தவில்லை. இதன் விளைவாக, பிரசங்கிப்பதிலிருந்தும், கூடிவருவதிலிருந்தும், எங்கள் சொந்த பைபிள் இலக்கியங்களை வாசிப்பதிலிருந்துங்கூட தடையுத்தரவிடும் சட்டங்களை 1933-ல் நாஜிக்கள் விதித்தனர். செப்டம்பர் 1937-ல், என் தகப்பனார் உட்பட, எங்கள் சபையிலிருந்த சகோதரர் எல்லாரும் கெஸ்டாப்போவால் கைதுசெய்யப்பட்டனர். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கினது. என் தகப்பன் ஐந்து ஆண்டுகள் சிறையிருப்பில் இருக்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டார்.
வீட்டில் காரியங்கள் எங்களுக்கு மிகக் கடினமாயிற்று. ஆனாலும் யெகோவாவில் நம்பிக்கை வைக்கும்படி நாங்கள் விரைவில் கற்றுக்கொண்டோம். ஒரு நாள், நான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, என் தாய் காவற்கோபுர பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார்கள், நான் சாப்பிடுவதற்கு விரைவில் ஏதாவது தயாரிக்கும்படி விரும்பினார்கள். ஆகவே, அந்தப் பத்திரிகையை ஒரு சிறிய அலமாரியின்மீது வைத்துவிட்டு சென்றார்கள். சாப்பிட்ட பின்பு, பாத்திரங்களை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொண்டிருக்கையில், பலமாகக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தட்டினவர், ஒரு போலீஸ்காரர், எங்கள் அறைப் பகுதியில் பைபிள் இலக்கியங்கள் இருக்கின்றனவா என்று சோதனையிட வந்தவர். நான் மிகவும் பயந்தேன்.
அது, பொதுவாக இருப்பதைப் பார்க்கிலும் அதிக உஷ்ணமான நாளாக இருந்தது. ஆகையால் முதல் காரியமாக, அந்தப் போலீஸ்காரர் தன் தலைக்கவசத்தைக் கழற்றி மேசைமீது வைத்தார். பின்பு அவர் தன் சோதனையைத் தொடர்ந்தார். மேசையின் கீழ் அவர் பார்த்துக்கொண்டிருக்கையில், அவருடைய தலைக்கவசம் சரியத் தொடங்கினது. ஆகையால் என் தாயார் அதை விரைவில் பிடித்து அலமாரிமேல், அந்தக் காவற்கோபுர பத்திரிகையின்மீதே வைத்துவிட்டார்கள்! அந்தப் போலீஸ்காரர் எங்கள் அறைப்பகுதியை துருவித்துருவி தேடினார், ஆனால் எந்தப் பிரசுரத்தையும் காணவில்லை. தன் தலைக்கவசத்தின் கீழ் பார்க்க அவர் நிச்சயமாகவே ஒருபோதும் எண்ணவில்லை. போவதற்கு அவர் ஆயத்தமாக இருக்கையில், தனக்குப் பின்னால் இருந்த தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டே என் தாயை நோக்கி தன்னை மன்னித்துக்கொள்ளும்படி ஏதோ முணுமுணுத்தார். என் தவிப்பு எவ்வளவாய்த் தீர்ந்ததாக நான் உணர்ந்தேன்.
அதைப்போன்ற அனுபவங்கள், மேலும் கடினமான சோதனைகளுக்கு என்னை ஆயத்தப்படுத்தின. உதாரணமாக, பள்ளியில் ஹிட்லர் இளைஞர் அமைப்பைச் சேரும்படி நான் வற்புறுத்தப்பட்டு வந்தேன். அதில், இராணுவக் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் பயிற்றுவிக்கப்பட்டு, நாஜி கொள்கையை ஏற்கும்படி செய்யப்பட்டனர். மாணாக்கர் ஒருவரையும் விடாமல் 100 சதவீதமாக எல்லாரையும் பங்கெடுக்கச் செய்யவேண்டுமென்ற தங்கள் சொந்த இலக்கை சில ஆசிரியர்கள் கொண்டிருந்தனர். என் ஆசிரியரான, ஹெர் ஷ்னீடர், தான் இதில் முழுமையாகத் தோல்வியடைந்ததுபோல் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், என் பள்ளியிலிருந்த மற்ற எல்லா ஆசிரியர்களைப் போலிராமல், 100 சதவீத பங்கெடுப்பில் ஒரு மாணவன் அவருக்குக் குறைவாக இருந்தான். நானே அந்த மாணவன்.
ஒரு நாள், ஹெர் ஷ்னீடர் முழு வகுப்புக்கும் இவ்வாறு அறிவித்தார்: “பையன்களே, நாளைக்கு நாம் வகுப்பாக இன்பப் பயணம் செல்வோம்.” எல்லாரும் அந்த யோசனையை விரும்பினோம். பின்பு அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்; “ஹிட்லர் இளைஞர் சீருடைகளை நீங்கள் எல்லாரும் அணிய வேண்டும், இவ்வாறு வீதிகளினூடே நாம் வரிசையாக நடக்கையில், நீங்கள் இனிய தோற்றம் வாய்ந்த ஹிட்லர் பையன்கள் என்று எல்லாரும் காணலாம்.” அடுத்த நாள் காலையில், என்னைத் தவிர, எல்லா பையன்களும் தங்கள் சீருடைகளில் வந்திருந்தார்கள். ஆசிரியர் என்னை, வகுப்பறைக்கு முன்னால் வரும்படி அழைத்து: “சுற்றிலுமுள்ள மற்ற பையன்களைப் பார், பின்பு உன்னைப் பார்,” என்றார். அவர் மேலும் தொடர்ந்து: “உன் பெற்றோர் ஏழைகள், உனக்கு ஒரு சீருடை வாங்க அவர்களால் இயலாதென்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன்” என்றார். அவர் என்னைத் தன்னுடைய மேசையினிடம் அழைத்துச் சென்று, தன் மேசையைத் திறந்து: “இந்தப் புத்தம் புதிய சீருடையை நான் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். இது மிகவும் அழகாயிருக்கிறதல்லவா?” என்றார்.
நாஜி சீருடையை அணிந்துகொள்வதைப் பார்க்கிலும் மரிப்பதையே நான் மேலானதாகக் கருதினேன். அதை அணிந்துகொள்ள எனக்கு மனமில்லை என்று என் ஆசிரியர் கண்டபோது, அவர் கோபமடைந்தார், முழு வகுப்பும் என்னை நோக்கி வெறுப்புடன் கூப்பாடுபோட்டது. பின்பு எங்களை வெளியே அழைத்துச் சென்றார், ஆனால், தங்கள் சீருடைகளிலிருந்த மற்ற எல்லா பையன்களின் மத்தியில் என்னை நடக்க வைப்பதன்மூலம் என்னை மறைக்க முயற்சி செய்தார். எனினும், என் வகுப்புத் தோழர்களுக்குள் நான் தனித்து தோன்றியதால், பட்டணத்திலுள்ள பல ஜனங்கள் என்னை காண முடிந்தது. என் பெற்றோரும் நானும் யெகோவாவின் சாட்சிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். நான் இளைஞனாக இருந்தபோது எனக்குத் தேவைப்பட்ட ஆவிக்குரிய பலத்தை எனக்குத் தந்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
துன்புறுத்துதல் கடுமையாகிறது
1938-ன் தொடக்கப் பகுதியில் ஒரு நாள், என் சகோதரியும் நானும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு, ஏறக்குறைய 80 கிலோமீட்டர்கள் தூரத்தில், ஷ்டாட்ரோடாவிலிருந்த ஒரு சீர்திருத்தப் பள்ளிக்கு, போலீஸ் காரில் கொண்டுசெல்லப்பட்டோம். ஏன்? எங்கள் பெற்றோரின் செல்வாக்கிலிருந்து எங்களை விலக்கி, நாஜி பிள்ளைகளாக எங்களை மாற்றும்படி வழக்கு மன்றங்கள் தீர்ப்பு செய்தன. என் சகோதரியும் நானும், எங்கள் கிறிஸ்தவ நடுநிலைவகிப்பில் உறுதியுடையவர்களாக இருந்தபோதிலும், நாங்கள் மரியாதையும் கீழ்ப்படிதலும் உள்ளவர்கள் என அந்தச் சீர்திருத்தப் பள்ளியின் பொறுப்புடைய அம்மாள் விரைவில் கவனித்தார். அதன் இயக்குநர் அவ்வளவாக கவரப்பட்டதால், என் தாயாரை நேரடியாகக் காண விரும்பினார். எங்களுக்காக ஒரு விதிவிலக்குச் செய்யப்பட்டு, என் தாயார் எங்களை வந்து பார்க்கும்படி அனுமதிக்கப்பட்டார்கள். ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுபவர்களாக, ஒரு நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாக இருப்பதற்கு இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்ததற்காக, என் சகோதரியும் என் தாயும், நானும் மிகுந்த சந்தோஷமுள்ளவர்களாகவும் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருந்தோம். எங்களுக்கு அது உண்மையில் தேவைப்பட்டது.
ஏறக்குறைய நான்கு மாதங்கள் அந்தச் சீர்திருத்தப் பள்ளியில் நாங்கள் இருந்தோம். பின்பு, பானாவில் இருந்த ஒரு குடும்பத்துடன் வாழ்வதற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். எங்கள் உறவினரிலிருந்தும் எங்களை விலக்கி வைக்கும்படி அவர்கள் கட்டளையிடப்பட்டனர். எங்கள் தாயார் எங்களை வந்து பார்ப்பதையுங்கூட அனுமதிக்கவில்லை. எனினும். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில், எங்களைச் சந்திக்க ஒரு வழியைக் கண்டார்கள். அந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, யெகோவா என்ன சோதனைகளையும் சூழ்நிலைமைகளையும் அனுமதித்தாலும், அவருக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்கும்படியானத் திடத்தீர்மானத்தை எங்களில் அறிவுறுத்துவதற்குத் தன்னால் இயன்ற மிகச் சிறந்ததை என் தாயார் செய்தார்கள்.—1 கொரிந்தியர் 10:13.
அந்தச் சோதனைகள் மெய்யாகவே வந்தன. டிசம்பர் 15, 1942-ல் எனக்கு 17 வயதே இருந்தபோது, கெஸ்டாப்போவால் நான் கைதுசெய்யப்பட்டு, கேராவில் இருந்த தடுப்புக்காவல் சிறையில் போடப்பட்டேன். ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பின், என் தாயாரும் கைதுசெய்யப்பட்டு அதே சிறைச்சாலையில் என்னோடு வந்து சேர்ந்தார்கள். நான் இன்னும் வயது வராத பருவத்தில் இருந்ததால், வழக்கு மன்றங்கள் என்னை விசாரணைசெய்ய முடியவில்லை. ஆகையால் என்னுடைய 18-வது பிறந்தநாளுக்காக வழக்கு மன்றங்கள் காத்திருக்கையில் என் தாயாரும் நானும் ஆறு மாதங்கள் தடுப்புக்காவலில் செலவிட்டோம். நான் 18 வயதான அதே நாளில், என் தாயாரும் நானும் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டோம்.
என்ன நடக்கிறதென்று நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பாக, விசாரணை எல்லாம் முடிந்துவிட்டது. என் தாயாரை நான் மறுபடியும் பார்க்கமாட்டேன் என்று நான் அறியவில்லை. வழக்கு மன்றத்தில், கருப்பு மர பெஞ்ச்சின்மீது எனக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததே அவர்களைப் பற்றிய என் கடைசி நினைவாக இருக்கிறது. நாங்கள் இருவரும் குற்றமுள்ளவர்களாகத் தீர்க்கப்பட்டோம். நான் நான்கு வருடங்களும் என் தாயார் ஒன்றரை வருடங்களும் சிறையில்போடப்படும்படி தீர்ப்பளிக்கப்பட்டோம்.
அந்நாட்களில் சிறைச்சாலைகளிலும் முகாம்களிலும் யெகோவாவின் சாட்சிகள் ஆயிரக்கணக்கில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும், நான் ஸ்டோல்பெர்க்கில் இருந்த சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன், அங்கு நான் ஒருவன் மாத்திரமே சாட்சியாக இருந்தேன். தன்னந்தனிமையாக வைக்கப்படும் சிறையில் ஓர் ஆண்டுக்கு மேற்பட்ட காலம் நான் செலவிட்டேன், என்றாலும் யெகோவா என்னுடன் இருந்தார். என் சிறுவயதில் அவரிடமாக நான் வளர்த்திருந்த அன்பு, நான் ஆவிக்குரியப் பிரகாரமாய்ப் பிழைத்திருப்பதற்கு முக்கிய சாதனமாக இருந்தது.
நான் சிறைச்சாலையில் இரண்டரை ஆண்டுகள் இருந்த பின்பு, மே, 9, 1945-ல் எங்களுக்கு நற்செய்தி கிடைத்தது—போர் முடிந்துவிட்டது! அதே நாளில் நான் விடுதலை செய்யப்பட்டேன். 110 கிலோமீட்டர் தூரம் நடந்த பின்பு, முற்றிலும் களைப்புற்ற நிலையாலும் பட்டினியாலும் உண்மையாகவே நோயுற்றவனாக வீட்டுக்கு வந்துசேர்ந்தேன். நான் மறுபடியும் சுகம் பெறுவதற்கு பல மாதங்கள் எடுத்தன.
நான் வந்து சேர்ந்தவுடன், மிகக் கடுந்துயரமளிக்கும் செய்திகளால் தாக்கப்பட்டேன். முதலாவது, என் தாயைப் பற்றியது. அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்த பின்பு, யெகோவாவில் தன் விசுவாசத்தைத் துறந்துவிட்டதாகக் கூறும் ஒரு ஆவணத்துக்குக் கையெழுத்திடும்படி நாஜிக்கள் கேட்டனர். என் தாயார் அதைச் செய்ய மறுத்துவிட்டார்கள். ஆகையால், கெஸ்டாப்போ ஆள், அவர்களை ரேவன்ஸ்பர்க்கிலிருந்த, பெண்களின் கான்சென்ட்ரேஷன் முகாமுக்குக் கொண்டுசென்று விட்டான். அங்கே, போர் முடிவதற்குச் சற்று முன்புதானே அவர்கள் நச்சுக் காய்ச்சல் வந்து இறந்துவிட்டார்கள். அவர்கள் மிக தைரியமுள்ள கிறிஸ்தவராக—ஒருபோதும் பின்வாங்காமல் கடினமாய்ப் போராடினவராக—இருந்தார்கள். யெகோவா அவர்களைத் தயவாய் நினைவுகூருவாராக.
என் மூத்த சகோதரன், வெர்னரைப் பற்றிய செய்தியும் இருந்தது; இவர் தன்னை யெகோவாவுக்கு ஒருபோதும் ஒப்புக்கொடுக்கவில்லை. இவர் ஜெர்மன் படையைச் சேர்ந்திருந்து, ரஷ்யாவில் கொல்லப்பட்டார். என் தகப்பன்? அவர் வீட்டுக்குத் திரும்பிவந்தார், ஆனால் விசனகரமாய், தங்கள் விசுவாசத்தைத் துறந்துவிட ஒப்புக்கொண்டு அந்த வெறுக்கத்தக்க ஆவணச்சான்றில் கையெழுத்திட்ட மிகச் சில சாட்சிகளில் ஒருவராக அவர் இருந்தார். நான் அவரைப் பார்த்தபோது, அவர் சலிப்புற்றவராயும், மனக்கலக்கமுள்ளவராயும் தோன்றினார்.—2 பேதுரு 2:20.
ஆர்வமுள்ள ஆவிக்குரிய நடவடிக்கையின் சுருக்கமான ஒரு காலப்பகுதி
லீப்ஸிக்கில், மார்ச் 10, 1946-ல், போருக்குப் பின்னான என் முதல் அசெம்பிளிக்கு நான் ஆஜரானேன். அதே நாளில் முழுக்காட்டுதல் நிகழ்ச்சியும் இருக்கப் போவதாக அறிவிப்பு செய்தபோது எத்தகைய கிளர்ச்சியூட்டிற்று! பல ஆண்டுகளுக்கு முன்பாகவே என் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த போதிலும், முழுக்காட்டப்படுவதற்கு இதுவே என் முதல் வாய்ப்பாக இருந்தது. அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
ஒரு மாத பயனியர் ஊழியத்திற்குப் பின்பு, மார்ச் 1, 1947-ல் மாக்டிபர்க்கிலிருந்த பெத்தேலுக்கு வரும்படி நான் அழைக்கப்பட்டேன். அணுகுண்டு வெடிகளால் சங்கத்தின் அலுவலகங்கள் பேரளவில் சேதமாகியிருந்தன. அவற்றைப் பழுதுபார்த்து சீர்ப்படுத்தும் வேலையில் உதவிசெய்வது எத்தகைய சிலாக்கியமாக இருந்தது! அந்தக் கோடைக்காலத்திற்குப் பின் விட்டன்பெர்கெ நகரத்தில் விசேஷித்த பயனியராக நான் நியமிக்கப்பட்டேன். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதில் 200-க்கு மேற்பட்ட மணிநேரங்களை நான் சில மாதங்களில் செலவிட்டேன். மறுபடியும் சுதந்திரமாக—போர் இல்லாமல், துன்புறுத்தல் இல்லாமல், சிறைப்படுத்துதல்கள் இல்லாமல்—இருந்தது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது!
வருந்தத்தக்கதாக, அந்தச் சுதந்திரம் நெடுங்காலம் நீடிக்கவில்லை. போருக்குப் பின், ஜெர்மனி பிரிக்கப்பட்டது, நான் வாழ்ந்த இடப்பகுதி கம்யூனிஸ்டுகளின் அதிகாரத்துக்குள் வீழ்ந்தது. 1950-ன் செப்டம்பரில், கிழக்கு ஜெர்மனியின் ஸ்டாஸி எனப்பட்ட இரகசிய போலீஸார், சகோதரரை திட்டமிட்டு கைதுசெய்யத் தொடங்கினார்கள். எனக்கு விரோதமாய்க் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவையாக இருந்தன. அமெரிக்க அரசாங்கத்திற்கு வேவு பார்ப்பவனாய் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டேன். பிரான்டன்பர்க்கில் இருந்த, அந்நாட்டின் மிக மோசமான ஸ்டாஸி சிறைச்சாலைக்கு அவர்கள் என்னை அனுப்பினார்கள்.
என் ஆவிக்குரிய சகோதரரிடமிருந்து ஆதரவு
அங்கே அந்த ஸ்டாஸி பகல் நேரத்தில் என்னைத் தூங்க விடவில்லை. பின்பு இரவு முழுவதும் அவர்கள் என்னை விடாமல் குறுக்குக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சில நாட்கள் இத்தகைய சித்திரவதை செய்த பின்பு, காரியங்கள் இன்னும் மிக மோசமாயிற்று. ஒரு காலையில், என்னை என் சிறை இருப்பிடத்திற்கு அனுப்பிவிடுவதற்குப் பதிலாக, அவர்களுடைய யூ-பூட் ஸெலன் எனப்பட்ட கொடும் மோசமான அடிக்கிடங்கு ஒன்றுக்கு என்னைக் கொண்டுசென்றனர். (இந்தச் சிறைக்கூட தனியறைகள், அடிநிலக்கிடங்கில் ஆழமான இடத்தில் இருந்ததால் நீர்மூழ்கிக் கப்பல் சிறைகள் என்றழைக்கப்பட்டன.) துருப்பிடித்த ஒரு பழைய இரும்புக் கதவை அவர்கள் திறந்து, உள்செல்லும்படி என்னிடம் சொன்னார்கள். உயர்ந்த வாசற்படியில் நான் ஏறி இறங்க வேண்டியிருந்தது. என் காலை நான் கீழே வைத்தபோது அந்தத் தரை முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்ததை உணர்ந்தேன். பயங்கர கிறீச்சொலியுடன் அந்தக் கதவு தடாலென்று மூடப்பட்டது. அங்கு விளக்கும் இல்லை ஜன்னலுமில்லை. கும்மிருட்டாக இருந்தது.
தரையில் பல அங்குலம் உயரம்வரை தண்ணீர் நிரம்பியிருந்ததால், என்னால் உட்காரவோ, படுக்கவோ, தூங்கவோ முடியவில்லை. பல யுகங்களைப்போல தோன்றின நேரத்திற்குப் பின், மிகப் பிரகாசமான விளக்கொளியின்கீழ் மேலுமானக் குறுக்கு விசாரணைக்கு நான் திரும்ப கொண்டுசெல்லப்பட்டேன். எது அதிக மோசமாயிருந்தது—ஏறக்குறைய முழு இருட்டில் நாள் முழுவதும் தண்ணீரில் நிற்பதா அல்லது எனக்கு நேராகத் திருப்பி வைக்கப்பட்ட இராட்சத பல்புகளின் வேதனையுண்டாக்கும் பிரகாசத்தை இரவு முழுவதும் சகிப்பதா—எனக்குத் தெரியவில்லை.
என்னைச் சுட்டுக் கொல்லப்போவதாகப் பல சந்தர்ப்பங்களில் பயமுறுத்தினர். பல இரவுகள் கேள்வி கேட்டு விசாரணை செய்த பின்பு, உயர் பதவியிலிருந்த ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் ஒரு காலையில் என்னை வந்து பார்த்தார். நாஜி கெஸ்டாப்போ என்னை நடத்தியிருந்ததைப் பார்க்கிலும் மிக மோசமாக ஜெர்மன் ஸ்டாஸி என்னை நடத்திக்கொண்டிருந்ததை அவரிடம் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது. நாஜி அரசாங்கத்தின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகித்தனர் என்றும், கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின்கீழும் நடுநிலை வகிக்கின்றனர், உலகத்தில் எங்கிருந்தாலும் அரசியலில் நாங்கள் தலையிடுவதில்லை என்றும் அவரிடம் சொன்னேன். மேலும், அதற்கு மாறாக, இப்போது ஸ்டாஸி அதிகாரிகளாக இருக்கும் பலர் அப்போது ஹிட்லர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களாய் இருந்தவர்கள், குற்றமற்ற ஆட்களைக் கொடுமையாகத் துன்புறுத்துவது எவ்வாறென அவர்கள் அங்கே கற்றிருக்கலாம் என்று மேலும் சொன்னேன். நான் பேசிக்கொண்டிருக்கையில், குளிரினாலும், பசியாலும், முழுச்சோர்வினாலும் என் உடல் நடுங்கியது.
ஆச்சரியத்துக்கேதுவாக, அந்த ரஷ்ய அதிகாரி என்மீது கோபமடையவில்லை. அதற்கு மாறாக, அவர் என்மீது ஒரு கம்பளத்தைப் போட்டு, தயவான முறையில் என்னை நடத்தினார். அவர் வந்து பார்த்துச் சென்று சில நாட்களுக்குப் பின், இதைப் பார்க்கிலும் சற்று மேம்பட்டிருந்த ஓர் அறைக்கு நான் அனுப்பப்பட்டேன். சில நாட்களுக்குப் பின் ஜெர்மன் வழக்கு மன்றங்களிடம் நான் ஒப்புவிக்கப்பட்டேன். என் வழக்கு, விசாரணை செய்யப்படுவதற்காக நான் காத்துக்கொண்டிருக்கையில் இன்னும் ஐந்து சாட்சிகளோடு ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ளும் சிறந்த சிலாக்கியத்தை அனுபவித்து மகிழ்ந்தேன். குரூரமாய் நடத்தப்பட்டதை மிகுதியாய்ச் சகித்த பின்பு, என் ஆவிக்குரிய சகோதரரின் கூட்டுறவை அனுபவிப்பது எவ்வளவு உயிர்ப்பூட்டும் ஆறுதல் தருவதாக கண்டேன்!—சங்கீதம் 133:1.
நான் வேவு பார்த்த குற்றமுடையவனாக வழக்கு மன்றத்தில் தீர்க்கப்பட்டு, சீர்திருத்தல் சிறையில் நான்கு ஆண்டுகள் வைக்கப்படும்படி தண்டனை அளிக்கப்பட்டேன். அது கடுமை குறைந்த தீர்ப்பாகக் கருதப்பட்டது. சகோதரர்களில் சிலர், பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைக்கைதிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர். உச்சக் கடுமையாக காவல்செய்யப்பட்ட சீர்திருத்தல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். அந்தச் சிறைச்சாலைக்குள் ஒரு சுண்டெலியுங்கூட உட்புகவோ வெளிவரவோ முடிந்திராது என்று நான் நினைக்கிறேன்—அந்தச் சிறைக்காவல் அவ்வளவு கண்டிப்புடையதாக இருந்தது. எனினும், யெகோவாவின் உதவியால் தைரியமுள்ள சகோதரர் சிலர், ஒரு முழு பைபிளை இரகசியமாகக் கொண்டுவரக்கூடியோராக இருந்தனர். அது தனித்தனி புத்தகப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, கைதிகளாக இருந்த சகோதரருக்குள் சுற்றி வரச் செய்யப்பட்டது.
இதை நாங்கள் எவ்வாறு செய்தோம்? அது மிகக் கடினமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குளிப்பதற்கு எங்களைக் கொண்டுசென்றபோதே, ஒருவரோடொருவர் எங்களுக்குத் தொடர்புண்டான ஒரே சமயம். ஒரு சந்தர்ப்பத்தில், நான் குளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சகோதரன், தன் துவாலையில் பைபிள் பக்கங்கள் சிலவற்றை ஒளித்து வைத்திருந்ததாக என் காதில் மெல்லமாக சொன்னார். நான் குளித்த பின்பு, என்னுடைய துவாலைக்குப் பதிலாக அவருடைய துவாலையை விரைவில் எடுக்க வேண்டும்.
அந்தச் சகோதரர் என்னிடம் மெல்லமாக பேசினதை காவற்காரரில் ஒருவன் பார்த்துவிட்டு, தடியால் அவரை மிக மோசமாய் அடித்துவிட்டான். நான் அந்தத் துவாலையை திடீரென எடுத்துக்கொண்டு மற்ற கைதிகளோடு சேர்ந்துகொள்ள வேண்டும். பைபிள் பக்கங்களுடன் நான் பிடிக்கப்படாததற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மற்றபடி ஆவிக்குரிய உணவருந்தும் எங்கள் திட்டம் ஆபத்திற்குள்ளாகியிருக்கும். இதைப்போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டாயின. எங்கள் பைபிள் வாசிப்பு, மறைவாகவும் ஆபத்தான நிலையிலும் எப்போதும் செய்யப்பட்டது. “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகள் மெய்யாகவே மிகப் பொருத்தமாயிருந்தன.—1 பேதுரு 5:8.
ஏதோ காரணத்தினிமித்தம், அதிகாரிகள், எங்களில் சிலரை ஒரு சீர்திருத்தல் சிறையிலிருந்து மற்றொன்றுக்கு மறுபடியும் மறுபடியுமாக மாற்றிக்கொண்டிருக்கத் தீர்மானித்தனர். நான்கு ஆண்டு காலத்தில், வெவ்வேறுபட்ட பத்து சீர்திருத்தச்சாலைகளுக்கு நான் மாற்றப்பட்டேன். எனினும், சகோதரரை நான் எப்போதும் காண முடிந்தது. இந்தச் சகோதரர் எல்லாரையும் நான் மிக ஆழ்ந்த முறையில் நேசிப்பவனானேன், நான் சிறைமாற்றப்படும் ஒவ்வொரு சமயத்திலும் என் இருதயத்தில் மிகுந்த துயரத்தோடு அவர்களை விட்டுச் சென்றேன்.
கடைசியாக நான் லீப்ஸிக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். என்னை விடுதலை செய்த சிறைக்காவலாளன், என்னை வழியனுப்புவதற்குப் பதிலாக, “சீக்கிரத்தில் உன்னை நாங்கள் மறுபடியும் காண்போம்” என்று சொன்னான். நான் மறுபடியும் சிறையில் அடைக்கப்படும்படி அவனுடைய பொல்லாத மனம் விரும்பியது. சங்கீதம் 124:1-3-ஐ [தி.மொ.] நான் அடிக்கடி நினைக்கிறேன், அங்கே அது சொல்வதாவது: “மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாதிருந்தால், அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில் அவர்கள் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.”
தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களை யெகோவா விடுவிக்கிறார்
இப்போது நான் மறுபடியும் சுதந்திரமாக இருந்தேன். இரட்டை பிள்ளைகளில் ஒருவரான என் சகோதரி ரூத்தும், ஆவிக்குரிய சகோதரி ஹெர்ட்டா ஷ்லென்ஸாக்கும் அங்கு முன்வாசலில் எனக்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தச் சிறையிருப்பு ஆண்டுகளின்போதெல்லாம், உணவடங்கிய ஒரு சிறிய பொட்டலத்தை ஒவ்வொரு மாதமும் ஹெர்ட்டா எனக்கு அனுப்பிவந்திருந்தார்கள். அந்தச் சிறிய பொட்டலங்கள் இல்லாவிட்டால், சிறையில் நான் இறந்திருப்பேன் என்று நான் உண்மையில் நம்புகிறேன். யெகோவா அவர்களை தயவுடன் நினைவுகூருவாராக.
நான் விடுதலையாக்கப்பட்ட சமயத்திலிருந்து, பல ஊழிய சிலாக்கியங்களை யெகோவா அளித்து என்னை ஆசீர்வதித்திருக்கிறார். ஜெர்மனியிலுள்ள க்ரோனாவில் நான் மறுபடியுமாக விசேஷ பயனியராக சேவித்தேன். மேலும் ஜெர்மன் ஆல்ப்புகளில் வட்டாரக் கண்காணியாகச் சேவித்தேன். பின்னால், மிஷனரிகளின் பயிற்றுவிப்புக்குரிய, உவாட்ச்டவர் பைபிள் பள்ளியாகிய கிலியட்டின் 31-வது வகுப்புக்கு வரும்படி அழைக்கப்பட்டேன். 1958-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டின்போது, யாங்கி ஸ்டேடியத்தில் எங்கள் பட்டமளிப்பு நடைப்பெற்றது. சகோதரரும் சகோதரிகளும் அடங்கிய பெருங்கூட்டத்திற்கு முன்பாக, எனது அனுபவங்கள் சிலவற்றைச் சொல்லும்படியான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது.
பட்டமளிப்புக்குப்பின் மிஷனரியாகச் சேவிக்க சிலிக்கு பயணப்பட்டேன். அங்கு, சிலியின் தெற்குக் கோடி பாகத்தில் வட்டாரக் கண்காணியாக மறுபடியும் சேவித்தேன்—சொல்லர்த்தமாய் நான் பூமியின் கடைமுனைகளுக்கு அனுப்பப்பட்டேன். 1962-ல், பாட்ஸி ப்யூட்னேகலை மணம் செய்துகொண்டேன். அவள், அ.ஐ.மா. டெக்ஸாஸ், சான் அன்டோனியோவிலிருந்து வந்த ஓர் அழகிய மிஷனரி. அவள் என் பக்கத்தில் இருக்க, அவளோடுகூட யெகோவாவுக்குச் சேவை செய்வதில், அதிசயமான பல ஆண்டுகளை அனுபவித்து மகிழ்ந்தேன்.
என் வாழ்க்கையின் 70-க்கு மேற்பட்ட ஆண்டுகளில், சந்தோஷமான பல சமயங்களையும் பல கடும் துன்பங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன். சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “நீதிமானுக்கு வரும் தீங்குகள் அநேகம்; யெகோவா அவைகளெல்லாவற்றினின்றும் அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19) 1963-ல் சிலியில் இன்னும் இருக்கையில், எங்கள் பெண்குழந்தையின் கடும் துயரத்தைத் தரும் மரணத்தை பாட்ஸியும் நானும் எதிர்ப்பட்டோம். பின்னால், பாட்ஸி மிகவும் நோயுற்றாள், நாங்கள் டெக்ஸாஸூக்கு இடம் மாறிச் சென்றோம். அவள் 43 வயது மாத்திரமே ஆகியவளாக இருந்தபோது, அவளும், பெரும் வருத்தந்தரும் சூழ்நிலைமைகளின்கீழ் இறந்துவிட்டாள். என் அழகிய மனைவியை தயவாக நினைவுகூரும்படி நான் யெகோவாவிடம் அடிக்கடி ஜெபிக்கிறேன்.
இப்போது, நான் நோயுற்றவனாயும் முதிர்வயதானவனாயும் இருக்கிறபோதிலும், டெக்ஸாஸ் பிரேடியில், ஒழுங்கான பயனியராகவும் ஒரு மூப்பராகவும் சேவிக்கும் சிலாக்கியத்தை அனுபவித்து மகிழ்கிறேன். உண்மைதான், வாழ்க்கை எப்போதும் எளிதானதாக இருக்கவில்லை. நான் இனிமேலும் எதிர்ப்பட வேண்டிய மற்ற சோதனைகளும் இருக்கலாம். எனினும், சங்கீதக்காரனைப்போல் நான் இவ்வாறு சொல்ல முடியும்: “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.”—சங்கீதம் 71:17.
[பக்கம் 23-ன் படம்]
(1) இப்போது ஒரு மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிறேன், (2) திருமணத்திற்கு சற்று முன்பு, பாட்ஸியுடன், (3) ஹெர் ஷ்னீடரின் வகுப்பில், (4) ரேவன்ஸ்பர்க்கில் இறந்துபோன என் தாயார், தெரேஸா