அவர்கள் தங்களுக்குப் புகழ் உண்டாக்கவில்லை
இழிபெயரெடுத்த பாபேல் கோபுரத்தைக் கட்டியவர்களுடைய பெயர்களை பைபிள் குறிப்பிடுவதில்லை. அந்த விவரப்பதிவு குறிப்பிடுகிறது: ‘அவர்கள்: வாருங்கள், நாம் நாடுகள் தோறும் சிதறிப் போகுமுன்னே ஒரு நகரையும், விண்ணை முட்டும் ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் புகழ் உண்டாகச் செய்வோமாக என்று சொன்னார்கள்.’—ஆதியாகமம் 11:4, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
“அவர்கள்” யார்? இச்சம்பவம் ஜலப்பிரளயத்திற்கு சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. அதற்குள், சுமார் 800 வயதான நோவா, ஆயிரக்கணக்கில் இருந்த தன்னுடைய சந்ததியினர் மத்தியில் வாழ்ந்துவந்தார். அவர்கள் எல்லாரும் ஒரே மொழியை பேசினார்கள்; ஜலப்பிரளயத்திற்குப் பின் அவரும் அவருடைய குமாரரும் குடியிருந்த பொதுவான அந்தப் பகுதியில் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். (ஆதியாகமம் 11:1) ஒருசமயம், பெருகியிருந்த இந்த ஜனத்தாரில் ஒரு பகுதியினர் கிழக்கு நோக்கிச் சென்று, “சிநெயார் தேசத்திலே ஒரு பள்ளத்தாக்கைக்” கண்டார்கள்.—ஆதியாகமம் 11:2, NW.
படுதோல்வி
இந்தப் பள்ளத்தாக்கில்தான் கடவுளுக்கு எதிராக அந்தக் கூட்டத்தார் கலகம்செய்ய தீர்மானித்தார்கள். எப்படி? நாம் பார்க்கலாம். ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்பும்படி’ முதல் தம்பதியினருக்கு யெகோவா தேவன் கட்டளையிட்டபோது அவர் தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். (ஆதியாகமம் 1:28) ஜலப்பிரளயத்திற்குப்பின் நோவாவுக்கும் அவருடைய குமாரருக்கும் இது மீண்டும் சொல்லப்பட்டது. கடவுள் அவர்களுக்கு கட்டளையிட்டதாவது: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள்.” (ஆதியாகமம் 9:7) யெகோவாவின் கட்டளைக்கு எதிர்மாறாக, “பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு” அந்த மக்கள் ஒரு நகரத்தைக் கட்டினார்கள்.
இந்த மக்கள் தங்களுக்குப் ‘புகழ் உண்டாக்கும்’ நோக்கத்தோடு ஒரு கோபுரத்தையும்கூட கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி அந்தக் கோபுரத்தை அவர்களால் கட்டி முடிக்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாதவாறு யெகோவா அவர்களுடைய மொழியைக் குழப்பிவிட்டார் என பைபிள் பதிவு காட்டுகிறது. ஏவப்பட்டெழுதப்பட்ட அந்த விவரப்பதிவு சொல்கிறது, “அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.”—ஆதியாகமம் 11:7, 8.
கட்டியவர்களுடைய பெயர்கள் ஒருபோதும் ‘புகழ்’ உண்டாக்கவோ பிரபலமடையவோ இல்லை என்ற உண்மையிலிருந்து இத்திட்டம் படுதோல்வியடைந்தது சிறப்பித்துக் காண்பிக்கப்படுகிறது. சொல்லப்போனால், அவர்களுடைய பெயர்கள் அறியப்படவேயில்லை, மனித சரித்திரத்திலிருந்தே துடைத்தழிக்கப்பட்டு விட்டன. ஆனால் நோவாவின் கொள்ளுப்பேரனாகிய நிம்ரோதைப் பற்றியென்ன? கடவுளுக்கு எதிராக செய்யப்பட்ட இந்தக் கலகத்திற்குத் தலைவன் அல்லவா அவன்? அவனுடைய பெயர் பிரபலமாக இருக்கிறது அல்லவா?
நிம்ரோது—இகழத்தக்க கலகக்காரன்
நிம்ரோது தலைவனாக இருந்தான் என்பதில் சந்தேகமே இல்லை. ‘யெகோவாவுக்கு எதிரான பலமிக்க வேட்டைக்காரன்’ என ஆதியாகமம் 10-ம் அதிகாரம் அவனை அறிமுகப்படுத்துகிறது. (ஆதியாகமம் 10:9, NW) “இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்” என்றும்கூட பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 10:8) நிம்ரோது ஒரு மாவீரனாக, வன்முறைக்காரனாக இருந்தான். ஜலப்பிரளயத்திற்குப்பின் தன்னை ராஜாவாக்கிக்கொண்ட முதல் மனித ஆட்சியாளனாக ஆனான். நிம்ரோது கட்டிடக் கலைஞனாகவும் இருந்தான். பாபேல் உள்ளிட்ட எட்டு நகரங்களை ஸ்தாபித்தவன் என பைபிள் அவனைப் பற்றி சொல்கிறது.—ஆதியாகமம் 10:10-12.
ஆகையால், நிம்ரோது—கடவுளின் எதிராளி, பாபேலின் ராஜா, நகரங்களைக் கட்டியவன்—பாபேல் கோபுரத்தைக் கட்டுவதில் ஈடுபட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. அவன் தனக்கு புகழ் உண்டாக்கினான் அல்லவா? நிம்ரோது என்ற பெயரைக் குறித்து, கிழக்கத்திய மக்களின் பழக்கவழக்கங்களை ஆராயும் நிபுணர் ஈ. எஃப். சி. ரோஷன்முல்லர் இவ்வாறு எழுதினார்: “நிம்ரோது என சூட்டப்பட்ட இந்தப் பெயர் [மாரத்] என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. எபிரெய அர்த்தத்தின்படி, ‘அவன் கலகம்செய்தான்,’ ‘அவன் குறைவுபட்டான்’ என பொருள்படுகிறது.” பின்பு ரோஷன்முல்லர் விளக்குகிறார், “மரணத்திற்குப்பின் பிரபலமானவர்களுக்கு சூட்டப்பட்ட பெயரால் அவர்களை அழைப்பது கிழக்கத்தியர்கள் மத்தியில் சர்வசாதாரணம்; சிலசமயங்களில், இதிலிருந்துதான் பெயர்களுக்கும் செய்யப்பட்ட காரியங்களுக்கும் இடையே வியக்கத்தக்க இணைப்பொருத்தம் உண்டாகிறது.”
நிம்ரோது என்பது பிறப்பின்போது கொடுக்கப்பட்ட பெயரல்ல என்ற கருத்தை அநேக அறிஞர்கள் ஒத்துக்கொள்கின்றனர். மாறாக, அவனுடைய கலகத்தனமான செயல் வெளிப்பட்டபின் அதற்குப் பொருத்தமாக அவனுக்கு சூட்டப்பட்ட ஒரு பெயரென அதை அவர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, சி. எஃப். கைல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “[மாரத்] என்பதிலிருந்து வந்த நிம்ரோது—‘நாங்கள் கலகம் செய்வோம்’—என்ற இந்தப் பெயர்தானே, கடவுளை ஏதோவொரு விதத்தில் தீவிரமாக எதிர்த்ததைக் குறிக்கிறது. இது அந்தளவு பிரத்தியேக குணத்தைக் குறிப்பதாக இருப்பதால், அவனுடைய காலத்தில் வாழ்ந்தோரால் மட்டுமே இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்; இவ்விதமாய் அது ஒரு தனிப்பட்ட பெயராக ஆகியிருக்கிறது.” ஓர் அடிக்குறிப்பில், சரித்திராசிரியர் ஜேக்கப் பெரிஸோனியஸ் இவ்வாறு எழுதியதாக கைல் மேற்கோள் காட்டுகிறார்: “இந்த மனிதன் [நிம்ரோது], கூட்டாளிகளின் தொகுதியினரால் சூழப்பட்ட முரட்டு குணமுள்ள ஒரு வேட்டைக்காரனாக, மற்றவர்களை கலகத்திற்குத் தூண்டும்படி, ‘நாம் கலகம் செய்யலாம்! நாம் கலகம் செய்யலாம்!’ என்ற பொருள்படும் ‘நிம்ரோது, நிம்ரோது’ என்ற வார்த்தையை எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருந்தான்; இப்படியாக பிற்காலங்களில், மற்றவர்களாலும், ஏன் மோசேயாலும்கூட, ஒரு தனிப்பட்ட பெயரான அந்த வார்த்தையால் அவன் அழைக்கப்பட்டான்.”
நிம்ரோது தனக்காக புகழ் உண்டாக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. பிறப்பில் அவனுக்கு கொடுக்கப்பட்ட பெயர் நிச்சயமாகவே அறியப்படவில்லை. அவனுடைய தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுடைய பெயர் சரித்திரத்தில் பதிவுசெய்யப்படாததைப் போலவே, அவனுடைய பெயரும் பதிவுசெய்யப்படவில்லை. அவனுடைய பெயரால் அழைக்கப்படுவதற்கு எந்தவொரு சந்ததியும் அவனுக்கில்லை. மகிமையையும் புகழையும் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறான். நிம்ரோது என்ற பெயர், யெகோவா தேவனிடம் மடத்தனமாக சவால்விட்ட இகழத்தக்க ஒரு கலகக்காரன் என்ற நிரந்தர முத்திரையை அவனுக்கு குத்திவிட்டது.