யெகோவா தம் வாக்குறுதிகளை உண்மையுள்ளோருக்கு நிறைவேற்றுகிறார்
“வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.”—எபிரெயர் 10:23.
1, 2. யெகோவாவின் வாக்குறுதிகளில் நாம் ஏன் முழு நம்பிக்கை வைக்கலாம்?
யெகோவா, தம்மிலும் தம்முடைய வாக்குறுதிகளிலும் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு அதைக் காத்துக்கொள்ளும்படி தம் ஊழியர்களிடம் கேட்கிறார். இப்படிப்பட்ட விசுவாசத்தால், யெகோவா தாம் செய்யப்போவதாக வாக்குறுதி அளித்திருப்பதை நிறைவேற்றுவார் என்பதை ஒருவர் முழுமையாக நம்பலாம். அவருடைய ஏவப்பட்ட வார்த்தை அறிவிக்கிறது: “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும், நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] ஆணையிட்டுச் சொன்னார்.”—ஏசாயா 14:24.
2 ‘சேனைகளின் யெகோவா ஆணையிட்டுச் சொன்னார்’ என்ற கூற்று, அவர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தம்முடைய மதிப்புமிக்க ஆணையை கொடுக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்ல முடிகிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) நாம் யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவருடைய ஞானம் நம்மை வழிநடத்த அனுமதிக்கையில், நம்முடைய பாதைகள் நிச்சயமாகவே நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்; ஏனெனில் கடவுளுடைய ஞானம், “அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம்.”—நீதிமொழிகள் 3:18; யோவான் 17:3.
பூர்வ காலங்களில் உண்மையான விசுவாசம்
3. நோவா எவ்வாறு யெகோவாவில் விசுவாசத்தைக் காண்பித்தார்?
3 உண்மையான விசுவாசம் காண்பித்தோரிடம் யெகோவாவின் செயல்களைப் பற்றிய பதிவு, அவருடைய நம்பகத்தன்மைக்கு சான்றளிக்கிறது. உதாரணமாக, 4,400 வருடங்களுக்கு முன்பு, நோவாவின் நாளைய உலகம் ஒரு பூகோள ஜலப்பிரளயத்தால் அழிக்கப்படவிருந்ததை நோவாவிடம் கடவுள் சொன்னார். மனிதரையும் மிருக ஜீவன்களையும் பாதுகாப்பதற்காக ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி அவருக்கு கட்டளை கொடுத்தார். நோவா என்ன செய்தார்? எபிரெயர் 11:7 (திருத்திய மொழிபெயர்ப்பு) நமக்கு சொல்கிறது: “விசுவாசத்தினாலே நோவா, இன்னும் காணப்படாதவைகளைப்பற்றித் தெய்வ எச்சரிப்புப் பெற்றுத் தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பயபக்தியோடு பேழையை உண்டுபண்ணினான்.” இதற்குமுன் ஒருபோதும் சம்பவித்திராத ஒன்றில், “இன்னும் காணப்படாத” ஒன்றில் நோவா ஏன் இத்தகைய விசுவாசம் வைத்திருந்தார்? ஏனென்றால், கடவுள் சொல்லும் எதுவும் நிறைவேறும் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு, மனித குடும்பத்துடன் கடவுள் கொண்டிருந்த முந்தைய செயல்தொடர்புகளைப் பற்றி அவர் அறிந்திருந்தார். எனவே, ஜலப்பிரளயமும்கூட வருமென்பதைக் குறித்து நோவா நம்பிக்கையுடன் இருந்தார்.—ஆதியாகமம் 6:9-22.
4, 5. ஆபிரகாம் ஏன் யெகோவாவை முழுமையாக நம்பினார்?
4 உண்மையான விசுவாசத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக திகழ்பவர் ஆபிரகாம். சுமார் 3,900 வருடங்களுக்கு முன்பு, அவருடைய மனைவி சாராளுக்குப் பிறந்த ஒரே குமாரனாகிய ஈசாக்கை பலிசெலுத்தும்படி கடவுள் அவரிடம் சொன்னார். (ஆதியாகமம் 22:1-10) ஆபிரகாம் எவ்வாறு பிரதிபலித்தார்? எபிரெயர் 11:17 சொல்கிறது: “விசுவாசத்தினாலே ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.” என்றபோதிலும், கடைசி தருணத்தில், யெகோவாவின் தூதன் ஆபிரகாமை தடுத்து நிறுத்தினார். (ஆதியாகமம் 22:11, 12) ஆனால், இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வதைக் குறித்து ஆபிரகாம் ஏன் சிந்தித்துக்கூட பார்ப்பார்? ஏனென்றால், எபிரெயர் 11:18 சொல்கிறபடி, “[ஈசாக்கை] மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி[னார்].” ஆனால், உயிர்த்தெழுதலை ஆபிரகாம் பார்த்ததுகூட கிடையாது, இது சம்பவித்ததாக முந்தைய பதிவு எதுவும் இல்லை; அப்படியிருக்கையில், ஆபிரகாம் எவ்வாறு உயிர்த்தெழுதலில் விசுவாசம் வைக்க முடிந்தது?
5 ஒரு குமாரன் பிறப்பான் என்று கடவுள் அவர்களிடம் வாக்குறுதி அளித்தபோது சாராளுக்கு 89 வயது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். சாராளுடைய கர்ப்பம் குழந்தை பிறப்பிக்க இயலாத நிலையில்—வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால், செத்ததாய்—இருந்தது. (ஆதியாகமம் 18:9-14) சாராளுடைய கர்ப்பத்தை கடவுள் உயிரடையச் செய்தார், அதனால் அவள் ஈசாக்கைப் பெற்றாள். (ஆதியாகமம் 21:1-3) சாராளுடைய செத்த கர்ப்பத்தை கடவுள் உயிரடையச் செய்தார் என்றால், தேவைப்பட்டால் ஈசாக்கையும் அவரால் மீண்டும் உயிருக்குக் கொண்டுவர முடியும் என ஆபிரகாம் அறிந்திருந்தார். ஆபிரகாமைப் பற்றி ரோமர் 4:20, 21 சொல்கிறது: “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.”
6. யோசுவா எவ்வாறு யெகோவாவில் நம்பிக்கையை தெரியப்படுத்தினார்?
6 3,400-க்கும் மேற்பட்ட வருடங்களுக்குமுன், யோசுவா நூறு வயதையும் தாண்டியவராய் இருந்தபோது, மேலும் கடவுள் எவ்வளவு நம்பத்தக்கவர் என்பதை தன் வாழ்நாளில் அனுபவப்பூர்வமாய் உணர்ந்த பிறகு, தன் நம்பிக்கைக்கு இந்தக் காரணத்தை அவர் கொடுத்தார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.
7, 8. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஜீவனை காக்கும் என்ன போக்கை தெரிந்துகொண்டனர், ஏன்?
7 சுமார் 1,900 வருடங்களுக்கு முன்பு, மனத்தாழ்மையுள்ள மக்கள் அநேகர் உண்மையான விசுவாசத்தைச் செயலில் காண்பித்தனர். பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திலிருந்து இயேசுவே மேசியா என்பதை அவர்கள் உணர்ந்து, அவருடைய போதனைகளை ஏற்றுக்கொண்டனர். இந்த உண்மைகளிலும் எபிரெய வேதாகமத்திலும் உறுதியான ஆதாரம் அவர்களுக்கு இருந்ததால், இயேசு போதித்த காரியங்களில் விசுவாசம் வைத்தனர். இவ்வாறாக, யூதேயாவும் எருசலேமும் உண்மைத்தன்மை இல்லாமல் இருந்ததால் அவற்றின்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வருமென்று இயேசு சொன்னபோது, அவர்கள் அவரை நம்பினர். தங்கள் ஜீவனைப் பாதுகாத்துக்கொள்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவர்களிடம் அவர் சொன்னபோது, அதை செய்தனர்.
8 சேனைகளால் எருசலேம் சூழப்பட்டிருக்கும்போது, அவர்கள் தப்பியோட வேண்டும் என்று விசுவாசிகளுக்கு இயேசு சொன்னார். பொ.ச. 66-ல் ரோம சேனைகள் எருசலேமுக்கு எதிராக வந்தன. ஆனால் ஏதோ விவரிக்கப்படாத காரணத்திற்காக ரோமர்கள் எருசலேமை விட்டுச்சென்றனர். கிறிஸ்தவர்கள் அந்நகரத்தை விட்டுச்செல்வதற்கு அது அடையாளமாய் இருந்தது; ஏனென்றால், இயேசு சொல்லியிருந்தார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.” (லூக்கா 21:20, 21) உண்மையான விசுவாசமுள்ளவர்கள் எருசலேமையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் விட்டுப் பாதுகாப்புக்காக தப்பி ஓடினார்கள்.
விசுவாசமின்மையின் விளைவுகள்
9, 10. (அ) மதத் தலைவர்கள் இயேசுவில் எவ்வாறு தங்களுடைய விசுவாசமின்மையை காண்பித்தனர்? (ஆ) விசுவாசமின்மையின் விளைவுகள் யாவை?
9 உண்மையான விசுவாசம் இல்லாதவர்கள் என்ன செய்தனர்? அவர்களுக்கு வாய்ப்பு இருந்தபோது தப்பி ஓடவில்லை. தங்களுடைய தலைவர்கள் தங்களைப் பாதுகாக்க முடியுமென்று எண்ணினர். இருப்பினும், அத்தலைவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றியவர்களுக்கும்கூட இயேசுதான் மேசியா என்பதற்கான அத்தாட்சி இருந்தது. அப்படியென்றால் இயேசு சொன்னதை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அவர்களுடைய பொல்லாத இருதய நிலையின் காரணமாகவே. லாசருவை அவர் உயிர்த்தெழுப்பிய பின்பு, சாதாரண ஜனங்களில் அநேகர் இயேசுவிடம் திரண்டுசெல்வதையும் அவரில் விசுவாசம் வைப்பதையும் அவர்கள் பார்த்ததற்கு முன்பே இது அம்பலப்படுத்தப்பட்டது. யோவான் 11:47, 48 இவ்வாறு விவரிக்கிறது: “பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் [யூதருடைய உயர்நீதி மன்றத்தை] கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் [இயேசு] அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.” 53-ம் வசனம் சொல்கிறது: “அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.”
10 என்னே ஒரு சிறந்த அற்புதத்தை இயேசு செய்திருந்தார்—லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினார்! ஆனால் அதைச் செய்ததற்காக அந்த மதத் தலைவர்கள் இயேசுவை கொலைசெய்ய விரும்பினார்கள். “லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணின”போது, அவர்களுடைய அப்பட்டமான பொல்லாத குணம் மேலும் வெட்டவெளிச்சமாக்கப்பட்டது. (யோவான் 12:10, 11) லாசரு அப்பொழுதுதான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தார், மீண்டும் அவரை மரித்தவராக காணவே ஆசாரியர்கள் விரும்பினார்கள்! அவர்கள் கடவுளுடைய சித்தத்தையோ பொது மக்களுடைய நலத்தையோ பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் சுயநலக்காரர்களாக, தங்களுடைய சொந்த ஸ்தானங்களையும் தங்களுடைய செளகரியங்களையும் பற்றியே அக்கறையுள்ளவர்களாக இருந்தார்கள். “அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.” (யோவான் 12:43) ஆனால் அவர்களுடைய விசுவாசமின்மைக்கு தக்க கூலி கிடைத்தது. பொ.ச. 70-ல் ரோம படைகள் திரும்பிவந்து அவர்களுடைய ஸ்தானத்தையும் அவர்களுடைய ஜனத்தையும் அவர்களில் பலரையும் அழித்துப்போட்டன.
நம்முடைய நாளில் காண்பிக்கப்பட்ட விசுவாசம்
11. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், எவ்வாறு உண்மை விசுவாசம் செயலில் காண்பிக்கப்பட்டது?
11 இந்நூற்றாண்டில், உண்மையான விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் அநேகர் இருந்திருக்கின்றனர். உதாரணமாக, 1900-களின் ஆரம்பத்தில், பொதுவில் உலக மக்கள் சமாதானமும் செழிப்புமுடைய எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்தனர். அதேசமயத்தில், யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் வைத்திருந்தவர்கள், சரித்திரத்திலேயே மிகவும் தொல்லைமிக்க கொடிய காலத்திற்குள் மனிதவர்க்கம் நுழையவிருந்ததைப் பற்றி எச்சரித்து வந்தனர். அதைத்தான் கடவுளுடைய வார்த்தை மத்தேயு 24-ம் அதிகாரம், 2 தீமோத்தேயு 3-ம் அதிகாரம் இன்னும் மற்ற இடங்களில் முன்னறிவித்தது. விசுவாசமுள்ள அந்த மக்கள் சொன்னது நிச்சயமாகவே நடந்தது, அது முதல் உலகப் போருடன் 1914-ல் ஆரம்பித்தது. உண்மையில் இந்த உலகம், ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களுக்குள்,’ முன்னறிவிக்கப்பட்ட அதன் ‘கடைசி நாட்களுக்குள்’ நுழைந்தது. (2 தீமோத்தேயு 3:1, NW) அதைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்திராதபோது எப்படி யெகோவாவின் சாட்சிகளுக்கு உலக நிலைமைகளைப் பற்றிய உண்மை தெரிந்திருந்தது? எப்படியென்றால், யோசுவாவைப் போல, யெகோவாவின் வார்த்தையில் ஒன்றாகிலும் தவறாது என்ற விசுவாசம் அவர்களுக்கும் இருந்தது.
12. இன்று, யெகோவாவின் என்ன வாக்குறுதிகளில் அவருடைய ஊழியர்கள் முழு நம்பிக்கை வைக்கின்றனர்?
12 இன்று, யெகோவாவில் தங்களுடைய நம்பிக்கையை வைத்திருக்கிற அவருடைய ஊழியர்கள், உலகமுழுவதும் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் இருக்கின்றனர். வன்முறையும் ஒழுக்கக்கேடும் நிறைந்த இந்தக் காரிய ஒழுங்குமுறையை சீக்கிரத்தில் கடவுள் முடிவுக்குக் கொண்டுவருவார் என்பதை அவருடைய தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் அத்தாட்சியிலிருந்து அறிந்திருக்கின்றனர். ஆகவே, 1 யோவான் 2:17-ன் நிறைவேற்றத்தை காணும் காலம் அருகிலிருக்கிறது என்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்; அது இவ்வாறு சொல்கிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” யெகோவா இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் அவருடைய ஊழியர்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
13. யெகோவாவை நீங்கள் எந்தளவுக்கு நம்பலாம்?
13 யெகோவாவை நீங்கள் எந்தளவுக்கு நம்பலாம்? அவருக்காக உங்கள் உயிரையே நீங்கள் பணையம் வைக்கலாம்! அவரை சேவிப்பதற்காக இப்பொழுது உங்களுடைய உயிரை இழந்தாலும்கூட, உயிர்த்தெழுதலில் அவர் உங்களுக்கு ஒளிமயமான வாழ்வை மீண்டும் தருவார். இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்: “அந்த மணிநேரம் வருகிறது; அப்போது ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள [அதாவது, கடவுளுடைய ஞாபகத்திலுள்ள] யாவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.” (யோவான் 5:28, 29, NW) இதைச் செய்யக்கூடிய எந்த அரசியல் தலைவரையோ விஞ்ஞானியையோ தொழிலதிபரையோ மருத்துவரையோ அல்லது வேறெந்த மனிதனையோ உங்களுக்குத் தெரியுமா? அவர்களால் முடியாது என்பதை கடந்தகால பதிவு காட்டுகிறது. யெகோவாவால் முடியும், அவர் நிச்சயம் செய்வார்!
உண்மையுள்ளோருக்கு மிகச் சிறந்த எதிர்காலம்
14. உண்மையுள்ளோருக்கு என்ன அற்புதமான எதிர்காலத்தை கடவுளுடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது?
14 கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் மூலம் வரப்போகும் புதிய பூமியைப் பற்றிய நிச்சயத்தை இயேசு சுட்டிக்காட்டினார்; அவர் சொன்னதாவது: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” (மத்தேயு 5:5) சங்கீதம் 37:29-ல் காணப்படும் கடவுளுடைய இந்த வாக்குறுதியை அது உறுதிப்படுத்தியது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” இயேசுவின் மரணத்திற்கு சற்று முன்பு ஒரு தீயோன் அவரிடம் விசுவாசத்தை காண்பிக்கையில், இயேசு அந்த மனிதனிடம் சொன்னார்: “நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்.” (லூக்கா 23:43) ஆம், இந்த மனிதன் பூமியில் ஜீவனடையும்படி உயிர்த்தெழுப்பப்பட்டு அந்தப் பரதீஸில் வாழும் வாய்ப்பை பெறுவதை கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராகிய இயேசு பார்த்துக்கொள்வார். இன்று, யெகோவாவின் ராஜ்யத்தில் விசுவாசம் வைக்கும் அனைவரும் பரதீஸில் வாழ்வதை எதிர்நோக்கி இருக்கலாம். அப்பொழுது, “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4.
15, 16. புதிய உலகில் வாழ்க்கை ஏன் மிகவும் சமாதானமுள்ளதாய் இருக்கும்?
15 நாம் இப்பொழுது அந்தப் புதிய உலகிற்கு நம்முடைய மனதை திருப்பலாம். ஏற்கெனவே நாம் அதில் வாழ்ந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்ளுங்கள். மகிழ்ச்சிபொங்கும் மக்கள் அங்கே பூரண சமாதானத்துடன் ஒன்றுகூடி வாழ்வதை நாம் பார்க்கிறோம். ஏசாயா 14:7-ல் (NW) முன்னறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்ற நிலைமைகளை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்: “பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; ஜனங்கள் சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் மனமகிழ்ச்சியுள்ளவர்களாய் ஆனார்கள்.” ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள்? ஒரு விஷயம் என்னவென்றால், வீட்டுக் கதவுகளுக்கு தாழ்ப்பாள்கள் இல்லை என்பதை கவனியுங்கள். அவற்றிற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் திருட்டோ குற்றச்செயலோ வன்முறையோ அங்கு இல்லை. அங்குள்ள நிலைமை எப்படி இருக்குமென்று கடவுளுடைய வார்த்தை சொன்னதோ அதைப் போலவே இருக்கிறது: “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:4.
16 இனிமேல் போரே இராது, ஏனென்றால் இந்தப் புதிய உலகில் போர் தடைசெய்யப்பட்டுள்ளது. எல்லா போராயுதங்களும் சமாதானத்திற்கான கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. முழுமையான கருத்தில், ஏசாயா 2:4 நிறைவேற்றப்பட்டிருக்கிறது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” ஆனால் அதைத்தானே நாம் எதிர்பார்த்தோம்! ஏன்? ஏனென்றால் புதிய உலக குடிகள் பலர், யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் கடவுளை சேவித்துக்கொண்டிருந்த பழைய உலகிலேயே அதைச் செய்ய கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
17. கடவுளுடைய ராஜ்யத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைமைகள் இருக்கும்?
17 வேறொன்றையும் நீங்கள் கவனிக்கிறீர்கள், அதாவது அங்கே வறுமையே இல்லை. குடிசையில் வாழ்கிறவர்களோ கந்தலான உடை உடுத்தியவர்களோ அல்லது வீடில்லாதவர்களோ எவருமே கிடையாது. ஒவ்வொருவரும் வசதியான ஒரு வீட்டையும், அழகிய மரங்களும் மலர்களும் நிறைந்த நன்கு பராமரிக்கப்பட்ட இடத்தையும் வைத்திருக்கிறார்கள். (ஏசாயா 35:1, 2; 65:21, 22; எசேக்கியேல் 34:27) அங்கே பசிக்கொடுமையே இல்லை, ஏனென்றால் அனைவருக்கும் ஏராளமான உணவு இருக்குமென்ற தம்முடைய வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றியிருக்கிறார்: “பூமியில் ஏராளமான தானியம் விளைந்திருக்கும்; மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும்.” (சங்கீதம் 72:16, NW) உண்மையில், கடவுளுடைய ராஜ்ய வழிநடத்துதலின்கீழ், முன்பு ஏதேனில் கடவுள் நோக்கம் கொண்டபடியே, எழில் கொஞ்சும் பரதீஸ் உலகளாவ விஸ்தரிக்கப்படுகிறது.—ஆதியாகமம் 2:8.
18. புதிய உலகில் என்ன நிலைமைகள் இனிமேலும் மக்களை அச்சுறுத்தா?
18 ஒவ்வொருவருக்கும் இருக்கும் அபார சக்தியைக் கண்டும்கூட நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஏனென்றால் இப்பொழுது அவர்களுக்கு பரிபூரண உடலும் உள்ளமும் இருக்கிறது. இனி வியாதியோ வேதனையோ மரணமோ எதுவுமில்லை. ஒருவரும் வீல்சேர்களிலோ படுத்த படுக்கையாகவோ இல்லை. அவையனைத்தும் என்றென்றும் ஒழிக்கப்பட்டுவிட்டது. (ஏசாயா 33:24; 35:5, 6) ஏன், எந்த மிருகங்களும் மனித உயிருக்கு அச்சுறுத்தலாய் இருக்காதே; ஏனென்றால் கடவுளுடைய வல்லமையால் அவை சமாதானமுள்ளவையாய் ஆக்கப்பட்டிருக்கின்றன!—ஏசாயா 11:6-8; 65:25; எசேக்கியேல் 34:25.
19. ஏன் ஒவ்வொரு நாளும் புதிய உலகில் ‘மனமகிழ்ச்சி’ இருக்கும்?
19 இந்தப் புதிய உலகின் உண்மையுள்ள குடிகளால் எப்பேர்ப்பட்ட அருமையான நாகரிகம் ஸ்தாபிக்கப்பட்டுவருகிறது! அவர்களுடைய சக்திகளும் திறமைகளும் பூமியின் செல்வமும் தீமையான காரியங்களுக்கு அல்ல, நல்நாட்டங்களுக்காகவும்; மற்றவர்களுடன் போட்டியிடுவதற்கு அல்ல, ஒத்துழைப்பதற்காகவுமே அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, நீங்கள் சந்திக்கிற எவரும் நம்பகமானவர்; ஏனென்றால், கடவுள் வாக்குறுதி அளித்தபடி, அனைவரும் ‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கிறார்கள்.’ (ஏசாயா 54:13, NW) ஒவ்வொருவரும் கடவுளுடைய சட்டங்களாலும் நியமங்களாலும் வழிநடத்தப்படுவதால், ‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ (ஏசாயா 11:9) உண்மையில், இந்தப் புதிய உலகில், சங்கீதம் 37:11 சொன்னபடி, ஒவ்வொரு நாளும் ‘மனமகிழ்ச்சியே.’
சந்தோஷமான எதிர்காலம் உறுதியளிக்கப்படுகிறது
20. சமாதானமான எதிர்காலத்தை அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
20 அந்தச் சந்தோஷமுள்ள எதிர்காலத்தில் நாமும் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஏசாயா 55:6 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” அப்படி நாம் தேடுகையில், நம்முடைய மனப்பான்மை சங்கீதம் 143:10-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி இருக்க வேண்டும்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்.” இதைச் செய்பவர்கள் இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவுக்குமுன் குற்றமற்றவர்களாய் நடக்கலாம், மேலும் மகத்தான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கலாம். “உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம் அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.”—சங்கீதம் 37:37, 38.
21, 22. கடவுள் இப்பொழுது எதை உருவாக்கி வருகிறார், அந்தப் பயிற்றுவிப்பு எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?
21 யெகோவாவின் சித்தத்தைச் செய்ய விரும்புவோரை எல்லா தேசத்திலிருந்தும் இப்பொழுதே அவர் அழைக்கிறார். பைபிள் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தபடி, அவருடைய புதிய பூமிக்குரிய சமுதாயத்தின் அடித்தளமாக அவர்களை ஒழுங்கமைக்கிறார். அது சொல்கிறது: “கடைசிநாட்களில் [நாம் இப்பொழுது வாழுகிற இந்தக் காலத்தில்] . . . திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு [அவருடைய மேன்மைப்படுத்தப்பட்ட உண்மை வணக்கத்துக்கு] . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—ஏசாயா 2:2, 3.
22 வெளிப்படுத்துதல் 7:9 இவர்களை, ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்களாக’ விவரிக்கிறது. 14-ம் வசனம் குறிப்பிடுகிறது: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்,” தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைத்தவர்கள். இந்தப் புதிய பூமிக்கான அடித்தளம், இப்பொழுது கிட்டத்தட்ட 60 லட்சம் ஆட்களாலும் ஒவ்வொரு வருடமும் அதன் பாகமாக ஆகிக்கொண்டு வரும் லட்சக்கணக்கான புதியவர்களாலும் ஆனது. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அனைவரும் அவருடைய புதிய உலகில் நித்திய ஜீவனுக்காக இப்பொழுதே பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பூமியை ஒரு பரதீஸாக்குவதற்குத் தேவையான ஆவிக்குரிய திறமைகளையும் மற்ற திறமைகளையும் அவர்கள் கற்றுக்கொண்டு வருகின்றனர். அந்தப் பரதீஸ் மெய்மையாக ஆகும் என்பதை அவர்கள் முழுமையாக நம்புகின்றனர், ஏனெனில் “வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.”—எபிரெயர் 10:23.
மறுபார்வைக்கான குறிப்புகள்
◻ விசுவாசமின்மை முதல் நூற்றாண்டில் என்ன விளைவுகளைக் கொண்டுவந்தது?
◻ எந்தளவுக்கு கடவுளுடைய ஊழியர்கள் அவரில் நம்பிக்கை வைக்கலாம்?
◻ உண்மையுள்ளோருக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
◻ கடவுளுடைய புதிய உலகில் நமக்கு ஓர் மகிழ்ச்சியான எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
புதிய பூமிக்குரிய சமுதாயத்திற்கு இப்பொழுதே யெகோவா அடித்தளம் போட்டு வருகிறார்