விசுவாசக் குறைவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
“சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.”—எபிரெயர் 3:12.
1. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியவை, என்ன அதிர்ச்சியூட்டும் உண்மையை நம் கவனத்திற்கு கொண்டுவருகின்றன?
யெகோவாவோடு தனிப்பட்ட உறவை அனுபவித்த ஆட்கள், ‘பொல்லாத இருதயத்தை’ வளர்த்துக்கொண்டு ‘ஜீவனுள்ள தேவனைவிட்டு விலக முடியும்’ என்பது எப்பேர்ப்பட்ட அச்சமேற்படுத்தும் எண்ணம்! இது ஒரு நல்ல எச்சரிப்பும்கூட! அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை அவிசுவாசிகளுக்கு எழுதவில்லை. மாறாக, இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் நம்பிக்கை வைத்ததன் அடிப்படையில் தங்கள் உயிரை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஆட்களுக்கே எழுதினார்.
2. என்ன கேள்விகளை நாம் சிந்திக்கவேண்டும்?
2 அப்படிப்பட்ட அருமையான ஆவிக்குரிய நிலையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு ‘அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்தை’ வளர்த்துக்கொள்ள முடியும்? கடவுளுடைய அன்பையும் தகுதியற்ற தயவையும் ருசிபார்த்திருந்த ஒருவர் எப்படித்தான் வேண்டுமென்றே அவரை விட்டு விலகமுடியும்? நம்மில் யாருக்காவது இவ்வாறு நேரிடக்கூடுமா? இவை சிந்தனையைத் தூண்டும் கருத்துகள். ஆகவே, இந்த எச்சரிப்பிற்கு பின்னால் இருக்கும் காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தகுதியானதே.—1 கொரிந்தியர் 10:11.
ஏன் இப்படிப்பட்ட உறுதியான ஆலோசனை?
3. எருசலேமிலும் அதைச் சுற்றிலுமிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பாதித்த சூழ்நிலைகளை விவரியுங்கள்.
3 பொ.ச. 61-ல் யூதேயாவில் வாழ்ந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் தன் கடிதத்தை எழுதினார் என தோன்றுகிறது. “அமைதலான, நேர்மையான எந்த மனிதனுக்கும், எருசலேம் நகரத்திற்கு உள்ளேயோ அந்த முழுப் பிராந்தியத்திலும் உள்ள வேறெந்த இடத்திலேயோ, சமாதானமோ பாதுகாப்போ இல்லாத” ஒரு காலமாக அது இருந்தது என ஒரு சரித்திர ஆசிரியர் கூறுகிறார். ஒடுக்கும் ரோம சேனை, ரோமர்களுக்கு எதிரான யூத மதவெறியர்களின் ஆர்ப்பாட்டம், இந்தக் குழப்பம் நிறைந்த சமயத்தை தங்களுக்கு ஆதாயப்படுத்திக்கொண்ட திருடர்களின் குற்றச்செயல்கள் இவை எல்லாம் சேர்ந்துகொண்டதால் அது வன்முறையும் அக்கிரமமும் நிறைந்த காலமாக இருந்தது. அப்படிப்பட்ட காரியங்களில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க வெகுவாய் முயன்ற கிறிஸ்தவர்களுக்கு இவையெல்லாம் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கின. (1 தீமோத்தேயு 2:1, 2) அவர்களுடைய நடுநிலையின் காரணமாக, அவர்கள் சமுதாயத்திற்கு லாயக்கற்றவர்கள் என சிலர் கருதினர்; அரசாங்கத்தின் எதிரிகள் என்றும்கூட நினைத்தனர். கிறிஸ்தவர்கள் அடிக்கடி தவறாக நடத்தப்பட்டனர். தனிப்பட்ட இழப்புகளை எதிர்ப்பட்டனர்.—எபிரெயர் 10:32-34.
4. மத சம்பந்தமான என்ன எதிர்ப்பை எபிரெய கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டனர்?
4 எபிரெய கிறிஸ்தவர்கள், மத சம்பந்தமாகவும் கடினமான எதிர்ப்பை சந்தித்தனர். இயேசுவின் உண்மையுள்ள சீஷர்களின் வைராக்கியமும் அதன் விளைவாக கிறிஸ்தவ சபை வேகமாக வளர்ச்சியடைந்ததும் யூதர்களின், முக்கியமாக மதத்தலைவர்களின் பொறாமையையும் எரிச்சலையும் கிளறியது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்களைத் துன்புறுத்தி, தொல்லைப்படுத்த அவர்கள் எதையும் செய்ய துணிவார்கள்.a (அப்போஸ்தலர் 6:8-14; 21:27-30; 23:12, 13; 24:1-9) சில கிறிஸ்தவர்கள் ஒருவேளை நேரடியான தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்றாலும்கூட யூதர்களால் அவமதிக்கப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டனர். ஒரு ஆலயம் இல்லை, ஆசாரியன் இல்லை, பண்டிகைகள் இல்லை, பலிகள் இல்லை; கிறிஸ்தவம் ஒரு புதிய மதம்தான், யூதமதத்தின் சிறப்பு அதற்கு இல்லை என்று இழித்துரைக்கப்பட்டது. அவர்களுடைய தலைவரான இயேசுவும்கூட ஒரு குற்றவாளியாக தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டார். தங்கள் மதத்தை பின்பற்ற கிறிஸ்தவர்களுக்கு விசுவாசமும், தைரியமும், சகிப்புத்தன்மையும் வேண்டியிருந்தது.
5. யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய விழிப்புடன் இருப்பது ஏன் அவசியமாக இருந்தது?
5 எல்லாவற்றையும்விட, யூதேயாவிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்கள் அந்தத் தேசத்தின் சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமயத்தில் வாழ்ந்து வந்தனர். யூத ஒழுங்குமுறையின் முடிவைக் குறிக்கும் என்று அவர்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருந்த அநேக காரியங்கள் ஏற்கெனவே நடந்திருந்தன. முடிவு வெகு தொலைவில் இல்லை. கிறிஸ்தவர்கள் தப்பிப்பிழைக்க, ஆவிக்குரிய விதத்தில் விழிப்புள்ளவர்களாகவும், ‘மலைகளுக்கு ஓடிப்போக’ தயாராகவும் இருக்க வேண்டும். (மத்தேயு 24:6, 15, 16) இயேசு சொன்னதைப்போல உடனடியான நடவடிக்கை எடுக்க தேவையான விசுவாசமும் ஆவிக்குரிய பலமும் அவர்களுக்கு இருக்குமா? அது சந்தேகத்திற்குரியதாக தோன்றுகிறது.
6. யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எது அவசரமாக தேவைப்பட்டது?
6 யூத ஒழுங்குமுறை முழுமையாக அழிக்கப்படுவதற்கு முன் எபிரெய கிறிஸ்தவர்கள், சபைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான பிரச்சினைகளை எதிர்ப்பட்டனர் என்பது தெளிவாக இருக்கிறது. அவர்களுக்கு உற்சாகம் தேவைப்பட்டது. ஆனால், அவர்கள் தெரிவு செய்திருந்த பாதையே சரியானது என்றும் அவர்கள் துன்பப்பட்டதும் சகித்திருந்ததும் வீணல்ல என்றும் உறுதியளிக்கும் ஆலோசனையும் வழிநடத்துதலும்கூட அவர்களுக்கு தேவைப்பட்டன. சந்தோஷகரமாக, பவுல் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்து அவர்களுக்கு உதவினார்.
7. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதில் நாம் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்?
7 எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியது நமக்கு அதிக அக்கறைக்குரியதாக இருக்கவேண்டும். ஏன்? ஏனென்றால் அவர்கள் எப்படிப்பட்ட சமயத்தில் வாழ்ந்தார்களோ அதேப்போன்றதொரு சமயத்தில் நாம் வாழ்கிறோம். சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் உலகத்திலிருந்து தினமும் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். (1 யோவான் 5:19) கடைசி நாட்கள் பற்றியும் “உலகத்தின் முடிவு” பற்றியும் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கூறிய தீர்க்கதரிசனங்கள் நம் கண்முன் நிறைவேறுகின்றன. (மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4; வெளிப்படுத்துதல் 6:1-8) எல்லாவற்றிற்கும் மேலாக, ‘இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் தப்பிக்கும்படி’ நாம் ஆவிக்குரிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.—லூக்கா 21:36.
மோசேயைவிட பெரியவர்
8. எபிரெயர் 3:1-ல் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கூறுவதன் மூலம் உடன் கிறிஸ்தவர்கள் என்ன செய்யும்படி பவுல் உற்சாகப்படுத்தினார்?
8 ஒரு முக்கிய குறிப்பை சொல்பவராய் பவுல் எழுதினார்: “நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப் பாருங்கள்.” (எபிரெயர் 3:1) ‘கவனித்துப் பார்’ என்பதன் அர்த்தம், “தெளிவாக உணர்தல் . . . , முழுமையாக புரிந்துகொள்ளுதல், உன்னிப்பாக பார்த்தல்.” (வைனின் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி [ஆங்கிலம்]) அவர்களுடைய விசுவாசத்திலும் இரட்சிப்பிலும் இயேசுவின் பங்கைக் குறித்த சரியான போற்றுதலை வளர்த்துக்கொள்வதற்கு ஊக்கமாய் முயற்சி செய்யும்படி பவுல் தன் உடன் விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார். அவ்வாறு செய்வது, விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும் என்ற அவர்களுடைய தீர்மானத்தைப் பலப்படுத்தும். அப்படியென்றால் இயேசுவின் பங்குதான் என்ன, நாம் ஏன் அவரைக் ‘கவனித்துப் பார்க்க’ வேண்டும்?
9. இயேசுவை ‘அப்போஸ்தலர்’ என்றும் ‘பிரதான ஆசாரியர்’ என்றும் பவுல் ஏன் குறிப்பிட்டார்?
9 பவுல், ‘அப்போஸ்தலர்’ மற்றும் ‘பிரதான ஆசாரியர்’ என்ற வார்த்தைகளை இயேசுவுக்கு பயன்படுத்தினார். ‘அப்போஸ்தலர்’ என்பது அனுப்பப்படும் ஒருவரை, இந்த இடத்தில் மனிதவர்க்கத்தோடு தொடர்புகொள்வதற்கான கடவுளுடைய வழியைக் குறிக்கிறது. ‘பிரதான ஆசாரியரின்’ மூலமே மனிதர்கள் கடவுளை அணுகமுடியும். இந்த இரண்டு ஏற்பாடுகளும் உண்மையான வணக்கத்தில் மிகவும் அவசியம். இயேசுவே இந்த இரண்டு ஸ்தானத்தையும் வகிக்கிறார். கடவுளைப் பற்றிய சத்தியத்தை மனிதவர்க்கத்திற்கு போதிப்பதற்காக பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டவர் இவரே. (யோவான் 1:18; 3:16; 14:6) யெகோவாவின் ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில், பாவ மன்னிப்புக்கான முன்நிழலாக காணப்பட்ட பிரதான ஆசாரியராக அபிஷேகம் செய்யப்பட்டவரும் இயேசுவே. (எபிரெயர் 4:14, 15; 1 யோவான் 2:1, 2) இயேசு மூலமாக நமக்கு கிடைக்கக்கூடிய ஆசீர்வாதங்களை உண்மையில் போற்றுகிறோம் என்றால், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு தைரியத்தையும் திடதீர்மானத்தையும் பெறுவோம்.
10. (அ) யூத மதத்தைவிட கிறிஸ்தவம் மேலானது என்பதை மதித்துணர எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எவ்வாறு உதவினார்? (ஆ) தன் குறிப்பை உணர்த்துவதற்கு பவுல் என்ன பொதுவான உண்மையைக் குறிப்பிட்டார்?
10 கிறிஸ்தவ விசுவாசத்தின் மதிப்பை உணர்த்துவதற்காக பவுல், இயேசுவை மோசேயுடன் ஒப்பிட்டார். மோசேயை தங்கள் முற்பிதாக்களிலேயே மிகவும் பெரிய தீர்க்கதரிசி என யூதர்கள் கருதினர். மோசேயைவிட இயேசு பெரியவர் என்ற உண்மையை எபிரெய கிறிஸ்தவர்கள் முழு இருதயத்தோடு ஏற்றுக்கொண்டிருந்தால் யூதமதத்தைவிட கிறிஸ்தவம் மேலானது என்பதைச் சந்தேகிக்க அவர்களுக்கு எந்தக் காரணமும் இருந்திருக்காது. மோசேக்கு, கடவுளுடைய ‘வீடாகிய’ இஸ்ரவேல் தேசத்தின் அல்லது சபையின் மீது பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதற்கு அவர் தகுதியுள்ளவராக இருந்தபோதிலும் அவர் வெறுமனே உண்மையுள்ள ஊழியக்காரன் அல்லது வேலைக்காரன் மட்டுமே என பவுல் சுட்டிக்காட்டினார். (எண்ணாகமம் 12:7, NW) மறுபட்சத்தில், இயேசு குமாரனாக, அந்த வீட்டின் எஜமானாக இருந்தார். (1 கொரிந்தியர் 11:3; எபிரெயர் 3:2, 3, 5) பவுல் தன் குறிப்பை அழுத்திக் கூறுவதற்கு இந்தப் பொதுவான உண்மையைக் கூறினார்: “ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) கடவுளே எல்லாவற்றையும் உண்டுபண்ணினவராக அல்லது சிருஷ்டிகராக இருப்பதால் எல்லாரையும்விட மேலானவர் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது. நியாயமாகவே, கடவுளுடைய உடன் வேலையாளாக இயேசு இருப்பதால், அவரே எல்லா சிருஷ்டிக்கும், மோசேக்கும்கூட மேலானவர்.—நீதிமொழிகள் 8:30, NW; கொலோசெயர் 1:15-17.
11, 12. எதை ‘முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்படி’ எபிரெய கிறிஸ்தவர்களைப் பவுல் உற்சாகப்படுத்தினார், அவருடைய ஆலோசனையை நாம் எவ்வாறு பொருத்தலாம்?
11 உண்மையில் எபிரெய கிறிஸ்தவர்கள் பெரும் பாக்கியசாலிகளாக இருந்தனர். அவர்கள் “பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்க[ள்]” என்பதைப் பவுல் நினைப்பூட்டினார். இது, யூத ஒழுங்குமுறை அளித்த எதையும்விட மிகவும் உயர்வான ஒரு சிலாக்கியமாகும். (எபிரெயர் 3:1) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் யூத பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களை விட்டுவிட்டதற்காக வருத்தப்படுவதற்கு பதிலாக, ஒரு புதிய வெகுமதியைப் பெறப்போகிறார்கள் என்பதால் பவுலின் வார்த்தைகள் அவர்களை நன்றியுள்ளவர்களாக உணரும்படி செய்திருக்கும். (பிலிப்பியர் 3:7, 8) அவர்களுடைய சிலாக்கியத்தை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கவும், அதை அசட்டை செய்யாமல் இருக்கவும் உற்சாகப்படுத்துகிறவராய் பவுல் கூறினார்: “கிறிஸ்துவோ [கடவுளுடைய] வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மை பாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.”—எபிரெயர் 3:6.
12 யூத ஒழுங்குமுறையின் மீது வரவிருந்த அழிவிலிருந்து எபிரெய கிறிஸ்தவர்கள் தப்பிக்க வேண்டுமானால், கடவுள் கொடுத்த நம்பிக்கையை அவர்கள் “முடிவுபரியந்தம் உறுதியாய்” பற்றிக்கொண்டிருக்க வேண்டும். இந்த ஒழுங்குமுறையின் அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இன்று நாமும் இதையே செய்யவேண்டும். (மத்தேயு 24:13) வாழ்க்கையின் கவலைகள், மக்களின் அக்கறையின்மை அல்லது நம் சொந்த அபூரணங்கள் கடவுளுடைய வாக்குறுதிகளில் நம் விசுவாசம் குறையும்படி செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. (லூக்கா 21:16-19) நம்மை நாமே எவ்வாறு பலப்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்பதற்கு பவுலின் கூடுதலான வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவோம்.
“உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்”
13. என்ன எச்சரிப்பைப் பவுல் கொடுத்தார், சங்கீதம் 95-ஐ எவ்வாறு பொருத்தினார்?
13 எபிரெய கிறிஸ்தவர்களின் மேலான நிலையைப் பற்றி கலந்தாலோசித்த பிறகு பவுல் இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்: “ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” (எபிரெயர் 3:7, 8) பவுல், 95-ம் சங்கீதத்திலிருந்து மேற்கோள் காட்டினார், ஆகவே “பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே” என அவரால் சொல்லமுடியும்.b (சங்கீதம் 95:7, 8, NW; யாத்திராகமம் 17:1-7) வேதவாக்கியங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவி மூலம் ஏவப்பட்டு எழுதப்பட்டவையே.—2 தீமோத்தேயு 3:16.
14. யெகோவா இஸ்ரவேலருக்காக செய்திருந்தவற்றிற்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள், ஏன்?
14 எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான பிறகு யெகோவாவோடு ஓர் உடன்படிக்கை உறவுக்குள் வரும் பெரிய சிலாக்கியம் இஸ்ரவேலருக்கு கிடைத்தது. (யாத்திராகமம் 19:4, 5; 24:7, 8) என்றபோதிலும், கடவுள் அவர்கள் சார்பாக செய்திருந்தவற்றிற்கு போற்றுதலைக் காண்பிப்பதற்கு மாறாக சீக்கிரத்திலேயே அவர்கள் கலகம் செய்தனர். (எண்ணாகமம் 13:25–14:10) அவர்களால் எப்படி அவ்வாறு நடந்துகொள்ள முடிந்தது? பவுல் காரணத்தைச் சுட்டிக்காண்பித்தார்: அவர்கள் இருதயம் கடினப்பட்டது. ஆனால், கடவுளுடைய வார்த்தைக்கு உணர்வுள்ளதாகவும் உடனே செயல்படுவதாகவும் இருந்த இருதயங்கள் எவ்வாறு கடினப்பட்டன? இதைத் தவிர்க்க நாம் என்ன செய்யவேண்டும்?
15. (அ) முற்காலத்திலும் இப்போதும் ‘கடவுளுடைய சத்தம்’ எவ்வாறு கேட்கப்படுகிறது? (ஆ) ‘கடவுளுடைய சத்தம்’ சம்பந்தமாக நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் யாவை?
15 “அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்” என்ற நிபந்தனையோடு பவுல் தன் எச்சரிப்பை ஆரம்பித்தார். மோசே மூலமாகவும் மற்ற தீர்க்கதரிசிகள் மூலமாகவும் கடவுள் தம் மக்களிடம் பேசினார். பிறகு யெகோவா தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் அவர்களோடு பேசினார். (எபிரெயர் 1:1, 2) இன்று, கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் முழுமையாக நம்மிடம் இருக்கிறது. ‘ஏற்றவேளையிலே ஆவிக்குரிய போஜனம்’ கொடுக்க இயேசு நியமித்த “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யும் நமக்குண்டு. (மத்தேயு 24:45-47, NW) இவ்வாறாக கடவுள் இன்னமும் பேசுகிறார். ஆனால் நாம் செவிகொடுக்கிறோமா? உதாரணமாக, உடை மற்றும் சிகையலங்காரம் அல்லது பொழுதுபோக்கு, இசை ஆகியவற்றை தெரிவுசெய்வது பற்றி நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டால் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? நாம் ‘கேட்கிறோமா,’ அதாவது சொல்வதைக் கேட்டுக் கீழ்ப்படிகிறோமா? சாக்குப்போக்கு சொல்லும் அல்லது ஆலோசனையை எதிர்க்கும் பழக்கமுள்ளவர்களாக நாம் இருந்தால், நம் இருதயம் கடினப்பட்டுபோகும் மறைமுகமான ஆபத்திற்கு நாம் ஆளாகலாம்.
16. நம் இருதயம் கடினப்பட்டு போகக்கூடிய ஒரு வழி எது?
16 நம்மால் செய்யமுடிந்ததும் செய்யவேண்டியதுமான காரியத்திலிருந்து விலகிச் சென்றாலும்கூட நம் இருதயம் கடினப்படக்கூடும். (யாக்கோபு 4:17) யெகோவா இஸ்ரவேலருக்காக எல்லாவற்றையும் செய்திருந்தபோதிலும் அவர்கள் விசுவாசம் காட்ட தவறினர், மோசேக்கு எதிராக கலகம் செய்தனர், கானானைப் பற்றிய கெட்ட அறிக்கையை நம்பினர், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய மறுத்தனர். (எண்ணாகமம் 14:1-4) ஆகவே 40 வருடங்களை வனாந்தரத்தில் செலவு செய்வார்கள் என யெகோவா தீர்ப்பளித்தார். அந்தச் சந்ததியின் உண்மையற்ற ஆட்கள் மரித்துப்போவதற்கு போதுமான காலத்தை அது அனுமதித்தது. அவர்கள் மேல் கோபமூண்டவராய் கடவுள் சொன்னார்: “அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.” (எபிரெயர் 3:9-11) இதிலிருந்து நாம் ஏதாவது பாடம் கற்றுக்கொள்கிறோமா?
நமக்கு ஒரு பாடம்
17. இஸ்ரவேலர்கள், யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பார்த்திருந்தும் அவருடைய அறிவிப்புகளைக் கேட்டிருந்தும் அவர்களுடைய விசுவாசம் ஏன் குறைவுபட்டது?
17 எகிப்திலிருந்து வெளியே வந்த இஸ்ரவேலர்கள், யெகோவாவின் வல்லமையான செயல்களைக் கண்ணார கண்டு, அவருடைய அறிவிப்புகளை காதார கேட்டார்கள். இருந்தாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் கடவுள் தங்களைப் பாதுகாப்பாக வழிநடத்துவார் என்ற விசுவாசம் அவர்களுக்கு இல்லை. ஏன்? அவர்கள், “என்னுடைய வழிகளை அறியாதவர்களென்று” யெகோவாதாமே சொல்கிறார். யெகோவா சொன்னதையும் செய்ததையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்; ஆனாலும் தங்களைக் கவனித்துக்கொள்ள அவருக்கிருக்கும் திறமையில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளவில்லை. தங்கள் தனிப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும் குறித்தே அவ்வளவு அதிகம் கவலையுள்ளவர்களாக இருந்ததால், கடவுளுடைய வழிகளுக்கும் நோக்கத்திற்கும் குறைவான கவனத்தையே செலுத்தினர். ஆம், அவருடைய வாக்குறுதியில் அவர்களுக்கு விசுவாசம் குறைவுபட்டது.
18. பவுலின்படி, எந்தவிதமான நடத்தை ‘அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்தில்’ விளைவடையும்?
18 எபிரெயர்களுக்கு சொன்ன பின்வரும் வார்த்தைகள் நமக்கும் அதேயளவு பொருந்துகின்றன: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” (எபிரெயர் 3:12) ‘ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதே’ ‘அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்திற்கு’ காரணம் என்று கூறுவதன் மூலம் பிரச்சினையின் மூலகாரணத்தைப் பவுல் சுட்டிக்காண்பித்தார். கவனக்குறைவின் காரணமாக ‘கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகுவதைப்’ பற்றி தன்னுடைய கடிதத்தில் முன்னர் அவர் கூறினார். (எபிரெயர் 2:1, NW) என்றபோதிலும், “விலகுவ[து]” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை “விசுவாசத்துரோகம்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். அது, ஓரளவு அவமதிப்போடு வேண்டுமென்றே எதிர்ப்பதை, விலகிச் செல்வதை, பிரிந்து செல்வதைக் குறிக்கிறது.
19. ஆலோசனைக்கு செவிகொடுக்க தவறுவது எவ்வாறு மோசமான விளைவுகளுக்கு வழிநடத்தக்கூடும்? விளக்குங்கள்.
19 ஆகவே குறிப்பு என்னவென்றால், யெகோவாவுடைய வார்த்தை மூலமும் உண்மையுள்ள அடிமை வகுப்பு மூலமும் ஆலோசனையாக வரும் “அவருடைய சத்தத்தைக்” கேட்க தவறும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம் என்றால் வெகு சீக்கிரத்தில் நம் இருதயம் மறத்துப்போய் கடினப்பட்டுவிடும். உதாரணமாக, திருமணமாகாத ஒரு ஜோடி அதிக நெருக்கமாக பழக ஆரம்பிக்கலாம். அதை அவர்கள் வெறுமனே அசட்டை செய்துவிட்டால் என்ன நடக்கும்? அதையே திரும்ப செய்வதிலிருந்து அது அவர்களைத் தடுக்குமா? அல்லது அவ்வாறு மறுபடியும் செய்ய அவர்களைத் தூண்டுமா? அதைப்போலவே, இசை மற்றும் பொழுதுபோக்கைத் தெரிவுசெய்வது போன்றவற்றில் கவனமாய் இருக்கும்படி அடிமை வகுப்பு ஆலோசனைக் கொடுக்கும்போது நாம் அதை நன்றியோடு ஏற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்கிறோமா? ‘சபை கூடிவருதலை விட்டுவிடாமல்’ இருக்கும்படி பவுல் நம்மை உற்சாகப்படுத்தினார். (எபிரெயர் 10:24, 25) இந்த ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தும் சிலர் கிறிஸ்தவ கூட்டங்களை ஏனோதானோவென்று கருதுகின்றனர். சில கூட்டங்களைத் தவறவிடுவதில் அல்லது சிலவற்றை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவதில் எந்தத் தப்பும் இல்லை என்று ஒருவேளை அவர்கள் உணரலாம்.
20. வேதப்பூர்வமான ஆலோசனைக்கு இசைவாக நாம் செயல்பட வேண்டியது ஏன் முக்கியம்?
20 வேதவாக்கியங்களிலும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலும் தெளிவாக காணப்படும் யெகோவாவின் ‘சத்தத்திற்கு’ இசைவாக நாம் செயல்படவில்லை என்றால், சீக்கிரத்தில் நாம் “ஜீவனுள்ள தேவனைவிட்டு வில[கி]” சென்றுவிடுவோம். ஆலோசனையை அசட்டை செய்தால், அதன் முக்கியத்துவத்தை குறைத்துப்பேசுவது, குறைகூறுவது, எதிர்ப்பது போன்றவற்றில் அது வெகு சீக்கிரத்தில் விளைவடையும். அதைத் தடுக்கவில்லை என்றால் “அவிசுவாசமுள்ள பொல்லாத இருதய[த்தில்]” விளைவடையும். அப்படிப்பட்ட நிலையிலிருந்து மீண்டுவருவது பொதுவாகவே மிகவும் கடினமான ஒன்று. (எபேசியர் 4:19-ஐ ஒப்பிடுக.) “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என எரேமியா பொருத்தமாகவே எழுதினார். (எரேமியா 17:9) இதன் காரணமாகவே பவுல் தன் எபிரெய உடன்விசுவாசிகளை இவ்வாறு ஊக்குவித்தார்: “உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.”—எபிரெயர் 3:13.
21. நாம் அனைவரும் என்ன செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறோம், என்ன எதிர்பார்ப்புகள் நமக்கு முன் இருக்கின்றன?
21 அவருடைய வார்த்தை மற்றும் அமைப்பு மூலமாக இன்றும் யெகோவா நம்மோடு பேசுகிறார் என்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிரு[க்க]” நமக்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” தொடர்ந்து உதவுவதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (எபிரெயர் 3:14) கடவுளுடைய அன்பிற்கும் வழிநடத்துதலுக்கும் இசைவாக செயல்படுவதற்கான சமயம் இதுவே. அவ்வாறு செய்கையில் யெகோவாவின் அற்புதமான வாக்குறுதிகளில் மற்றொன்றை, அவருடைய இளைப்பாறுதலில் ‘பிரவேசிப்பதை’ நாம் அனுபவிக்கலாம். (எபிரெயர் 4:3, 10) எபிரெய கிறிஸ்தவர்களோடு பவுல் அடுத்ததாக கலந்தாலோசித்த விஷயம் அதுவே. அடுத்த கட்டுரையில் அதைத்தான் நாமும் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a பெஸ்துவின் மரணத்திற்கு பிறகு, சதுசேயரான அனனஸ் (அனனியா) பிரதான ஆசாரியன் ஆனதாகவும், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனான யாக்கோபையும் மற்ற அப்போஸ்தலரையும் யூத ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி, அவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து, கல்லெறிந்து கொல்லப்படும்படி செய்ததாகவும் ஜொசிபஸ் அறிவித்தார்.
b “மேரிபா” மற்றும் “மாசா” என்பதற்கான எபிரெய வார்த்தைகளை “வாதாடுதல்” மற்றும் “பரிட்சை பார்த்தல்” என மொழிபெயர்க்கும் கிரேக்க செப்டுவஜின்டிலிருந்து பவுல் மேற்கோள் காட்டினார். உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கங்கள் 350 மற்றும் 379-ஐ பார்க்கவும்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஏன் இப்படிப்பட்ட உறுதியான ஆலோசனை கொடுத்தார்?
◻ யூத மதத்தின்கீழ் எபிரெய கிறிஸ்தவர்கள் அனுபவித்ததைப் பார்க்கிலும் மேலானது அவர்களிடம் இருந்தது என்பதை மதித்துணர பவுல் எவ்வாறு உதவினார்?
◻ ஒருவருடைய இருதயம் எவ்வாறு கடினப்படலாம்?
◻ “அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்” வளர்வதை தவிர்க்க நாம் என்ன செய்யவேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
பெரிய மோசேயாகிய இயேசுவில் நீங்கள் விசுவாசம் வைக்கிறீர்களா?