தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யுங்கள்!
நாம் முழுக்காட்டுதல் பெற்ற நாள் நம் நினைவைவிட்டு நீங்கா நாள். நம் இதயத்தில் பொக்கிஷமாக வைத்து நேசிக்கவேண்டிய பொன்னாள். சொல்லப்போனால், கடவுளை சேவிக்க நாம் ஒப்புக்கொடுத்திருப்பதை அரங்கேற்றிய நாள் அந்நாள்.
இந்நிலைக்கு உயர, அதாவது ஊறிப்போன கெட்ட பழக்கங்களை கைவிடுவதற்கும் மோசமான சகவாசத்தை தகர்த்தெறிவதற்கும் வேரூன்றிப்போன சிந்தையையும் நடத்தையையும் மாற்றிக்கொள்வதற்கும் பலர் கடும் முயற்சி செய்திருக்கின்றனர்.
முழுக்காட்டுதல் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்த ஒரு சம்பவம், அது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு மைல் கல். ஆனால் அது ஆரம்பமே. யூதேயாவில் வாழ்ந்த முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையிலேயே நின்றுவிடாமல், நாம் முதிர்ச்சி நிலையை அடைய வேண்டும்.” (எபிரேயர் 6:1, பொ.மொ.) ஆம், கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘தெய்வ குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் முற்றறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகிப் பூரண புருஷனாகும் வரைக்கும், கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்கு வந்தெட்ட’ வேண்டும். (எபேசியர் 4:12, தி.மொ.) முதிர்ச்சியை நோக்கி முன்னேறும்போதுதான் நாம் உண்மையிலேயே ‘விசுவாசத்தில் உறுதிப்பட்டிருக்க’ முடியும்.—கொலோசெயர் 2:7.
கடந்த சில ஆண்டுகளில் புதிதாக முழுக்காட்டப்பட்ட நூறாயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ சபைக்குள் வந்திருக்கின்றனர். ஒருவேளை அவர்களில் நீங்களும் ஒருவராய் இருக்கலாம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல, நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் குழந்தையாய் இருக்க விரும்புகிறதில்லை. வளருவதற்கும் முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்குமே விரும்புகிறீர்கள்! ஆனால் எப்படி முன்னேறுவது? இப்படிப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கான சில வழிகள் யாவை?
தனிப்பட்ட படிப்பினால் முன்னேறுதல்
பிலிப்பியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னார்: “நீங்கள் [“திருத்தமான,” NW] அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறை[யும்படி] . . . வேண்டுகிறேன்.” (பிலிப்பியர் 1:9, பொ.மொ.) ‘திருத்தமான அறிவில்’ வளருவது உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. ‘யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெறுவது’ தொடர்ந்து நடைபெற வேண்டிய செயல், முழுக்காட்டுதலுக்குப்பின் நின்றுவிடும் ஒன்றல்ல.—யோவான் 17:3, NW.
பதினாறு வயதில் முழுக்காட்டுதல் பெற்ற ஒரு கிறிஸ்தவ சகோதரி—அலெக்ஸாண்டிரா என்று நாம் அழைக்கலாம்—பத்து வருடங்களுக்குப் பின்னரே இதை உணர ஆரம்பித்தாள். அவள் சத்தியத்தில் வளர்க்கப்பட்டாள், கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராவதிலும் பிரசங்கிப்பதிலும் தவறியதே கிடையாது. அவள் எழுதுகிறாள்: “கடந்த சில மாதங்களாக, ஏதோ பயங்கர விபரீதம் நடந்துகொண்டிருப்பதாக எனக்குள் ஒரு எண்ணம். சத்தியத்தை உண்மையில் நேசிக்கிறேனா, ஏன் இன்னும் சத்தியத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் யோசித்துப் பார்த்து என்னை நானே நேர்மையாக, நிதானமாக எடைபோட்டுப் பார்க்க முடிவுசெய்தேன்.” அவ்வாறு எடைபோட்டுப் பார்த்ததன் விளைவு? தொடர்ந்து சொல்கிறாள்: “நான் எந்தெந்த காரணங்களுக்காக சத்தியத்தில் இருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தேன். ஒரே கலக்கம். சிறு வயதிலிருந்தே கூட்டங்களும் வெளி ஊழியமும் முக்கியமென்று எனக்கு உணர்த்தப்பட்டதும் நினைவுக்கு வந்தது. தனிப்பட்ட படிப்பு, ஜெபம் எல்லாம் எப்படியோ அந்தந்த நேரத்துல நடந்துகொண்டேயிருக்கும். ஆனால் இப்போதோ அப்படி எதுவும் நடப்பதில்லை என புரிந்தது.”
அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “நாம் எந்தளவு முன்னேறியிருக்கிறோமோ, அதே வழக்கத்தில் தொடர்ந்து சீராக நடப்போமாக.” (பிலிப்பியர் 3:16, NW) ஒரு காரியத்தை பழக்கமாக செய்துவருவது முன்னோக்கிச் செல்வதற்கான உந்துவிப்பை கொடுக்கலாம். முழுக்காட்டுதலுக்கு முன்பு, நன்கு தகுதிபெற்றவரோடு வாராவாரம் பைபிள் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை. உங்களுடைய போற்றுதல் வளர்ந்தபோதோ, ஒவ்வொரு வாரப் பாடத்திற்கும் முன்கூட்டியே தயாரிக்க எல்லா பைபிள் வசனங்களையும் எடுத்துப் பார்க்கும் பழக்கமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இப்பொழுது நீங்கள் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டதால், ‘அதே பழக்கத்தை’ தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறீர்களா?
இல்லையென்றால், முதலாவது செய்யவேண்டிய காரியங்களை நீங்கள் மறுஆய்வு செய்து, ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டியதாயிருக்கலாம். (பிலிப்பியர் 1:10, NW) நேரம் கிடைப்பதே பெரும்பாடாக இருப்பதால், தனிப்பட்ட பைபிள் வாசிப்பிற்கும் படிப்பிற்கும் நேரத்தை ஒதுக்கி வைக்க தன்னடக்கம் தேவைப்படுகிறது. ஆனால் அதனால் வரும் பயன்களை எண்ணிப் பார்க்கையில் இப்படிப்பட்ட முயற்சி தகுதியானதே. மறுபடியும் அலெக்ஸாண்டிராவின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள். “கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் ஏதோ கடமைக்குப் போய்க்கொண்டு சுமார் 20 வருஷமாக சத்தியத்தில் இருக்கிறேன்” என அவள் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் அவள் தொடர்ந்து சொல்கிறாள்: “இதெல்லாமே முக்கியமானதாய் இருந்தாலும், பிரச்சினைகள் வரும்போது இவை மாத்திரமே எனக்கு உதவும் என்று சொல்லமுடியாது. சொல்லப்போனால் எனக்கு தனிப்பட்ட படிப்பு பழக்கமே கிடையாது, நான் ஜெபிக்கும்போதெல்லாம் என் மனதை அலைபாயவிட்டேன், சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசினேன். உண்மையிலேயே யெகோவாவை அறிந்து அவரை நேசிப்பதற்கும் அவருடைய குமாரன் கொடுத்திருப்பதை போற்றுவதற்கும் நான் என்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு அர்த்தமுள்ள ஒரு படிப்பு திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை உணருகிறேன்.”
பலன்தரும் தனிப்பட்ட படிப்பு பழக்கத்தை ஆரம்பிக்க உங்களுக்கு உதவி தேவையா? கவலைப்படாதீர்கள், இதோ சபையிலுள்ள மூப்பர்களும் முதிர்ச்சிவாய்ந்த மற்ற கிறிஸ்தவர்களும் உங்களுக்கு உதவ தயாராய் இருக்கின்றனர். கூடுதலாக, மே 1, 1995; ஆகஸ்ட் 15, 1993; மே 15, 1986 (ஆங்கிலம்) காவற்கோபுர இதழ்களில் எண்ணிலடங்கா பயனுள்ள ஆலோசனைகள் உள்ளன.
கடவுளுடன் நெருங்கி வரவேண்டியதன் அவசியம்
நீங்கள் முன்னேறுவதற்கு கடினமாய் முயலவேண்டிய மற்றொரு அம்சம் கடவுளுடன் உங்களுடைய உறவாகும். இதன் சம்பந்தமாக சிலருடைய விஷயத்தில் அதிக முயற்சி தேவை. சிறுவயதிலேயே முழுக்காட்டுதல் பெற்ற ஆன்டனியை சிந்தித்துப்பாருங்கள். “எங்க குடும்பத்தில நான்தான் முதல்ல முழுக்காட்டுதல் எடுத்தேன். முழுக்காட்டுதல் எடுத்த உடனேயே அம்மா என்னை அன்போடு கட்டியணைத்துக்கொண்டாங்க. அவங்க அந்தளவு சந்தோஷப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ரொம்ப சந்தோஷமாய் இருந்தது, நான் ரொம்ப பலமாயிருப்பதாக உணர்ந்தேன்” என்று அவர் சொல்கிறார். இதற்கு மறுபக்கமும் இருந்தது. அவர் தொடர்ந்து சொல்கிறார்: “வெகு நாளாக, எங்க சபையில் முழுக்காட்டுதல் பெற்ற இளைஞர்களே இல்லை. அதனால எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. கூட்டங்களில் பதில் சொல்லும்போதும் பேச்சுக் கொடுக்கும்போதும் பெருமிதமாக இருக்கும். எல்லாரும் என்னைப் புகழவேண்டும், எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக தெரிந்தது. யெகோவாவுக்கு புகழ் சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் அதற்குப் பின்தான். உண்மையில் நான் கடவுளிடம் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளவில்லை.”
ஆன்டனியைப் போல, யெகோவாவைப் பிரியப்படுத்துவதைக் காட்டிலும் மற்றவர்களைப் பிரியப்படுத்தும் ஆசையில் சிலர் ஒப்புக்கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும், இப்படிப்பட்டவர்கள் அவரை சேவிப்பதற்கு கொடுத்த தங்களுடைய வாக்குறுதிக்கு இசைவாக வாழும்படி கடவுள் எதிர்பார்க்கிறார். (பிரசங்கி 5:4-ஐ ஒப்பிடுக.) என்றபோதிலும், கடவுளோடு நெருக்கமாய் இல்லையென்றால் அவ்வாறு செய்வது பெரும்பாலும் அவர்களுக்கு கடினமாய் இருக்கலாம். ஆன்டனி இவ்வாறு சொல்கிறார்: “நான் முழுக்காட்டுதல் எடுத்தபோது இருந்த மகிழ்ச்சி சீக்கிரம் போய்விட்டது. ஒரு வருஷங்கூட ஆகலை, அதற்குள் நான் ஒரு பெரிய தவறுசெய்து சபையிலுள்ள மூப்பர்களால் கண்டிக்கப்பட்டேன். மறுபடியும் மறுபடியும் தவறுசெய்ததால் சபையிலிருந்து நீக்கப்பட்டேன். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து ஆறு வருஷங்களுக்குப்பின், நான் கைதுசெய்யப்பட்டு, கொலைக் குற்றத்திற்காக ஜெயிலில் போடப்பட்டேன்.”
யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வது
உங்களுடைய சூழ்நிலைமை என்னவாக இருந்தாலும்சரி, எல்லா கிறிஸ்தவர்களும் பைபிளின் இந்த அழைப்புக்கு செவிசாய்க்கலாம்: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக்கோபு 4:8) நீங்கள் முதன்முதலில் பைபிளைப் படித்தபோது கடவுளுடன் அதிக நெருக்கத்தை அனுபவித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. கிறிஸ்தவமண்டலத்தினர் கடவுளை ஓர் உண்மையான நபராக கருதுவதில்லை. ஆனால் நீங்களோ அவர் யெகோவா என்ற பெயரையுடைய ஒரு நபர் என்பதை கற்றுக்கொண்டீர்கள். அவர் கவரத்தக்க குணங்களையுடையவர், “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்பதையும் கற்றுக்கொண்டீர்கள்.—யாத்திராகமம் 34:6.
ஆனால் கடவுளை சேவித்து உங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ, நீங்கள் கடவுளிடம் இன்னும் அதிகமாய் நெருங்கி வரவேண்டும்! எப்படி? சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபித்தார்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.” (சங்கீதம் 25:4) பைபிளையும் சங்கத்தின் பிரசுரங்களையும் தனிப்பட்ட விதமாய் படிப்பது யெகோவாவிடம் அதிகமதிகமாய் நெருங்கிவர உங்களுக்கு உதவும். இருதயப்பூர்வமாய் ஜெபிப்பதும் முக்கியம். “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” என்று சங்கீதக்காரன் உந்துவிக்கிறார். (சங்கீதம் 62:8) கடவுள் உங்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கும்போது அவர் எந்தளவுக்கு உங்கள்மீது அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பது புரியும். நீங்கள் கடவுளுடன் நெருங்கியிருப்பதற்கு இது உங்களுக்கு உதவும்.
கடவுளுடன் நெருங்கி வருவதற்கு சோதனைகளும் பிரச்சினைகளும் மற்றொரு வாய்ப்பை தருகின்றன. வியாதி, பள்ளியிலும் வேலை செய்யுமிடத்திலும் பிரச்சினைகள், அல்லது பொருளாதார கஷ்டங்கள் போன்ற சவால்களையும் விசுவாசத்தின் சோதனைகளையும் நீங்கள் எதிர்ப்படலாம். ஊழியத்தில் பங்குகொள்ளுதல், கூட்டங்களுக்கு ஆஜராகுதல், அல்லது உங்களுடைய பிள்ளைகளுடன் பைபிளைப் படித்தல் போன்ற வழக்கமான தேவராஜ்ய நடவடிக்கைகளும் உங்களுக்கு கடினமாய் இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளை தனிமையாக சமாளிக்காதீர்கள்! உதவிக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள், அவருடைய வழிநடத்துதலுக்காக கேளுங்கள். (நீதிமொழிகள் 3:5, 6) அவருடைய பரிசுத்த ஆவிக்காக மன்றாடுங்கள்! (லூக்கா 11:13) கடவுளுடைய அன்பான உதவியை அனுபவிக்கையில், நீங்கள் அவரிடம் இன்னும் அதிகமாய் நெருங்கி வருவீர்கள். சங்கீதக்காரனாகிய தாவீது சொல்கிறபடியே, “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”—சங்கீதம் 34:8.
ஆன்டனியைப் பற்றியென்ன? “யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்காக அநேக ஆவிக்குரிய இலக்குகளை வைத்த சமயத்தை நான் சிந்திக்க ஆரம்பித்தேன். இது வேதனையாக இருந்தது, அத்தனை வேதனையிலும் ஏமாற்றத்திலும் யெகோவாவின் அன்பை நான் மறக்கவில்லை. மீண்டும் யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு சில காலம் ஆனது, ஆனால் நான் ஜெபித்தேன், என்னுடைய இருதயத்திலுள்ளதையெல்லாம் கொட்டி, அவருடைய மன்னிப்புக்காக மன்றாடினேன். பைபிளையும் வாசிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு விஷயங்களை மறந்துவிட்டிருந்தேன் என்பதும் யெகோவாவைப் பற்றி உண்மையில் கொஞ்சம்தான் அறிந்திருந்தேன் என்பதும் புரிந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது.” ஆன்டனி தான் செய்த குற்றத்திற்காக இன்னும் சிறை தண்டனையை முடிக்கவில்லையென்றாலும், உள்ளூர் சாட்சிகளிடமிருந்து உதவியைப் பெறுகிறார், ஆவிக்குரிய விதத்தில் குணமடைந்தும் வருகிறார். ஆன்டனி நன்றியோடு சொல்கிறார்: “யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் நன்றி. என்னால் பழைய ஆள்தன்மையை களைந்துபோட முடிந்திருக்கிறது, புதிய ஆள்தன்மையை அணிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் கடினமாய் போராடுகிறேன். யெகோவாவுடன் என்னுடைய உறவே இப்பொழுது எனக்கு எல்லாவற்றையும்விட மேலானது.”
உங்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய முன்னேற்றம்
‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ பிரசங்கிக்கும்படி இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார். (மத்தேயு 24:14) நீங்கள் ஒரு புதிய பிரஸ்தாபி என்றால், நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஊழியத்தில் உங்களுக்கு அதிக அனுபவம் இல்லாமல் இருக்கலாம். அப்படியானால், ‘உங்களுடைய ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு’ நீங்கள் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம்?—2 தீமோத்தேயு 4:5, NW.
நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்வது ஒரு வழி. பிரசங்க வேலையை ஒரு ‘பொக்கிஷமாக,’ ஒரு சிலாக்கியமாக கருதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 4:7) இது யெகோவாவுக்கான நம்முடைய அன்பையும் உண்மைப் பற்றுறுதியையும் உத்தமத் தன்மையையும் காண்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு. நம்முடைய அயலாருக்கான அக்கறையை காண்பிப்பதற்கும் உதவுகிறது. இதன் சம்பந்தமாக சுயநலமின்றி நம்மையே அர்ப்பணிப்பது உண்மையான மகிழ்ச்சிக்கு ஊற்றாய் விளங்கும்.—அப்போஸ்தலர் 20:35, NW.
பிரசங்க வேலையைக் குறித்து இயேசுதாமே நம்பிக்கையான நோக்குநிலையை உடையவராயிருந்தார். மற்றவர்களுடன் பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வது அவருக்கு ‘போஜனமாய்’ இருந்தது. (யோவான் 4:34) “எனக்குச் சித்தமுண்டு” என்று சொன்ன வார்த்தைகளின் மூலம் பிறருக்கு உதவும் அவருடைய மனப்பான்மையை தெரிந்துகொள்ளலாம். (மத்தேயு 8:3) மக்களிடம், முக்கியமாய் சாத்தானது உலகத்தினால் “தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்தவர்களிடம் இயேசு இரக்கமுள்ளவராய் இருந்தார். (மத்தேயு 9:35, 36) ஆவிக்குரிய விதத்தில் இருளில் இருப்போருக்கும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிவொளி தேவைப்படுவோருக்கும் உதவ “எனக்குச் சித்தமுண்டு” என்று நீங்களும் சொல்கிறீர்களா? அப்படியானால், இயேசுவின் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய உந்துவிக்கப்படுவீர்கள்: ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.’ (மத்தேயு 28:19) சொல்லப்போனால், உங்களுடைய ஆரோக்கியமும் சூழ்நிலைகளும் அனுமதிக்கும் அளவுக்கு முழுமையாய் பங்குகொள்ள உந்துவிக்கப்படுவீர்கள்.
முன்னேறுவதற்கு மற்றொரு வழி, ஊழியத்தில் தவறாமல்—முடிந்தால் ஒவ்வொரு வாரமும்—பங்குகொள்வதாகும். இப்படி செய்வது, எப்போதாவது மாத்திரமே ஊழியம் செய்பவருக்கு வரும் பயத்தையும் நடுக்கத்தையும் குறைப்பதற்கு உதவும். ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது மற்ற வழிகளிலும் உங்களுக்கு பயனளிக்கும். சத்தியத்திற்கான உங்களுடைய போற்றுதலை அதிகரிக்கும், யெகோவாவுக்கும் அயலாருக்குமான உங்களுடைய அன்பை கூட்டும், ராஜ்ய நம்பிக்கையில் தொடர்ந்து கவனத்தை ஒருமுகப்படுத்த உங்களுக்கு உதவும்.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பிரசங்க வேலையில் உங்களால் அதிகம் பங்குகொள்ள முடியவில்லையென்றால் என்ன செய்வது? மாற்றங்கள் செய்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாதென்றால், நீங்கள் முழு இருதயத்தோடு சேவை செய்யும்வரை, உங்களால் முடிந்ததைச் செய்வதில் கடவுள் அதிகம் பிரியப்படுகிறார் என்பதை அறிந்து ஆறுதலடையுங்கள். (மத்தேயு 13:23) மேலும் பிரசங்கிக்கும் திறமைகளில் வளருவது போன்ற மற்ற அம்சங்களில் நீங்கள் முன்னேறலாம். இதன் சம்பந்தமாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் சிறந்த பயிற்றுவிப்பைத் தருகின்றன. இயல்பாகவே, ஊழியத்தில் நாம் எந்தளவுக்கு திறம்பட்டவர்களாக இருக்கிறோமோ அந்தளவுக்கு நாம் அனுபவித்து மகிழுவோம், பலன்களையும் அறுவடை செய்வோம்.
அப்படியானால், ஆவிக்குரிய முன்னேற்றம் ஒருவருடைய முழுக்காட்டுதல் நாளோடு முடிந்துவிடுவதில்லை என்பது தெளிவாயிருக்கிறது. பரலோகத்தில் அழியா ஜீவனை அடையும் தன் நம்பிக்கை சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக் கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.”—பிலிப்பியர் 3:13-15.
ஆம், பரலோகத்தில் அழியாமையை சுதந்தரிக்கும் நம்பிக்கையுடையவராக இருந்தாலும்சரி பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும் நம்பிக்கையுடையவராக இருந்தாலும்சரி, ஜீவனைப் பெறும் இலக்கை அடைவதற்கு எல்லா கிறிஸ்தவர்களும் ‘முன்னானவைகளை நோக்கிச்’ செல்ல வேண்டும்! நீங்கள் முழுக்காட்டுதல் பெற்றது சந்தோஷமான விஷயம்தான், ஆனால் அது ஒரு தொடக்கமே. ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய தொடர்ந்து கடினமாய் முயலுங்கள். கூட்டங்கள் மற்றும் தனிப்பட்ட படிப்பின் மூலம் ‘சிந்திப்பதில் முதிர்ச்சி அடையுங்கள்.’ (1 கொரிந்தியர் 14:20, பொ.மொ.) சத்தியத்தின் ‘அகலம், நீளம், உயரம், ஆழம் இன்னதென்பதை மனதில் கிரகித்துக்கொள்ளும்’ திறமையுள்ளவர்களாகுங்கள். (எபேசியர் 3:18, NW) நீங்கள் செய்யும் முன்னேற்றம் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் காத்துக்கொள்வதற்கு இப்போது உதவிசெய்வது மட்டுமல்லாமல், கடவுளுடைய புதிய உலகில் ஒரு பாதுகாப்பான இடத்தைப் பெறுவதற்கும் உங்களுக்கு உதவும்; அப்புதிய உலகில் அவருடைய பரலோக ஆட்சியில், நீங்கள் நித்திய காலத்துக்கும் முன்னேறலாம்!
[பக்கம் 29-ன் படம்]
தனிப்பட்ட படிப்புக்கு நேரத்தை கண்டுபிடிக்க தன்னடக்கம் தேவை
[பக்கம் 31-ன் படம்]
நம்பிக்கையான மனநிலையை கொண்டிருப்பது ஊழியத்தில் சந்தோஷத்தைக் கண்டடைய நமக்கு உதவும்