யெகோவாவின் ஆடுகளை கவனிக்க ‘மனித வடிவில் வரங்கள்’
“அவர் உன்னதத்திற்கு ஏறியபோது, சிறைப்பட்டவர்களை தம்முடன் கொண்டுசென்றார்; மனித வடிவில் வரங்களை அளித்தார்.”—எபேசியர் 4:8, NW.
1. தன்னுடைய சபை மூப்பர்களைப் பற்றி ஒரு கிறிஸ்தவ சகோதரி என்ன எழுதினார்?
“எங்கள்மீது அதிக கரிசனை காட்டுவதற்காக உங்களுக்கு நன்றி. உங்களுடைய சிரிப்பு, உங்களுடைய இரக்கம், உங்களுடைய கரிசனை இவையெல்லாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருபவை. எப்பொழுதும் நாங்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கிறீர்கள், ஆறுதலளிக்கும் பைபிள் வார்த்தைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்களுடைய கவலையை போக்குகிறீர்கள். நான் ஒருபோதும் உங்களை சாதாரணமாக எடைபோட்டு விடாமலிருக்கவே ஜெபிக்கிறேன்.” இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ சகோதரி தன்னுடைய சபை மூப்பர்களுக்கு எழுதினார். தெளிவாகவே, அக்கறையுள்ள கிறிஸ்தவ மேய்ப்பர்கள் காட்டிய அன்பு அவருடைய இதயத்தை தொட்டது.—1 பேதுரு 5:2, 3.
2, 3. (அ) ஏசாயா 32:1, 2-க்கு இசைவாக, யெகோவாவின் ஆடுகளிடம் இரக்கமுள்ள மூப்பர்கள் எவ்வாறு அக்கறைகாட்டுகிறார்கள்? (ஆ) ஒரு மூப்பரை எப்பொழுது ஒரு பரிசாக கருதலாம்?
2 தம்முடைய ஆடுகளை கவனிக்க யெகோவா செய்திருக்கும் ஏற்பாடே மூப்பர்கள். (லூக்கா 12:32; யோவான் 10:16) யெகோவாவின் ஆடுகள் அவருக்குப் பிரியமானவை—சொல்லப்போனால், மிகவும் பிரியமானவை, விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தால் அவர்களை வாங்கினார். அப்படியானால், அவருடைய மந்தையை மூப்பர்கள் மென்மையாக நடத்துகையில் யெகோவா பிரியப்படுகிறார் என்பதில் ஆச்சரியமில்லை. (அப்போஸ்தலர் 20:28, 29) இந்த மூப்பர்கள் அல்லது ‘பிரபுக்களை’ பற்றிய தீர்க்கதரிசன வர்ணனையை கவனியுங்கள்: “அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.” (ஏசாயா 32:1, 2) ஆம், அவருடைய ஆடுகளுக்கு அவர்கள் பாதுகாப்பளிக்க வேண்டும், புத்துணர்ச்சியளிக்க வேண்டும், ஆறுதலளிக்க வேண்டும். மந்தையை இரக்கத்தோடு மேய்க்கும் மூப்பர்கள், இவ்வாறு கடவுள் தங்களிடம் எதிர்பார்ப்பதற்கு இசைய வாழ கடினமாய் உழைக்கிறார்கள்.
3 இப்படிப்பட்ட மூப்பர்களை ‘மனித வடிவில் வரங்கள்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (எபேசியர் 4:8, NW) ஒரு பரிசைக் குறித்து நினைக்கும்போது, ஒரு தேவையை பூர்த்திசெய்யவோ அல்லது அதை பெற்றுக்கொள்கிறவரை மகிழ்ச்சியடையச் செய்யவோ கொடுக்கப்படும் ஒன்றைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள். தேவையான உதவியளித்து மந்தையின் மகிழ்ச்சிக்கு தன் திறமைகளை பயன்படுத்தும் மூப்பரை ஒரு பரிசாக கருதலாம். இதை அவர் எவ்வாறு செய்யலாம்? எபேசியர் 4:7-16-ல் பவுல் அளிக்கும் பதில், மந்தைமீது யெகோவாவுக்கு இருக்கும் அன்பான அக்கறையை சிறப்பித்துக் காட்டுகிறது.
‘மனித வடிவில் வரங்கள்’—எங்கிருந்து?
4. சங்கீதம் 68:18-ன் நிறைவேற்றமாக, எந்த விதத்தில் யெகோவா ‘உன்னதத்திற்கு ஏறினார்,’ ‘மனித வடிவில் வரங்கள்’ யார்?
4 ‘மனித வடிவில் வரங்கள்’ என்ற சொற்றொடரை பவுல் பயன்படுத்தியபோது, தாவீது ராஜாவின் வார்த்தைகளை மேற்கோள் காண்பித்துக் கொண்டிருந்தார். யெகோவாவை பற்றி அவர் சொன்னார்: “நீர் உன்னதத்திற்கு ஏறினீர்; சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; மனித வடிவில் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.” (சங்கீதம் 68:18, NW) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்ற சில வருஷங்களுக்குப்பின், அடையாளப்பூர்வமாக யெகோவா சீயோன் மலைமீது ‘ஏறி,’ தாவீதை ராஜாவாக கொண்ட இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு எருசலேமை தலைநகராக்கினார். ஆனால் ‘மனித வடிவில் வரங்கள்’ யார்? தேசத்தைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியபோது சிறைக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்ட மனிதர்களே அவர்கள். இந்தச் சிறைக்கைதிகளில் சிலர், ஆசரிப்பு கூடாரத்தில் லேவியருக்கு உதவ நியமிக்கப்பட்டார்கள்.—எஸ்றா 8:20.
5. (அ) சங்கீதம் 68:18 கிறிஸ்தவ சபையில் நிறைவேறுகிறது என்பதை பவுல் எவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்? (ஆ) எந்த விதத்தில் இயேசு ‘உன்னதத்திற்கு ஏறினார்’?
5 எபேசியருக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவ சபையில் சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் பெரிய அளவில் நிறைவேற்றம் அடைந்ததை பவுல் சுட்டிக்காட்டுகிறார். சங்கீதம் 68:18-ஐ சுருக்கி உரைக்கையில், பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “இலவச பரிசை கிறிஸ்து கொடுக்கும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் தகுதியற்ற தயவு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் சொல்கிறார்: ‘அவர் உன்னதத்திற்கு ஏறியபோது, சிறைப்பட்டவர்களை தம்முடன் கொண்டுசென்றார்; மனித வடிவில் வரங்களை அளித்தார்.’ ” (எபேசியர் 4:7, 8, NW) பவுல் இங்கே இந்த சங்கீதத்தை கடவுளுடைய பிரதிநிதியாகிய இயேசுவுக்குப் பொருத்திக் காட்டுகிறார். இயேசு தம்முடைய உண்மையுள்ள வாழ்க்கைப் போக்கின் மூலம் ‘இந்த உலகத்தை ஜெயித்தார்.’ (யோவான் 16:33) கடவுள் அவரை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினதால், அவர் மரணத்தின்மீதும் சாத்தான்மீதும் வெற்றிசிறந்தார். (அப்போஸ்தலர் 2:24; எபிரெயர் 2:14) பொ.ச. 33-ல், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு “எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறி”னார்—மற்றெல்லா பரலோக சிருஷ்டிகளுக்கும் மேலாக ஏறினார். (எபேசியர் 4:9, 10; பிலிப்பியர் 2:9-11) வெற்றிவாகை சூடியவராக, விரோதியிடமிருந்து “சிறைப்பட்டவர்களை” கொண்டுசென்றார். எப்படி?
6. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே முதற்கொண்டு, உன்னதத்திற்கு ஏறிய இயேசு எவ்வாறு சாத்தானுடைய வீட்டை கொள்ளையிட ஆரம்பித்தார், ‘சிறைப்பட்டவர்களை’ அவர் என்ன செய்தார்?
6 இயேசு பூமியிலிருக்கையில், பிசாசுகளின் பிடியில் இருந்தவர்களை விடுவித்து சாத்தானின்மீது தம்முடைய வல்லமையை மெய்ப்பித்துக் காட்டினார். இது, சாத்தானுடைய வீட்டிற்குள் இயேசு படையெடுத்துச் சென்று, அவனைக் கட்டி, அவனுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்ததைப் போல இருந்தது. (மத்தேயு 12:22-29) உயிர்த்தெழுப்பப்பட்டு ‘பரலோகத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்’ கொடுக்கப்பட்ட பிறகு, இயேசுவால் எப்பேர்ப்பட்ட விதமாக கொள்ளையிட முடிந்தது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் (மத்தேயு 28:18) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு, உன்னதத்திற்கு ஏறிய இயேசு, கடவுளுடைய பிரதிநிதியாக, ‘சிறைப்பட்டவர்களை கொண்டுசெல்வதன்’ மூலம் சாத்தானுடைய வீட்டை கொள்ளையிட ஆரம்பித்தார். இந்தச் ‘சிறைப்பட்டவர்கள்’ ‘தேவனுடைய சித்தத்தை முழு ஆத்துமாவோடு செய்து’ மனப்பூர்வமாக ‘கிறிஸ்துவின் ஊழியக்காரரானார்கள்.’ (எபேசியர் 6:6, NW) அதனால், இயேசு அவர்களை சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை செய்து, ‘மனித வடிவில் வரங்களாக’ அவர்களை யெகோவாவின் சார்பாக சபைக்கு தந்தார். சாத்தானுடைய எல்லைக்குள்ளேயே சென்று அவன் இருக்கும்போதே அவர்களை கைப்பற்றுகையில் அவனுடைய மூர்க்க கோபத்தை கற்பனை செய்துபாருங்கள்!
7. (அ) ‘மனித வடிவில் வரங்கள்’ சபைகளில் என்ன பொறுப்புகளை வகிக்கிறார்கள்? (ஆ) மூப்பராக சேவிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் யெகோவா என்ன வாய்ப்பை கொடுத்திருக்கிறார்?
7 இன்று சபையில் இப்படிப்பட்ட ‘மனித வடிவில் வரங்களை’ நாம் காண்கிறோமா? நிச்சயமாகவே காண்கிறோம்! அவர்கள் கடவுளுடைய ஜனங்களின் 87,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய சபைகளில் மூப்பர்களாக சேவித்து, ‘சுவிசேஷகர்களாக, மேய்ப்பர்களாக, போதகர்களாக’ உழைப்பதை காண்கிறோம். (எபேசியர் 4:13) மந்தையை அவர்கள் தவறாக நடத்துவதைப் பார்ப்பதில்தான் சாத்தானுக்கு எத்தனை ஆனந்தம்! ஆனால், அவர்களிடம் சபையை கிறிஸ்துவின் மூலம் கடவுள் கொடுத்திருப்பது அதற்காக அல்ல. மாறாக, சபையின் நலனுக்காக யெகோவா இவர்களை கொடுத்திருக்கிறார், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகளுக்காக அவர்கள் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும். (எபிரெயர் 13:17) ஒரு மூப்பராக நீங்கள் சேவித்தால், உங்களுடைய சகோதரர்களுக்கு உங்களை ஒரு பரிசாக, அல்லது ஆசீர்வாதமாக நிரூபிப்பதற்கு மகத்தான வாய்ப்பை யெகோவா உங்களுக்கு கொடுத்திருக்கிறார். உங்களுக்கு நியமிக்கப்பட்ட நான்கு முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் அதை நீங்கள் நிரூபிக்கலாம்.
‘திருத்திக்கொள்வதற்கான’ தேவை இருக்கும்போது
8. சிலசமயங்களில் நாம் அனைவரும் என்ன வழிகளில் சீர்பொருந்தப்பட வேண்டிய அவசியமுள்ளது?
8 ‘பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு,’ இந்த ‘மனித வடிவில் வரங்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன என பவுல் சொல்கிறார். (எபேசியர் 4:12, NW) ‘சீர்பொருந்தப் பண்ணுதல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பெயர்ச்சொல், ஏதாவதொன்றை ‘தகுந்த நிலைக்குள்’ கொண்டுவருதல் என்பதை குறிக்கிறது. அபூரண மனிதர்களாக, அவ்வப்பொழுது நாம் அனைவருமே சீர்பொருந்தப்பட வேண்டும்—கடவுளுடைய எண்ணத்திற்கும் சித்தத்திற்கும் இசைய நம்முடைய சிந்தையை, மனப்பான்மையை, அல்லது நடத்தையை ‘தகுந்த நிலைக்குள்’ கொண்டுவர வேண்டும். தேவையான மாற்றங்களை செய்வதற்கு உதவியாக, யெகோவா அன்புடன் ‘மனித வடிவில் வரங்களை’ நமக்கு கொடுத்திருக்கிறார். இதை அவர்கள் எப்படி செய்கின்றனர்?
9. தவறிழைத்த ஒரு நபரை சீர்பொருந்தப் பண்ணுவதற்கு ஒரு மூப்பர் எவ்வாறு உதவலாம்?
9 சிலசமயங்களில், ஒருவர் தவறிழைத்துவிடலாம், ஒருவேளை ‘அதைப் பற்றி தான் அறிவதற்கு முன்பே அப்படிப்பட்ட தவறான படியை எடுத்துவிடலாம். இப்படிப்பட்டவருக்கு உதவ ஒரு மூப்பர் அழைக்கப்படலாம். ஒரு மூப்பர் எவ்வாறு உதவலாம்? ‘சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணு’ என கலாத்தியர் 6:1 சொல்கிறது. ஆகவே, அறிவுரை வழங்குகையில் தவறிழைத்தவரை ஒரு மூப்பர் திட்ட மாட்டார், புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டார். அறிவுரை ஊக்கமூட்ட வேண்டும், அதை பெறுகிறவரை ‘பயமுறுத்தக்’ கூடாது. (2 கொரிந்தியர் 10:9; ஒப்பிடுக: யோபு 33:7.) அந்த நபர் ஏற்கெனவே தர்மசங்கடத்தில் இருக்கலாம், ஆகவே ஓர் அன்பான மேய்ப்பன் நோகடிப்பதை தவிர்க்க வேண்டும். அறிவுரை கொடுக்கும்போது, ஒருவேளை கண்டிப்புடன் கடிந்துகொள்ளும்போதுகூட, அன்பினால் தூண்டுவிக்கப்பட்டு கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வது தவறிழைத்த ஒருவரின் சிந்தையை அல்லது நடத்தையை சீர்பொருந்தப் பண்ணி அவரை குணப்படுத்தலாம்.—2 தீமோத்தேயு 4:2.
10. மற்றவர்களை சீர்பொருந்தப் பண்ணுவது எதை உட்படுத்துகிறது?
10 நம்மை சீர்பொருந்தப் பண்ணுவதற்கு ‘மனித வடிவில் வரங்களை’ யெகோவா கொடுக்கையில், மூப்பர்கள் ஆவிக்குரிய விதத்தில் புத்துணர்ச்சி அளித்து தம்முடைய ஜனங்கள் பின்பற்ற தகுதியுள்ளவர்களாய் இருப்பார்கள் என்பதை மனதில் கொண்டிருந்தார். (1 கொரிந்தியர் 16:17, 18; பிலிப்பியர் 3:17) மற்றவர்களை சீர்பொருந்தப் பண்ணுவது, தவறிழைத்தவர்களை வெறுமனே திருத்துவது மட்டுமல்ல, உண்மையுள்ளவர்கள் தங்களுடைய சரியான பாதையில் நிலைத்திருக்க உதவிசெய்வதையும் உட்படுத்துகிறது. a இன்று அநேக பிரச்சினைகள் மனதிற்கு சோர்வூட்டுவதால், நிலைத்திருக்க அநேகருக்கு உற்சாகம் தேவை. கடவுளுடைய சிந்தையோடு அவர்களுடைய சிந்தையை சீர்பொருந்தப்பண்ண சிலருக்கு மென்மையான உதவி தேவைப்படலாம். உதாரணமாக, உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் குறைபாடு அல்லது தகுதியில்லாமை என்ற ஆழமான உணர்ச்சிகளால் போராடுகிறார்கள். யெகோவா ஒருபோதும் தங்களை நேசிக்க மாட்டார், கடவுளை சேவிக்க எவ்வளவு கடின முயற்சியெடுத்தாலும் தங்களை ஒருபோதும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று ‘மனச்சோர்வுற்ற ஆத்துமாக்கள்’ உணரலாம். (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆனால் இப்படிப்பட்ட சிந்தனை, தம்முடைய வணக்கத்தாரை பற்றி கடவுள் உண்மையிலேயே எப்படி உணருகிறார் என்பதோடு இசைவாக இல்லை.
11. தான் எதற்குமே லாயக்கில்லை என்ற உணர்வால் போராடுவோருக்கு உதவ மூப்பர்கள் என்ன செய்யலாம்?
11 மூப்பர்களே, இப்படிப்பட்டவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவா தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவர்மீதும் அக்கறை காட்டுகிறார் என்பதற்கு வேதப்பூர்வ அத்தாட்சியை அவர்களுடன் தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தகைய பைபிள் வசனங்கள் தனிப்பட்ட விதமாக அவர்களுக்குப் பொருந்துகிறது என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள். (லூக்கா 12:6, 7, 24) தம்மை சேவிப்பதற்கு யெகோவா அவர்களை ‘இழுத்திருக்கிறார்,’ அவர்களுடைய மதிப்பு என்னவென்று அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதைக் காண அவர்களுக்கு உதவுங்கள். (யோவான் 6:44) அவர்கள் தனிமையில் விடப்பட்டவர்களாக இல்லை—யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அநேகருக்கு இப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்திருக்கின்றன—என்பதை உறுதிப்படுத்துங்கள். தீர்க்கதரிசியாகிய எலியா ஒருசமயம் தான் செத்துப்போவது நல்லது என்று நினைக்குமளவுக்கு மிகவும் மனச்சோர்வடைந்தவராக இருந்தார். (1 இராஜாக்கள் 19:1-4) முதல் நூற்றாண்டிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய இருதயங்களில் ‘குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டவர்களாய்’ உணர்ந்தார்கள். (1 யோவான் 3:20) பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஆட்கள் ‘நம்மை போன்ற உணர்ச்சிகள் உள்ளவர்களாய்’ இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்வதில் ஆறுதலடையலாம். (யாக்கோபு 5:17, NW) மனம்வாடியவர்களுடன் சேர்ந்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வெளிவரும் ஊக்கமூட்டும் கட்டுரைகளையும் நீங்கள் எடுத்துப் பார்க்கலாம். இப்படிப்பட்டவர்களுடைய நம்பிக்கையை மீண்டும் புதுப்பிப்பதற்கு நீங்கள் எடுக்கும் அன்பான முயற்சிகள், ‘மனித வடிவில் வரங்களை’ உங்களுக்கு கொடுத்திருக்கிற கடவுளுடைய கவனத்திற்கு வராமல் போகாது.—எபிரெயர் 6:10.
மந்தையை ‘கட்டியெழுப்புதல்’
12. ‘கிறிஸ்துவின் சரீரத்தை கட்டியெழுப்புதல்’ என்ற சொற்றொடர் எதை சுட்டிக்காட்டுகிறது, மந்தையை கட்டியெழுப்புவதற்கு முக்கியமாக தேவைப்படுவது என்ன?
12 இரண்டாவதாக, ‘மனித வடிவில் வரங்கள்’ ‘கிறிஸ்துவின் சரீரத்தை கட்டியெழுப்பும்’ நோக்கோடு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:12, NW) பவுல் இங்கே உருவக நடையை பயன்படுத்துகிறார். ‘கட்டியெழுப்புதல்’ என்பது கட்டுமான வேலையை நினைப்பூட்டுகிறது. ‘கிறிஸ்துவின் சரீரம்’ என்பது ஆட்களை—அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையிலுள்ள அங்கத்தினர்களை—குறிக்கிறது. (1 கொரிந்தியர் 12:27; எபேசியர் 5:23, 29, 30) ஆவிக்குரிய விதத்தில் வளர சகோதரர்களுக்கு மூப்பர்கள் உதவிசெய்ய வேண்டும். அவர்களுடைய நோக்கம், ‘தகர்ப்பதல்ல, கட்டுவதே.’ (2 கொரிந்தியர் 10:8, NW) மந்தையை கட்டியெழுப்புவதற்கு முக்கியமாய் தேவைப்படுவது அன்பு, ஏனெனில் ‘அன்பு கட்டியெழுப்புகிறது.’—1 கொரிந்தியர் 8:1.
13. ஒற்றுணர்வு என்றால் என்ன, மூப்பர்கள் ஒற்றுணர்வு காட்டுவது ஏன் முக்கியம்?
13 மந்தையைக் கட்டியெழுப்ப மூப்பர்களுக்கு உதவும் ஒரு முக்கிய அம்சம் ஒற்றுணர்வு. ஒற்றுணர்வோடு இருப்பது என்பது தன்னை மற்றவர்களுடைய நிலையில் வைத்து உணர்வதை—அவர்களுடைய வரம்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வதை—அர்த்தப்படுத்துகிறது. (1 பேதுரு 3:8) மூப்பர்கள் ஒற்றுணர்வை காட்டுவது ஏன் முக்கியம்? எல்லாவற்றிற்கும் மேல் ‘மனித வடிவில் வரங்களை’ தருபவராகிய யெகோவா ஒற்றுணர்வுள்ள கடவுள். தம்முடைய ஊழியர்கள் துன்பப்படுகையில் அல்லது வேதனைப்படுகையில், அவர்கள்மீது பரிதாபப்படுகிறார். (யாத்திராகமம் 3:7; ஏசாயா 63:9) அவர்களுடைய வரம்புகளைக் குறித்தும் முன்யோசனையுள்ளவராய் இருக்கிறார். (சங்கீதம் 103:14) அப்படியானால், எவ்வாறு மூப்பர்கள் ஒற்றுணர்வை காட்டலாம்?
14. மற்றவர்களுக்கு எந்த விதத்தில் மூப்பர்கள் ஒற்றுணர்வு காட்டலாம்?
14 உற்சாகமிழந்த எவரேனும் அவர்களிடம் வரும்போது, அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு செவிகொடுத்துக் கேட்கிறார்கள். தங்களுடைய சகோதரர்களுடைய பின்னணி, ஆள்தன்மை, சூழ்நிலைமை ஆகியவற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். கட்டியெழுப்பும் வேதப்பூர்வ உதவியை மூப்பர்கள் அளிக்கையில், உண்மையிலேயே புரிந்துகொள்ளும் தன்மையுள்ள, தங்கள்மீது அக்கறையுள்ள மேய்ப்பர்களிடமிருந்து அது வருவதால் அதை ஏற்றுக்கொள்வது ஆடுகளுக்கு எளிதாக இருக்கும். (நீதிமொழிகள் 16:23) மற்றவர்களுடைய வரம்புகளையும் உணர்ச்சிகளையும் கவனத்தில் கொள்வதற்கும்கூட ஒற்றுணர்வு மூப்பர்களை உந்துவிக்கிறது. உதாரணமாக, முதுமை அல்லது சுகவீனம் காரணமாக கடவுளை சேவிப்பதில் அதிகம் செய்ய முடியாதிருக்கும் பட்சத்தில், கடினமாய் உழைக்க நினைக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் குற்றவுணர்வுடன் இருக்கலாம். மறுபட்சத்தில், தங்களுடைய ஊழியத்தை முன்னேற்றுவிக்க சிலருக்கு உற்சாகம் தேவைப்படலாம். (எபிரெயர் 5:12; 6:1) மற்றவர்களை கட்டியெழுப்பும் “இதமான வார்த்தைகளைக்” கண்டுபிடிக்க ஒற்றுணர்வு மூப்பர்களை உந்துவிக்கும். (பிரசங்கி 12:10) யெகோவாவின் ஆடுகள் கட்டியெழுப்பப்படுகையிலும் உந்துவிக்கப்படுகையிலும், கடவுளை சேவிப்பதில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு அவர்மீதுள்ள அன்பு அவர்களைத் தூண்டும்!
ஒற்றுமையை முன்னேற்றுவிக்கும் மனிதர்கள்
15. ‘விசுவாசத்தில் ஒருமைப்பட்டிருத்தல்’ என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது?
15 மூன்றாவதாக, “நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களா[க]” வேண்டும் என்பதற்காக ‘மனித வடிவில் வரங்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன. (எபேசியர் 4:11) ‘விசுவாசத்தில் ஒருமைப்பட்டிருத்தல்’ என்ற சொற்றொடர், விசுவாசத்தின் ஒற்றுமையை மட்டுமல்ல, விசுவாசிகளின் ஒற்றுமையையும் குறிக்கிறது. அப்படியானால், தம்முடைய மக்கள் மத்தியில் ஒற்றுமையை முன்னேற்றுவிப்பதற்கு ‘மனித வடிவில் வரங்களை’ கொடுத்திருப்பதற்கு இது மற்றொரு காரணமாகும். இதை அவர்கள் எவ்வாறு செய்கிறார்கள்?
16. மூப்பர்கள் தங்கள் மத்தியில் ஒற்றுமையை காத்துக்கொள்வது ஏன் முக்கியம்?
16 முதலாவதாக, தங்கள் மத்தியில் ஒற்றுமையை காத்துக்கொள்ள வேண்டும். மேய்ப்பர்கள் பிரிவுற்றிருந்தால், ஆடுகள் அசட்டை செய்யப்படலாம். மந்தையை மேய்ப்பதற்கு செலவழிக்கப்படும் மதிப்புமிக்க நேரம் அநாவசியமாக நீண்டநேர கூட்டங்களிலும் சாதாரண விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வதிலுமே போய்விடும். (1 தீமோத்தேயு 2:8) இன்ன விஷயம் என்றில்லாமல் எடுத்ததற்கெல்லாம் எல்லா மூப்பர்களும் ஒத்துப்போக முடியாதுதான். ஏனெனில் மிகவும் வித்தியாசப்படுகிற ஆள்தன்மைகளைக் கொண்ட மனிதர்களே அவர்கள். ஒற்றுமை என்பது வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருப்பதையோ அல்லது மனந்திறந்து பேசும் கலந்தாலோசிப்பின்போது அவற்றை சமநிலையோடு தெரிவிப்பதையோ தடைசெய்வதில்லை. ஒருவரைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துவிடாமல் ஒருவரையொருவர் மரியாதையோடு நடத்தி செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் மூப்பர்கள் தங்களுடைய ஒற்றுமையை காத்துக்கொள்கிறார்கள். எந்தவொரு பைபிள் நியமமும் மீறப்படாத வரையில், மூப்பர் குழுவின் இறுதி தீர்மானத்தை ஆதரிக்கிறவர்களாகவும் இணங்கிப்போக மனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இணங்கிச் செல்லும் மனப்பான்மை ‘பரத்திலிருந்து வரும் ஞானத்தால்’ வழிநடத்தப்படுவதை காட்டுகிறது, அது ‘சமாதானமுள்ளதாகவும் இணக்கமுள்ளதாகவும்’ இருக்கிறது.—யாக்கோபு 3:17, 18.
17. சபையில் ஒற்றுமையை காத்துக்கொள்ள மூப்பர்கள் எவ்வாறு உதவலாம்?
17 சபையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கும் மூப்பர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். பிரிவினையுண்டாக்கும் செல்வாக்குகள்—தீங்கிழைக்கும் வீண்பேச்சு, தவறான உள்நோக்கம் கற்பிக்கும் மனப்பான்மை, அல்லது போட்டி மனப்பான்மை ஆகியவை—சமாதானத்தை அச்சுறுத்தும்போது, அவர்கள் பயனுள்ள ஆலோசனைகளை உடனடியாக தருகிறார்கள். (பிலிப்பியர் 2:2, 3) உதாரணமாக, அதிக குறைகாண்கிற அல்லது மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுபவர்களைப் பற்றி மூப்பர்கள் அறிந்திருக்கலாம். (1 தீமோத்தேயு 5:13; 1 பேதுரு 4:15) இப்படிப்பட்ட போக்கு கடவுள் நமக்கு போதித்தவற்றிலிருந்து முரணானது, ஒவ்வொருவரும் ‘தன் தன் பாரத்தை சுமக்க வேண்டும்’ என்பதை உணர்ந்துகொள்ள இப்படிப்பட்டவர்களுக்கு உதவ மூப்பர்கள் முயற்சி செய்வார்கள். (கலாத்தியர் 6:5, 7; 1 தெசலோனிக்கேயர் 4:9-12) பல விஷயங்களை யெகோவா நம்முடைய மனசாட்சிக்கு விட்டுவிடுகிறார், இப்படிப்பட்ட விஷயங்களைக் குறித்து நம்மில் ஒருவரும் மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது என்பதை வேதவசனங்களைப் பயன்படுத்தி மூப்பர்கள் விளக்குவார்கள். (மத்தேயு 7:1, 2; யாக்கோபு 4:10-12) ஒற்றுமையோடு ஒன்றுகூடி சேவிப்பதற்கு, சபையில் நம்பிக்கையும் மரியாதையுமிக்க சூழ்நிலை நிலவ வேண்டும். தேவையான சமயத்தில் வேதப்பூர்வ ஆலோசனை வழங்கி, நம்முடைய சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க ‘மனித வடிவில் வரங்கள்’ நமக்கு உதவிசெய்வார்கள்.—ரோமர் 14:19.
மந்தையை பாதுகாத்தல்
18, 19. (அ) யாரிடமிருந்து ‘மனித வடிவில் வரங்கள்’ நம்மை பாதுகாக்கின்றனர்? (ஆ) வேறெந்த ஆபத்துக்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது அவசியம், ஆடுகளை காப்பற்ற மூப்பர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்?
18 நான்காவது, ‘மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலை’வதிலிருந்து பாதுகாக்க ‘மனித வடிவில் வரங்களை’ யெகோவா தந்திருக்கிறார். (எபேசியர் 4:14) “சூது” என்பதற்கான மூலப்பதம் “பகடைக்காய் விளையாட்டில் ஏமாற்றுதல்” அல்லது “பகடைக் காயை லாவகமாய் உருட்டுதல்” என்பதை அர்த்தப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. விசுவாச துரோகிகளின் செயல் எவ்வளவு சூழ்ச்சிநயமிக்கது என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது அல்லவா? மெய் கிறிஸ்தவர்களை கவர்ந்து விசுவாசத்திலிருந்து வழிவிலகும்படி செய்வதற்கு முயலுகையில், இப்படிப்பட்டவர்கள் நயமான விவாதங்களால் வேதவசனங்களை சூழ்ச்சியாக பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட ‘கொடிதான ஓநாய்களை’ குறித்து மூப்பர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!—அப்போஸ்தலர் 20:29, 30.
19 வேறுசில ஆபத்துக்களிலிருந்தும் யெகோவாவின் ஆடுகளை பாதுகாக்க வேண்டும். பூர்வகால மேய்ப்பனாகிய தாவீது தன் தகப்பனுடைய மந்தையை கொன்றுதின்னும் விலங்குகளிடமிருந்து தைரியமாக பாதுகாத்தார். (1 சாமுவேல் 17:34-36) யெகோவாவின் ஆடுகளை, முக்கியமாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களை தவறாக வழிநடத்துகிறவர்களிடமிருந்து அல்லது ஒடுக்குகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக, சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்கள் தைரியத்தை காண்பிக்க வேண்டிய சூழ்நிலை எழும்பலாம். சூதுவாது, வஞ்சனை, சதித்திட்டம் போடுதல் ஆகியவற்றை வேண்டுமென்றே பயன்படுத்துகிற பிடிவாதமான பாவிகளை சபையிலிருந்து நீக்க மூப்பர்கள் உடனடியாக செயல்படுவார்கள். b—1 கொரிந்தியர் 5:9-13; ஒப்பிடுக: சங்கீதம் 101:7.
20. ‘மனித வடிவில் வரங்கள்’ காட்டும் அக்கறையில் நாம் ஏன் பாதுகாப்பாக உணரலாம்?
20 ‘மனித வடிவில் வரங்களுக்காக’ நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அவர்களுடைய அன்பான அக்கறையால், நாம் பாதுகாப்பாக உணரலாம். ஏனெனில் அவர்கள் மென்மையாக நம்மை திருத்துகிறார்கள், அன்புடன் நம்மை கட்டியெழுப்புகிறார்கள், நம்முடைய ஒற்றுமையை காக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள், தைரியமாய் நம்மை பாதுகாக்கிறார்கள். ஆனால் இந்த ‘மனித வடிவில் வரங்கள்’ சபையில் தங்களுடைய பாகத்தை எவ்வாறு கருத வேண்டும்? நாம் அவர்களை மதிப்புடன் நோக்குகிறோம் என்பதை எவ்வாறு காட்டலாம்? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில், சங்கீதம் 17[16]:5-ல் ‘சீர்பொருந்தப் பண்ணு’ என்ற இதே வினைச்சொல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில், யெகோவாவின் வழிகளை தன்னுடைய கால்கள் பற்றிக்கொண்டிருக்க உதவும்படி உண்மையுள்ள தாவீது ஜெபித்தார்.
b உதாரணமாக, ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 15, 1979 இதழ், பக்கங்கள் 31-2-ல் உள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியையும், ஜனவரி 1, 1997 இதழ், பக்கங்கள் 26-9-ல் உள்ள “தீமையை வெறுப்போமாக” என்ற கட்டுரையையும் காண்க.
ஞாபகமிருக்கிறதா?
◻ ‘மனித வடிவில் வரங்கள்’ யார், கிறிஸ்துவின் மூலமாக சபைக்கு கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார்?
◻ மந்தையை சீர்பொருந்தப் பண்ணும் பொறுப்பை மூப்பர்கள் எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்?
◻ உடன் விசுவாசிகளைக் கட்டியெழுப்புவதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?
◻ சபையின் ஒற்றுமையை மூப்பர்கள் எவ்வாறு பாதுகாக்கலாம்?
[பக்கம் 10-ன் படம்]
மனம்வாடியவர்களை உற்சாகப்படுத்த மூப்பர்களுக்கு ஒற்றுணர்வு உதவுகிறது
[பக்கம் 10ன் படம்]
மூப்பர்களின் ஒற்றுமை சபையின் ஒற்றுமையை முன்னேற்றுவிக்கிறது