‘வானத்தின் தானியம்’ நமக்கு பயன்
இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து அற்புதகரமாக விடுவிக்கப்பட்டு கொஞ்சம் காலம்தான் ஆகியிருந்தது. ஆனாலும் அவர்களை விடுவித்த யெகோவா தேவன் மீதே அவர்களுக்கு விசுவாசம் குறைந்துபோனது. அதன் விளைவாக அவர்கள் சீனாய் வனாந்திரத்தில் 40 வருடங்கள் சுற்றி திரியும்படி யெகோவா அனுமதித்தார். அந்தக் காலம் முழுவதும் இஸ்ரவேலர்களும் அவர்களைச் சேர்ந்துகொண்ட ‘பல ஜாதியான ஜனங்களும்’ ‘பூரணமாய்’ புசித்துக் குடித்தார்கள். (யாத்திராகமம் 12:37, 38) அது எப்படி முடியும், என்று கேட்கிறீர்களா? சங்கீதம் 78:23-25 பதிலளிக்கிறது: “அவர் [யெகோவா] உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.”
மன்னாவை ருசிபார்த்த மோசே, விசேஷமான அந்த உணவை விவரித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: காலையில் “பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் தட்டையான ஒரு மெல்லிய வஸ்து கிடந்தது, அது தரையின்மேல் உறைந்திருக்கும் பனிபோல் மெல்லியதாயிருந்தது. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன” அல்லது சொல்லர்த்தமான எபிரெயுவில் “மான்ஹூ?” என்றார்கள். இந்த வார்த்தையிலிருந்தே “மன்னா” என்று பெயர் வந்திருக்கலாம். அந்த உணவிற்கு இஸ்ரவேலர்கள் இந்தப் பெயரைத்தான் கொடுத்தார்கள் அல்லவா? “அது வெண்மையாய்க் கொத்தமல்லி அளவிருந்தது. அதன் ருசி தேனிட்ட பணிகாரம் போலிருந்தது” என்று மோசே கூறினார்.—யாத்திராகமம் 16:13-15, 31, தி.மொ.
மன்னா, இயற்கையாக கிடைத்த உணவுதான் என சிலர் வாதாடுகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் உதவியால்தான் அது கிடைத்தது. உதாரணமாக, இடம் அல்லது காலம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் அது கிடைத்தது. அடுத்த நாள் காலைவரை வைத்திருந்தால் அது புழுத்து நாற்றமெடுத்துவிடும். ஆனாலும், ஓய்வுநாளன்று மன்னா கிடைக்காது; ஆகையால் அன்று சாப்பிடுவதற்காக வாராந்திர ஓய்வுநாளுக்கு முன்தினம் ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பங்கு அதிகமாக எடுத்தார்கள். அதை அடுத்த நாள்வரை வைத்திருந்தாலும் அது கெட்டுப்போகவில்லை. ஆக, மன்னா அற்புதகரமாக கிடைத்த உணவு என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.—யாத்திராகமம் 16:19-30.
சங்கீதம் 78-ல் ‘தூதர்களைப்’ பற்றி சொல்லியிருப்பதால் மன்னாவைக் கொடுக்க யெகோவா தேவதூதர்களை உபயோகித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. (சங்கீதம் 78:25) எப்படி இருந்தாலும், கடவுளுடைய தயவிற்காக அவருக்கு நன்றி செலுத்த அந்த மக்களுக்கு ஏராளமான காரணங்கள் இருந்தன. ஆனால், அவர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவரிடமே அநேகர் நன்றிகெட்ட குணத்தை காண்பித்தனர். யெகோவாவின் அன்புள்ள தயவைப் பற்றி தியானிக்க தவறினால் நாமும்கூட அவருடைய ஏற்பாடுகளை ஏனோதானோவென்று நினைத்துவிடலாம் அல்லது நன்றிகெட்டவர்களாக மாறிவிடலாம். ஆகவே, இஸ்ரவேலருடைய விடுதலையையும் அதற்கு பிறகு நிகழ்ந்தவற்றையும் “நமக்குப் போதனையாக” யெகோவா பதிவுசெய்து வைத்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!—ரோமர் 15:4.
இஸ்ரவேலருக்கு பாடம்—கிறிஸ்தவர்களுக்கும் பயன்
யெகோவா, ஏறக்குறைய 30 லட்சம் இஸ்ரவேலருக்கு மன்னாவை அளித்தபோது வெறுமனே அவர்களுடைய சரீர தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்து கொண்டில்லை. அவர்களுடைய சொந்த நலனுக்காக அவர்களை சுத்திகரித்து, சிட்சிப்பதற்காக ‘அவர்களைச் சிறுமைப்படுத்தி, சோதிக்கவும்’ விரும்பினார். (உபாகமம் 8:15; ஏசாயா 48:17) அந்தச் சுத்திகரிப்பிற்கும் சிட்சைக்கும் அவர்கள் கீழ்ப்படிந்தால், யெகோவா ‘அவர்களுடைய பின்நாட்களில் அவர்களுக்கு நன்மைசெய்ய’ விரும்புவார். அதாவது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் சமாதானத்தையும் செழுமையையும் சந்தோஷத்தையும் அளிப்பார்.
“மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற முக்கியமான விஷயத்தை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. (உபாகமம் 8:3) கடவுள் அவர்களுக்கு மன்னாவை அளிக்கவில்லை என்றால் அந்த மக்கள் பட்டினியால் மரித்திருப்பர்; இந்த உண்மையை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டனர். (யாத்திராகமம் 16:3, 4) போற்றுதல் மனப்பான்மையுள்ள இஸ்ரவேலர்கள், தாங்கள் யெகோவா மீதே முழுமையாக சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி தினமும் இந்த விதத்தில் நினைப்பூட்டப்பட்டதால் சிறுமைப்படுத்தப்பட்டனர். ஆகவே இப்படிப்பட்ட மக்கள், வளம்கொழிக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்ற பிறகும் யெகோவாவையோ தாங்கள் அவர் மீதே சார்ந்திருக்கிறார்கள் என்பதையோ சீக்கிரத்தில் மறந்துவிடமாட்டார்கள்.
இஸ்ரவேலர்களைப் போலவே, வாழ்க்கையின் சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளுக்காக நாம் கடவுள் மீதே சார்ந்திருக்கிறோம் என்பதைப் பற்றி கிறிஸ்தவர்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும். (மத்தேயு 5:3; 6:31-33) இயேசு கிறிஸ்து ஒருமுறை பிசாசால் சோதிக்கப்படும்போது, உபாகமம் 8:3-ல் காணப்படும் மோசேயின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறினார்: “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” (மத்தேயு 4:4) ஆம், யெகோவாவுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய சொற்களை வாசிப்பதன் மூலமே உண்மை வணக்கத்தார் போஷிக்கப்படுகின்றனர். அதுமட்டுமா, அவர்கள் கடவுளோடு நடந்து, அவருடைய ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைத்து, இந்த வார்த்தைகளால் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல பாதிப்புகளை அனுபவிக்கும்போது அவர்கள் விசுவாசமும் பலப்படுகிறது.
வாழ்க்கையின் அன்றாட காரியமாகிவிட்ட ஒன்றை அபூரண மனிதர்கள் வெகு சீக்கிரத்தில் அசட்டையாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடலாம். அவை யெகோவாவின் அன்புள்ள அக்கறையை வெளிப்படுத்தும் காரியங்களாக இருந்தாலும் அவ்வாறு நிகழலாம். உதாரணமாக, அற்புதமான விதத்தில் அளிக்கப்பட்ட மன்னாவைக் கண்ட இஸ்ரவேலர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டு, அதனால் திருப்தியும் அடைந்தனர். ஆனால் காலப்போக்கில் அநேகர் குறைகூறினர். “இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது” என அவமரியாதையுடன் புலம்பினர். அவர்கள் ‘ஜீவனுள்ள தேவனைவிட்டு விலக’ ஆரம்பித்தனர் என்பதற்கான அத்தாட்சியே இது. (எண்ணாகமம் 11:6; 21:5; எபிரெயர் 3:12) ஆகவே அவர்களுடைய உதாரணம், ‘உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பாக’ சேவிக்கிறது.—1 கொரிந்தியர் 10:11.
எச்சரிப்பூட்டும் இந்த உதாரணத்திற்கு நாம் எவ்வாறு கவனம் செலுத்தலாம்? உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு மூலமாக நமக்கு கிடைக்கும் பைபிள் போதனைகளையோ மற்ற ஏற்பாடுகளையோ ஒருபோதும் சாதாரணமானதாக அல்லது அசட்டையாக நினைத்துவிடக் கூடாது. (மத்தேயு 24:45) யெகோவாவின் பரிசுகளை ஏனோதானோவென்று அல்லது மதிப்பு குறைவாக நினைக்க ஆரம்பித்தோம் என்றால் அவரோடுள்ள நம் உறவு பழுதுபட ஆரம்பித்துவிடும்.
யெகோவா நல்ல காரணத்துடனேயே, கிளர்ச்சியூட்டும் புதிய காரியங்களைத் தொடர்ச்சியாக கொடுத்து நம்மைத் திக்குமுக்காட வைப்பதில்லை. மாறாக, அவருடைய வார்த்தை மீதான ஒளியைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரித்து வருகிறார். (நீதிமொழிகள் 4:18) இதனால், கற்றுக்கொள்ளும் காரியங்களைக் கிரகித்துக் கொள்ளவும் அதன்படி செய்யவும் கடவுளுடைய மக்களுக்கு அவகாசம் கிடைக்கிறது. இயேசு தமது புதிய சீஷர்களுக்கு போதிக்கையில் தம் தகப்பனுடைய முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் கடவுளுடைய வார்த்தையை, “அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக” அல்லது சில மொழிபெயர்ப்புகள் சொல்கிறபடி “புரிந்துகொள்ளும்” அளவுக்கு தக்கதாக விளக்கினார்.—மாற்கு 4:33; ஒப்பிடுக: யோவான் 16:12.
கடவுளுடைய ஏற்பாடுகளுக்கு போற்றுதலை வளர்த்திடுங்கள்
சொன்னதையே மறுபடியும் சொல்லும் கலையை இயேசு உபயோகித்தார். உதாரணமாக, பைபிள் நியமம் ஒன்றை நம் மனது உடனே புரிந்துகொள்ளலாம். ஆனால், அதை இதயத்தில் ஏற்று, கிறிஸ்தவ ‘புதிய ஆள்தன்மையின்’ பாகமாக ஆக்குவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம். முக்கியமாக இந்தப் பழைய உலகத்தின் வழிகளும் மனப்பான்மைகளும் நமக்குள் ஆழமாக பதிந்திருந்தால் அவ்வாறு செய்வது கடினமாக இருக்கலாம். (எபேசியர் 4:22-24) பெருமையை நீக்கி மனத்தாழ்மையை வளர்ப்பதில் இயேசுவின் சீஷர்கள் மத்தியில் இதே பிரச்சினைதான் இருந்தது. இயேசு, மனத்தாழ்மையைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு போதிக்க வேண்டியிருந்தது. அவர்கள் மனதில் பதியவைப்பதற்காக ஒவ்வொரு சமயமும் அதே அடிப்படை குறிப்பை பல வித்தியாசப்பட்ட கோணங்களில் கூறினார். இதன் விளைவாக, அந்த விஷயம் கடைசியில் பசுமரத்து ஆணியாய் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.—மத்தேயு 18:1-4; 23:11, 12; லூக்கா 14:7-11; யோவான் 13:5, 12-17.
நவீன காலங்களில், சொன்னதையே மறுபடியும் சொல்லும் இயேசுவின் முன்மாதிரியை கிறிஸ்தவ கூட்டங்களும் காவற்கோபுர பிரசுரங்களும் பின்பற்றுகின்றன. ஆகவே, கடவுள் நம்மீது காண்பிக்கும் அன்புள்ள அக்கறையின் அத்தாட்சியாக இதை எடுத்துக்கொள்வோமாக. இஸ்ரவேலர்கள் மன்னாவைக் குறித்து சலித்துக்கொண்டதைப் போல நமக்கு கிடைக்கும் காரியங்களைக் குறித்து நாம் ஒருபோதும் சலித்துக்கொள்ளாமல் இருப்போமாக. யெகோவா நமக்கு தொடர்ச்சியாக கொடுத்து வரும் நினைப்பூட்டுதல்களை கிரகித்துக்கொள்ள பொறுமையோடு முயலுகையில் நம் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் காண்போம். (2 பேதுரு 3:2) இப்படிப்பட்ட போற்றுதலுள்ள மனப்பான்மை நமக்கிருந்தால் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையை நம் இதயத்திலும் மனதிலும் ‘உணர்ந்திருக்கிறோம்’ என்பதை காண்பிப்போம். (மத்தேயு 13:15, 19, 23) இந்த விஷயத்தில் சங்கீதக்காரனாகிய தாவீது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. இன்று நமக்கு கிடைக்கும் விதவிதமான ஆவிக்குரிய உணவு அவருக்கு கிடைக்காதபோதும், யெகோவாவுடைய சட்டங்கள் “தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது” என்று விவரித்தாரே!—சங்கீதம் 19:10.
நித்திய ஜீவனளிக்கும் “மன்னா”
இயேசு யூதர்களிடம் இவ்வாறு கூறினார்: “ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். . . . நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.” (யோவான் 6:48-51) சொல்லர்த்தமான அப்பம் அல்லது மன்னா நித்திய ஜீவனைக் கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியாது. ஆனால் இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசத்தை வெளிக்காட்டும் அனைவரும் கடைசியில் நித்திய ஜீவன் என்ற ஆசீர்வாதத்தைப் பெறுவர்.—மத்தேயு 20:28.
இயேசுவின் மீட்கும் பொருளால் பயனடைகிறவர்களில் பெரும்பாலானோர் பூங்காவனமான பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வர். இவர்களில் ஒரு ‘திரள் கூட்டத்தினர்,’ பூமியிலிருந்து துன்மார்க்கத்தை துடைத்தழிக்க வேகமாக வந்துகொண்டிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைப்பர். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது அவர்களோடு சேர்ந்துகொண்ட புறதேசத்தாராகிய “பல ஜாதியான ஜனங்கள்” இந்தக் கூட்டத்தினரையே படமாக சித்தரித்தனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; யாத்திராகமம் 12:38) இஸ்ரவேலர்கள் யாருக்கு படமாக இருந்தனரோ அவர்கள் பேரளவான ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர். 1,44,000 பேர்கொண்ட இவர்கள் தேவனுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலர் என அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார். அவர்களுடைய பரிசு, மரித்தபின் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதே. (கலாத்தியர் 6:16; எபிரெயர் 3:1; வெளிப்படுத்துதல் 14:1) அங்கே இயேசு அவர்களுக்கு விசேஷமான ஒருவகை மன்னாவைக் கொடுப்பார்.
“மறைவான மன்னா”—அர்த்தம் என்ன?
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு ஆவிக்குரிய இஸ்ரவேலரிடம், “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடு”ப்பேன் என்று கூறினார். (வெளிப்படுத்துதல் 2:17) பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டிக்குள் ஒரு தங்க பாத்திரத்தில் கொஞ்சம் மன்னாவை எடுத்துவைக்கும்படி கடவுள் மோசேயிடம் கூறினார் அல்லவா? அடையாள அர்த்தமுள்ள இந்த மறைவான மன்னா நமக்கு அதையே நினைப்பூட்டுகிறது. அந்த உடன்படிக்கைப் பெட்டி, கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தது. ஆகவே அது மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல், மறைவாக இருந்தது. நினைவுச்சின்னமாக வைக்கப்பட்ட இந்த மன்னா உடன்படிக்கைப் பெட்டிக்குள் இருந்தவரைக்கும் கெட்டுப்போகவில்லை. ஆகவே அது அழிவில்லாத உணவின் ஊற்றுமூலத்திற்கு பொருத்தமான அடையாளமாக இருந்தது. (யாத்திராகமம் 16:32; எபிரெயர் 9:3, 4, 23, 24) 1,44,000 பேருக்கு மறைவான மன்னாவைக் கொடுப்பதனால், கடவுளுடைய ஆவி குமாரர்களாக அவர்கள் அழியாமையையும் சாவாமையையும் நிச்சயம் பெறுவார்கள் என இயேசு உறுதியளிக்கிறார்.—யோவான் 6:51; 1 கொரிந்தியர் 15:54.
“ஜீவஊற்று உம்மிடத்தில் [யெகோவாவிடத்தில்] இருக்கிறது” என சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 36:9) சொல்லர்த்தமான மற்றும் அடையாள அர்த்தமான மன்னாவின் ஏற்பாடு, இந்த அடிப்படை சத்தியத்தை எவ்வளவு அருமையாக உறுதி செய்கிறது! பூர்வகால இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த மன்னா, நம் சார்பாக கொடுக்கப்பட்ட இயேசுவின் சரீரம் என்ற அடையாள அர்த்தமுள்ள மன்னா, 1,44,000 பேருக்கு இயேசு மூலமாக கடவுள் கொடுக்கும் மறைவான மன்னா; இவையனைத்தும், ஜீவனைப் பெற நாம் கடவுள் மீதே முழுமையாக சார்ந்திருக்கிறோம் என்பதை நம் எல்லாருக்கும் நினைப்பூட்டுகின்றன. (சங்கீதம் 39:5, 7) ஆகவே, நாம் அவர் மீதே சார்ந்திருக்கிறோம் என்பதை மனத்தாழ்மையோடும் பணிவோடும் எப்பொழுதும் ஒப்புக்கொள்வோமாக. அதற்கு கைமாறாக யெகோவா ‘நம்முடைய பின்நாட்களில் நமக்கு நன்மை செய்வார்.’—உபாகமம் 8:15.
[பக்கம் 26-ன் படங்கள்]
நித்திய ஜீவனைப் பெற, மனிதர்கள் அனைவரும் “வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்” மீதே சார்ந்திருக்கின்றனர்
[பக்கம் 28-ன் படம்]
எல்லா கிறிஸ்தவ கூட்டங்களிலும் ஆஜராவதால் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைப் போற்றுகிறோம் என காட்டுகிறோம்