கடவுளை நேசிக்க கற்றுத்தந்த பெற்றோர்
எலிசபெத் ட்ரேஸி கூறியது
அன்று காலை, எங்களுக்கு எதிராக ரௌடி கும்பலை ஏவி விட்டவர்கள், கைகளில் துப்பாக்கியை காட்டி மிரட்டி அப்பாவையும், அம்மாவையும் காரை விட்டு இறக்கிவிட்டார்கள். என்னையும் அக்காவையும் காரிலேயே விட்டுவிட்டனர். அப்பா அம்மாவை மறுபடியும் எப்போது பார்ப்போமோ என்ற கலவரம் முகத்தில் படர்ந்தது. குலை நடுங்க வைத்த இச்சம்பவம், யு.எஸ்.ஏ., அலபாமா மாகாணத்தில், செல்மா நகரில் 1941-ல் நேர்ந்தது. எங்களுக்கு ஏன் இந்த கொடுமை? இதற்கும், பெற்றோரிடமிருந்து நாங்கள் பெற்ற போதனைகளுக்கும் சம்பந்தமிருக்கிறதா?
என்னுடைய அப்பா பெயர் டுயீ ஃபவுண்டன். கைக்குழந்தையாக இருந்த போதே, அப்பா அம்மாவை இழந்துவிட்ட அவரை, டெக்ஸாஸ் பண்ணையில் இருந்த உறவினர்கள் எடுத்து வளர்த்தார்கள். பிறகு அவர் எண்ணெய் வயல்களில் வேலைக்கு சேர்ந்தார். 1922-ல், அவருக்கு 23 வயதானபோது, டெக்ஸாஸை சேர்ந்த வின்னி என்ற அழகு மங்கை மனைவியானாள். குடும்பம் குழந்தை குட்டி என அமைதியான வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்தார்.
டெக்ஸாஸுக்கு கிழக்கே, காரிசன் என்ற சின்ன டவுனுக்கு பக்கத்தில், காடுகளடங்கிய பகுதியில் வீட்டை கட்டினார். பருத்தி, சோளம் உட்பட பல்வேறு தானியங்களை பயிரிட்டார். எல்லா வகையான கால்நடைகளையும் வளர்த்தார். இதற்கிடையே நாங்களும் பிறந்தோம். மே 1924-ல் என் அண்ணன் ஜூனியர் டுயீ பிறந்தான். டிசம்பர் 1925-ல் என் அக்கா எட்வினாவும், ஜூன் 1929-ல் நானும் பிறந்தோம்.
பைபிள் சத்தியத்தை கற்றார்கள்
அப்பாவும் அம்மாவும் சர்ச் ஆஃப் கிரைஸ்ட்டைச் சேர்ந்தவர்கள். அதனால், தங்களுக்கு முழுமையாக பைபிள் தெரியும் என்று நினைத்தார்கள். என் பெரியப்பா மன்ரோ ஃபவுண்டன். 1932-ல், ஜி. டபிள்யூ. குக் என்பவர் விடுதலை, அரசாங்கம் ஆகிய ஆங்கில புத்தகங்களை அவருக்கு கொடுத்திருந்தார். இப்புத்தகங்களை உவாட்ச் டவர் சொஸைட்டி வெளியிட்டிருந்தது. அவர் கற்ற விஷயங்களை என் அப்பா அம்மாவுக்கு சொல்ல அவருக்கு ஆசை அதிகம். அதனால் அடிக்கடி காலை உணவு சாப்பிட எங்கள் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போது காவற்கோபுர பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு, வேண்டுமென்றே “மறதியாக” பத்திரிகையை விட்டுவிட்டு போவார். பிறகு, அதை அப்பாவும் அம்மாவும் படிப்பார்கள்.
ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமை காலை. பெரியப்பா வந்து பக்கத்தில் எங்கேயோ ஒரு வீட்டில் பைபிள் படிப்பு நடைபெறவிருப்பதாக கூறி, அதில் கலந்துகொள்ள அப்பாவை கூப்பிட்டார். பைபிளிலிருந்து கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் மிஸ்டர் குக் பதிலளிப்பார் என்று உறுதியாக சொல்லிவிட்டு போனார். அந்த பைபிள் படிப்புக்கு போய்வந்த அப்பாவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. “என்னுடைய எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிருச்சி. அதுமட்டுமல்ல இன்னும் நெறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன்! எனக்கு பைபிள் பத்தி எல்லாமே தெரியும்னு நெனைச்சிருந்தேன், ஆனால் மிஸ்டர் குக் பேசினத கேட்ட பிறகு, எனக்கு பைபிள்ல எதுவும் தெரியலனு புரிஞ்சுக்கிட்டேன்! அவர் நரகத்தை பத்தியும், ஆத்துமாவை பத்தியும் விளக்கம் கொடுத்து, பூமியைப் பத்தி கடவுள் என்ன நோக்கம் வச்சிருக்கிறாரு, அந்த நோக்கத்தை எப்படி கடவுளுடைய ராஜ்யம் நிறைவேத்தும்னு விவரமா சொன்னாரு!” என்றார் எங்களிடம்.
எங்கள் வீட்டிற்கு நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி வந்துபோனதால், வீடு எப்போதும் ஜேஜேன்னு இருக்கும். அவர்கள் வந்து பலகாரமெல்லாம் செய்வார்கள். அம்மா பியானோ வாசிக்க, எல்லாரும் பாட்டு பாடுவார்கள். எங்கள் வீட்டில் நடந்த இதுபோன்ற பார்ட்டிகள் மெல்ல மெல்ல நின்றுபோயின. அதற்கு பதிலாக பைபிளிலிருந்து விஷயங்களை கலந்துபேச ஆரம்பித்தார்கள். நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்ததால், அவர்கள் பேசுவதெல்லாம் எங்களுக்கு புரியாது. ஆனாலும் அப்பாவும், அம்மாவும் கடவுளை ஆழமாக நேசிக்கிறார்கள், பைபிளை உறுதியாக நம்புகிறார்கள் என்பதுமட்டும் நன்றாக புரிந்தது. நாங்களும் எங்கள் பெற்றோர்களை போலவே, கடவுளை நேசிக்கவும், அவருடைய வார்த்தையாகிய பைபிளை நம்பவும் கற்றுக்கொண்டோம்.
பிறகு, பல குடும்பங்கள் தாங்களாகவே முன்வந்து, வாராந்தார பைபிள் உரையாடலை அவர்கள் வீடுகளிலும் நடத்தும்படி கேட்டார்கள். பொதுவாகவே, புதிய காவற்கோபுர பத்திரிகையிலுள்ள விஷயத்தை பேசுவார்கள். ஆனால், பக்கத்திலுள்ள ஏபல்பி டவுனிலும், நகடோசஸ் டவுனிலும் வசித்த குடும்பங்களில் பைபிள் உரையாடல் நடைபெறும்போது, மொத்த கூட்டமும், எங்களுடைய மாடல் ஏ ஃபோர்டு வண்டியில் ஏறிக்கொண்டு போவோம். மழை கொட்டோ கொட்டென கொட்டினாலும் சரி, வெய்யில் காயோ காயென காய்ந்தாலும் சரி, நாங்கள் போயே தீருவோம்.
கற்றதை கைக்கொண்டார்கள்
கற்ற விஷயத்தை கைக்கொள்ள வேண்டிய தேவையை என் பெற்றோர்கள் உடனே புரிந்துகொண்டார்கள். நாம் கடவுளை நேசித்தால், அவரைப் பற்றி கற்கும் விஷயங்களை மற்றவர்களிடம் அவசியம் சொல்ல வேண்டும். (அப்போஸ்தலர் 20:35) ஆனால், கூச்ச சுபாவமும், பணிவும் நிறைந்த என் அப்பா அம்மாவை பொருத்தவரை, மற்றவர்களிடம் போய் பைபிள் நம்பிக்கைகளை பேசுவது என்பது மலையைக் கிள்ளி எலியை பிடிப்பது போன்றது. ஆனால், இவ்வளவு பெரிய தடையைக்கூட தகர்த்திடும் அளவுக்கு அவர்கள் கடவுளை நேசித்தார்கள். அவர்களைப் போலவே நாங்களும் கடவுள்மீது முழு நம்பிக்கை வைக்க எங்களுக்கு கற்று தந்தார்கள். அப்பா இப்படி சொல்வார்: “யெகோவா, பட்டாணி பயிரிடுகிறவனைக்கூட பிரசங்கிக்கிறவனா மாத்திடுறாரு!” யெகோவாவுக்கு தங்களை (ஒப்புக்கொடுத்த) அர்ப்பணித்த, அப்பாவும், அம்மாவும் 1933-ல், டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹன்டர்சனுக்கு அருகில் இருந்த ஒரு சின்ன குட்டையில் முழுக்காட்டுதல் எடுத்தார்கள்.
1935-ம் வருட ஆரம்பத்தில், அப்பா உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் கிறிஸ்தவர்கள் நம்பும் முடிவில்லாத வாழ்க்கையைப் பற்றி நிறைய கேள்விகளை கேட்டிருந்தார். (யோவான் 14:2; 2 தீமோத்தேயு 2:11, 12; வெளிப்படுத்துதல் 14:1, 3; 20:6) அப்போது சங்கத்தின் பிரஸிடெண்டாக இருந்த மறைந்த ஜோசப் எஃப். ரதர்போர்ட் அவர்களே அப்பாவுக்கு நேரடியாக பதில் கடிதம் அனுப்பினார். சகோதரர் ரதர்போர்ட் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, வாஷிங்டன், டி.சி.-ல் மே மாதம் நடைபெறவிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டிற்கு வரும்படி அப்பாவை அழைத்திருந்தார்.
“65 ஏக்கர் நிலத்துல நாம காய்கறியெல்லாம் பயிரிட்டிருக்கோம். அந்த சமயத்துல [மாநாடு நடக்கற நேரத்தில்] காய்கறிகளை பறிச்சி, சந்தைக்கு வேற அனுப்பணும். அதனாலே கண்டிப்பா மாநாட்டுக்கு போக முடியாது!” என்று அப்பா நினைத்தார். ஆனால், மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து, பயிர்களையும், வேலிகளையும், பாலங்களையும் அடித்துக்கொண்டு போனது. கூடவே, மாநாட்டுக்கு போகாதிருக்க அப்பா சொன்ன சாக்குப்போக்குகளும் வெள்ளத்தோடு வெள்ளமாக போனதால், எங்களால் மாநாட்டுக்கு போக முடிந்தது. நாங்கள் இருந்த இடத்திற்கு, வடகிழக்கில் 1,600 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு போக மற்ற சாட்சிகள் ஒரு ஸ்கூல் பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம்.
“மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிக்க போகும், ‘திரள் கூட்டம்’ யார் என்பதை சுட்டிக்காட்டி, அதற்காக தந்த விளக்கத்தை மாநாட்டில் கேட்ட அப்பாவும், அம்மாவும் அளவில்லா ஆனந்தமடைந்தனர். (வெளிப்படுத்துதல் 7:9, 14) பூமியில் பூங்காவனம் (பரதீஸ்) போன்ற நிலைமை வரவிருக்கிறது, அதில் மரணமே இல்லாத வாழ்க்கை மனிதர்களுக்கு உண்டு என்ற நம்பிக்கையை கடைசிவரை காத்துக் கொண்டனர். அதேசமயத்தில், “உண்மையான வாழ்வை” பற்றிக்கொள்ளும்படி, அதாவது, இதே பூமியில் யெகோவா தரவிருக்கும் முடிவில்லாத வாழ்க்கையை பெறும் தகுதியை பற்றிக்கொள்ளும்படி எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார்கள். (1 திமொத்தேயு 6:19, பொது மொழிபெயர்ப்பு; சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4) இது எங்கள் குடும்பத்தில் மறக்க முடியாத, சந்தோஷம் நிறைந்த நாள். அப்போது எனக்கு ஐந்தே வயது. ஆனாலும், அவர்களோடு சேர்ந்து, நானும் சந்தோஷமாக இருந்தேன்.
மாநாட்டுக்கு போய் வந்த பிறகு, மறுபடியும் பயிரிட்டோம். இதுவரை காணாத அளவுக்கு அமோகமாக விளைச்சல் இருந்தது. யெகோவாவை முழுமையாக நம்பினால், அவர் ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை அப்பாவும், அம்மாவும் கண்கூடாக கண்டார்கள். ஆகவே, ஒவ்வொரு மாதமும், 60 மணிநேரம் கடவுளுடைய ஊழியத்திற்காக ஒதுக்க முடிவுசெய்து, பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டார்கள். பயிரிட அடுத்த பருவம் வந்தபோது, எல்லா நிலத்தையும் விற்றுவிட்டார்கள்! நாங்கள் ஐந்துபேரும் வசிக்க, 20 X 8 அடி அளவுள்ள ட்ரெய்லர் (குடியிருப்பு வண்டி) ஒன்றை உருவாக்கி, அதை இழுக்க, புத்தம் புதிய, இரு கதவுள்ள ஃபோர்டு வண்டி ஒன்றையும் அப்பா வாங்கினார். பெரியப்பா மன்ரோவும் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ஒரு ட்ரெய்லரை வாங்கி, தன் குடும்பத்தோடு வண்டிக்குள் குடிபுகுந்தார்.
எங்களுக்கு சத்தியத்தை கற்றுத்தந்தார்கள்
பயனியர் எனப்படும் முழுநேர சுவிசேஷக ஊழியத்தை அப்பாவும், அம்மாவும் அக்டோபர் 1936 முதல் செய்ய துவங்கினார்கள். ராஜ்ய செய்தி அவ்வளவாக பிரசங்கிக்கப்படாத, டெக்ஸாஸுக்கு கிழக்கே இருந்த மாவட்டங்களில் நாங்கள் குடும்பமாக ஊழியம் செய்தோம். ஒரே வருடத்தில், பல இடங்களுக்கு மாறி மாறி சென்றோம். ஆனாலும் வாழ்க்கை ஜாலியாக இருந்தது. மற்றவர்களுக்கு பைபிள் சத்தியத்தை சொல்வதற்காக தங்களையே அர்ப்பணித்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் போல் நாங்களும் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த எங்கள் பெற்றோர், சொல்லிக்கொடுத்ததைப் போல் வாழ்ந்தும் காட்டினார்கள்.
குறிப்பாக அம்மா செய்த தியாகங்களை இப்போது நினைத்தாலும் எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர் நினைத்திருந்தால் வீட்டில் நன்றாக வாழ்ந்திருக்கலாம். இப்படி வண்டியில் வந்து குடும்பம் நடத்தவேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றையும் தியாகம் செய்த அம்மா, தன்னுடைய தையல் மிஷினை மட்டும் கூடவே வைத்துக்கொண்டார். அதுவும் நல்லதுக்கே. அம்மா தையல் கலையில் வல்லவர். எப்போதும் எங்களுக்கு அழகான ஆடைகளை தைத்து கொடுப்பார். ஒவ்வொரு மாநாட்டிலும், அழகான புது ஆடையை அணிந்திருப்போம்.
உவாட்ச் டவர் சொஸைட்டியின் ஒலிபெருக்கி வண்டியில் (sound truck) ஹர்மன் ஜி. ஹென்ஷலும் அவருடைய குடும்பமும் நாங்கள் இருந்த பகுதிக்கு வந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஜனங்கள் நிறைய குடியிருக்கும் பகுதியில் அவர்கள் வண்டியை நிறுத்தி, பதிவுசெய்யப்பட்ட லெக்சரை ரெக்கார்டு பிளேயரில் கொஞ்சம் நேரம் போடுவார்கள். பிறகு, மேற்கொண்டு விளக்கம் அளிக்க மக்களை தனித்தனியே நேரடியாக போய் சந்திப்பார்கள். என் அண்ணன் டுயீ ஜூனியரும், ஹர்மன் அவர்களது டீனேஜ் மகன் மில்டனும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். இப்போது மில்டன் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடெண்டாக இருக்கிறார்.
1937-ல், கொலம்பஸ், ஒஹாயோவில் நடந்த மாநாட்டில் என் அக்கா எட்வினா முழுக்காட்டுதல் எடுத்தாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விசேஷ பயனியர்களாக சேவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலத்தில் விசேஷ ஊழியம் செய்வதென்றால், மாதந்தோறும் 200 மணிநேரம் செய்ய வேண்டும். என் கணவர் கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்ற இன்று நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றால், அன்று என் அம்மா வைத்த நல்ல முன்மாதிரிதான் காரணம்.
ஒரு குடும்பத்திற்கு அப்பா பைபிள் படிப்பு துவங்கினார். அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைப்பதற்காக எங்களையும் அழைத்துக்கொண்டு போவார். படிப்பு நடக்கும்போது பைபிளை திறந்து, வசனங்களை வாசிக்க சொல்லுவார். சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில்களை எங்களிடம் கேட்பார். இப்படியாக அன்று எங்களோடு பைபிள் படித்த பல சிறுவர் சிறுமியர் யெகோவாவை இன்றும் உண்மையுடன் சேவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பா இப்படி செய்தது, யெகோவாவை தொடர்ந்து நேசிக்க எங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
அந்தச் சின்ன வண்டியில், வயதுக்கு வந்த இரு தங்கைகளோடு வசிக்க என் அண்ணனுக்கு கஷ்டமாக இருந்தது. ஆகவே, 1940-ல், இன்னொரு சாட்சியோடு சேர்ந்து, பயனியர் ஊழியம் செய்வதற்காக, எங்களிடமிருந்து பிரிந்து சென்றார். பிறகு, ஆட்ரி பாரன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். ஆட்ரிக்கும் என் பெற்றோர் நிறைய விஷயங்களை கற்றுத்தந்தார்கள். அம்மா, அப்பாவை அண்ணி உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். போரில் ஈடுபடமாட்டேன் என்று கிறிஸ்த நடுநிலைமையில் உறுதியாக இருந்த அண்ணனை 1944-ல் சிறையில் போட்டார்கள். அண்ணன் சிறைக்கு போன பிறகு, அந்தச் சின்ன வண்டியில் எங்களோடு குடியிருக்க அண்ணியும் வந்துவிட்டார்.
1941-ல், செயின்ட் லூயிஸ், மிசௌரி என்ற இடத்தில் பெரிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் 5 முதல் 18 வயதுள்ள பிள்ளைகள் எல்லாரும், தனியாக ஒதுக்கி வைத்திருந்த மேடைக்கு முற்பகுதியில் அமர்ந்திருந்தோம். நேரடியாக பிள்ளைகளிடத்தில் சகோதரர் ரதர்போர்ட் பேசினார். அவருடைய அமைதி தவழும், தெள்ளத்தெளிவான குரலை நானும், எட்வினாவும் கேட்டோம். அன்பான அப்பா எப்படி தன் பிள்ளைக்கு போதிப்பாரோ அதேபோல் அவர் போதித்தார். பெற்றோர்களுக்கு அவர் தந்த ஊக்கம்: “இன்று, இயேசு தம்முடைய உடன்படிக்கை ஜனங்களை கூட்டி சேர்த்துள்ளார். உங்கள் பிள்ளைகளை நீதியின் வழியில் போதிக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தி கூறுகிறார். வீட்டில் வைத்து அவர்களுக்கு சத்தியத்தை கற்றுக்கொடுங்கள்!” அவர் சொன்னதை எங்கள் பெற்றோர் அப்படியே செய்தார்கள்!
அந்த மாநாட்டில், யெகோவாவின் ஊழியர்கள் காக்கப்படுதல் என்ற ஆங்கில புக்லெட்டை பெற்றுக்கொண்டோம். அதில், யெகோவாவின் சாட்சிகள் வெற்றியடைந்த நீதிமன்ற வழக்குகளும், அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் வெற்றி பெற்ற வழக்குகளும் விவரிக்கப்பட்டிருந்தது. அதை அப்பா குடும்பத்தோடு படித்தார். அந்த புக்லெட்டை படிப்பது எங்களுக்கு உதவும் என்பதை நாங்கள் அப்போது உணரவில்லை. சில வாரங்கள் கழித்து, அலபாமா மாகாணத்தில், செல்மா நகரில் எங்களுக்கு நடந்த கொடூரத்தை தாங்கிக்கொள்ள அது எங்களுக்கு வலிமை தந்தது.
செல்மாவில் ரௌடி கும்பல்
அன்று காலை ரௌடிகள் வந்து எங்களை கதிகலங்க செய்தார்கள். சட்டத்தின் பாதுகாப்போடு, சுவிசேஷ ஊழியம் செய்ய சட்டப்படி உரிமை உள்ளது என்பதை விளக்கி, செல்மா நகர முதன்மை அதிகாரிக்கும், மேயருக்கும், போலீஸ் தலைமை அதிகாரிக்கும் உடனே கடிதங்களை அப்பா எழுதினார். கடிதங்களை எழுதிய பிறகும், எங்களை டவுனை விட்டு வெளியேறும்படி கூறினார்கள்.
அன்று மதியம், துப்பாக்கி ஏந்திய ஐந்து ஆண்கள், நாங்கள் குடியிருந்த வண்டிக்கு வந்து, அம்மாவையும், அக்காவையும், என்னையும் சுற்றி வளைத்தார்கள். வண்டிக்குள் இருந்த எல்லா சாமான்களையும் கலைத்துப்போட்டு, தேசதுரோக செயலுக்கான ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். அப்பா வண்டிக்கு வெளியே இருந்தார். வண்டியை காரோடு இணைக்கும்படி அப்பாவை துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். இதுவெல்லாம் பார்த்து நான் பயப்படவில்லை. போயும் போயும் எங்களை இவர்கள் ஆபத்தானவர்களாக நினைக்கிறார்களே என்று, எனக்கும் அக்காவுக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. உடனே அப்பா எங்களை முறைத்து பார்த்ததும், நாங்கள் கப்சிப் ஆனோம்.
நாங்கள் புறப்படும் நேரத்தில், எட்வினாவையும், என்னையும் அவர்களுடைய காரில் வரும்படி கூறினார்கள். ஆனால் அப்பா அதற்கு சம்மதிக்கவேயில்லை. “நான் உயிரோடு இருக்கும் வரை என் மகள்களை நீங்கள் கூட்டிக்கொண்டு போக முடியாது!” என்று உறுதியோடு கூறினார். பிறகு ஏதேதோ பேசி முடித்து, ஒருவழியாக எங்கள் எல்லாரையும் ஒரே வண்டியில் வர சம்மதித்தார்கள். எங்கள் வண்டிக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியப்படி வந்தார்கள். டவுனுக்கு வெளியே சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வந்த பிறகு, ஹைவேயில், ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். அப்பாவையும் அம்மாவையும் வண்டியிலிருந்து இறங்க சொன்னார்கள். “அந்த மதத்தை விட்டுவிட்டு வா. மறுபடியும் விவசாயம் செய். உன் பெண் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கு!” என்று என்னென்னவோ சொல்லி அந்த ஆட்கள் அப்பாவின் மனசை மாற்ற முயற்சி செய்தார்கள். அப்பாவும் எவ்வளவோ எடுத்து சொல்லிப்பார்த்தார். ஒரு பிரயோஜனமும் இல்லை.
கடைசியா ஒருவன் இவ்வாறு எச்சரித்தான்: “ஒழிந்து போ, இனி டாலஸ் மாவட்டத்தில் காலடி எடுத்து வைச்சா, உங்க எல்லாரையும் கொன்றுவிடுவோம்!”
அப்பாடா! ஒருவழியா அவர்களிடமிருந்து தப்பித்தோம். மறுபடியும் குடும்பாக சேர்ந்து, பல மணிநேரம் பயணம் செய்தோம். ராத்திரி ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அவர்களுடைய வண்டி நம்பரை நாங்கள் குறித்து வைத்திருந்தோம். அப்பா உடனே, எல்லா விவரங்களையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதினார். சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
கிலியட் மிஷனரி பள்ளிக்கு சென்றோம்
1946-ல், நியூயார்க், சௌத் லான்ஸிங்கில், உவாட்ச் டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 7-வது வகுப்பில் சேர்ந்துகொள்ள எட்வினாவுக்கு அழைப்பு வந்தது. அந்தப் பள்ளியில் ஆல்பர்ட் ஷ்ரோடரும் ஆசிரியராக பணியாற்றினார். அக்காவின் நல்ல குணங்களை அவருடைய முந்நாளைய பயனியர் தோழரான பில் எல்ராடுக்கு சொல்லியிருக்கிறார். எல்ராடு அப்போது பெத்தேலில், நியூயார்க் புரூக்லினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்துகொண்டிருந்தார். a எட்வினாவும் பில்லும் அறிமுகம் ஆனார்கள். கிலியட் பட்டம் பெற்று, ஒரு வருடத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஐந்து வருட பெத்தேல் ஊழியம் உட்பட பல வருடங்கள் அவர்கள் முழுநேர ஊழியம் செய்தார்கள். வருஷம் 1959. 34-வது கிலியட் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒரு நாள் சகோதரர் ஷ்ரோடர், தன் உயிர் நண்பனுக்கு இரட்டை குழந்தைகள், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பிறந்திருக்கும் செய்தியை வகுப்பில் அறிவித்தார்.
1947-ல் நான் அப்பா அம்மாவோடு சேர்ந்து மெரிடியன், மிஸ்ஸிசிபியில் கடவுள் ஊழியம் செய்துகொண்டிருந்தேன். கிலியட் பள்ளியின் 11-ம் வகுப்பில் சேர்ந்து கொள்ள எங்கள் மூவருக்கும் அழைப்பு வந்தது. எங்களுக்கோ இன்ப அதிர்ச்சி! வகுப்பில் சேர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயது அதிகம். எனக்கோ வயது கம்மி. ஆனாலும் எங்களுக்காக சலுகை கொடுத்தார்கள். பைபிளில் விரிவான போதனையை பெறும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.
பெற்றோரோடு சேர்ந்து மிஷனரி ஊழியம்
மிஷனரி ஊழியம் செய்ய எங்களை தென் அமெரிக்காவிலுள்ள, கொலம்பியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். டிசம்பர் 1949-ல், நாங்கள் மிஷனரி பட்டம் பெற்று, ஒரு வருடத்திற்கு மேல் ஆன பிறகு, போகோட்டா என்ற இடத்தில் இருந்த மிஷனரி இல்லத்திற்கு வந்தோம். அங்கே ஏற்கெனவே மூன்று மிஷனரிகள் இருந்தார்கள். தான் ஸ்பானிய மொழியை கற்பதைவிட, மக்களுக்கு ஆங்கிலத்தில் போதிப்பது எளிது என்று அப்பா முதலில் நினைத்தார்! ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல! எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. கூடவே எண்ணற்ற ஆசீர்வாதங்களும் வந்தன! 1949-ல் நாங்கள் கொலம்பியா வந்தபோது, நூற்றுக்கும் குறைவான சாட்சிகளே இருந்தார்கள். இன்றோ 1,00,00-க்கு மேல் இருக்கிறார்கள்!
அம்மாவும் அப்பாவும், போகோட்டாவில் 5 வருடம் ஊழியம் செய்த பிறகு, காலி என்ற நகருக்கு மாற்றலாகி போனார்கள். இதற்கிடையே, எனக்கும், ராபர்ட் ட்ரேஸி என்பவருக்கும் 1952-ல் திருமணம் ஆனது.b இவர் கொலம்பியாவில் உடன் மிஷனரியாக இருந்தவர். 1982 வரை நாங்கள் கொலம்பியாவிலேயே இருந்தோம். பிறகு, மெக்ஸிகோவுக்கு மாற்றலாகி, இன்று வரை அங்கேயே ஊழியம் செய்து வருகிறோம். 1968-ல் என் பெற்றோர் மருத்துவம் பார்க்க அமெரிக்கா வந்தார்கள். உடல் நிலை தேறியதும், அலபாமாவில், மோபிலுக்கு அருகிலுள்ள இடத்தில் விசேஷ பயனியர்களாக சேவையை தொடர்ந்தார்கள்.
பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு
கால சக்கரம் வேகமாக சுழன்றது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடல் நலம் மெல்ல குன்றியது. அதனால் அவர்களுக்கு நிறைய அரவணைப்பும் ஆதரவும் தேவைப்பட்டது. அப்போது அக்கா எட்வினாவும், மாமா பில்லும் அலபாமாவில் உள்ள ஆதன்ஸில் இருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் கேட்டுக்கொண்டதன் பேரில் எட்வினாவும் பில்லும் இருந்த இடத்திற்கு பக்கத்தில் பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், குடும்பத்தினர் எல்லாரும் சௌத் காரோலினாவில், பக்கத்தில் இருந்தால் நல்லது என்று அண்ணன் நினைத்தார். ஆகவே, அக்கா குடும்பத்தினர் கிரீன்வுட் என்ற இடத்திற்கு வீடு மாறி வந்தனர். அவர்கள் கூடவே அம்மாவும் அப்பாவும் அவ்விடத்திற்கு வந்தார்கள். இவ்வாறு அண்ணன் குடும்பமும், அக்கா குடும்பமும் அப்பாவையும் அம்மாவையும் அன்பாக பார்த்துக்கொண்டதால், நானும், என் கணவர் ராபர்ட்டும் தொடர்ந்து கொலம்பியாவில் ஊழியம் செய்தோம்.
1985-ல் அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து, பேச்சு இழந்து, படுத்த படுக்கையாக ஆனார். எங்கள் பெற்றோரை நல்லபடியாக கவனித்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பதை முடிவெடுக்க நாங்கள் எல்லாரும் கூடி பேசினோம். அப்பாவை கவனிக்கும் பொறுப்பை அண்ணி ஏற்றுக்கொண்டார். அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் நானும் ராபர்ட்டும் வாரா வாரம் கடிதத்தில் நல்ல நல்ல அனுபவங்களை எழுதி அனுப்பவும், அடிக்கடி வந்து அவர்களை பார்க்கவும் ஒத்துக்கொண்டோம்.
நான் அப்பாவை கடைசி தடவை பார்த்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்பா பேச முடியாமல் கஷ்டப்பட்டார். ஆனால் நாங்கள் மெக்ஸிகோவுக்கு திரும்ப போகிறோம் என்று சொன்னதும், எப்படியோ கஷ்டப்பட்டு, உணர்ச்சிப்பொங்க, அவர் கூறிய ஒரே வார்த்தை: “போய்வாருங்கள்!” நாங்கள் மிஷனரி ஊழியத்தில் தொடர்ந்திருப்பதையே அவர் மனப்பூர்வமாக விரும்பினார் என்பதை அந்த ஒரே வார்த்தை எங்களுக்கு உணர்த்தியது. ஜூலை 1987-ல் அப்பா காலமானார். 9 மாதங்களுக்கு பிறகு அம்மாவும் இறந்தார்.
இப்போது விதவையாக இருக்கும் அக்காவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. எங்கள் பெற்றோர் எங்களுக்காக செய்த எல்லாவற்றையும் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம் என்பதற்கு இக்கடிதமே ரத்தினசுருக்கம்: “நம்ம அப்பா அம்மா, கற்று தந்த கிறிஸ்தவ குணங்களும், நம்பிக்கைகளும் மதிப்பிட முடியாத ஆஸ்திகள். இவற்றை கண்ணுங்கருத்துமாக காத்து வருகிறேன். அப்பா அம்மா நம்மை, மற்றவர்களை போலவே வளர்த்திருந்தால் ஒரு நிமிஷம்கூட சந்தோஷமா இருந்திருக்க மாட்டோம். அவர்களுடைய உறுதியான விசுவாசம், தியாக மனப்பான்மை, யெகோவாவின்மீது இருந்த முழுமையான நம்பிக்கை ஆகிய அனைத்தும் நான் வாழ்க்கையில் சோர்வடையும் போதெல்லாம் உற்சாகம் தருகின்றன.” அக்கா இவ்வாறு கடிதத்தை முடித்திருந்தார்: “நம் அன்பான கடவுளாகிய யெகோவாவின் சேவையை மையமாக வைத்து வாழ்க்கையை அமைத்தால் சந்தோஷம் கிடைக்கும் என்பதை நமக்கு கற்று தந்ததோடு, கற்று தந்தபடி வாழ்ந்தும் காட்டிய அருமையான பெற்றோர் நமக்கு வாய்த்ததற்காக யெகோவாவுக்கு ஒரு கோடி நன்றி.”
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம் மார்ச் 1, 1988, பக்கங்கள் 11-12-ஐ காண்க.
b மார்ச் 15, 1960-ம் வருட ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 189-91-ஐக் காண்க.
[பக்கம் 22, 23-ன் படங்கள்]
ஃபவுண்டன் குடும்பம்: (இடமிருந்து வலமாக) டுயீ, எட்வினா, வின்னி, எலிசபெத், டுயீ ஜூனியர்; வலது: ஹெஷல் அவர்களது ஒலிபெருக்கி வண்டிக்கு முன்னே இருப்பது எலிசபெத்தும், டுயீ ஜூனியரும் (1937); கீழே வலதுபுறம்: அறிவிப்பு அட்டையோடு நடைபோடுவது 16 வயது எலிசபெத்