வெற்றியின் திறவுகோல் என்ன?
துணிச்சல் மிக்க இரு ஆண்கள் புதுமையான தோற்றத்தையுடைய ஒரு இயந்திரத்தை நுணுக்கமாக உருவாக்கினர். முக்கியமான ஒரு சோதனையை நடத்தவிருந்தனர். ஆனால், திடீரென அடித்த பேய்க்காற்று, வலுவற்ற அந்த சாதனத்தை அப்படியே அலாக்காக தூக்கி, ஒரு சுழற்று சுழற்றி தரையிலே ‘டொம்’மென போட்டது. இராப்பகலாக உழைத்த உழைப்பு அவர்கள் கண்முன்னாலேயே நொறுங்கி, மரமும் உலோகமும் கலந்த குவியலாக மாறியதைக் கண்டு இருவரும் செய்வதறியாமல், மனம் நொந்து நின்றனர்.
இது நடந்தது 1900, அக்டோபர் மாதத்தில் ஒரு நாள். ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் ஏமாற்றம் அல்ல. காற்றைவிட அதிக நிறையுள்ள வானவூர்தியை உருவாக்கும் அவர்கள் முயற்சியில் ஏற்பட்ட முதல் தோல்வியுமல்ல. ஏற்கெனவே பல வருடங்களையும் கணிசமான பணத்தையும் இந்த சோதனைக்காக செலவிட்டிருந்தனர்.
விடாமுயற்சியின் பலனாக, வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கும் அந்த நாள் விரைவில் வந்தது. 1903, டிசம்பர் 17-ம் தேதி, அ.ஐ.மா.-ல் உள்ள வட கரோலினாவில் இருக்கும் கிட்டி ஹாக் என்ற இடத்தில் மாபெரும் சாதனை படைத்தனர் ரைட் சகோதரர்கள். மோட்டாரால் இயக்கப்பட்ட முதல் விமானத்தை 12 வினாடிகள் பறக்கச் செய்து அரிய சாதனை நிகழ்த்தினர். இன்றைய விமானங்களோடு ஒப்பிட, அது மிக மிகக் குறைந்த நேரமே. என்றாலும், உலகின் போக்கையே என்றைக்குமாக மாற்றிய அரிய சாதனை அது!
பொறுமையோடு விடாமுயற்சி செய்வதே பெரும்பாலான பிரயத்தனங்களில் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. ஒரு புது மொழியை கற்றுக்கொள்வதாக இருந்தாலும்சரி, ஒரு தொழிலைப் பழகுவதாக இருந்தாலும்சரி, அல்லது நட்பை வளர்த்துக்கொள்வதாக இருந்தாலும்சரி, மதிப்புமிக்க காரியம் எதுவாக இருந்தாலும்சரி விடாமுயற்சி செய்வதால்தான் அடைய முடிகிறது. “பத்து காரியங்களில் ஒன்பதில் கிட்டியுள்ள வெற்றிக்கு முக்கிய காரணம்: கடின உழைப்பு” என சொல்கிறார் புத்தக ஆசிரியர் சார்ல்ஸ் டெம்பிள்டன். பத்திரிகை எழுத்தாளர் லெனார்ட் பிட்ஸ், ஜூனியர், இப்படியாக சுட்டிக்காட்டுகிறார்: “திறமையைப் பற்றி நாம் பேசுகிறோம், அதிர்ஷ்டத்தை நம்புகிறோம், ஆனால், மிக முக்கியமான சில விஷயங்களை பெரும்பாலும் புறக்கணித்துவிடுகிறோம். கடின உழைப்பு, அநேக தோல்விகள், ராத்திரி பகலாக வேலை ஆகியவைதான் அவை.”
பல நூற்றாண்டுகளுக்கு முன் பைபிள் சொன்னதை இது உறுதிப்படுத்துகிறது: “ஊக்கந்தளராதோர் கை ஆட்சி செய்யும்.” (நீதிமொழிகள் 12:24, NW) நம் செயலில் விடாமுயற்சியுடன் இருப்பதே ஊக்கந்தளராமை. நாம் எதை செய்ய ஆரம்பித்தோமோ அதை செய்து முடிக்க இது மிக அவசியம். விடாமுயற்சி என்பது என்ன? நம் குறிக்கோள்களை அடைவதில் எப்படி விடாமுயற்சியோடு இருக்கலாம்? எதில் விடாமுயற்சியோடு இருக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதிலை காண அடுத்த கட்டுரையை திருப்புங்கள்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo