‘நீதிமானுக்கு ஆசீர்வாதங்கள் கிட்டும்’
சங்கீதக்காரனாகிய தாவீது முதிர் வயதில் இவ்வாறு கூறினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர் வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) யெகோவா தேவன் நீதிமான்களில் அன்புகூருகிறார், அவர்களை பரிவோடு கவனித்துக் கொள்கிறார். நீதியைத் தேடும்படி அவருடைய வார்த்தையாகிய பைபிளில் உண்மை வணக்கத்தாரை அவர் உற்சாகப்படுத்துகிறார்.—செப்பனியா 2:3.
நீதிமானாய் இருப்பது என்றால் நல்லது, கெட்டது பற்றிய கடவுளுடைய தராதரத்திற்கு இசைவாக செயல்படுவதாகும். பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் 10-வது அதிகாரம் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படும்படி நம்மை தூண்டுகிறது; அவ்வாறு செய்பவர்களுக்கு கிடைக்கும் ஏராளமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பற்றியும் அது குறிப்பிடுகிறது. அந்த ஆசீர்வாதங்களுள், அபரிமிதமாக கிடைக்கும் கொழுமையான ஆவிக்குரிய உணவு, திருப்தி தரும் வேலை, கடவுளோடும் மனிதரோடும் நல்ல உறவு ஆகியவையும் அடங்கும். அப்படியென்றால், நீதிமொழிகள் 10:1-14-ஐ கவனமாக ஆராயலாமா?
ஓர் அருமையான தூண்டுகோல்
நீதிமொழிகள் புத்தகத்தின் அடுத்த பகுதியை எழுதியவரை இந்த அதிகாரத்தின் ஆரம்ப வார்த்தைகளே அறிமுகப்படுத்துகின்றன. “சாலொமோனின் நீதிமொழிகள்” என அவை ஆரம்பிக்கின்றன. பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சரியானதை செய்வதற்கான தூண்டுகோலை குறிப்பிடுகிறார்: “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 10:1.
உண்மையான, உயிருள்ள கடவுளுடைய வணக்கத்தைவிட்டு ஒரு பிள்ளை வழிவிலகிச் சென்றாலும் பெற்றோருக்கு ஏற்படும் துயரத்தை விவரிக்கவே முடியாது! ஒருவேளை, தாயே அதிகமாய் துக்கிப்பாள் என்பதற்காக ஞானமுள்ள ராஜா தாயின் துயரத்தை மட்டுமே குறிப்பிடுகிறார். டாரஸ் விஷயத்தில் இதுவே உண்மையாய் நிரூபித்தது.a அவர் கூறுவதாவது: “21 வயது நிரம்பிய எங்கள் மகன் சத்தியத்தைவிட்டு விலகிச் செல்கையில் நானும் என் கணவன் ப்ராங்கும் மனமுடைந்து போனோம். ப்ராங்கைவிட எனக்கே அதிக மன வேதனை ஏற்பட்டது. 12 வருடங்கள் உருண்டோடியும் அந்த காயம் இன்னும் ஆறவில்லை.”
பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு சந்தோஷத்தையோ தாய்க்கு மன வேதனையையோ ஏற்படுத்தலாம். ஆகவே, ஞானமாக நடந்து நம் பெற்றோருக்கு சந்தோஷத்தை கொடுப்போமாக. எல்லாவற்றையும்விட முக்கியமாக நம் பரலோக தகப்பனாகிய யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவோமாக.
‘நீதிமான்கள் திருப்தியடைவர்’
“அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்” என ராஜா தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 10:2) இந்த வார்த்தைகள், கடைசி நாட்களின் முடிவு பகுதியில் வாழ்ந்து வரும் உண்மை கிறிஸ்தவர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை. (தானியேல் 12:4) தேவ பக்தியற்ற இந்த உலகின் முடிவு சமீபம். பாதுகாப்பிற்காக மனிதன் செய்திருக்கும் எந்த ஏற்பாடுகளுமே, பொருளாதாரம், நிதி அல்லது ராணுவம் சம்பந்தப்பட்ட எந்த ஏற்பாடுகளுமே வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ உண்மையான பாதுகாப்பை அளிக்காது. (வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14) ஏனெனில், “செவ்வையானவர்கள்” மட்டும் “பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.” (நீதிமொழிகள் 2:21) ஆகவே, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்” தொடர்ந்து தேடுவோமாக.—மத்தேயு 6:33.
யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க வாக்கு பண்ணப்பட்ட புதிய உலகம் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. “கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.” (நீதிமொழிகள் 10:3) ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்’ மூலம் யெகோவா ஏராளமான ஆவிக்குரிய உணவை அளித்திருக்கிறார். (மத்தேயு 24:45) ஆகவே, நீதிமான் ‘மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிக்க’ நியாயமான காரணங்கள் உள்ளன. (ஏசாயா 65:14) அறிவு அவன் ஆத்துமாவுக்கு சந்தோஷத்தை தருகிறது. ஆவிக்குரிய பொக்கிஷங்களை தேடுவதில் அவன் மகிழ்ச்சியடைகிறான். துன்மார்க்கனோ அப்படிப்பட்ட எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க மாட்டான்.
‘சுறுசுறுப்புள்ளவன் செல்வந்தன் ஆவான்’
நீதிமான் மற்றொரு விதத்திலும் ஆசீர்வதிக்கப்படுகிறான். “சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். கோடை காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக் காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.”—நீதிமொழிகள் 10:4, 5.
அறுப்பு சமயத்தில் வேலை செய்பவர்களுக்கே ராஜாவின் வார்த்தைகள் அதிக பொருத்தமானவை. அறுப்பு காலம் தூங்குவதற்கான காலமல்ல. அது சுறுசுறுப்பாகவும் பல மணிநேரமும் உழைக்க வேண்டிய காலம். அது அவசரமாய் செயல்படுவதற்கான காலம்.
பயிர்களை அல்ல, ஜனங்களை அறுவடை செய்வதை மனதில் வைத்தே இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் [யெகோவா தேவன்] தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 9:35-38) 2000-மாவது வருடத்தில் இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பிற்கு 1.4 கோடிக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இது யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். ஆக, ‘வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருப்பதை’ எவராவது மறுக்க முடியுமா? (யோவான் 4:35) அதிகமான வேலையாட்கள் வேண்டும் என உண்மை வணக்கத்தார் எஜமானிடம் கேட்கின்றனர். அதே சமயம், சீஷராக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலம் தங்களுடைய ஜெபங்களுக்கு இசைவாக செயல்படுகின்றனர். (மத்தேயு 28:19, 20) யெகோவாவும் அவர்களுடைய முயற்சிகளை பன்மடங்கு ஆசீர்வதித்திருக்கிறார்! 2000-மாவது ஊழிய ஆண்டில் 2,80,000-த்திற்கும் அதிகமானோர் முழுக்காட்டுதல் பெற்றனர். இவர்களும் கடவுளுடைய வார்த்தையின் போதகராவதற்கு முயலுகின்றனர். சீஷராக்கும் வேலையில் முழுமையாக பங்கு பெறுவதன் மூலம் இந்த அறுப்பின் காலத்தில் திருப்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிப்போமாக.
‘அவனுடைய தலைக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்’
சாலொமோன் தொடர்ந்து கூறுகிறார்: “நீதிமானுடைய தலைக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ கொடுமையை மறைக்கும்.”—நீதிமொழிகள் 10:6, NW.
இருதயத்தில் சுத்தமும் நீதியும் உள்ளவன் தன் நீதியை செயல்களில் காட்டுகிறான். அவன் தயவாகவும் கட்டியெழுப்பும் விதத்திலும் பேசுகிறான், உதவியாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொள்கிறான். அவனோடு பழக மற்றவர்கள் விரும்புவர். அவனை பற்றி மற்றவர்கள் உயர்வாக பேசுவதால் அவர்களுடைய மதிப்பை, அதாவது ஆசீர்வாதங்களை பெறுகிறான்.
மறுபட்சத்தில், துன்மார்க்கனோ கொடுமை நிறைந்தவனாக அல்லது கொடூரமானவனாக இருக்கிறான்; மற்றவர்களுக்கு தீங்கு செய்வதே அவனுடைய நோக்கம். அவன் இனிக்க இனிக்க பேசி, தன் இருதயத்திலுள்ள ‘கொடுமையை மறைக்கலாம்.’ ஆனால் கடைசியில், சொல்லால் அல்லது செயலால் அவன் மற்றவர்களை தாக்க ஆரம்பிக்கலாம். (மத்தேயு 12:34, 35) அல்லது இன்னொரு விதத்தில் சொன்னால், “கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும் [அல்லது மூடும்].” (நீதிமொழிகள் 10:6) துன்மார்க்கன் மற்றவர்களைப் பகைப்பதால் அவர்களுடைய பகைமையை சம்பாதிப்பதை இது சுட்டிக் காட்டுகிறது. இது, ஒரு கருத்தில் அவனுடைய வாயை அடைக்கும் அல்லது மூடும். மற்றவர்களிடமிருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என அப்படிப்பட்டவன் எதிர்பார்க்க முடியுமா?
“நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்” என்று இஸ்ரவேலின் ராஜா எழுதுகிறார். (நீதிமொழிகள் 10:7) மற்றவர்களும் முக்கியமாக யெகோவா தேவனும்கூட நீதிமானை சந்தோஷத்தோடு நினைவுகூருகின்றனர். இயேசு, மரணம் வரை உண்மையாக இருந்ததால் ‘தேவதூதரைவிட விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்.’ (எபிரெயர் 1:3, 4) கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகவே இன்று உண்மை கிறிஸ்தவர்கள் நினைவுகூருகின்றனர். (எபிரெயர் 12:1, 2) அருவருப்பும் வெறுப்பும் ஏற்படுத்தும் துன்மார்க்கருடைய பெயரிலிருந்து இது எவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறது! ஆம், “திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம்.” (நீதிமொழிகள் 22:1) ஆகவே, யெகோவாவிடமும் நம் அயலானிடமும் நல்ல பெயர் எடுப்போமாக.
‘உத்தமன் பாதுகாப்பாய் நடப்பான்’
ஞானமுள்ளவனுக்கும் மூடனுக்கும் உள்ள வித்தியாசத்தை சாலொமோன் கூறுகிறார்: “இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.” (நீதிமொழிகள் 10:8) ஞானமுள்ள நபர், “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என்பதை நன்கு அறிவார். (எரேமியா 10:23) யெகோவாவின் வழிநடத்துதல் அவசியம் என்பதை உணர்ந்து, கடவுளுடைய கட்டளைகளை உடனே ஏற்றுக்கொள்கிறார். மறுபட்சத்தில், மூடனோ இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல் போகிறான். அர்த்தமே இல்லாமல் அலப்புவது அவனை அழிவுக்கே வழிநடத்தும்.
துன்மார்க்கனுக்கு கிடைக்காத ஒருவித பாதுகாப்பை நீதியுள்ளவன் பெறுகிறான். “உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். கண் சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.”—நீதிமொழிகள் 10:9, 10.
உத்தமமுள்ளவன் தன் செயல்களில் நேர்மையுள்ளவன். அவன் மற்றவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கிறான். நேர்மையுள்ளவன் மதிக்கப்படும் வேலையாள், அவனிடம் அதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். அவன் நேர்மைக்கு மறுபெயராய் திகழ்வதால் வேலை கிடைப்பது கடினமாக இருக்கும் சமயத்திலும் அவனுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அதோடு, அவனுடைய நேர்மைத்தன்மை காரணமாக குடும்பத்திலும் சந்தோஷமான, சமாதானமான சூழல் நிலவும். (சங்கீதம் 34:13, 14) குடும்பத்தாரோடு உள்ள உறவில் பாதுகாப்பாக உணர்கிறான். பாதுகாப்பு உத்தமத்தின் பரிசு.
சுயநல ஆதாயத்திற்காக ஏமாற்றுபவனுடைய நிலைமை முற்றிலும் வித்தியாசமானது. ஏமாற்றுபவன் தாறுமாறான பேச்சால் அல்லது சரீர மொழியால் தன் போலித்தனத்தை மறைக்க முயலலாம். (நீதிமொழிகள் 6:12-14) கீழ்த்தரமான அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் கண் சாடை காட்டுவது, அவனால் ஏமாற்றப்படுபவர்களுக்கு அதிக மன வேதனை அளிக்கலாம். ஆனால், வெகு சீக்கிரத்தில் அவனுடைய கீழ்த்தரமான நடத்தை வெட்ட வெளிச்சமாகிவிடும். “சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 5:24, 25) பெற்றோர், நண்பர், மணத்துணை, அறிமுகமானவர் என யார் நேர்மையற்று நடந்தாலும் சரி அது நிச்சயம் வெளிப்பட்டுவிடும். ஏமாற்றுவதில் கில்லாடியாக இருப்பவனை யார்தான் நம்புவார்கள்?
‘அவனுடைய வாய் ஜீவ ஊற்று’
“நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்” என சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 10:11) ஒருவருடைய வார்த்தைகள் மற்றவரை சுகப்படுத்தலாம் அல்லது காயப்படுத்தலாம். அவை ஒருவருக்கு புத்துணர்ச்சியூட்டி, உயிர்ப்பிக்கலாம் அல்லது மனம் நொந்துபோக செய்யலாம்.
பேச்சிற்கு தூண்டுதலாய் அமைவதைப் பற்றி இஸ்ரவேலின் ராஜா கூறுகிறார்: “பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.” (நீதிமொழிகள் 10:12) பகை மனித சமுதாயத்தில் விரோதங்களை ஏற்படுத்தி சச்சரவுகளுக்கு வழிநடத்துகிறது. யெகோவாவை நேசிக்கிறவர்களோ தங்கள் வாழ்க்கையிலிருந்து பகையை வேரோடு அகற்ற வேண்டும். எவ்வாறு? அதன் இடத்தில் அன்பை நிரப்புவதன் மூலமே. “அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1 பேதுரு 4:8) அன்பு, “சகலத்தையும் தாங்கும்” அல்லது “சகலத்தையும் மூடும்.” (1 கொரிந்தியர் 13:7; கிங்டம் இன்டர்லீனியர்) தெய்வீக அன்பு, அபூரண மனிதர்களிடமிருந்து பரிபூரணத்தை எதிர்பார்க்காது. அப்படிப்பட்ட அன்பு, மற்றவர்களுடைய குறைபாடுகளை பறைசாற்றுவதற்கு பதிலாக வினைமையான பாவம் செய்திருந்தாலொழிய அவற்றை பொருட்படுத்தாதிருக்க நமக்கு உதவும். வெளி ஊழியத்தில், வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில் நாம் எதிர்ப்படும் துன்பங்களையும் அன்பு சகிக்கும்.
ஞானமுள்ள அரசன் தொடர்கிறார்: “புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.” (நீதிமொழிகள் 10:13) புத்திமானுடைய ஞானம் அவனுடைய நடையை வழிநடத்தும். அவனுடைய உதடுகளிலுள்ள உற்சாகமூட்டும் வார்த்தைகள் நீதியின் பாதையில் நடக்க மற்றவர்களுக்கு உதவும். அவனையோ அவனுக்கு செவிசாய்ப்பவர்களையோ சரியான பாதையில் நடக்கும்படி வற்புறுத்த வேண்டியதில்லை அதாவது அவர்களுக்கு தண்டனையின் பிரம்பு தேவையில்லை.
“அறிவைச் சேர்த்து வை”
நம் பேச்சு, அற்பமான விஷயங்களின் சலசலக்கும் சிற்றோடையாக இல்லாமல் ‘ஞானத்தின் பாய்கிற ஆறாக’ பெருக்கெடுத்து ஓட எது உதவும்? (நீதிமொழிகள் 18:4) சாலொமோன் பதில் சொல்கிறார்: “ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.”—நீதிமொழிகள் 10:14.
முதலில், கடவுளைப் பற்றிய கட்டியெழுப்பும் அறிவால் நம் மனதை நிரப்ப வேண்டும். அந்த அறிவிற்கு ஒரே ஒரு ஊற்றுமூலமே உண்டு. அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதியதாவது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) நாம் அறிவை சேர்த்து வைத்து, புதையலை தேடுவதுபோல கடவுளுடைய வார்த்தையை ஆழமாக தோண்டி ஆராய வேண்டும். அவ்வாறு தேடுவது கிளர்ச்சியூட்டுவதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும்.
நம் உதடுகளில் ஞானம் காணப்பட வேண்டுமென்றால் வேதவாக்கியங்களைப் பற்றிய அறிவு நம் இருதயத்தையும் எட்ட வேண்டும். “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என அங்கு கூடிவந்திருந்தோரிடம் இயேசு கூறினார். (லூக்கா 6:45) ஆகவே, நாம் கற்றுக்கொள்பவற்றை பற்றி எப்போதுமே தியானிக்க வேண்டும். படிப்பிற்கும் தியானத்திற்கும் முயற்சி தேவை என்பது உண்மையே, ஆனால் அப்படிப்பட்ட படிப்பு ஆவிக்குரிய விதத்தில் எவ்வளவாய் பலனளிக்கிறது! அர்த்தமற்ற வார்த்தைகளை அலப்பும் மூடனுடைய வழியை யாரும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அது அழிவுக்கே வழிநடத்தும்.
ஆம், ஞானமுள்ளவன் கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்கிறான், மற்றவர்கள் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறான். அவன் ஏராளமான ஆவிக்குரிய உணவை அனுபவிக்கிறான், கர்த்தருடைய பலனளிக்கும் வேலையில் எப்போதுமே அதிகத்தை செய்கிறான். (1 கொரிந்தியர் 15:58) அவன் உத்தமனாக இருப்பதால் பாதுகாப்புடன் நடக்கிறான், கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெறுகிறான். உண்மையில் நீதிமானுக்கு அநேக ஆசீர்வாதங்கள் உள்ளன. நல்லது, கெட்டது பற்றிய கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் நாம் நீதியை தேடுவோமாக.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 25-ன் படம்]
நேர்மையே சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழிசெய்யும்
[பக்கம் 26-ன் படம்]
‘ஞானவான்கள் அறிவை சேர்த்து வைக்கிறார்கள்’