கடவுளால் நேசிக்கப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா?
“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்.”—யோவான் 14:21.
1, 2. (அ) யெகோவா தமது அன்பை மனிதகுலத்திடம் எப்படி காட்டினார்? (ஆ) பொ.ச. 33, நிசான் 14-ன் இரவில் இயேசு எதை ஆரம்பித்து வைத்தார்?
யெகோவா தமது மானிட சிருஷ்டிகளை நேசிக்கிறார். சொல்லப்போனால், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி” அந்தளவுக்கு மனிதகுலம் எனும் உலகத்திடம் அன்பு காட்டுகிறார். (யோவான் 3:16) கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு நாள் நெருங்கி வருகையில், யெகோவா “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பி”யதைக் குறித்து எப்போதையும்விட மெய் கிறிஸ்தவர்கள் அதிக உணர்வுடன் இருக்க வேண்டும்.—1 யோவான் 4:10.
2 பொ.ச. 33, நிசான் 14-ன் இரவில், எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையானதை நினைவுகூரும் பண்டிகையாகிய பஸ்காவை ஆசரிப்பதற்காக இயேசுவும் அவருடைய 12 அப்போஸ்தலரும் எருசலேமில் ஒரு மேலறையில் கூடினார்கள். (மத்தேயு 26:17-20) இந்த யூத பண்டிகையை ஆசரித்த பின்பு, இயேசு யூதாஸ்காரியோத்தைப் போகும்படி அனுப்பிவிட்டு, நினைவுகூருவதற்குரிய இராப்போஜன ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். அதுவே, கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் ஆசரிப்பாகவிருந்தது.a புளிப்பில்லா அப்பத்தையும் சிவந்த திராட்ச ரசத்தையும் தம்முடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறிக்கும் அடையாள சின்னங்களாக பயன்படுத்தி, அந்த 11 அப்போஸ்தலருடன் சேர்ந்து இயேசு இந்த உணவை பகிர்ந்துகொண்டார். இதை அவர் ஆசரித்த விதத்தைப் பற்றிய விவரங்கள், முதல் மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியவர்களாலும் அப்போஸ்தலன் பவுலாலும் பதிவு செய்யப்பட்டன; பவுல் இதை “கர்த்தருடைய இராப்போஜனம்” என அழைத்தார்.—1 கொரிந்தியர் 11:21; மத்தேயு 26:26-28; மாற்கு 14:22-25; லூக்கா 22:19, 20.
3. மேலறையில் இயேசு தம்முடைய சீஷர்களுடன் கழித்த அந்த கடைசி மணிநேரங்களைப் பற்றிய அப்போஸ்தலன் யோவானின் விவரம், என்ன முக்கியமான வழிகளில் மற்றவர்களுடைய பதிவுகளிலிருந்து வேறுபடுகிறது?
3 அப்பமும் திராட்ச ரசமும் அனுப்பப்படுவதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் எதுவும் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. அந்த சுவிசேஷ பதிவை (சுமார் பொ.ச. 98-ல்) அவர் எழுதுகையில், அந்தப் பழக்கம் ஒருவேளை ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடையே ஏற்கெனவே நன்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம். (1 கொரிந்தியர் 11:23-26) எனினும், தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்ததற்கு சற்று முன்பும் அதற்குப் பின்பும் இயேசு என்ன சொன்னார், என்ன செய்தார் என சில முக்கிய தகவல்களை கடவுளுடைய ஆவியின் ஏவுதலின்கீழ் யோவான் மட்டுமே நமக்குக் கொடுத்திருக்கிறார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த விவரங்கள் யோவான் சுவிசேஷத்தில் சுமார் ஐந்து அதிகாரங்களில் உள்ளன! கடவுள் எப்படிப்பட்டவர்களை நேசிக்கிறார் என்பதை அவை தெளிவாக காட்டுகின்றன. யோவான் 13 முதல் 17 அதிகாரங்களை நாம் ஆராயலாம்.
இயேசுவின் அன்பிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
4. (அ) நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைக்கையில், சீஷர்களுடன் இயேசு பேசிய விஷயங்களின் முக்கிய கருப்பொருளை யோவான் எவ்வாறு வலியுறுத்தினார்? (ஆ) இயேசுவை யெகோவா நேசிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன?
4 இயேசு பிரியும் தறுவாயில் தம்மைப் பின்பற்றினோருக்கு கொடுத்த அறிவுரைகள் அடங்கிய அந்த அதிகாரங்கள் முழுவதிலும் அன்பு எனும் கருப்பொருளே உயர்ந்தோங்கி நிற்கிறது. சொல்லப்போனால், “அன்பு” என்ற சொல் பல்வேறு விதங்களில் 31 தடவை குறிப்பிடப்படுகிறது. பிதாவாகிய யெகோவாவிடமும் தமது சீஷர்களிடமும் இயேசுவுக்கு இருந்த ஆழமான அன்பு, இந்த அதிகாரங்களிலேயே தெளிவாக தெரிகிறது. யெகோவாவிடம் இயேசுவுக்கு இருந்த அன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய சுவிசேஷ பதிவுகள் அனைத்திலிருந்தும் தெரிய வருகிறது. ஆனால், “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என இயேசு வெளிப்படையாக சொன்னதை யோவான் மட்டுமே பதிவு செய்கிறார். (யோவான் 14:31) மேலும், யெகோவா தம்மை நேசிப்பதையும் அதற்கான காரணத்தையும்கூட இயேசு குறிப்பிட்டார். “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” என அவர் சொன்னார். (யோவான் 15:9, 10) ஆம், தம்முடைய குமாரன் காட்டும் முழுமையான கீழ்ப்படிதலின் காரணமாக யெகோவா அவரை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவருக்கும் எத்தகைய சிறந்த பாடம்!
5. தமது சீஷர்களிடம் தமக்குள்ள அன்பை இயேசு எவ்வாறு வெளிக்காட்டினார்?
5 இயேசு தம்மைப் பின்பற்றினோரிடம் ஆழமான அன்பு வைத்திருந்தார் என்பது தமது அப்போஸ்தலர்களை கடைசியாக சந்தித்துப் பேசியதைப் பற்றிய யோவானுடைய பதிவின் ஆரம்பத்தில் வலியுறுத்தப்படுகிறது. “பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்” என யோவான் கூறினார். (யோவான் 13:1) அந்த முக்கிய மாலை வேளையில், மற்றவர்களுக்கு அன்புடன் சேவை செய்வதன் சம்பந்தமாக மறக்க முடியாத ஒரு பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுடைய பாதங்களை அவர் கழுவினார். இயேசுவுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் இதைச் செய்ய அவர்கள் ஒவ்வொருவரும் மனமுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்ய தவறினார்கள். இந்தத் தாழ்மையான வேலையை இயேசு செய்த பின்பு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (யோவான் 13:14, 15) உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரருக்குச் சேவை செய்ய மனமுள்ளவர்களாகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.—மத்தேயு 20:26, 27, NW அடிக்குறிப்பு; யோவான் 13:17.
புதிய கட்டளையைப் பின்பற்றுங்கள்
6, 7. (அ) நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தது சம்பந்தமாக என்ன முக்கிய விவரத்தை யோவான் கொடுக்கிறார்? (ஆ) இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளை என்ன, அதில் எது புதிதாக இருந்தது?
6 நிசான் 14-ன் இரவில் அந்த மேலறையில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய யோவானின் பதிவு மட்டுமே, யூதாஸ்காரியோத் அங்கிருந்து வெளியேறியதை திட்டவட்டமாக குறிப்பிடுகிறது. (யோவான் 13:21-30) அந்தத் துரோகி வெளியேறிய பின்பே, இயேசு தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார் என்பதை சுவிசேஷ பதிவுகளை ஒத்துப் பார்ப்பது வெளிப்படுத்துகிறது. பின்பு அவர் தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு பிரிவு நேர அறிவுரையையும் கட்டளைகளையும் கொடுத்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். நினைவு ஆசரிப்புக்குச் செல்ல நாம் தயாராகையில், அந்தச் சமயத்தில் இயேசு சொன்னவற்றில் அதிக அக்கறை காட்ட வேண்டும்; முக்கியமாய் கடவுளின் நேசத்தைப் பெற்றவர்களில் ஒருவராக இருக்க நாம் நிச்சயமாகவே விரும்புவதால் இது அவசியம்.
7 இயேசு தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்த பின்பு கொடுத்த முதல் கட்டளையே புதிதாக இருந்தது. அவர் சொன்னதாவது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) இந்தக் கட்டளையைப் பொறுத்தளவில் எது புதிதாக இருந்தது? அந்த மாலை வேளையில் கொஞ்ச நேரம் கழித்து இயேசு இவ்வாறு காரியங்களைத் தெளிவுபடுத்தினார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:12, 13) ‘தங்களில் அன்புகூருவது போல் பிறனிலும் அன்புகூரும்படி’ மோசேயின் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டது. (லேவியராகமம் 19:18) ஆனால் இயேசுவின் கட்டளை மேலுமதிகத்தை உட்படுத்தியது. கிறிஸ்து தங்களை நேசித்தது போல, கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நேசித்து, தங்கள் சகோதரருக்காக உயிரையும் கொடுக்க மனமுள்ளோராய் இருக்க வேண்டும்.
8. (அ) சுயதியாக அன்பு எதை உட்படுத்துகிறது? (ஆ) இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு சுயதியாக அன்பை வெளிக்காட்டுகிறார்கள்?
8 மெய் கிறிஸ்தவத்தின் தனிப்பட்ட அடையாள சின்னம்—கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பு—நம்மிடம் உண்மையில் உள்ளதா என்பதை தனிப்பட்டவர்களாகவும் சபையாகவும் நாம் சோதித்தறிவதற்கு இந்த நினைவு ஆசரிப்பு காலம் பொருத்தமான சமயம். அத்தகைய சுயதியாக அன்பு, ஒரு கிறிஸ்தவர் தன் சகோதரர்களைக் காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக தன் உயிரை இழக்க துணிவதை அர்த்தப்படுத்தலாம், சில சமயங்களில் அதையே அர்த்தப்படுத்தியிருக்கிறது. எப்போதும் இல்லாவிட்டாலும் பெரும்பாலும், நம்முடைய சகோதரருக்கும் பிறருக்கும் உதவி செய்வதற்கும், ஊழியம் செய்வதற்கும் நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்ய மனமுள்ளவர்களாக இருப்பதை இது உட்படுத்துகிறது. இதில் அப்போஸ்தலன் பவுல் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார். (2 கொரிந்தியர் 12:15; பிலிப்பியர் 2:17) தங்கள் சகோதரர்களுக்கும் அயலாருக்கும் உதவி செய்வதிலும், சகமனிதருக்கு பைபிள் சத்தியத்தை அறிவிப்பதிலும் யெகோவாவின் சாட்சிகள் வெளிக்காட்டும் சுயதியாக மனப்பான்மை உலகெங்கும் யாவரும் அறிந்ததே.b—கலாத்தியர் 6:10.
பொக்கிஷமாய் போற்ற வேண்டிய உறவுகள்
9. கடவுளுடனும் அவருடைய குமாரனுடனும் மதிப்புமிக்க உறவை காத்துக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய சந்தோஷமாய் இருக்கிறோம்?
9 யெகோவாவாலும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவாலும் நாம் நேசிக்கப்படுவதைக் காட்டிலும் அதிக மதிப்புமிக்கது வேறொன்றும் இருக்க முடியாது. எனினும், இந்த அன்பை பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் நம்முடைய பங்கிலும் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. தம்முடைய சீஷர்களோடு கழித்த அந்தக் கடைசி இரவில் இயேசு இவ்வாறு சொன்னார்: “என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” (யோவான் 14:21) கடவுளுடனும் அவருடைய குமாரனுடனும் உள்ள உறவை நாம் பொக்கிஷமாய் போற்றுவதால், சந்தோஷமாய் அவர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம். சுயதியாக அன்பைக் காட்டும்படியான புதிய கட்டளையும் இதில் உட்பட்டிருக்கிறது; அதோடுகூட, நற்செய்திக்குச் செவிசாய்ப்பவர்களை ‘சீஷராக்குவதற்கு,’ ‘ஜனங்களுக்குப் பிரசங்கிக்கும்படி’ தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் கிறிஸ்து கொடுத்த கட்டளையும் அதில் அடங்குகிறது.—அப்போஸ்தலர் 10:42; மத்தேயு 28:19, 20.
10. மதிப்புமிக்க என்ன உறவுகளை அனுபவிப்பதற்கு, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் ‘வேறே ஆடுகளுக்கும்’ வாய்ப்பிருக்கிறது?
10 அந்த இரவில் பின்னர் யூதா (ததேயு) என்ற உண்மையுள்ள அப்போஸ்தலன் இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்; அதற்கு இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” என பதிலளித்தார். (யோவான் 14:22, 23) பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளுவதற்கு அழைப்பைப் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இன்னும் பூமியிலிருக்கையிலேயே, யெகோவாவுடனும் அவருடைய குமாரனுடனும் விசேஷித்த விதத்தில் நெருங்கிய உறவை அனுபவிக்கிறார்கள். (யோவான் 15:15; 16:27; 17:22; எபிரெயர் 3:1; 1 யோவான் 3:2, 24) ஆனால் பூமியில் என்றும் வாழும் நம்பிக்கையுடைய அவர்களுடைய தோழர்களாகிய ‘வேறே ஆடுகளும்’ கீழ்ப்படிதலைக் காட்டினால் தங்கள் ‘ஒரே மேய்ப்பராகிய’ இயேசு கிறிஸ்துவுடனும், தங்கள் கடவுளாகிய யெகோவாவுடனும் மதிப்புமிக்க உறவை அனுபவித்து மகிழலாம்.—யோவான் 10:16; சங்கீதம் 15:1-5; 25:14.
‘நீங்கள் இந்த உலகத்தின் பாகமானவர்களல்ல’
11. சிந்திக்க வைக்கும் என்ன எச்சரிக்கையை இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்தார்?
11 இயேசு தம்முடைய மரணத்திற்கு முன்பாக உண்மையுள்ள சீஷர்களுடன் கடைசியாக ஒன்றுகூடிய அந்த சந்தர்ப்பத்தில், சிந்திக்க வைக்கும் எச்சரிக்கையை கொடுத்தார். கடவுளால் ஒருவர் நேசிக்கப்பட்டால் அவரை இந்த உலகம் பகைக்கும் என்பதை இவ்வாறு சொல்லி எச்சரித்தார்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், [“உலகத்தின் பாகமானவர்களாக இருந்தால்,” NW] உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.”—யோவான் 15:18-20.
12. (அ) உலகம் அவர்களைப் பகைக்கும் என இயேசு தமது சீஷர்களை ஏன் எச்சரித்தார்? (ஆ) நினைவு ஆசரிப்பு நெருங்கி வருகையில், எதைச் சிந்திப்பது எல்லாருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்?
12 அந்த 11 அப்போஸ்தலரும் அவர்களுக்குப் பின் மற்ற எல்லா உண்மை கிறிஸ்தவர்களும், உலகம் பகைப்பதால் உற்சாகம் இழந்து பின்வாங்காதிருப்பதற்காக இயேசு இந்த எச்சரிக்கையைக் கொடுத்தார். “நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்” என்றும் அவர் சொன்னார். (யோவான் 16:1-3) ‘இடறலடைந்து’ என்பதற்கு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வகை வினைச்சொல், “யார் மீது நம்பிக்கை வைத்து கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டுமோ அவர் மீதே அவநம்பிக்கை கொண்டு அவரை விட்டுவிலகும்படி ஒருவரை செய்வது; விழும்படி செய்வது” என அர்த்தப்படுத்துவதாக பைபிள் அகராதி ஒன்று விளக்கம் தருகிறது. நினைவு ஆசரிப்பு நாள் நெருங்கி வருகையில், பூர்வத்திலும் இன்றும் உள்ள உண்மையுள்ளவர்களின் வாழ்க்கையை குறித்து எல்லாரும் சிந்தித்து, சோதனையை எதிர்ப்படுகையில் உறுதியாய் நிலைத்து நின்ற அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். எதிர்ப்பு அல்லது துன்புறுத்துதல், யெகோவாவையும் இயேசுவையும் விட்டு உங்களை விலகும்படி செய்ய இடமளிக்காதீர்கள்; மாறாக, நம்பிக்கையுடன், அவர்களுக்குக் கீழ்ப்படிய தீர்மானமாய் இருங்கள்.
13. தம் பிதாவிடம் ஜெபிக்கையில் இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களுக்காக எதை வேண்டினார்?
13 எருசலேமில் மேலறையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இயேசு செய்த முடிவு ஜெபத்தில் தம் பிதாவிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல [“இந்த உலகத்தின் பாகமானோர் அல்ல,” NW]; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று [“தீயோனிடமிருந்து,” NW] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:14-16) யெகோவா தாம் நேசிப்பவர்கள் தொடர்ந்து உலகிலிருந்து விலகியிருக்கும்படி அவர்களை கவனித்து காத்து பலப்படுத்துகிறார் என நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.—ஏசாயா 40:29-31.
பிதாவின் அன்பிலும் குமாரனின் அன்பிலும் நிலைத்திருங்கள்
14, 15. (அ) ‘பலனற்ற திராட்சச் செடிக்கு’ எதிர்மாறாக இயேசு தம்மை எதற்கு ஒப்பிட்டார்? (ஆ) “மெய்யான திராட்சச் செடி”யின் ‘கொடிகளாக’ இருப்பது யார்?
14 நிசான் 14-ன் இரவில், தம்முடைய உண்மையுள்ள சீஷர்களுடன் பரஸ்பர உரையாடலில் ஈடுபட்டிருக்கையில் இயேசு, “பலனற்ற திராட்சச் செடி”யாகிய உண்மையற்ற இஸ்ரவேலருக்கு எதிர்மாறாக தம்மை “மெய்யான திராட்சச் செடி”க்கு ஒப்பிட்டு பேசினார். “நான் மெய்யான திராட்சச் செடி, பயிரிடுகிறவர் என் பிதா” என அவர் சொன்னார். (யோவான் 15:1, திருத்திய மொழிபெயர்ப்பு) நூற்றாண்டுகளுக்கு முன்பு, தம்மை விட்டு விலகிய ஜனங்களுக்கு யெகோவா இவ்வாறு சொல்வதாக தீர்க்கதரிசியாகிய எரேமியா பதிவு செய்தார்: “நான் உன்னை . . . உயர்குலத் திராட்சச் செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?” (எரேமியா 2:21) தீர்க்கதரிசியாகிய ஓசியாவும், “இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; . . . அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது” என எழுதினார்.—ஓசியா 10:1, 2.
15 மெய் வணக்கத்தின் கனியைப் பிறப்பிப்பதற்கு மாறாக, இஸ்ரவேல் விசுவாச துரோகத்துக்குள் வீழ்ந்து தனக்குத்தானே கனி கொடுத்தது. கடைசியாக தம்முடைய உண்மையுள்ள சீஷர்களுடன் கூடிவந்ததற்கு மூன்று நாட்கள் முன்பு இயேசு, அந்தப் பாசாங்குக்கார யூத தலைவர்களிடம் இவ்வாறு கூறினார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 21:43) அந்தப் புதிய ஜனம், 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கியதும், கிறிஸ்து இயேசு எனும் “மெய்யான திராட்சச் செடி”யின் ‘கொடிகளுக்கு’ ஒப்பானதுமான ‘தேவனுடைய இஸ்ரவேல்’ ஆகும்.—கலாத்தியர் 6:16; யோவான் 15:5; வெளிப்படுத்துதல் 14:1, 3.
16. உண்மையுள்ள 11 அப்போஸ்தலரை என்ன செய்யும்படி இயேசு ஊக்குவித்தார், இந்த முடிவு காலத்தில் உண்மையுள்ள மீதிப்பேரைக் குறித்து என்ன சொல்லலாம்?
16 தம்முடன் மேலறையில் இருந்த 11 அப்போஸ்தலர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச் செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்க மாட்டீர்கள்.” (யோவான் 15:2, 4) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உண்மையுள்ள மீதிப்பேர், தங்கள் தலையாகிய கிறிஸ்து இயேசுவுடன் தொடர்ந்து ஐக்கியத்திலிருப்பதை யெகோவாவின் ஜனங்களுடைய நவீன நாளைய சரித்திரம் காட்டுகிறது. (எபேசியர் 5:23) சுத்திகரிப்பையும் புடமிடுதலையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். (மல்கியா 3:2, 3) 1919 முதற்கொண்டு ஏராளமான ராஜ்ய கனியை பிறப்பித்திருக்கிறார்கள்; முதலாவதாக அபிஷேகம் செய்யப்பட்ட மற்ற கிறிஸ்தவர்களையும், 1935 முதற்கொண்டு பெருகி வரும் அவர்களுடைய தோழர்களாகிய “திரள் கூட்ட”த்தாரையும் அவர்கள் பிறப்பித்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9; ஏசாயா 60:4, 8-11.
17, 18. (அ) யெகோவாவின் அன்பில் நிலைத்திருக்க இயேசுவின் என்ன வார்த்தைகள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் வேறே ஆடுகளுக்கும் உதவுகின்றன? (ஆ) நினைவு ஆசரிப்புக்கு வருவது நமக்கு எப்படி உதவும்?
17 அபிஷேகம் செய்யப்பட்ட எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் இயேசுவின் இவ்வார்த்தைகள் பொருந்துகின்றன: “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.”—யோவான் 15:8-10.
18 கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். இது கனி தரும் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு நம்மை தூண்டுகிறது. ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ பிரசங்கிப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாதிருப்பதன் மூலம் இதை நாம் செய்கிறோம். (மத்தேயு 24:14, NW) மேலும், நம்முடைய சொந்த வாழ்க்கையில், ‘ஆவியின் கனியை’ வெளிக்காட்டுவதற்கு நம்மாலான அனைத்தையும் செய்கிறோம். (கலாத்தியர் 5:22, 23) கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பில் ஆஜராவது, இதைச் செய்வதற்கான தீர்மானத்தில் நம்மைப் பலப்படுத்தும். ஏனென்றால், நம்மிடம் கடவுளும் கிறிஸ்துவும் காட்டும் மிகுந்த அன்பை அது நினைப்பூட்டும்.—2 கொரிந்தியர் 5:14, 15.
19. மேலும் என்ன உதவியைப் பற்றி அடுத்த கட்டுரை ஆராயும்?
19 நினைவு ஆசரிப்பை இயேசு தொடங்கி வைத்த பின்பு, தம்மை உண்மையுடன் பின்பற்றினோருக்கு, “பரிசுத்த ஆவியாகிய உதவியாளனை” தம்முடைய பிதா அனுப்புவார் என்று வாக்குறுதி அளித்தார். (யோவான் 14:6, NW) அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளும் யெகோவாவின் அன்பில் நிலைத்திருக்க இந்த ஆவி எப்படி உதவுகிறது என்பதை அடுத்த கட்டுரை ஆராயும்.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் கணக்குப்படி, 2002-ம் ஆண்டில் நிசான் 14-ம் தேதி, மார்ச் 28, வியாழக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்தில் தொடங்குகிறது. அந்த மாலை வேளையில் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்காக கூடிவருவார்கள்.
b யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் 19-ம் 32-ம் அதிகாரங்களைக் காண்க.
கலந்தாலோசிக்க கேள்விகள்
• அன்புள்ள சேவை செய்வதில் என்ன நடைமுறையான பாடத்தை இயேசு தமது சீஷர்களுக்குக் கற்பித்தார்?
• எதைக் குறித்து சுயபரிசோதனை செய்வதற்கு நினைவு ஆசரிப்பு காலம் பொருத்தமான சமயம்?
• உலகத்தால் பகைக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் பற்றிய இயேசுவின் எச்சரிக்கையால் நாம் ஏன் இடறலடையக் கூடாது?
• “மெய்யான திராட்சச் செடி” யார்? ‘கொடிகள்’ யார், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
[பக்கம் 15-ன் படம்]
அன்புள்ள சேவை செய்வது சம்பந்தமாக மறக்க முடியாத பாடத்தை இயேசு தமது அப்போஸ்தலருக்குக் கற்பித்தார்
[பக்கம் 16, 17-ன் படம்]
சுயதியாக அன்பைக் காட்டும்படியான கிறிஸ்துவின் கட்டளைக்கு அவருடைய சீஷர்கள் கீழ்ப்படிகிறார்கள்