வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மத சம்பந்தமான காரணங்களுக்காக எப்போதெல்லாம் ஒரு கிறிஸ்தவ பெண் முக்காடிடுவது பொருத்தமானது?
“ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ஏன்? ‘ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான்’ என்ற பைபிளின் தலைமைத்துவ நியமத்தின் காரணமாகவே அவ்வாறு எழுதினார். பொதுவாக, கிறிஸ்தவ சபையில் ஜெபிப்பது அல்லது பிரசங்கிப்பது ஓர் ஆணின் பொறுப்பு. ஆகவே, சாதாரணமாக தன்னுடைய கணவனோ அல்லது முழுக்காட்டப்பட்ட ஆணோ செய்கிற வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒரு கிறிஸ்தவ பெண் செய்யும்போது அவள் முக்காடிட வேண்டும்.—1 கொரிந்தியர் 11:3-10.
மண வாழ்க்கையில் கிறிஸ்தவ பெண் முக்காடிட வேண்டிய சந்தர்ப்பங்கள் எழலாம். உதாரணமாக, பைபிள் படிப்பதற்கு அல்லது உணவருந்துவதற்கு குடும்பத்தினர் கூடிவரும்போது, பொதுவாக கணவன் போதிப்பதிலும் கடவுளிடம் ஜெபிப்பதிலும் தலைமைதாங்கி வழிநடத்துகிறார். ஆனால் அவர் அவிசுவாசியாக இருந்தால், இந்தப் பொறுப்பு மனைவிமீது விழலாம். ஆகவே, தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் சத்தமாக ஜெபிக்கும்போது அல்லது தன்னுடைய கணவன் முன்னிலையில் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது கிறிஸ்தவ சகோதரி முக்காடிடுவது பொருத்தமானது. அவளுடைய கணவன் அங்கில்லாத போது அவள் முக்காடிட வேண்டியதில்லை, ஏனென்றால் பிள்ளைகளுக்கு போதிப்பதற்கு கடவுளால் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறாள்.—நீதிமொழிகள் 1:8; 6:20.
ஆனால் குடும்பத்தில் இளம் வயதிலுள்ள மகன் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற ஊழியனாக இருந்தால் என்ன செய்யலாம்? அவன் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராக இருப்பதால், அதன் ஆண் அங்கத்தினர்களிடமிருந்து அவன் போதனைகளைப் பெற வேண்டும். (1 தீமோத்தேயு 2:12) அவனுடைய அப்பா விசுவாசியாக இருந்தால், அவனுக்கு அவர் கற்பிக்க வேண்டும். என்றபோதிலும், அப்பா இல்லாதிருந்தால், முழுக்காட்டப்பட்ட இளம் வயது மகனுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் பைபிள் படிப்பு நடத்தும்போது தாய் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். படிப்பின்போது அல்லது சாப்பிடும்போது மகனை ஜெபிக்கச் சொல்வதா வேண்டாமா என்பது அவளுடைய தீர்மானத்திற்கு விடப்படுகிறது. அவன் இன்னும் போதுமான திறமை பெறவில்லை என அவள் உணர்ந்தால் அவளே ஜெபிக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவளே ஜெபிக்க தீர்மானித்தால், அவள் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்.
சபை நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ பெண்கள் முக்காடிட வேண்டிய அவசியம் ஏற்படலாம். உதாரணமாக, வார நாட்களில் நடத்தப்படும் வெளி ஊழியத்திற்கான கூட்டத்தில், முழுக்காட்டப்பட்ட ஆண்கள் இல்லாமல் கிறிஸ்தவ சகோதரிகள் மட்டுமே ஆஜராகியிருக்கலாம். சபை கூட்டத்தில் முழுக்காட்டப்பட்ட ஆண்களே இல்லாத மற்ற சந்தர்ப்பங்களும் இருக்கலாம். சபை கூட்டத்திலோ வெளி ஊழியத்திற்கான கூட்டத்திலோ பொதுவாக ஒரு சகோதரர் கையாளும் பொறுப்புகளை ஒரு சகோதரி செய்ய நேர்ந்தால் அவள் முக்காடிட வேண்டும்.
கிறிஸ்தவ பெண்கள் பைபிள் பேச்சுக்களை பிறமொழியில் அல்லது சைகை மொழியில் மொழிபெயர்க்கும்போது அல்லது சபை கூட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பைபிள் படிப்பு உதவி புத்தகத்திலிருந்து எல்லார் முன்பும் பாராக்களை வாசிக்கும்போது முக்காடிட வேண்டுமா? வேண்டியதில்லை. இப்படிப்பட்ட பொறுப்புகளை செய்கிற சகோதரிகள் தலைமை தாங்குவதோ கற்பிப்பதோ இல்லை. அது போலவே நடிப்புகளின்போது, அனுபவங்களைச் சொல்லும்போது, அல்லது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர் பேச்சுக்களைக் கொடுக்கும்போது முக்காடிட வேண்டிய அவசியமில்லை.
சபையில் போதிப்பது முழுக்காட்டப்பட்ட ஆண்களின் பொறுப்பாக இருந்தாலும், சபைக்கு வெளியே பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் உத்தரவாதம் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு சாராருக்கும் இருக்கிறது. (மத்தேயு 24:14; 28:19, 20) ஆகவே யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஓர் ஆணின் முன்னிலையில் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி வெளி ஆட்களிடம் கிறிஸ்தவ பெண் பேசும்போது முக்காடிட வேண்டியதில்லை.
ஆனால் ஒரு வீட்டில் வழக்கமான, திட்டமிடப்பட்ட பைபிள் படிப்பை நடத்தும்போது ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட ஓர் ஆண் இருந்தால் நிலைமை வேறு. இது முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட போதனை நேரம், அங்கு படிப்பு நடத்துகிறவரே உண்மையில் தலைமை தாங்குகிறார். இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு படிப்பும் சபையில் உள்ள ஏற்பாட்டைப் போலவே இருக்கிறது. சாட்சியாக இருக்கும் முழுக்காட்டப்பட்ட ஆணின் முன்னிலையில் முழுக்காட்டப்பட்ட ஒரு பெண் படிப்பு நடத்தும்போது அவள் முக்காடிடுவது பொருத்தமானது. என்றபோதிலும், ஒப்புக்கொடுத்த சகோதரரே ஜெபம் செய்ய வேண்டும். அந்த சகோதரர் பேசும் சக்தி இழந்தவராக இருந்தால் அல்லது வேறு ஏதாவது பிரத்தியேகமான காரணம் இருந்தால் தவிர, ஒப்புக்கொடுக்கப்பட்ட சகோதரர் முன்பு ஒரு சகோதரி ஜெபிக்கக் கூடாது.
சிலசமயங்களில் முழுக்காட்டப்படாத ஓர் ஆண் பிரஸ்தாபியுடன் ஒரு கிறிஸ்தவ சகோதரி பைபிள் படிப்புக்குச் செல்லலாம். அவள் விரும்பினால், அவரை படிப்பு நடத்த சொல்லலாம். ஆனால் யெகோவாவிடம் ஜெபிக்கையில் முழுக்காட்டப்பட்ட சகோதரியை அவரால் தகுந்த விதத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியாததால், அந்தப் படிப்பில் அவள் ஜெபிப்பது பொருத்தமானதே. அந்தச் சகோதரியே படிப்பையும் நடத்தி ஜெபமும் செய்தால் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். அந்த ஆண் பிரஸ்தாபி முழுக்காட்டப்படாதவராக இருந்தாலும், அவர் பிரசங்கிப்பதன் காரணமாக வெளி ஆட்கள் அவரை சபையின் பாகமாகவே கருதுவார்கள்.
“தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்” என்றும் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ஆம், தொடர்ந்து உண்மையுடன் யெகோவாவுக்கு கீழ்ப்பட்டிருக்கிற கிறிஸ்தவ சகோதரிகள், கோடாகோடி தேவதூதர்கள் முன்பும் சிறந்த முன்மாதிரி வகிக்கும் விசேஷ வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். முக்காடிட வேண்டிய சூழ்நிலைகளில் அப்படி செய்வதற்கு தேவபக்திக்குரிய பெண்கள் கவனம் செலுத்துவது எவ்வளவு பொருத்தமானது!
[பக்கம் 26-ன் படங்கள்]
முக்காடிடுவது தலைமைத்துவத்தை மதிப்பதற்கு ஓர் அடையாளம்