உண்மையான புனிதர்கள் எவ்வாறு உங்களுக்கு உதவுவார்கள்?
வேதாகமத்தில் “புனிதர்” என்று சில மொழிபெயர்ப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை “பரிசுத்தர்” என்று மொழிபெயர்க்கப்படலாம். அந்தப் பதம் யாருக்கு பொருந்தியது? “விசுவாசிகளைக் குறிக்க பன்மையில் உபயோகிக்கையில் அது அவர்கள் அனைவரையும் குறிக்கிறது; விசேஷித்த விதத்தில் பரிசுத்தமுள்ள நபர்களை அல்லது தனிச்சிறப்பு வாய்ந்த பரிசுத்த செயல்கள் செய்த மரித்தவர்களை மட்டுமே குறிக்க அதை உபயோகிக்கவில்லை” என்று புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி (ஆங்கிலம்) கூறுகிறது.
ஆகவே, அப்போஸ்தலன் பவுல் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அனைவரையும் உண்மையான புனிதர்கள் அல்லது பரிசுத்தவான்கள் என்று குறிப்பிட்டார். உதாரணமாக, “கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், [ரோம மாகாணமாகிய] அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும்” பொ.ச. முதல் நூற்றாண்டில் அவர் ஒரு கடிதத்தை எழுதினார். (2 கொரிந்தியர் 1:1) பின்னர், “ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும்” பவுல் ஒரு கடிதத்தை எழுதினார். (ரோமர் 1:2) இந்தப் பரிசுத்தவான்கள் அப்போது மரிக்கவில்லை என்பதும் அவர்களுடைய தலைசிறந்த நற்குணம் காரணமாக மற்ற விசுவாசிகளைவிட உயர்ந்தவர்கள் என்பதுபோல வேறுபடுத்தி காட்டப்படவில்லை என்பதும் தெளிவாக இருக்கிறது. அப்படியென்றால், எதன் அடிப்படையில் அவர்கள் புனிதர்களாக வேறுபடுத்தி காட்டப்படுகிறார்கள்?
கடவுளால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்
மனிதர்களோ ஓர் அமைப்போ ஒருவரை புனிதராக அறிவிக்க முடியாதென்று கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. “[கடவுள்] நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும் . . . கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” என்று வேதவசனங்கள் கூறுகின்றன. (2 தீமோத்தேயு 1:9) கடவுளுடைய தகுதியற்ற தயவின் காரணமாகவும் அவருடைய நோக்கத்திற்கு இசைவாகவும் யெகோவா அழைப்பதாலேயே ஒருவர் பரிசுத்தமாக்கப்படுகிறார்.
கிறிஸ்தவ சபையின் பரிசுத்தவான்கள் ‘ஒரு புதிய உடன்படிக்கையின்’ பங்குதாரர்கள். இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தம் இந்த உடன்படிக்கையை செல்லுபடியாக்கி, அதன் பங்குதாரர்களை பரிசுத்தமாக்குகிறது. (எபிரெயர் 9:15; 10:29; 13:20, 24) அவர்கள் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக, ‘இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாக’ இருக்கிறார்கள்.—1 பேதுரு 2:5, 9.
உதவவும் பரிந்துபேசவும் புனிதர்களை அழைத்தல்
‘புனிதர்களால்’ விசுவாசிகளுக்கு விசேஷ வல்லமை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை காரணமாக கோடிக்கணக்கானோர் நினைவுச்சின்னங்களை உபயோகித்து அவர்களை வணங்குகின்றனர் அல்லது பரிந்துபேசும்படி அவர்களிடம் வேண்டிக்கொள்கின்றனர். பைபிள் இதை போதிக்கிறதா? “நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் கூறியபோது கடவுளிடம் அணுகும் விதத்தை தமது சீஷர்களுக்கு கற்பித்தார். (மத்தேயு 6:9) யெகோவா தேவனிடம் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.
பரிந்துபேசும்படி ‘புனிதர்களை’ அழைக்கும் பழக்கத்தை ஆதரிக்கும் முயற்சியில் சில இறையியல் வல்லுனர்கள் ரோமர் 15:32-ஐ சுட்டிக்காட்டுகின்றனர். “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று அங்கே வாசிக்கிறோம். அந்த விசுவாசிகள் தன்னிடம் ஜெபிக்கும்படி அல்லது கடவுளை அணுக தன்னுடைய பெயரை உபயோகிக்கும்படி பவுல் உற்சாகப்படுத்தினாரா? இல்லை. உண்மையான புனிதர்கள் அல்லது பரிசுத்தவான்கள் சார்பாக செய்யும் ஜெபங்களை பைபிள் உற்சாகப்படுத்துகிற போதிலும் அந்தப் புனிதர்களிடம் அல்லது அவர்கள் வாயிலாக ஜெபிக்கும்படி கடவுள் எங்குமே கட்டளையிடவில்லை.—பிலிப்பியர் 1:1, 4, 6.
என்றாலும், நமது ஜெபங்களுக்கு ஒரு மத்தியஸ்தரை கடவுளே நியமித்திருக்கிறார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு கிறிஸ்து கூறினார். அவர் மேலுமாக, “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்றும் கூறினார். (யோவான் 14:6, 13, 14) இயேசுவின் பெயரில் செய்யும் ஜெபங்களை கேட்க யெகோவா தயாராக இருக்கிறார் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம். “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு [அல்லது, மத்தியஸ்தராய் இருக்கும்படிக்கு] அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” என்று இயேசுவைப் பற்றி பைபிள் கூறுகிறது.—எபிரெயர் 7:25.
நம் சார்பாக மத்தியஸ்தம் செய்ய இயேசு தயாராக இருக்கிறார் என்றால் கிறிஸ்தவமண்டலத்தில் இருப்பவர்கள் ஏன் அடிக்கடி ‘புனிதர்களிடம்’ ஜெபம் செய்கிறார்கள்? விசுவாசத்தின் சகாப்தம் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் சரித்திராசிரியர் வில் டூரன்ட் இந்தப் பழக்கத்தின் தோற்றுமூலத்தை ஆராய்கிறார். சர்வ வல்லமையுள்ள கடவுள் பயபக்திக்குரியவர் என்பதையும் இயேசுவை அணுகுவதோ அதைவிட சுலபமாக தோன்றியதையும் குறிப்பிட்ட டூரன்ட் இவ்வாறு தொடருகிறார்: “மலைப் பிரசங்கத்தில் அவர் கூறியவற்றை முற்றுமுழுக்க அசட்டை செய்த பிறகு [இயேசுவிடம்] நேரடியாக பேச ஒருவருக்கு துணிவு வராது. மாறாக, புனிதராக அறிவிக்கப்பட்டதால் பரலோகத்தில் இருப்பதாக கருதப்படும் புனிதரிடம் ஜெபத்தை சமர்ப்பித்து கிறிஸ்துவிடம் செல்ல மத்தியஸ்தராய் இருக்கும்படி அவரிடம் வேண்டிக்கொள்வது ஞானமானதாக தோன்றியது.” இவ்வாறெல்லாம் யோசித்து கவலைப்படுவது சரிதானா?
இயேசு மூலமாக நாம் ‘பேச்சு சுயாதீனமும்’ ஜெபத்தில் கடவுளிடம் ‘அணுகும் நம்பிக்கையும்’ பெறலாம் என்று பைபிள் போதிக்கிறது. (எபேசியர் 3:11, 12, NW) சர்வ வல்லமையுள்ள கடவுள் நம் ஜெபங்களை கேட்க இயலாத அளவிற்கு மனிதவர்க்கத்தைவிட்டு தூரமாய் விலகியிருப்பவர் அல்ல. “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” என சங்கீதக்காரன் தாவீது நம்பிக்கையோடு ஜெபித்தார். (சங்கீதம் 65:2) மரித்த ‘புனிதர்களின்’ நினைவுச்சின்னங்கள் வாயிலாக வல்லமையை அளிப்பதற்கு பதில் விசுவாசத்தோடு கேட்கிறவர்களுக்கு யெகோவா தமது பரிசுத்த ஆவியை அபரிமிதமாக கொடுக்கிறார். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என்று இயேசு நியாயவிவாதம் செய்தார்.—லூக்கா 11:13.
பரிசுத்தவான்களின் வேலை
பவுல் தனது கடிதங்களை எழுதிய பரிசுத்தவான்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மரித்துவிட்டனர்; ஆனால், காலப்போக்கில் “ஜீவகிரீடத்தை” அதாவது பரலோக உயிர்த்தெழுதலை பெறவிருந்தனர். (வெளிப்படுத்துதல் 2:10) இந்த உண்மையான புனிதர்களை வணங்குவது வேதப்பூர்வமற்றது என்பதையும் வியாதி, இயற்கை பேரழிவுகள், பொருளாதார நிலையற்ற தன்மை, முதுமை அல்லது மரணத்திலிருந்து ஒருவர் பாதுகாக்கப்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் யெகோவா தேவனை வணங்குவோர் உணருகின்றனர். எனவே, ‘கடவுளுடைய பரிசுத்தவான்கள் உண்மையில் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்களா? நம் சார்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாமா?’ என்ற கேள்விகள் உங்கள் மனதில் உதிக்கலாம்.
தானியேல் பதிவுசெய்த ஒரு தீர்க்கதரிசனத்தில் பரிசுத்தவான்கள் முக்கிய பாகம் வகித்தனர். பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் அவர் மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு தரிசனத்தை பார்த்தார்; அதன் நிறைவேற்றம் நம் நாள் வரை நீடிக்கிறது. மனித அரசாங்கங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு பயங்கரமான மிருகங்கள் கடலிலிருந்து வெளியே வந்தன; மனிதவர்க்கத்தின் உண்மையான தேவைகளை அவற்றால் பூர்த்திசெய்ய முடியவில்லை. “ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” என்று பின்னர் தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார்.—தானியேல் 7:17, 18.
‘பரிசுத்தவான்களின் இந்த சுதந்தரத்தை’ அதாவது கிறிஸ்துவோடு பரலோகத்தில் உடன் சுதந்திரவாளிகளாக இருப்பதை பவுல் உறுதிபடுத்தினார். (எபேசியர் 1:18-21) இயேசுவின் இரத்தம், 1,44,000 பரிசுத்தவான்கள் பரலோக மகிமைக்கு உயிர்த்தெழுப்பப்படும் வாய்ப்பை திறந்து வைத்தது. “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என்று அப்போஸ்தலன் யோவான் கூறினார். (வெளிப்படுத்துதல் 20:4, 6; 14:1, 3) “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் தேசங்களிலுமிருந்து மனிதர்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக அவர்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; அவர்கள் பூமியின்மீது ஆட்சி செய்வார்கள்” என்று திரளான பரலோக ஜீவன்கள் மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவுக்கு முன் பாடுவதை யோவான் ஒரு தரிசனத்தில் கேட்டார். (வெளிப்படுத்துதல் 5:9, 10, NW) இது எவ்வளவாய் உறுதியளிக்கிறது! இந்த ஆண்களையும் பெண்களையும் யெகோவா தேவனே கவனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலுமாக, அநேகமாய் மனிதர்களின் ஒவ்வொரு பிரச்சினையையும் சந்தித்திருக்கும் இவர்கள் பூமியில் விசுவாசத்தோடு சேவித்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 10:13) ஆகவே, உயிர்த்தெழுப்பப்பட்ட இந்த பரிசுத்தவான்கள் அல்லது புனிதர்கள் நம் பலவீனங்களையும் குறைபாடுகளையும் மனதில்கொண்டு இரக்கத்தோடும் கரிசனையோடும் ஆட்சி செய்வார்கள் என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம்.
ராஜ்ய ஆட்சியில் ஆசீர்வாதங்கள்
இந்தப் பூமியிலிருந்து துன்மார்க்கத்தையும் துயரத்தையும் துடைத்தழிக்க ராஜ்ய அரசாங்கம் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கும். அந்தச் சமயத்தில், எப்போதும் இருந்ததைவிட மனிதர்கள் கடவுளிடம் மிகவும் நெருங்கி வருவார்கள். “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” என்று யோவான் எழுதினார். இது மனிதவர்க்கத்திற்கு எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களை அளிக்கும்; ஏனெனில் அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து கூறுவதாவது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
அது என்னே மகிழ்ச்சிகரமான சமயமாயிருக்கும்! கிறிஸ்து இயேசுவும் 1,44,000 பரிசுத்தவான்களும் செய்யும் பரிபூரண ஆட்சியின் விளைவுகள் மீகா 4:3, 4-ல் உள்ள பின்வரும் வார்த்தைகளில் மேலுமாக விவரிக்கப்படுகின்றன: “அவர் [யெகோவா] திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”
அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களில் பங்குபெறும்படி இந்தப் பரிசுத்தவான்களே நம்மை அழைக்கிறார்கள். மணப்பெண்ணாக சித்தரிக்கப்படும் இந்த உண்மையான புனிதர்கள், “வா” என்று தொடர்ந்து கூறுகிறார்கள்; “கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்று பதிவு தொடர்ந்து சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 22:17) ‘ஜீவத் தண்ணீரில்’ என்னென்ன உட்பட்டுள்ளன? மற்றவற்றோடுகூட கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவும் உட்பட்டுள்ளது. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்று கடவுளிடம் ஜெபிக்கையில் இயேசு கூறினார். (யோவான் 17:3) பைபிளை தவறாமல் படிப்பதால் இந்த அறிவை பெறலாம். பரிசுத்தவான்களின் உண்மையான அடையாளத்தையும், மனிதவர்க்கத்தின் நித்திய நன்மைக்காக கடவுள் அவர்களை எவ்வாறு உபயோகிப்பார் என்பதையும் கடவுளுடைய வார்த்தை வாயிலாக அறிய முடியும் என்பதால் நாம் எவ்வளவு சந்தோஷப்படலாம்!
[பக்கம் 4-ன் படம்]
பவுல், உண்மையான புனிதர்களுக்கு ஏவப்பட்ட கடிதங்களை எழுதினார்
[பக்கம் 4, 5-ன் படம்]
இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் உண்மையான புனிதர்களாக அல்லது பரிசுத்தவான்களாக ஆனார்கள்
[பக்கம் 6-ன் படம்]
இயேசு கிறிஸ்து வாயிலாக நாம் கடவுளிடம் நம்பிக்கையோடு ஜெபிக்கலாம்
[பக்கம் 7-ன் படம்]
உயிர்த்தெழுப்பப்பட்ட புனிதர்கள் அல்லது பரிசுத்தவான்கள் இரக்கமுள்ள ஆட்சியாளர்களாக பூமி மீது ஆட்சி செய்வர்