வாழ்க்கை சரிதை
மிஷனரிகளாக சென்ற இடமே எங்கள் வீடானது
டிக் வால்ட்ரன் சொன்னபடி
1953, செப்டம்பர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம். நாங்கள் தென்மேற்கு ஆப்பிரிக்காவிற்கு (இப்போது நமிபியா) போய்ச் சேர்ந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை; அதன் தலைநகரான விண்ட்ஹோக்கில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தவிருந்தோம். ஆஸ்திரேலியாவிலிருந்து இந்த ஆப்பிரிக்க தேசத்திற்கு வரும்படி எங்களை தூண்டியது எது? மூன்று இளம் பெண்களோடுகூட, என் மனைவியும் நானும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கும் மிஷனரிகளாக இங்கு வந்திருந்தோம்.—மத்தேயு 24:14.
உலகின் கடைக்கோடியில், அதாவது ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க ஆண்டாகிய 1914-ல் பிறந்தேன். நான் டீனேஜராக இருக்கையில்தான் மாபெரும் பொருளாதார மந்தம் இவ்வுலகை கவ்வியது. ஆகவே, குடும்பத்தை ஆதரிக்க என் பங்கை செய்ய வேண்டியிருந்தது. அப்போது வேலை கிடைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஏராளமாயிருந்த காட்டு முயல்களை வேட்டையாட ஒரு வழியை கண்டுபிடித்தேன். இவ்வாறு, குடும்பத்தார் சாப்பிடுவதற்காக என் பங்கிற்கு தவறாமல் முயல் கறி சப்ளை செய்து வந்தேன்.
1939-ல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்குள் மெல்பர்ன் நகரிலுள்ள டிராம்களிலும் பஸ்களிலும் வேலை செய்ய ஆரம்பித்தேன். அந்த பஸ்களில் சுமார் 700 ஆண்கள் பல்வேறு ஷிப்டுகளில் வேலை செய்ததால் ஒவ்வொரு ஷிப்டிலும் வெவ்வேறு டிரைவரை அல்லது கண்டக்டரை சந்தித்தேன். “நீங்க எந்த மதத்தை சேர்ந்தவர்?” என்று அவர்களிடம் அடிக்கடி கேள்வி கேட்டு அவர்களுடைய நம்பிக்கைகளையும் விளக்க சொல்லுவேன். யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒருவரே திருப்திகரமான பதில்களை கொடுத்தார். கடவுளுக்கு பயப்படும் மனிதர்கள் என்றென்றும் வாழப் போகிற பரதீஸான பூமி பற்றிய பைபிள் அடிப்படையிலான செய்தியை அவர் என்னிடம் விளக்கினார்.—சங்கீதம் 37:29.
இதற்கிடையில், யெகோவாவின் சாட்சிகள் என் அம்மாவையும் சந்தித்திருந்தனர். கடைசி ஷிப்டை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது, அடிக்கடி சாப்பாட்டோடு (இப்போது விழித்தெழு! என அழைக்கப்படும்) கான்ஸலேஷன் பத்திரிகையும் எனக்காக காத்திருக்கும். அதில் வாசித்தவை என் அக்கறையை தூண்டிவிட்டன. காலப்போக்கில், இதுவே உண்மை மதம் என்ற முடிவுக்கு வந்தேன். சபை காரியங்களில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து, மே 1940-ல் முழுக்காட்டப்பட்டேன்.
மெல்பர்னில் பயனியர் வீடு ஒன்று இருந்தது. அங்கே, யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களில் சுமார் 25 பேர் தங்கியிருந்தனர். நானும் அவர்களோடு தங்கினேன். பிரசங்க வேலையில் அவர்களுக்கு ஏற்பட்ட அருமையான அனுபவங்களை நாள் தவறாமல் கேட்டு வந்ததால் பயனியராக வேண்டும் என்ற ஆவல் என் இருதயத்திலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. கடைசியில், பயனியராக சேவிக்க விண்ணப்பித்தேன். என் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, ஆஸ்திரேலியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவிக்க அழைப்பு வந்தது. இவ்வாறு, பெத்தேல் குடும்பத்தின் பாகமானேன்.
சிறைவாசமும் தடையுத்தரவும்
பெத்தேலில் பல்வேறு வேலைகளை செய்தேன்; அதில் ஒன்று மரம் அறுக்கும் மிஷினை இயக்குவதாகும். அங்கே, கரிக்கட்டை செய்வதற்காக மரத்துண்டுகளை வெட்டினோம். இதை உபயோகித்தே கிளை அலுவலகத்திலிருந்த வண்டிகளுக்கு தேவையான எரிபொருளை தயாரித்தோம்; யுத்தம் காரணமாக எரிபொருள் கிடைப்பது கடினமாக இருந்ததால் இவ்வாறு செய்தோம். மரம் அறுக்கும் மிஷினில் 12 பேர் வேலை செய்தோம்; நாங்கள் அனைவருமே கட்டாய இராணுவ சேவைக்கு தகுதியானவர்களாக இருந்தோம். பைபிள் கூறுவதன் அடிப்படையில் இராணுவத்தில் சேவை செய்ய மறுத்ததால் சீக்கிரத்திலேயே எங்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. (ஏசாயா 2:4) சிறைச்சாலையில் கட்டாய உழைப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டோம். அங்கே என்ன வேலை கொடுக்கப்பட்டது தெரியுமா? மரம் வெட்டும் வேலை! பெத்தேலில் கற்றுக்கொண்ட வேலையே எங்களுக்கு கொடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியமாக இருந்தது!
நாங்கள் மிகவும் நன்றாக மரம் வெட்டியதைப் பார்த்த சிறைச்சாலை அதிகாரி ஒரு பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வைத்துக்கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார். இவற்றை எங்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற கெடுபிடியான கட்டளைகள் இருந்தபோதிலும் அவற்றை அனுமதித்தார். இந்தச் சமயத்தில்தான் மனித உறவுகள் சம்பந்தமாக மிகவும் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். பெத்தேலில் வேலை செய்கையில், ஒரு சகோதரரோடு ஒத்துப்போவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் குணங்களில் நாங்கள் எதிரும்புதிருமாக இருந்தோம். ஆனால், என்னோடு ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்டது யார் தெரியுமா? அதே சகோதரர்தான். இப்போது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள அதிக நேரமிருந்தது; அதன் விளைவாக எங்கள் மத்தியில் நெருக்கமான, நிலையான நட்பு மலர்ந்தது.
காலப்போக்கில், ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டது. எல்லா பணமும் கைப்பற்றப்பட்டதால் பெத்தேல் சகோதரர்கள் கையில் அற்பசொற்ப பணமே இருந்தது. ஒரு சமயம் ஒரு சகோதரர் என்னிடம் வந்து, “டிக், டவுனுக்கு போய் ஊழியம் செய்ய விரும்புகிறேன். ஆனால், வேலைக்கு உபயோகிக்கும் பூட்ஸ் தவிர என்னிடம் வேறு நல்ல ஷூ இல்லை” என்று சொன்னார். நான் சந்தோஷத்தோடு என் ஷூவை அவருக்கு கொடுத்தேன், அதை மாட்டிக்கொண்டு அவர் டவுனுக்கு கிளம்பிவிட்டார்.
அவர் பிரசங்கித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தகவல் பின்னர் கிடைத்தது. “உனக்கு நேர்ந்ததை கேட்டு வருந்துகிறேன். என் ஷூவோடு நானும் சிறைக்கு போகாததற்காக மகிழ்கிறேன்” என்ற சிறிய செய்தியை அவருக்கு அனுப்ப தூண்டப்பட்டேன். ஆனால், எனது நடுநிலை காரணமாக சீக்கிரத்திலேயே நானும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். விடுதலை செய்யப்பட்ட பிறகு, பெத்தேல் குடும்பத்திற்கு உணவு வழங்கிய பண்ணையை கவனித்துக்கொள்ளும் வேலை எனக்கு கொடுக்கப்பட்டது. அதற்குள்ளாக, நீதிமன்ற வழக்கு ஒன்றில் வெற்றி கிடைக்கவே யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளுக்கு எதிரான தடையுத்தரவு நீக்கப்பட்டது.
வைராக்கியமான ஊழியரை மணந்தேன்
பண்ணையில் வேலை செய்கையில் திருமணத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். பயனியராயிருந்த கார்லீ குளோகன் என்ற இளம் சகோதரி என் நெஞ்சைக் கவர்ந்தாள். கார்லீயின் குடும்பத்தில் அவருடைய பாட்டியே பைபிளின் செய்தியில் முதலில் ஆர்வம் காட்டினார். அவர் மரிக்கும் தறுவாயில் கார்லீயின் அம்மாவான விராவிடம், “கடவுளை நேசிக்கவும் அவரை சேவிக்கவும் உன் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடு, அப்போது பரதீஸிய பூமியில் ஒரு நாள் சந்திப்போம்” என்று கூறியிருந்தார். பின்னர், ஒரு பயனியர் விராவின் வீட்டிற்கு வந்து, இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிப்பதில்லை என்ற ஆங்கில பிரசுரத்தை கொடுத்தபோது அம்மா சொன்ன வார்த்தைகளின் உண்மை அவருக்கு புரிய ஆரம்பித்தது. அந்த சிறுபுத்தகத்தை வாசித்ததும், மனிதர்கள் பரதீஸான பூமியில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம் என்பது விராவுக்கு உறுதியானது. (வெளிப்படுத்துதல் 21:4) அவர் 1930-களின் ஆரம்பத்தில் முழுக்காட்டப்பட்டார். தன் தாய் கூறியதைப் போலவே, தனது மூன்று மகள்களான லூசீ, ஜீன், கார்லீ ஆகியோர் கடவுள்மீது அன்பை வளர்த்துக்கொள்ள உதவினார். குடும்பங்களில் எதிர்ப்பு வரலாம் என இயேசு எச்சரித்ததைப் போலவே கார்லீயின் அப்பா தன் குடும்பத்தின் ஆன்மீக காரியங்களை பயங்கரமாக எதிர்த்தார்.—மத்தேயு 10:34-36.
குளோகன் குடும்பத்தில் அனைவருக்குமே இசையார்வம் இருந்தது, பிள்ளைகளில் ஒவ்வொருவரும் ஓர் இசைக் கருவியை இசைக்க அறிந்திருந்தனர். கார்லீ வயலின் இசைக்க அறிந்திருந்தாள்; 1939-ல் 15 வயதாகையில் இசையில் சிறப்பு சான்றிதழ் பெற்றாள். இரண்டாம் உலக யுத்தம் வெடித்தபோதோ கார்லீ எதிர்காலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள். தன் வாழ்க்கையை எவ்வாறு கழிப்பது என்பதை தீர்மானிப்பதற்கான காலகட்டம் வந்துவிட்டது. ஒருபுறம், இசையில் மேதையாவதற்கு வாய்ப்பு இருந்தது. மெல்பர்ன் சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ராவில் இசைக்கும்படி ஏற்கெனவே ஓர் அழைப்பு வந்திருந்தது. மறுபுறத்திலோ, ராஜ்ய செய்தியை பிரசங்கிக்கும் மகத்தான வேலையில் தன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு இருந்தது. இதைக் குறித்து தீவிரமாக சிந்தித்த பிறகு, கார்லீயும் அவளுடைய இரு சகோதரிகளும் 1940-ல் முழுக்காட்டப்பட்டு முழுநேர பிரசங்க ஊழியத்தில் கால்வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.
கார்லீ, முழுநேர ஊழியம் செய்ய தீர்மானம் செய்த சிறிது காலத்திலேயே ஆஸ்திரேலிய கிளையிலிருந்த அதிக பொறுப்புமிக்க ஒரு சகோதரர் அவளை சந்தித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் அங்கத்தினராக பின்னர் சேவித்த சகோதரர் லாயிட் பாரி என்பவரே அவர். அப்போதுதான் மெல்பர்னில் அவர் ஒரு பேச்சைக் கொடுத்திருந்தார். அவர் கார்லீயிடம், “நான் பெத்தேலுக்கு திரும்பி போகிறேன். நீயும் என்னோடு ரயிலில் வந்து பெத்தேல் குடும்பத்தோடு சேர்ந்துகொள்ளலாம் அல்லவா?” என்று கேட்டார். அவள் உடனடியாக அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாள்.
யுத்தம் நடந்த சமயத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தபோது ஆஸ்திரேலியாவிலுள்ள சகோதரர்களுக்கு பைபிள் பிரசுரங்களை எடுத்துச் செல்வதில் கார்லீயும் பெத்தேல் குடும்பத்தை சேர்ந்த மற்ற சகோதரிகளும் முக்கிய பங்கு வகித்தனர். சகோதரர் மால்கம் வேல் என்பவரின் மேற்பார்வையில் பெரும்பாலான பிரசுரங்களை அச்சடித்தது அவர்களே. த நியூ உவர்ல்ட், சில்ரன் போன்ற புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்டன. இரண்டு வருடங்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் காவற்கோபுர பத்திரிகையின் ஒரு பிரதிகூட தவறாமல் வெளிவந்தது.
போலீஸாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக அச்சடிக்கும் இடத்தை சுமார் 15 முறை மாற்ற வேண்டியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் பைபிள் பிரசுரங்கள் அச்சிடப்பட்டன; ஏமாற்றுவதற்காக வேறு விதமான அச்சடிப்பும் அதே கட்டடத்தில் நடைபெற்றது. ஏதாவது ஆபத்து வருவது தெரிந்தால் வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கும் சகோதரி ஒரு பட்டனை அழுத்துவாள், அப்போது அடித்தளத்தில் மணி அடிக்கும். உடனே, எவ்வித சோதனையும் ஆரம்பமாவதற்கு முன்பு அங்கிருக்கும் சகோதரிகள் பிரசுரங்களை மறைத்துவிடுவார்கள்.
ஒருமுறை, அவ்வாறு சோதனை நடந்தபோது காவற்கோபுர பிரதி ஒன்று அனைவர் கண்ணிலும் படும் வண்ணம் மேசைமீது கிடப்பதைக் கண்ட சில சகோதரிகள் அரண்டு போனார்கள். உள்ளே வந்த போலீஸ்காரர் தனது பெட்டியை அந்தக் காவற்கோபுர பிரதியின் மீதே வைத்துவிட்டு சோதனையிட ஆரம்பித்தார். எதுவும் அகப்படவில்லை என்பதால் தன் பெட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்!
தடையுத்தரவு நீக்கப்பட்டு கிளை அலுவலக வளாகம் சகோதரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பிறகு விசேஷ பயனியர்களாக செல்லும் வாய்ப்பு அநேகருக்கு கிடைத்தது. அப்போதுதான் கிலெனினிஸ் செல்ல கார்லீ முன்வந்தாள். 1948, ஜனவரி 1-ம் தேதி அவளை திருமணம் செய்துகொண்ட பிறகு நானும் அங்கு சென்றேன். நாங்கள் அந்த இடத்தைவிட்டு மற்றொரு இடத்திற்கு மாறுவதற்கு முன்பாக அங்கு ஒரு சபை உருவாகி தழைத்தோங்கியது.
அடுத்த நியமிப்பான ராக்ஹாம்ப்டனுக்கு சென்றபோதோ தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஆகவே, அக்கறை காண்பித்த ஒருவரின் பண்ணையிலிருந்த திறந்தவெளியில் கூடாரமிட்டு தங்கினோம். பின்னர் ஒன்பது மாதங்களுக்கு அதுவே எங்கள் வீடாக இருந்தது. இன்னும் அதிக காலம்கூட நாங்கள் அதில் தங்கியிருப்போம். ஆனால், மழைக்காலத்தில் அடித்த பயங்கர புயல் காற்று அந்தக் கூடாரத்தை நார் நாராக கிழித்துவிட்டது; பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அது அடித்து செல்லப்பட்டது.a
வெளிநாட்டு நியமிப்பு
ராக்ஹாம்ப்டனில் இருக்கையில், மிஷனரி பயிற்சிக்காக உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 19-வது வகுப்பில் கலந்துகொள்ளும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது. இவ்வாறுதான், 1952-ல் பட்டம் பெற்ற பிறகு அப்போது தென்மேற்கு ஆப்பிரிக்கா என்று அழைக்கப்பட்ட நாட்டிற்கு அனுப்பப்பட்டோம்.
சீக்கிரத்திலேயே, எங்கள் மிஷனரி வேலையின்மீது கிறிஸ்தவமண்டல பாதிரிமார் வெறுப்பை காட்ட ஆரம்பித்தனர். எங்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி தங்கள் சபையினரை எச்சரித்தனர்; பிரசங்க மேடையிலிருந்தே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் இவ்வாறு எச்சரித்தனர். எங்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், அவர்களை குழப்பிவிடும் என்பதால் பைபிளிலிருந்து எதையும் வாசிக்க எங்களை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியிருந்தனர். ஒரு பகுதியில் நாங்கள் ஏராளமான பிரசுரங்களை விநியோகித்தோம்; ஆனால், ஒவ்வொரு வீடாக எங்களை பின்தொடர்ந்து வந்த ஒரு பாதிரியார் அவற்றை எல்லாம் வாங்கிவிட்டார். ஒரு நாள், அந்தப் பாதிரியாரின் வீட்டில் அமர்ந்து சம்பாஷித்தபோது எங்கள் புத்தகங்கள் ஏராளம் அவரிடம் இருப்பதை கவனித்தோம்.
வெகு சீக்கிரத்திலேயே, உள்ளூர் அதிகாரிகளும் எங்கள் வேலையை எதிர்க்க ஆரம்பித்தனர். கம்யூனிஸ்டுகளுடன் எங்களுக்கு தொடர்பு இருக்குமோ என சந்தேகித்தனர்; இதற்கு பாதிரிமார்களின் தூண்டுதல்தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, எங்களது கைநாட்டுகள் எடுக்கப்பட்டன. நாங்கள் சந்தித்த சிலரும் விசாரிக்கப்பட்டனர். இத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
அங்கு வாழ்ந்த ஓவாம்போ, ஹெரெரோ, நாமா போன்ற பழங்குடி மக்களுக்கு பைபிளின் செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற தணியாத ஆவலை ஆரம்பத்திலிருந்தே வளர்த்து வந்தோம். ஆனால், அது சுலபமாக இருக்கவில்லை. அக்காலங்களில், தென் ஆப்பிரிக்காவின் இனவெறி பிடித்த அரசாங்கமே தென்மேற்கு ஆப்பிரிக்காவிலும் ஆட்சி நடத்தியது. நாங்கள் வெள்ளையர்களாக இருந்ததால் அரசாங்க அனுமதியின்றி கருப்பர்கள் வசிக்கும் பகுதிகளில் சாட்சிகொடுக்க முடியாது. நாங்கள் அவ்வப்போது விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தோம், ஆனாலும் அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்தனர்.
வெளிநாட்டு நியமிப்பில் இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட பிறகு எங்களுக்கு ஓர் ஆச்சரியம். கார்லீ கர்ப்பமானாள். அக்டோபர் 1955-ல் எங்கள் மகள் ஷார்லட் பிறந்தாள். நாங்கள் இனியும் மிஷனரிகளாக சேவிக்க முடியாது என்றாலும் எனக்கு பகுதிநேர வேலை கிடைத்ததால் சில காலம் பயனியராக சேவித்தேன்.
எங்கள் ஜெபங்களுக்கு பதில்
1960-ல் மற்றொரு சவாலை சந்தித்தோம். கார்லீயின் தாய் மிகவும் வியாதியாய் இருப்பதாகவும் அவள் வரவில்லை என்றால் தன் தாயை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம் என்றும் அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. ஆகவே, தென்மேற்கு ஆப்பிரிக்காவை விட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவில் குடியேற தீர்மானித்தோம். அப்போதுதான் ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. நாங்கள் செல்லவிருந்த அதே வாரம், காடூடூரா என்ற கருப்பர்கள் வாழும் பகுதிக்குள் நுழைய உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்தது. இப்போது என்ன செய்வது? ஏழு வருடம் போராடி பெற்ற அனுமதியை திரும்ப கொடுத்துவிட்டு போவதா? நாங்கள் ஆரம்பித்த வேலையை மற்றவர்கள் செய்து முடிப்பார்கள் என்று நினைப்பது மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால், இது யெகோவாவின் ஆசீர்வாதம் அல்லவா? எங்கள் ஜெபங்களுக்கு கிடைத்த பதில் அல்லவா?
உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். நாங்கள் அனைவருமே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டால் நிரந்தர குடியுரிமைக்காக போராடியது வீணாகிவிடுமே என்பதால் நான் போகாதிருப்பதே நல்லது என்று தீர்மானித்தேன். அடுத்த நாளே என்னுடைய கப்பல் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு கார்லீயையும் ஷார்லட்டையும் நீண்ட விடுமுறைக்காக ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தேன்.
அவர்கள் சென்றிருந்த சமயத்தில் கருப்பர்கள் வாழும் பகுதியில் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். ஏராளமானோர் அக்கறை காண்பித்தனர். கார்லீயும் ஷார்லட்டும் திரும்பி வந்தபோது கருப்பர் பகுதியிலிருந்த அநேகர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர்.
இந்தச் சமயத்திற்குள்ளாக ஒரு பழைய காரை வாங்கினேன். அக்கறை காட்டுவோரை கூட்டங்களுக்கு அழைத்து வர அதையே உபயோகித்தேன். ஒவ்வொரு கூட்டத்திற்காகவும் நான்கு, ஐந்து முறை சென்றுவந்து, ஒவ்வொரு முறையும் ஏழு, எட்டு அல்லது ஒன்பது பேரை கூட்டிக்கொண்டு வந்தேன். காரிலிருந்து கடைசி நபர் வெளியே வந்த பிறகு, “சீட்டுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று கார்லீ கிண்டலடிப்பாள்.
பிரசங்க வேலையில் அதிக பலன் கிடைக்க பழங்குடி மக்களின் மொழியிலேயே பிரசுரங்கள் தேவைப்பட்டன. ஆகவே, புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை ஹெரெரோ, நாமா, டோங்கா, க்வன்யாமா என்ற நான்கு உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யும் விசேஷித்த சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. எங்களோடு பைபிளை படித்த, கல்வி கற்றோரே அதை மொழிபெயர்த்தனர்; என்றாலும், ஒவ்வொரு வாக்கியமும் துல்லியமாக மொழிபெயர்க்கப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்ள நானும் அவர்களோடு வேலை செய்தேன். நாமா மொழியின் சொற்தொகுதி மிகவும் சிறியது. உதாரணமாக, “ஆரம்பத்தில் ஆதாம் பரிபூரணனாக இருந்தான்” என்பதை விளக்க முயன்றேன். மொழிபெயர்ப்பாளரோ “பரிபூரணன்” என்பதற்கு நாமா மொழியில் வார்த்தை கிடைக்கவில்லை என்று தலையை சொறிந்தார். கடைசியில், “கிடைத்துவிட்டது. ஆரம்பத்தில் ஆதாம் பழுத்த பீச் பழம்போல இருந்தான்” என்று கூறினார்.
நியமிக்கப்பட்ட வீட்டில் திருப்தி
இப்போது நமிபியா என அழைக்கப்படும் இந்த நாட்டில் நாங்கள் குடியேறி சுமார் 49 வருடங்கள் ஓடிவிட்டன. கருப்பர் பகுதிகளுக்கு செல்ல இப்போது அனுமதி தேவையில்லை. இன பாகுபாடற்ற அரசியல் அமைப்பு அடிப்படையில் நமிபியாவை இப்போது ஒரு புதிய அரசாங்கம் ஆளுகிறது. தற்போது விண்ட்ஹோக்கில் நான்கு பெரிய சபைகள் உள்ளன. அவை வசதியான ராஜ்ய மன்றங்களில் கூடிவருகின்றன.
“உங்களுடைய வெளிநாட்டு நியமிப்பிலேயே தங்கிவிடுங்கள்” என கிலியட்டில் கேட்ட வார்த்தைகளை நாங்கள் அடிக்கடி நினைவுகூருவோம். காரியங்களை யெகோவா வழிநடத்திய விதத்தைக் காண்கையில், நாங்கள் இந்த வெளிநாட்டு நியமிப்பில் தங்கிவிட வேண்டும் என்பதே அவருடைய சித்தமாயிருந்ததாக உறுதியாய் நம்புகிறோம். ஆர்வத்திற்குரிய பல்வேறு பண்பாடுகளைப் பின்பற்றும் சகோதரர்களை நேசிக்க கற்றிருக்கிறோம். அவர்களுடைய சுக துக்கத்தில் அவர்களோடு பங்கு கொண்டிருக்கிறோம். எங்கள் காரில் கும்பலாக கூட்டங்களுக்கு அழைத்து வந்த புதியவர்களில் சிலர் இப்போது தங்கள் சபைகளில் தூண்களாக சேவிக்கின்றனர். இந்த விஸ்தாரமான தேசத்திற்கு 1953-ல் நாங்கள் வந்தபோது நற்செய்தியை பிரங்கித்த உள்ளூர் பிரஸ்தாபிகள் பத்து பேர்கூட இல்லை. இப்போதோ பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,200-க்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. நாங்களும் மற்றவர்களும் ‘நட்டு நீர் பாய்ச்சியதை’ யெகோவாவின் வாக்குறுதிக்கு இசைவாக அவரே விளையச் செய்திருக்கிறார்.—1 கொரிந்தியர் 3:6.
முதலில் ஆஸ்திரேலியாவில் செய்த, இப்போது நமிபியாவில் செய்கிற பல வருட ஊழியத்தை நினைத்துப் பார்க்கையில் கார்லீக்கும் எனக்கும் பரம திருப்தியே ஏற்படுகிறது. யெகோவாவின் சித்தத்தை இப்போதும் எப்போதும் செய்ய அவரே எங்களுக்கு தொடர்ந்து பலத்தை கொடுப்பார் என்று நம்புகிறோம், அதற்காக ஜெபிக்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கடினமான நியமிப்பில் வால்ட்ரன் தம்பதியினர் எவ்வாறு சமாளித்தனர் என்பதைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் விவரிப்பு 1952, டிசம்பர் 1, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 707-8-ல் காணப்படுகிறது; அதில் இவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
[பக்கம் 26, 27-ன் படம்]
ஆஸ்திரேலியாவிலுள்ள ராக்ஹாம்ப்டனில் ஊழியம் செய்ய மாறிச் செல்லுதல்
[பக்கம் 27-ன் படம்]
கிலியட் பள்ளிக்கு போகும் வழியில் ஒரு துறைமுகத்தில்
[பக்கம் 28-ன் படம்]
நமிபியாவில் சாட்சி கொடுப்பது அதிக மகிழ்ச்சியளிக்கிறது