நற்செய்தியில் உங்களுக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறதா?
“கடவுளுடைய ராஜ்யம் சமீபித்துவிட்டது. ஜனங்களே, மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்”—மாற்கு 1:15, Nw.
1, 2. மாற்கு 1:14, 15-ஐ எப்படி விளக்குவீர்கள்?
அது பொ.ச. 30-ம் வருடம். அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஊழியத்தை இயேசு கிறிஸ்து கலிலேயாவில் ஆரம்பித்திருந்த வருடம். அவர் ‘கடவுளுடைய நற்செய்தியை’ பிரசங்கித்துக் கொண்டிருந்தார். “குறித்த காலம் நிறைவேறிவிட்டது, கடவுளுடைய ராஜ்யமும் சமீபித்துவிட்டது. ஜனங்களே, மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்று அவர் சொன்னது கலிலேயர் பலரை தூண்டியது.—மாற்கு 1:14, 15, NW.
2 இயேசு தம் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கும், கடவுளுடைய அங்கீகாரத்தை அளிக்கும் தீர்மானத்தை ஜனங்கள் எடுப்பதற்கும் “குறித்த காலம்” வந்திருந்தது. (லூக்கா 12:54-56) ‘கடவுளுடைய ராஜ்யம் சமீபித்திருந்தது,’ ஏனென்றால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு அப்போது அங்கு இருந்தார். அவருடைய பிரசங்க வேலை மனந்திரும்பும்படி நல்மனமுள்ளவர்களை தூண்டியது. ஆனால், ‘நற்செய்தியில் விசுவாசமிருப்பதை’ அவர்கள் எப்படி காட்டினார்கள், நாம் எப்படி காட்டுகிறோம்?
3. நற்செய்தியில் விசுவாசமிருப்பதை எதன் மூலம் ஜனங்கள் காண்பித்திருக்கிறார்கள்?
3 இயேசுவைப் போல அப்போஸ்தலனாகிய பேதுருவும் மனந்திரும்பும்படி ஜனங்களை உந்துவித்தார். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று எருசலேமிலிருந்த யூதர்களிடம் பேதுரு பேசுகையில், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் [“முழுக்காட்டுதல்,” NW] பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று சொன்னார். ஆயிரக்கணக்கானோர் மனந்திரும்பி, முழுக்காட்டுதல் பெற்று இயேசுவின் சீஷரானார்கள். (அப்போஸ்தலர் 2:38, 41; 4:4) அதைப் போலவே பொ.ச. 36-ல், மனந்திரும்பிய புறஜாதியாரும் முழுக்காட்டுதல் பெற்று இயேசுவின் சீஷரானார்கள். (அப்போஸ்தலர் 10:1-48) நம் நாளிலும் ஆயிரக்கணக்கானோர் நற்செய்தியில் விசுவாசம் வைக்கிறார்கள்; அது மனந்திரும்பி, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற அவர்களை தூண்டுகிறது. இவர்கள் இரட்சிப்பின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, நீதியை கடைப்பிடித்து, கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாக நிலைநிற்கையும் எடுத்திருக்கிறார்கள்.
4. விசுவாசம் என்பது என்ன?
4 ஆனால் விசுவாசம் என்பது என்ன? “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்கள் மீது உறுதியான எதிர்பார்ப்பு, பார்க்க முடியாவிட்டாலும் உண்மையானவற்றை உறுதியாக நம்புவதற்கு அத்தாட்சி” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 11:1, NW) கடவுள் தம் வார்த்தையில் கொடுத்துள்ள எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறிவிட்டதைப் போன்ற உறுதியை நம் விசுவாசம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சொத்து நம்முடையது என்பதற்கான ஆதாரப் பத்திரத்தை வைத்திருப்பதைப் போல இருக்கிறது. அதோடு, விசுவாசம் என்பது பார்க்க முடியாத காரியங்களை உறுதியாக நம்புவதற்கு அத்தாட்சியாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட காரியங்களைப் பார்த்திராவிட்டாலும் அவை உண்மையானவை என்று நம்புவதற்கான உறுதியை நம் மனமும் இருதயமும் அளிக்கின்றன; அதாவது நம் மனம் அதை புரிந்துகொள்வதன் மூலமும், நம் இருதயம் போற்றுதலால் நிரம்புவதன் மூலமும் நமக்கு அந்த உறுதியை அளிக்கின்றன.—2 கொரிந்தியர் 5:6; எபேசியர் 1:18, 19.
விசுவாசம் தேவை!
5. விசுவாசம் ஏன் மிக முக்கியம்?
5 நாம் ஆன்மீக தேவையுடன் பிறந்திருக்கிறோம், ஆனால் விசுவாசத்துடன் பிறக்கவில்லை. சொல்லப்போனால், “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லை.” (2 தெசலோனிக்கேயர் 3:2) என்றாலும், கடவுளுடைய வாக்குறுதிகளுக்கு சுதந்தரவாளிகளாக ஆக வேண்டுமெனில் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசம் தேவை. (எபிரெயர் 6:11) விசுவாசத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களைப் பற்றி பவுல் குறிப்பிட்ட பின்பு, “மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கப் பாரமான யாவற்றையும் நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவத்தையுந் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவையே நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்” என எழுதினார். (எபிரெயர் 12:1, 2, திருத்திய மொழிபெயர்ப்பு) ‘நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவம்’ என்ன? அதுதான் விசுவாசக்குறைவு, ஒரு சமயம் நமக்கிருந்த விசுவாசத்தை இழந்துவிடுவதையும் அது குறிக்கலாம். பலமான விசுவாசத்தை காத்துவர, நாம் ‘இயேசுவையே நோக்கியிருந்து’ அவருடைய மாதிரியை பின்பற்ற வேண்டும். அதோடு, ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகியிருப்பதும், மாம்சத்தின் கிரியைகளோடு போராடுவதும், பொருளாசை, உலக தத்துவங்கள், வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்கள் ஆகியவற்றை தவிர்ப்பதும் அவசியம். (கலாத்தியர் 5:19-21; கொலோசெயர் 2:8; 1 தீமோத்தேயு 6:9, 10; யூதா 3, 4) அதுமட்டுமல்ல, கடவுள் நம்மோடிருக்கிறார் என்றும் அவருடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகள் உண்மையில் பிரயோஜனமுள்ளவை என்றும் நம்ப வேண்டும்.
6, 7. விசுவாசத்திற்காக ஜெபிப்பது ஏன் சரியானது?
6 நம்முடைய சொந்த மனவலிமையால் விசுவாசத்தை உருவாக்க முடியாது. விசுவாசம் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியின் கனிகளில் ஒன்று. (கலாத்தியர் 5:22, 23) அப்படியானால், நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? “நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என்று இயேசு சொன்னார். (லூக்கா 11:13) ஆகவே, பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும்; மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலும்கூட கடவுளுடைய சித்தத்தை செய்வதற்குத் தேவையான விசுவாசத்தை அது நம்மில் உருவாக்கலாம்.—எபேசியர் 3:20.
7 விசுவாசத்தை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காக ஜெபிப்பது சரியானதே. ஒரு சிறுவனைப் பிடித்திருந்த பேயை இயேசு துரத்துவதற்கு சற்று முன்பு அந்தப் பிள்ளையின் தகப்பன், “எனக்கு விசுவாசம் உண்டு! இன்னும் எந்த விதத்தில் விசுவாசம் காட்ட வேண்டுமென காண்பியும்” என்று கேட்டார். (மாற்கு 9:24, NW) “எங்களுக்கு அதிக விசுவாசத்தைத் தாருமென” இயேசுவின் சீஷர்கள் கேட்டார்கள். (லூக்கா 17:5, தி.மொ.) ஆகவே, விசுவாசத்திற்காக நம்பிக்கையோடு கடவுளிடம் ஜெபிப்போமாக.—1 யோவான் 5:14.
கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பது முக்கியம்
8. கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பது நமக்கு எப்படி உதவும்?
8 இயேசு தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு சற்று முன்பு, சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.” (யோவான் 14:1) கிறிஸ்தவர்களாகிய நமக்கு கடவுளிடத்திலும், அவருடைய குமாரனிடத்திலும் விசுவாசம் இருக்கிறது. ஆனால் கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் இருக்கிறதா? மிகச் சிறந்த ஆலோசனையையும் வழிநடத்துதலையும் அளிக்கிறது என்ற முழு நம்பிக்கையுடன் அதைப் படித்து வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நாம் பயனடையலாம்.—எபிரெயர் 4:12.
9, 10. விசுவாசத்தைப் பற்றி யாக்கோபு 1:5-8-ல் சொல்லப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்?
9 நாம் அபூரணராக இருப்பதால் வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை எதிர்ப்படுகிறோம். என்றாலும், கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பது உண்மையிலேயே நமக்கு உதவும். (யோபு 14:1) உதாரணமாக, ஒரு பிரச்சினையை சமாளிக்க நமக்கு வழி தெரியவில்லை என வைத்துக்கொள்வோம். அச்சமயத்தில், கடவுளுடைய வார்த்தை நமக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறது: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.”—யாக்கோபு 1:5-8.
10 நாம் ஞானத்தில் குறைவுபட்டாலும் அதற்காக ஜெபித்தாலும் யெகோவா தேவன் கடிந்துகொள்ள மாட்டார். மாறாக, அப்பிரச்சினையை சரியாக சீர்தூக்கிப் பார்ப்பதற்கு நமக்கு உதவுவார். எப்படியெனில், நமக்கு பிரயோஜனமான வேத வசனங்களை சக விசுவாசிகள் எடுத்துக் காட்டலாம், அல்லது பைபிள் வாசிக்கையில் அவை நம் கண்ணில் தட்டுப்படலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் யெகோவாவின் பரிசுத்த ஆவி நம்மை வழிநடத்தலாம். ‘எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்டுக்கொண்டிருந்தால்’ நம் பரம பிதா அப்பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ஞானத்தை நமக்கு அருளுவார். ஆனால் காற்றில் அடிபட்டு அலைகிற கடல் அலையைப் போல் இருந்தால், கடவுளிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஜெபத்திலோ பிற வழிகளிலோ ஏன் கடவுளிடத்தில் விசுவாசத்தை காட்டுவதிலும்கூட நாம் இருமனதோடு நிலையற்றவர்களாக இருக்கிறோம் என்பதையே இது அர்த்தப்படுத்தும். ஆகவே, கடவுளுடைய வார்த்தையிலும் அதன் போதனைகளிலும் உறுதியான விசுவாசம் வைப்பது அவசியம். அது எவ்வாறு நமக்கு உதவியையும் வழிநடத்துதலையும் அளிக்கிறது என்பதற்கு சில உதாரணங்களை நாம் காணலாம்.
விசுவாசமும் அடிப்படை தேவைகளும்
11. கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பது நம் அன்றாட தேவைகளைக் குறித்ததில் நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது?
11 நாம் அடிப்படை வசதிகளின்றி வறுமையில் தத்தளிக்கிறோம் என்றால் என்ன செய்வது? கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பது, யெகோவா நம் அன்றாட தேவைகளை கவனிப்பார் என்ற உறுதியை அளிக்கிறது; அதோடு அவரை நேசிப்போர் அனைவருக்கும் புதிய உலகில் அருமையான உணவுகளை வாரி வழங்குவார் என்ற நிச்சயமான எதிர்பார்ப்பையும் அளிக்கிறது. (சங்கீதம் 72:16; லூக்கா 11:2, 3) உணவுப் பஞ்சம் நிலவிய சமயத்தில் தமது தீர்க்கதரிசியாகிய எலியாவுக்கு யெகோவா எப்படி உணவளித்தார் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கலாம். பிற்பாடு, கடவுள் அற்புதகரமாக மாவும் எண்ணெய்யும் குறையாமல் இருக்கும்படி செய்ததால் ஒரு பெண்ணும் அவளுடைய மகனும் எலியாவும் உயிர்பிழைத்தார்கள். (1 இராஜாக்கள் 17:2-16) எருசலேமை பாபிலோனியர் முற்றுகையிட்ட சமயத்தில் எரேமியா தீர்க்கதரிசியை யெகோவா இதேவிதமாக போஷித்தார். (எரேமியா 37:21) எரேமியாவுக்கும் எலியாவுக்கும் சாப்பிடுவதற்கு ஏராளமானவை கிடைக்காவிட்டாலும் யெகோவா அவர்களைக் காத்து பராமரித்தார். அவரில் விசுவாசம் வைப்போருக்கு இன்றும் அவர் இதையே செய்கிறார்.—மத்தேயு 6:11, 25-34.
12. வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை பெற்றுக்கொள்ள விசுவாசம் எப்படி உதவும்?
12 விசுவாசமும் பைபிள் நியமங்களை பொருத்துவதும் நம்மை செல்வந்தராக்காது, ஆனால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை பெற்றுக்கொள்ள நமக்கு உதவும். உதாரணமாக, யோக்கியமானவர்களாக, திறமையானவர்களாக, கடுமையாக உழைப்பவர்களாக இருக்கும்படி பைபிள் நமக்கு ஆலோசனை தருகிறது. (நீதிமொழிகள் 22:29, NW; பிரசங்கி 5:18, 19; 2 கொரிந்தியர் 8:21) உழைப்பாளி என நற்பெயர் எடுப்பதன் மதிப்பை ஒருபோதும் துச்சமாக எடைபோடக் கூடாது. நல்ல வேலை கிடைப்பது அரிதாக இருக்கிற இடங்களிலும்கூட யோக்கியமாக நடந்து கொள்கிறவர்களுக்கு, திறமையானவர்களுக்கு, கடுமையாக உழைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவ்வாறு வேலை செய்பவர்கள் பணக்காரர்களாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் அத்தியாவசியமானவை அவர்களுக்கு கிடைக்கிறது, தாங்களே உழைத்து சாப்பிடுகிறோம் என்ற மனதிருப்தியும் கிடைக்கிறது.—2 தெசலோனிக்கேயர் 3:11, 12
துக்கத்தை தாங்குவதற்கு விசுவாசம் உதவுகிறது
13, 14. துக்கத்தைத் தாங்கிக்கொள்ள விசுவாசம் நமக்கு எப்படி உதவும்?
13 நாம் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் துக்கப்படுவது இயல்பானது என கடவுளுடைய வார்த்தை யதார்த்தமாகவே சொல்கிறது. விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த முற்பிதாவாகிய ஆபிரகாம் தன் அருமை மனைவி சாராள் மரித்தபோது புலம்பி அழுதார். (ஆதியாகமம் 23:2) தன் மகன் அப்சலோம் இறந்துபோனதை தாவீது கேட்டபோது மனம் கசந்து அழுதார். (2 சாமுவேல் 18:33) பரிபூரண மனிதரான இயேசுவும்கூட தம் சிநேகிதன் லாசரு இறந்தபோது கண்ணீர் விட்டார். (யோவான் 11:35, 36) அன்பானவர் இறந்துவிடுகையில் நாமும் துயரக்கடலில் ஏறக்குறைய ஆழ்ந்துவிடலாம்; ஆனால் கடவுளுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பது அந்தத் துக்கத்தை தாங்கிக்கொள்ள நமக்கு உதவும்.
14 ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்’ என பவுல் சொன்னார். (அப்போஸ்தலர் 24:15) மரித்த திரளானோர் மீண்டும் உயிரடைவதற்கு கடவுள் செய்துள்ள ஏற்பாட்டில் நாம் விசுவாசம் வைப்பது அவசியம். (யோவான் 5:28, 29) ஆபிரகாமும் சாராளும், ஈசாக்கும் ரெபெக்காளும், யாக்கோபும் லேயாளும் அவ்வாறு உயிரடைபவர்களில் சிலர்; அவர்கள் இப்போது மரணமெனும் நித்திரையில் இருக்கிறார்கள், கடவுளுடைய புதிய உலகில் உயிர்த்தெழுதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். (ஆதியாகமம் 49:29-32) நம் நேசத்துக்குரியவர்கள் பூமியில் வாழ்வதற்கு மரணமெனும் நித்திரையிலிருந்து எழுந்து வருகையில் உண்டாகும் அந்த சந்தோஷத்தை என்னவென்று சொல்வது! (வெளிப்படுத்துதல் 20:11-15) அதே நேரத்தில் விசுவாசம் எல்லாவித துயரத்தையும் போக்கிவிடாது; ஆனால் இழப்பினால் ஏற்படும் துக்கத்தை தாங்கிக்கொள்ள உதவுகிற கடவுளைவிட்டு விலகிப் போகாதிருக்கச் செய்யும்.—சங்கீதம் 121:1-3; 2 கொரிந்தியர் 1:3.
விசுவாசம் மனச்சோர்வுற்றோரை பலப்படுத்துகிறது
15, 16. (அ)விசுவாசமுடையோர் மனமொடிந்து போவது புதிதல்ல என்று நாம் ஏன் சொல்கிறோம்? (ஆ) மனச்சோர்வை சமாளிக்க என்ன செய்யலாம்?
15 கடவுளை நம்புகிறவர்கள்கூட மனச்சோர்வுக்கு ஆளாகலாம் என கடவுளுடைய வார்த்தை காண்பிக்கிறது. யோபுவுக்கு கடுமையான சோதனை வந்தபோது, கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக உணர்ந்தார். (யோபு 29:2-5) எருசலேமும் அதின் மதில்களும் பாழடைந்த நிலையில் இருந்தது நெகேமியாவுக்கு துக்கத்தை ஏற்படுத்தியது. (நெகேமியா 2:1-3) இயேசுவை மறுதலித்த பின்பு பேதுரு துக்கம் தாளாமல் ‘மனங்கசந்து அழுதார்.’ (லூக்கா 22:62) பவுலும் ‘திடனற்றவர்களை தேற்றும்படி’ தெசலோனிக்கேயா சபையிலிருந்த சக விசுவாசிகளை அறிவுறுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆகவே இன்றும்கூட விசுவாசமுள்ளவர்கள் மனமொடிந்து போவது புதிதல்ல. அப்படியானால் மனச்சோர்வை சமாளிக்க நாம் என்ன செய்யலாம்?
16 நாம் பயங்கர பிரச்சினைகளை எக்கச்சக்கமாக எதிர்ப்படுவதால் மனச்சோர்வடைந்து விடலாம். அந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் மொத்தமாக எடுத்துக்கொள்ளாமல் பைபிள் நியமங்களை பின்பற்றி ஒவ்வொன்றாக தீர்க்கலாம். அவ்வாறு தீர்ப்பது மனச்சோர்விலிருந்து நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவலாம். சமநிலையோடு காரியங்களை செய்வதும் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வதும்கூட உதவியாக இருக்கலாம். ஆனால் ஒரு காரியம் நிச்சயம்: கடவுளிலும் அவரது வார்த்தையிலும் விசுவாசம் வைப்பது நம் ஆன்மீக நலனை மேம்படுத்துகிறது; ஏனெனில் அவர் உண்மையிலேயே நம்மை காத்து பராமரிக்கிறார் என்ற திடநம்பிக்கையை அது பலப்படுத்துகிறது.
17. யெகோவா நம்மை கவனித்துக்கொள்கிறார் என்பதை நாம் எப்படி அறிவோம்?
17 “ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் [“கவனிக்கிறவரானபடியால்,” NW] உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தையை பேதுரு அளிக்கிறார். (1 பேதுரு 5:6, 7) “விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் [யெகோவா] தூக்கிவிடுகிறார்” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 145:14) இந்த உறுதியளிக்கும் வார்த்தைகளை நாம் நம்ப வேண்டும், ஏனெனில் இவை கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகின்றன. மனச்சோர்வு நம்மை ஆட்டிப்படைத்தாலும் அன்புள்ள பரம தகப்பனிடம் நம் கவலைகளையெல்லாம் போட்டுவிடலாம் என்பது நம் விசுவாசத்தை எவ்வளவாய் பலப்படுத்துகிறது!
விசுவாசமும் பிற சோதனைகளும்
18, 19. வியாதியை சகித்துக்கொள்வதற்கும் வியாதிப்பட்ட உடன் விசுவாசிகளை தேற்றுவதற்கும் விசுவாசம் எப்படி நமக்கு உதவுகிறது?
18 நாமோ நமக்குப் பிரியமானவர்களோ கொடிய வியாதியால் அவதியுறுவது பெரும் சோதனையாக இருக்கலாம். எப்பாப்பிரோதீத்து, தீமோத்தேயு, துரோப்பீமு போன்றவர்கள் அற்புதமாய் சுகம் பெற்றதாக பைபிள் குறிப்பிடுகிறதில்லை; என்றாலும் அவர்களுடைய வியாதியை தாங்கிக்கொள்வதற்கு யெகோவா உதவினார். (பிலிப்பியர் 2:25-30; 1 தீமோத்தேயு 5:23; 2 தீமோத்தேயு 4:20) அதோடு, ‘சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனைக்’ குறித்ததில் ‘படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்’ என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 41:1-3) உடல்நலமற்ற உடன் விசுவாசிகளை தேற்றுவதற்கு சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள் நமக்கு எப்படி உதவலாம்?
19 வியாதிப்பட்டோருக்காக ஜெபம் செய்வதும் அவர்களோடு சேர்ந்து ஜெபிப்பதும் ஆவிக்குரிய விதத்தில் உதவியளிப்பதற்கு ஒரு வழியாகும். இன்று அற்புதகரமாக சுகப்படுத்தும்படி நாம் கேட்காவிட்டாலும், வியாதியை சகித்துக்கொள்வதற்கு போதிய மனவலிமையையும் பலவீனமான அந்த சூழ்நிலையில் தேவையான ஆவிக்குரிய பலத்தையும் அருளும்படி கேட்கலாம். அப்போது யெகோவா அவர்களை தாங்கி ஆதரிப்பார்; ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ காலத்திற்காக காத்திருப்பதன் மூலம் அவர்களுடைய விசுவாசமும் பலப்படும். (ஏசாயா 33:24) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து மூலமாகவும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாகவும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் பாவம், வியாதி, மரணம் ஆகியவற்றிலிருந்து நித்திய விடுதலை பெறப்போவதை அறிவதில் எவ்வளவு ஆறுதல்! இந்த மகத்தான எதிர்பார்ப்புகளுக்காக, ‘நம் நோய்களையெல்லாம் குணமாக்கும்’ யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம்.—சங்கீதம் 103:1-3; வெளிப்படுத்துதல் 21:1-5.
20. வயோதிகம் எனும் ‘தீங்கு நாட்களை’ சகிப்பதற்கு விசுவாசம் உதவுமென ஏன் சொல்லலாம்?
20 வயோதிகம் எனும் ‘தீங்கு நாட்களில்’ ஆரோக்கியமும் பலமும் குன்றிவிடுகையிலும்கூட அதை சகிப்பதற்கு விசுவாசம் நமக்கு உதவலாம். (பிரசங்கி 12:1-7) ஆகவே, ‘கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கம் [“நம்பிக்கை,” NW] . . . முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளி விடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்’ என்று முதுமை எய்திய சங்கீதக்காரன் பாடிய விதமாக நம் மத்தியிலுள்ள வயோதிபர்களும் ஜெபம் செய்யலாம். (சங்கீதம் 71:5, 9) யெகோவாவின் துணை தேவை என்பதை சங்கீதக்காரன் உணர்ந்தார்; பல வருடங்களாக கடவுளுடைய சேவையை செய்து இப்போது முதிர்வயதை எட்டிய சக கிறிஸ்தவர்கள் பலரும் அவ்வாறே உணருகிறார்கள். அவர்களுக்கு விசுவாசம் இருப்பதால், யெகோவாவுடைய நித்திய புயங்களின் ஆதரவு எப்போதும் இருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கலாம்.—உபாகமம் 33:27.
கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தை காத்துக்கொள்ளுங்கள்
21, 22. கடவுளோடு உள்ள உறவை நம் விசுவாசம் எப்படி பாதிக்கும்?
21 நற்செய்தியிலும் கடவுளுடைய வார்த்தையிலும் விசுவாசம் வைப்பது யெகோவாவிடம் மிக அதிகமாக நெருங்கிவருவதற்கு துணைபுரிகிறது. (யாக்கோபு 4:8) ஆம், அவர் நமது சர்வலோக பேரரசர், அவர் நம் படைப்பாளரும் தகப்பனும்கூட. (ஏசாயா 64:8; மத்தேயு 6:9; அப்போஸ்தலர் 4:24) “நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று” சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 89:26) யெகோவாவிலும் ஏவுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் வைத்தால், நாமும்கூட அவரை ‘நம் இரட்சிப்பின் கன்மலையாக’ கருதலாம். எப்பேர்ப்பட்ட பாக்கியம் அது!
22 ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய அவர்களது கூட்டாளிகளுக்கும் யெகோவா தகப்பனாக இருக்கிறார். (ரோமர் 8:15) அந்தப் பரலோக தகப்பனிடம் விசுவாசம் வைத்தால் நாம் ஒருபோதும் ஏமாறமாட்டோம். “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என தாவீது சொன்னார். (சங்கீதம் 27:10) அத்துடன், யெகோவா “தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிட மாட்டார்” என்ற உறுதியும் நமக்கு இருக்கிறது.—1 சாமுவேல் 12:22.
23. யெகோவாவுடன் நிரந்தரமான உறவை அனுபவித்து மகிழ நமக்கு என்ன தேவை?
23 ஆகவே, யெகோவாவுடன் நிரந்தரமான உறவை அனுபவித்து மகிழ நற்செய்தியில் நமக்கு விசுவாசம் தேவை; வேதவசனங்களை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அவை உண்மையில் கடவுளுடைய வசனங்களே. (1 தெசலோனிக்கேயர் 2:13) நமக்கு யெகோவா பேரில் முழுமையான விசுவாசம் இருப்பதும் அவருடைய வார்த்தை நம் பாதைக்கு வெளிச்சமாய் இருக்க அனுமதிப்பதும் அவசியம். (சங்கீதம் 119:105; நீதிமொழிகள் 3:5, 6) அவருடைய பரிவு, இரக்கம், ஆதரவு ஆகியவற்றில் முழு நம்பிக்கை வைத்து நாம் அவரிடம் ஜெபிக்கையில் நம் விசுவாசம் அதிகரிக்கும்.
24. ரோமர் 14:8-ல் என்ன ஆறுதலளிக்கும் கருத்து கொடுக்கப்பட்டுள்ளது?
24 நித்தியத்துக்கும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க விசுவாசம் நம்மை தூண்டியது. உறுதியான விசுவாசம் இருப்பதால், அப்படியே மரிக்க நேர்ந்தாலும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட அவருடைய ஊழியர்களாகவே நாம் இருக்கிறோம். ஆம், “பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.” (ரோமர் 14:8) கடவுளுடைய வார்த்தையில் நம் நம்பிக்கையை காத்துவருகையில் இந்த ஆறுதலளிக்கும் கருத்தை எப்போதும் நம் இருதயத்தில் வைத்து தொடர்ந்து நற்செய்தியை விசுவாசிப்போமாக.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• விசுவாசம் என்பது என்ன, இந்தப் பண்பு நமக்கு ஏன் தேவை?
• நற்செய்தியிலும் கடவுளுடைய வார்த்தையிலும் நாம் விசுவாசம் வைப்பது ஏன் மிக முக்கியம்?
• பலதரப்பட்ட சோதனைகளை சந்திக்க விசுவாசம் எப்படி துணைபுரிகிறது?
• விசுவாசத்தை காத்துவர எது நமக்கு உதவும்?
[பக்கம் 12-ன் படங்கள்]
எரேமியாவுக்கும் எலியாவுக்கும் விசுவாசம் இருந்ததால் யெகோவா அவர்களை தாங்கி ஆதரித்தார்
[பக்கம் 13-ன் படங்கள்]
யோபு, பேதுரு, மற்றும் நெகேமியாவுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது
[பக்கம் 15-ன் படங்கள்]
நாம் யெகோவாவுடன் நிலையான உறவை அனுபவித்து மகிழ நற்செய்தியில் விசுவாசம் வைக்க வேண்டும்