மற்றவர்களை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள்
“மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் பார்ப்பதில்லை.”—1 சாமுவேல் 16:7, Nw.
1, 2. எலியாபை குறித்து யெகோவாவின் நோக்குநிலை எப்படி சாமுவேலின் நோக்குநிலையிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஒரு ரகசிய வேலைக்காக பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில் சாமுவேல் தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். ஈசாய் என்பவரின் வீட்டிற்கு சென்று அவருடைய குமாரரில் ஒருவரை இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி அந்தத் தீர்க்கதரிசியிடம் கட்டளையிட்டார். ஈசாயின் முதல் குமாரன் எலியாபை பார்த்த மாத்திரத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவரேதான், கண்டுபிடித்துவிட்டோம் என சாமுவேல் நினைத்தார். ஆனால் யெகோவா சொன்னார்: “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் பார்ப்பதில்லை; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:6, 7; NW) எலியாபை யெகோவா பார்த்த விதமாக சாமுவேல் பார்க்க தவறிவிட்டார்.a
2 பிறரை தவறாக எடைபோடுவது மனிதருக்கு எவ்வளவு சுலபம்! பார்வைக்கு நல்லவர்களாக, ஆனால் உள்ளூர ஒழுக்க தராதரங்களில் குறைவுபட்டவர்களாக இருப்பவர்களைக் கண்டு நாம் ஏமாந்துவிடுவது ஒரு பக்கம். மறுபக்கம், நல்மனமுள்ளவர்களின் சில தனிப்பண்புகள் நமக்கு எரிச்சலூட்டலாம், இதனால் அவர்களைப் பற்றி மனதிற்குள்ளே ஒருவேளை நாம் கடுமையாகவும் கறாராகவும் தப்புக் கணக்கு போட்டுவிடக்கூடும்.
3, 4. (அ) இரண்டு கிறிஸ்தவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படுமேயானால் அவர்கள் இருவரும் எதைச் செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும்? (ஆ) சக விசுவாசியிடம் நமக்கு பயங்கரமான மனஸ்தாபம் இருந்தால் நாம் என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்?
3 மற்றவர்களை, ஏன், பல வருடங்களாக நன்கு பழக்கமானவர்களைக்கூட நாம் அவசரப்பட்டு நியாயந்தீர்ப்போமானால் பிரச்சினைகள் தலைதூக்கலாம். ஒருவேளை உங்களுக்கு உற்ற நண்பராக இருந்த ஒரு கிறிஸ்தவருடன் பயங்கரமான தகராறு ஏற்பட்டிருக்கலாம். நடந்ததை மறந்துவிட்டு மீண்டும் அவருடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கு எது உங்களுக்கு உதவும்?
4 அந்த கிறிஸ்தவ சகோதரனையோ சகோதரியையோ முழுமையாக, நிதானமாக, நல்ல விதத்தில் நீங்கள் ஏன் பார்க்கக் கூடாது? இயேசுவின் வார்த்தைகளை மனதில் வைத்து அவ்வாறு செய்யுங்கள். “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என அவர் சொன்னார். (யோவான் 6:44) அதற்குப்பின் உங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘இவரை யெகோவா ஏன் தம் குமாரனிடத்திற்கு இழுத்தார்? விரும்பத்தக்க என்ன குணங்கள் இவரிடம் இருக்கின்றன? அந்த குணங்களை நான் கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறேனா அல்லது அவற்றை அற்பமாக கருதுகிறேனா? ஆரம்பத்தில் நாங்கள் ஏன் நண்பர்களானோம்? இவரை என் நண்பராக்கிக் கொள்ள காரணமாக இருந்தது எது?’ அவருடைய நல்ல பண்புகளைப் பற்றி முதலில் நினைத்துப் பார்ப்பதே உங்களுக்கு கடினமாக இருக்கலாம்; அதுவும் கொஞ்ச காலமாக புண்பட்ட உணர்ச்சிகள் உங்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்குமானால் கஷ்டம்தான். என்றாலும், உங்களுக்கிடையே ஏற்பட்ட பிளவை சரி செய்வதற்கு இது ஒரு முக்கியமான படி. இதை எப்படி செய்யலாம் என்பதை விளக்குவதற்கு, இரண்டு மனிதரிடம் காணப்பட்ட சிறந்த பண்புகளைப் பற்றி சிந்திக்கலாம். யோனா தீர்க்கதரிசியும் அப்போஸ்தலனாகிய பேதுருவுமே அவர்கள். ஆனால் சில சமயங்களில் இவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள்.
யோனாவைப் பற்றிய நேர்மையான கண்ணோட்டம்
5. யோனாவுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் என்ன செய்தார்?
5 இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தில் யோவாசின் குமாரனாகிய இரண்டாம் யெரொபெயாம் அரசாண்ட காலத்தில் தீர்க்கதரிசியாக சேவித்தவரே யோனா. (2 இராஜாக்கள் 14:23-25) இஸ்ரவேல் தேசத்தை விட்டு வலிமை வாய்ந்த அசீரிய வல்லரசின் தலைநகரான நினிவேக்கு செல்லும்படி யோனாவிடம் ஒருநாள் யெகோவா கட்டளையிட்டார். அவருக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது? அந்த மகா நகரத்திற்கு அழிவு வரப்போவதைப் பற்றி அந்த ஜனங்களிடம் எச்சரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. (யோனா 1:1, 2) ஆனால், கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதை விட்டுவிட்டு யோனா ஓடியே போய்விட்டார்! நினிவேக்கு வெகு தொலைவில் இருக்கும் தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் ஏறினார்.—யோனா 1:3.
6. நினிவேக்கு அனுப்ப யெகோவா ஏன் யோனாவைத் தேர்ந்தெடுத்தார்?
6 யோனாவைப் பற்றி சிந்திக்கையில் எது உங்கள் ஞாபகத்திற்கு வருகிறது? அவர் கீழ்ப்படியாமற்போன ஒரு தீர்க்கதரிசி என நீங்கள் நினைக்கிறீர்களா? அவரைப் பற்றி மேலோட்டமாக சிந்தித்தால் அப்படிப்பட்ட ஒரு முடிவுக்குத்தான் நீங்கள் வருவீர்கள். கீழ்ப்படியாதவர் என்று தெரிந்தே யோனாவை தீர்க்கதரிசியாக கடவுள் நியமித்தாரா? நிச்சயமாக இல்லை! யோனாவிடம் விரும்பத்தக்க சில குணங்கள் இருந்திருக்க வேண்டும். ஒரு தீர்க்கதரிசியாக அவர் எப்படி நடந்துகொண்டார் என்ற பதிவை நாம் கவனிக்கலாம்.
7. இஸ்ரவேலில் என்ன சூழ்நிலைகளின் மத்தியில் யோனா யெகோவாவுக்கு சேவை செய்து வந்தார், இதை அறிவது அவரைப் பற்றிய நம்முடைய நோக்குநிலையை எப்படி பாதிக்கிறது?
7 சற்றும் காதுகொடுத்து கேட்காத இஸ்ரவேலரிடத்தில் பிரசங்கிப்பதற்காக யோனா உண்மையோடு பாடுபட்டு உழைத்திருந்தார். ஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்த ஆமோஸ் தீர்க்கதரிசி, அந்நாளைய இஸ்ரவேலரை பொருளாசைப் பிரியர்கள் என குறிப்பிட்டார்.b அத்தேசத்தில் கெட்ட காரியங்கள் நடந்துகொண்டிருந்தன, ஆனால் இஸ்ரவேலரோ அவற்றைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. (ஆமோஸ் 3:13-15; 4:4; 6:4-6) என்றாலும், அவர்களிடம் யோனா உண்மையோடு தொடர்ந்து பிரசங்கித்து வந்தார். நற்செய்தியை பிரசங்கிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், எதைப் பற்றியும் கவலையில்லாத, ஆர்வமில்லாத ஜனங்களிடம் பேசுவது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆகவே, யோனாவின் பலவீனங்கள் ஒருபுறமிருந்தாலும், விசுவாசமற்ற இஸ்ரவேலரிடம் பிரசங்கிக்கையில் அவர் காட்டிய உண்மைத்தன்மை, பொறுமை ஆகிய குணங்களை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது.
8. இஸ்ரவேலின் தீர்க்கதரிசிக்கு நினிவேயில் என்ன சவால்கள் காத்திருந்தன?
8 நினிவேக்கு போவதற்கான நியமிப்பு அதைவிட இன்னும் அதிக கஷ்டமானதாக இருந்தது. அந்தப் பட்டணத்திற்கு போய் சேருவதற்கு 800 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. கால் கடுக்க கஷ்டப்பட்டு நடந்து போய் சேர கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடிக்கும். அங்கு சென்றதும், கொடூர செயல்களுக்கு பெயர்பெற்ற அசீரியர்களிடம் அவர் பிரசங்கிக்க வேண்டியிருக்கும். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்வதே அவர்களுடைய போர் நடவடிக்கைகளின் ஓர் அம்சமாக இருந்தது. அந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் குறித்து அவர்களுக்கு பெருமை வேறு! ஆகவே, ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என நினிவே அழைக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.—நாகூம் 3:1, 7.
9. பெரும் காற்று கடற்பிரயாணிகளை பயமுறுத்தியபோது, யோனா என்ன குணங்களை வெளிக்காட்டினார்?
9 யெகோவாவின் கட்டளைக்கு யோனா கீழ்ப்படியாமல், கப்பலில் ஏறினார்; அந்தக் கப்பல் அவர் போக வேண்டிய இடத்தைவிட்டு வெகு தூரமாக அவரை கொண்டு சென்றது. இருந்தாலும், தம் தீர்க்கதரிசி அப்படியே போகட்டும் என்று யெகோவா விட்டுவிடவில்லை, அல்லது அவருக்கு பதிலாக வேறொருவரை ஏற்பாடு செய்யவுமில்லை. மாறாக, கொடுக்கப்பட்ட நியமிப்பின் முக்கியத்துவத்தை யோனாவுக்கு உணர்த்த யெகோவா முற்பட்டார். கடலில் பெரும் காற்று வீசும்படி செய்தார். யோனா சென்றுகொண்டிருந்த அந்தக் கப்பல் கொந்தளிக்கும் அலைகளால் தத்தளித்தது. ஒன்றும் அறியாத அப்பாவி மனிதர் சாகும் தருவாயில் இருந்தனர்; அதற்கு காரணம் யோனாதான்! (யோனா 1:4) யோனா என்ன செய்தார்? தன் நிமித்தம் கப்பலிலுள்ள அனைவரும் உயிரிழக்க யோனா விரும்பவில்லை. ஆகவே, “நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்” என்று அவர்களிடம் சொன்னார். (யோனா 1:12) கடைசியாக, யோனாவை பிரயாணிகள் கடலுக்குள் தூக்கிப்போட்ட போது, யெகோவா தன்னை கடலிலிருந்து காப்பாற்றுவார் என நினைப்பதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை. (யோனா 1:15) என்றாலும், அந்தப் பிரயாணிகள் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக தன் உயிரையும் இழக்க மனமுள்ளவராக இருந்தார். இங்கு நாம் யோனாவின் தைரியத்தையும், மனத்தாழ்மையையும், அன்பையும் காணவில்லையா?
10. மீண்டுமாக யோனாவிடம் அந்த நியமிப்பை யெகோவா ஒப்படைத்த பின் என்ன நடந்தது?
10 கடைசியில் யோனாவை யெகோவா காப்பாற்றினார். யோனாவின் கீழ்ப்படியாமை, கடவுளுடைய பிரதிநிதியாக இனிமேலும் சேவிக்க முடியாதபடி அவரை தகுதியற்றவராக்கி விட்டதா? இல்லை. நினிவே மக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பதை யெகோவா இரக்கமாகவும் அன்பாகவும் மீண்டும் அவரிடம் சொன்னார். ஆகவே, யோனா நினிவேக்கு வந்து சேர்ந்ததும், அங்குள்ள ஜனங்கள் செய்த மகா பெரிய அக்கிரமங்கள் கடவுளுடைய சமூகத்தில் எட்டினது என்றும் 40 நாட்களில் அவர்களுடைய பட்டணம் அழியப் போகிறதென்றும் அவர்களிடம் தைரியமாக அறிவித்தார். (யோனா 1:2; 3:4) யோனா சொன்ன அப்பட்டமான செய்தியைக் கேட்ட நினிவே மக்கள் மனந்திரும்பினர், அந்தப் பட்டணமும் அழிவிலிருந்து தப்பியது.
11. யோனா மதிப்புமிக்க பாடத்தை கற்றுக்கொண்டார் என்பதை எது காட்டுகிறது?
11 யோனா இன்னும் சரியான மனநிலைக்கு வரவில்லை. என்றாலும், யெகோவா நடைமுறையான ஒரு பாடத்தை புகட்டினார்; இதன் மூலம், தாம் வெறுமனே வெளித்தோற்றத்தை பார்க்கிறவரல்ல, ஆனால் இருதயத்தை ஆராய்கிறவர் என்பதை யோனா புரிந்துகொள்ளும்படி பொறுமையுடன் உதவினார். (யோனா 4:5-11) இந்த விபரங்களையெல்லாம் யோனா தானே கள்ளங்கபடமில்லாமல் பதிவு செய்து வைத்திருப்பது அந்த மதிப்புமிக்க பாடத்தை அவர் கற்றுக்கொண்டார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. தன்னைக் கூனிக்குறுக வைக்கும் விஷயங்களை எழுதுவதற்கும் அவர் மனமுள்ளவராக இருந்தது அவருடைய மனத்தாழ்மைக்கு மேலுமான அத்தாட்சியை அளிக்கிறது. செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு தைரியமும் வேண்டுமே!
12. (அ) மக்கள் பேரில் யெகோவாவின் நோக்குநிலையே இயேசுவுக்கும் இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிவோம்? (ஆ) நற்செய்தியை பிரசங்கிக்கும் ஜனங்களிடம் நாம் என்ன மனநிலையை வைத்திருக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம்? (பக்கம் 18-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
12 யோனாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிய ஓர் உற்சாகமூட்டும் விஷயத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்பு இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என அவர் சொன்னார். (மத்தேயு 12:40) எதிர்காலத்தில் யோனா உயிர்த்தெழுந்து வந்த பின்பு, இயேசு கல்லறையில் இருந்த காலப்பகுதியை அந்தத் தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் ஏற்பட்ட இருண்ட காலப்பகுதியோடு ஒப்பிட்டதை அவர் அப்போது அறிந்துகொள்வார். தம் ஊழியர்கள் தவறுகள் செய்தாலும் அவர்களை ஒதுக்கித் தள்ளாத கடவுளை சேவிப்பதில் நாம் மகிழ்ச்சியடையவில்லையா? “தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 103:13, 14, பொது மொழிபெயர்ப்பு) இந்தத் ‘தூசியால்’, அதாவது, இன்றுள்ள அபூரண மக்கள்கூட கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஆதரவுடன் பெரிய காரியங்களை நிச்சயம் சாதிக்க முடியும்!
பேதுருவைப் பற்றிய சமநிலையான நோக்கு
13. பேதுருவின் என்ன குணங்கள் நம் நினைவுக்கு வரலாம், ஆனால் அவரை ஒரு அப்போஸ்தலனாக இயேசு ஏன் தேர்ந்தெடுத்தார்?
13 இப்போது நாம் இரண்டாவது உதாரணத்தை சுருக்கமாக சிந்திக்கலாம்; இது அப்போஸ்தலன் பேதுருவைப் பற்றியது. பேதுருவைப் பற்றி சொல்லச் சொன்னால், அவசரக்குடுக்கையாக, முந்திரிக்கொட்டையாக, அசட்டுத்துணிச்சலாக அவர் செய்த காரியங்களைத்தான் நீங்கள் உடனடியாக யோசிப்பீர்கள் அல்லவா? சில சமயங்களில் அவர் அத்தகைய குணங்களையே காட்டினார். என்றாலும், உண்மையிலேயே அவசரக்குடுக்கையாக, முந்திரிக்கொட்டையாக, அசட்டுத்துணிச்சலுடையவராக இருந்தவரையா இயேசு தம் 12 அப்போஸ்தலரில் ஒருவராக தேர்ந்தெடுத்திருப்பார்? (லூக்கா 6:12-14) இல்லவே இல்லை! பேதுருவின் அந்தக் குறைபாடுகளைப் பார்க்காமல் அவருடைய நல்ல குணங்களையே இயேசு பார்த்தார்.
14. (அ) பேதுருவின் வெளிப்படையாக பேசுகிற குணம் எதைத் தெளிவுபடுத்துகிறது? (ஆ) பேதுரு அடிக்கடி கேள்வி கேட்டதற்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
14 சில சமயங்களில், பேதுரு மற்ற அப்போஸ்தலர்கள் சார்பாக பேசுபவராக இருந்திருக்கிறார். இதனால் அவர் அடக்கமற்றவர் என சிலர் கருதலாம். ஆனால் அது உண்மையா? மற்ற அப்போஸ்தலர்களைவிட ஒருவேளை இயேசுவைவிடவும் பேதுரு வயதில் மூத்தவராக இருந்திருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், பேதுரு ஏன் எப்போதுமே முந்திக்கொண்டு பேசினார் என்பது தெளிவாகலாம். (மத்தேயு 16:22) எனினும் மற்றொரு அம்சத்தையும் நாம் சிந்திக்க வேண்டும். பேதுரு ஓர் ஆன்மீக சிந்தையுள்ள மனிதராக இருந்தார். அவருக்கிருந்த அறிவுப் பசி காரணமாக பல கேள்விகளைக் கேட்டார். அவர் கேட்ட கேள்விகள் இன்று நமக்கும் பிரயோஜனமாக இருக்கின்றன. பேதுரு கேட்ட கேள்விகளுக்கு மதிப்புமிக்க பல விபரங்களை இயேசு விடையாக தந்தார்; அவை நமக்காக பைபிளில் பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பேதுரு கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கொடுக்கும்போதுதான் ‘உண்மையுள்ள விசாரணைக்காரனைப்’ பற்றி இயேசு பேசினார். (லூக்கா 12:41-44) பேதுரு கேட்ட இந்தக் கேள்வியையும் சிந்தித்துப் பாருங்கள். “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்” என்று கேட்டார். அதற்கு இயேசு பின்வரும் ஊக்கமூட்டும் வாக்குறுதியை கொடுத்தார்: “என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ அவன் பலமடங்கு பெற்று நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.”—மத்தேயு 15:15; 18:21, 22; 19:27-29, திருத்திய மொழிபெயர்ப்பு.
15. பேதுரு உண்மைப் பற்றுறுதியுள்ளவராகவே இருந்தார் என்று ஏன் சொல்லலாம்?
15 பேதுருவுக்கு மற்றொரு நல்ல குணமும் இருந்தது—அதுதான் உண்மைப் பற்றுறுதி. சீஷர்களில் பலர் இயேசு போதித்த ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளாததால் அவரை விட்டு பின்வாங்கியபோது, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என 12 அப்போஸ்தலர்களின் சார்பாக வாய்திறந்து சொன்னவர் பேதுருதான். (யோவான் 6:66-68) அந்த வார்த்தைகள் இயேசுவின் உள்ளத்தை எவ்வளவாய் குளிர்வித்திருக்கும்! பிற்பாடு, கலகக்காரர்கள் எஜமானை கைதுசெய்ய வந்தபோது, அவரது அப்போஸ்தலர்களில் பெரும்பாலோர் ஓடிவிட்டனர். ஆனால் பேதுருவோ தூரத்திலே அந்தக் கும்பலை பின்தொடர்ந்து, பிரதான ஆசாரியனின் அரமனை முற்றத்திற்கே போனார். அங்கு போவதற்கு கோழைத்தனம் அல்ல, தைரியமே அவரைத் தூண்டியது. இயேசுவை விசாரணை செய்துகொண்டிருந்த சமயத்தில், பிரகாசமாக எரிகிற நெருப்பிலே குளிர்காய்ந்து கொண்டிருந்த சில யூதருடன் பேதுருவும் சேர்ந்துகொண்டார். அப்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் ஒருவன் அவரை அடையாளம் கண்டுபிடித்து, நீயும் இயேசுவுடன் இருந்தவன் என குற்றம் சாட்டினான். அந்த சமயத்தில் பேதுரு தன் எஜமானனை மறுதலித்தது உண்மைதான்; ஆனால், அந்த ஆபத்தான சூழ்நிலையில் அவரை வைத்தது, இயேசுவின் மீதிருந்த உண்மைப் பற்றுறுதியும் அக்கறையும்தான் என்பதை நாம் மறக்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்பட மற்ற அப்போஸ்தலர்களுக்கோ தைரியம் வரவில்லை.—யோவான் 18:15-27.
16. என்ன நடைமுறையான காரணத்திற்காக யோனா மற்றும் பேதுருவின் சிறந்த குணங்களைப் பற்றி சிந்தித்தோம்?
16 பேதுருவிடமிருந்த குற்றங்குறைகளைவிட அவரது நல்ல குணங்களே மேலோங்கி நின்றன. யோனாவின் விஷயத்திலும் இதுவே உண்மை. யோனாவையும் பேதுருவையும் பற்றி பொதுவாக மதிப்பிடுவதைவிட இப்போது நாம் அவர்களுடைய நல்ல குணங்களைப் பற்றி அதிகமாக தெரிந்துகொண்டோம்; அவ்வாறே இன்றைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளை நாம் மதிப்பிடும்போதும் அவர்களுடைய நல்ல குணங்களையே அதிகம் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுடன் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த மனநிலை ஏன் மிக அவசியம்?
அந்தப் பாடத்தை இன்றைக்கு பொருத்துதல்
17, 18. (அ) கிறிஸ்தவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு காரணம் எதுவாக இருக்கலாம்? (ஆ) சக விசுவாசிகளோடு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு என்ன பைபிள் ஆலோசனை நமக்கு உதவலாம்?
17 பணக்காரர் ஏழை, படித்தவர்கள் படிக்காதவர்கள், குலம் இனம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா ஆண்களும் பெண்களும் சிறுபிள்ளைகளும் இன்று ஒன்றுபட்டு யெகோவாவை சேவிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) கிறிஸ்தவ சபையில் எத்தனை எத்தனை வித்தியாசப்பட்ட குணமுள்ளவர்களை நாம் பார்க்கிறோம்! நாம் நெருங்கிய கூட்டுறவுடன் கடவுளை சேவிப்பதால் அவ்வப்போது உரசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான்.—ரோமர் 12:10; பிலிப்பியர் 2:3.
18 நம் சகோதரர்களின் குற்றங்குறைகள் நம் கண்ணில் பட்டாலும் நாம் அவற்றிலேயே கருத்தூன்றி இருப்பதில்லை. நாம் யெகோவாவை பின்பற்றவே முயலுகிறோம். அவரைக் குறித்து, “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 130:3) பிரிவினை உண்டாக்கும் தனிப்பண்புகளுக்கு கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நாம் ‘சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடுகிறோம்.’ (ரோமர் 14:19) குறைகளை கவனியாமல் நல்ல பண்புகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் மற்றவர்களை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க நாம் முயலுகிறோம். இவ்வாறு செய்கையில் நாம் ‘ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ள’ முடியும்.—கொலோசெயர் 3:13, பொ.மொ.
19. மிக கடுமையான மனஸ்தாபங்களை தீர்க்க ஒரு கிறிஸ்தவர் எடுக்க வேண்டிய நடைமுறையான சில படிகளை கூறுங்கள்.
19 சரிசெய்ய முடியாத அளவுக்கு மனஸ்தாபங்கள் தொடர்ந்து நம் இதயத்தை அலைக்கழித்தால் என்ன செய்வது? (சங்கீதம் 4:4) இது உங்களுக்கும் சக விசுவாசிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையா? அப்படியானால் அதைச் சரிசெய்ய ஏன் முயலக்கூடாது? (ஆதியாகமம் 32:13-15) முதலாவதாக யெகோவாவிடம் ஜெபத்தில் அணுகி வழிநடத்துதலுக்காக அவரிடம் கேளுங்கள். அதற்குப் பின்பு, அந்த நபரின் சிறந்த குணங்களை மனதில் வைத்து “ஞானத்திற்குரிய சாந்தத்தோடே” அவரை அணுகுங்கள். (யாக்கோபு 3:13) அவரோடு சமாதானம் பண்ணிக்கொள்ள விரும்புவதாக சொல்லுங்கள். “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” என்ற தேவாவியால் ஏவப்பட்ட ஆலோசனையை மனதில் கொள்ளுங்கள். (யாக்கோபு 1:19) மற்றவர் ஒருவேளை உங்களுடைய கோபத்தை கிளறிவிடும் வகையில் எதையேனும் செய்யலாம் அல்லது பேசலாம் என்பதைத்தான் ‘கோபிக்கிறதற்குத் தாமதமாக இருங்கள்’ என்ற ஆலோசனை மறைமுகமாக குறிப்பிடுகிறது. அப்படியொரு சூழ்நிலை எழுமானால், தன்னடக்கத்தை காத்துக்கொள்வதற்கு உதவிக்காக யெகோவாவிடம் கேளுங்கள். (கலாத்தியர் 5:22, 23) உங்களுடைய சகோதரன் தன் மனக்குறைகளை சொல்லட்டும்; அதை கவனமாக கேளுங்கள். அவர் சொல்லும் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போதிலும் அவர் பேசுகையில் குறுக்கிடாதீர்கள். அவருடைய நோக்குநிலை தவறாக இருக்கலாம், என்றாலும் அது அவருடைய நோக்குநிலை. பிரச்சினையை அவருடைய நோக்குநிலையில் காண முயலுங்கள். உங்களை அவருடைய கண்ணோட்டத்தில் வைத்துப் பார்ப்பதையும் அது உட்படுத்தலாம்.—நீதிமொழிகள் 18:17.
20. மனஸ்தாபங்களை பேசி தீர்க்கையில், வேறு என்ன படிகள் சமரசத்திற்கு வழிநடத்தலாம்?
20 நீங்கள் பேச வேண்டிய கட்டம் வந்ததும் சுமுகமாக பேசுங்கள். (கொலோசெயர் 4:6) அவருடைய நல்ல குணங்களைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். அந்த மனஸ்தாபம் ஏற்படுவதற்கு காரணமாக நீங்கள் ஏதேனும் செய்திருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இவ்வாறு தாழ்மையுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக நீங்கள் இருவரும் சமரசமானால் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். இல்லையெனில், வழிநடத்துதலுக்காக தொடர்ந்து யெகோவாவிடம் கேளுங்கள், அதோடு சமாதானம் செய்துகொள்வதற்கு இன்னும் வேறு வழிகளைத் தேடுங்கள்.—ரோமர் 12:18.
21. பிறரை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க இந்தக் கட்டுரை உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
21 யெகோவா தம் ஊழியர் எல்லாரையும் நேசிக்கிறார். நம்முடைய அபூரணங்களின் மத்தியிலும் தமக்கு சேவை செய்ய அவர் நம் எல்லாரையுமே பயன்படுத்துகிறார். பிறரை அவர் எப்படி கருதுகிறார் என்பதை நாம் அதிகமாக கற்றுக்கொள்கையில் சகோதர சகோதரிகள் பேரிலுள்ள நம் அன்பு வேர்விட்டு வளரும். ஒருவேளை சக கிறிஸ்தவர் மீதான அன்பு தணிந்து விட்டால் அதை மீண்டும் தூண்டிவிடலாம். பிறரை நல்ல கண்ணோட்டத்தில், ஆம், யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க திடதீர்மானத்தோடு முயன்றால் மிகச் சிறந்த ஆசீர்வாதங்கள் நம்மைத் தேடி வரும்!
[அடிக்குறிப்புகள்]
a எலியாப் வாட்டசாட்டமான ஆணழகனாக இருந்தாலும் இஸ்ரவேலில் ராஜாவாக ஆவதற்கு ஏற்ற பண்புகள் அவரிடம் இல்லை என்பது பிற்பாடு தெரிய வந்தது. யுத்தத்தில் இஸ்ரவேலருக்கு எதிராக பெலிஸ்த ராட்சதனான கோலியாத் சவால்விட்டபோது மற்ற இஸ்ரவேலரைப் போல எலியாபும் தொடை நடுங்கினார்.—1 சாமுவேல் 17:11, 28-30.
b பெரிய பெரிய வெற்றிகளை பெற்றது, முன்னாளைய பிராந்தியத்தை திரும்ப சேர்த்தது, அதன் விளைவாக ஒருவேளை கப்பம் வசூலித்தது ஆகியவையே இரண்டாம் யெரொபெயாம் வடக்கு ராஜ்யத்தில் செல்வத்தை குவிப்பதற்கு காரணமாக இருந்திருக்கும்.—2 சாமுவேல் 8:6; 2 இராஜாக்கள் 14:23-28; 2 நாளாகமம் 8:3, 4; ஆமோஸ் 6:2.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• உண்மையுள்ள ஊழியர்களின் குற்றங்குறைகளை யெகோவா எப்படி கருதுகிறார்?
• யோனாவிடமும் பேதுருவிடமும் இருந்த என்ன சில நல்ல பண்புகளை நீங்கள் குறிப்பிடலாம்?
• கிறிஸ்தவ சகோதரரிடத்தில் என்ன நோக்குநிலையை காத்துவர நீங்கள் திடத்தீர்மானமாக இருக்கிறீர்கள்?
[பக்கம் 18-ன் பெட்டி]
பிறரை யெகோவா எப்படி கருதுகிறார் என சிந்தியுங்கள்
யோனாவைப் பற்றிய பைபிள் பதிவை நீங்கள் தியானிக்கையில், நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக எப்போதுமே நீங்கள் சந்தித்து வரும் ஜனங்களை ஒரு புதுக் கண்ணோட்டத்தில் காண்பதன் அவசியத்தை உணருகிறீர்களா? இஸ்ரவேலரைப் போல அவர்கள் எதைப் பற்றியும் கவலையற்றவர்களாக, ஆர்வமற்றவர்களாக இருப்பதுபோல் உங்களுக்கு தோன்றலாம் அல்லது கடவுளுடைய செய்தியை அவர்கள் எதிர்க்கலாம். இருந்தாலும், அவர்களை யெகோவா தேவன் எப்படி கருதுகிறார்? யோனா பிரசங்கித்ததைக் கேட்டு நினிவேயின் ராஜா மனந்திரும்பிய விதமாக, இந்த உலகில் பிரபலங்களாக இருக்கும் சிலரும்கூட ஒருநாள் யெகோவாவைத் தேட ஆரம்பிக்கலாம்.—யோனா 3:6, 7.
[பக்கம் 15-ன் படம்]
மற்றவர்களை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்களா?
[பக்கம் 16, 17-ன் படம்]
யோனாவின் அனுபவத்திலிருந்து கண்ட நல்ல விஷயத்தை இயேசு சொன்னார்