பூர்வ கிறிஸ்தவர்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும்
“நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.”—கலாத்தியர் 3:24.
1, 2. மோசேயின் நியாயப்பிரமாணத்தை கவனமாக கைக்கொண்ட இஸ்ரவேலருக்கு கிடைத்த நன்மைகள் சில யாவை?
யெகோவா பொ.ச.மு. 1513-ல், இஸ்ரவேலருக்கு ஒரு சட்ட தொகுப்பைக் கொடுத்தார். அவர்கள் தமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால், அவர்களை ஆசீர்வதிப்பார் என்றும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்வார்கள் என்றும் அவர்களுக்கு சொன்னார்.—யாத்திராகமம் 19:5, 6.
2 மோசேயின் நியாயப்பிரமாணம், அல்லது வெறுமனே “நியாயப்பிரமாணம்” என்று அழைக்கப்பட்ட அந்த சட்ட தொகுப்பு, “பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும்” இருந்தது. (ரோமர் 7:12) தயவு, நேர்மை, நன்னடத்தை, நட்புணர்வு போன்ற மிகச் சிறந்த பண்புகளை அது ஊக்குவித்தது. (யாத்திராகமம் 23:4, 5; லேவியராகமம் 19:14; உபாகமம் 15:13-15; 22:10, 22) ஒருவரையொருவர் நேசிப்பதற்கும் நியாயப்பிரமாணம் யூதர்களை தூண்டுவித்தது. (லேவியராகமம் 19:18) அதோடு, நியாயப்பிரமாணத்திற்கு உட்படாத புறஜாதியாரோடு கூட்டுச்சேரவோ, புறஜாதி பெண்களை விவாகம் செய்யவோ கூடாதென அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. (உபாகமம் 7:3, 4) யூதரையும் புறஜாதியாரையும் பிரிக்கும் ஒரு ‘சுவரைப்’போல் மோசேயின் நியாயப்பிரமாணம் இருந்தது; கடவுளுடைய ஜனங்கள் புறமதத்தினரின் சிந்தனைகளாலும் பழக்கவழக்கங்களாலும் கறைபடாதபடி அது தடுத்தது.—எபேசியர் 2:14, 15; யோவான் 18:28.
3. நியாயப்பிரமாணத்தை ஒருவராலும் முழுமையாக கைக்கொள்ள முடியாததால் அது எதை உணர்த்தியது?
3 எனினும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் இருந்த சின்னச்சின்ன விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த யூதராலும்கூட அதை முழுமையாக கைக்கொள்ள முடியவில்லை. யெகோவா அவர்களிடமிருந்து மட்டுக்குமீறி எதிர்பார்ப்பவராக இருந்தாரா? இல்லை. இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதற்கு முதல் காரணம் அவர்களுடைய ‘குற்றங்களை எடுத்துக்காட்டுவற்காகும்.’ (கலாத்தியர் 3:19, பொது மொழிபெயர்ப்பு) தங்களுக்கு ஒரு மீட்பர் மிக அவசரமாக தேவைப்படுகிறார் என்பதை உண்மையுள்ள யூதர்களுக்கு நியாயப்பிரமாணம் உணர்த்தியது. அவர் வந்தபோது அந்த யூதர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில், பாவம், மரணம் என்ற சாபத்திலிருந்து விடுதலை அண்மையில் இருந்தது!—யோவான் 1:29.
4. என்ன கருத்தில் நியாயப்பிரமாணம், “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” இருந்தது?
4 மோசேயின் நியாயப்பிரமாணம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” அது இருந்ததாக விவரித்தார். (கலாத்தியர் 3:24) பண்டைய காலங்களில், ஓர் உபாத்தியாயர் பிள்ளைகள் பள்ளிக்கு போய் வருகையில் கூடவே செல்வார். அவர் ஒரு ஆசிரியர் அல்ல. ஆனால் பிள்ளைகளை ஆசிரியரிடம் வெறுமனே அழைத்து செல்கிறவர். அவ்வாறே, மோசேயின் நியாயப்பிரமாணமும், கடவுள் பயமுள்ள யூதர்களை கிறிஸ்துவினிடம் வழிநடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இயேசு “இந்த ஒழுங்குமுறையின் முடிவு வரையில் சகல நாட்களிலும்” தம்மைப் பின்பற்றுவோருடன் கூடவே இருப்பாரென உறுதியளித்திருந்தார். (மத்தேயு 28:20, NW) ஆகவே, கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டவுடன் “உபாத்தியாய்” இருந்த நியாயப்பிரமாணத்தின் நோக்கம் முடிவுக்கு வந்தது. (ரோமர் 10:4; கலாத்தியர் 3:25) ஆனால், யூத கிறிஸ்தவர்கள் சிலர், இந்த அடிப்படை சத்தியத்தை உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னும், நியாயப்பிரமாணத்தின் சில அம்சங்களை அவர்கள் தொடர்ந்து கைக்கொண்டு வந்தார்கள். வேறு சிலரோ அதைப் புரிந்துகொண்டு தங்கள் எண்ணங்களை சரிசெய்தார்கள். அவ்வாறு செய்ததன் மூலம், இன்று வாழும் நமக்கு நல்ல முன்மாதிரியை வைத்தார்கள். எப்படி என்பதை நாம் காணலாம்.
கிறிஸ்தவக் கோட்பாட்டில் சிலிர்ப்பூட்டும் முன்னேற்றங்கள்
5. தரிசனத்தில் பேதுரு என்ன கட்டளைகளைப் பெற்றார், அவர் ஏன் அதிர்ச்சியடைந்தார்?
5 பொ.ச. 36-ல், குறிப்பிடத்தக்க ஒரு தரிசனம் அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு கிடைத்தது. அப்போது, நியாயப்பிரமாணத்தின்கீழ் அசுத்தமானவையாக கருதப்பட்ட பறவைகளையும் மிருகங்களையும் கொன்று சாப்பிடும்படி பரலோகத்திலிருந்து வந்த ஒரு குரல் கட்டளையிட்டது. பேதுரு அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்! “தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும்” அவர் “ஒருக்காலும் புசித்ததில்லை.” ஆனால் அந்தக் குரலோ, “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்று சொன்னது. (அப்போஸ்தலர் 10:9-15) ஆகவே, நியாயப்பிரமாணத்தை விடாப்பிடியாய் பற்றிக்கொண்டிராமல், பேதுரு தன் எண்ணத்தை சரிசெய்துகொண்டார். கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய ஆச்சரியமான ஒன்றைக் கண்டறிவதற்கு அந்த மனப்பான்மை அவரை வழிநடத்தியது.
6, 7. புறஜாதியாரிடமும் பிரசங்கிக்கலாம் என்ற முடிவுக்கு வரும்படி பேதுருவை உணர்த்தியது எது, மேலும் என்னென்ன காரியங்களை அவர் உணர்ந்திருப்பார்?
6 நடந்தது இதுதான். பேதுரு தங்கியிருந்த வீட்டுக்கு மூன்று மனிதர் வந்தனர். கடவுள் பயமுள்ளவரான கொர்நேலியு என்ற விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதி நபரின் வீட்டுக்கு தங்களுடன் வரும்படி பேதுருவிடம் கேட்பதற்கே அவர்கள் வந்தனர். இந்த மனிதரை வீட்டுக்குள் அழைத்து பேதுரு உபசரித்தார். தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பேதுரு, அடுத்த நாள் அந்த மனிதருடன் கொர்நேலியுவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு, இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுமையாக சாட்சி கொடுத்தார். அந்தச் சமயத்தில், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” என்று பேதுரு குறிப்பிட்டார். அதன் விளைவாக கொர்நேலியு மட்டுமல்ல, அவருடைய உறவினரும் நெருங்கிய நண்பர்களும் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்; அதோடு, “வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த யாவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கினது.” யெகோவாவே இதை செய்திருக்கிறார் என்பதை கண்டுணர்ந்த பேதுரு, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்காட்டப்படும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”—அப்போஸ்தலர் 10:17-48; NW.
7 மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாத புறஜாதியார், இப்போது இயேசு கிறிஸ்துவின் சீஷராக ஆக முடியும் என்ற முடிவுக்கு வரும்படி பேதுருவை உணர்த்தியது எது? ஆவிக்குரிய பகுத்தறிவே. விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார்மீது தம்முடைய ஆவியை ஊற்றுவதன் மூலம் கடவுள் தம்முடைய அங்கீகாரத்தைக் காட்டியிருந்ததால், அவர்கள் முழுக்காட்டப்படுவதற்கு தகுதியானவர்கள் என்பதை பேதுரு பகுத்தறிந்தார். அதேசமயத்தில், முழுக்காட்டுதலுக்கு தகுதிபெற புறஜாதி கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கவில்லை என்பதையும் பேதுரு தெளிவாக உணர்ந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் நீங்கள் இருந்திருந்தால் பேதுருவைப் போல் உங்கள் மனநிலையை சரிசெய்திருப்பீர்களா?
சிலர் அந்த ‘உபாத்தியைத்’ தொடர்ந்து பின்பற்றினர்
8. விருத்தசேதனத்தைப் பற்றிய பேதுருவின் கருத்துக்கு முரணான என்ன கருத்தை எருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் ஆதரித்தார்கள், ஏன்?
8 கொர்நேலியுவின் வீட்டை விட்டு வந்த பின்பு பேதுரு எருசலேமுக்குச் சென்றார். விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார் ‘தேவவசனத்தை ஏற்றுக் கொண்டார்களென்ற’ செய்தி அங்குள்ள சபைக்கு எட்டியது; அதை அறிந்த யூத சீஷர்கள் சிலர் குழப்பமடைந்தனர். (அப்போஸ்தலர் 11:1-3) புறஜாதியாரும் இயேசுவின் சீஷராகலாம் என்பதை ஒப்புக்கொண்டாலும், யூதரல்லாத இந்த ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டுமென்று ‘விருத்தசேதனத்தை ஆதரித்தவர்கள்’ (NW) வற்புறுத்தினர். மறுபட்சத்தில், யூத கிறிஸ்தவர்கள் குறைவாக இருந்த புறஜாதியாரின் பகுதிகளிலோ விருத்தசேதனம் ஒரு விவாதமாகவே இருக்கவில்லை. இந்த இரண்டு வித்தியாசப்பட்ட கருத்துகளும் ஏறக்குறைய 13 ஆண்டுகள் தொடர்ந்தன. (1 கொரிந்தியர் 1:10) ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக யூத பகுதிகளில் வாழ்ந்த புறஜாதியாருக்கு அது எத்தகைய சோதனையாக இருந்திருக்கும்!
9. விருத்தசேதனத்தைப் பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது ஏன் முக்கியமாக இருந்தது?
9 பொ.ச. 49-ல், பவுல் பிரசங்கித்துக் கொண்டிருந்த சிரியாவிலுள்ள அந்தியோகியாவுக்கு, எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் வந்தபோது, இந்த விவாதம் கடைசியாக உச்சநிலையை எட்டியது. மதம் மாறிய புறஜாதியார் நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமென்று அவர்கள் போதிக்கத் தொடங்கினார்கள். இவ்வாறு, அவர்களுக்கும், பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையில் மிகுந்த கருத்து வேறுபாடும் விவாதமும் ஏற்பட்டன! இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், யூத அல்லது புறஜாதி பின்னணியிலிருந்து வந்த கிறிஸ்தவர்களில் யாரேனும் சிலர் நிச்சயமாக இடறலடைவார்கள். ஆகவே, பவுலும் வேறு சிலரும் எருசலேமுக்குச் சென்று, இந்தப் பிரச்சினையை முற்றிலும் தீர்க்கும்படி ஆளும் குழுவிடம் கேட்பதற்கு ஏற்பாடு செய்தனர்.—அப்போஸ்தலர் 15:1, 2, 24.
கருத்து வேறுபாட்டுக்குப்பின் ஒற்றுமை!
10. புறஜாதியாரின் நிலையைக் குறித்து தீர்மானிப்பதற்கு முன்பு ஆளும் குழு கலந்தாலோசித்த சில காரியங்கள் யாவை?
10 அங்கு நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் சிலர், விருத்தசேதனத்திற்கு ஆதரவாகவும், மற்றவர்கள் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததாக தோன்றுகிறது. ஆனால், அவர்களது உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்கள் ஒதுக்கப்பட்டன. பெரும் விவாதத்திற்கு பின்பு, அப்போஸ்தலராகிய பேதுருவும் பவுலும், விருத்தசேதனம் செய்யப்படாத விசுவாசிகளுக்குள் யெகோவா நடப்பித்திருந்த அடையாளங்களை விவரித்து சொன்னார்கள். விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார்மீது கடவுள் பரிசுத்த ஆவியை ஊற்றியிருந்ததை விளக்கிக் கூறினார்கள். சொல்லப்போனால், ‘கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை கிறிஸ்தவ சபை தள்ளிவிடுவது சரியாகுமா?’ என்றே அவர்கள் கேட்டார்கள். பின்பு சீஷனாகிய யாக்கோபு, வேதவசன பகுதி ஒன்றை வாசித்தார்; வந்திருந்த யாவரும் இந்த விஷயத்தில் யெகோவாவின் சித்தத்தை புரிந்துகொள்வதற்கு இது பிரயோஜனமாக இருந்தது.—அப்போஸ்தலர் 15:4-17.
11. விருத்தசேதனத்தைப் பற்றி தீர்மானிப்பதில் எந்த அம்சம் உட்படவில்லை, அத்தீர்மானத்தின் பேரில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததென்று எது காட்டுகிறது?
11 இப்போது எல்லாருடைய கவனமும் ஆளும் குழுவினர்மீது இருந்தது. அவர்களுடைய யூத பின்னணியின் காரணமாக, விருத்தசேதனத்தின் சார்பாக தீர்மானம் எடுக்க அவர்கள் மனம் சாய்வார்களா? இல்லை. இந்த உண்மையுள்ள ஆட்கள் வேதவசனங்களையும் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்களையும் பின்பற்றவே தீர்மானமாயிருந்தார்கள். தகுந்த அத்தாட்சிகள் அனைத்தையும் கேட்ட பிறகு, புறஜாதியாரான கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என்றும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் வர அவசியமில்லை என்றும் ஆளும் குழுவினர் ஏகமனதாக ஒப்புக்கொண்டனர். இந்தத் தீர்மானத்தை சகோதரர்கள் அறிந்தபோது மகிழ்ச்சியடைந்தனர், சபைகள் “நாளுக்குநாள் பெருகின.” தெளிவான தேவராஜ்ய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்த அந்தக் கிறிஸ்தவர்களுக்கு உறுதியான வேதப்பூர்வ பதில் கிடைத்தது. (அப்போஸ்தலர் 15:19-23, 28, 29; 16:1-5) என்றாலும், முக்கியமான ஒரு கேள்வி இன்னும் பாக்கியிருந்தது.
யூத கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன?
12. என்ன கேள்வி தீர்க்கப்படாமல் விடப்பட்டது?
12 புறஜாதி கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டியதில்லை என்று ஆளும் குழு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் யூத கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? அந்தக் கேள்வியின் இந்த அம்சத்திற்கு ஆளும் குழுவின் தீர்மானம் தெளிவான விளக்கம் தரவில்லை.
13. இரட்சிக்கப்படுவதற்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வது அவசியமென வற்புறுத்தியது ஏன் தவறாக இருந்தது?
13 ‘நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருந்த’ யூத கிறிஸ்தவர்கள் சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்துகொண்டும் நியாயப்பிரமாணத்தின் சில அம்சங்களைக் கைக்கொண்டும் வந்தனர். (அப்போஸ்தலர் 21:20) மற்றவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, இரட்சிக்கப்படுவதற்கு யூத கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வது அவசியமென வற்புறுத்தவும் செய்தனர். இது, அவர்கள் செய்த மகா பெரிய தவறு. உதாரணமாக, பாவ மன்னிப்புக்காக கிறிஸ்தவர் யாரேனும் மிருக பலியை செலுத்த முடியுமா? கிறிஸ்துவின் பலி அத்தகைய பலிகளின் அவசியமே இல்லாமல் போகும்படி செய்துவிட்டதே. புறஜாதியாரோடு நெருங்கிய உறவைத் தவிர்க்க வேண்டுமென்ற நியாயப்பிரமாணத்தின் கட்டளையைப் பற்றியதென்ன? இந்தக் கட்டுப்பாடுகளைக் கைக்கொண்டு, அதே சமயத்தில் இயேசு கற்பித்திருந்த எல்லாவற்றையும் புறஜாதியாருக்குக் கற்பிக்கும் பொறுப்பையும் நிறைவேற்றுவது ஆர்வமுள்ள கிறிஸ்தவ சுவிசேஷகர்களுக்கு மிகக் கடினமாக இருந்திருக்கும். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8; 10:28)a இந்த விஷயம், ஆளும் குழுவின் கூட்டத்தில் தெளிவாக்கப்பட்டதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. இருந்தாலும், சபை உதவியின்றி விடப்படவில்லை.
14. நியாயப்பிரமாணத்தைப் பற்றிய என்ன வழிநடத்துதலை, கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட பவுலின் நிருபங்கள் அளித்தன?
14 அதற்கும் அவர்களுக்கு உதவி கிடைத்தது. ஆளும் குழுவிடமிருந்து வந்த கடிதம் மூலமாக அல்ல. தேவ ஆவியால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் எழுதிய மற்ற நிருபங்களின் மூலமாக கிடைத்தது. உதாரணமாக, ரோமில் வாழ்ந்துகொண்டிருந்த யூதருக்கும் புறஜாதியாருக்கும் அப்போஸ்தலனாகிய பவுல், வலிமை வாய்ந்த செய்தியை அனுப்பினார். “உள்ளத்திலே யூதனானவனே” நிஜ யூதன் என்றும் “ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்” என்றும் அவர்களுக்கு எழுதிய தன் நிருபத்தில் விளக்கினார். (ரோமர் 2:28, 29) அதே கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இனிமேலும் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு ஒரு உதாரணத்தை பவுல் பயன்படுத்தினார். ஒரு பெண் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களை விவாகம் செய்ய முடியாது. ஆனால், கணவன் இறந்துவிட்டால், மறு விவாகம் செய்ய அவள் உரிமை பெறுகிறாள் என்று சொன்ன பின்பு, அந்த உதாரணத்தை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பொருத்தி, அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்களாகவும் அதேசமயத்தில் கிறிஸ்துவுக்குரியவர்களாகவும் இருக்க முடியாதென்று காட்டினார். கிறிஸ்துவுடன் ஒன்றுபடுவதற்கு அவர்கள் ‘நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாக’ இருக்க வேண்டியிருந்தது.—ரோமர் 7:1-5.
குறிப்பைப் புரிந்துகொள்வதில் தாமதம்
15, 16. நியாயப்பிரமாணத்தைப் பற்றிய குறிப்பைப் புரிந்துகொள்ள யூத கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் தவறினார்கள், ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் நிலைத்திருப்பதற்கான தேவையைப் பற்றி இது என்ன காட்டுகிறது?
15 நியாயப்பிரமாணத்தைப் பற்றிய பவுலின் நியாயவிவாதம் மறுக்க முடியாததாக இருந்தது. அப்படியானால், யூத கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் இந்தக் குறிப்பை புரிந்துகொள்ளத் தவறினர்? அதற்கு ஒரு காரணம், அவர்கள் ஆவிக்குரிய பகுத்தறிவில் குறைவுபட்டவர்களாக இருந்தனர். உதாரணமாக, ஆவிக்குரிய பலமான ஆகாரத்தை உட்கொள்வதை அவர்கள் அலட்சியம் செய்தனர். (எபிரெயர் 5:11-14) கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் அவர்கள் ஒழுங்காகச் செல்லவில்லை. (எபிரெயர் 10:23-25) அந்தக் குறிப்பை சிலர் புரிந்துகொள்ளாமல் போனதற்கு நியாயப்பிரமாணத்தின் இயல்புதானே மற்றொரு காரணமாக இருக்கலாம். காணவும், உணரவும், தொடவும் முடிகிற அம்சங்களான ஆலயம், ஆசாரியத்துவம் போன்ற காரியங்களே அதில் முக்கியமாக இருந்தன. ஆவிக்குரிய தன்மையில் குறைவுபடும் ஒருவருக்கு, காணக்கூடாத மெய்மைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவத்தின் ஆழமான நியமங்களை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது, நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொள்வதோ எளிதாக இருந்தது.—2 கொரிந்தியர் 4:18.
16 கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டின சிலர், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதில் ஏன் ஆர்வமாக இருந்தார்கள் என்பதற்கு மற்றொரு காரணத்தையும் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் குறிப்பிட்டார். ஒரு பிரபலமான மதத்தின் மதிப்பு வாய்ந்த உறுப்பினராக கருதப்படவே அவர்கள் விரும்பியதாக விளக்கினார். சமுதாயத்தில் தங்களை வித்தியாசப்படுத்தி காட்டுவதைவிட அந்த சமுதாயத்தின் பாகமாக இருப்பதற்கு பெரும்பாலும் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்கள். கடவுளுடைய அங்கீகாரத்தைவிட மனிதரின் அங்கீகாரத்தைப் பெறுவதிலேயே அவர்கள் அதிக நாட்டம் கொண்டிருந்தார்கள்.—கலாத்தியர் 6:12.
17. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதைப் பற்றிய சரியான கருத்து எப்போது முற்றிலும் தெளிவாகியது?
17 கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு பவுலும் மற்றவர்களும் எழுதியவற்றை கவனமாய்ப் படித்து பகுத்துணர்ந்த கிறிஸ்தவர்கள், நியாயப்பிரமாணத்தைக் குறித்ததில் சரியான முடிவெடுத்தார்கள். எனினும், நியாயப்பிரமாணத்தின் சரியான கருத்து, பொ.ச. 70-ஆம் ஆண்டு வரையில், யூத கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் தெளிவாக விளங்கவில்லை. எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அதன் ஆசாரியத்துவத்தைப் பற்றிய பதிவுகளையும் அழிப்பதற்கு கடவுள் அனுமதித்தபோதுதான் அது தெளிவாகியது. அதன் பிறகு, எவருமே நியாயப்பிரமாணத்தின் எல்லா அம்சங்களையும் கைக்கொள்ள முடியாதபடி ஆனது.
அப்பாடத்தை இன்று பொருத்துதல்
18, 19. (அ) ஆவிக்குரிய விதத்தில் ஆரோக்கியமாக நிலைத்திருக்க நாம் என்ன மனப்பான்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்ன மனப்பான்மைகளைத் தவிர்க்க வேண்டும்? (ஆ) பொறுப்புள்ள சகோதரர்களிடமிருந்து நாம் பெறும் வழிநடத்துதலைப் பின்பற்றுவதைப் பற்றி பவுலின் முன்மாதிரி நமக்கு என்ன கற்பிக்கிறது? (பக்கம் 24-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
18 வெகு காலத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவங்களைச் சிந்தித்தபின் நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருந்தால், கடவுளுடைய சித்தம் படிப்படியாக வெளிப்படுகையில் எப்படி பிரதிபலித்திருப்பேன்? நியாயப்பிரமாணத்தைப் பற்றிய பாரம்பரிய கருத்துக்களை விடாது பற்றியிருந்திருப்பேனா? அல்லது அதைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் தெளிவாகும் வரையில் பொறுமையாக இருந்திருப்பேனா? அது தெளிவாகியபோது, உள்ளப்பூர்வமாக அதை ஆதரித்திருப்பேனா?’
19 அப்போது நாம் வாழ்ந்திருப்போமானால், நாம் எப்படி பிரதிபலித்திருப்போம் என்று உறுதியாக சொல்ல முடியாதுதான். ஆனால் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘பைபிளைப் புரிந்துகொள்வதன் பேரில் இன்று விளக்கங்கள் கொடுக்கப்படுகையில் நான் அவற்றிற்கு எப்படி பிரதிபலிக்கிறேன்? (மத்தேயு 24:45) வேதப்பூர்வ அறிவுரை கொடுக்கப்படுகையில், நான் அதைப் பொருத்துகிறேனா, அறிவுரைகளை வரிக்கு வரி கடைப்பிடிப்பதில் மட்டுமே குறியாய் இருக்கிறேனா அல்லது அதில் உட்பட்டுள்ள நியமத்தையும் கடைப்பிடிக்கிறேனா? (1 கொரிந்தியர் 14:20) என் கேள்விகள் சிலவற்றிற்கு பதில் இன்னும் தெளிவாகாமல் இருக்கையில் யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருக்கிறேனா?’ ஆகவே, நாம் ஒருபோதும் “விட்டுவிலகாதபடிக்கு” இன்று கிடைக்கும் ஆன்மீக உணவை நன்கு பயன்படுத்துவது இன்றியமையாதது. (எபிரெயர் 2:1) யெகோவா தமது வார்த்தை, ஆவி, பூமிக்குரிய அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக போதிக்கையில், நாம் கவனமாக செவிகொடுப்போமாக. அவ்வாறு செய்வோமானால், மகிழ்ச்சியும் திருப்தியுமான முடிவற்ற வாழ்க்கையை யெகோவா நமக்கு தந்து ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்பு]
a சிரியாவிலிருந்த அந்தியோகியாவுக்குப் பேதுரு சென்றபோது, புறஜாதி விசுவாசிகளுடன் அன்பான கூட்டுறவை அவர் அனுபவித்து மகிழ்ந்தார். எனினும், யூத கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்து வந்துசேர்ந்தபோது பேதுரு ‘விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து விலகிப் பிரிந்தார்.’ உயர்வாக மதிக்கப்பட்ட அந்த அப்போஸ்தலர் தங்களுடன் சாப்பிட மறுத்தபோது, மதம் மாறிய அந்தப் புறஜாதியாருக்கு எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.—கலாத்தியர் 2:11-13.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• என்ன கருத்தில் மோசேயின் நியாயப்பிரமாணம் “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” இருந்தது?
• சத்தியத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் சரிப்படுத்துதல்கள் செய்யப்பட்டபோது பேதுருவுக்கும் ‘விருத்தசேதனத்தை ஆதரித்தவர்களுக்கும்’ இடையேயிருந்த வேறுபாடுகளை எப்படி விளக்குவீர்கள்?
• இன்று யெகோவா சத்தியத்தை வெளிப்படுத்துகிற விதத்தைப் பற்றி நீங்கள் என்ன அறிந்து கொண்டீர்கள்?
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
பவுல் மனத்தாழ்மையுடன் சோதனையை சந்திக்கிறார்
மிஷனரி பயணம் ஒன்றை வெற்றிகரமாக முடித்த பின், பொ.ச. 56-ல் பவுல் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு சோதனை காத்துக்கொண்டிருந்தது. நியாயப்பிரமாணம் ஒதுக்கப்பட்டுவிட்டதென்று அவர் பகிரங்கமாக கற்பித்தது சபையிலுள்ளவர்களின் காதுகளுக்கு எட்டியது. நியாயப்பிரமாணத்தைப் பற்றிய விஷயத்தை பவுல் வெளிப்படையாக பேசியதால், புதிதாக மதம் மாறியிருக்கும் யூத கிறிஸ்தவர்கள் இடறல் அடைவார்களென்று மூப்பர்கள் பயந்தார்கள்; யெகோவாவுடைய ஏற்பாடுகளின் பேரில் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது என்ற முடிவுக்குக்கூட அவர்கள் வந்துவிடலாமென்றும் மூப்பர்கள் அஞ்சினார்கள். பொருத்தனை பண்ணிக்கொண்ட நான்கு யூத கிறிஸ்தவர்கள் சபையில் இருந்தார்கள், அது ஒருவேளை நசரேய பொருத்தனையாக இருக்கலாம். அந்தப் பொருத்தனையை நிறைவேற்ற அவர்கள் ஆலயத்திற்கு போகவேண்டியிருந்தது.
அந்த நான்கு பேருடன் ஆலயத்திற்கு போகும்படியும் அவர்களுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்ளும்படியும் மூப்பர்கள் பவுலைக் கேட்டுக்கொண்டனர். இரட்சிக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டியதில்லையென தேவாவியால் ஏவப்பட்டு இரண்டு கடிதங்களிலாவது பவுல் விவாதித்திருந்தாலும், மற்றவர்களின் மனசாட்சியை அவர் மதித்தார். முன்பு அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.” (1 கொரிந்தியர் 9:20-23) முக்கியமான வேத நியமங்கள் உட்பட்ட விஷயங்களை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காமல், மூப்பர்களின் ஆலோசனைக்கு கீழ்ப்படிய முடியுமென பவுல் உணர்ந்தார். (அப்போஸ்தலர் 21:15-26) அவர் இவ்வாறு செய்ததில் தவறில்லை. பொருத்தனைகள் சம்பந்தமான ஏற்பாட்டை பற்றியதில் வேதப்பூர்வமற்ற எதுவும் இல்லை; அதோடு, ஆலயமும் விக்கிரகாராதனைக்கு அல்ல, ஆனால் தூய்மையான வணக்கத்திற்கே உபயோகப்படுத்தப்பட்டது. அப்படியானால், இடறலுக்கு இடமளித்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த மூப்பர்கள் சொன்னபடி பவுல் செய்தார். (1 கொரிந்தியர் 8:13) இது பவுலின் பங்கில் பெருமளவு மனத்தாழ்மையைத் தேவைப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. அவர் பேரிலான நம் மதித்துணர்வை இது ஆழமாக்குகிறது.
[பக்கம் 22, 23-ன் படம்]
சில ஆண்டுகளாகவே மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் கிறிஸ்தவர்களிடம் இருந்து வந்தன