அசையாமல் நின்று யெகோவா தரும் இரட்சிப்பைப் பாருங்கள்!
“உங்கள் நிலையில் இருந்து, அசையாமல் நின்று, யெகோவா உங்களுக்குத் தரும் இரட்சிப்பைப் பாருங்கள்.”—2 நாளாகமம் 20:17, NW.
1, 2. சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைவிட சீக்கிரத்தில் வர இருக்கும் “மாகோகு தேசத்தானான கோகு”வின் தாக்குதல் ஏன் முக்கிய கவனத்திற்குரியது?
பயங்கரவாதம்—இது உலக சமுதாயத்தின் மீது மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் மீதே நடத்தப்படும் தாக்குதல் என்பதாக சிலர் விவரிக்கின்றனர். எனவே, இப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு முக்கிய கவனம் செலுத்தத்தான் வேண்டும். ஆனால், இதைவிட முக்கிய கவனத்திற்குரியது இன்னொரு பெரிய தாக்குதல்; அதை இந்த உலக சமுதாயம் துளியும் பொருட்படுத்துவதில்லை. அது என்ன தாக்குதல்?
2 அதுதான் “மாகோகு தேசத்தானான கோகு”வின் தாக்குதல்; இதைப் பற்றி எசேக்கியேல் 38-வது அதிகாரத்தில் பைபிள் சொல்கிறது. சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைவிட இந்தத் தாக்குதல் முக்கிய கவனத்திற்குரியது என்று சொல்வது மிகைப்படுத்துவதாக இருக்கிறதா? இல்லவே இல்லை, ஏனெனில் கோகுவின் தாக்குதல் வெறும் மனித அரசாங்கங்களின் மீதான தாக்குதல் அல்ல. அது கடவுளின் பரலோக அரசாங்கத்தின் மீதே நடத்தப்படும் தாக்குதல்! என்றபோதிலும், இவ்வுலகின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறும் மானிடரைப் போல அல்ல நம் சிருஷ்டிகர்; கோகுவின் ஆக்ரோஷமான தாக்குதலை முறியடிக்க அவருக்கு முழு திறமையும் இருக்கிறது.
கடவுளுடைய அரசாங்கத்தின் மீதான தாக்குதல்
3. உலக ஆட்சியாளர்கள் 1914-லிருந்து என்ன செய்யும்படி சொல்லப்பட்டார்கள், ஆனால் அவர்கள் எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள்?
3 கடவுளால் நியமிக்கப்பட்டு தற்போது ஆட்சி செய்துவரும் ராஜாவுக்கும் சாத்தானின் பொல்லாத உலகிற்கும் இடையிலான போராட்டம் 1914-லிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அந்த வருடத்தில்தான் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அச்சமயத்தில், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ராஜாவுக்கு கீழ்ப்படியுமாறு மனித ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்வருமாறு முன்னறிவிக்கப்பட்ட பிரகாரம் அவர்கள் கீழ்ப்படிய மறுத்திருக்கிறார்கள்: “கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மை விட்டு எறிந்து போடுவோம் என்கிறார்கள்.” (சங்கீதம் 2:1-3) மாகோகின் கோகு தாக்குதலை நடத்தும்போது கண்டிப்பாக ராஜ்ய ஆட்சிக்கான எதிர்ப்பு அதன் உச்சக்கட்டத்தை அடையும்.
4, 5. பார்க்க முடியாத பரலோக அரசாங்கத்தை எதிர்த்து மனிதர்களால் எப்படி போராட முடியும்?
4 பார்க்க முடியாத பரலோக அரசாங்கத்தை எதிர்த்து மனிதர்களால் எப்படி போராட முடியுமென நாம் யோசிக்கலாம். பைபிள் வெளிப்படுத்துகிறபடி, ‘ஆட்டுக்குட்டியானவரான’ கிறிஸ்து இயேசுவையும், “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பே”ரையும் கொண்டதே இந்த அரசாங்கம். (வெளிப்படுத்துதல் 14:1, 3; யோவான் 1:29) இந்தப் புதிய அரசாங்கம் பரலோகத்தில் இருப்பதால் ‘புதிய வானம்’ என்று சொல்லப்படுகிறது; அதன் பூமிக்குரிய குடிமக்களோ “புதிய பூமி” என அழைக்கப்படுகிறார்கள். (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13) கிறிஸ்துவின் உடன் அரசர்களான 1,44,000 பேரில் பெரும்பாலானோர் ஏற்கெனவே தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை உண்மைப் பற்றுறுதியோடு முடித்திருக்கிறார்கள். இதன் மூலம், பரலோகத்தில் தங்களுடைய புதிய நியமிப்புகளை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களாக நிரூபித்திருக்கிறார்கள்.
5 ஆனால் 1,44,000 பேரில் கொஞ்ச பேர் இன்னும் பூமியில் இருக்கிறார்கள். 2002-ல் கர்த்தருடைய இராப் போஜனத்தில் கலந்து கொண்ட 1,50,00,000-க்கும் அதிகமானோரில், 8,760 பேர் மாத்திரமே இந்தப் பரலோக நியமிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். பரலோக ராஜ்யத்தின் அங்கத்தினர்களாக ஆகப் போகும் இந்த மீதியானோரை தாக்க துணியும் எவரும் உண்மையில் கடவுளுடைய ராஜ்யத்தையே தாக்குகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 12:17.
ராஜா முற்றிலும் வெற்றி சிறக்கிறார்
6. கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாக கிளம்பும் எதிர்ப்பை யெகோவாவும் இயேசுவும் எவ்வாறு கருதுகிறார்கள்?
6 ஸ்தாபிக்கப்பட்ட தம் ராஜ்யத்திற்கு எதிர்ப்பு வருகையில் யெகோவா எப்படி பிரதிபலிப்பார் என்று முன்னறிவிக்கப்பட்டது: “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப் பண்ணுவார். நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன் என்றார்.” (சங்கீதம் 2:4-6) யெகோவாவின் வழிநடத்துதலில் கிறிஸ்து ‘வெற்றி பெறுகிறவராக, முற்றிலும் வெற்றி சிறக்கப்போகும்’ வேளை இப்போது வந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 6:2, NW) இறுதி வெற்றி கிடைக்கப்போகும் சமயத்தில் தம் மக்களுக்கு விரோதமாக கிளம்பும் எதிர்ப்பை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? தம்மையும் ஆளுகை செய்யும் தம் ராஜாவையும் எதிர்ப்பதாகவே அவர் அதை கருதுகிறார். ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என யெகோவா சொல்கிறார். (சகரியா 2:8) இயேசுவும், தம் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு எதை செய்தாலும் செய்யாதே போனாலும் அதை தமக்கே செய்ததைப் போல கருதுவதாக ஆணித்தரமாக குறிப்பிட்டார்.—மத்தேயு 25:40, 45.
7. வெளிப்படுத்துதல் 7:9-ல் விவரிக்கப்பட்டுள்ள ‘திரள் கூட்டத்தார்’ என்ன காரணங்களுக்காக கோகுவின் கோபாவேசத்திற்கு ஆளாகிறார்கள்?
7 அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரை மும்முரமாய் ஆதரித்து வருவோரும் நிச்சயம் கோகுவின் கோபாவேசத்திற்கு ஆளாவார்கள். கடவுளுடைய “புதிய பூமி”யாகப் போகிற இவர்கள், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திரள் கூட்டத்தார்’ ஆவர். (வெளிப்படுத்துதல் 7:9) அவர்கள் ‘வெள்ளை அங்கிகளைத் தரித்து, . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதாக’ சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு, தேவனுக்கு முன்பாகவும் கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும் நல்ல நிலைநிற்கையை கொண்டிருக்கிறார்கள். “தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,” யெகோவாவே உரிமையுள்ள சர்வலோகப் பேரரசர் என வாழ்த்தி வரவேற்கிறார்கள்; யெகோவாவின் அரசாட்சி, அவரால் முடிசூட்டப்பட்ட ராஜாவும், “தேவ ஆட்டுக்குட்டி”யுமாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சி மூலம் நடக்கும்.—யோவான் 1:29, 36.
8. கோகுவின் தாக்குதல் கிறிஸ்துவை என்ன செய்யத் தூண்டும், என்ன விளைவுடன்?
8 கோகுவின் தாக்குதல், கடவுளால் முடிசூட்டப்பட்ட ராஜாவை செயல்படத் தூண்டி அர்மகெதோன் யுத்தத்தில் இறங்கும்படி செய்யும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) யெகோவாவின் பேரரசுரிமையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். ஆனால், கடவுளின் ராஜ்யத்தின் சார்பாக உண்மைப் பற்றுறுதியோடு இருந்ததற்காக உபத்திரவங்களை சகித்திருப்பவர்கள் நிரந்தரமான இளைப்பாறுதலை அனுபவிப்பார்கள். இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.”—2 தெசலோனிக்கேயர் 1:5-8.
9, 10. (அ) பலமிக்க எதிரியை வீழ்த்த யூதாவுக்கு யெகோவா எப்படி உதவினார்? (ஆ) இன்று கிறிஸ்தவர்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
9 வரவிருக்கும் மிகுந்த உபத்திரவம் அர்மகெதோனில் முடிவடையும்; அந்த உபத்திரவத்தின்போது கிறிஸ்து எல்லா தீமைகளையும் எதிர்த்துப் போரிடுவார். ஆனால், இயேசுவை பின்பற்றுபவர்கள் அந்தப் போரில் சண்டையிட அவசியமிருக்காது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இரண்டு கோத்திர ராஜ்யமாகிய யூதாவின் குடிகளும்கூட போரிடுவது அவசியமற்றதாக இருந்தது. அந்தப் போர் யெகோவாவுடையதாக இருந்தது, ஆகவே அவர் வெற்றி அளித்தார். அதைப் பற்றிய பதிவு இவ்வாறு வாசிக்கிறது: “யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்க விதமாய்க் கைகலந்தார்கள். யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்து கிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.”—2 நாளாகமம் 20:22-24.
10 “இந்த முறை நீங்கள் போரிட வேண்டிய அவசியமில்லை” என யெகோவா முன்னறிவித்த விதமாகவே நடந்தது. (2 நாளாகமம் 20:17, NW.) இயேசு கிறிஸ்து ‘முற்றிலும் வெற்றி சிறக்கப்போகும்’ வேளையில் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல மாதிரி. அதுவரை அவர்கள் தீமையை எதிர்த்து தொடர்ந்து போராடுவார்கள்; சொல்லர்த்தமான ஆயுதங்களால் அல்ல, ஆனால் ஆவிக்குரிய ஆயுதங்களால். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் ‘தீமையை நன்மையினாலே வெல்வார்கள்.’—ரோமர் 6:13; 12:17-21; 13:12; 2 கொரிந்தியர் 10:3-5.
கோகுவின் தாக்குதலை முன்நின்று நடத்தப்போவது யார்?
11. (அ) தன்னுடைய தாக்குதலுக்காக எந்த ஏஜென்டுகளை கோகு பயன்படுத்துவான்? (ஆ) ஆவிக்குரிய விழிப்புணர்வோடு இருப்பது எதை உட்படுத்துகிறது?
11 மாகோகின் கோகு என்பது 1914-லிருந்து இழிந்த நிலையிலுள்ள பிசாசாகிய சாத்தானை அடையாளப்படுத்துகிறது. அவன் ஒரு ஆவி சிருஷ்டியாக இருப்பதால் அவன் நேரடி தாக்குதல் நடத்த முடியாது; ஆகவே, தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மனித ஏஜென்டுகளை பயன்படுத்துவான். இந்த மனித ஏஜென்டுகள் யார்? இதைப் பற்றிய விவரங்களை பைபிள் தருகிறதில்லை; என்றாலும், அவர்கள் யாரென கண்டுகொள்ள குறிப்பிட்ட சில அடையாளங்களை அது தருகிறது. பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கு இசைவாக உலக நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வரும்போது, மிகத் தெளிவான ஒரு காட்சி படிப்படியாக நமக்கு கிடைக்கும். யெகோவாவின் மக்கள் ஊகிப்பதை தவிர்த்து, ஆவிக்குரிய விதத்தில் விழிப்போடு இருக்கிறார்கள். பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தோடு ஒத்துப்போகும் அரசியல், மத நிகழ்வுகளைப் பற்றியும் முழுக்க முழுக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
12, 13. கடவுளுடைய ஜனங்கள் மீது வரப்போகும் கடைசி தாக்குதலைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசி எவ்வாறு முன்னறிவித்தார்?
12 கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராக வரப்போகும் கடைசி தாக்குதலைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி கூடுதலான விஷயங்களை வெளிப்படுத்துகிறார்: “அவன் [வடதிசை ராஜா] அநேகரை கொன்றழிக்க மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப் போவான். பின்பு, மகா சமுத்திரத்திற்கும் சிங்காரமான பரிசுத்த பர்வதத்திற்கும் இடையே தன் அரமனையாகிய கூடாரங்களை நாட்டுவான்.”—தானியேல் 11:44, 45, NW.
13 பைபிள் காலங்களில், ‘மகா சமுத்திரம்’ பெரிய சமுத்திரமாகிய மத்தியதரைக் கடலையும், ‘பரிசுத்த பர்வதம்’ சீயோனையும் குறித்தது. இந்த சீயோனைப் பற்றி யெகோவா இவ்வாறு சொன்னார்: “நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன்.” (சங்கீதம் 2:6; யோசுவா 1:4) ‘மகா சமுத்திரத்திற்கும் பரிசுத்த பர்வதத்திற்கும் இடையில்’ உள்ள நிலம், ஆவிக்குரிய அர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் செழிப்பான ஆன்மீக நிலைமையைக் குறிக்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து விலகியிருக்கும் மனித சமுத்திரத்தின் பாகமாக இனிமேலும் இல்லை. அதோடு, பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்து இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். தானியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, வடதிசை ராஜா தன் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்துகையில் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களும் திரள் கூட்டத்தாரை சேர்ந்த அவர்களுடைய உண்மைப் பற்றுறுதியுள்ள தோழர்களும் அவனுடைய முக்கிய குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.—ஏசாயா 57:20; எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:1.
கடவுளின் ஊழியர்கள் எப்படி பிரதிபலிப்பார்கள்?
14. தாக்குதலின்போது கடவுளுடைய மக்கள் என்ன மூன்று காரியங்களை செய்ய வேண்டும்?
14 கடவுளுடைய ஊழியர்கள் மீது தாக்குதல் தொடங்கியவுடன் அவர்கள் என்ன செய்யும்படி எதிர்பார்க்கப்படுவார்கள்? மறுபடியும், யோசபாத்தின் நாட்களில் இருந்த கடவுளுடைய தேசத்தின் பிரதிபலிப்பு இதற்கு மாதிரியாக அமைகிறது. அதன் குடிகள் மூன்று காரியங்களை செய்யும்படி கட்டளையிடப்பட்டனர் என்பதை கவனியுங்கள்: (1) அவரவர் நிலையில் இருந்து, (2) அசையாமல் நின்று, (3) யெகோவாவின் இரட்சிப்பை பார்க்க வேண்டும். இந்த வார்த்தைகளுக்கு இசைவாக கடவுளுடைய மக்கள் இன்று எவ்வாறு செயல்பட வேண்டும்?—2 நாளாகமம் 20:17, NW.
15. யெகோவாவின் மக்கள் தங்களுடைய நிலையில் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
15 அவரவர் நிலையில் இருந்து: கடவுளின் ஜனங்கள் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ந்து தேவனுடைய ராஜ்யத்தை ஊக்கத்தோடு ஆதரிக்கும் நிலையில் இருப்பார்கள். கிறிஸ்தவ நடுநிலைமை வகிக்கும் நிலையிலும் தொடர்ந்திருப்பார்கள். அவர்கள் யெகோவாவுக்கு செய்யும் உத்தம சேவையில் “உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும்,” யெகோவாவின் கிருபைக்காக தொடர்ந்து அவரை பகிரங்கமாக துதிப்பவர்களாயும் இருப்பார்கள். (1 கொரிந்தியர் 15:58; சங்கீதம் 118:28, 29) இன்றுள்ள அழுத்தங்களானாலும் சரி, எதிர்காலத்தில் எழப்போகும் அழுத்தங்களானாலும் சரி, தெய்வீக அங்கீகாரமுடைய இந்நிலையிலிருந்து அவர்களை அசைக்க முடியாது.
16. யெகோவாவின் ஊழியர்கள் எந்த விதத்தில் அசையாமல் நிற்பார்கள்?
16 அசையாமல் நின்று: யெகோவாவின் ஊழியர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள்; மாறாக, அவர்களுடைய முழு நம்பிக்கையையும் யெகோவா மீதே வைப்பார்கள். குழப்பமிக்க உலகிலிருந்து தம் ஊழியர்களை காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும், அவ்வாறு காப்பாற்றப் போவதாக வாக்குறுதியையும் அளித்திருக்கிறார். (ஏசாயா 43:10, 11; 54:15; புலம்பல் 3:26) யெகோவாவில் நம்பிக்கை வைப்பது என்பது, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நூறாண்டுகளுக்கு மேல் அவர் பயன்படுத்தி வரும் காணக்கூடிய அமைப்பின் மீது நம்பிக்கை வைப்பதையும் உட்படுத்தும். யெகோவாவிடமிருந்தும் அவரால் நியமிக்கப்பட்ட அரசரிடமிருந்தும் முன்னின்று வழிநடத்த அதிகாரம் பெற்றிருக்கும் உடன் வணக்கத்தார் மீது உண்மை கிறிஸ்தவர்கள் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு தங்கள் நம்பிக்கையை வைக்க வேண்டும். உண்மையுள்ள இந்த சகோதரர்கள் கடவுளுடைய மக்களை வழிநடத்துவார்கள். அவர்களுடைய வழிநடத்துதலை அசட்டை செய்வது பேரழிவில் முடிவடையலாம்.—மத்தேயு 24:45-47; எபிரெயர் 13:7, 17.
17. கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள் ஏன் யெகோவாவின் இரட்சிப்பை பார்ப்பார்கள்?
17 யெகோவாவின் இரட்சிப்பை பாருங்கள்: கிறிஸ்தவ நடுநிலைமை வகிக்கும் நிலையில் உறுதியாக இருந்து, மீட்புக்காக யெகோவா மீது நம்பிக்கை வைக்கும் அனைவரும் இரட்சிப்பு என்ற பரிசை பெறுவார்கள். கடைசி நேரம் வரை—அவர்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு—யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் வரப்போவதை அறிவிப்பார்கள். யெகோவாவே மெய்க் கடவுள் என்றும், பூமியிலே அவருக்கு உண்மையுள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றும் எல்லா சிருஷ்டிக்கும் தெரிந்தாக வேண்டும். அதன் பிறகு, யெகோவாவின் பேரரசுரிமை பற்றிய நீண்ட விவாதத்திற்கு ஒருபோதும் அவசியம் இருக்காது.—எசேக்கியேல் 33:33; 36:23.
18, 19. (அ) கோகுவின் தாக்குதலிலிருந்து தப்பிப்பிழைப்போரின் உணர்ச்சிகளை யாத்திராகமம் 15-வது அதிகாரத்திலுள்ள வெற்றிப் பாடல் எவ்வாறு படம்பிடித்து காட்டுகிறது? (ஆ) கடவுளுடைய ஜனங்கள் இப்போது செய்ய வேண்டிய ஏற்ற காரியம் எது?
18 கடவுளுடைய ஜனங்கள் புதுத் தெம்புடன் புதிய உலகிற்குள் பிரவேசிப்பார்கள்; செங்கடலிலிருந்து மீட்பு கிட்டிய பிறகு பூர்வ இஸ்ரவேலர்கள் பாடிய வெற்றிப் பாடலைப் போலவே இவர்களும் ஒரு வெற்றிப் பாடலை பாடும் ஆவலோடு அங்கே பிரவேசிப்பார்கள். யெகோவா அவர்களை பாதுகாத்ததற்காக என்றென்றும் நன்றியுள்ளவர்களாக, அன்று பாடப்பட்ட வார்த்தைகளை தனிப்பட்டவர்களாகவும் தொகுதியாகவும் சேர்ந்து எதிரொலிப்பார்கள்: “கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; . . . கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். . . . கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினையை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப் போலப் பட்சித்தது. . . . நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர். . . . நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்.”—யாத்திராகமம் 15:1-19.
19 இப்போது நித்திய ஜீவனுக்கான நம்பிக்கை முன்னொருபோதும் இல்லாதளவுக்கு பிரகாசமாக இருக்கிறது; ஆகவே, கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவுக்கு தங்கள் பக்தியை காண்பிப்பதற்கும், அவரை தங்கள் நித்திய ராஜாவாக சேவிக்க தங்கள் தீர்மானத்தை புதுப்பிப்பதற்கும் இது எப்பேர்ப்பட்ட ஏற்ற வேளை!—1 நாளாகமம் 29:11-13.
உங்களால் விளக்க முடியுமா?
• அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும் வேறே ஆடுகளையும் கோகு ஏன் தாக்குவான்?
• கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு தங்கள் நிலையில் இருப்பார்கள்?
• அசையாமல் நிற்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
• யெகோவா தரும் இரட்சிப்பை கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு பார்ப்பார்கள்?
[பக்கம் 18-ன் படம்]
யோசபாத்தும் அவருடைய ஜனங்களும் போர் செய்யாமலேயே யெகோவா அவர்களுக்கு வெற்றி அளித்தார்
[பக்கம் 20-ன் படம்]
அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளும் யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரிப்பதில் பங்கெடுக்கிறார்கள்
[பக்கம் 22-ன் படம்]
பூர்வ இஸ்ரவேலர்களைப் போல, கடவுளுடைய ஜனங்கள் சீக்கிரத்தில் வெற்றிப் பாடலை பாடுவார்கள்