ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்
“இவர்களே எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.”—கொலோசெயர் 4:11, NW.
1, 2. பவுலுடைய நண்பர்கள் ஆபத்துகளுக்கு மத்தியிலும் அவரை ஏன் சிறையில் சந்தித்தார்கள்?
சிறையில் வாடும் ஒருவரின் நண்பராக இருப்பது உங்களுக்கு ஆபத்தாக இருக்கலாம்; அந்த நபர் அநியாயமாய் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய நண்பராக இருப்பது உங்களுக்கு ஆபத்துதான். சிறை அதிகாரிகள் உங்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடும், நீங்கள் ஏதேனும் குற்றம் செய்கிறீர்களாவென்று உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் அவர்கள் உன்னிப்பாக நோட்டமிட்டு வரக்கூடும். ஆகையால், சிறையிலுள்ள உங்கள் நண்பரோடு அடிக்கடி தொடர்பு கொள்வதற்கும் அவரைப் போய் சந்திப்பதற்கும் தைரியம் தேவைப்படுகிறது.
2 ஆனால், சுமார் 1,900 வருடங்களுக்கு முன் அப்போஸ்தலன் பவுலுடைய நண்பர்களில் சிலர் அதைத்தான் செய்தார்கள். சிறைக்கட்டுகளோடு இருந்த பவுலை சந்திக்க அவர்கள் தயங்கவே இல்லை, ஆம், அவருக்கு தேவையான ஆறுதலையும் ஊக்கத்தையும் கொடுப்பதற்கும், ஆவிக்குரிய ரீதியில் அவரை பலப்படுத்துவதற்கும் அவர்கள் தயக்கம் காட்டவேயில்லை. பற்றுமாறா அந்த நண்பர்கள் யார்? அவர்களுடைய தைரியம், உண்மைப்பற்றுறுதி, நட்பு ஆகியவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—நீதிமொழிகள் 17:17.
‘பக்கபலம்’
3, 4. (அ) பவுலுடைய நண்பர்களில் ஐவர் யார், அவர்கள் அவருக்கு எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? (ஆ) ‘பக்கபலம்’ என்றால் என்ன?
3 இப்போது சுமார் பொ.ச. 60-ம் ஆண்டுக்கு பின்னோக்கிச் செல்வோம் வாருங்கள். அப்போஸ்தலன் பவுல், தேசத்துரோகி என்ற பொய் முத்திரை குத்தப்பட்டு ரோமிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தள்ளப்பட்டிருக்கிறார். (அப்போஸ்தலர் 24:5; 25:11, 12) தனக்கு உறுதுணையாய் இருந்த ஐந்து பேர் யார் யாரென அவர் குறிப்பிடுகிறார்: ஆசியா மாகாணத்திலிருந்து வந்திருந்த தன்னுடைய தூதுவனும், ‘கர்த்தருக்குள் உடன்வேலையாளாகவும்’ இருந்த தீகிக்கு; கொலோசெயிலிருந்து வந்திருந்த ‘உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனான’ ஒநேசிமு; தெசலோனிக்கேயிலிருந்து வந்திருந்த மக்கெதோனிய நாட்டவனும், பவுலோடுகூட ஒருசமயம் ‘காவலிலிருந்தவனுமான’ அரிஸ்தர்க்கு; பவுலின் மிஷனரி தோழனான பர்னபாவினுடைய உறவினனும் சுவிசேஷ எழுத்தாளனுமான மாற்கு; “தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு” பவுலோடு உடன்வேலையாளாயிருந்த யுஸ்து ஆகியவர்களே அவர்கள். இந்த ஐவரைப் பற்றி பவுல் பின்வருமாறு சொல்கிறார்: “இவர்களே எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.”—கொலோசெயர் 4:7-11, NW.
4 தன்னுடைய உண்மை நண்பர்கள் தனக்கு செய்த உதவியைப் பற்றி பவுல் வலிமையான ஒரு குறிப்பை சொன்னார். அதில் ‘பக்கபலம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள (பாரிகோரியா [pa·re·go·riʹa]) கிரேக்க வார்த்தையை அவர் பயன்படுத்தினார்; முழு பைபிளிலும் இந்த ஒரேவொரு வசனத்தில் மட்டும்தான் இவ்வார்த்தை காணப்படுகிறது. இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன, மருத்துவ சம்பந்தமாக இது முக்கியமாய் பயன்படுத்தப்பட்டது.a இது, ‘தேற்றுதல், துன்பம் தணித்தல், ஆறுதலளித்தல், அல்லது துயர் நீக்குதல்’ என மொழிபெயர்க்கப்படலாம். பவுலுக்கு தேவைப்பட்டதும் அத்தகைய பக்கபலம்தான், அதை அந்த ஐவரும் அவருக்கு அளித்தார்கள்.
பவுலுக்கு ஏன் ‘பக்கபலம்’ தேவைப்பட்டது
5. அப்போஸ்தலனாக இருந்தாலும், பவுலுக்கு என்ன தேவைப்பட்டது, நம் எல்லாருக்கும் அவ்வப்போது என்ன தேவைப்படுகிறது?
5 அப்போஸ்தலனாக இருந்த பவுலுக்கு பக்கபலம் தேவைப்பட்டதென்பது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். என்றாலும், அது அவருக்கு தேவையாக இருந்தது. உண்மைதான், பவுலுக்கு பலமான விசுவாசம் இருந்தது; அதோடு அவர் ‘அதிகமாய் அடி’ வாங்கியிருந்தாலும், ‘அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டிருந்தாலும்’ வேறு பல வேதனைகளை சகித்திருந்தாலும் அத்தகைய பயங்கர சித்திரவதைகளிலிருந்து உயிர் தப்பியிருந்தார். (2 கொரிந்தியர் 11:23-27) ஆனாலும், அவரும் ஒரு மனிதர்தான், எல்லாருக்குமே இன்றைக்கு இல்லாவிட்டால் என்றைக்காவது ஒருநாள் ஆறுதல் தேவையாயிருக்கும், அதோடு மற்றவர்களுடைய உதவியால் தங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கும். இயேசுவைப் பொருத்ததிலும் இது உண்மையாக இருந்தது. அவர் பூமியிலிருந்த கடைசி இரவன்று, கெத்செமனே தோட்டத்தில் ஒரு தேவதூதன் அவருக்கு முன்பாக தோன்றி, ‘அவரைப் பலப்படுத்தினார்.’—லூக்கா 22:43.
6, 7. (அ) ரோமில், பவுலை ஏமாற்றமடைய செய்தது யார், அவரை ஊக்குவித்தது யார்? (ஆ) ரோமில் பவுலுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் அவருக்கு எத்தகைய உதவிகளை செய்து, அவருக்கு “பக்கபலமாக” இருந்ததை நிரூபித்தார்கள்?
6 பவுலுக்கும்கூட பக்கபலம் தேவைப்பட்டது. ஒரு கைதியாக அவர் ரோமுக்கு அழைத்து வரப்பட்டபோது, அவருடைய சொந்த ஜனங்களே அவரை அன்பாக வரவேற்கவில்லை. இந்த யூதர்களில் பெரும்பாலோர் ராஜ்ய செய்திக்கு செவிகொடுக்கவில்லை. யூதரில் பிரதானமானவர்கள் பவுலை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்று அவரை சந்தித்த பிறகு என்ன நடந்ததென்பதை அப்போஸ்தலர் நடபடிகளிலுள்ள பதிவு குறிப்பிடுகிறது: ‘அவர் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்தபடியால்’ அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். (அப்போஸ்தலர் 28:17, 24, 25) யெகோவா காட்டிய தகுதியற்ற தயவிற்கு அவர்கள் போற்றுதல் காட்டாதிருந்தது பவுலுடைய மனதிற்கு எவ்வளவு வேதனையூட்டியிருக்கும்! அதைக் குறித்த அவருடைய உணர்ச்சிகளை ரோமிலிருந்த சபைக்கு சில வருடங்களுக்கு முன் அவர் எழுதிய நிருபத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது; அவர் எழுதியதாவது: “உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு [யூதர்களுக்கு] மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.” (ரோமர் 9:2, 3, பொது மொழிபெயர்ப்பு) என்றாலும், அதே ரோமில் அவர் பற்றுமாறா உண்மைத் தோழர்களையும் கண்டார், அவர்களுடைய தைரியமும் பாசமும் அவர் இதயத்திற்கு இதமளித்தன. அவர்களே அவருடைய மெய்யான ஆவிக்குரிய சகோதரர்கள்.
7 அந்த ஐந்து சகோதரர்களும் பவுலுக்கு பக்கபலமாக இருந்ததை எவ்வாறு நிரூபித்தார்கள்? பவுல் சிறையில் இருந்ததால், அவர்கள் அவரைவிட்டு ஒதுங்கிப் போய்விடவில்லை. மாறாக, அவர்கள் மனப்பூர்வமாய் பவுலுக்கு வேண்டிய உதவிகளை அன்புடன் செய்து கொடுத்தார்கள்; அவர் அடைக்கப்பட்டிருந்ததால் அவரால் செய்ய முடியாத சில வேலைகளையெல்லாம் அவர்கள் செய்தார்கள். உதாரணத்திற்கு, பவுல் வாய்மொழியாக சொன்ன கட்டளைகளையும், அவருடைய கடிதங்களையும் வெவ்வேறு சபைகளுக்கு எடுத்துச் செல்லும் தூதுவர்களாக அவர்கள் செயல்பட்டார்கள்; ரோமிலும் பிற இடங்களிலுமிருந்த சகோதரர்களின் நலனைப் பற்றிய உற்சாகமூட்டும் அறிக்கைகளை அவரிடம் வந்து சொன்னார்கள். அதோடு, குளிர்கால உடைகள், எழுதுவதற்குத் தேவைப்படும் பொருட்கள், சுருள்கள் போன்ற அத்தியாவசியமானவற்றை அவர் பெற்றுக்கொள்வதற்கும் உதவி செய்தார்கள். (எபேசியர் 6:21, 22; 2 தீமோத்தேயு 4:11-13) இந்த உதவிகள் அனைத்தும் சிறைப்பட்டுக் கிடந்த அந்த அப்போஸ்தலனுக்கு பக்கபலமாக இருந்து அவரை ஊக்குவித்தன; இதனால் அவர் மற்றவர்களுக்கு, ஏன் அனைத்து சபைகளுக்குமே “பக்கபலமாக” இருக்க முடிந்தது.—ரோமர் 1:10, 11.
“பக்கபலமாக” இருப்பது எப்படி
8. தனக்கு ‘பக்கபலம்’ தேவை என்பதை பவுல் தாழ்மையோடு ஒப்புக்கொண்டதிலிருந்து நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்?
8 பவுலையும் அவருடைய ஐந்து சக ஊழியர்களையும் பற்றிய இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? குறிப்பாக ஒரு பாடத்தை இதில் நாம் கவனிக்கலாம், அதாவது: துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஒருவருக்கு தைரியமும் சுய தியாகமும் அவசியம். மேலும், துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் சமயங்களில் நமக்கு உதவி தேவை என்பதை ஒப்புக்கொள்ள மனத்தாழ்மையும் அவசியம். பவுல், தனக்கு உதவி தேவைப்படுவதை ஒப்புக்கொண்டது மட்டுமல்ல, அதை கண்ணியத்தோடும் ஏற்றுக்கொண்டார்; அதுமட்டுமல்ல, அவ்வாறு உதவி செய்தவர்களை பாராட்டவும் செய்தார். மற்றவர்களின் உதவியை பெறுவது பலவீனத்திற்கு அடையாளம் என்றோ அது ஓர் அவமானம் என்றோ அவர் நினைக்கவில்லை; நாமும் அவ்வாறு நினைக்கக்கூடாது. ‘எனக்கு எந்தப் பக்கபலமும் அவசியமில்லை’ என சொல்வோமானால், நாம் அசாதாரண மனிதர்களாகத்தான் இருப்போம். ஒரு பரிபூரண மனிதரும்கூட சில நேரங்களில் உதவிக்காக கதறி அழ வேண்டியிருக்கும் என்பதை இயேசுவின் உதாரணம் காண்பிக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்.—எபிரெயர் 5:7.
9, 10. ஒரு நபர் தனக்கு உதவி தேவை என்பதை ஒப்புக்கொள்கையில் என்ன நன்மை விளையும், இது குடும்பத்தார் மீதும் சபையார் மீதும் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
9 பொறுப்பான ஸ்தானங்களிலுள்ள சகோதரர்கள் தங்களுக்கும் வரையறைகள் உண்டு என்பதையும், மற்றவர்களுடைய ஆதரவு தங்களுக்கு தேவை என்பதையும் ஒப்புக்கொள்கிறபோது நல்ல பலன்கள் கிடைக்கும். (யாக்கோபு 3:2) அவ்வாறு ஒப்புக்கொள்கையில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களின் கீழ் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு பலப்படும், இது அவர்களுக்கு மத்தியில் சிநேகப்பான்மையான, ஒளிவுமறைவற்ற பேச்சுத்தொடர்புக்கு மேலும் வழிசெய்யும். உதவியை ஏற்றுக்கொள்கிறவர்களின் பணிவு அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. முன்நின்று நடத்துபவர்களுக்கும் பலவீனங்கள் இருக்கின்றன என்பதையும், அவர்கள் சிநேகப்பான்மையுள்ளவர்கள் என்பதையும் அது எடுத்துக் காட்டுகிறது.—பிரசங்கி 7:20.
10 உதாரணமாக, தங்கள் பெற்றோரும் சிறுவயதில் இதேபோன்ற பல சவால்களை சந்தித்திருக்கிறார்கள் என்பதை பிள்ளைகள் அறியும்போது, தங்களுடைய பிரச்சினைகளையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு பெற்றோரின் உதவியை ஏற்றுக்கொள்வது பிள்ளைகளுக்கு எளிதாக இருக்கும். (கொலோசெயர் 3:21) இவ்விதத்தில், பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பேச்சுத்தொடர்பு அதிகரிக்கும். வேதப்பூர்வ விளக்கங்களை இன்னும் சிறந்த விதத்தில் பகிர்ந்துகொள்ளவோ, அவற்றை எந்த ஆட்சேபணையுமின்றி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவோ முடியும். (எபேசியர் 6:4) அவ்வாறே, பிரச்சினைகளையும், பயங்களையும், குழப்பங்களையும் மூப்பர்கள்கூட சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதை சபையார் உணரும்போது, அவர்களிடமிருந்து வரும் உதவியை ஏற்றுக்கொள்ள இன்னும் தயாராய் இருப்பார்கள். (ரோமர் 12:3; 1 பேதுரு 5:3) இது, தடையற்ற பேச்சுத்தொடர்புக்கு வழிவகுக்கும்; இதன் பயனாக, வேதப்பூர்வ ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளலாம், அதோடு விசுவாசமும் பலப்படும். அப்படிப்பட்ட பக்கபலம் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு எப்போதையும்விட இப்போது அவசியம் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:1.
11. ஏன் இத்தனை அநேகருக்கு இன்று ‘பக்கபலம்’ தேவைப்படுகிறது?
11 நாம் யாராக இருந்தாலும் சரி, எங்கு வசித்தாலும் சரி, எந்த வயதினராய் இருந்தாலும் சரி, நம் எல்லாருக்குமே சில சமயம் அழுத்தங்கள் வரத்தான் செய்கின்றன. இன்றைய உலகில் இது சர்வ சகஜம். (வெளிப்படுத்துதல் 12:12) நம்மை உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ சோர்ந்து போகச் செய்கிற இப்படிப்பட்ட சூழ்நிலைமைகள் நம்முடைய விசுவாசத்தின் தரத்தை சோதித்துப் பார்க்கின்றன. வேலை செய்யும் இடத்திலோ, பள்ளியிலோ, குடும்பத்திலோ, சபையிலோ நமக்கு இக்கட்டான சூழ்நிலைகள் உருவாகலாம். தீரா வியாதி அல்லது முன்பு ஏற்பட்ட ஏதோவொரு அதிர்ச்சியான சம்பவம் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம். அச்சமயங்களில், மணத்துணையோ, மூப்பரோ, ஒரு நண்பரோ அன்பாகப் பேசி உற்சாகப்படுத்துகையிலும், உதவிகள் செய்கையிலும் ஆ, அது மனதிற்கு எவ்வளவு இதமளிக்கும்! சொல்லப்போனால், அப்படி செய்வது எரிகிற புண் மீது களிம்பைப் பூசுவது போல் இருக்கும்! எனவே, உங்கள் சகோதரர்களில் ஒருவர் அத்தகைய ஒரு சூழலில் இருப்பதை கவனித்தீர்களென்றால், அவருக்கு பக்கபலமாக இருங்கள். அல்லது, மனதை அலைக்கழிக்கும் ஒரு பிரச்சினையால் நீங்கள் பாரமடைந்திருந்தீர்கள் என்றால், ஆவிக்குரிய தகுதியுள்ளவர்களிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்.—யாக்கோபு 5:14, 15.
சபை எவ்வாறு உதவலாம்
12. சபையிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் சகோதரர்களை பலப்படுத்த என்ன செய்யலாம்?
12 இளைஞர்கள் உட்பட, சபையிலுள்ள ஒவ்வொருவருமே மற்றவர்களை பலப்படுத்த ஏதாவது செய்யலாம். உதாரணத்திற்கு, கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் நீங்கள் தவறாமல் கலந்துகொள்வது, மற்றவர்களுடைய விசுவாசத்தை வலுவூட்ட பெரிதும் உதவுகிறது. (எபிரெயர் 10:24, 25) மன உறுதியோடு நீங்கள் பரிசுத்த சேவையில் ஈடுபடுவது யெகோவாவிடமுள்ள உங்கள் பற்றுறுதியை காண்பிக்கிறது, அதோடு கஷ்டங்கள் மத்தியிலும் ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் விழிப்போடு இருக்கிறீர்கள் என்பதை காண்பிக்கிறது. (எபேசியர் 6:18) அத்தகைய மன உறுதி மற்றவர்களை பலப்படுத்தும்.—யாக்கோபு 2:18.
13. சிலர் ஏன் செயலற்றவர்களாகி விடலாம், அவர்களுக்கு எவ்வாறு உதவுவது?
13 சில சமயங்களில், வாழ்க்கைப் பிரச்சினைகளோ வேறு கஷ்டங்களோ சிலரை வெளி ஊழியத்தில் ஈடுபடுவதை குறைத்துக்கொள்ளும்படி அல்லது செயலற்றவர்களாகிவிடும்படி செய்யலாம். (மாற்கு 4:18, 19) செயலற்ற பிரஸ்தாபிகளை ஒருவேளை நாம் சபைக்கூட்டங்களில் பார்க்காவிட்டாலும், அவர்களுக்கு இன்னமும் கடவுள் மீது அன்பு இருக்கக்கூடும். எனவே அப்படிப்பட்டவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்த என்ன செய்யலாம்? அவர்களை சந்திப்பதன் மூலம் மூப்பர்கள் அன்பான உதவியளிக்கலாம். (அப்போஸ்தலர் 20:35) அப்படிப்பட்டவர்களுக்கு உதவுமாறு சபையிலுள்ள மற்றவர்களையும் மூப்பர்கள் கேட்கலாம். அத்தகைய அன்பான சந்திப்புகள், விசுவாசத்தில் பலவீனமாய் இருப்பவர்களுக்கு ஏற்ற ஓர் அருமருந்தாக இருக்கலாம்.
14, 15. மற்றவர்களை பலப்படுத்துவது சம்பந்தமாக பவுல் என்ன ஆலோசனை வழங்குகிறார்? அவருடைய ஆலோசனையை பின்பற்றிய ஒரு சபையின் உதாரணத்தை சொல்லுங்கள்.
14 “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்” என பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) ஒருவேளை அந்தத் ‘திடனற்றவர்கள்,’ தைரியத்தையெல்லாம் இழந்து வருவதைப் போலவும், அடுக்கடுக்காக ஏற்படும் துன்பங்களை தனியாக சமாளிக்க முடியாமல் திணறுவதைப் போலவும் உணரலாம். அத்தகையோருக்கு உங்களால் உதவிக்கரம் நீட்ட முடியுமா? “பலவீனரைத் தாங்குங்கள்” என்ற சொற்றொடர் “கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்” அல்லது பலவீனரை “இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தம்முடைய எல்லா செம்மறியாடுகள் மீதும் யெகோவா அன்பு காட்டுகிறார், அவர்களை பேணிப் பாதுகாக்கிறார். அதுமட்டுமல்ல, அவர்களை அற்பமாக நினைப்பதுமில்லை, அவர்கள் எவருமே விசுவாசத்தைவிட்டு வழுவிப் போவதை விரும்புவதுமில்லை. ஆவிக்குரிய விதத்தில் பலவீனமானவர்கள் இன்னும் பலப்படும் வரையில் அவர்களை ‘கெட்டியாக பிடித்துக்கொள்ள’ சபைக்கு உங்களால் உதவ முடியுமா?—எபிரெயர் 2:1.
15 ஆறு வருடங்களாக செயலற்றுப் போயிருந்த ஒரு தம்பதியரை மூப்பர் ஒருவர் சென்று சந்தித்தார். பின்னர் அவர் இவ்வாறு எழுதுகிறார்: “அந்த தம்பதியர் மீது முழு சபையுமே அன்பை பொழிந்து, அக்கறை காட்டியதால், அவர்களுடைய மனம் நெகிழ்ந்துபோனது, எனவே அவர்கள் திரும்பவும் மந்தைக்குள் வந்துவிட்டார்கள்.” முன்பு செயலற்ற பிரஸ்தாபியாக இருந்த அந்த சகோதரி சபையார் அடிக்கடி வந்து சந்தித்ததைப் பற்றி என்ன சொல்கிறார்? “எங்களை சந்திக்க வந்த சகோதரர்களாகட்டும், அவர்களுடன் வந்த சகோதரிகளாகட்டும், ஒருமுறைகூட எங்களை கண்டிக்கிற விதத்திலோ, கடுமையாக விமர்சிக்கிற விதத்திலோ பேசவுமில்லை, நடந்துகொள்ளவுமில்லை; மாறாக, அவர்கள் எங்களை புரிந்துகொண்டு, பைபிளிலிருந்து உற்சாகத்தை அளித்தார்கள். அதுவே திரும்பவும் சுறுசுறுப்புள்ள பிரஸ்தாபிகளாக ஆவதற்கு எங்களுக்கு உதவியது.”
16. தேவைப்படுகிறவர்களுக்கு பலத்தை அளிக்க யார் எப்போதுமே தயாராய் இருக்கிறார்?
16 ஆம், மற்றவர்களுக்கு பக்கபலமாக இருப்பது உண்மை மனமுள்ள கிறிஸ்தவர் ஒருவருக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் சூழ்நிலைகள் மாறும்போது, ஒருவேளை நம் சகோதரர்களிடமிருந்து நாம் பலத்தைப் பெற்றுக் கொள்வோம். ஆனால், எதார்த்தமாக பார்க்கும்போது ஏதோவொரு அவசர ஆபத்தில் எந்த மனிதருடைய உதவியும் கிடைக்காமல் போகும் நிலைமை நமக்கு ஏற்படக்கூடும். என்றாலும், நமக்கு பலத்தை அளிப்பதற்கு ஒருவர் எப்போதுமே தயாராக இருக்கிறார், உதவுவதற்கு அவர் எப்போதுமே மனமுள்ளவராகவும் இருக்கிறார், ஆம், அவரே நம் தேவனாகிய யெகோவா.—சங்கீதம் 27:10.
யெகோவா —பலத்தின் ஒரே உன்னத ஊற்றுமூலர்
17, 18. தம் மகன் இயேசு கிறிஸ்துவை யெகோவா எந்தெந்த வழிகளில் பலப்படுத்தினார்?
17 இயேசு கழுமரத்தில் அறையப்பட்டிருந்தபோது, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என உரக்க சத்தமிட்டார். (லூக்கா 23:46) பிறகு உயிர்விட்டார். அதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர்தான் அவர் கைது செய்யப்பட்டிருந்தார், அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை தனியாக விட்டுவிட்டு, பயத்தில் ஓடியே போய்விட்டிருந்தார்கள். (மத்தேயு 26:56) பலத்தின் ஒரே ஊற்றுமூலரான தம் பரலோக தகப்பனைத் தவிர வேறு யாருமின்றி அப்போது அவர் தன்னந்தனியாக விடப்பட்டார். இந்தச் சூழ்நிலையில், யெகோவா மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தம்முடைய தகப்பனிடம் அவர் பற்றுறுதியோடு இருந்ததால், யெகோவா அவருக்கு பற்றுமாறா ஆதரவை அளித்தார்.—சங்கீதம் 18:25, NW; எபிரெயர் 7:26, NW.
18 தம் மகன் இயேசு கடைசிவரை தம் உத்தமத்தை காத்துக்கொள்வதற்குத் தேவைப்பட்ட அனைத்தையும் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது யெகோவா தொடர்ந்து அளித்தார். உதாரணத்திற்கு, பூமியில் தம் ஊழியத்தை இயேசு தொடங்கிய சமயத்தில், முழுக்காட்டுதல் பெற்றவுடனேயே தம் பிதாவின் குரலை கேட்டார்; பிதா தம்மை அங்கீகரித்ததையும் தம் மீதுள்ள அன்பை உறுதிப்படுத்தியதையும் அவர் கேட்டார். அதோடு, இயேசுவுக்கு ஆதரவு தேவைப்பட்டபோது, அவரை பலப்படுத்துவதற்கு யெகோவா தேவதூதர்களை அனுப்பினார். அதுமட்டுமல்ல, இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மாபெரும் சோதனையை சந்தித்தபோது, அவருடைய விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் யெகோவா கேட்டு, அங்கீகரித்தார். நிச்சயமாகவே இவையெல்லாம் இயேசுவுக்கு பக்கபலத்தை அளித்தன.—மாற்கு 1:11, 13; லூக்கா 22:43.
19, 20. நமக்கு தேவைப்படும் சமயத்தில், யெகோவா நம்மை பலப்படுத்துவார் என நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?
19 நம்முடைய பலத்திற்கு முக்கிய ஊற்றுமூலராக இருக்கவும் யெகோவா விரும்புகிறார். (2 நாளாகமம் 16:9) மகா பலத்திற்கும், மகா வல்லமைக்கும் மெய் ஊற்றுமூலரான அவர், தேவைப்படும் சமயத்தில் நமக்கு பக்கபலமாக இருப்பார். (ஏசாயா 40:26) போர், வறுமை, நோய், மரணம் அல்லது நம்முடைய சொந்த அபூரணம் நமக்கு பெரும் அழுத்தத்தைத் தரலாம். ஒரு “பலத்த சத்துரு”வைப் போல, வாழ்க்கையின் துயரங்கள் நம்மை திணறடிக்கும்போது, யெகோவா நம் பலமும், வல்லமையுமாய் இருப்பார். (சங்கீதம் 18:17; யாத்திராகமம் 15:2) நமக்கு உதவ சக்தி வாய்ந்த ஒன்று அவரிடம் இருக்கிறது—அதுதான் பரிசுத்த ஆவி. ‘பலமில்லாதவன்,’ “கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவ”தற்காக அவர் தமது ஆவியின் மூலம் அவனுக்கு பலமளிக்கிறார்.—ஏசாயா 40:29, 31; NW.
20 இந்த சர்வலோகத்திலேயே மிகவும் வல்லமை வாய்ந்தது கடவுளுடைய ஆவி. “எனக்கு வல்லமை அளிப்பவராலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலமுண்டு” என பவுல் குறிப்பிட்டார். ஆம், சீக்கிரத்தில் வரவிருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட பரதீஸில், கடவுள் ‘சகலத்தையும் புதிதாக்கும்வரை’ வேதனை அளிக்கும் எல்லா பிரச்சினைகளையும் சகிப்பதற்காக “இயல்புக்கு மீறிய சக்தியை” நம் அன்பான பரலோக தகப்பன் நமக்கு அருளுவார்.—பிலிப்பியர் 4:13, NW; 2 கொரிந்தியர் 4:7, NW; வெளிப்படுத்துதல் 21:4, 5.
[அடிக்குறிப்பு]
a டபிள்யூ. ஈ. வைன் எழுதிய பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வார்த்தைகளுடைய வைன்ஸ் கம்ப்ளீட் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்த வார்த்தையின் (பாரிகோரியா) ஒரு வினைச்சொல் வடிவம் எரிச்சலைத் தணிக்கும் மருந்துகளை குறிக்கிறது.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ரோமிலிருந்த சகோதரர்கள் பவுலுக்கு எப்படி “பக்கபலமாக” இருந்தார்கள்?
• சபையில் நாம் எந்த வழிகளில் “பக்கபலமாக” இருக்க முடியும்?
• யெகோவா நம்முடைய பலத்தின் ஒரே உன்னத ஊற்றுமூலராக இருப்பது எப்படி?
[பக்கம் 18-ன் படம்]
சகோதரர்கள் தங்கள் பற்றுமாறா ஆதரவையும், ஊக்கத்தையும், தனிப்பட்ட உதவிகளையும் பவுலுக்கு அளித்ததன் மூலம் அவருக்கு உண்மையிலேயே “பக்கபலமாக” இருந்தார்கள்
[பக்கம் 21-ன் படம்]
மந்தையை பலப்படுத்துவதில் மூப்பர்கள் முன்னின்று வழிநடத்துகிறார்கள்