பரமண்டல ஜெபம் அதன் அர்த்தம்
மலைப்பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து சொன்ன பரமண்டல ஜெபம், பைபிளில் மத்தேயு 6-ம் அதிகாரத்தில் 9-13 வசனங்களில் காணப்படுகிறது. இந்த ஜெபத்தை சொல்லிக் கொடுப்பதற்கு சற்று முன்பு, “நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்” என இயேசு சொன்னார்.—மத்தேயு 6:7.
ஆகவே, பரமண்டல ஜெபத்தை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மனப்பாடமாக சொல்ல வேண்டுமென்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில், வேறு சிலருக்காக இதே ஜெபத்தை அவர் மீண்டும் சொன்னார் என்பது உண்மைதான். (லூக்கா 11:2-4) ஆனால் மத்தேயு, லூக்கா சுவிசேஷ பதிவுகளை ஒப்பிடுகையில் இந்த ஜெபத்தின் வார்த்தைகள் ஓரளவு வேறுபடுகின்றன. அதுமட்டுமல்ல, இயேசுவும் அவரது சீஷர்களும் பின்னர் ஜெபித்த சமயங்களில் இந்த மாதிரி ஜெபத்தின் வார்த்தைகளை அப்படியே அவர்கள் சொல்லவில்லை.
அப்படியென்றால், பரமண்டல ஜெபம் ஏன் பைபிளில் காணப்படுகிறது? கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதமாக எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை இந்த மாதிரி ஜெபத்தின் மூலம் இயேசு நமக்குக் கற்பிக்கிறார். இந்த ஜெபத்தில், வாழ்க்கையின் முக்கிய கேள்விகளுக்கு பதில்களையும் நாம் காண்கிறோம். எனவே பரமண்டல ஜெபத்தின் ஒவ்வொரு பகுதியையும் இப்போது ஆராய்வோமாக.
கடவுளுடைய பெயர் என்ன?
“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) “எங்கள் பிதாவே” என அழைப்பதன் மூலம் கடவுளிடம் நெருங்கி வருவதற்கு இந்த மாதிரி ஜெபத்திலுள்ள ஆரம்ப வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. அன்பும் புரிந்துகொள்ளுதலும் உள்ள பெற்றோரிடம் இயல்பாகவே ஒரு பிள்ளை நெருங்கி வருவதைப் போல, நாம் சொல்வதைக் கேட்க கடவுள் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பரலோக தகப்பனை நாம் அணுகலாம். “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” என தாவீது ராஜா பாடினார்.—சங்கீதம் 65:2.
கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் கடவுளுடைய பெயர் என்ன? பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.’ (சங்கீதம் 83:17) பைபிளில் யெகோவா என்ற பெயரை எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா?
சொல்லப்போனால், யெகோவா என்ற பெயர் சுமார் 7,000 தடவை பூர்வ பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகிறது. ஆனால், பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் தங்கள் மொழிபெயர்ப்புகளிலிருந்து இந்தப் பெயரை அடியோடு நீக்கியே விட்டார்கள். இதன் காரணமாகத்தான் தமது பெயரைப் பரிசுத்தப்படுத்தும்படி படைப்பாளரிடம் நாம் ஜெபிக்கிறோம். (எசேக்கியேல் 36:23) அதற்கேற்ப நாம் செயல்படுவதற்கு ஒரு வழி, ஜெபத்தில் யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துவதாகும்.
கத்தோலிக்க மதத்தில் வளர்ந்த பெட்ரிஷா என்ற பெண்ணுக்கு, பரமண்டல ஜெபம் நன்கு தெரிந்த ஜெபம். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிளிலிருந்து கடவுளுடைய பெயரை எடுத்துக் காட்டியபோது அவருக்கு எப்படி இருந்தது? “என்னால் நம்பவே முடியவில்லை! எனவே என் சொந்த மொழியிலிருந்த பைபிளை எடுத்துப் பார்த்தேன், அதிலும் அப்பெயர் இருந்தது. பிறகு அந்த சாட்சி எனக்கு மத்தேயு 6:9, 10-ஐக் காட்டி, பரமண்டல ஜெபத்துடன் கடவுளுடைய பெயர் சம்பந்தப்பட்டிருப்பதை விளக்கினார்கள். உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன், எனக்கு பைபிளைக் கற்றுக் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்” என்பதாக தனது அனுபவத்தை வியப்புடன் கூறினார்.
கடவுளுடைய சித்தம் பூமியிலே செய்யப்பட வேண்டும்
“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) இயேசு கற்பித்த மாதிரி ஜெபத்தின் இப்பகுதி எப்படி நிறைவேறும்? சாந்தமும் அமைதியும் தவழும் இடமாக பரலோகத்தை பெரும்பாலோர் கற்பனை செய்கிறார்கள். பரலோகம் யெகோவாவுடைய ‘பரிசுத்தமும் மகிமையுமுள்ள வாசஸ்தலம்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 63:15) ஆகவேதான் கடவுளுடைய சித்தம் ‘பரமண்டலத்தில் செய்யப்படுவதைப் போலவே’ பூமியிலும் செய்யப்படும்படி நாம் ஜெபிக்கிறோம்! ஆனால் இது எப்போதாவது நிறைவேறுமா?
யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய தானியேல் இவ்வாறு முன்னுரைத்தார்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த [பூமிக்குரிய] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) சீக்கிரத்தில், நீதி குடிகொள்ளும் ஆட்சியின் மூலம் உலகளாவிய சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு இந்தப் பரலோக ராஜ்யம், அதாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.—2 பேதுரு 3:13.
கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டும், அவருடைய சித்தம் பூமியில் செய்யப்பட வேண்டும் என்று ஜெபிப்பது, விசுவாசத்தின் வெளிக்காட்டாகும், இது ஒருபோதும் ஏமாற்றத்தை அளிக்காது. கிறிஸ்தவ அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” பிறகு யோவான் இவ்வாறு கூறினார்: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: . . . இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:3-5.
ஜெபமும் நம் சரீர தேவைகளும்
நாம் ஜெபிக்கும்போது கடவுளுடைய பெயரோடும் அவருடைய சித்தத்தோடும் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மாதிரி ஜெபத்தின் மூலம் இயேசு காட்டினார். இருப்பினும், நம்முடைய சொந்த தேவைகளைப் பற்றி தகுந்த விதத்தில் யெகோவாவிடம் விண்ணப்பிக்கலாம் என்பதையும் அந்த ஜெபம் நமக்குக் காட்டுகிறது.
அவற்றில் முதலாவது: “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” (மத்தேயு 6:11) இது, பொருள் செல்வத்துக்கான வேண்டுதல் அல்ல. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்” என ஜெபிப்பதற்கு இயேசு நம்மை உற்சாகப்படுத்தினார். (லூக்கா 11:3) கடவுளை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், நம் அன்றாட தேவைகளை அவர் நமக்கு அளிப்பார் என்ற விசுவாசத்துடன் ஜெபிப்பது, பரமண்டல ஜெபத்திற்கு இசைவாக உள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகளை எண்ணி சதா கவலைப்படுவது நம்முடைய ஆன்மீக தேவைகளை அசட்டை செய்வதற்கும், கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றை செய்யாமல் விட்டுவிடுவதற்கும் வழிநடத்தக்கூடும். ஆனால் கடவுளுடைய வணக்கத்திற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்போமானால், உணவு, உடை போன்ற பொருளாதார தேவைகளுக்காக விண்ணப்பிக்கும் போது நம் ஜெபம் கேட்கப்படும் என உறுதியாக இருக்கலாம். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய [தேவனுடைய] நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என இயேசு சொன்னார். (மத்தேயு 6:26-33) நாம் எல்லாரும் பாவிகளாக இருப்பதாலும், நமக்கு மன்னிப்பு தேவைப்படுவதாலும் கடவுளுடைய நீதியைத் தேடுவது எளிதான விஷயமல்ல. (ரோமர் 5:12) பரமண்டல ஜெபம் அந்த விஷயத்திற்கும்கூட கவனம் செலுத்துகிறது.
நம் ஜெபங்களும் மன்னிப்பும்
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” (மத்தேயு 6:12) இந்தக் ‘கடன்கள்,’ லூக்கா பதிவு செய்திருக்கும் பரமண்டல ஜெபத்தில் ‘பாவங்கள்’ என குறிப்பிடப்படுகின்றன. (லூக்கா 11:4) யெகோவா நம் பாவங்களை உண்மையிலேயே மன்னிப்பாரா?
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது மோசமான பாவங்களை செய்திருந்தபோதிலும் அவர் மனந்திரும்பி, திடநம்பிக்கையுடன் இவ்வாறு ஜெபித்தார்: “ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும் [“மன்னிக்க தயாராக இருப்பவரும்,” NW], உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 86:5) இது அதிக ஆறுதல் தரும் விஷயம் அல்லவா! மனந்திருந்தி ஜெபிப்பவர்களின் பாவங்களை ‘மன்னிப்பதற்கு’ நம் பரலோக தகப்பன் ‘தயாராக இருக்கிறார்.’ கடனை முழுமையாக கணக்குத் தீர்க்க முடிவதைப் போலவே யெகோவா தேவனால் நமது பாவங்களை முழுமையாக மன்னிக்க முடியும்.
இருந்தாலும், இயேசு ஒரு நிபந்தனையை வைத்தார்: கடவுளுடைய மன்னிப்பைப் பெற நாம் மற்றவர்களை மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும். (மத்தேயு 6:14, 15) தனது மூன்று தோழர்கள் தன்மீது தவறாக குற்றம் சுமத்தியபோதிலும் நீதிமானாகிய யோபு அவர்களை மன்னித்தார், அவர்களுக்காக ஜெபிக்கவும் செய்தார். (யோபு 42:10) நமக்கு விரோதமாக பாவம் செய்பவர்களை நாம் மன்னித்தால் கடவுளைப் பிரியப்படுத்துவோம், அவருடைய இரக்கத்தைப் பெறுவோம்.
நம் விண்ணப்பங்களை கேட்க கடவுள் மனமுள்ளவராக இருப்பது அவருடைய அங்கீகாரத்தைப் பெற நம்மை தூண்டுவிக்க வேண்டும். நாம் அபூரணர்களாக இருந்தாலும் நம்மால் அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியும். (மத்தேயு 26:41) இதிலும்கூட, யெகோவா நமக்கு உதவ முடியும் என்பதை இயேசு காட்டினார்; ஒரு முக்கியமான வேண்டுதலுடன் மாதிரி ஜெபத்தை அவர் முடித்தார்.
நீதியான போக்கை தொடருவதற்கு உதவி
“எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று [“தீயோனிடமிருந்து,” பொது மொழிபெயர்ப்பு] எங்களை இரட்சித்துக் கொள்ளும்.” (மத்தேயு 6:13) சோதனைகளின் போது யெகோவா நம்மை கைவிட மாட்டார் அல்லது பாவத்தில் சிக்கிக் கொள்ளும்படி விட்டுவிட மாட்டார். “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என அவருடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யாக்கோபு 1:13) நாம் சோதிக்கப்படுவதற்கு கடவுள் அனுமதிக்கிறார், ஆனாலும் பிரதான சோதனைக்காரனிடமிருந்து, அதாவது பிசாசாகிய சாத்தான் எனும் ‘தீயோனிடமிருந்து’ அவர் நம்மை காக்கிறார்.
எனவே சக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு ஊக்குவித்தார்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான்.” (1 பேதுரு 5:8) பரிபூரண மனிதராக விளங்கிய இயேசு கிறிஸ்துவையும்கூட சாத்தான் விட்டு வைக்கவில்லை, அவரையும் சோதித்தானே! அப்போது பிசாசின் குறிக்கோள் என்னவாக இருந்தது? யெகோவா தேவனின் தூய வணக்கத்திலிருந்து இயேசுவை வழிவிலக செய்வதே அவனது குறிக்கோளாக இருந்தது. (மத்தேயு 4:1-11) நீங்கள் கடவுளுக்கு சேவை செய்ய முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களை வழிவிலக செய்வதும்கூட சாத்தானின் குறிக்கோளாக ஆகிவிடுகிறது!
அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வுலகத்தின் மூலம் கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடும்படி பிசாசு நம்மை சோதிக்கலாம். (1 யோவான் 5:19) எனவே, நாம் எப்போதும் கடவுளுடைய உதவியை நாடுவது மிக மிக அவசியம்; அதிலும் முக்கியமாக ஓயாமல் ஒரே சோதனையை எதிர்ப்படும்போது இவ்வாறு உதவியை நாடுவது அவசியம். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் சொல்லப்பட்ட விதமாக யெகோவாவை நாம் வணங்க வேண்டும்; அப்படி செய்தால் பிசாசை எதிர்க்க நமக்கு உதவுவதன் மூலம் அவர் நம்மைக் காப்பார். “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொ”டுக்க மாட்டார் என பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 10:13.
கடவுள் மீது விசுவாசம் அதிமுக்கியம்
நம்முடைய பரலோக தகப்பன் நம் ஒவ்வொருவர் மீதும் அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிவது மனதுக்கு எவ்வளவு இதமளிக்கிறது! எப்படி ஜெபிப்பது என்பதை தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுக்கும்படியும் அவர் செய்தார். நிச்சயமாகவே இது யெகோவா தேவனைப் பிரியப்படுத்த நம்மை தூண்டுகிறது. நாம் எப்படி அவரைப் பிரியப்படுத்த முடியும்?
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் [“ஊக்கமாய்,” NW] தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:6) அத்தகைய விசுவாசத்தை நாம் எப்படி பெறலாம்? “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என பைபிள் சொல்கிறது. (ரோமர் 10:17) உண்மையான விசுவாசத்துடன் கடவுளை சேவிக்க ஏங்கும் அனைவரிடமும் பைபிள் விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுகிறார்கள்.
பரமண்டல ஜெபத்தைப் பற்றிய இந்த விளக்கம் அதன் அர்த்தத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள உங்களுக்கு உதவியிருக்கும் என நம்புகிறோம். யெகோவாவையும் ‘அவரை ஊக்கமாய் தேடுகிறவர்களுக்கு’ அவர் அளிக்கும் ஆசீர்வாதங்களையும் பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலம் கடவுள் மீதுள்ள உங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ள முடியும். உங்களுடைய பரலோக தகப்பனுடன் என்றென்றும் நெருங்கிய உறவை அனுபவிப்பதற்கு அவரையும் அவரது நோக்கங்களையும் பற்றி அதிகம் கற்றுக்கொள்வீர்களாக.—யோவான் 17:3.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.”—மத்தேயு 6:9-13
[பக்கம் 7-ன் படம்]
யெகோவாவை நேசிப்பவர்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்கிறார்
[பக்கம் 7-ன் படம்]
பிசாசை எதிர்ப்பதற்கும் கடவுள் நமக்கு உதவுகிறார்
[பக்கம் 7-ன் படம்]
யோபுவைப் போல, நமக்கு எதிராக பாவம் செய்கிறவர்களை நாம் மன்னித்தால் கடவுளுடைய இரக்கத்தைப் பெறுவோம்