இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுங்கள்
“நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.”—யோவான் 13:15.
1. ஏன் இயேசுவையே பின்பற்றுவதற்கேற்ற மாதிரியாகக் கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள்?
மனித சரித்திரத்திலேயே எந்தவொரு பாவமும் செய்யாமல் வாழ்ந்தவர் ஒரேயொருவர் மட்டுமே. அவர்தான் இயேசு. அவரைத் தவிர, ‘பாவம் செய்யாத மனுஷர் ஒருவரும் இல்லை.’ (1 இராஜாக்கள் 8:46; ரோமர் 3:23) ஆகையால், உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவையே பின்பற்றுவதற்கேற்ற பரிபூரண மாதிரியாகக் கருதுகிறார்கள். சொல்லப்போனால், பொ.ச. 33, நிசான் 14-ல் மரிப்பதற்கு சற்று முன்பு அவரே தம்மைப் பின்பற்றும்படி சீஷர்களிடம் சொன்னார். “நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்று சொன்னார். (யோவான் 13:15) அவருடைய பூமிக்குரிய வாழ்வின் அந்தக் கடைசி இரவில், என்னென்ன வழிகளில் கிறிஸ்தவர்கள் தம்மைப் பின்பற்ற முயல வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார். அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் நாம் ஆராயலாம்.
மனத்தாழ்மை அவசியம்
2, 3. இயேசு என்னென்ன வழிகளில் மனத்தாழ்மைக்கு ஒரு பரிபூரண மாதிரியாகத் திகழ்ந்தார்?
2 இயேசு தம்முடைய மாதிரியைப் பின்பற்றும்படி சீஷர்களுக்கு அறிவுறுத்துகையில், முக்கியமாக மனத்தாழ்மையைப் பற்றியே பேசினார். தம்மைப் பின்பற்றுபவர்கள் மனத்தாழ்மையோடு இருப்பதற்குப் பல சந்தர்ப்பங்களில் அவர் ஆலோசனை கொடுத்திருந்தார். நிசான் 14-ம் தேதி இரவில் அப்போஸ்தலர்களின் கால்களைக் கழுவுவதன் மூலம் மனத்தாழ்மையைச் செயலில் காட்டினார். அப்போது, “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று சொன்னார். (யோவான் 13:14) அதற்குப் பிறகு, தம்முடைய மாதிரியைப் பின்பற்றும்படி அப்போஸ்தலர்களிடம் சொன்னார். மனத்தாழ்மைக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி அது!
3 இயேசு பூமிக்கு வருவதற்கு முன், ‘தேவனுடைய ரூபமாயிருந்தார்’ என அப்போஸ்தலன் பவுல் நமக்குச் சொல்கிறார். இருந்தாலும், அந்த ரூபத்தைத் துறந்து, தாழ்ந்த மனித ரூபத்தை ஏற்றார். அதுமட்டுமல்ல, “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:6-8) இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். பிரபஞ்சத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய நபரான இயேசு, தேவதூதரைவிட தாழ்ந்தவராவதற்கும், பாதுகாப்பற்ற ஒரு குழந்தையாகப் பிறப்பதற்கும், அபூரண பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருப்பதற்கும், கடைசியில் கேவலமான ஒரு குற்றவாளியைப் போல் மரிப்பதற்கும் ஒத்துக்கொண்டார். (கொலோசெயர் 1:15, 16; எபிரெயர் 2:6, 7) இதுவல்லவா மனத்தாழ்மை! அப்படிப்பட்ட ‘சிந்தையைப்’ பின்பற்றி, அதேபோன்ற ‘மனத்தாழ்மையை’ நம்மால் வளர்த்துக்கொள்ள முடியுமா? (பிலிப்பியர் 2:3-5) நிச்சயம் முடியும், ஆனால் அது எளிதல்ல.
4.மனிதர் எவற்றைக் குறித்து பெருமை கொள்கிறார்கள், ஆனால் அது ஏன் ஆபத்தானது?
4 மனத்தாழ்மைக்கு எதிரானது பெருமை. (நீதிமொழிகள் 6:16-19) சாத்தானுடைய வீழ்ச்சிக்குப் பெருமையே காரணம். (1 தீமோத்தேயு 3:6) இது மனிதரின் இருதயங்களில் எளிதாக வேர்விடுகிறது, அது நன்கு ஊன்றிவிட்ட பிறகு பிடுங்கியெடுப்பது கடினம். தங்களுடைய தேசம், இனம், உடைமைகள், கல்வி, சாதனைகள், அந்தஸ்து, தோற்றம், விளையாட்டுத் திறமைகள், இன்னும் பல காரியங்களைக் குறித்து மக்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால், இவற்றில் எதுவுமே யெகோவாவுக்கு முக்கியமானவை அல்ல. (1 கொரிந்தியர் 4:7) ஒருவேளை அவற்றைக் குறித்து நாம் பெருமை கொண்டால், அவரோடுள்ள நம் உறவு முறிந்துவிடும். “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.”—சங்கீதம் 138:6; நீதிமொழிகள் 8:13.
சகோதரர் மத்தியில் மனத்தாழ்மை
5.மூப்பர்கள் மனத்தாழ்மையைக் காட்டுவது ஏன் முக்கியம்?
5 யெகோவாவின் சேவையில் நம் பங்கைக் குறித்தும் சாதிப்பவற்றைக் குறித்தும்கூட நாம் பெருமை கொள்ளக்கூடாது; சபையில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளைக் குறித்தும் பெருமை கொள்ளக்கூடாது. (1 நாளாகமம் 29:14; 1 தீமோத்தேயு 6:17, 18) சொல்லப்போனால், நாம் எந்தளவுக்கு முக்கியமான பொறுப்புகளை ஏற்றிருக்கிறோமோ அந்தளவுக்கு அதிக தாழ்மையாய் இருப்பது அவசியம். கடவுளுடைய ‘சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக கண்காணிப்பு செய்யும்படி’ மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு அறிவுறுத்தினார். (1 பேதுரு 5:3) ஆளுகிறவர்களாகவோ அதிகாரிகளாகவோ அல்ல, ஆனால் ஊழியர்களாகவும் மாதிரிகளாகவும் இருப்பதற்கே மூப்பர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.—லூக்கா 22:24-26; 2 கொரிந்தியர் 1:24.
6.வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களில் கிறிஸ்தவர்களுக்கு மனத்தாழ்மை அவசியம்?
6 மூப்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் மனத்தாழ்மை அவசியம். வயதானவர்களோடு ஒப்பிட சட்டென புரிந்துகொள்ளும் திறனும் உடல் பலமும் உள்ள இளைஞர் அவற்றைக் குறித்து ஒருவேளை பெருமைப்படலாம்; அவர்களுக்கு பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.’ (1 பேதுரு 5:5) ஆம், எல்லாருமே கிறிஸ்துவைப் போல் மனத்தாழ்மையோடு நடந்துகொள்வது மிக அவசியம். நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு, முக்கியமாக ஜனங்கள் அசட்டை செய்யும்போதோ எதிர்க்கும்போதோ மனத்தாழ்மை அவசியம். ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது ஊழியத்தில் பெருமளவு பங்குகொள்ள நம் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு மனத்தாழ்மை அவசியம். அதுமட்டுமல்ல, இழிவுபடுத்தும் பிரச்சாரங்களையும், சட்டப்பூர்வ தாக்குதல்களையும், கடும் துன்புறுத்தலையும் சகிக்கையில் மனத்தாழ்மையோடு தைரியமும் விசுவாசமும்கூட இருப்பது அவசியம்.—1 பேதுரு 5:6.
7, 8. மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதற்கான சில வழிகள் யாவை?
7 ஒருவர் எப்படிப் பெருமையைத் தவிர்த்து, ‘மனத்தாழ்மையோடு பிறரைத் தன்னிலும் மேன்மையானவர்களாக எண்ண’ முடியும்? (பிலிப்பியர் 2:3) ஒரு வழி, அவர் தன்னை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம். ஒருவர் தன்னை எப்படிச் சரியான விதத்தில் கருத வேண்டும் என்பதைப் பற்றி இயேசு இப்படி விளக்கினார்: “நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.” (லூக்கா 17:10) இயேசு செய்தவற்றோடு ஒப்பிட நாம் செய்கிற எதுவும் ஒன்றுமே இல்லை என்பதை நினைவில் வையுங்கள். அப்படியிருந்தும், அவர் மனத்தாழ்மையைக் காட்டினார்.
8 நம்மைக் குறித்து சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள யெகோவாவிடம் நாம் உதவியும் கேட்கலாம். “உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின் பேரில் விசுவாசமாயிருக்கிறேன்” என சங்கீதக்காரனைப் போல ஜெபிக்கலாம். (சங்கீதம் 119:66) நம்மைப் பற்றி நியாயமான, சமநிலையான எண்ணத்தை வளர்க்க யெகோவா நமக்கு உதவுவார், அதோடு நமது தாழ்மையான மனநிலைக்குப் பலனையும் அளிப்பார். (நீதிமொழிகள் 18:12) இயேசு சொன்ன விதமாக, “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—மத்தேயு 23:12.
நன்மை, தீமை பற்றிய சரியான கண்ணோட்டம்
9.நன்மை, தீமை பற்றிய இயேசுவின் கண்ணோட்டம் என்ன?
9 அபூரண மக்கள் மத்தியில் 33 ஆண்டுகள் இயேசு வாழ்ந்தபோதிலும், அவர் ‘பாவமில்லாதவராக’ இருந்தார். (எபிரெயர் 4:15) சொல்லப்போனால், “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்” என இந்த மேசியாவைப் பற்றி சங்கீதக்காரன் தீர்க்கதரிசனம் உரைத்தார். (சங்கீதம் 45:7; எபிரெயர் 1:9) இந்த அம்சத்திலும்கூட இயேசுவைப் பின்பற்ற கிறிஸ்தவர்கள் முயலுகிறார்கள். நன்மை, தீமையை அவர்கள் பகுத்துணர்வது மட்டுமல்லாமல், தீமையை வெறுத்து நன்மையை நேசிக்கவும் செய்கிறார்கள். (ஆமோஸ் 5:15) இரத்தத்தில் ஊறிப்போன பாவச் சிந்தைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இது அவர்களுக்கு உதவுகிறது.—ஆதியாகமம் 8:21; ரோமர் 7:21-25.
10. நாம் மனந்திரும்பாமல் வேண்டுமென்றே ‘பொல்லாங்கு’ செய்தால், உண்மையில் என்ன மனப்பான்மையை வெளிக்காட்டுகிறோம்?
10 பரிசேயரான நிக்கொதேமுவிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.” (யோவான் 3:20, 21) இதைக் கவனியுங்கள்: “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” என இயேசுவை யோவான் அடையாளம் காட்டினார். (யோவான் 1:9, 10) ஆனாலும், நாம் ‘பொல்லாங்கை,’ அதாவது கடவுள் வெறுக்கும் தீய காரியங்களைச் செய்கிறோமென்றால், ஒளியைப் பகைக்கிறோம் என்று இயேசு சொன்னார். இயேசுவையும் அவரது தராதரங்களையும் பகைப்பது நினைத்துப் பார்க்க முடிகிற விஷயமா? என்றாலும், வேண்டுமென்றே திரும்பத் திரும்ப பாவத்தில் ஈடுபடுகிறவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அதை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் இயேசு அப்படித்தான் பார்க்கிறார்.
நன்மை, தீமை பற்றிய இயேசுவின் கண்ணோட்டத்தை வளர்க்கும் விதம்
11. நன்மை, தீமை பற்றிய இயேசுவின் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
11 யெகோவாவின் கண்ணோட்டத்தில் நன்மை எது, தீமை எது என்பதைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதல் நமக்குத் தேவை. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதனால் மட்டுமே அந்தப் புரிந்துகொள்ளுதலை நாம் பெற்றுக்கொள்கிறோம். அப்படிப் படிக்கும்போது சங்கீதக்காரனைப் போல நாமும் ஜெபிப்பது அவசியம்; “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” என அவர் ஜெபித்தார். (சங்கீதம் 25:4) என்றாலும், சாத்தான் ஒரு நயவஞ்சகன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 11:14) எதையும் நம்பிவிடும் ஒரு கிறிஸ்தவரிடம் அவன் தீமையானதை நன்மையானதைப் போல் காட்டுகிறான். ஆகவே, நாம் கற்பவற்றை ஆழ்ந்து தியானிப்பது அவசியம், அதோடு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” கொடுக்கும் ஆலோசனைக்கு முழு கவனம் செலுத்துவதும் அவசியம். (மத்தேயு 24:45-47, NW) கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து படிப்பது, ஜெபிப்பது, தியானிப்பது ஆகியவை முதிர்ச்சியை நோக்கி முன்னேற நமக்கு உதவும்; அதுமட்டுமல்ல, அப்படிச் செய்கையில் ‘நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பயிற்சியின் மூலமாய்ப் பழகினவர்களில்’ நாமும் ஒருவராக இருப்போம். (எபிரெயர் 5:14, திருத்திய மொழிபெயர்ப்பு) அப்போது, தீமையை வெறுத்து நன்மையை நேசிக்க மனமுள்ளவர்களாய் இருப்போம்.
12. தீமை செய்யாமலிருப்பதற்கு என்ன பைபிள் ஆலோசனை உதவுகிறது?
12 தீமையை வெறுப்போமானால், அத்தகைய காரியங்கள் நம் இருதயங்களில் வளர இடங்கொடுக்க மாட்டோம். இயேசு மரித்து பல ஆண்டுகளுக்கு பின், அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.”—1 யோவான் 2:15, 16.
13, 14. (அ) கிறிஸ்தவர்கள் உலக காரியங்களில் அன்புகூருவது ஏன் ஆபத்தானது? (ஆ) உலக காரியங்களில் அன்புகூருவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
13 உலகத்திலுள்ள எல்லாக் காரியங்களுமே தவறானதல்ல என்பதாக சிலர் நினைக்கலாம். அது உண்மையாக இருந்தாலும், இந்த உலகமும் அதன் வசீகரங்களும் யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து நம்மை எளிதாகத் திசைத்திருப்பி விடலாம். இந்த உலகம் தருகிற எதுவுமே கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவுபவை அல்ல. ஆகவே, உலக காரியங்களில் அன்புகூர ஆரம்பித்தால், ஒருவேளை அவை தீங்கற்றவையாக இருந்தாலும்கூட நாம் ஆபத்தான பாதையில் போகிறோம் என்று அர்த்தம். (1 தீமோத்தேயு 6:9, 10) இன்னும் சொல்லப்போனால், உலகத்திலுள்ள பெரும்பாலான காரியங்கள் முற்றிலும் தீயவையே, அவை நம்மை பாழாக்கிவிடும். வன்முறை, பொருளாசை, பாலியல் ஒழுக்கக்கேடு ஆகியவற்றைச் சிறப்பித்துக்காட்டுகிற திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பார்ப்போமானால் அவை நமக்குத் தவறானவையாகவே தோன்றாது, பிற்பாடு அவை நம் மனதில் சபலத்தை ஏற்படுத்திவிடும். வசதியாக வாழ்வதில், அல்லது வியாபாரத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டுவோருடன் நாம் சகவாசம் வைத்துக்கொண்டால் நாமும் அந்தக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவோம்.—மத்தேயு 6:24; 1 கொரிந்தியர் 15:33.
14 மறுபட்சத்தில், யெகோவாவின் வார்த்தையில் நாம் மகிழ்ச்சி காண்கிறவர்களாக இருந்தோமானால், ‘மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும்’ அந்தளவுக்கு வசீகரிப்பவையாக இராது. அதுமட்டுமல்ல, கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்போருடன் சகவாசம் வைத்துக்கொண்டால், நாமும் அவர்களைப் போல ஆகிவிடுவோம்; அவர்கள் நேசிப்பதை நேசிப்போம், அவர்கள் தவிர்ப்பதைத் தவிர்ப்போம்.—சங்கீதம் 15:4; நீதிமொழிகள் 13:20.
15. இயேசுவைப் போலவே நீதியை நேசித்து அக்கிரமத்தை வெறுப்பது நம்மை எப்படிப் பலப்படுத்தும்?
15 நீதியை நேசித்ததும் அக்கிரமத்தை வெறுத்ததும் “தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின்” மீது கண்களை ஒருமுகப்படுத்த இயேசுவுக்கு உதவின. (எபிரெயர் 12:2) நமக்கும்கூட இது பொருந்துகிறது. ‘உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோவதை’ நாம் அறிந்திருக்கிறோம். இந்த உலகம் தரும் எந்தவொரு இன்பமும் தற்காலிகமானதே. ஆனால், “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) கடவுளின் சித்தத்தை இயேசு செய்ததன் மூலம் நித்திய ஜீவனை பெறுவதற்கான வழியை மனிதர்களுக்குத் திறந்து வைத்தார். (1 யோவான் 5:13) நாம் எல்லாருமே அவரைப் பின்பற்றி, உத்தமத்தோடு அவர் செய்த காரியங்களிலிருந்து நன்மையடைவோமாக.
துன்புறுத்தலைச் சகித்தல்
16. கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி இயேசு ஏன் அறிவுறுத்தினார்?
16 தமது சீஷர்கள் பின்பற்ற வேண்டிய மற்றொரு வழியை இயேசு குறிப்பிட்டார். ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது’ என்று சொன்னார். (யோவான் 15:12, 13, 17) கிறிஸ்தவர்கள் தங்களுடைய சகோதரர்களை நேசிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில், தமது சீஷர்கள் உலகத்தாரால் பகைக்கப்படுவார்கள் என்பதை இயேசு அறிந்திருந்ததாலேயே அந்தக் கட்டளையைக் கொடுத்தார். ஆகவேதான் “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. . . . அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்” என்று சொன்னார். (யோவான் 15:18, 20) ஆம், துன்புறுத்தப்படுவதிலும்கூட கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போலவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பகையைச் சகிக்க தங்களுக்குள் உறுதியான, அன்பான பிணைப்பை அவர்கள் ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.
17. உண்மை கிறிஸ்தவர்களை இந்த உலகம் ஏன் பகைக்கிறது?
17 கிறிஸ்தவர்களை இந்த உலகம் ஏன் பகைக்கிறது? ஏனெனில் இயேசுவைப் போலவே, “அவர்களும் உலகத்தின் பாகமல்ல.” (யோவான் 17:14, 16) இராணுவ நடவடிக்கைகளிலும் அரசியல் விவகாரங்களிலும் அவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள், உயிரின் பரிசுத்தத்தன்மைக்கு மதிப்புக் கொடுப்பதிலும் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைப் பின்பற்றுவதிலும் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9-11) பொருளாதார இலக்குகளை அல்ல, ஆனால் ஆன்மீக இலக்குகளையே அவர்கள் முக்கியமாக வைக்கிறார்கள். இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், பவுல் எழுதியது போல் அவர்கள் ‘இவ்வுலகத்தை முழுமையாய் அனுபவிப்பதில்லை.’ (1 கொரிந்தியர் 7:31, NW) யெகோவாவின் சாட்சிகளுடைய உயர்ந்த தராதரங்களைக் கண்டு சிலர் மனதாரப் புகழ்ந்து பாராட்டியிருப்பது உண்மையே. ஆனால் பிறரது புகழுக்காகவோ அங்கீகாரத்திற்காகவோ சாட்சிகள் தங்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுப்பதில்லை. அதனால்தான், உலகத்திலுள்ள பெரும்பாலோர் அவர்களைப் புரிந்துகொள்வதில்லை; மாறாக அவர்களைப் பகைக்கிறார்கள்.
18, 19. இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் கிறிஸ்தவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?
18 இயேசுவைக் கைது செய்து, கழுவிலேற்றியபோது இந்த உலகத்தின் பகை எந்தளவு தீவிரமானது என்பதை அவருடைய சீஷர்கள் கண்ணாரக் கண்டார்கள்; இப்பகையை இயேசு எவ்வாறு சகித்தார் என்பதையும் அவர்கள் கண்டார்கள். மத விரோதிகள் அவரைக் கைது செய்ய கெத்செமனே தோட்டத்திற்கு வந்தார்கள். அப்போது, அவரைப் பாதுகாக்க பேதுரு பட்டயத்தை எடுத்தார்; ஆனால் அவரிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” (மத்தேயு 26:52; லூக்கா 22:50, 51) முற்காலங்களில், இஸ்ரவேலர் தங்களுடைய எதிரிகளுடன் பட்டயத்தோடு போரிட்டார்கள். ஆனால் இயேசுவின் காலத்தில் நிலைமை மாறிவிட்டிருந்தது. கடவுளுடைய ராஜ்யம் ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருந்தது,’ பாதுகாக்க வேண்டிய எந்தத் தேசிய எல்லைகளும் அதற்கு இல்லாதிருந்தது. (யோவான் 18:36) சீக்கிரத்தில் பேதுருவும் ஓர் ஆன்மீக தேசத்தின் பாகமாக ஆகவிருந்தார்; அதன் அங்கத்தினர்கள் பரலோகத்தில் வாசம் செய்வார்கள். (கலாத்தியர் 6:16; பிலிப்பியர் 3:20, 21) ஆகவே, அந்த ஆன்மீக தேசம் உருவான சமயத்திலிருந்து இயேசுவைப் பின்பற்றுவோர் அவரைப் போலவே பகையையும் துன்புறுத்தலையும் தைரியமாக அதேசமயத்தில் சுமுகமாகச் சமாளிப்பார்கள். விளைவு எப்படியிருந்தாலும் அதை முழு நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஒப்படைத்து, சகிப்பதற்குப் பலத்திற்காக அவரைச் சார்ந்திருப்பார்கள்.—லூக்கா 22:42.
19 பல ஆண்டுகளுக்குப் பிற்பாடு பேதுரு இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். . . . அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1 பேதுரு 2:21-23) இயேசு எச்சரித்தது போல, பல ஆண்டுகளாகவே பயங்கரமான துன்புறுத்தலைக் கிறிஸ்தவர்கள் சகித்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டிலும் சரி, இன்றும் சரி, கிறிஸ்தவர்கள் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி விசுவாசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் நல்ல பெயரெடுத்திருக்கிறார்கள், சமாதானத்தோடு உத்தமத்தில் நிலைத்திருப்பவர்கள் என்பதையும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:9, 10) அப்படிப்பட்ட சூழ்நிலையைச் சந்திக்கையில் நாம் எல்லாருமே அவர்களைப் போல சமாதானத்தோடு உத்தமத்தில் நிலைத்திருப்போமாக.—2 தீமோத்தேயு 3:12.
‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்’
20-22. எந்த விதத்தில் கிறிஸ்தவர்கள் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்கிறார்கள்’?
20 ரோம சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது பற்றி யோசிக்காதீர்கள்.’ (ரோமர் 13:14, ஈஸி டு ரீட் வர்ஷன்) கிறிஸ்தவர்கள் இயேசுவை ஓர் ஆடையைப் போல அணிந்து கொள்கிறார்கள். அவர்கள் அபூரணர்கள்தான், என்றாலும் தங்கள் எஜமானரின் பிரதிபிம்பம் போல் இருப்பதற்காக அவருடைய பண்புகளையும் செயல்களையும் தங்களால் முடிந்தவரை பின்பற்ற முயலுகிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 1:6.
21 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அவரைப் போலவே வாழ முயன்றால் நாம் நிச்சயம் அவரை ‘அணிந்துகொள்ள’ முடியும். அவர் மனத்தாழ்மையைக் காட்டியது, நீதியை நேசித்தது, அக்கிரமத்தை வெறுத்தது, தம் சகோதரர்களை நேசித்தது, உலகத்தின் பாகமாக இல்லாதிருந்தது, துன்பத்தைப் பொறுமையோடு சகித்தது ஆகிய எல்லாவற்றையும் நாம் பின்பற்றுகிறோம். நாம் ‘பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது பற்றி யோசிப்பதில்லை,’ அதாவது உலகப்பிரகாரமான இலக்குகளை அடைவதற்கோ மாம்ச இச்சைகளைத் திருப்தி செய்துகொள்வதற்கோ நாம் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதில்லை. மாறாக, ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது, அல்லது ஒரு பிரச்சினையைச் சரிசெய்யும்போது, ‘இந்த இடத்தில் இயேசு இருந்திருந்தால் என்ன செய்வார்? நான் என்ன செய்வதை அவர் விரும்புவார்?’ என நம்மையே கேட்டுக்கொள்கிறோம்.
22 கடைசியாக, சுறுசுறுப்புடன் ‘நற்செய்தியைப் பிரசங்கிப்பதில்’ நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். (மத்தேயு 4:23; 1 கொரிந்தியர் 15:58) இந்த விதத்திலும்கூட அவருடைய மாதிரியைக் கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
விளக்க முடியுமா?
• ஒரு கிறிஸ்தவர் தாழ்மையாய் இருப்பது ஏன் முக்கியம்?
• நன்மை, தீமை பற்றிய சரியான கண்ணோட்டத்தை எப்படி வளர்க்கலாம்?
• எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் சகிப்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்?
• எப்படி ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ள’ முடியும்?
[பக்கம் 7-ன் படம்]
மனத்தாழ்மைக்கு இயேசு பரிபூரண மாதிரி வைத்தார்
[பக்கம் 8-ன் படம்]
பிரசங்க வேலைக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மற்றெல்லா அம்சங்களுக்கும் மனத்தாழ்மை அவசியம்
[பக்கம் 9-ன் படம்]
இழிவான பொழுதுபோக்கைக்கூட சாத்தான் சிறந்த பொழுதுபோக்கு போல ஒரு கிறிஸ்தவருக்குத் தோன்றச் செய்வான்
[பக்கம் 10-ன் படம்]
சகோதரர்கள் காட்டும் அன்பு எதிர்ப்பைச் சகிக்க பலமளிக்கும்