வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அப்போஸ்தலர் 7:59-ல் ஸ்தேவான் சொன்ன வார்த்தைகள் இயேசுவை நோக்கி ஜெபம் செய்ய வேண்டுமென காட்டுகின்றனவா?
அப்போஸ்தலர் 7:59 இவ்வாறு கூறுகிறது: “அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில் அவனைக் கல்லெறிந்தார்கள்.” யெகோவாவே ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என பைபிள் விவரிப்பதால், இந்த வார்த்தைகள் சிலருடைய மனதில் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. (சங்கீதம் 65:2) நிஜமாகவே இயேசுவை நோக்கி ஸ்தேவான் ஜெபம் செய்தாரா? இயேசுவும் யெகோவாவும் ஒருவர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறதா?
ஸ்தேவான் ‘கடவுளை நோக்கி கூப்பிட்டதாக’ கிங் ஜேம்ஸ் வர்ஷன் கூறுகிறது. அதனால், மேத்யூ ஹென்றி என்ற பைபிள் விளக்கவுரையாளர் வரும் முடிவுக்கே அநேகர் வருகின்றனர்; “இங்கே கிறிஸ்துவை நோக்கி ஸ்தேவான் ஜெபிக்கிறார், ஆகவே நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்” என அவர் கூறினார். ஆனால் இந்தக் கருத்து தவறு. ஏன்?
பார்ன்ஸ் நோட்ஸ் ஆன் த நியூ டெஸ்டமன்ட் இவ்வாறு நேர்மையுடன் ஒப்புக்கொள்கிறது: “மூலப் பிரதியில் கடவுள் என்ற வார்த்தை இல்லை, ஆகவே மொழிபெயர்க்கும்போதும் இந்த வார்த்தையைப் போடக் கூடாது. பண்டைய [கையெழுத்துப் பிரதிகள்] அல்லது மொழிபெயர்ப்புகள் எவற்றிலுமே இந்த வார்த்தை இல்லை.” அப்படியானால், இந்த வசனத்தில் “கடவுள்” என்ற வார்த்தை எப்படி நுழைந்தது? இதை “மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரிவினைக்கு ஓர் எடுத்துக்காட்டு” என அறிஞர் ஏபீயல் அபட் லிவர்மோர் அழைத்தார். ஆகவே, இங்கு சேர்க்கப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தையை பெரும்பாலான நவீன மொழிபெயர்ப்பாளர்கள் நீக்கிவிடுகின்றனர்.
என்றாலும், இயேசுவிடம் ஸ்தேவான் ‘ஜெபித்ததாக’ அநேக மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. அதோடு, “முறையிட்டார்” என்ற வார்த்தை “விண்ணப்பிப்பதையும் ஜெபிப்பதையும்” அர்த்தப்படுத்துகிறது என புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் அடிக்குறிப்பு காட்டுகிறது. அப்படியென்றால், இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதை இது காட்டவில்லையா? இல்லை. இந்தச் சூழமைவில், எபிக்காலியோ என்ற மூல கிரேக்க வார்த்தை “ஒருவரை அழைப்பதை; . . . ஓர் அதிகாரியிடம் உதவிக்காக கேட்பதை” குறிக்கிறது என வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்டு அண்டு நியூ டெஸ்டமன்ட் உவர்ட்ஸ் விளக்குகிறது. “இராயருக்கு அபயமிடுகிறேன்” என்று சொன்னபோது பவுல் இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 25:11) ஆகவே, இயேசுவை ஸ்தேவான் “அழைத்தார்” என த நியூ இங்லிஷ் பைபிள் கூறுவது பொருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு முறையிடுவதற்கு ஸ்தேவானை எது தூண்டியது? ஸ்தேவான் ‘பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டதாக’ அப்போஸ்தலர் 7:55, 56 கூறுகிறது. பொதுவாக, ஸ்தேவான் தன்னுடைய ஜெபத்தை இயேசுவின் மூலம் யெகோவாவிடம் செய்திருப்பார். ஆனால் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை தரிசனத்தில் பார்த்ததால், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று நேரடியாக அவரிடமே மன்றாட ஸ்தேவான் தூண்டப்பட்டிருக்கலாம். மரித்தோரை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை ஸ்தேவான் அறிந்திருந்தார். (யோவான் 5:27-29) ஆகவே, இயேசு அவரை அழிவில்லா வாழ்க்கைக்குப் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பும் நாள் வரும் வரை தன்னுடைய ஆவியை, அதாவது உயிர்ச் சக்தியை காக்கும்படி அவரிடம் கேட்டார்.
இவ்வாறு ஸ்தேவான் சுருக்கமாக இயேசுவிடம் சொன்னது நாம் அவரிடம் ஜெபிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறதா? இல்லவே இல்லை. ஒரு விஷயம் என்னவென்றால், யெகோவாவையும் இயேசுவையும் ஸ்தேவான் தெளிவாக வேறுபடுத்திக் காட்டினார், ஏனென்றால் ‘தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்பதை’ பார்த்ததாக பதிவு சொல்கிறது. அதோடு, இந்தச் சந்தர்ப்பங்கள் விதிவிலக்கானவை. இயேசுவிடம் நேரடியாக பேசியதற்கு இன்னும் ஒரேவொரு எடுத்துக்காட்டு இயேசுவை தரிசனத்தில் யோவான் கண்டபோது நேரடியாக அவரிடமே பேசிய கூற்றுகளாகும்.—வெளிப்படுத்துதல் 22:16, 20.
இன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் யெகோவா தேவனிடம் தகுந்த முறையில் தங்களுடைய ஜெபத்தை ஏறெடுக்கிறபோதிலும், இயேசுவே ‘உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்’ என்பதில் அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருக்கிறார்கள். (யோவான் 11:25) தம்மை பின்பற்றுகிறவர்களை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பும் திறமை இயேசுவுக்கு இருக்கிறது என்று ஸ்தேவான் விசுவாசித்ததைப் போலவே நாமும் விசுவாசிப்பது சோதனை காலங்களில் நமக்கு உதவியும் ஆதரவும் அளிக்கும்.