பெற்றோரே, அருமையான உங்கள் சொத்தைப் பாதுகாத்திடுங்கள்
“ஞானம் கேடகம், . . . [அது] தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்.”—பிரசங்கி 7:12.
1. பெற்றோர் ஏன் தங்கள் பிள்ளைகளை பரிசுகளாக கருத வேண்டும்?
பெற்றோர் தங்களைப் போன்ற உடல் வாகையும் குணங்களையும் கொண்ட உயிருள்ள ஒரு புதிய ஆளை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அத்தகைய சின்னஞ்சிறுசுகளை ‘யெகோவாவினால் வரும் சுதந்தரம்’ என்று பைபிள் அழைக்கிறது. (சங்கீதம் 127:4) யெகோவாவே மெய்யான உயிரளிப்பவராக இருப்பதால், உண்மையில் தமக்கு உரியதையே பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கிறார். (சங்கீதம் 36:9) பெற்றோரே, அத்தகைய அருமையான பரிசை கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்வதை எப்படி கருதுகிறீர்கள்?
2. தகப்பனாகப் போவதை அறிந்தபோது மனோவா எப்படி பிரதிபலித்தார்?
2 நிச்சயமாகவே, அத்தகைய பரிசை மனத்தாழ்மையோடும் நன்றியோடும் பெற்றுக்கொள்ள வேண்டும். 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலனான மனோவாவின் மனைவியிடம் அவளுக்கு ஒரு பிள்ளை பிறக்குமென தேவதூதர் சொன்னபோது, மனோவா இப்படித்தான் பிரதிபலித்தார். அந்த நற்செய்தியைக் கேட்டபோது மனோவா இவ்வாறு ஜெபித்தார்: “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக.” (நியாயாதிபதிகள் 13:8) பெற்றோரே, மனோவாவின் முன்மாதிரியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்ளலாம்?
இப்போது கடவுளுடைய உதவி ஏன் தேவை
3. பிள்ளைகளை வளர்க்க இன்று ஏன் முக்கியமாய் கடவுளுடைய உதவி தேவை?
3 பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது யெகோவாவின் உதவி தேவை. காரணம்? பிசாசாகிய சாத்தானும் அவனுடைய தூதர்களும் வானத்திலிருந்து கீழே பூமிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ‘பூமியில் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்’ என பைபிள் எச்சரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7-9, 12) சாத்தான் “கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” என்று பைபிள் விளக்குகிறது. (1 பேதுரு 5:8) சிங்கங்கள் பொதுவாய் மிக எளிதாகப் பிடிக்கத்தக்க பலவீனமான மிருகங்களை, பெரும்பாலும் குட்டிகளை குறிவைக்கின்றன. ஆகவே கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு, வழிநடத்துதலுக்காக ஞானமாய் யெகோவாவை நோக்குகிறார்கள். அப்படி செய்ய நீங்கள் எந்தளவு முயற்சி செய்கிறீர்கள்?
4. (அ) சுற்று வட்டாரத்தில் ஒரு சிங்கம் சுற்றித் திரிகிறது என்றால், அதற்கு பெற்றோர் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும்? (ஆ) பாதுகாப்புக்காக பிள்ளைகளுக்கு என்ன தேவை?
4 நீங்கள் குடியிருக்கும் வட்டாரத்தில் ஒரு சிங்கம் சுற்றித் திரிகிறது என்று கேள்விப்பட்டால் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது நிச்சயமாகவே உங்களுடைய முதல் அக்கறையாக இருக்கும். விழுங்குவதற்குக் காத்துக் கொண்டிருப்பவனே சாத்தான். கடவுளுடைய ஜனங்களை சீரழித்து, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற அவர்களைத் தகுதியற்றவர்களாக்குவதே அவனுடைய குறிக்கோள். (யோபு 2:1-7; 1 யோவான் 5:19) பிள்ளைகள் எளிதாகத் தாக்கப்படுகிறவர்கள். பிசாசின் கண்ணிகளிலிருந்து தப்புவதற்கு, அவர்கள் யெகோவாவை அறிந்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பைபிள் அறிவு இன்றியமையாதது. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என இயேசு கூறினார். (யோவான் 17:3) அதோடு, இளைஞருக்கு ஞானம் அவசியம், அதாவது தாங்கள் கற்பதைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை பொருத்திப் பிரயோகிப்பதற்குமான திறமை அவசியம். “ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்,” ஆதலால் பெற்றோரே, உங்கள் பிள்ளைகளின் இருதயங்களில் சத்தியத்தைப் புகட்டுவது அவசியம். (பிரசங்கி 7:12) இதை நீங்கள் எப்படி செய்யலாம்?
5. (அ) ஞானத்தை எப்படி மனதில் பதிய வைக்கலாம்? (ஆ) ஞானத்தின் மதிப்பை நீதிமொழிகள் எவ்வாறு விவரிக்கிறது?
5 கடவுளுடைய வார்த்தையிலிருந்து உங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டலாம், அப்படி வாசித்துக் காட்டவும் வேண்டும். ஆனால், யெகோவாவை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய உதவி செய்வதற்கு அதைவிட அதிகம் தேவை—அவர்கள் பங்கில் புரிந்துகொள்ளுதல் தேவை. உதாரணமாக, சாலையில் இருபுறமும் பார்க்காமல் கடந்துசெல்லக் கூடாதென்று ஒரு பிள்ளைக்குச் சொல்லப்படலாம். என்றாலும், பிள்ளைகள் சிலர் கீழ்ப்படிவதில்லை. ஏன்? ஒரு விபத்திற்கு வழிநடத்தும் ‘மதியீனத்தைப்’ போக்கும் அளவுக்கு விளக்கப்படாமல் இருந்திருக்கலாம்; அதாவது, ஒரு கார் மோதினால் என்னவாகும், அல்லது அதில் உட்பட்டிருக்கும் ஆபத்து என்ன என்பது அந்தப் பிள்ளையின் மனதில் பதியும் விதத்தில் விளக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஞானத்தை மனதில் பதிய வைப்பதற்குக் காலமும் மிகுந்த பொறுமையும் தேவை. ஆனால் ஞானம் மிகவும் பயனுள்ளது! “அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவ விருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 3:13-18; நீதிமொழிகள் 22:15.
ஞானம் தரும் போதனை
6. (அ) பிள்ளைகள் ஏன் அடிக்கடி ஞானமற்ற விதத்தில் செயல்படுகிறார்கள்? (ஆ) என்ன போராட்டம் நடந்து வருகிறது?
6 அடிக்கடி இளைஞர்கள் தவறாக நடக்கிறார்கள், அதற்குக் காரணம் சரியானவை அவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை என்பதால் அல்ல, ஆனால் கற்பிக்கப்பட்டவை அவர்களுடைய இருதயத்தை எட்டவில்லை, அதாவது அவர்களுக்குள் செல்லவில்லை என்பதால்தான். இளைஞரின் இருதயத்தைக் கவர பிசாசானவன் போராடி வருகிறான். தேவ பயமற்ற இவ்வுலகின் செல்வாக்குகளுக்கு அவர்கள் பலியாவதற்கு அவன் திட்டம் போடுகிறான். அதோடு, பொல்லாத காரியங்களைச் செய்ய வைப்பதற்கு அவர்கள் சுதந்தரித்த பாவமுள்ள மனச்சாய்வை பயன்படுத்திக்கொள்ள முயலுகிறான். (ஆதியாகமம் 8:21; சங்கீதம் 51:5) பிள்ளைகளின் இருதயத்தைக் கவர நிஜமாகவே ஒரு போர் நடந்து வருவதை பெற்றோர் உணர்ந்துகொள்வது அவசியம்.
7. எது சரி எது தவறு என்று ஒரு பிள்ளைக்குச் சொல்வது ஏன் போதுமானதல்ல?
7 எது சரி அல்லது எது தவறு என்பதை பொதுவாக பெற்றோர் ஒரு பிள்ளைக்கு சொல்கிறார்கள். அப்படி செய்வதால் அவனுக்கு ஏதோ ஒழுக்க நெறிமுறைகளைக் கற்பித்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பொய் சொல்வது, திருடுவது, அல்லது ஒருவர் தான் மணமுடித்திராத எவருடனும் பாலுறவுகள் கொள்வது தவறு என்று அவர்கள் பிள்ளைக்குச் சொல்லலாம். என்றாலும், பெற்றோர் சொல்கிறார்கள் என்பதற்காக அல்லாமல், கீழ்ப்படிவதற்குப் பலமான தூண்டுதல் பிள்ளைக்குத் தேவை. இவை யெகோவாவின் சட்டங்கள். கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே ஞானமான செயல் என பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 6:16-19; எபிரெயர் 13:4.
8. பிள்ளைகள் ஞானமாக செயல்படுவதற்கு எப்படி கற்பிக்க வேண்டும்?
8 சிக்கலான இப்பிரபஞ்சம், பல்வகை உயிரிகள், பருவகால மாற்றம்—இவையெல்லாம் சகல ஞானமுமுள்ள படைப்பாளர் ஒருவர் இருப்பதைப் புரிந்துகொள்ள ஓர் இளம் பிள்ளைக்கு உதவும். (ரோமர் 1:20; எபிரெயர் 3.4) மேலும், கடவுள் அவனை நேசிக்கிறார், அவனுக்கு நித்திய ஜீவனை வழங்க தமது குமாரனையே பலியாக கொடுத்திருக்கிறார் என்று பிள்ளைக்குக் கற்பிக்க வேண்டும். கடவுள் என்ன சொல்கிறாரோ அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் கடவுளை சந்தோஷப்படுத்த முடியும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது, அந்தப் பிள்ளையை தடுப்பதற்குப் பிசாசு எடுக்கும் முயற்சிகளின் மத்தியிலும் யெகோவாவுக்குச் சேவை செய்ய அந்தப் பிள்ளை தீர்மானிப்பான்.—நீதிமொழிகள் 22:6; 27:11; யோவான் 3:16.
9. (ஆ) உயிரைக் காக்கும் விதத்தில் கற்பிக்க என்ன தேவை? (ஆ) தகப்பன்மார் என்ன செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள், இது எதை உட்படுத்துகிறது?
9 ஒரு பிள்ளையைப் பாதுகாத்து சரியானதைச் செய்ய தூண்டுகிற விதத்தில் கற்பிப்பதற்கு நேரமும் கவனமும் திட்டமிடுதலும் தேவை. இதற்கு, கடவுளிடமிருந்து வரும் வழிநடத்துதலை பெற்றோர் ஏற்க வேண்டும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பிதாக்களே, . . . [உங்கள் பிள்ளைகளை] யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4, NW) இது எதை அர்த்தப்படுகிறது? ‘மனக்கட்டுப்பாட்டில்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை ‘மனதை உள்ளே புகுத்துதல்’ என்ற கருத்தைக் கொடுக்கிறது. ஆகையால், தகப்பன்மார் முக்கியமாக யெகோவாவின் மனதை தங்கள் பிள்ளைகளுக்குள் புகுத்தும்படி உந்துவிக்கப்படுகிறார்கள். சிறு பிள்ளைகளுக்கு அது எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கும்! பிள்ளைகளுக்கு கடவுளுடைய யோசனைகளையும் அவருடைய சிந்தையையும் மனதில் ஆழப் பதிய வைக்கும்போது, தவறு செய்வதிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
அன்பினால் தூண்டப்பட்ட ஆவல்
10. உங்கள் பிள்ளைக்குத் திறம்பட கற்பிக்க எது முக்கியம்?
10 உங்கள் பிள்ளையை சரியான முறையில் வளர்க்க வேண்டுமென்ற உங்கள் ஆவலை நிறைவேற்றுவதற்கு அன்போடு முயற்சி செய்ய வேண்டும். இதற்கு முக்கிய அம்சமாக விளங்குவது நல்ல பேச்சுத்தொடர்பு. உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, அவனுடைய அல்லது அவளுடைய கருத்துகள் என்ன என்பதை கண்டுபிடியுங்கள். ஓய்வான ஒரு சூழலில், உங்கள் பிள்ளையின் மனதில் இருப்பதை சாதுரியமாக வெளிக்கொணருங்கள். சில சமயங்களில், அவன் சொல்லும் விஷயங்கள் உங்களுக்கு அதிர்ச்சியூட்டலாம். அப்போது உணர்ச்சிவயப்படாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். அனுதாபத்துடன் செவிகொடுத்துக் கேளுங்கள்.
11. கடவுளுடைய சிந்தையை பிள்ளைக்குள் எவ்வாறு ஒரு பெற்றோர் புகுத்த முடியும்?
11 உண்மைதான், பாலியல் ஒழுக்கக்கேடு சம்பந்தமான கடவுளுடைய சட்டங்களை பைபிளிலிருந்து உங்கள் பிள்ளைக்கு நீங்கள் வாசித்துக் காண்பித்திருக்கலாம், ஏன் பல தடவைகூட வாசித்துக் காண்பித்திருக்கலாம். (1 கொரிந்தியர் 6:18; எபேசியர் 5:5) யெகோவாவுக்கு எது பிரியமானது, எது பிரியமில்லாதது என்பதை பிள்ளைகளின் மனதில் இது பதிய வைத்திருக்கலாம். என்றாலும், அவருடைய சிந்தையை ஒரு பிள்ளையின் மனதில் புகுத்துவதற்கு இதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. யெகோவாவின் சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பகுத்துணர பிள்ளைகளுக்கு உதவி தேவை. அவருடைய சட்டங்கள் சரியானவை, நன்மையானவை என்றும், அவற்றிற்குக் கீழ்ப்படிவதே தகுந்தது, அன்புள்ள காரியம் என்றும் அவர்கள் உறுதியாக நம்ப வேண்டும். உங்கள் பிள்ளைகள் கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டி பேசுவதன் மூலமே அவருடைய மனதை அவர்களுக்குள் புகுத்தியிருக்கிறீர்கள் என சொல்ல முடியும்.
12. பாலுறவு சம்பந்தமான விஷயங்களைப் பற்றி சரியான கண்ணோட்டத்தைப் பெற பெற்றோர் எவ்வாறு பிள்ளைக்கு உதவ முடியும்?
12 பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுகையில், நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “கலியாணமாவதற்கு முன்பு பாலுறவு கொள்ளக்கூடாது என்ற யெகோவாவின் சட்டத்திற்குக் கீழ்ப்படிவது ஒருவருடைய மகிழ்ச்சியை பறித்துவிடும் என்று நீ நினைக்கிறாயா?” தன்னுடைய பதிலை உங்கள் பிள்ளை விளக்கிக் கூறும்படி ஊக்குவியுங்கள். பிள்ளையைப் பிறப்பிக்க கடவுள் செய்திருக்கும் அதிசயமான ஏற்பாட்டை சொன்ன பின்பு, நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “வாழ்க்கையின் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பறிப்பதற்கு அன்புள்ள கடவுள் சட்டங்கள் போடுவாரென நீ நினைக்கிறாயா? அல்லது அவருடைய சட்டங்கள் நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவுமே இருக்கின்றன என நினைக்கிறாயா?” (சங்கீதம் 119:1, 2; ஏசாயா 48:17) இந்த விஷயத்தில் உங்கள் பிள்ளையின் சிந்தையைக் கண்டறியுங்கள். பின்பு பாலியல் ஒழுக்கக்கேட்டினால் மன வேதனைக்கும் கடும் துயரத்திற்கும் வழிநடத்திய உதாரணங்களை நீங்கள் சொல்லலாம். (2 சாமுவேல் 13:1-33) கடவுளுடைய சட்டங்களைப் புரிந்துகொண்டு ஏற்கும்படி உங்கள் பிள்ளையிடம் நியாயங்காட்டி பேசுவதன் மூலம் கடவுளுடைய சிந்தையை அவனுடைய மனதில் பதிய வைப்பதில் நீங்கள் அதிகத்தை செய்திருப்பீர்கள். என்றாலும், நீங்கள் செய்யக்கூடிய வேறொன்றும் இருக்கிறது.
13. எதைப் புரிந்துகொள்வது யெகோவாவுக்குக் கீழ்ப்படிய ஒரு பிள்ளையை முக்கியமாக உந்துவிக்கும்?
13 யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போவதால் வரும் விளைவுகளைப் பற்றி உங்கள் பிள்ளைக்குக் கற்பிப்பது மட்டுமல்லாமல், நாம் வாழும் முறை தனிப்பட்ட விதமாக யெகோவாவை எப்படி பாதிக்கிறது என்பதையும் விளக்குவது ஞானமானது. யெகோவாவின் சித்தத்தைச் செய்ய தவறும்போது, அவருக்கு நாம் மனவருத்தத்தை உண்டாக்குகிறோம் என்று பைபிளிலிருந்து பிள்ளைக்குக் காட்டுங்கள். (சங்கீதம் 78:40) “யெகோவாவை வருத்தப்படுத்த நீ ஏன் விரும்புவதில்லை?” என்று நீங்கள் கேட்டு, இவ்வாறு விளக்கலாம்: “அவரை நாம் நேசிப்பதால் அல்ல, தன்னலத்திற்காகவே நாம் கடவுளை சேவிக்கிறோம் என கடவுளுடைய சத்துருவாகிய சாத்தான் சொல்கிறான்.” பின்பு, உத்தமத்தைக் காப்பதன் மூலம் கடவுளுடைய இருதயத்தை மகிழச் செய்து, சாத்தானின் பொய்க் குற்றச்சாட்டுக்கு யோபு எவ்வாறு பதிலளித்தார் என்பதை விளக்கலாம். (யோபு 1:9-11; 27:5) தன்னுடைய நடத்தையைப் பொறுத்து யெகோவாவை மகிழ்ச்சியடைய செய்யலாம் அல்லது வருத்தமடைய செய்யலாம் என்பதை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 27:11) “பெரிய போதகரிடம் கற்றுக்கொள்” புத்தகத்தைப் பயன்படுத்தி, இதையும் முக்கிய பாடங்கள் பிறவற்றையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கலாம்.a
நல்ல பலன்கள்
14, 15. (அ) போதகர் புத்தகத்திலுள்ள எந்தப் பாடங்கள் பிள்ளைகளை உந்துவித்திருக்கின்றன? (ஆ) அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தியதிலிருந்து என்ன நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைத்திருக்கின்றன? (பக்கங்கள் 18-19-லுள்ள பெட்டியையும் காண்க.)
14 குரோஷியாவில் ஏழு வயது பேரனுடன் போதகர் புத்தகத்தை வாசிக்கும் தாத்தா, அந்த சிறுவன் இவ்வாறு சொன்னதாக எழுதுகிறார்: “அம்மா ஒன்றை செய்யச் சொன்னார்கள், ஆனால் எனக்குச் செய்ய இஷ்டமில்லை. பின்பு, ‘சொன்ன பேச்சைக் கேட்பது உனக்கு பாதுகாப்பு,’ என்ற அதிகாரம் என்னுடைய ஞாபகத்திற்கு வந்தது, அதனால் நான் திரும்பப் போய் அதைச் செய்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன்.” “நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது” என்ற அதிகாரத்தைப் பற்றி அ.ஐ.மா., ப்ளோரிடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இவ்வாறு கூறினார்கள்: “பிள்ளைகள் மனந்திறந்து பேசவும், மற்றபடி அவர்கள் ஒப்புக்கொள்ளாத தவறுகளை ஒப்புக்கொள்ளவும் செய்யும் கேள்விகள் இதில் இருக்கின்றன.”
15 போதகர் புத்தகத்தில் 230-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு படத்திற்கும் அல்லது படங்களுக்கும் ஒரு விவரிப்பு அல்லது குறிப்பு உள்ளது. “அடிக்கடி என் மகனுடைய கண்கள் ஒரு படத்தின் மீதே இருக்கும், அடுத்தப் பக்கத்திற்குத் திருப்ப மனம் வராது” என்று நன்றியோடு ஒரு தாய் குறிப்பிட்டார். “அந்தப் படங்கள் கவரும் விதமாக இருப்பது மட்டுமல்லாமல் பாடங்களையும் அவையே கற்பிக்கின்றன அல்லது பிள்ளைகளைக் கேள்விகள் கேட்கவாவது உந்துவிக்கின்றன. இருட்டு அறையில் ஒரு பிள்ளை டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருக்கும் படத்தைப் பார்த்து, ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டது போன்ற தொனியில், ‘அம்மா, அந்தப் பையன் என்ன செய்கிறான்?’ என்று என்னுடைய மகன் கேட்டான். அந்தப் படத்தின் குறிப்பு இவ்வாறு வாசிக்கிறது: “நாம் செய்யும் எல்லாவற்றையும் யாரால் பார்க்க முடியும்?”
இன்றைக்கு முக்கியமான கல்வி
16. இன்று பிள்ளைகளுக்கு எதைக் கற்பிப்பது முக்கியம், ஏன்?
16 பாலுறுப்புகளை சரியான முறையிலும் தகாத முறையிலும் பயன்படுத்துவதைப் பற்றி பிள்ளைகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இதைப் பற்றி பேசுவது எளிதல்ல. பாலுறுப்புகளை குறிப்பிடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவமதிப்பாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் தான் வளர்ந்ததாக செய்தித்தாளுக்கு எழுதும் ஒரு பெண் குறிப்பிட்டாள். தன் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதைப் பற்றி அவள் இவ்வாறு எழுதினாள்: “என் சங்கோஜத்தை எல்லாம் மேற்கொள்ளப் போகிறேன்.” உண்மையிலேயே தர்மசங்கடமாக நினைத்து செக்ஸ் பற்றி பேசுவதை பெற்றோர் தவிர்க்கையில், அது பிள்ளையைப் பாதுகாப்பதில்லை. பாலியல் தொல்லை செய்பவர்கள் ஒரு பிள்ளையின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் இந்த விஷயத்தை கண்ணியமாக, தகுந்த முறையில் விளக்குகிறது. செக்ஸ் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவர்களுடைய சூதுவாதற்ற சுபாவத்திற்கு பங்கம் விளைவிப்பதில்லை. ஆனால் அப்படி சொல்லிக் கொடுக்காமலிருப்பதே அந்தச் சுபாவத்திற்குப் பங்கம் விளைவிக்கிறது.
17. போதகர் புத்தகம் பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பற்றி பிள்ளைகளுக்குப் போதிக்க பெற்றோருக்கு எவ்வாறு உதவுகிறது?
17 பூமிக்கு வந்து பிள்ளைகளைப் பிறப்பித்த பொல்லாத தூதர்களைப் பற்றி 10-ம் அதிகாரத்தில் படிக்கையில் அந்தப் பிள்ளையிடம் இவ்வாறு கேட்கப்படுகிறது: “உடலுறவு பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?” எளிய அதேசமயத்தில் கண்ணியமான பதிலை இப்புத்தகம் அளிக்கிறது. பிறகு, பாலியல் தொல்லை கொடுப்போரிடமிருந்து பிள்ளைகளை எப்படி பாதுகாக்கலாம் என்பதை 32-ம் அதிகாரம் விளக்குகிறது. அத்தகைய போதகம் முக்கியமானதென்று பல கடிதங்கள் தெரிவித்திருக்கின்றன. ஒரு தாய் இவ்வாறு எழுதினார்: “போன வாரம் என்னுடைய மகன் ஜேவன் குழந்தைநல மருத்துவரைக் கண்டான். பாலுறுப்புகளை சரியான முறையில் பயன்படுத்துவதைப் பற்றி அவனுடன் நாங்கள் பேசியிருந்தோமா என்று அந்த டாக்டர் கேட்டார். நம்முடைய புதிய புத்தகத்தைப் பயன்படுத்தி இதை நாங்கள் செய்திருந்தது அவர்களை மிகவும் கவர்ந்தது.”
18. தேசிய சின்னங்களுக்கு வணக்கம் செலுத்துவதைப் பற்றி போதகர் புத்தகம் எப்படி விளக்குகிறது?
18 பாபிலோன் ராஜ்யத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சிலையை வணங்க மறுத்த மூன்று எபிரெய வாலிபர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பற்றிய பைபிள் பதிவை மற்றொரு அதிகாரம் சொல்கிறது. (தானியேல் 3:1-30) போதகர் புத்தகம் குறிப்பிடுவது போல், ஒரு உருவத்திற்கு வணக்கம் செலுத்துவதற்கும் கொடிக்கு வணக்கம் செலுத்துவதற்கும் உள்ள சம்பந்தத்தை சிலர் புரிந்துகொள்ளாமல் இருப்பார்கள். ஐ.மா. காத்தலிக் என்ற பத்திரிகை பேட்டி கண்டபோது நூலாசிரியர் எட்வர்ட் காஃப்னி சொன்னதை கவனியுங்கள்: பள்ளிக்குப் போன முதல் நாளில் தனது மகள் ஒரு ‘புதிய ஜெபத்தை பள்ளியில்’ கற்றதாகச் சொன்னபோது, அதைத் தன்னிடம் சொல்லும்படி அவர் கேட்டதாக கூறினார். ‘அவள் கையைத் தன் நெஞ்சில் வைத்து, ‘கொடிக்கு விசுவாசமாக இருப்பேன் . . . என நான் உறுதிமொழி கூறுகிறேன்’ என்று பெருமையுடன் சொன்னாள்.” அவர் தொடர்ந்து கூறினார்: “அப்போதுதான் சட்டென்று என்னுடைய மனதிற்கு உரைத்தது. யெகோவாவின் சாட்சிகள் சொன்னது சரிதான். ஒரு தேசத்தை வழிபடுவது இதில் உட்பட்டுள்ளது. அதைச் செய்யும்படி நமது பள்ளிகளில் மிக ஆரம்பத்திலிருந்தே ஊக்குவிக்கப்படுகிறது—எல்லா வரம்புகளுக்கும் அப்பாற்பட்ட விசுவாசம்.”
எல்லா முயற்சிக்கும் தகுந்தது
19. பிள்ளைகளுக்குக் கற்பிப்பதால் வரும் பலன்கள் யாவை?
19 உண்மையிலேயே, உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் தகுதியானதே. அ.ஐ.மா.-வில் கான்ஸாஸிலுள்ள தன் மகனிடமிருந்து ஒரு கடிதத்தை ஒரு தாய் பெற்றபோது கண்ணீர் விடுமளவுக்கு அது அவளை நெகிழ வைத்தது. அவன் இவ்வாறு எழுதியிருந்தான்: “உங்களுக்கு மகனாக பிறந்ததை பாக்கியமாக கருதுகிறேன். உணர்ச்சி ரீதியில் சமநிலையுடனும் உறுதியுடனும் நிலைத்திருக்க நீங்களும் அப்பாவும் எனக்குக் கொடுத்த பயிற்றுவிப்புக்கு நன்றி.” (நீதிமொழிகள் 31:28) பெற்றோர் பலர் தாங்கள் சொத்தாக பெற்ற அருமையான பிள்ளைகளைப் பாதுகாக்க பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் அவர்களுக்கு உதவும்.
20. பெற்றோர் எதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும், அது அவர்கள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்?
20 நம்முடைய நேரம், கவனிப்பு, முயற்சி ஆகியவற்றை முழுக்க முழுக்க நம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள நமது பிள்ளைகளுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவர்கள் கொஞ்ச காலத்திற்குத் தானே சிறியவர்களாக இருக்கப் போகிறார்கள். ஆகவே, அவர்களோடு இருப்பதற்கும் அவர்களுக்கு உதவி செய்வதற்கும் கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி செய்ததற்காக ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள். மாறாக, அவர்களது பாசத்தையும் நேசத்தையுமே பெறுவீர்கள். உங்களுடைய பிள்ளைகள் கடவுள் கொடுத்துள்ள பரிசுகள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். உங்களுக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட அருமையான செல்வங்கள் அவர்கள்! (சங்கீதம் 127:4-6) ஆகவே, கடவுளிடமிருந்து வந்த பரிசு போல அவர்களை நடத்துங்கள்; ஏனென்றால் அவர்களை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதற்கு கடவுளிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும், ஆம், கண்டிப்பாக, அவரிடம் கணக்குக் கொடுத்தாக வேண்டும்!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. 40-ம் அதிகாரத்தில், “கடவுளை எப்படி சந்தோஷப்படுத்துவது” என்பதைப் பாருங்கள்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• பெற்றோர்கள் ஏன் முக்கியமாய் இப்போது தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்?
• எவ்விதத்தில் கற்பிப்பது ஞானத்தை அருளுகிறது?
• இன்று உங்கள் பிள்ளைகளுடன் பேச வேண்டிய முக்கியமான காரியங்கள் யாவை?
• போதகர் புத்தகம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க எவ்வாறு பெற்றோருக்கு உதவி செய்திருக்கிறது?
[பக்கம் 18, 19-ன் பெட்டி/படங்கள்]
எல்லாருக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகம் பெற்றோரும் மற்றவர்களும் இயேசுவின் போதனைகளை பிள்ளைகளுடன் சேர்ந்து வாசித்து, கலந்தாலோசிப்பதற்கென்றே தயாரிக்கப்பட்டது. இருந்தாலும், இப்புத்தகத்தை தனிப்பட்ட விதமாக வாசித்துப் பார்த்த அநேக பெரியவர்கள்கூட அதற்காக மிகுந்த போற்றுதலைத் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸில் வசிக்கும் ஒருவர் இவ்வாறு கூறினார்: “பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் மிகவும் எளிமையானது, சொல்நயம் மிக்கது. எந்த வயதினரையும் தூண்டுவிக்கிறது; சொல்லப்போனால் இந்த 76 வயதில் என்னை கூட தூண்டுவித்தது. உங்களுக்கு மிக்க நன்றி; இப்படிக்கு, இளமையிலிருந்தே யெகோவாவைச் சேவித்து வருபவன்.”
இங்கிலாந்திலுள்ள லண்டனில் வசிக்கும் ஒரு வாசகி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இப்புத்தகத்தில் உள்ள அழகிய விளக்கப்படங்கள் பெற்றோரையும் சரி பிள்ளைகளையும் சரி, நிச்சயமாகவே கொள்ளை கொள்ளும். கேள்விகளும் அவை அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அருமையாக இருக்கின்றன. உணர்ச்சிகளை எளிதில் பாதிக்கும் விஷயங்கள்கூட வெகு சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன; இதற்கு ஓர் உதாரணம், ‘இயேசு எவ்வாறு பாதுகாக்கப்பட்டார்’ என்ற 32-ம் அதிகாரம்.” அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளை மனதில் கொண்டு இப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களும் மற்றவர்களும்கூட இப்புத்தகம் கிடைத்தால் அதிக மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகிறேன். இனிவரும் மாதங்களிலும் வருடங்களிலும் இப்புத்தகத்தை நன்கு பயன்படுத்த விரும்புகிறேன்.”
“நன்கு யோசித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிறைய படங்கள்” இப்புத்தகத்தில் இருப்பதாக அமெரிக்காவில் மாஸசூஸெட்ஸில் வசிக்கும் ஒரு பெண்மணி குறிப்பிட்டார். “இது பிள்ளைகளுக்கான புத்தகம் என்றாலும், யெகோவாவிடம் உள்ள தனிப்பட்ட உறவைக் குறித்து சிந்தித்துப் பார்க்க பெரியவர்களான எங்களுக்கும் உதவியாக இருக்கிறது” என்று அவர் எழுதினார்.
“அடடா! எப்பேர்ப்பட்ட அருமையான புத்தகம்!” என்று அமெரிக்காவில் மேன் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு பெண் உணர்ச்சி பொங்க கூறினார். அவர் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “இப்புத்தகம் இளம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய பிள்ளைகளான நம் எல்லாருக்குமே தான். என்னுடைய இதயத்தின் ஆழத்திற்குள் ஊடுருவி, என்னுடைய உணர்ச்சிகளைத் தூண்டி, ஆற்றி தேற்றி, மனசமாதானத்தைத் தந்தது. ஒரு தகப்பனாக யெகோவாவுடன் அதிக நெருக்கமாக உணர்கிறேன். பல வருடங்களாக என் மனதில் ஏற்பட்டிருந்த காயங்களை அவர் ஆற்றிவிட்டார். அதோடு, தமது நோக்கத்தை அதிக தெளிவாக்கியுள்ளார். ‘தயவுசெய்து இதைப் படிங்க’ என்று எல்லாருக்கும் சொல்கிறேன்.”
ஜப்பானில் உள்ள கியோடோவைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது பேரப்பிள்ளைகளுக்கு இப்புத்தகத்தை வாசித்துக் காண்பித்தபோது, “‘இந்தப் பையன் என்ன செய்றான்? ஏன் இந்த சின்னப் பெண்ணை திட்றாங்க? இந்த அம்மா என்ன செய்றாங்க? இந்த சிங்கம் என்ன பண்ணுது?’ போன்ற கேள்விகளைக் கேட்டார்கள். நாம் தெரிந்துகொள்ள விரும்புற விஷயங்களைப் பற்றி இப்புத்தகம் போதிக்கிறது, அதனால், லைப்ரரியில கிடைக்கிற எந்தவொரு புத்தகத்தையும்விட இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்கிறார் அவர்.
கனடாவில் கால்கரியில் வசிக்கும் ஒரு தகப்பன், இப்புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவுடனே, அதை தன்னுடைய ஆறு வயது மகளுக்கும் ஒன்பது வயது மகனுக்கும் வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்ததாக சொல்கிறார். “கைமேல் பலன் கிடைத்தது. பிள்ளைகள் கூர்ந்து கவனித்து தங்கள் இருதயத்திலிருந்து பதிலளிக்க ஆரம்பித்தார்கள். படிப்பில் தங்களுக்கும் பங்கிருந்ததாக உணர்ந்தார்கள். மனதில் உள்ளதை சொல்ல ஆரம்பித்தார்கள். இப்போது மிகவும் கலகலப்பாக ஆகிவிட்டார்கள். என்னுடைய மகளுக்கு ஒவ்வொரு இரவும் இந்தப் புதிய புத்தகத்திலிருந்து படிக்க வேண்டுமாம்.”
ஒரு படிப்புக்குப் பிறகு, அந்தத் தகப்பன் இவ்வாறு கூறினார்: “நானும் என்னுடைய மகனும் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மணிக்கணக்காக பேசினோம். அந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களின் பேரில் அவனுக்கு அநேக கேள்விகள் இருந்தன. என்னிடம் குட்-நைட் சொல்லிவிட்டு, ‘அப்பா, இது மாதிரியே தொடர்ந்து செய்யலாமா? எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு. யெகோவாவை பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு’ என்று அவன் சொன்னபோது என் கண்கள் குளமாயின.”
[பக்கம் 15-ன் படம்]
பெற்றோரே, மனோவாவின் முன்மாதிரியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 16-ன் படம்]
இளைஞரே, அந்த மூன்று எபிரெயரின் முன்மாதிரியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 17-ன் படம்]
“போதகர்” புத்தகத்திலுள்ள படங்களும் படக்குறிப்புகளும் கற்பிக்க உதவும் வலிமைமிக்க கருவிகள்
பேதுருவிடம் அனனியா என்ன பொய் சொன்னான்?
நாம் செய்யும் யாவற்றையும் யார் பார்க்க முடியும்?