இருதயங்களில் அன்பின் பிரமாணம்
‘நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதுவேன்.’—எரேமியா 31:33.
1, 2. (அ) இப்போது நாம் எதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்? (ஆ) சீனாய் மலையில் யெகோவா தம்முடைய பிரசன்னத்தை எப்படி வெளிக்காட்டினார்?
சீனாய் மலையிலிருந்து மோசே கீழே இறங்கி வந்தபோது அவரது முகம் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலித்ததைப் பற்றி முந்தின இரு கட்டுரைகளில் பார்த்தோம். மோசே அணிந்திருந்த முக்காட்டைப் பற்றியும் சிந்தித்தோம். இப்போது அவற்றோடு சம்பந்தமுடையதும், இன்று கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் உடையதுமான ஒரு விஷயத்தைச் சிந்திக்கலாம்.
2 மோசே மலையில் இருந்தபோது யெகோவாவிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றார். சீனாய் மலை முன்பு கூடியிருந்த இஸ்ரவேலர், கடவுளுடைய பிரசன்னத்தின் பிரமிப்பூட்டும் வெளிக்காட்டைக் கண்ணாரக் கண்டார்கள். “இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். . . . கர்த்தர் சீனாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப் போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.”—யாத்திராகமம் 19:16-18.
3. பத்துக் கட்டளைகளை யெகோவா எப்படி கொடுத்தார், அந்த ஜனங்கள் எதைப் புரிந்துகொண்டார்கள்?
3 ஒரு தேவதூதன் மூலம் யெகோவா அந்த ஜனங்களிடம் பேசினார்; பத்துக் கட்டளைகள் எனப் பிற்பாடு அழைக்கப்பட்ட பிரமாணங்களை அவர்களுக்கு அளித்தார். (யாத்திராகமம் 20:1-17) ஆகவே, இந்தப் பிரமாணங்கள் சர்வவல்லவரிடமிருந்து வந்தவை என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. யெகோவா அந்தக் கட்டளைகளை கற்பலகைகளில் எழுதினார்; இஸ்ரவேலர் பொன் கன்றுக்குட்டியை வணங்குவதைப் பார்த்த மோசே கீழே போட்டு நொறுக்கிய கற்பலகைகளே அவை. யெகோவா அந்தக் கட்டளைகளை மறுபடியும் வேறு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். இந்த முறை, அந்தக் கற்பலகைகளை மோசே எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வருகையில் அவரது முகம் பிரகாசமாயிருந்தது. இதற்குள்ளாக, இந்தப் பிரமாணங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அனைவருமே புரிந்துகொண்டார்கள்.—யாத்திராகமம் 32:15-19; 34:1, 4, 29, 30.
4. பத்துக் கட்டளைகள் ஏன் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன?
4 பத்துக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்த அவ்விரண்டு கற்பலகைகளும் ஆசரிப்புக் கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள உடன்படிக்கை பெட்டிக்குள் வைக்கப்பட்டன; பிற்பாடு ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டன. அப்பலகைகளில் எழுதப்பட்டிருந்த பிரமாணங்கள், நியாயப்பிரமாணத்தின் முக்கிய நியமங்களைக் குறிப்பிட்டன; இஸ்ரவேல் ஜனத்தை கடவுள் எப்படி ஆளுவார் என்பதற்கு அடிப்படையாயும் அவை அமைந்தன. தாம் விசேஷமாகத் தேர்ந்தெடுத்த ஜனங்களுடன் யெகோவா செயல்பட்டு வந்தார் என்பதற்கு அவை அத்தாட்சி அளித்தன.
5. இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த பிரமாணங்கள் அவரது அன்பை எவ்விதங்களில் பிரதிபலித்தன?
5 இந்தப் பிரமாணங்கள் யெகோவாவைப் பற்றி அதிகத்தை வெளிப்படுத்தின; குறிப்பாக அவருடைய ஜனங்கள்மீது அவருக்குள்ள அன்பை வெளிப்படுத்தின. அப்பிரமாணங்களைக் கைக்கொண்டவர்களுக்கு அவை எப்பேர்ப்பட்ட அரும்பெரும் பரிசாக இருந்தன! கல்விமான் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “மனிதர் இதுவரை வகுத்துள்ள . . . எந்தவொரு ஒழுக்கநெறியையும், கடவுள் கொடுத்த இந்தப் பத்துக் கட்டளைகளோடு ஒப்பிடவே முடியாது, அவற்றிற்குச் சமமாக அல்லது அவற்றை விஞ்சுவதாகவும் இருக்கவே முடியாது.” நியாயப்பிரமாணம் முழுவதையும் குறித்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.”—யாத்திராகமம் 19:5, 6.
இருதயத்தில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணம்
6. கல்லில் வடிக்கப்பட்ட பிரமாணங்களைவிட எந்தப் பிரமாணம் மிகமிக மதிப்புள்ளதாக இருந்தது?
6 ஆம், கடவுள் கொடுத்த அந்தப் பிரமாணங்கள் அதிக மதிப்புள்ளவையாய் இருந்தன. ஆனாலும், கல்லில் வடிக்கப்பட்ட அந்தப் பிரமாணங்களைவிட மிகமிக மதிப்புள்ள ஒன்று அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இஸ்ரவேல் ஜனத்தோடு நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்துகொண்டது போலவே, வித்தியாசப்பட்ட ஒரு புதிய உடன்படிக்கை செய்யப்போவதாக யெகோவா முன்னறிவித்திருந்தார். ‘நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதுவேன்.’ (எரேமியா 31:31-34) அந்தப் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசு, தம்மைப் பின்பற்றியவர்களிடம் எழுத்து வடிவில் ஒரு பிரமாணத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, தாம் சொல்லிய, செய்த காரியங்கள் மூலம் யெகோவாவின் பிரமாணத்தை அவர்கள் மனதிலும் இருதயத்திலும் பதிய வைத்தார்.
7. ‘கிறிஸ்துவின் பிரமாணம்’ முதன்முதலில் யாருக்குக் கொடுக்கப்பட்டது, பிற்பாடு யாரும்கூட அதைப் பின்பற்றினார்கள்?
7 இந்தப் பிரமாணம் ‘கிறிஸ்துவின் பிரமாணம்’ என அழைக்கப்படுகிறது. இது யாக்கோபின் சந்ததியாராகிய மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ஜனத்தாரிடம் அல்ல, மாறாக ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ ஓர் ஆன்மீக ஜனத்தாரிடமே முதன்முதலில் கொடுக்கப்பட்டது. (கலாத்தியர் 6:2, 16; ரோமர் 2:28, 29) தேவனுடைய இஸ்ரவேலரான இவர்கள் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவர். பிற்பாடு, அவர்களுடன் எல்லாத் தேசங்களையும் சேர்ந்த ‘திரள் கூட்டத்தார்’ சேர்ந்துகொண்டார்கள்; இவர்களும்கூட யெகோவாவை ஆர்வமாக வழிபடுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10; சகரியா 8:23) ‘ஒரே மேய்ப்பனின்’ கீழ் ‘ஒரே மந்தையாக’ இவ்விரு வகுப்பாரும் “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை” பின்பற்றுகிறார்கள்; எல்லாக் காரியங்களையும் அப்பிரமாணத்தின்படி செய்கிறார்கள்.—யோவான் 10:16.
8. மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கும் இடையேயுள்ள ஒரு வேறுபாடு என்ன?
8 மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குப் பிறப்பிலிருந்தே கட்டுப்பட்டிருந்த இஸ்ரவேலரைப் போலின்றி, கிறிஸ்தவர்கள் தாங்களாகவே மனமுவந்து கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் எந்த இனம், எந்த தேசம் என்பதெல்லாம் இதற்கு முக்கியமே அல்ல. அவர்கள் யெகோவாவையும் அவரது வழிகளையும் பற்றிக் கற்றுக்கொண்டு, அவரது சித்தத்தைச் செய்ய வாஞ்சையாய் இருக்கிறார்கள். கடவுளுடைய பிரமாணத்தை தங்கள் “உள்ளத்திலே,” தங்கள் “இருதயத்திலே” வைத்துள்ள இந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், கீழ்ப்படியாதவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்பதால் மட்டுமே அவருக்குக் கீழ்ப்படிவதில்லை; வெறும் கடமைக்காகவும் அவருக்குக் கீழ்ப்படிவதில்லை. மிகவும் இன்றியமையாத, மிகவும் வலிமைமிக்க ஒன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கீழ்ப்படிகிறார்கள்; அதுபோலவே வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் கடவுளுடைய பிரமாணம் தங்கள் இருதயத்தில் இருப்பதால் அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அன்பை மையமாகக் கொண்ட பிரமாணங்கள்
9. யெகோவாவுடைய பிரமாணங்களின் சாராம்சமே அன்புதான் என்பதை இயேசு எப்படி எடுத்துக் காட்டினார்?
9 யெகோவாவுடைய பிரமாணங்களின் சாராம்சத்தை அன்பு என்ற ஒரே வார்த்தையில் உள்ளடக்கலாம். அது எப்போதுமே தூய வணக்கத்தின் முக்கிய பாகமாக இருந்திருக்கிறது, இனியும் அவ்வாறே இருக்கும். நியாயப்பிரமாணத்திலே பிரதான கற்பனை எதுவென இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” இரண்டாம் கற்பனை என்னவெனில், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பதே. அடுத்து, “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என்று அவர் சொன்னார். (மத்தேயு 22:35-40) இவ்வாறு, பத்துக் கட்டளைகள் மட்டுமல்ல, ஆனால் எபிரெய வேதாகமம் முழுவதுமே அன்பை மையமாகக் கொண்டது என்பதை இயேசு எடுத்துக்காட்டினார்.
10. அன்பு கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின் மையமாக இருப்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
10 தேவனிடத்திலும் பிறரிடத்திலும் காட்டும் அன்பு, கிறிஸ்தவர்களின் இருதயத்தில் உள்ள பிரமாணத்திற்கும் மையமாக இருக்கிறதா? ஆம், நிச்சயமாகவே! கிறிஸ்துவின் பிரமாணம் கடவுளோடுள்ள இதயப்பூர்வமான அன்புடன் சம்பந்தப்பட்டுள்ளது, அதில் ஒரு புதிய கட்டளையும் உட்பட்டுள்ளது; அதாவது கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சுய தியாக அன்பைக் காட்ட வேண்டும். அவர்கள் இயேசுவைப் போலவே அன்பு காட்ட வேண்டும்; சிநேகிதர்களுக்காக அவர் மனமுவந்து தம் உயிரையே கொடுத்தார். சீஷர்களிடம் தாம் அன்புகூர்ந்ததைப் போல, அவர்களும் ஒருவருக்கொருவர் அன்புகூரும்படியும் கடவுளிடம் அன்புகூரும்படியும் கற்றுக்கொடுத்தார். கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கிற தலைசிறந்த அன்பே அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு உதவும் முக்கிய பண்பாக விளங்குகிறது. (யோவான் 13:34, 35; 15:12, 13) அதுமட்டுமல்ல தங்களுடைய சத்துருக்களையும் நேசிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 5:44.
11. கடவுளிடமும் மனிதரிடமும் இயேசு எப்படி அன்பை வெளிக்காட்டினார்?
11 அன்பு காண்பிப்பதில் இயேசு பரிபூரண முன்மாதிரி வைத்தார். பரலோகத்தில் வலிமைமிக்க ஒரு சிருஷ்டியாக இருந்த அவருக்குப் பூமியில் தம் பிதாவின் சித்தத்தைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது, அதைச் சந்தோஷத்தோடு அவர் ஏற்றுக்கொண்டார். மற்றவர்களுடைய நித்திய வாழ்வுக்காக அவர் தம் உயிரைக் கொடுத்ததோடு, எப்படி வாழ வேண்டுமென்பதையும் ஜனங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் தாழ்மையும், தயவும், அக்கறையும் உள்ளவராய் இருந்தார்; பாரம் சுமத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு உதவினார். அதோடு, ‘நித்திய ஜீவ வசனங்களைக்கூட’ போதித்தார்; இவ்வாறு யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள சலிக்காமல் பிறருக்கு உதவினார்.—யோவான் 6:68.
12. தேவனிடத்திலும் பிறரிடத்திலும் காட்டும் அன்பு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது என ஏன் சொல்லலாம்?
12 சொல்லப்போனால், தேவனிடத்திலும் பிறரிடத்திலும் காட்டும் அன்பு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது. அப்போஸ்தலன் யோவான் அதை இவ்வாறு குறிப்பிட்டார்: “அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது: . . . தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:7, 20) யெகோவா அன்பின் ஊற்றாகவும், உருவாகவும் இருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றிலும் அன்பு வெளிப்படுகிறது. நாம் அவரது சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் பிறரிடம் அன்பு காட்டுகிறோம். (ஆதியாகமம் 1:27) இப்படிப் பிறரிடம் அன்பு காட்டுவதன் மூலம் கடவுள் மீதுள்ள நம் அன்பை வெளிப்படுத்துகிறோம்.
அன்பு செலுத்துவது கீழ்ப்படிவதை அர்த்தப்படுத்துகிறது
13. கடவுளிடம் அன்பு காட்டுவதற்கு நாம் முதலாவது என்ன செய்ய வேண்டும்?
13 பார்க்க முடியாத கடவுளிடத்தில் நாம் எப்படி அன்பு காட்ட முடியும்? அதற்கு அத்தியாவசியமான முதல்படி அவரைப் பற்றி அறிந்துகொள்வதாகும். முன்பின் தெரியாத ஒருவரை நேசிக்கவோ நம்பவோ முடியாது. அதனால்தான், பைபிளைப் படிப்பதன் மூலமும், ஜெபிப்பதன் மூலமும், கடவுளைப் பற்றி ஏற்கெனவே அறிந்து அவரிடம் அன்பு காட்டுவோருடன் கூட்டுறவு கொள்வதன் மூலமும் கடவுளை அறிந்துகொள்ளும்படி அவருடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. (சங்கீதம் 1:1, 2; பிலிப்பியர் 4:6; எபிரெயர் 10:25) இந்த விஷயத்தில், பைபிளிலுள்ள நான்கு சுவிசேஷங்கள் மிகமிக மதிப்புவாய்ந்தவை. ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, ஊழியம் ஆகியவற்றின் வாயிலாக யெகோவாவின் குணாதிசயங்களை அவை வெளிப்படுத்துகின்றன. அவற்றிலிருந்து கடவுளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ளும்போதும், நம்மீது அவர் காண்பித்துள்ள அன்புக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும்போதும், அவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய குணாதிசயங்களைப் பின்பற்றுவதற்கான வாஞ்சை நம்மில் பெருக்கெடுக்கும். ஆம், கடவுள்மீது அன்பு காட்டுவதில் கீழ்ப்படிதலும் உட்பட்டிருக்கிறது.
14. கடவுளுடைய பிரமாணங்கள் பாரமானவைகள் அல்ல என ஏன் சொல்லலாம்?
14 நாம் மற்றவர்களை நேசிக்கும்போது, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்து அதற்கேற்ப அவர்களிடம் நடந்துகொள்கிறோம். அவர்களைப் புண்படுத்த விரும்ப மாட்டோம். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 5:3) ஆம், அவை பாரமானவைகளும் அல்ல, கணக்கிலடங்காதவையும் அல்ல. அன்பு நம் பாதைக்கு வழிகாட்டுகிறது. நம்முடைய ஒவ்வொரு செயலுக்குமுரிய விதிமுறைகளையெல்லாம் நாம் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை, கடவுள் மீதுள்ள அன்பே நம்மை வழிநடத்துகிறது. கடவுளுடைய பிரமாணங்கள் பாரமானவை அல்ல, ஏனெனில் நாம் உயிருக்கு உயிராய் நேசிப்போருக்குச் சேவை செய்கையில் அது நமக்குச் சந்தோஷத்தையே அளிக்கிறது. நாம் கடவுளை நேசிப்போமானால், அவருடைய சித்தத்தைச் செய்வது நமக்கு இன்பமாயிருக்கும். அப்படிச் செய்யும்போது, கடவுளுடைய பிரியத்தையும் சம்பாதிப்போம், பல நன்மைகளையும் அடைவோம்; ஆம், அவரது வழிகளெல்லாம் எப்போதும் நமக்கு நன்மைகளையே பெற்றுத்தரும்.—ஏசாயா 48:17.
15. யெகோவாவைப் பின்பற்ற எது நம்மைத் தூண்டும்? விளக்குங்கள்.
15 கடவுள் மீதுள்ள அன்பு, அவரது பண்புகளைப் பின்பற்ற நம்மை ஊக்குவிக்கிறது. நாம் ஒருவரை நேசிக்கும்போது, அவருடைய பண்புகளை நாம் மெச்சுகிறோம், அவரைப் போலவே இருக்க முயலுகிறோம். யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இடையேயுள்ள பந்தத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரலோகத்தில் அவர்கள் ஒன்றாக இருந்திருப்பார்கள். அவர்களுக்கிடையே ஆழ்ந்த, கள்ளங்கபடற்ற அன்பு நிலவியது. இயேசு அந்தளவுக்குத் தமது பரலோகத் தகப்பனைப் போலவே இருந்ததால்தான், தம் சீஷர்களிடம் “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவான் 14:9) யெகோவாவையும் அவருடைய குமாரனையும் பற்றிய அறிவிலும் அவர்களுக்கான நன்றியுணர்விலும் நாம் பெருகி வருகையில், அவர்களைப் போலவே இருக்க நாம் தூண்டப்படுகிறோம். யெகோவா மீதுள்ள அன்பும், அவருடைய பரிசுத்த ஆவியின் உதவியுமே ‘பழைய மனுஷனையும் [அதாவது, சுபாவத்தையும்] அதன் செய்கைகளையும் களைந்துபோட்டு, புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள’ நமக்குக் கைகொடுக்கும்.—கொலோசெயர் 3:9, 10; கலாத்தியர் 5:22, 23.
செயலில் அன்பு
16. பிரசங்கித்து சீஷராக்கும் வேலையில் ஈடுபடுவதன் மூலம் யெகோவா மீதும் பிறர் மீதும் உள்ள அன்பு எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?
16 கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுள் மீதும் பிறர் மீதும் உள்ள அன்பினால் ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் பங்குகொள்ள தூண்டப்படுகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், . . . சித்தமுள்ளவராயிருக்கிற” யெகோவா தேவனை நாம் பிரியப்படுத்துகிறோம். (1 தீமோத்தேயு 2:3, 4) இவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணத்தை தங்கள் இருதயங்களில் எழுதிக்கொள்ள பிறருக்கு உதவுவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதுமட்டுமல்ல, யெகோவாவுடைய குணாதிசயங்களை அவர்கள் படிப்படியாகக் காண்பிக்க ஆரம்பிப்பதைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சி அடைகிறோம். (2 கொரிந்தியர் 3:18) சொல்லப்போனால், கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவதே மற்றவர்களுக்கு நாம் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த பரிசாகும். யெகோவாவின் நட்பை ஏற்றுக்கொள்பவர்கள் அதை நித்திய காலமாக அனுபவித்து மகிழ முடியும்.
17. பொருளுடைமைகளை நாடுவதற்கு பதிலாக கடவுள் மீதும் பிறர் மீதும் அன்பை வளர்த்துக்கொள்வது ஏன் ஞானமானது?
17 நாம் வாழ்ந்து வரும் இந்த உலகம் பொருளுடைமைகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறது, அவற்றை நேசிக்கிறது. ஆனால் அவை நிலையானவை அல்ல. அவை திருடப்படலாம் அல்லது அழிந்துவிடலாம். (மத்தேயு 6:19) பைபிள் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:16, 17) ஆம், யெகோவா என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; அவரை நேசித்து அவருக்குச் சேவை செய்வோரும் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள். ஆகையால், தற்காலிகமானவையாகவே இருக்கும் உலகக் காரியங்களை நாடுவதைவிட கடவுள் மீதும் பிறர் மீதும் அன்பை வளர்த்துக்கொள்வது ஞானமானதல்லவா?
18. ஒரு மிஷனரி சுய தியாக அன்பை எவ்வாறு காண்பித்தார்?
18 தொடர்ந்து அன்பு காண்பிப்பவர்கள் யெகோவாவுக்குத் துதி சேர்க்கிறார்கள். செனிகல் நாட்டைச் சேர்ந்த மிஷனரியான சோன்யாவின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஹைடி என்ற பெண்ணுக்கு அவர் பைபிள் படிப்பு நடத்தி வந்தார். விசுவாசத்தில் இல்லாத அவருடைய கணவனிடமிருந்து அவளுக்கு எச்ஐவி தொற்றியிருந்தது. கணவன் இறந்த பிறகு அவள் முழுக்காட்டுதல் பெற்றாள். ஆனால் சீக்கிரத்திலேயே அவளுடைய உடல்நிலை மோசமடைந்தது. எய்ட்ஸ் நோயாளியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். சோன்யா இவ்வாறு சொல்கிறார்: “அந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்தார்கள். ஆனால் அவர்கள் கொஞ்சம் பேராக இருந்தார்கள். ஆகவே ஆஸ்பத்திரியில் அவளைக் கவனித்துக்கொள்வதற்கு வாலண்டியர்கள் தேவைப்படுகிறார்கள் என சபையில் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள் முதற்கொண்டு, நான் அவள் கூடவே இருந்து கவனித்துக்கொண்டேன்; அவளுடைய படுக்கைக்கு அருகிலேயே பாய் விரித்து படுத்துக்கொண்டேன், அவள் சாகும்வரை அவ்வாறே செய்தேன். பொறுப்பிலிருந்த டாக்டர் என்னிடம், ‘எய்ட்ஸ் என்று தெரிந்துவிட்டால் சொந்த பந்தங்கள்கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள், அதுதான் ஒரு பெரிய பிரச்சினை. அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் இப்படியொரு ஆபத்தை விலைக்கு வாங்குகிறீர்கள்? நீங்கள் அவர்களுக்குச் சொந்தமும் இல்லை, ஒரே ஊரும் இல்லை, ஒரே இனமும் இல்லை, பிறகு ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்றார். அதற்கு நான், ‘என்னைப் பொறுத்தவரை, ஹைடி என்னுடைய கூடப்பிறந்த சகோதரி மாதிரி. அதனால் என் சொந்த சகோதரியைக் கவனித்துக்கொண்டது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்று பதிலளித்தேன். ஹைடியை அன்புடன் கவனித்துக்கொண்ட சோன்யாவுக்கு எந்த நோயும் தொற்றவில்லை.
19. கடவுளுடைய பிரமாணத்தை இருதயங்களில் பெற்றவர்களான நாம் என்ன செய்ய வேண்டும்?
19 யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் சுய தியாக அன்புக்கு அநேக எடுத்துக்காட்டுகளைக் காண முடியும். எந்தவொரு எழுதப்பட்ட பிரமாணமும் இன்று கடவுளுடைய மக்களை அடையாளம் காட்டுவதில்லை. மாறாக, எபிரெயர் 8:10-ல் சொல்லப்பட்டுள்ளவற்றின் நிறைவேற்றத்தை நாம் காண்கிறோம். “அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” நம் இருதயங்களில் யெகோவா எழுதியுள்ள அன்பின் பிரமாணத்தை நாம் எப்போதும் பொன்னென போற்றுவோமாக; அன்பை வெளிக்காட்டுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவோமாக.
20. கிறிஸ்துவின் பிரமாணம் ஏன் மதிப்புமிக்க ஒரு பொக்கிஷமாக உள்ளது?
20 அப்படிப்பட்ட அன்பை வெளிக்காட்டுகிற உலகளாவிய சகோதரத்துவத்தோடு சேர்ந்து கடவுளைச் சேவிப்பது எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! அன்பற்ற இந்த உலகில் கிறிஸ்துவின் பிரமாணத்தை தங்கள் இருதயங்களில் பெற்றிருப்பவர்கள் மதிப்புமிக்க ஒரு பொக்கிஷத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் அன்பை மட்டுமல்ல, ஆனால் சகோதரத்துவத்தினுடைய அன்பின் பலமான கட்டையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பல தேசத்தினர், மொழியினர், கலாச்சாரத்தினர் இருந்தாலும் அவர்கள் ஒப்பற்ற மத ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறார்கள். இந்த ஒற்றுமையால் யெகோவாவின் தயவு அவர்களுக்குக் கிடைக்கிறது. சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: ‘அங்கே [அன்பில் ஐக்கியப்பட்ட மக்கள் மத்தியில்] யெகோவா என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.’—சங்கீதம் 133:1-3.
பதிலளிக்க முடியுமா?
• பத்துக் கட்டளைகள் எந்தளவு முக்கியமானதாய் இருந்தன?
• இருதயங்களில் எழுதப்பட்ட பிரமாணம் எது?
• ‘கிறிஸ்துவின் பிரமாணத்தில்’ அன்பு என்ன பங்கு வகிக்கிறது?
• கடவுள் மீதும் பிறர் மீதும் உள்ள அன்பை எந்தெந்த வழிகளில் நாம் காட்டலாம்?
[பக்கம் 25-ன் படம்]
இஸ்ரவேலர் கற்பலகைகளில் எழுதப்பட்ட பிரமாணங்களைப் பெற்றிருந்தார்கள்
[பக்கம் 26-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பிரமாணத்தைத் தங்கள் இருதயங்களில் பெற்றிருக்கிறார்கள்
[பக்கம் 28-ன் படம்]
2004 மாவட்ட மாநாட்டில் செனிகல் நாட்டு சிறுமியுடன் சோன்யா