அர்மகெதோன்—மகிழ்ச்சியான ஓர் ஆரம்பம்
“அர்மகெதோன்” என்ற வார்த்தை “ஹார்-மெகதோன்,” அதாவது “மெகிதோ மலை” என அர்த்தப்படுத்தும் எபிரெயு வார்த்தையிலிருந்து வருகிறது. இது வெளிப்படுத்துதல் 16:16-ல் காணப்படுகிறது, அந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.” யாரெல்லாம் அர்மகெதோனுக்குக் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள், ஏன்? இரண்டே வசனங்களுக்கு முன்பு, வெளிப்படுத்துதல் 16:14-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக்’ கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இயல்பாகவே, இந்த வார்த்தைகள் இன்னும் சுவாரஸ்யமான கேள்விகளை நம் மனதில் எழுப்புகின்றன. இந்த ‘ராஜாக்கள்’ எங்கே சண்டையிடுகிறார்கள்? எதற்காக, யாருடன்? அநேகர் நினைக்கிறபடி, சர்வ நாசத்தை உண்டாக்கும் ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்துவார்களா? அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்களா? இவற்றிற்கு பைபிள் தரும் பதில்களைப் பார்க்கலாம்.
“மெகிதோ மலை” என குறிப்பிடப்படுவதால், மத்திய கிழக்கிலுள்ள ஒரு மலையில் அர்மகெதோன் யுத்தம் நடக்குமென அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. சொல்லப்போனால், அங்கு ஒரு மலையே கிடையாது—பூர்வ மெகிதோ இருந்த இடத்தில், சுமார் 20 மீட்டர் உயரமுள்ள ஒரு குன்று மட்டுமே இருக்கிறது. அதோடு, மெகிதோவைச் சுற்றியுள்ள இடத்தில், ‘பூமியிலுள்ள ராஜாக்கள் மற்றும் அவர்களுடைய சேனைகள்’ அனைவரையும் கூட்டிச்சேர்க்க போதிய இடமும் இல்லை. (வெளிப்படுத்துதல் 19:19) என்றாலும், மத்திய கிழக்கு சரித்திரத்தில், மிகவும் மூர்க்கத்தனமான போர்களும் இறுதித் தீர்வான போர்களும் மெகிதோ என்ற இந்த இடத்தில்தான் நிகழ்ந்தன. ஆகவே, அர்மகெதோன் என்பது இறுதித் தீர்வான போருக்கு, அதாவது ஒரேவொரு வெற்றிவீரரைக் கொண்ட போருக்கு, ஓர் அடையாளமாக இருக்கிறது.—பக்கம் 5-ல், “மெகிதோ—பொருத்தமான ஓர் அடையாளம்” என்ற பெட்டியைக் காண்க.
அர்மகெதோன் என்பது பூமிக்குரிய தேசங்களுக்கு இடையே நடைபெறும் ஒரு யுத்தமாக இருக்க முடியாது, ஏனென்றால் ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்’ ஒன்றுசேர்ந்து ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக்’ கூட்டிச்சேர்க்கப்படுவதாக வெளிப்படுத்துதல் 16:14 கூறுகிறது. ‘யெகோவாவினால் கொலையுண்டவர்கள்’ ‘பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும்’ சிதறுண்டு கிடப்பார்கள் என ஏவுதலால் எழுதப்பட்ட தனது தீர்க்கதரிசனத்தில் எரேமியா குறிப்பிட்டார். (எரேமியா 25:33) ஆகையால், அர்மகெதோன் என்பது மத்திய கிழக்கிலுள்ள ஓரிடத்தில் நடைபெறப்போகும் ஒரு மனிதப் போரல்ல. அது யெகோவாவின் போர், உலகளாவிய போர்.
என்றாலும், வெளிப்படுத்துதல் 16:16-ல் அர்மகெதோன் என்பது ஓர் ‘இடம்’ என அழைக்கப்படுவதைக் கவனியுங்கள். பைபிளில், ‘இடம்’ என்பது ஒரு நிலைமையை அல்லது ஒரு சூழ்நிலையைக் குறிக்கலாம்—இந்த விஷயத்தில், முழு உலகமும் யெகோவாவுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து வரக்கூடிய ஒரு நிலைமையைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:6, 14) அர்மகெதோன் யுத்தத்தின்போது பூமியிலுள்ள எல்லா தேசங்களும் கூட்டணியாக ஒன்றுசேர்ந்து, ‘ராஜாதி ராஜாவும்’ ‘கர்த்தாதி கர்த்தாவுமான’ இயேசு கிறிஸ்துவின் தலைமையில் போரிடும் ‘பரலோக சேனைகளுக்கு’ எதிராக கிளம்பி வருவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:14, 16.
அர்மகெதோன் என்பது அணு ஆயுதப் பேரழிவால் அல்லது வான்கோள்களுடன் பூமி மோதுவதால் உண்டாகும் ஒட்டுமொத்தப் பேரழிவு என்று சொல்லப்படுவதைப் பற்றியென்ன? மனிதகுலத்திற்கும் அவர்களுடைய வீடான பூமிக்கும் இத்தகைய பேரழிவு நேரிட அன்புள்ள கடவுள் அனுமதிப்பாரா? நிச்சயமாக அனுமதிக்க மாட்டார். இந்தப் பூமியை ‘வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல்’ ‘குடியிருப்புக்காகச் செய்து படைத்தேன்’ என ஆணித்தரமாக அவர் குறிப்பிடுகிறார். (ஏசாயா 45:18; சங்கீதம் 96:10) அர்மகெதோனில், யெகோவா இந்தப் பூமியை எரித்து சாம்பலாக்கிவிட மாட்டார். மாறாக, ‘பூமியை நாசப்படுத்தியவர்களை அழிப்பார்.’—வெளிப்படுத்துதல் 11:18, NW.
அர்மகெதோன்—எப்பொழுது?
நூற்றாண்டுகளாக, கணக்குவழக்கற்ற ஊகங்களை உருவாக்கி தொடர்ந்து மக்களுடைய மனதைக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்வி: ‘அர்மகெதோன் எப்பொழுது வரும்?’ இந்த மிக முக்கியமான போர் நடைபெறும் காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்கு பைபிளின் மற்ற புத்தகங்களின் உதவியோடு வெளிப்படுத்துதல் புத்தகத்தை ஆராய்வது நமக்குத் துணைபுரிகிறது. அர்மகெதோனை ஒரு திருடனைப் போல் வரும் இயேசுவின் வருகையோடு சம்பந்தப்படுத்தி வெளிப்படுத்துதல் 16:15 பேசுகிறது. இந்தப் பொல்லாத உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு தாம் வரப்போவதை வர்ணிக்கையில் இந்த உதாரணத்தையே இயேசுவும் பயன்படுத்தினார்.—மத்தேயு 24:43, 44; 1 தெசலோனிக்கேயர் 5:2.
பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் காட்டுகிறபடி, 1914 முதற்கொண்டு இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து வருகிறோம்.a ‘மிகுந்த உபத்திரவம்’ என்று இயேசு அழைத்த காலப்பகுதியே கடைசி நாட்களின் உச்ச கட்டமாகும். அந்தக் காலப்பகுதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பற்றி பைபிள் சொல்வதில்லை, ஆனால் அதோடு சம்பந்தப்பட்ட துன்பங்களோ, இவ்வுலகம் இதுவரை காணாத படுபயங்கரமான துன்பங்களாக இருக்கும். அந்த மிகுந்த உபத்திரவம் அர்மகெதோனில் முடிவடையும்.—மத்தேயு 24:21, 29.
அர்மகெதோன் என்பது ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தமாக’ இருப்பதால், அதை மனிதனால் தள்ளிப்போட முடியாது. ஏனென்றால் அந்த யுத்தம் எப்பொழுது நடக்கும் என்பதற்குரிய ‘காலத்தை [யெகோவா] குறித்திருக்கிறார்.’ “அது தாமதிப்பதில்லை.”—ஆபகூக் 2:3.
நீதியான கடவுளின் நீதியான போர்
கடவுள் ஏன் ஓர் உலகளாவிய போரைத் தொடுக்கிறார்? அர்மகெதோனுக்கும் அவருடைய பிரதான பண்புகளில் ஒன்றான நீதிக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. ‘யெகோவா நீதியை விரும்புகிறவர்’ என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:28, NW) மனித சரித்திரத்தில் புரையோடிக் கிடக்கும் எல்லா அநியாயங்களையும் அவர் பார்த்திருக்கிறார். இயல்பாகவே, இது அவருடைய நீதியான வெறுப்பைத் தூண்டுகிறது. ஆகையால், இந்தப் பொல்லாத உலகை அடியோடு அழிப்பதற்காக ஒரு நீதியான போரை நடத்துவதற்கு தமது குமாரனை யெகோவா தேவன் நியமித்திருக்கிறார்.
யெகோவா மாத்திரமே நீதியான போரை, அழிவுக்குத் தகுதியானவர்களை மாத்திரமே குறிவைக்கும் போரை, நிகழ்த்த முடியும், அப்பொழுது பூமியெங்கும் வாழ்கிற நல்மனமுள்ள ஆட்கள் பாதுகாக்கப்படுவார்கள். (மத்தேயு 24:40, 41; வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14) அவருக்கு மாத்திரமே இந்தப் பூமி அனைத்தின் மீதும் தமது பேரரசை ஸ்தாபிக்கும் உரிமை இருக்கிறது, ஏனென்றால் அதைப் படைத்தவர் அவரே.—வெளிப்படுத்துதல் 4:11.
யெகோவா தமது எதிரிகளுக்கு விரோதமாக எத்தகைய படைகளைப் பயன்படுத்துவார்? அது நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம், பொல்லாத தேசங்களை அடியோடு அழிப்பதற்குத் தேவையான அனைத்தையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார் என்பதே. (யோபு 38:22, 23; செப்பனியா 1:15-18) என்றாலும், கடவுளுடைய பூமிக்குரிய வணக்கத்தார் இந்தப் போரில் ஈடுபட மாட்டார்கள். மாறாக, இயேசு கிறிஸ்துவுடன் பரலோக சேனைகள் மாத்திரமே பங்குகொள்வார்கள் என வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்திலுள்ள தரிசனம் சுட்டிக்காட்டுகிறது. பூமியிலுள்ள யெகோவாவின் கிறிஸ்தவ ஊழியர்கள் எவரும் அதில் பங்குகொள்ள மாட்டார்கள்.—2 நாளாகமம் 20:15, 17.
ஞானமுள்ள கடவுள் தகுந்த எச்சரிக்கை விடுக்கிறார்
தப்பிப்பிழைப்பவர்களைப் பற்றியென்ன? சொல்லப்போனால், அர்மகெதோனில் எவருமே அழிந்துபோக வேண்டிய அவசியமில்லை. அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு கூறினார்: ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று [யெகோவா] விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், கடவுள் சித்தமுள்ளவராயிருக்கிறார்.’—1 தீமோத்தேயு 2:4.
இதற்காக, ‘ராஜ்யத்தைப் பற்றிய சுவிசேஷம்’ நூற்றுக்கணக்கான மொழிகளில் எட்டு திக்கிலும் பிரசங்கிக்கப்படுவதற்கு யெகோவா ஞானமாக ஏற்பாடு செய்திருக்கிறார். தப்பிப்பிழைப்பதற்கும் இரட்சிக்கப்படுவதற்கும் எல்லா இடங்களிலும் உள்ள மக்களும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறார்கள். (மத்தேயு 24:14; சங்கீதம் 37:34; பிலிப்பியர் 2:12) நற்செய்திக்கு செவிசாய்ப்பவர்கள் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் பரிபூரணத்தோடு என்றென்றும் வாழ முடியும். (எசேக்கியேல் 18:23, 32; செப்பனியா 2:3; ரோமர் 10:13) அன்பே உருவான கடவுளிடமிருந்து இதைத்தான் ஒருவர் எதிர்பார்ப்பார், அல்லவா?—1 யோவான் 4:8.
அன்புள்ள கடவுள் போரில் ஈடுபட முடியுமா?
என்றாலும், அன்பே உருவான கடவுள் மனிதரில் பெரும்பாலோரை ஏன் அழிப்பாரென பலர் யோசிக்கிறார்கள். மூட்டைப்பூச்சிகள் நிறைந்த ஒரு வீட்டிற்கு இந்தச் சூழ்நிலையை ஒப்பிடலாம். குடும்பத்தினருடைய பாதுகாப்பின் மீதும் ஆரோக்கியத்தின் மீதும் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு வீட்டின் சொந்தக்காரர் தன் வீட்டிலுள்ள மூட்டைப்பூச்சிகளை அழிப்பார், அல்லவா?
அது போலவே, மனிதர்மீது யெகோவாவுக்கு இருக்கும் ஆழ்ந்த பாசத்தின் காரணமாகவே அர்மகெதோன் யுத்தத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இந்தப் பூமியைப் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றுவதும் மனிதகுலத்தை பரிபூரணத்திற்கு உயர்த்துவதும் ‘பயப்படுத்துவார் இல்லாமல்’ அவர்களை சமாதானமாக வாழ வைப்பதுமே கடவுளுடைய நோக்கம். (மீகா 4:3, 4; வெளிப்படுத்துதல் 21:4) அப்படியானால், சக மனிதருடைய சமாதானத்தையும் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறவர்களை என்ன செய்ய வேண்டும்? நீதிமான்களின் நிமித்தமாக இத்தகைய தொல்லை தரும் “மூட்டைப்பூச்சிகளை”—திருந்தவே திருந்தாத பொல்லாதவர்களை—கடவுள் ஒழித்துக்கட்ட வேண்டும்.—2 தெசலோனிக்கேயர் 1:8, 9; வெளிப்படுத்துதல் 21:8.
அபூரண மனித ஆட்சியும் தேசிய நலன்களுக்காக சுயநலத்துடன் நடத்தும் போராட்டமுமே இன்றைக்கு நடைபெறும் பெரும்பாலான சண்டைக்கும் இரத்தம் சிந்துதலுக்கும் காரணம். (பிரசங்கி 8:9) மனித அரசாங்கங்கள் தங்களுடைய செல்வாக்கை வலுப்படுத்த முயற்சி செய்வதால், கடவுள் ஸ்தாபித்துள்ள ராஜ்யத்தை முற்றிலும் அசட்டை செய்கின்றன. அவர்கள் தங்களுடைய அரசதிகாரத்தைக் கடவுளிடமும் கிறிஸ்துவிடமும் துறந்துவிடுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. (சங்கீதம் 2:1-9) ஆகவே, கிறிஸ்துவால் ஆளப்படும் யெகோவாவுடைய ராஜ்யத்தின் நீதியான அரசாட்சிக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்கு இத்தகைய அரசாங்கங்களை அழித்தே தீர வேண்டும். (தானியேல் 2:44) இந்தப் பூமியையும் மனிதகுலத்தையும் ஆளும் உரிமை யாருக்கு இருக்கிறது என்ற விவாதத்தை ஒரேயடியாகத் தீர்ப்பதற்கு அர்மகெதோன் போர் கட்டாயம் நடக்க வேண்டும்.
மனிதகுலத்தின் நலனுக்காகவே அர்மகெதோனில் யெகோவா தீவிரமாகத் தலையிடுகிறார். உலக நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போவதால், கடவுளுடைய பரிபூரண ஆட்சியே மனிதருடைய தேவைகளை முற்றிலும் திருப்தியாக்கும். அவருடைய ராஜ்யத்தின் மூலமே உண்மையான சமாதானமும் செழுமையும் சாத்தியமாகும். கடவுள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் உலக நிலைமைகள் எப்படி இருக்கும்? காலங்காலமாக மனித ஆட்சியில் நடப்பது போலவே பகைமையும் வன்முறையும் போர்களும் மனிதகுலத்தைத் தொடர்ந்து தொல்லைபடுத்திக் கொண்டே இருக்காதா? சொல்லப்போனால், மனிதருக்கு நன்மைகளை வழங்கும் மிகச் சிறந்த காரியங்களில் ஒன்றுதான் அர்மகெதோன் போர்!—லூக்கா 18:7, 8; 2 பேதுரு 3:13.
எல்லா போர்களுக்கும் முடிவுகட்டுகிற போர்
வேறெந்த போரும் இதுவரை சாதிக்காத ஒன்றை அர்மகெதோன் போர் சாதிக்கும், அதுதான் எல்லா போர்களுக்கும் முடிவு. போர்களெல்லாம் கடந்தகால நிகழ்ச்சியாக மாறப்போகும் நாளுக்காக யார்தான் ஏங்கமாட்டார்? என்றாலும், போருக்குச் சமாதி கட்டுவதற்கு மனிதர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன. மனித முயற்சிகளெல்லாம் இப்படி தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்திருப்பது எதைக் காட்டுகிறது? “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” என்று எரேமியா சொன்ன வார்த்தைகளின் உண்மையைத்தான் வலியுறுத்திக் காட்டுகிறது. (எரேமியா 10:23) யெகோவா சாதிக்கப்போவதைப் பற்றி பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.
எதிர்காலத்தில் தேசங்கள் தங்கள் கைவசமுள்ள பயங்கர ஆயுதங்களை ஒருவருக்கொருவர் எதிராக பயன்படுத்தும்போதும் சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிப்பதாக அச்சுறுத்தும்போதும் இந்தப் பூமியை படைத்தவர் நடவடிக்கை எடுப்பார்—ஆம், பைபிள் சொல்லும் அர்மகெதோனில் நடவடிக்கை எடுப்பார்! (வெளிப்படுத்துதல் 11:18) ஆகையால், தேவ பயமுள்ள மனிதர் காலங்காலமாக நம்பிக் கொண்டிருந்ததை இந்தப் போர் நிறைவேற்றும். எல்லா படைப்புகளையும் அரசாளும் உரிமை பூமியின் சொந்தக்காரரான யெகோவா தேவனுக்கு மட்டுமே இருப்பதை அது நிரூபிக்கும்.
எனவே, நீதியை நேசிக்கும் மக்கள் அர்மகெதோன் போரைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் நம்பிக்கை கொள்வதற்கு ஓர் ஆதாரத்தை அது அளிக்கிறது. அர்மகெதோன் போர் எல்லா அநீதியையும் பொல்லாங்கையும் இந்தப் பூமியிலிருந்து நீக்கி சுத்திகரித்து, கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் ஆட்சியில் நீதியுள்ள புதிய உலகம் உருவாவதற்கு வழிவகுக்கும். (ஏசாயா 11:4, 5) அர்மகெதோன் என்பது திகிலூட்டும் பயங்கர பேரழிவாக இருப்பதற்குப் பதிலாக, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் நீதியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை ஆரம்பித்து வைக்கும்.—சங்கீதம் 37:29.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 11-ம் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
மெகிதோ—பொருத்தமான ஓர் அடையாளம்
பூர்வகால மெகிதோ மிக முக்கியமான ஓரிடத்தில் அமைந்திருந்தது; வட இஸ்ரவேலிலுள்ள செழிப்பான யெஸ்ரயேல் பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியைப் பார்த்தவாறு அமைந்திருந்தது. அது வழியே சென்ற இராணுவ பாதைகளும் சர்வதேச வணிக மார்க்கமும் அதன் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இதனால் மெகிதோ இறுதித் தீர்வான போர்களின் இடமாக ஆனது. பைபிள் உலகின் பட்டணங்கள்—மெகிதோ என்ற ஆங்கில நூலில் பேராசிரியர் கிரேயம் டேவீஸ் இவ்வாறு எழுதுகிறார்: “மெகிதோ பட்டணம் . . . வணிகர்களும் எட்டுத்திக்கிலிருந்து வருபவர்களும் சுலபமாக அடையக்கூடிய ஓரிடத்தில் அமைந்திருந்தது; அதேசமயத்தில், போதுமான சக்தியுள்ளதாக இருந்தால் இந்தப் பாதைகள் வழியாக உள்ளே வருவதைக் கட்டுப்படுத்தி, வணிகத்தையும் போரையும் இது ஆதிக்கம் செலுத்த முடிந்தது. எனவே, . . . இதைக் கைப்பற்றுவதற்கு அடிக்கடி போர் நிகழ்ந்ததிலும், அப்படிக் கைப்பற்றியபோது அதை நன்கு பாதுகாத்ததிலும் ஆச்சரியமில்லை.”
மெகிதோவின் சரித்திரம் பொ.ச.மு. இரண்டாம் ஆயிரமாண்டிலிருந்து ஆரம்பமானது; அப்பொழுது எகிப்தின் ஆட்சியாளர் மூன்றாம் தூட்மோஸ் கானானிய ஆட்சியாளர்களை அங்கு தோற்கடித்தார். அது நூற்றாண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்தது; பின்பு 1918-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தளபதி எட்மண்ட் ஆலன்பி என்பவர் துர்க்கிய இராணுவத்தைப் படுதோல்வியடையச் செய்தார். நியாயாதிபதி பாராக்கிற்கு கடவுள் உதவி செய்து கானானிய ராஜா யாபின் மண்ணைக் கவ்வும்படி வைத்ததும் இந்த மெகிதோவில்தான். (நியாயாதிபதிகள் 4:12-24; 5:19, 20) நியாயாதிபதி கிதியோன் மீதியானியர்களைத் தோற்கடித்ததும் இதற்கு அருகில்தான். (நியாயாதிபதிகள் 7:1-22) அகசியா மற்றும் யோசியா ராஜாக்கள் கொல்லப்பட்டதும்கூட இங்குதான்.—2 இராஜாக்கள் 9:27; 23:29, 30.
மெகிதோவை அர்மகெதோனுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமானதே, ஏனென்றால் இறுதித் தீர்வான எண்ணற்ற போர்கள் நிகழ்ந்த இடமாக அது இருந்தது. எதிர்க்கும் எல்லா படைகளையும் முற்றிலும் தோற்கடித்து யெகோவா வெற்றிவாகை சூடுவதற்குப் பொருத்தமான அடையாளமாக அது இருக்கிறது.
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 7-ன் படங்கள்]
அர்மகெதோனை தப்பிப்பிழைப்பதற்கு உலகெங்கிலும் மக்களுக்கு எச்சரிக்கையும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது
[பக்கம் 7-ன் படம்]
மகிழ்ச்சியான எதிர்காலத்தை அர்மகெதோன் ஆரம்பித்து வைக்கும்