இளைஞர்களே—யெகோவாவைச் சேவிப்பதையே தெரிவு செய்யுங்கள்
“யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்.”—யோசுவா 24:15.
1, 2. கிறிஸ்தவமண்டலத்தில் எப்படிப்பட்ட தவறான ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது?
“பிள்ளைகள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் பக்குவத்தை அடைந்தவுடன் கிறிஸ்தவர்களாக ஆகட்டும்.” பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் டெர்டுல்லியன் என்ற எழுத்தாளர் வரைந்த வார்த்தைகள் இவை. குழந்தை ஞானஸ்நானத்தை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இப்பழக்கம், அவருடைய காலத்து விசுவாசத்துரோக கிறிஸ்தவ மதத்தில் வேரூன்ற ஆரம்பித்திருந்தது. சர்ச் ஃபாதரான அகஸ்டின் இந்த விஷயத்தில் பைபிளின் கருத்தையும் டெர்டுல்லியனின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை; இந்த ஞானஸ்நானம் முதல் பாவத்தின் கறையை அகற்றிவிடுவதாகவும், ஞானஸ்நானம் பெறாமலேயே இறந்துபோகும் குழந்தைகள் எரிநரகத்திற்கு போவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த நம்பிக்கை, கைக்குழந்தைகளுக்கு முடிந்தவரை சீக்கிரத்திலேயே ஞானஸ்நானம் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவித்தது.
2 கிறிஸ்தவமண்டலத்தின் பிரபல சர்ச்சுகள், இன்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து வருகின்றன. அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ நாடுகள் என்று அழைக்கப்படுபவற்றின் ஆட்சியாளர்களும் மதத்தலைவர்களும் போரில் சிறைபிடிக்கப்பட்ட “புறமதத்தினருக்கு” கட்டாய ஞானஸ்நானம் கொடுப்பதை ஆண்டாண்டு காலமாக செய்து வந்திருக்கின்றனர். ஆனால் குழந்தை ஞானஸ்நானம், பெரியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டாய ஞானஸ்நானம் இவை இரண்டுமே பைபிள் ஆதாரமற்றவை.
இன்று பிள்ளைகள் ஒப்புக்கொடுத்தவர்களாகவே பிறப்பதில்லை
3, 4. கிறிஸ்தவ பெற்றோரின் பிள்ளைகள் தங்களை மனமுவந்து ஒப்புக்கொடுக்க எது உதவும்?
3 பெற்றோரில் ஒருவர் உண்மை கிறிஸ்தவராக இருந்தாலும்கூட அவர்களுடைய சிறு பிள்ளைகளை கடவுள் பரிசுத்தமானவர்களாகவே கருதுகிறார் என பைபிள் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 7:14) இதனால் அந்தப் பிள்ளைகள் தானாகவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக ஆகிவிடுகிறார்களா? இல்லை. என்றாலும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் தங்கள் பெற்றோரிடமிருந்து அவர்கள் பெறும் பயிற்சி, தங்களை மனமுவந்து யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க அவர்களைத் தூண்டலாம். ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. . . . நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும் போது அது உன்னோடே சம்பாஷிக்கும். . . . கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவ வழி.”—நீதிமொழிகள் 6:20-23.
4 கிறிஸ்தவ பெற்றோர்கள் காட்டும் வழியில் பிள்ளைகள் நடந்தால் அது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சாலொமோன் இவ்வாறாகவும் குறிப்பிட்டார்: “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.” “என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல் வழியிலே நடத்து.” (நீதிமொழிகள் 10:1; 23:19) ஆம், பெற்றோர் தரும் பயிற்சியிலிருந்து பயனடைவதற்கு, பிள்ளைகளான நீங்கள் ஆலோசனையையும் அறிவுரையையும், கண்டிப்பையும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஞானத்தோடு பிறக்கவில்லைதான், ஆனால் நீங்கள் ‘ஞானமடைய’ முடியும், ‘ஜீவ வழியை’ மனமுவந்து பின்பற்றவும் முடியும்.
மனக்கட்டுப்பாடு என்பது என்ன?
5. பிள்ளைகளுக்கும் தகப்பன்மாருக்கும் பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்?
5 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற [“யெகோவாவுக்கேற்ற,” NW] சிட்சையிலும் போதனையிலும் [“மனக்கட்டுப்பாட்டிலும்,” NW] அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:1-4.
6, 7. ‘யெகோவாவுக்கேற்ற மனக்கட்டுப்பாட்டில்’ பிள்ளைகளை வளர்ப்பதில் என்ன உட்பட்டுள்ளது, பெற்றோர்கள் நியாயமற்ற முறையில் கட்டுப்படுத்துவதாக இது ஏன் அர்த்தப்படுத்துவதில்லை?
6 ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்’ பிள்ளைகளை வளர்க்கையில் கிறிஸ்தவ பெற்றோர்கள் அவர்களை நியாயமற்ற விதத்தில் கட்டுப்படுத்துகிறார்களா? இல்லை. பெற்றோர்கள் தங்களுக்குச் சரியானதாகப் படுகிறவற்றையும் ஒழுக்க ரீதியில் பயனுள்ளவற்றையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதை யார் குறைகூற முடியும்? கடவுள் இல்லை என்று ஒரு நாத்திகர் தன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதை யாரும் குறைசொல்வதில்லை. ரோமன் கத்தோலிக்கர்கள் தங்களுடைய பிள்ளைகளை கத்தோலிக்க முறைப்படி வளர்ப்பதை ஒரு கடமையாகக் கருதுகிறார்கள், அதையும் பொதுவாக யாருமே குறைசொல்வதில்லை. அவ்வாறே, யெகோவாவின் சாட்சிகளும்கூட அடிப்படை சத்தியங்களிலும் ஒழுக்க நியமங்களிலும் யெகோவாவின் சிந்தையை ஏற்றுக்கொள்ளும் விதமாக பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதற்காக, பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தங்கள் கருத்துக்களை திணிப்பதாக அவர்களை யாருமே குற்றம்சாட்டக் கூடாது.
7 எபேசியர் 6:4-ல் ‘மனக்கட்டுப்பாடு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல கிரேக்க வார்த்தை “மனதைச் சரிசெய்ய, தவறைத் திருத்த, கடவுளிடம் கொண்டுள்ள மனப்பான்மையை முன்னேற்றுவிக்க முயலும்” ஒரு செயலைக் குறிக்கிறதென புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. ஒரு பிள்ளை தன்னுடைய சகாக்களின் அழுத்தம் காரணமாக, அவர்களோடு ஒத்துப்போக விரும்புவதன் காரணமாக பெற்றோர் தரும் பயிற்சியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது? தீங்கிழைக்கும் விதத்தில் செல்வாக்கு செலுத்துவதாக யாரைக் குற்றம்சாட்டுவது—பெற்றோரையா அல்லது பிள்ளையின் சகாக்களையா? போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதற்கும், அளவுக்குமீறி குடிப்பதற்கும், ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதற்கும் ஒரு பிள்ளையை சகாக்கள் வற்புறுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெற்றோர் அந்தப் பிள்ளையின் எண்ணத்தைச் சரிசெய்து அப்படிப்பட்ட மோசமான நடத்தையால் வரும் பின்விளைவுகளை பிள்ளைகளுக்குப் புரியவைப்பதற்காக அவர்களைக் குற்றப்படுத்த வேண்டுமா?
8. கற்றவற்றை நிச்சயப்படுத்திக்கொள்ள தீமோத்தேயுவுக்கு எப்படி உதவியளிக்கப்பட்டது?
8 இளைஞராயிருந்த தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.” (2 தீமோத்தேயு 3:14, 15) தீமோத்தேயு கைக்குழந்தையாக இருந்தபோதே பரிசுத்த வேத எழுத்துக்களை அவருடைய அம்மாவும் பாட்டியும் அவருக்கு போதித்தார்கள். அந்த அறிவின் அடிப்படையில் கடவுள்மீது விசுவாசம் வைப்பதற்கு உறுதியான அஸ்திவாரத்தைப் போட்டார்கள். (அப்போஸ்தலர் 16:1, 2; 2 தீமோத்தேயு 1:5) பிற்பாடு, அவர்கள் கிறிஸ்தவர்களானபோது, தாங்கள் கற்றுக்கொடுப்பதை நம்பும்படி அவரை வற்புறுத்தவில்லை; மாறாக, வேதப்பூர்வ அறிவின் அடிப்படையிலான நியாயமான விவாதங்களின் மூலம் அவரே ‘நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு’ உதவினார்கள்.
நீங்களே தெரிவுசெய்யும்படி யெகோவா கேட்கிறார்
9. (அ) யெகோவா தாம் படைத்த மனிதரை எப்படி கௌரவித்தார், அதற்குக் காரணம் என்ன? (ஆ) தெரிவு செய்யும் சுயாதீனத்தை கடவுளுடைய ஒரேபேறான குமாரன் எப்படிப் பயன்படுத்தினார்?
9 யெகோவா, மனிதரை தம்முடைய சித்தத்தைச் செய்வதற்கு புரோகிராம் செய்யப்பட்ட ரோபோட்டுகளைப்போல, சொந்தமாகத் தெரிவுசெய்ய முடியாதவர்களாகப் படைத்திருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, அவர்களுக்கு தெரிவு செய்யும் சுயாதீனத்தை அளித்து கெளரவப்படுத்தினார். மனமுவந்து கீழ்ப்படியும் குடிமக்களையே நம் கடவுள் விரும்புகிறார். தாம் படைத்த மனிதர்கள்—பெரியோரும் பிள்ளைகளும்—அன்பின் காரணமாக தமக்குச் சேவை செய்வதைப் பார்த்து அவர் அகமகிழ்கிறார். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய அன்போடு கீழ்ப்படிவதில் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் அவருடைய ஒரேபேறான குமாரனே. அவரைக் குறித்து யெகோவா இவ்வாறு குறிப்பிட்டார்: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” (மத்தேயு 3:17) முதற்பேறான இந்தக் குமாரன் தம் பிதாவிடம் இவ்வாறு சொன்னார்: “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.”—சங்கீதம் 40:8; எபிரெயர் 10:9, 10.
10. யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதமாக சேவை செய்வதற்கு எது அடிப்படையாக விளங்குகிறது?
10 தம்முடைய குமாரனாகிய இயேசுவின் வழிநடத்துதலின்கீழ் தமக்குச் சேவை செய்கிறவர்கள், அவரைப்போலவே தம்முடைய சித்தத்திற்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படியும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக இவ்வாறு பாடினார்: “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் [அதாவது, இளம் ஜனம்] உமக்குப் பிறக்கும்.” (சங்கீதம் 110:3) யெகோவாவுடைய அமைப்பின் பாகமான பரலோக சிருஷ்டிகளும் சரி பூமிக்குரிய சிருஷ்டிகளும் சரி, அன்பினால் தூண்டப்பட்டே கடவுளுடைய சித்தத்தை மனமுவந்து செய்கிறார்கள்.
11. ஒப்புக்கொடுத்த பெற்றோருடைய பிள்ளைகளுக்கு முன்னால் என்ன தெரிவு வைக்கப்படுகிறது?
11 ஆக, பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோரோ சபையிலுள்ள கிறிஸ்தவ மூப்பர்களோ முழுக்காட்டுதல் பெறும்படி உங்களை வற்புறுத்தப் போவதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை உங்கள் மனதிலிருந்து வர வேண்டும். யோசுவா இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: ‘[யெகோவாவை] உத்தமமும் உண்மையுமாய்ச் சேவியுங்கள் . . . யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்.’ (யோசுவா 24:14-22) அதுபோல, யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு உங்களை அர்ப்பணிப்பதை நீங்கள்தான் தெரிவு செய்ய வேண்டும்.
உங்களுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்
12. (அ) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்தாலும், பிள்ளைகளுக்காக அவர்கள் எதைச் செய்ய முடியாது? (ஆ) தெரிவு செய்யும் விஷயத்தில் ஓர் இளம் பிள்ளை எப்போது யெகோவாவுக்கு முன் பொறுப்புள்ளவனாக ஆகிறான்?
12 பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் பெற்றோருடைய உண்மைத்தன்மையினால் பாதுகாப்பைப் பெற முடியாத ஒரு காலம் வருகிறது. (1 கொரிந்தியர் 7:14) சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” (யாக்கோபு 4:17) பெற்றோருக்காக பிள்ளைகள் எப்படி கடவுளைச் சேவிக்க முடியாதோ அப்படியே பிள்ளைகளுக்காக பெற்றோரும் கடவுளைச் சேவிக்க முடியாது. (எசேக்கியேல் 18:20) நீங்கள் யெகோவாவையும் அவரது நோக்கங்களையும் குறித்து கற்றுக்கொண்டு விட்டீர்களா? கற்றுக்கொண்டதை புரிந்துகொள்ளவும் யெகோவாவுடன் தனிப்பட்ட பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் போதுமான வயதை எட்டி விட்டீர்களா? அப்படியானால், தமக்குச் சேவை செய்வதற்கான தீர்மானத்தை எடுக்க கடவுள் உங்களைத் தகுதியுள்ளவர்களாக கருதுவது நியாயம்தானே?
13. முழுக்காட்டப்படாத இளம் பிள்ளைகள் தங்களிடம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
13 நீங்கள் யெகோவாவை வணங்கும் பெற்றோரால் வளர்க்கப்பட்ட, கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்கிற, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் பங்கெடுக்கிற முழுக்காட்டப்படாத இளம் பிள்ளையா? அப்படியானால், உங்களிடம் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: “நான் ஏன் இதையெல்லாம் செய்கிறேன்? பெற்றோர் வற்புறுத்துவதால் கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்கிறேனா அல்லது யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புவதால் அவற்றில் கலந்துகொள்கிறேனா? ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை’ நீங்கள் பகுத்தறிந்திருக்கிறீர்களா?—ரோமர் 12:2.
முழுக்காட்டுதல் எடுப்பதை ஏன் தள்ளிப்போடுகிறீர்கள்?
14. முழுக்காட்டுதல் பெறுவதை தேவையில்லாமல் தள்ளிப்போடக் கூடாது என்பதை பைபிளிலுள்ள எந்த உதாரணங்கள் காட்டுகின்றன?
14 “ஞானஸ்நானம் [“முழுக்காட்டுதல்,” NW] பெறுகிறதற்கு தடையென்ன”? சுவிசேஷகராய் இருந்த பிலிப்புவிடம் இக்கேள்வியைக் கேட்ட எத்தியோப்பிய மனிதர், இயேசுவே மேசியா என்பதை அப்போதுதான் கற்றிருந்தார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு போதுமான பைபிள் அறிவு இருந்தது. ஆகவே, கிறிஸ்தவ சபையின் பாகமாக ஆகி யெகோவாவைச் சேவிக்கும் ஓர் ஆளாக தன்னை அடையாளப்படுத்துவதற்கு இனி தாமதிக்கக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டார், அது அவருக்கு சந்தோஷத்தையும் அளித்தது. (அப்போஸ்தலர் 8:26-39) அதுபோல, ‘பவுல் சொல்லியவைகளைக் கவனிப்பதற்கு’ தன் இருதயத்தைத் திறந்திருந்த லீதியாள் என்ற ஒரு பெண்ணும், அவளுடைய வீட்டாரும் உடனடியாக ‘முழுக்காட்டுதல் பெற்றார்கள்.’ (அப்போஸ்தலர் 16:14, 15, NW) அவ்வாறே, பவுலும் சீலாவும் ‘யெகோவாவுடைய வசனத்தைப் போதித்ததை’ பிலிப்பியிலிருந்த ஒரு சிறைச்சாலைக்காரன் கேட்டபோது ‘அவரும் அவருடையவர்கள் அனைவரும் உடனே முழுக்காட்டுதல் பெற்றார்கள்.’ (அப்போஸ்தலர் 16:25-34; NW) ஆகவே, யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய அடிப்படை அறிவும், அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்ற உள்ளப்பூர்வமான ஆசையும், சபையில் நல்ல பெயரும் உங்களுக்கு இருக்கிறதா? அதோடு, நீங்கள் கூட்டங்களிலும் ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதிலும் தவறாமல் கலந்துகொள்கிறீர்களா? அப்படியென்றால், முழுக்காட்டுதலை நீங்கள் ஏன் தள்ளிப்போட வேண்டும்?—மத்தேயு 28:19, 20.
15, 16. (அ) என்ன தவறான கருத்துகளால் இளம் பிள்ளைகள் முழுக்காட்டுதல் பெறுவதை தள்ளிப்போடலாம்? (ஆ) ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவது இளம் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கும்?
15 ஏதாவது தவறு செய்துவிட்டால் கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டுமே என்ற பயத்தில் அந்த முக்கிய படியை எடுக்க நீங்கள் தயங்குகிறீர்களா? அப்படியென்றால், இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: என்றாவது ஒருநாள் விபத்து ஏற்பட்டுவிடும் என்று பயந்து டிரைவிங் லைசன்ஸ் வாங்காமல் இருந்துவிடுவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்! அதுபோலவே, தகுதி பெற்றிருந்தால் முழுக்காட்டுதல் பெறவும் நீங்கள் தயங்கக்கூடாது. சொல்லப்போனால், யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தைச் செய்ய ஒத்துக்கொள்ளும்போது தவறு செய்யாமலிருக்க நீங்கள் இன்னும் கடுமையாக முயற்சியெடுக்க உந்துவிக்கப்படுவீர்கள். (பிலிப்பியர் 4:13, NW) அதனால் பிள்ளைகளே, முழுக்காட்டுதல் பெறுவதைத் தள்ளிப்போட்டால் கணக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று மட்டும் தயவுசெய்து நினைத்துவிடாதீர்கள். நீங்கள் முழுக்காட்டுதல் பெற்றவராக இருந்தாலும் சரி பெறாதவராக இருந்தாலும் சரி, தகுந்த வயதை எட்டிய பிறகு உங்களுடைய செயலுக்கு நீங்கள் யெகோவாவுக்கு கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.—ரோமர் 14:11, 12.
16 இளம் வயதிலேயே முழுக்காட்டுதல் பெறுவதற்கு எடுத்த தீர்மானம் தங்களுக்கு பெரிதும் உதவியிருப்பதாக உலகெங்கிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர் நினைக்கிறார்கள். உதாரணமாக, மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 23 வயதான ஓர் இளம் யெகோவாவின் சாட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். 13 வயதில் அவர் முழுக்காட்டுதல் எடுத்ததால், ‘பாலியத்துக்குரிய இச்சைகளில்’ வீழ்ந்துவிடாமல் கவனமாயிருக்க முடிந்ததாக அவர் சொல்கிறார். (2 தீமோத்தேயு 2:22) ஒரு முழுநேர ஊழியராக ஆகவேண்டுமென அவர் சிறுவயதிலேயே தீர்மானித்திருந்தார். இன்று, அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்றில் சந்தோஷமாக சேவை செய்து வருகிறார். யெகோவாவைச் சேவிக்க தெரிவு செய்திருக்கும் இளம் பிள்ளைகள் எல்லாருக்கும் அபரிமிதமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன, உங்களுக்கும்தான்.
17. எந்தெந்த அம்சங்களில் ‘யெகோவாவுடைய சித்தம்’ இன்னதென்று உணர்ந்துகொள்வது அவசியம்?
17 ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பப் படிகளே; அதன் பிறகு நாம் எதைச் செய்தாலும் யெகோவாவின் சித்தத்தை கருத்தில் கொண்டே செய்கிறோம். நம் ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றுவதில் ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்வதும்’ உட்படுகிறது. அதை நாம் எப்படிச் செய்ய முடியும்? வீணான காரியங்களுக்காக நாம் செலவழிக்கும் நேரத்தை, கருத்தூன்றி பைபிளை படிப்பதற்கும் தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வதற்கும் ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ பிரசங்கிப்பதில் முடிந்தவரை முழுமையாக ஈடுபடுவதற்கும் பயன்படுத்தலாம். (எபேசியர் 5:15, 16; மத்தேயு 24:14, NW) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதும் அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்ற ஆவலும் நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் பயனுள்ளது. உதாரணத்திற்கு, நம்முடைய ஓய்வு நேரத்தை செலவழிக்கும் விதம், சாப்பிடுவது குடிப்பது சம்பந்தமான பழக்கங்கள், நாம் தேர்ந்தெடுக்கும் இசை போன்ற அம்சங்கள் அதில் உட்படும். நித்திய காலத்துக்கும் சந்தோஷத்தை அளிக்கிற பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுப்பதுதானே உங்களுக்கு நல்லது! ‘யெகோவாவுடைய சித்தத்தை’ மீறாத விதத்தில் ஜாலியாக பொழுதைக் கழிப்பதற்கான சிறந்த வழிகள் ஏராளம் இருப்பதாக சந்தோஷமுள்ள இளம் சாட்சிகள் ஆயிரமாயிரம்பேர் கூறுகிறார்கள்.—எபேசியர் 5:18, 19.
“உங்களோடேகூடப் போவோம்”
18. இளம் பிள்ளைகள் தங்களிடம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்வது அவசியம்?
18 பொ.ச.மு. 1513-லிருந்து பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள்வரைக்கும் யெகோவாவுக்கு இந்தப் பூமியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஜனம் இருந்தது. தம்மை வணங்குவதற்கும் தமக்கு சாட்சிகளாக இருப்பதற்கும் அவர்களை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். (ஏசாயா 43:12) இஸ்ரவேலரின் இளம் பிள்ளைகள் பிறப்பிலேயே அந்த ஜனத்தின் பாகமாயிருந்தார்கள். பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு யெகோவா பூமியில் ‘தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை,’ அதாவது ஒரு புதிய ‘ஜனத்தை’ கொண்டிருக்கிறார். இவர்கள் ஆன்மீக இஸ்ரவேலராக இருக்கிறார்கள். (1 பேதுரு 2:9, 10; அப்போஸ்தலர் 15:14; கலாத்தியர் 6:16) அவர்களை கிறிஸ்து “தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்” சுத்திகரித்திருக்கிறார் என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். (தீத்து 2:14) அத்தகைய ஜனங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை இளம் பிள்ளைகளாகிய நீங்களே கண்டுபிடியுங்கள். இன்று பைபிள் நியமங்களின்படி வாழ்கிற, யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாகத் திகழ்கிற, மனிதகுலத்திற்கான ஒரே நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யமே என்று பிரசங்கிக்கிற, “சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி,” அதாவது ஜனம் எது? (ஏசாயா 26:2-4) கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளையும் பிற மதங்களையும் பாருங்கள்; கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களிடம் பைபிள் எதிர்பார்ப்பவற்றை அவற்றின் அங்கத்தினர்கள் செய்கிறார்களா என்று பாருங்கள்.
19. உலகெங்கிலுமுள்ள லட்சோப லட்சம் பேர் எதை உறுதியாக நம்புகிறார்கள்?
19 யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியானோரே அந்த ‘நீதியுள்ள ஜனம்’ என்பதை உலகெங்கிலுமுள்ள லட்சோப லட்சம் பேர் உறுதியாக நம்புகிறார்கள்; அநேக இளம் பிள்ளைகளும் அதை நம்புகிறார்கள். இந்த ஆன்மீக இஸ்ரவேலரிடம் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.” (சகரியா 8:23) இளம் பிள்ளைகளாகிய நீங்கள் கடவுளுடைய மக்களில் ஒருவராயிருக்கத் தீர்மானித்து, “ஜீவனை,” அதாவது யெகோவாவின் புதிய உலகில் நித்திய ஜீவனைத் ‘தெரிந்துகொள்வீர்கள்’ என்று நாங்கள் நம்புகிறோம், அதற்காக ஜெபிக்கிறோம்.—உபாகமம் 30:15-20; 2 பேதுரு 3:11-13.
மறுபார்வைக்காக
• மனக்கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதில் உட்பட்டிருப்பது என்ன?
• எத்தகைய சேவையை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்?
• ஒப்புக்கொடுத்த பெற்றோருடைய பிள்ளைகளுக்கு முன் என்ன தெரிவு வைக்கப்பட்டிருக்கிறது?
• முழுக்காட்டுதல் பெறுவதை ஏன் தேவையில்லாமல் தள்ளிப்போடக்கூடாது?
[பக்கம் 26-ன் படங்கள்]
நீங்கள் யாருக்குச் செவிகொடுப்பீர்கள்?
[பக்கம் 28-ன் படம்]
ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்படுவது உங்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கும்?
[பக்கம் 29-ன் படம்]
முழுக்காட்டுதல் பெற உங்களுக்குத் தடையாய் இருப்பது என்ன?