மதிப்பு மரியாதை—எல்லாருக்குமே!
“மிகச் சிறந்த உலகை, மனிதன் என்றென்றும் மதிப்பு மரியாதையோடு நடத்தப்படும் ஒரு புதிய உலகை நாம் படைக்க வேண்டும்.”—அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன், சான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா, அ.ஐ.மா., ஏப்ரல் 25, 1945.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான வருடங்களில் அநேகர் நம்பியது போலவே ஜனாதிபதி ட்ரூமேனும் நம்பினார். அதாவது, மனிதர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எல்லாருக்குமே மதிப்பு மரியாதை கிடைக்கும் “ஒரு புதிய உலகை” படைப்பார்கள் என நம்பினார். ஆனால், இன்றைய உலகம் அதைச் சாதிக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். ‘மனிதருக்கு என்றென்றும் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு மரியாதை’ இன்னமும் காலின்கீழ் மிதிபடத்தான் செய்கிறது. ஏனென்றால், இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் மனிதரல்ல, மனிதரின் மகா விரோதியே.
மகா விரோதி—யார்?
பிசாசாகிய சாத்தானே அந்த விரோதி என பைபிள் அடையாளம் காட்டுகிறது. பொல்லாத ஆவி ஆளான அவன், மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஆட்சி செய்வதற்கான கடவுளுடைய உரிமையை எதிர்த்து சவால்விட்டிருக்கிறான். ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் அவன் பேசியது முதற்கொண்டே படைப்பாளரைச் சேவிக்கவிடாமல் மனிதரை விலக்க வேண்டுமென்பதுதான் அவனுடைய நோக்கம். (ஆதியாகமம் 3:1-5) பிசாசின் பேச்சைக் கேட்டு நடந்ததால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட கதியை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! சாப்பிடக்கூடாதென சொல்லப்பட்டிருந்த பழத்தைச் சாப்பிட்டதன் மூலம் கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் போனவுடன், ‘தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, ஒளிந்துகொண்டார்கள்.’ ஏன் அப்படிச் செய்தார்கள்? “நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்” என்று ஆதாம் சொன்னான். (ஆதியாகமம் 3:8-10) ஆம், தன் பரலோக தகப்பனுடன் ஆதாம் வைத்திருந்த பந்தம் முறிந்துபோயிருந்தது, தன்னைப் பற்றி அவன் கருதிய விதம் மாறியிருந்தது. குற்றவுணர்வில் அவன் கூனிக்குறுகிப் போனதால், யெகோவாவின் முன் நிற்க சங்கடமாக உணர்ந்தான்.
ஆதாம் சுயமரியாதை இழந்து நிற்பதைக் காண சாத்தான் ஏன் விரும்பினான்? ஏனென்றால், மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருந்தான், அவருடைய மகிமையான குணங்களை வெளிக்காட்டாமல் அதற்கு எதிராக அவன் நடந்துகொள்வதைப் பார்த்து ரசிக்க சாத்தான் ஆசைப்பட்டான். (ஆதியாகமம் 1:27; ரோமர் 3:23) இது, மனிதர்கள் ஒருவரையொருவர் அவமானப்படுத்தும் செயல்கள் மனித சரித்திரம் முழுவதும் நடந்திருப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது, அல்லவா? “இப்பிரபஞ்சத்தின் தேவனான” சாத்தான், “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற” காலத்தில், இத்தகைய மனப்பான்மையை முடுக்கிவிட்டிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4; பிரசங்கி 8:9; 1 யோவான் 5:19) அப்படியானால், மதிப்பு மரியாதை அடியோடு மறைந்துவிட்டதை இது அர்த்தப்படுத்துகிறதா?
யெகோவா தம் படைப்புகளை மதிக்கிறார்
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததற்கு முன் ஏதேன் தோட்டத்தில் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தார்கள் என்பதை சற்று உங்கள் மனக்கண் முன் ஓடவிடுங்கள். அவர்களுக்கு ஏராளமான உணவு, திருப்திகரமான வேலை இருந்தன; தாங்களும் தங்களுடைய தலைமுறையினரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சாகாமல் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பும் இருந்தது. (ஆதியாகமம் 1:28) அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மனிதரை அன்போடும் மதிப்பு மரியாதையோடும் நடத்துவதற்கான கடவுளுடைய நோக்கத்தை சிறப்பித்துக் காட்டியது.
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, யெகோவாவின் இந்த நோக்கம் மாறிவிட்டதா? இல்லை. தாங்கள் நிர்வாணிகளாய் இருந்ததை அறிந்து அவர்கள் நாணிப் போயிருந்ததைப் பார்த்து இரக்கப்பட்டார். தங்களுடைய இடையை மறைக்க அவர்களாகவே அத்தியிலைகளில் தைத்திருந்த உடைகளுக்குப் பதிலாக, “[நீண்ட] தோல் உடைகளை” கொடுத்து கடவுள் அவர்களிடம் அன்பு காட்டினார். (ஆதியாகமம் 3:7, 21) அவர்களை அப்படியே வெட்கத்தில் கூனிக்குறுகிப் போகவிடாமல், மதிப்பு மரியாதையோடு நடத்தினார்.
பிற்பாடு, இஸ்ரவேல் ஜனங்களிடம் யெகோவா தொடர்புகொண்ட காலத்தில், அவர்களிலிருந்த அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் அந்நியர்களுக்கும் அவர் பரிவு காட்டினார். பொதுவாக, இப்படிப்பட்டவர்கள்தான் சமுதாயத்தில் தரக்குறைவாக நடத்தப்படுபவர்கள். (சங்கீதம் 72:13) உதாரணமாக, வயல்களில், ஒலிவ மரங்களில், திராட்சை தோட்டங்களில் அறுவடை செய்தபின் அவற்றில் மீதியிருப்பவற்றை எடுப்பதற்காகத் திரும்பப் போகக்கூடாதென இஸ்ரவேலருக்குச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அவற்றை ‘பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடும்படி’ கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். (உபாகமம் 24:19-21) இச்சட்டங்களை அவர்கள் பின்பற்றியபோது, பிச்சையெடுப்பதற்கான அவசியம் இல்லாமல் போனது, ஏழை எளியோருக்குக்கூட மதிப்பான வேலை கிடைத்தது.
இயேசு பிறரை மதித்தார்
கடவுளுடைய மகனான இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, பிறரை மதிப்பதில் அக்கறை காட்டினார். உதாரணமாக, அவர் கலிலேயாவில் இருக்கையில், குஷ்டரோகம் முற்றிப் போயிருந்த ஒரு மனிதன் அவரிடம் வந்தான். நியாயப்பிரமாண சட்டத்தின்படி ஒரு குஷ்டரோகி, தன்னுடைய நோய் மற்றவர்களைத் தொற்றாதிருக்க, “தீட்டு, தீட்டு” என்று சத்தமிட வேண்டியிருந்தது. (லேவியராகமம் 13:45) ஆனால், இந்த மனிதனோ இயேசுவிடம் வந்தபோது அவ்வாறு சத்தமிடவில்லை. அதற்குப் பதிலாக, அவன் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும்” என்று வேண்டிக்கொண்டான். (லூக்கா 5:12) அப்போது இயேசு என்ன செய்தார்? நியாயப்பிரமாணத்தை மீறியதற்காக, அவனை விரட்டிவிடவோ, அலட்சியம் செய்யவோ, தவிர்க்கவோ இல்லை. மாறாக, அவனைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்று சொன்னதன் மூலம் அவனை மதித்தார்.—லூக்கா 5:13.
மற்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகளைத் தொடாமலேயே அவர் குணப்படுத்தினார்; இன்னும் சில சந்தர்ப்பங்களில் தூரத்தில் இருந்தபடியே குணப்படுத்தினார். ஆனால், இந்தக் குஷ்டரோகியின் விஷயத்தில் அவனைத் தொட்டு குணப்படுத்தவே அவர் முடிவுசெய்தார். (மத்தேயு 15:21-28; மாற்கு 10:51, 52; லூக்கா 7:1-10) அவன் ‘குஷ்டரோகம் நிறைந்தவனாய்’ இருந்ததால் பல வருடங்களாக யாருமே அவனைத் தொட்டிருக்க மாட்டார்கள். ஆகவே, இத்தனை வருடங்களுக்குப் பின் ஒருவர் தன்னைத் தொட்டது அவனுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்! தன்னைத் தொடும்படி அல்ல, தன்னுடைய குஷ்டரோகத்தைக் குணப்படுத்தும்படியே அவன் எதிர்பார்த்தான். என்றாலும், அவனை இயேசு குணப்படுத்திய விதம் வேறொன்றைப் பெறவும் வழிசெய்தது; அதாவது, இழந்த மதிப்பு மரியாதையை அவன் மீண்டும் பெறவும் வழிசெய்தது. இன்றைய சமுதாயத்தில் பிறரை மதிப்பதில் அத்தகைய அக்கறை காட்டப்படுவதாக உண்மையில் சொல்ல முடியுமா? அப்படியானால் அது எப்படி வெளிக்காட்டப்படுகிறது?
மதிப்பு மரியாதைக்கு வழிசெய்யும் ஒரு சட்டம்
மனித உறவுகள் சம்பந்தமாக, இதுவரை யாரும் கொடுக்காத, அநேகரால் போற்றப்படும் ஓர் அறிவுரையை இயேசு கொடுத்தார். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) இது பொன் விதி, அல்லது சட்டம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. இது, சக மனிதரிடமிருந்து மதிப்பைப் பெறும் எதிர்பார்ப்போடு அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க ஒருவரைத் தூண்டுகிறது.
இந்தப் பொன் விதியைப் பின்பற்றி நடப்பது இயல்பானதல்ல என்பதைச் சரித்திரம் காட்டுகிறது; பெரும்பாலும் இதற்கு நேர்மாறானதே நடக்கிறது. உதாரணத்திற்கு ஒருவரை எடுத்துக்கொள்வோம்; அவரை ஹெரல்ட் என்று அழைப்போம். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒருகாலத்தில் மற்றவர்களைத் தலைகுனிய வைப்பதில் எனக்கு அப்படியொரு சந்தோஷம். ஓரிரண்டு வார்த்தைகளிலேயே அவர்களுடைய மானத்தை வாங்கிவிடுவேன், அவர்களைப் படபடக்க வைத்துவிடுவேன், சிலசமயங்களில் அவர்களை அழவும் வைத்துவிடுவேன்.” ஆனால் அவருடைய இந்தக் குணத்தை மாற்றிய ஒரு சம்பவம் நடந்தது. “யெகோவாவின் சாட்சிகள் பலர் என்னைச் சந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் நான் சில சமயங்களில் பேசியதையும் நடந்துகொண்டதையும் நினைத்துப் பார்க்கும்போது எனக்கே வெட்கமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் என்னை வந்து சந்திப்பதை நிறுத்தவில்லை. பைபிள் சத்தியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய இருதயத்தைத் தொட்டன, என்னுடைய குணத்தை மாற்றுவதற்கும் அவை தூண்டின.” ஹெரல்ட் இன்று கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார்.
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்பதற்கு ஹெரல்டின் அனுபவம் அத்தாட்சி அளிக்கிறது. (எபிரெயர் 4:12) ஒருவருடைய இருதயத்தைத் தொட்டு அவரது எண்ணங்களையும் நடத்தையையும் மாற்றும் வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு உள்ளது. ஆகவே, புண்படுத்துவதற்குப் பதிலாக உதவவும், இழிவுபடுத்துவதற்குப் பதிலாக கனப்படுத்தவும் வேண்டுமென்ற உள்ளப்பூர்வமான ஆசையே மற்றவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகும்.—அப்போஸ்தலர் 20:35; ரோமர் 12:10.
மதிப்பு மரியாதை மீண்டும் கிடைக்கும் காலம்
இதே ஆசைதான், பைபிள் தரும் அருமையான நம்பிக்கையைப் பற்றி பிறரிடம் சொல்வதற்கு யெகோவாவின் சாட்சிகளை உந்துவிக்கிறது. (அப்போஸ்தலர் 5:42) சக மனிதருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதற்கு, “மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை” அறிவிப்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த வழி வேறு இல்லை. (ஏசாயா 52:7, NW) ‘புதிய மனுஷனாக’ மாறுவது, அதாவது சுபாவத்தையே புதிதாக மாற்றிக்கொள்வதும் அந்த ‘மேலான ஒன்றில்’ அடங்கும். இப்புதிய சுபாவம், மற்றவர்களை இழிவுபடுத்துகிற “துர் இச்சையை,” அதாவது கெட்ட ஆசையை அழித்துப்போடும். (கொலோசெயர் 3:5-10) மனிதருடைய மதிப்பு மரியாதையைப் பறிக்கும் நிலைமைகளையும் மனப்பான்மைகளையும் நீக்குவதோடு அதற்குக் காரணமான பிசாசாகிய சாத்தானை நீக்குவதும் யெகோவாவின் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கமும்கூட அந்த ‘மேலான ஒன்றில்’ உட்பட்டுள்ளது. (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 20:1, 2, 10) அதன் பிறகு, பூமி “கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்”போது எல்லாருமே மதிப்பு மரியாதையோடு நடத்தப்படுவார்கள்.—ஏசாயா 11:9.
இந்த அருமையான நம்பிக்கையைப் பற்றி நீங்களும் அறிந்துகொள்ள விரும்புகிறோம். பைபிள் நியமங்களைப் பின்பற்றும்போது மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்த முடியுமென்பதை யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்வதன் மூலம் நீங்களாகவே அறிந்துகொள்வீர்கள். கடவுளுடைய ராஜ்யம் எவ்வாறு ‘மிகச் சிறந்த புதிய உலகை’ நிலைநாட்டப் போகிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். அந்த உலகில் ‘மனிதருக்கு என்றென்றும் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு மரியாதை’ கிடைக்கும்; அது ஒருபோதும் காலின் கீழ் மிதிக்கப்படாது.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
உண்மையாய் இருந்ததால் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டவர்கள்
இரண்டாம் உலகப் போரின்போது 2,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மத நம்பிக்கைகள் காரணமாக நாசி சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் வியக்க வைக்குமளவுக்கு உண்மையோடு நடந்துகொண்டதைக் குறிப்பிட்டு, ராவன்ஸ்புரூக்கில் கைதியாயிருந்த கேமா ல க்வார்டியா க்ளுக் என்ற பெண்மணி எனது சுயசரிதை என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு விவரிக்கிறார்: “தங்களுடைய நம்பிக்கைகளை இனி பின்பற்றப் போவதில்லை என்பதைக் குறிப்பிடும் வாக்குமூலத்தில் கையெழுத்திடுகிற பைபிள் மாணாக்கர் எவரும் விடுதலை செய்யப்படுவார்கள், அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்பதாக ஒரு கட்டத்தில் இரகசிய போலீசார் அறிவித்தார்கள்.” அந்த வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்தவர்களைப் பற்றி அவர் இவ்வாறு எழுதுகிறார்: “அதற்குப் பதிலாக, அவர்கள் துன்பத்தை அனுபவிக்கவே தயாராக இருந்தார்கள்; அதோடு புதிய உலகுக்காகப் பொறுமையோடு காத்திருந்தார்கள்.” ஏன் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார்கள்? முந்தின கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாக்டாலேனா இப்போது 80 வயதைத் தாண்டிவிட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “உயிரைக் காப்பாற்றிக்கொள்வதைவிட யெகோவாவுக்கு உண்மையாய் இருப்பதே மிக முக்கியம். உண்மையாய் இருந்ததால் எங்களுடைய மதிப்பு மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டோம்.”a
[அடிக்குறிப்பு]
a குஸரோ குடும்பத்தினரைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு, ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1985, பக்கங்கள் 10-15-ஐக் காண்க.
[பக்கம் 5-ன் படம்]
இயேசு தாம் குணப்படுத்தியவர்களை மதித்தார்
[பக்கம் 7-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் “மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை” அறிவிப்பதன் மூலம் மற்றவர்களை மதிக்கிறார்கள்