கடவுள் பயம் —“ஞானத்தைப் போதிக்கும்”
மெய் ஞானம் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறது. அது “தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின் மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள்” என்று சொல்கிறது.—நீதிமொழிகள் 9:1-6.
ஞானம் ஏற்பாடு செய்திருக்கிற விருந்தில் கலந்துகொள்வது ஒருபோதும் தீங்கு விளைவிக்காது. கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட நீதிமொழிகள் புத்தகத்தில் காணப்படுகிற ஞானத்திற்குச் செவிசாய்ப்பதும், சிட்சையை ஏற்றுக்கொள்வதும் நன்மையே விளைவிக்கும். உதாரணமாக, நீதிமொழிகள் 15:16-33-ல் காணப்படும் ஞானமிக்க அறிவுரைகளை எடுத்துக்கொள்வோம்.a ரத்தினச் சுருக்கமான அந்த அறிவுரைகள், நம்மிடம் பொருட்கள் குறைவாக இருந்தாலும் வாழ்வில் திருப்தி காணவும், முன்னேற்றம் செய்யவும், மகிழ்ச்சியோடு இருக்கவும் நமக்கு உதவும். அந்த அறிவுரைகளுக்கு இசைய நடப்பது நாம் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும், ஜீவ பாதையை விட்டு விலகாதிருப்பதற்கும்கூட உதவும்.
பொருட்கள் குறைவாக இருக்கும்போது
“சஞ்சலத்தோடு [அதாவது, மனக்குழப்பத்தோடு] கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம்” என்கிறார் பூர்வ இஸ்ரவேலை ஆண்ட சாலொமோன் ராஜா. (நீதிமொழிகள் 15:16) படைப்பாளரைப் புறக்கணித்துவிட்டு, பொருள்களைச் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பது முட்டாள்தனமானது. அது முழுக்க முழுக்க களைப்பூட்டும் வாழ்க்கை, அளவுக்கு மீறி கவலை தரும் வாழ்க்கை. வயதான பிறகு, கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கையில் அது வெறுமையானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்ததை அறியும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கும், அல்லவா? மனக் குழப்பத்தோடு சொத்துசுகங்களை ஏராளமாகச் சேர்ப்பது உண்மையிலேயே ஞானமான செயல் அல்ல. திருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்வது எவ்வளவு நல்லது! யெகோவாவுக்குப் பயப்படுவதில், அதாவது அவருடனுள்ள உறவில்தான் உண்மையான திருப்தி இருக்கிறதே தவிர பொருள்களைச் சேர்ப்பதில் அல்ல.—1 தீமோத்தேயு 6:6-8.
ஏராளமான பொருள்களைவிட மற்றவர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பதுதான் அதிக மதிப்புவாய்ந்தது என்பதை வலியுறுத்தும் விதமாக சாலொமோன் இவ்வாறு சொல்கிறார்: “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப் பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.” (நீதிமொழிகள் 15:17) உண்மைதான், ஏராளமான, பலவித உணவுப் பதார்த்தங்களைவிட குடும்பத்தில் நிலவும் அன்பான சூழலே பெரிதும் விரும்பத்தக்கது. ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் அந்தளவுக்கு வசதி வாய்ப்பு இல்லாதிருக்கலாம். சில நாடுகளில் எளிய உணவுக்கு மட்டுமே வழியிருக்கலாம். ஆனால், அன்பும் அரவணைப்பும் இருக்கும்போது குடும்பங்கள் தழைத்தோங்கும்.
பொதுவாக அன்பான சூழல் நிலவும் குடும்பங்களில்கூட மனத்தாங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்திலுள்ள ஒருவர் சொன்ன சொல்லோ செய்த செயலோ அடுத்தவரைப் புண்படுத்தலாம். அப்போது புண்பட்டவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்” என்று நீதிமொழிகள் 15:18 சொல்கிறது. எனவே, கோபப்படாமல் சாந்தத்துடன் நடந்துகொள்வது சமாதானத்திற்கு வழிசெய்யும். இந்த நீதிமொழியில் காணப்படும் புத்திமதி, குடும்பத்திற்கு மட்டுமல்ல, சபைக்கும், வெளி ஊழியத்திற்கும், வேறு சந்தர்ப்பங்களுக்கும்கூட பொருந்துகிறது.
வழி ‘ராஜ பாதையாக’ இருக்கும்போது
அதற்கு அடுத்த வசனம் ஞானத்தைக் கேட்டு நடக்காதவருக்கும், ஞானத்தைக் கேட்டு நடப்பவருக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக் காட்டுகிறது. “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை” என ஞானமுள்ள ராஜா சொல்கிறார்.—நீதிமொழிகள் 15:19.
முள்வேலி என்பது முட்கள் நிறைந்த இடையூறை அர்த்தப்படுத்துகிறது. சோம்பேறி பல விதமான இடையூறுகள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறான், ஒரு வேலையை ஆரம்பிக்காததற்கு அவற்றையே சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறான். மறுபட்சத்தில் நீதிமான்களோ, முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் இடையூறுகளைக் குறித்து கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஊக்கமாய் உழைக்கிறார்கள், தங்கள் வேலைகளைச் செய்து முடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். இவ்வாறு கவனமாய் இருப்பதால் முட்கள் போன்ற பல பிரச்சினைகளைத் தவிர்க்கிறார்கள். அவர்களுடைய வழி ‘ராஜ பாதையாக,’ அதாவது முன்னேற்றப் பாதையாக இருக்கிறது. அவர்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள், அது முன்னேறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.
உதாரணமாக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்று, முதிர்ச்சியை நோக்கி முன்னேறும் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அதற்கு முயற்சி தேவைப்படுகிறது. பைபிளைக் கருத்தூன்றிப் படிக்காதிருக்கும் ஒரு நபர் அப்படிப் படிக்காததற்குச் சாக்குப்போக்கு சொல்லலாம்; அதிக படிப்பறிவு இல்லாததையோ, சரளமாய் வாசிக்கும் திறமை இல்லாததையோ, போதிய ஞாபக சக்தி இல்லாததையோ அதற்குக் காரணம் காட்டலாம். ஆனால், இத்தகைய காரியங்களை, அறிவைப் பெறுவதற்கு முட்டுக்கட்டைகளாகக் கருதாதிருப்பது எவ்வளவு நல்லது! அந்தளவுக்குத் திறமைகள் இல்லாவிட்டாலும்கூட, வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும், வாசிக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும், தேவைப்பட்டால் அகராதியை எடுத்துப் பார்த்துப் புரிந்துகொள்வதற்கும் நாம் முயற்சி செய்யலாம். நம்பிக்கையான மனநிலை, அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கும் நமக்குத் துணைபுரிகிறது.
‘தகப்பனைச் சந்தோஷப்படுத்தும்போது’
“ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம் பண்ணுகிறான்” என இஸ்ரவேலின் ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 15:20) பிள்ளைகள் ஞானமாக நடந்துகொள்ளும்போது பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள், அல்லவா? ஆம், அத்தகைய நல்ல பலன்களைப் பெறுவதற்கு பிள்ளைகளைப் பெற்றோர்கள் பயிற்றுவிப்பதும் சிட்சை அளிப்பதும் அவசியம். (நீதிமொழிகள் 22:6) ஞானமுள்ள மகன் அவனுடைய பெற்றோருக்கு எப்பேர்ப்பட்ட ஆனந்தத்தை அளிக்கிறான்! மதியற்றவனோ, அவர்களுக்குச் சதா துயரத்தைக் கொடுக்கிறான்.
ஞானமுள்ள ராஜா இன்னொரு சந்தர்ப்பத்தில் ‘சந்தோஷத்தைப்’ பற்றி இவ்வாறு சொல்கிறார்: “மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.” (நீதிமொழிகள் 15:21) புத்தியற்றவன், முட்டாள்தனமான சிரிப்பிலும் கும்மாளத்திலும் சந்தோஷப்படுகிறான்; அவை உண்மையான திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருவதில்லை. புத்திமானோ, ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைப் புரிந்துகொள்கிறார். (2 தீமோத்தேயு 3:1, 4) கடவுள் கற்பிக்கும் நியமங்களை அவர் பின்பற்றுவதால், எப்போதும் நீதியாய் நடக்கிறார், தன் பாதையைவிட்டு விலகாமலும் இருக்கிறார்.
‘வெற்றி பெறும்போது’
வாழ்க்கையின் பிற அம்சங்களிலும்கூட கடவுள் தரும் நியமங்களைப் பின்பற்றுவது பயன்களை அளிக்கிறது. நீதிமொழிகள் 15:22 (NW) இவ்வாறு சொல்கிறது: “அந்தரங்கமான பேச்சு இல்லாவிட்டால் திட்டங்கள் வெற்றி அடையாது; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவை வெற்றி பெறும்.”
அந்தரங்கமான பேச்சு என்பது ஒருவருடன் தனிப்பட்ட விதமாகப் பேசுவதையும் அதே சமயத்தில் மனம்விட்டுப் பேசுவதையும் அர்த்தப்படுத்துகிறது. “அந்தரங்கமான பேச்சு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, சங்கீதம் 89:7-ல் “ஆலோசனைச் சபை,” அதாவது நெருக்கமான தொகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது உரையாடலில் நெருக்கத்தை அர்த்தப்படுத்துகிறது. அந்தரங்கமான பேச்சு, மேலோட்டமாகப் பேசுவதைவிடவும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது; அது, உண்மையான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பரிமாறிக்கொள்வதாகும். கணவன்-மனைவியும், பெற்றோர்-பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் இவ்வாறு ஆத்மார்த்தமாக பேசிக்கொள்ளும்போது அவர்களுக்குள் சமாதானமும் ஒற்றுமையும் நிலவுகின்றன. ஆனால், குடும்பத்தார் மத்தியில் இத்தகைய அந்தரங்கமான பேச்சு இல்லாவிட்டால், அது வெறுப்புணர்ச்சிகளிலும் பிரச்சினைகளிலுமே விளைவடையும்.
முக்கியமான தீர்மானங்களை நாம் எடுக்கும்போது “அந்தரங்கமான பேச்சு இல்லாவிட்டால் திட்டங்கள் வெற்றி அடையாது; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவை வெற்றி பெறும்” என்ற புத்திமதிக்குச் செவிசாய்ப்பது ஞானமான செயலாகும். உதாரணமாக, மருத்துவ சிகிச்சை முறைகளை, அதிலும் சிக்கல்வாய்ந்த சிகிச்சை முறைகளை நாம் தேர்ந்தெடுக்கும்போது இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது, அல்லவா?
ஆன்மீக காரியங்களுக்குக் கவனம் செலுத்தும் விஷயத்திலும்கூட பலருடைய ஆலோசனைகளைப் பெறுவது முக்கியம். மூப்பர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துபேசிப் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்போது ‘வெற்றிபெற’ முடியும். மேலும், புதிதாக மூப்பர்களாய் நியமிக்கப்பட்டிருப்பவர்கள், வயதில் மூத்த, அதிக அனுபவம் வாய்ந்த மூப்பர்களிடம் ஆலோசனை கேட்கத் தயங்கக்கூடாது, அதிலும் கடினமான காரியத்தைக் கையாளும்போது அப்படி அணுகத் தயங்கக்கூடாது.
‘வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகையில்’
தீர யோசித்துப் பேசும்போது என்ன நல்ல பலன் கிடைக்கலாம்? இஸ்ரவேலின் ராஜா பின்வருமாறு சொல்கிறார்: “மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” (நீதிமொழிகள் 15:23) மற்றவர்கள் நாம் கொடுத்த பதிலை ஏற்றுக்கொண்டதாலோ, புத்திமதியைப் பின்பற்றியதாலோ நல்ல பலன்கள் கிடைக்கிறதென்றால் நாம் மகிழ்ச்சி அடைவோம், அல்லவா? ஆனால், நாம் தரும் புத்திமதி பயனுள்ளதாய் இருப்பதற்கு இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
முதலாவதாக, அந்தப் புத்திமதி முழுக்க முழுக்க கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைச் சார்ந்ததாய் இருக்க வேண்டும். (சங்கீதம் 119:105; 2 தீமோத்தேயு 3:16, 17) இரண்டாவதாக, அது தக்க சமயத்தில் கொடுக்கப்பட வேண்டும். சரியான வார்த்தைகள்கூட பொருத்தமற்ற சமயத்தில் சொல்லப்பட்டால் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். உதாரணமாக, ஒருவருடைய பிரச்சினை என்னவென்று முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அவருக்குப் புத்திசொல்வது ஞானமான செயல் அல்ல, பிரயோஜனமானதும் அல்ல. எனவே “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருப்பது எந்தளவு முக்கியம்!—யாக்கோபு 1:19.
“ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழி”
“கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்” என நீதிமொழிகள் 15:24 குறிப்பிடுகிறது. விவேகி பாதாளத்துக்கு, அதாவது மனிதகுலத்தின் பொதுப் பிரேதக் குழிக்குச் செல்லும் வழியைத் தவிர்க்கிறார். பலருடன் பாலுறவு கொள்ளும் பழக்கத்திற்கும், குடிப்பழக்கத்திற்கும், போதைப்பொருளுக்கும் அடிமையாகாமல் இருப்பதன் மூலம் அகால மரணத்தை அவர் தவிர்க்கிறார். அவருடைய வழி ஜீவனுக்குச் செல்லும் வழி.
ஆனால் விவேகமற்றவனின் வழி எப்படி இருக்கிறதென கவனியுங்கள்: “அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை [லஞ்சத்தை] வெறுக்கிறவனோ பிழைப்பான்.”—நீதிமொழிகள் 15:25-27.
பொதுவாக எல்லாரும் இடறிவிழும் ஒரு படுகுழியை நாம் தவிர்க்கும்படி இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு சொல்கிறார்: “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.” (நீதிமொழிகள் 15:28) இந்த நீதிமொழி தரும் புத்திமதி பொன் போன்றது! புத்தியற்றவன், துளியும் சிந்திக்காமல் வீணான வார்த்தைகளைக் கொப்பளிக்கிறான்; இதனால் எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய சூழ்நிலைகள், உணர்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்களை நாம் சீர்தூக்கிப் பார்க்கும்போது, பின்னர் வருத்தப்படுமளவுக்கு சாதாரணமாக எதையும் பேசிவிட மாட்டோம்.
அப்படியென்றால் கடவுளுக்குப் பயந்து, அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும்போது என்ன பலன் கிடைக்கிறது? “துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” என அந்த ஞானி பதில் சொல்கிறார். (நீதிமொழிகள் 15:29) துன்மார்க்கரைவிட்டு மெய்க் கடவுள் விலகியே இருக்கிறார். “வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 28:9) கடவுளுக்குப் பயந்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்ய பாடுபடுகிறவர்கள், தங்களுடைய ஜெபத்தை அவர் காதுகொடுத்துக் கேட்பார் என்ற முழு நம்பிக்கையுடன் அவரை தாராளமாக அணுக முடியும்.
எது ‘இருதயத்தைப் பூரிக்கச் செய்யும்’
சிந்தனையைத் தூண்டும் ஒப்புமையைப் பயன்படுத்தி சாலொமோன் இவ்வாறு சொல்கிறார்: “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.” (நீதிமொழிகள் 15:30) மஜ்ஜை நிறைந்த எலும்புகள் “புஷ்டி”யாய் இருக்கின்றன. இவை உடல் முழுவதற்கும் புத்துயிர் அளிக்கின்றன, இருதயத்தைப் பூரிக்கச் செய்கின்றன. மேலும், இருதயத்தின் இந்தப் பூரிப்பு கண்களில் பளிச்சிடுகிறது. நல்ல செய்தியைக் கேள்விப்படும்போது அதுதான் நடக்கிறது!
உலகெங்கும் அதிகமதிகமானோர் யெகோவாவின் வணக்கத்தார் ஆவதைப் பற்றிய செய்தி உண்மையிலேயே நமக்கு உற்சாக ஊற்றாய் அமைகிறது, அல்லவா? ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையில் ஈடுபடுவதால் கிடைக்கும் பலன்களைப் பற்றி கேட்கும்போது ஊழியத்தில் இன்னும் அதிகளவில் ஈடுபட அவை நம்மை ஊக்குவிப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். (மத்தேயு 24:14; 28:19, 20) யெகோவாவைத் தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டு, மெய் வணக்கத்திற்கு இசைய நடக்க ஆரம்பிப்பவர்களின் அனுபவங்கள், நம் இருதயங்களைப் பூரிக்கச் செய்கின்றன. “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி”க்கு இந்தளவு வலிமை இருப்பதால், ஊழியத்தில் நம் மணிநேரத்தைத் திருத்தமாகவும், மனசாட்சிப்படியும் அறிக்கை செய்வது எந்தளவு முக்கியம்!—நீதிமொழிகள் 25:25.
“மேன்மைக்கு முன்னானது தாழ்மை”
பல்வேறு விதங்களில் கொடுக்கப்படும் சிட்சையை ஏற்றுக்கொள்வது எந்தளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்கு ஞானமுள்ள ராஜா பின்வருமாறு கூறுகிறார்: “ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.” (நீதிமொழிகள் 15:31, 32) கடிந்துகொள்ளுதல், அதாவது சிட்சை, ஒரு நபரின் இருதயத்தை எட்டுகிறது, அதைச் சரிப்படுத்துகிறது, அவருக்கு நல்லறிவைத் தருகிறது. ‘பிள்ளையின் நெஞ்சில் ஒட்டியிருக்கும் மதியீனத்தை’ “தண்டனையின் பிரம்பு” அகற்றுகிறது என்பதில் சந்தேகமே இல்லை! (நீதிமொழிகள் 22:15) சிட்சைக்குச் செவிகொடுக்கிறவர் நல்லிருதயத்தை, அதாவது நல்நோக்கத்தைப் பெறுகிறார். மறுபட்சத்தில், சிட்சையை உதறித்தள்ளுபவர் ஜீவனையே ஒதுக்கித் தள்ளுகிறார்.
ஆம், ஞானம் அளிக்கிற சிட்சையை மனதார வரவேற்று, அதை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும்போது நாம் பயன் அடைகிறோம். அதாவது திருப்தி, முன்னேற்றம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றைப் பெறுகிறோம். இதுமட்டுமின்றி, புகழையும் ஜீவனையும்கூட பெறுகிறோம். நீதிமொழிகள் 15:33 இவ்வாறு முடிவடைகிறது: “கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.”
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 15:1-15-ன் விரிவான விளக்கத்திற்கு காவற்கோபுரம், ஜூலை 1, 2006, பக்கங்கள் 13-16-ஐக் காண்க.
[பக்கம் 17-ன் படம்]
பல விதமான உணவுப் பதார்த்தங்களைவிட குடும்பத்தில் நிலவும் அன்பான சூழலே பெரிதும் விரும்பத்தக்கது
[பக்கம் 18-ன் படம்]
நமக்கு வரையறைகள் இருந்தாலும் நம்பிக்கையான மனநிலை அறிவைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது
[பக்கம் 19-ன் படம்]
உண்மையான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதே அந்தரங்கமான பேச்சு
[பக்கம் 20-ன் படம்]
‘நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்குவது’ எப்படியென்று உங்களுக்குத் தெரியுமா?