“உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு”
‘உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்க வேண்டியதென்ன?’—நீதிமொழிகள் 5:18, 20.
1, 2. கணவன், மனைவிக்கு இடையிலான காதலுணர்வு ஆசீர்வதிக்கப்பட்டது என ஏன் சொல்லலாம்?
பாலியல் விஷயங்களை பைபிள் ஒளிவுமறைவின்றி பேசுகிறது. நீதிமொழிகள் 5:18, 19-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உன் ஊற்றுகள் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”
2 இங்கு, “ஊற்றுகள்” என சொல்லப்பட்டிருப்பது பாலியல் திருப்தி தரும் ஒன்றைக் குறிக்கிறது. மணத் துணைகள் காதலுணர்வையும் இன்பத்தையும் பரஸ்பரம் அனுபவித்து மகிழ்வது, கடவுள் தந்த பரிசாக இருப்பதால் அது ஆசீர்வதிக்கப்பட்டது. என்றாலும், இந்தப் பாலியல் நெருக்கம் தம்பதியருக்கு இடையே மட்டும்தான் இருக்க வேண்டும். ஆகவே, பூர்வ இஸ்ரவேலரின் ராஜாவும் நீதிமொழிகளை எழுதியவருமான சாலொமோன் இவ்வாறு கேட்கிறார்: “என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன?”—நீதிமொழிகள் 5:20.
3. (அ) மணவாழ்வைப் பற்றிய என்ன உண்மை வருத்தத்தை அளிக்கிறது? (ஆ) விபசாரத்தைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்?
3 ஓர் ஆணும் பெண்ணும் தங்களுடைய மண நாளில், ஒருவரையொருவர் நேசித்து உண்மையோடு நிலைத்திருப்போம் என ஏகமனதுடன் உறுதிமொழி கொடுக்கிறார்கள். இருந்தாலும், அநேகர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு தங்களுடைய மணவாழ்வை சிதைத்துக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், 25 ஆய்வுகளைப் பார்வையிட்ட ஓர் ஆய்வாளர், “25 சதவீத மனைவிகளும் 44 சதவீத கணவர்களும் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்ற முடிவுக்கு வந்தார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) விபசாரம் கடவுளுக்கு முன்பாக மிக மோசமான பாவம்; ஆகவே, மெய் வணக்கத்தார் மணவாழ்வில் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது தெள்ளத்தெளிவாக இருக்கிறது. ‘விவாகத்தை கனமுள்ளதாயும் விவாக மஞ்சத்தை அசுசிப்படாததாயும்’ வைத்துக்கொள்ள எது நமக்கு உதவும்?—எபிரெயர் 13:4.
வஞ்சகமிக்க இருதயம்—ஜாக்கிரதை
4. மணமான ஒரு கிறிஸ்தவர் தன்னை அறியாமலேயே வேறொருவரோடு காதல் உறவு வைத்துக்கொள்ள என்ன சில வழிகள் இருக்கின்றன?
4 ஒழுக்கத்தில் சீரழிந்துபோன இன்றைய சூழலிலுள்ள அநேகர், “விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்.” (2 பேதுரு 2:14) மணத்துணையிருக்க, அவர்கள் வேண்டுமென்றே வேறொருவரோடு காதல் உறவு வைத்துக்கொள்கிறார்கள். சில நாடுகளில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அங்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்வதால் தவறான உறவுகள் உருவாவதற்கு அது வாய்ப்பான இடமாக அமைந்துவிடுகிறது. அதுமட்டுமா, ரொம்பவே கூச்ச சுபாவமுள்ளவர்கள்கூட மற்றவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பிப்பதற்கு இன்டர்நெட் சாட் ரூம்கள் வசதியாக உள்ளன. மணமான பலர் தங்களை அறியாமலேயே இத்தகைய கண்ணிகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள்.
5, 6. ஒரு கிறிஸ்தவ பெண் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாள், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
5 உதாரணத்திற்கு, ஒரு கிறிஸ்தவ பெண்ணை எடுத்துக்கொள்வோம். அவளுடைய பெயர் மேரி என வைத்துக்கொள்வோம். ஒருசமயம், ஒழுக்கக்கேட்டில் வீழ்ந்துவிடும் சூழ்நிலைக்கு அவள் ஆளானாள். யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவளுடைய கணவர் குடும்பத்தின்மீது அந்தளவுக்குப் பாசத்தைக் காட்டவில்லை. சில வருடங்களுக்கு முன், தன் கணவரோடு வேலைபார்த்த ஒருவரை அவள் சந்தித்தாள். அவர் ரொம்ப கண்ணியமானவர்; பிற்பாடு, அவர் மேரியின் மதத்தில்கூட ஆர்வம் காட்டினார். அவரைப் பற்றி மேரி இவ்வாறு கூறுகிறாள்: “அவர் ரொம்ப நல்லவர், என் கணவரைப் போல அல்ல.” சீக்கிரத்திலேயே மேரிக்கும் அந்த நபருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. “நான் ஒன்றும் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளவில்லையே! இவருக்கு பைபிளில் ஆர்வம் இருக்கிறது. இவ்விஷயத்தில் நான் அவருக்கு உதவுவதில் ஒன்றும் தப்பில்லையே” என மேரி நியாயப்படுத்திக் கொண்டாள்.
6 அந்த நெருக்கம், ஒழுக்கக்கேட்டில் போய் முடிவடைவதற்கு முன்பே, தான் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை மேரி உணர்ந்தாள். (கலாத்தியர் 5:19-21; எபேசியர் 4:19) அவளுடைய மனசாட்சி உறுத்தத் தொடங்கியது; அவள் தன்னைச் சரிசெய்துகொள்ள ஆரம்பித்தாள். ‘எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயம் திருக்குள்ளதும் [அதாவது, வஞ்சகமிக்கதும்] மகா கேடுள்ளதுமாயிருக்கிறது’ என்பதை மேரியின் அனுபவம் காட்டுகிறது. (எரேமியா 17:9) “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்” என பைபிள் நமக்கு அறிவுரை வழங்குகிறது. (நீதிமொழிகள் 4:23) அதை நாம் எப்படிச் செய்யலாம்?
‘விவேகி மறைந்து கொள்ளுகிறான்’
7. மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படும் ஒருவருக்கு உதவுகையில் என்ன பைபிள் ஆலோசனையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது?
7 “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:12) “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என நீதிமொழிகள் 22:3 குறிப்பிடுகிறது. “நான் இந்த மாதிரி தவறெல்லாம் செய்யவே மாட்டேன்” என்று மிதமீறிய தன்னம்பிக்கையுடன் இருப்பதற்குப் பதிலாக, சில சூழ்நிலைகள் எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிநடத்திவிடலாம் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது ஞானமானது. உதாரணமாக, மணவாழ்க்கையில் பயங்கரமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டு வருகிற எதிர்பாலார் ஒருவர் உங்களிடம் வந்து எல்லா விஷயங்களையும் கொட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள். (நீதிமொழிகள் 11:14) அவர் தன்னுடைய பிரச்சினைகளைக் குறித்து தன் துணையிடமோ, முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவரிடமோ, மூப்பரிடமோ பேசுவதே சிறந்தது என்று அவரிடம் சொல்லிவிடுங்கள். அவர் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவரிடம் சொல்வதாக இருந்தால், அந்நபர் ஒரே பாலினத்தவராக, அவர்களை சேர்த்துவைக்க விரும்புகிறவராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள். (தீத்து 2:3, 4) யெகோவாவின் சாட்சிகளுடைய சபையிலுள்ள மூப்பர்கள் இந்த விஷயத்தில் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்கள். ஒரு மூப்பர், கிறிஸ்தவ சகோதரி ஒருவரிடம் தனியாகப் பேசுவதாக இருந்தால், ராஜ்ய மன்றம் போன்ற பொதுவான இடங்களில் மட்டுமே அவர் பேசுகிறார்.
8. வேலை பார்க்குமிடத்தில் எதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
8 வேலை பார்க்குமிடங்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, எதிர்பாலாரோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள். உதாரணமாக, அலுவலகத்தில் வேலை நேரத்திற்குப் பிறகும் எதிர்பாலார் ஒருவரோடு சேர்ந்து வேலைபார்ப்பது சபலத்துக்கு வழிவகுக்கலாம். நீங்கள் மணமானவராக இருந்தால், இப்படிப்பட்ட தவறான உறவுகளுக்கு நீங்கள் இடமளிக்க மாட்டீர்கள் என்பதை பேச்சிலும் நடத்தையிலும் காட்டுங்கள். நீங்கள் தேவ பக்தியுள்ள நபராக இருப்பதால், சரசமாடியோ அடக்கமற்ற விதத்தில் ஆடை அலங்காரம் செய்தோ மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க மாட்டீர்கள். (1 தீமோத்தேயு 4:8; 6:11; 1 பேதுரு 3:3, 4) உங்களுடைய மணத்துணை மற்றும் பிள்ளைகளின் ஃபோட்டோக்களை அலுவலகத்தில் வைத்திருப்பது, உங்களுடைய குடும்பம் உங்களுக்கு முக்கியம் என்பதை உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நினைவுபடுத்தும். மற்றவர்கள் வீசும் காதல் வலையில் விழுந்து விடாதீர்கள், அப்படிப்பட்ட செயல்களை பொறுத்துக் கொள்ளாதீர்கள்.—யோபு 31:1.
‘நீங்கள் நேசிக்கிற மனைவியோடே வாழ்வை அனுபவியுங்கள்’
9. அடுத்தடுத்து நிகழ்கிற என்ன காரியங்கள் ஒரு புதிய தொடர்பை கவர்ச்சிமிக்கதாக்கலாம்?
9 இருதயத்தைக் காத்துக்கொள்ள ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்ப்பது மட்டும் போதாது. மணத்துணை அல்லாத ஒருவரிடத்தில் காதல் வயப்படுவது, கணவனும் மனைவியும் தங்களுடைய பரஸ்பர தேவைகளுக்குக் கவனம் செலுத்துவதில்லை என்பதைக் காட்டுகிறது. அதாவது, ஒரு மனைவி எப்போதுமே புறக்கணிக்கப்படலாம், அல்லது ஒரு கணவன் சதா குறைகூறப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வேலையிடத்திலோ, கிறிஸ்தவ சபையிலோகூட தன் துணையிடம் எதிர்பார்க்கிற அதே குணங்களை உடைய ஒருவரைச் சந்திக்க நேரிடலாம். சீக்கிரத்திலேயே அவர்களிடையே நெருக்கம் ஏற்படுகிறது, பிறகு அந்தப் புதிய உறவு கட்டுப்படுத்த முடியாதளவுக்கு கவர்ச்சிமிக்கதாகி விடுகிறது. இப்படி, வெளிப்படையாகத் தெரியாமல் அடுத்தடுத்து நிகழ்கிற காரியங்கள், பைபிள் சொல்வது உண்மையே என்பதை உறுதிப்படுத்துகின்றன. “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” என அது சொல்கிறது.—யாக்கோபு 1:14.
10. கணவர்களும் மனைவிகளும் தங்களுடைய பந்தத்தை எப்படிப் பலப்படுத்திக் கொள்ளலாம்?
10 பாசம், நட்பு, கஷ்டத்தின்போது ஆதரவு என எந்த விருப்பங்களையும் திருப்தி செய்துகொள்வதற்குத் தங்களுடைய துணையல்லாத மற்றொருவரைத் தேடுவதற்குப் பதிலாக, கணவர்களும் மனைவிகளும் தங்கள் துணையோடு அன்பான பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட வேண்டும், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்க வேண்டும். திருமணத்திற்கு முன் உங்கள் துணையை விரும்புவதற்கு எது காரணமாயிருந்தது என்பதை சிந்தியுங்கள். நீங்கள் கரம்பிடிக்கவிருந்தவரை எந்தளவு நேசித்தீர்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ந்த தருணங்களை எண்ணிப் பாருங்கள். பிரச்சினையைக் குறித்து கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவாவிடம் சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு மன்றாடினார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (சங்கீதம் 51:10) ‘சூரியனுக்குக்கீழே தேவன் உங்களுக்கு நியமித்திருக்கிற நாட்களிலெல்லாம் நீங்கள் நேசிக்கிற மனைவியோடே வாழ்வை அனுபவிக்க’ தீர்மானமாயிருங்கள்.—பிரசங்கி 9:9.
11. திருமண பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு அறிவும் ஞானமும் விவேகமும் எப்படி உதவுகின்றன?
11 திருமண பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு அறிவும் ஞானமும் விவேகமும் முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. நீதிமொழிகள் 24:3, 4 இவ்வாறு குறிப்பிடுகிறது: “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.” அன்பான குடும்பத்தில் நிறைந்திருக்கிற அருமையான பொருள்களில் அன்பு, உண்மைத்தன்மை, தேவபயம், விசுவாசம் போன்ற பண்புகளும் அடங்கும். இப்பண்புகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கடவுளைப் பற்றிய அறிவு அவசியம். அப்படியானால், தம்பதியர் பைபிளைக் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். ஞானமும் விவேகமும் எந்தளவுக்கு முக்கியமானவை? ஞானம் என்பது பைபிளிலிருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்கான திறனாகும். இது, அன்றாட பிரச்சினைகளை நல்ல விதமாகச் சமாளிப்பதற்கு உதவுகிறது. விவேகமுள்ள ஒருவர், தன்னுடைய துணையின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்கிறார். (நீதிமொழிகள் 20:5) “என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு [அதாவது, விவேகத்துக்கு] உன் செவியைச் சாய்” என சாலொமோன் மூலமாக யெகோவா சொல்கிறார்.—நீதிமொழிகள் 5:1.
‘உபத்திரவப்படுகையில்’
12. மணவாழ்வில் பிரச்சினைகள் வருவது ஏன் ஆச்சரியமல்ல?
12 பிரச்சினைகள் இல்லாத மணவாழ்வே கிடையாது. கணவர்களும் மனைவிகளும் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்றும்கூட பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28) கவலை, வியாதி, துன்புறுத்தல் ஆகியவையும், பிற பிரச்சினைகளும் மணவாழ்க்கையைப் பாரப்படுத்தலாம். என்றாலும், யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிற உண்மையுள்ள மணத்துணைகளாக நீங்கள், பிரச்சினைகள் தலைதூக்குகையில் ஒன்றுசேர்ந்து அவற்றிற்கு தீர்வுகாண வேண்டும்.
13. கணவனும் மனைவியும் எந்தெந்த விஷயங்களில் தங்களை ஆராய்ந்து பார்க்கலாம்?
13 மணத்துணைகள் ஒருவரையொருவர் நடத்தும் விதத்தினால் மணவாழ்வு பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? தீர்வுகாண முயற்சி தேவை. உதாரணமாக, அன்பற்ற விதத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்து கடைசியில் அதுவே வாழ்க்கையின் பாகமாகிவிடலாம். (நீதிமொழிகள் 12:18) முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, இது பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பைபிளில் ஒரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.” (நீதிமொழிகள் 21:19) நீங்கள் ஒரு மனைவியாக இருந்தால், உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் கணவர் என்னோடு நேரம் செலவிட விரும்பாததற்கு என்னுடைய குணம்தான் காரணமா?’ கணவர்களுக்கு பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” (கொலோசெயர் 3:19) நீங்கள் ஒரு கணவராக இருந்தால் உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் மனைவியிடம் அன்பற்ற முறையில் நடந்துகொள்வதால் ஆறுதல் தேடி அவள் வேறொருவரிடம் செல்வதற்கு நானே காரணமாகி விடுகிறேனா?’ பாலியல் ஒழுக்கக்கேட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதுதான். ஆனாலும், அப்படியொரு காரியம் நிகழ்வதற்கு முன்பே பிரச்சினைகளைக் குறித்து மனந்திறந்து பேசுவதே நல்லது.
14, 15. மணத்துணை அல்லாதவரிடம் பழக்கம் வைத்துக்கொள்வது ஏன் பிரச்சினைக்குத் தீர்வு அளிக்காது?
14 மன ஆறுதலுக்காக மணத்துணை அல்லாதவரிடம் நெருங்கிப் பழகுவது பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்காது. அப்படிப்பட்ட காதல் உறவுகள் எதற்கு வழிநடத்தும்? ஒரு புதிய, சிறந்த மணவாழ்வுக்கா? சிலர் அப்படி நினைக்கலாம். ‘சொல்லப்போனால், நான் எதிர்பார்க்கிற எல்லா குணங்களும் இவரிடம்/இவளிடம் இருக்கிறது’ என அவர்கள் வாதிடலாம். ஆனால் அதில் நியாயமே இல்லை, ஏனென்றால், மணத்துணையை விட்டுவிடுகிற எவரும் அல்லது மணத்துணையை விட்டுவிடும்படி உங்களிடம் சொல்கிற எவரும் மணவாழ்வின் பரிசுத்தத்தன்மையை முற்றிலும் அவமதிக்கிறவராய் இருக்கிறார். இந்தப் புதிய காதல் உறவு, சிறந்த மணவாழ்வாய் அமையுமென எதிர்பார்ப்பது நியாயமற்றது.
15 முன்பு குறிப்பிடப்பட்ட மேரி, தன்னுடைய தவறான போக்கினால் வரவிருந்த விளைவுகளைக் குறித்து ஆழ்ந்து யோசித்தாள்; அதனால், கடவுளுடைய தயவை, தானோ வேறொருவரோ இழந்துபோவதற்கான வாய்ப்பு ஏற்படவிருந்ததைக் குறித்தும் ஆழ்ந்து யோசித்தாள். (கலாத்தியர் 6:7) அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என் கணவரோடு வேலை பார்ப்பவர் மீது எனக்கிருந்த உணர்ச்சிகளை நான் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தபோது, ஒருவேளை சத்தியத்தை அறிந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைப்பதாய் இருந்தால், அதை நானே தடுப்பதுபோல் ஆகிவிடுமே என்பதை உணர்ந்தேன். தவறு செய்வது, சம்பந்தப்பட்ட எல்லாரையுமே மோசமாகப் பாதிக்கிறது, மற்றவர்களுக்கு இடறலையும் ஏற்படுத்துகிறது!”—2 கொரிந்தியர் 6:3.
பலமான தூண்டுகோல்
16. ஒழுக்கக்கேட்டினால் வரும் பாதிப்புகள் சிலவற்றை குறிப்பிடவும்.
16 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்” என பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 5:3, 4) ஒழுக்கக்கேட்டினால் வரும் பாதிப்புகள் வேதனை தருவதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும். குறுகுறுக்கும் மனசாட்சி, பால்வினை நோய்கள், நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டவரின் துணை உணர்ச்சி ரீதியில் நொறுங்கிப்போதல் ஆகியவை அந்தப் பாதிப்புகளில் உட்படுகின்றன. நிச்சயமாகவே, மணத்துணைக்குத் துரோகம் இழைக்கும் செயலில் இறங்காதிருப்பதற்கு இது சிறந்த காரணத்தை அளிக்கிறது.
17. மணவாழ்வில் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்துகொள்வதற்கு எது பலமான தூண்டுகோலாய் இருக்கிறது?
17 மணத்துணைக்குத் துரோகம் செய்வது தவறு என்பதற்கு முக்கிய காரணம், திருமணத்தை ஆரம்பித்து வைத்தவரும், பாலுறவு கொள்ளும் திறனைத் தந்தவருமான யெகோவா அதைக் கண்டனம் செய்கிறார் என்பதாகும். மல்கியா தீர்க்கதரிசி மூலமாய் அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, . . . விபசாரருக்கு . . . விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன்.” (மல்கியா 3:5) யெகோவா எதைப் பார்க்கிறார் என்பதைக் குறித்து நீதிமொழிகள் 5:21 இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்.” ஆம், “சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” (எபிரெயர் 4:13) அப்படியானால், எந்த ஓர் ஒழுக்கங்கெட்ட நடத்தையும் யெகோவாவோடு உள்ள நம் உறவைக் கெடுத்துப்போடும் என்பதை அறிந்திருப்பதே மணவாழ்வில் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்துகொள்வதற்குப் பலமான தூண்டுகோலாய் அமைகிறது. ஒழுக்கக்கேட்டில் எவ்வளவு ரகசியமாக ஈடுபட்டிருந்தாலும்சரி, அதனால் சரீரத்திலும் சமுதாயத்திலும் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும்சரி அது யெகோவாவோடு உள்ள உறவைக் கெடுத்துப் போடுகிறது.
18, 19. போத்திபாரின் மனைவியிடம் யோசேப்பு நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
18 கடவுளோடு சமாதானமான உறவை அனுபவிக்க வேண்டுமென்ற விருப்பமும்கூட பலமான தூண்டுகோலாய் அமைகிறது; இதை கோத்திரப் பிதாவாகிய யாக்கோபுவின் மகனான யோசேப்புவின் உதாரணம் காட்டுகிறது. பார்வோனின் பிரதானியான போத்திபாரின் தயவைப் பெற்றிருந்த யோசேப்பு, போத்திபாரின் வீட்டில் செல்வாக்குமிக்க ஒரு நபராக இருந்தார். அவர் ‘அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவராயும் இருந்தார்’; அதனால், போத்திபாரின் மனைவி அவர்மீது கண் வைத்தாள். யோசேப்பை தன் வலையில் விழவைக்க அவள் தினம் தினம் முயற்சி செய்து வந்தாள், ஆனால் அவளுடைய முயற்சியெல்லாம் தோல்வி அடைந்தது. அவளுடைய வலையில் விழாதிருக்க எது அவரைத் தூண்டியது? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ . . . நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் [எஜமான்] எனக்கு விலக்கிவைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றார்.”—ஆதியாகமம் 39:1-12.
19 மணமாகாத யோசேப்பு, மற்றொருவருடைய மனைவியின் சபலத்துக்கு உடன்படாமல் தன் கற்பைக் காத்துக்கொண்டார். “உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு” என மணமான ஆண்களுக்கு நீதிமொழிகள் 5:15 கூறுகிறது. மணத்துணை அல்லாதவரிடம் உங்களை அறியாமலேயே காதல் வயப்படாதவாறு கவனமாய் இருங்கள். தம்பதியராகிய உங்களுக்குள் அன்பின் பிணைப்பைப் பலப்படுத்திக்கொள்வதற்கு முயலுங்கள். உங்களுக்குள் என்ன பிரச்சினை வந்தாலும் அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயலுங்கள். ஆம், ‘உங்கள் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திருங்கள்.’—நீதிமொழிகள் 5:18.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• மணமான கிறிஸ்தவர் ஒருவர் எப்படித் தன்னை அறியாமலேயே காதல் வலையில் சிக்கலாம்?
• மணத்துணை அல்லாதவரிடம் காதல் வயப்படாதிருப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?
• பிரச்சினைகளை எதிர்ப்படுகையில், கணவனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்?
• மணவாழ்வில் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்துகொள்வதற்கு எது பலமான தூண்டுகோலாய் அமைகிறது?
[பக்கம் 26-ன் படம்]
வேலை செய்யுமிடம் தவறான உறவுகளுக்கு வாய்ப்பான இடமாக அமைந்துவிடலாம்
[பக்கம் 28-ன் படம்]
‘அறிவினாலே அறைகளில் இனிமையான பொருள்கள் நிறைந்திருக்கும்’