யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
“முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.” “காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்.” ‘சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும் உள்ளவளாய், . . . அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?’ (உன்னதப்பாட்டு 2:2, 3; 6:10) பைபிளில் சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகத்திலுள்ள இந்த வசனங்கள் எவ்வளவு அருமையானவை! கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தில் அர்த்தம் பொதிந்த அழகான வார்த்தைகள் நிறைந்திருக்கின்றன. அதனால்தான், “உன்னதப்பாட்டு” என இது அழைக்கப்படுகிறது.—உன்னதப்பாட்டு 1:1.
இதை இயற்றியவர் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன்; இதை அவர் சுமார் பொ.ச.மு. 1020-ல், அதாவது தன்னுடைய 40 வருட ஆட்சியின் ஆரம்பத்தில் எழுதியிருக்கலாம். இது, ஒரு மேய்ப்பனுக்கும் சூலேமைச் சேர்ந்த ஒரு கிராமியப் பெண்ணுக்கும் இடையிலான காதல் காவியமாகும். இக்காவியத்தில் அந்தப் பெண்ணின் தாய், சகோதரர்கள், ‘எருசலேமின் குமாரத்திகள் [அரசவை பெண்கள்],’ ‘சீயோன் குமாரத்திகள் [எருசலேமின் பெண்கள்]’ ஆகியோரும் இடம்பெறுகிறார்கள். (உன்னதப்பாட்டு 1:5; 3:11) உன்னதப்பாட்டு புத்தகத்தை வாசிப்போருக்கு அவர்களை அடையாளம் கண்டுகொள்வது கடினமாக இருக்கிறது. ஆனால், அவர்கள் சொல்வதை அல்லது அவர்களிடம் மற்றவர்கள் சொல்வதை வைத்து அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
கடவுளுடைய வார்த்தையின் பாகமான இப்புத்தகத்திலுள்ள செய்தி இரண்டு காரணங்களின் நிமித்தம் மிக மதிப்பு வாய்ந்தது. (எபிரெயர் 4:12) முதல் காரணம், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உண்மையான காதல் எப்படிப்பட்டது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. இரண்டாவது காரணம், இயேசு கிறிஸ்துவுக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கும் இடையே எத்தகைய அன்பு நிலவுகிறது என்பதை இது சித்தரிக்கிறது.—2 கொரிந்தியர் 11:2; எபேசியர் 5:25-31.
‘காதலைத் தட்டியெழுப்ப முயலாதீர்’
“அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.” (உன்னதப்பாட்டு 1:2) சாதாரண ஒரு கிராமத்துப் பெண் சொல்லும் இந்த வார்த்தைகளுடன் உன்னதப்பாட்டு புத்தகத்திலுள்ள உரையாடல் ஆரம்பிக்கிறது; இவள் சாலொமோனுடைய கூடாரத்திற்குக் கொண்டுவரப்படுகிறாள். எப்படி?
‘என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்தார்கள்’ என அவள் சொல்கிறாள். அவர்கள் “என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்.” அவளுடைய சகோதரர்கள் அவள்மேல் கோபப்பட்டதற்குக் காரணம், இளவேனிற்காலத்தில் ஓர் இனிய நாளில் அவளுடைய காதலனாகிய மேய்ப்பன் அவளைத் தன்னுடன் உலாவ வரும்படி அழைத்ததுதான். அவனுடன் செல்வதைத் தடுப்பதற்காக, ‘திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற சிறுநரிகள்’ வராதபடி காவல்காக்கும் வேலையை அவளுக்கு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அவள் காவல்காக்கும் இடம் சாலொமோனுடைய கூடாரத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது. அவள் ‘வாதுமைத் தோட்டத்துக்குப் போகையில்’ அவள் எவ்வளவு அழகானவள் என்பதை சாலொமோன் கவனித்ததால், அவருடைய கூடாரத்திற்குக் கொண்டுவரப்படுகிறாள்.—உன்னதப்பாட்டு 1:6; 2:10-15; 6:11.
தன் நேசத்துக்குரிய மேய்ப்பனைக் காணாமல் தவிப்பதாக அவள் கூறுகையில், ‘மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்’ அவனைத் தேடும்படி அரசவை பெண்கள் அவளிடம் சொல்கிறார்கள். ஆனால், சாலொமோன் அவளைப் போகவிடுவதில்லை. அவளுடைய அழகை வருணித்து, ‘வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை’ அவளுக்குப் பண்ணுவதாக வாக்குக்கொடுக்கிறார். ஆனால், அந்தப் பெண் அதில் மயங்கிவிடுவதில்லை. அந்த மேய்ப்பன், சாலொமோனுடைய கூடாரத்திற்குச் சென்று அவளைக் கண்டுபிடித்து, “என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி” என்று உணர்ச்சிபொங்க கூறுகிறான். ‘காதலைத் தட்டி எழுப்பாதீர்; நானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்’ என அந்த இளம் பெண் அரசவை பெண்களை தன் ஆணைக்கு உட்படுத்துகிறாள்.—உன்னதப்பாட்டு 1:8-11, 15; 2:7, பொது மொழிப்பெயர்ப்பு; 3:5, பொ.மொ.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:2, 3—தன் மேய்ப்பனின் நேசம் திராட்சரசத்தைப் போலும், அவனுடைய பெயர் எண்ணெய்யைப் போலும் இருப்பதாக அவள் எண்ணிப்பார்ப்பது ஏன்? திராட்சரசம் ஒருவருடைய இருதயத்திற்கு சந்தோஷத்தை அளிப்பது போலவும், எண்ணெய்யைத் தலையில் ஊற்றுவது இதமளிப்பது போலவும், அந்த மேய்ப்பனுடைய நேசத்தையும் அவனுடைய பெயரையும் அந்தப் பெண் எண்ணிப்பார்த்தது அவளைப் பலப்படுத்தியது, ஆறுதல்படுத்தியது. (சங்கீதம் 23:5; 104:15) அவ்வாறே உண்மை கிறிஸ்தவர்கள், குறிப்பாக அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், தங்கள்மீது இயேசு கிறிஸ்து காட்டிய அன்பை எண்ணிப்பார்க்கும்போது பலத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறார்கள்.
1:5—அந்தக் கிராமத்துப் பெண் தன்னுடைய கறுத்த மேனியை ‘கேதாரின் கூடாரங்களுக்கு’ ஏன் ஒப்பிடுகிறாள்? வெள்ளாட்டின் உரோமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட துணிகள் பல காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. (எண்ணாகமம் 31:20) உதாரணமாக, ‘வாசஸ்தலத்தின்மேல் கூடாரம் போடுவதற்கு’ ‘ஆட்டுமயிராலான மூடுதிரைகள்’ பயன்படுத்தப்பட்டன. (யாத்திராகமம் 26:7) கேதாரின் கூடாரங்கள் கறுப்பு வெள்ளாட்டின் மயிரினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்; இன்றும்கூட அரேபிய நாடோடிகள் அத்தகைய கூடாரங்களைத்தான் தங்களுக்கு அமைத்துக்கொள்கிறார்கள்.
1:15—“உன் கண்கள் புறாக்கண்கள்” என்று எந்த அர்த்தத்தில் அந்த மேய்ப்பன் சொல்கிறான்? தன் காதலியின் கண்கள் பார்ப்பதற்குப் புறாவின் கண்களைப் போல மென்மையாய் இருப்பதால் அவ்வாறு கூறுகிறான்.
2:7; 3:5—“வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும்” ஏன் அரசவை பெண்கள் ஆணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? மான்களும் மரைகளும் அழகுக்கும் மிடுக்குக்கும் பெயர்போனவை. சொல்லப்போனால், அரசவை பெண்கள் தன்னுடைய காதலைத் தட்டி எழுப்பாதிருக்கும்படி அழகும் மிடுக்குமுள்ள எல்லாவற்றின் பேரிலும் அந்தச் சூலேமிய பெண் அவர்களை ஆணைக்கு உட்படுத்துகிறாள்.
நமக்குப் பாடம்:
1:2; 2:6. காதலிப்பவர்கள் தங்களுடைய நேசத்தைத் தகுந்த விதத்தில் காட்டுவது சரியானதாய் இருக்கலாம். என்றாலும், அது மோகத்தின் வெளிக்காட்டாக இல்லாமல் உண்மையான பாசத்தின் வெளிக்காட்டாக இருக்கும்படி காதல் ஜோடிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். மோகத்தின் வெளிக்காட்டு பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கே வழிவகுக்கும்.—கலாத்தியர் 5:19.
1:6; 2:10-15. சூலேமிய பெண்ணின் சகோதரர்கள் அவளை அவளுடைய காதலனுடன் ஒதுக்குப்புறமான மலைப்பகுதிக்குப் போக அனுமதிக்காததற்குக் காரணம், அவள் ஒழுக்கங்கெட்டவளாக இருந்ததாலோ, அவளுக்குக் கெட்ட எண்ணம் இருந்ததாலோ அல்ல. மாறாக, சபலத்திற்கு இடங்கொடுக்கும் சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தார்கள். இதிலிருந்து காதல் ஜோடிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், மற்றவர்களுடைய பார்வைக்கு மறைவான இடங்களுக்குச் செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
2:1-3, 8, 9. சூலேமிய பெண் அழகியாக இருந்தபோதிலும், அடக்கத்துடன் சாதாரண பூவுக்குத் தன்னை ஒப்பிட்டாள். அவள் அழகுள்ளவளாயும் யெகோவாவிடம் உண்மையுள்ளவளாயும் இருந்ததால், ‘முள்ளுகளுக்குள்ளே இருக்கும் லீலிபுஷ்பமாக’ அவளை அந்த மேய்ப்பன் கருதினான். அவனைப் பற்றி என்ன சொல்லலாம்? அவன் கட்டழகனாக, அவள் கண்களுக்கு ‘மானை’ போல் இருந்தான். அவன் விசுவாசமுள்ளவனாகவும் யெகோவாமீது பற்றுள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். “காட்டுமரங்களுக்குள்ளே [நிழலையும் கனியையும் தருகிற] கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்” என அவள் சொல்கிறாள். விசுவாசமும் கடவுள் பற்றும், வருங்காலத் துணையிடம் நாம் எதிர்பார்க்க வேண்டிய சிறந்த குணங்கள், அல்லவா?
2:7; 3:5. அந்தக் கிராமத்துப் பெண் சாலொமோனிடம் எந்த விதத்திலும் காதல்வயப்படவில்லை. மேய்ப்பனைத் தவிர வேறு யாரிடமும் தன்னுடைய காதலைத் தட்டி எழுப்பாதிருக்கும்படி அரசவை பெண்களைக்கூட தன் ஆணைக்கு உட்படுத்தினாள். வெறுமனே யாரையாவது ஒருவரை காதலிப்பது சாத்தியமற்றது, முறையற்றதும்கூட. மணமாகாத கிறிஸ்தவர், யெகோவாவை உண்மையோடு சேவிக்கிற ஒருவரையே மணம்செய்ய விரும்ப வேண்டும்.—1 கொரிந்தியர் 7:39.
“சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?”
“தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?” (உன்னதப்பாட்டு 3:6) எருசலேமின் பெண்கள் வெளியே சென்று பார்க்கையில் எதைக் காண்கிறார்கள்? இதோ, சாலொமோனும் அவருடைய ஊழியர்களும் நகரத்திற்குத் திரும்பி வருவதைக் காண்கிறார்கள்! கூடவே சூலேமிய பெண்ணையும் ராஜா அழைத்து வந்திருக்கிறார்.
அந்த மேய்ப்பனும் பின்தொடர்ந்து வந்து, சீக்கிரத்திலேயே அவளைப் பார்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கிறான். தான் அவளை நேசிப்பதாக அவன் சொல்கையில், அந்த நகரத்தைவிட்டு தான் வெளியே வர விரும்புவதை அவள் இவ்வாறு சொல்கிறாள்: “பகல் குளிர்ச்சியாகி நிழல்சாய்ந்துபோகும் வரைக்கும், நான் வெள்ளைப்போள மலையிலும் சாம்பிராணி மலையிலும் போயிருப்பேன்.” ‘தனது தோட்டத்துக்கு வந்து, அதன் கனிகளைப் புசிக்கும்படி’ அந்த மேய்ப்பனை அவள் அழைக்கிறாள். அதற்கு அவன், “என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன்” என பதில் அளிக்கிறான். எருசலேமின் பெண்கள் அவர்கள் இருவரிடமும் இவ்வாறு சொல்கிறார்கள்: “தோழர்களே, சாப்பிடுங்கள்! பேரன்பின் வெளிக்காட்டுகளால் குடித்து, வெறித்தவர்களாகுங்கள்!”—உன்னதப்பாட்டு 4:6, 16; 5:1, NW.
தான் கண்ட கனவைப் பற்றி அரசவை பெண்களிடம் சூலேமிய பெண் விவரித்த பிறகு தான் ‘காதல் நோயால் வாடுவதாக’ (NW) சொல்கிறாள். அதற்கு அவர்களோ, “மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?” என கேட்கிறார்கள். “என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்” என அவள் பதில் அளிக்கிறாள். (உன்னதப்பாட்டு 5:2-10) சாலொமோன் அவளைப் புகழ்மாரி பொழிகையில் தாழ்மையுடன் அவள் இவ்வாறு கேட்கிறாள்: “சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?” (உன்னதப்பாட்டு 6:4-13) அவளைத் தனது காதல் வலையில் வீழ்த்துவதற்கான சந்தர்ப்பமாக இதைக் கருதி, அவளை இன்னுமதிக புகழ் மழையில் நனைய வைக்கிறார். என்றாலும், மேய்ப்பன் மீதுள்ள தன் காதலை அந்தப் பெண் விட்டுக்கொடுக்காதிருக்கிறாள். கடைசியில் சாலொமோன் அவளைப் போக விடுகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
4:1; 6:5—அந்தப் பெண்ணின் கூந்தல் ‘வெள்ளாட்டு மந்தைக்கு’ ஏன் ஒப்பிடப்படுகிறது? அவளுடைய கூந்தல், வெள்ளாடுகளின் கறுமையான உரோமத்தைப் போல பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருந்ததை இது காட்டுகிறது.
4:11—சூலேமிய பெண்ணின் ‘உதடுகளிலிருந்து தேன் ஒழுகுவதும்’ அவளுடைய ‘நாவின்கீழ் தேனும் பாலும் இருப்பதும்’ எதை அர்த்தப்படுத்துகிறது? இந்தப் பெண்ணின் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுவதாக கூறும் ஒப்புமையும், அந்தப் பெண்ணின் நாவின்கீழ் தேனும் பாலும் இருப்பதாக சொல்லும் கருத்தும் சூலேமிய பெண் பேசிய வார்த்தைகளின் சிறப்பையும் இனிமையையும் வலியுறுத்துகின்றன.
5:12—‘அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகள், அவை பாலில் கழுவப்பட்டவைகள்’ என்பதன் கருத்து என்ன? அந்தப் பெண் தன் காதலனுடைய கண்களின் அழகை விவரிக்கிறாள். ஒருவேளை, அடர்நிற கருவிழியும் சுற்றிலும் வெண்நிறத்தில் இருக்கிற கண்களை பாலில் குளிக்கும் சாம்பல்-நீல வண்ண புறாக்களுக்கு ஒப்பிட்டு கவிதை நடையில் அவள் சொல்லியிருக்கலாம்.
5:14, 15—அந்த மேய்ப்பனின் கரங்களும் கால்களும் ஏன் இவ்விதமாய் விவரிக்கப்பட்டுள்ளன? அந்தப் பெண் தன்னுடைய மேய்ப்பனின் விரல்களைப் பொன் உருளைகளுக்கும் நகங்களை படிகப்பச்சைக்கும் ஒப்பிடுவதாகத் தெரிகிறது. அவருடைய கால்கள் வலுவாயும் அழகாயும் இருப்பதால் அவற்றை “பளிங்குத் தூண்களுக்கு” (NW) ஒப்பிடுகிறாள்.
6:4—அந்தப் பெண் ஏன் திர்சாவுக்கு ஒப்பிடப்படுகிறாள்? இந்தக் கானானிய நகரம் யோசுவாவால் கைப்பற்றப்பட்டது; சாலொமோனுடைய காலத்திற்குப் பின், இஸ்ரவேலருடைய பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் முதல் தலைநகரமாயும் ஆனது. (யோசுவா 12:7, 24; 1 இராஜாக்கள் 16:5, 6, 8, 15) “இது மிகவும் அழகான ஒரு நகரமாய் இருந்திருக்க வேண்டும்; அதனால்தான் அதைப் பற்றி இங்கு குறிப்பிடப்படுகிறது” என ஒரு புத்தகம் சொல்கிறது.
7:4—சூலேமிய பெண்ணின் கழுத்தை ‘யானைத் தந்தத்தினால் செய்த கோபுரத்திற்கு’ சாலொமோன் ஏன் ஒப்பிடுகிறார்? இதற்கு முன் அந்தப் பெண் இவ்வாறு புகழப்பட்டாள்: ‘உன் கழுத்து தாவீதின் கோபுரம் போலிருக்கிறது.’ (உன்னதப்பாட்டு 4:4) ஒரு கோபுரம் உயரமாகவும் ஒடுங்கியும் இருக்கும், யானைத் தந்தமோ மென்மையாக இருக்கும். சாலொமோன், அந்தப் பெண்ணின் ஒடுக்கமும், மென்மையுமான கழுத்தைப் பார்த்து மயங்கிவிடுகிறார்.
நமக்குப் பாடம்:
4:1-7. அந்தச் சூலேமிய பெண் அபூரணமானவளாக இருந்தபோதிலும், சாலொமோனின் வசீகர வலைகளைத் தவிர்ப்பதன் மூலம் தார்மீக ரீதியில் குறையற்றவளாக தன்னை நிரூபித்தாள். அவளுடைய இந்தத் தார்மீக பலம் அவளுடைய அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது. கிறிஸ்தவப் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும்.
4:12. சுற்றிலும் வேலி அடைக்கப்பட்ட அல்லது சுவர் எழுப்பப்பட்ட ஓர் அழகான தோட்டத்திற்குள், பூட்டி வைக்கப்படும் அதன் வாயில் வழியாக மட்டுமே செல்ல முடியும். அதுபோல, சூலேமிய பெண்ணும் தன்னுடைய பாசத்தையும் நேசத்தையும் தன் வருங்கால கணவரிடம் மட்டுமே காட்டினாள். மணமாகாத கிறிஸ்தவப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு, அல்லவா?
“யாவின் ஜுவாலை”
சூலேமிய பெண் தன்னுடைய வீட்டிற்குத் திரும்புவதைப் பார்க்கும் சகோதரர்கள், “தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?” என கேட்கிறார்கள். சில காலத்திற்கு முன் அந்தச் சகோதரர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருந்தார்: “அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப் பலகைகளை அதற்கு இணைப்போம்.” இப்போது சூலேமிய பெண்ணின் காதல் உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; அவள் சொல்கிறாள்: “நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.”—உன்னதப்பாட்டு 8:5, 9, 10.
உண்மையான அன்பு “யாவின் ஜுவாலை” (NW) போன்றது. ஏன்? ஏனெனில், அத்தகைய அன்பு கடவுளிடமிருந்து பிறக்கிறது. அன்பு காட்டுவதற்கான திறமையை நமக்குத் தந்தவர் அவரே. இந்த ஜுவாலையின் தழல் அணைக்க முடியாதது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் “மரணத்தைப்போல் வலிது [அதாவது, நிலையானது]” என இப்புத்தகம் அழகாக வருணிக்கிறது.—உன்னதப்பாட்டு 8:6.
சாலொமோனின் இந்தத் தலைசிறந்த பாடல், இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய பரலோக “மணவாட்டி” வகுப்பாருக்கும் இடையிலான பந்தத்தைப் பற்றியும் நமக்குத் தெரிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:2, 9) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் இயேசு காட்டும் அன்பு, ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலையும் விஞ்சி விடுகிறது. மணவாட்டி வகுப்பைச் சேர்ந்தோர் அவரிடம் ஆழ்ந்த பற்றுதலைக் காட்டுகிறார்கள். ‘வேறே ஆடுகளுக்காகவும்’கூட இயேசு அன்புடன் தம் ஜீவனைத் தந்தார். (யோவான் 10:16) ஆகவே, நிலையான அன்பிலும் ஆழ்ந்த பற்றுதலிலும் சூலேமிய பெண்ணின் முன்மாதிரியை உண்மை வணக்கத்தார் எல்லாருமே பின்பற்ற முடியும்.
[பக்கம் 18, 19-ன் படம்]
மணத்துணையைத் தேடுவது சம்பந்தமாக உன்னதப்பாட்டு புத்தகம் நமக்கு என்ன கற்பிக்கிறது?