நேர்மையால் நன்மையே
நேர்மையற்ற நடத்தை ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. எனினும், பெரும்பாலான கலாச்சாரத்தினரும், சமுதாயத்தினரும் நேர்மையாய் நடப்பதைப் பெரிதும் மதிக்கிறார்கள், பொய் பேசுவதையும் கபட வேஷம் போடுவதையும் வெறுக்கிறார்கள், கண்டிக்கிறார்கள். நம்பகமானவரென பெயரெடுப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். என்றாலும், நேர்மையற்ற விதமாய் நடந்தால்தான் இன்றைய சமுதாயத்தில் பிழைக்க முடியும் என்பதாகப் பெரும்பாலோர் கருதுகிறார்கள். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நேர்மை என்ற குணத்தை வளர்ப்பதில் நன்மை ஏதாவது இருக்கிறதா? ஒரு நடத்தையை, நேர்மையானது அல்லது நேர்மையற்றது என்பதை எதன் அடிப்படையில் நீங்கள் தீர்க்கிறீர்கள்?
கடவுளுக்குப் பிரியமாய் நடப்பதற்கு, நம் பேச்சிலும் வாழ்க்கைமுறையிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியம். அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு பின்வருமாறு புத்திசொன்னார்: “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.” (எபேசியர் 4:25) ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோம்’ என்றும் பவுல் எழுதினார். (எபிரெயர் 13:18) மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக நாம் நேர்மையாய் நடப்பதில்லை. நம் படைப்பாளருக்கு மரியாதை கொடுப்பதாலும் அவரைப் பிரியப்படுத்த விரும்புவதாலும் நாம் நேர்மையாய் நடக்கிறோம்.
வெளி வேஷம் போடாதீர்கள்
பல நாடுகளில், வாழ்க்கையில் மேம்படுவதற்காக மக்கள் தங்களது சுயரூபத்தை மறைத்துவிடுகிறார்கள். சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் நுழைவதற்கு அல்லது ஒரு வேலையைப் பெறுவதற்கு அல்லது தங்களுடைய தகுதிக்கு மிஞ்சின பதவியை அடைவதற்கு போலியான ஆவணங்களையும், கல்லூரி பட்டச் சான்றிதழ்களையும், அடையாள அட்டையையும் பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் நீண்ட நாட்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காகப் பிள்ளைகளுடைய போலி பிறப்பு சான்றிதழைப் பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு நாம் வஞ்சகர்களாய் இருக்கக்கூடாது. யெகோவா ‘சத்தியபரர்’ என்றும் அவருடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார் என்றும் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 31:5) யெகோவாவுடன் எப்போதும் நெருங்கிய நட்புறவை வைத்திருக்க நாம் விரும்பினால், ‘வஞ்சகரான’ ‘பொய்யரை’ நாம் பின்பற்றக் கூடாது.—சங்கீதம் 26:4; பொது மொழிபெயர்ப்பு.
செய்த தவறுக்குத் தண்டனை கிடைக்கும் என்பது தெளிவாய்த் தெரியும்போது ஆட்கள் பொதுவாகவே உண்மையை மறைத்துவிடுகிறார்கள். கிறிஸ்தவ சபையிலும்கூட அவ்வாறு நடந்துகொள்ள ஒருவர் தூண்டப்படலாம். உதாரணத்திற்கு, ஓர் இளைஞன் தான் சில பாவங்களைச் செய்துவிட்டதாக சபை மூப்பர்களிடம் ஒப்புக்கொண்டான். ஆனால், அவன் திருடியதற்கான ஆதாரம் இருந்தபோதிலும் அதை அவன் அவர்களிடம் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தபோது, அவனை சபைநீக்கம் செய்ய வேண்டியதாயிற்று. யெகோவாவுடன் உள்ள பொன்னான உறவை இழந்துவிடாதபடி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு, நேர்மை மனதோடு முன்னதாகவே அவன் உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், அல்லவா? சொல்லப்போனால், ‘கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 12:5, 6.
சில சமயங்களில் சபையில் பொறுப்பான ஸ்தானங்களில் இருந்து சேவை செய்ய விரும்பும் ஒரு சகோதரர், தன் சொந்தப் பிரச்சினைகளையோ ஒரு காலத்தில் முறைகேடாய் நடந்துகொண்டதையோ மறைக்க முயற்சி செய்யலாம். உதாரணத்திற்கு, விசேஷ சேவையில் பங்குகொள்வதற்கான விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, உடல்நலம், ஒழுக்க நெறிகள் சம்பந்தமான கேள்விகளுக்கு முழுமையாக பதில் அளிக்காதிருக்கலாம்; அத்தகைய விஷயங்களில் உள்ளதை உள்ளபடி எழுதினால் அந்த சேவைக்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என நினைத்துக்கொண்டு அவ்வாறு செய்திருக்கலாம். ‘நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே’ என அவர் நியாயப்படுத்தலாம், ஆனால் உண்மையிலேயே மற்றவர்களிடம் அவர் எதையும் மூடிமறைக்காமல், நேர்மையாய் நடந்துகொண்டாரா? நீதிமொழிகள் 3:32 சொல்லும் பின்வரும் குறிப்பைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் [அதாவது, அன்னியோன்னியம்] இருக்கிறது.”
நேர்மை என்பது முதலில் நமக்கு நாமே நேர்மையாய் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. சரி எதுவோ, உண்மை எதுவோ அதை நம்புவதற்குப் பதிலாக பெரும்பாலும் எதை நம்ப விரும்புகிறோமோ அதையே நாம் நம்புகிறோம். நம்மீதுள்ள பழியைத் தூக்கி மற்றவர்கள்மீது போட்டுவிடுவது எவ்வளவு எளிது! உதாரணத்திற்கு, சவுல் ராஜா மற்றவர்கள்மீது பழிபோடுவதன் மூலம் தான் கீழ்ப்படியாமல் நடந்துகொண்டதை நியாயப்படுத்த முயற்சி செய்தார். இதனால், ராஜாவாய் இராதபடி யெகோவா அவரைப் புறக்கணித்தார். (1 சாமுவேல் 15:20-23) அதற்கு நேர்மாறாக தாவீது ராஜா நடந்துகொண்டார்; யெகோவாவிடம் அவர் இவ்வாறு ஜெபித்தார்: “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.”—சங்கீதம் 32:5.
நேர்மைக்குப் பரிசு
மற்றவர்கள் நம்மை எப்படிக் கருதுகிறார்கள் என்பது நாம் நேர்மையாய் நடந்துகொள்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்ததே. ஒரேவொரு முறை ஜனங்களை நீங்கள் ஏமாற்றியிருந்தால்கூட அவர்களுக்கு உங்கள் மீதிருந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போய்விடும், அதை நீங்கள் மீண்டும் பெறுவது கடினம். மறுபட்சத்தில், நீங்கள் உண்மையுள்ளவராகவும், நேர்மையுள்ளவராகவும் நடந்துகொண்டால், உத்தமர், நம்பகமானவர் என பெயரெடுத்துவிடுவீர்கள். அத்தகைய நற்பெயரை யெகோவாவின் சாட்சிகள் சம்பாதித்திருக்கிறார்கள். இதோ சில அனுபவங்கள்:
ஒரு கம்பெனியின் இயக்குநருக்கு தன் பணியாளர்களில் பலர் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே போலீஸாரின் உதவியை நாடினார். யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் ஒரு பணியாளரையும் அவர்கள் கைதுசெய்திருந்தார்கள். அதை அவர் அறிந்தபோது, உடனடியாக அந்தச் சாட்சியை விடுவிக்கும்படியாக போலீஸாரைக் கேட்டுக்கொண்டார். ஏன்? ஏனெனில் யெகோவாவின் சாட்சியான அந்தப் பணியாளர் நேர்மையானவர், குற்றமற்றவர் என்பதை அந்த இயக்குநர் அறிந்திருந்தார். மற்றவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டபோது இவர் வேலை பறிபோகவில்லை. இவருடைய நடத்தை யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததை அறிந்த மற்ற சாட்சிகள் சந்தோஷப்பட்டார்கள்.
நன்னடத்தை மற்றவர்களுடைய கண்ணில் படாமல் போகாது. ஆப்பிரிக்கர் வாழும் ஒரு பகுதியில் பெரிய சாக்கடைக்கு குறுக்கே போடப்பட்டிருந்த பாலத்தில் சில மரச் சட்டங்கள் திருட்டுப் போய்விட்டதால் அந்தப் பாலத்தைப் பழுதுபார்க்க வேண்டியிருந்தது. அதற்குரிய மரச் சட்டங்களை வாங்கிப் பொருத்துவதற்குப் பணம் சேகரிக்க அங்கு வசித்தவர்கள் தீர்மானித்தார்கள்; அந்தப் பணத்தைச் சேகரித்து, செலவழிக்கும் பொறுப்பை யாரிடம் நம்பி ஒப்படைப்பது? யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் ஒருவரிடம் ஒப்படைப்பது என எல்லாரும் ஏக மனதாய் முடிவு செய்தார்கள்.
ஓர் ஆப்பிரிக்க நாட்டில் அரசியல், இனப் பிரச்சினை காரணமாக கலவரம் நடந்து வந்தது. அந்தச் சமயத்தில், ஒரு பன்னாட்டு கம்பெனியில் யெகோவாவின் சாட்சி ஒருவர் அக்கௌண்டன்டாக பணிபுரிந்து வந்தார். அங்கு நிலவிய சூழ்நிலை அவருடைய உயிருக்கே ஆபத்தாக இருந்ததால் அக்கம்பெனி அவரை வேறு ஊருக்கு மாற்றியது. கலவரம் அடங்கி சுமுக நிலை திரும்பும் வரை வேறொரு நாட்டில் தங்களுடைய சொந்த செலவில் அவர் வேலை செய்வதற்கு அது ஏற்பாடுசெய்து கொடுத்தது. ஏன்? ஏனெனில், முன்னொரு முறை கம்பெனியை மோசடி செய்வதற்கு சதிநடந்தபோது அதற்குத் துணைபோக அவர் மறுத்துவிட்டிருந்தார். அவர் தங்கமானவர், நேர்மையானவர் என பெயர் எடுத்திருந்ததை இயக்குநர்கள் அறிந்திருந்தார்கள். இவர் நேர்மையற்ற காரியங்களைச் செய்கிறவராய் இருந்திருந்தால் அந்த இயக்குநர்கள் இவருக்கு உதவ முன்வந்திருப்பார்களா?
“நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்” என நீதிமொழிகள் 20:7 சொல்கிறது. நேர்மையானவர் உத்தமரும்கூட. அவர் ஒருபோதும் பிறரை மோசடி செய்யவோ சுரண்டிப் பிழைக்கவோ மாட்டார். அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள், அல்லவா? நேர்மையாய் நடப்பது மெய் வணக்கத்தின் அதிமுக்கிய அம்சமாய் இருக்கிறது. கடவுளிடமும் பிறரிடமும் நமக்கு அன்பிருப்பதை அது வெளிக்காட்டுகிறது. நேர்மையாய் நடப்பதன் மூலம் இயேசு பின்வருமாறு குறிப்பிட்ட நடத்தை விதியை நாம் பின்பற்ற மனமுள்ளவர்களாய் இருப்பதைக் காட்டுகிறோம்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12; 22:36-39.
எல்லா சமயத்திலும் நேர்மையாய் நடந்துகொள்வதால் விரும்பாத விளைவுகளை எதிர்ப்படலாம்; ஆனால், நேர்மையாய் நடப்பதால் கிடைக்கும் சுத்தமான மனசாட்சிக்கு ஈடிணை எதுவுமே இல்லை. காலப்போக்கில், நீதிநேர்மையாய் நடப்பது பெரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கோடி கோடியாய் கொடுத்தாலும் யெகோவாவுடன் உள்ள உறவுக்கு ஈடாகாது. அப்படிப்பட்ட உறவை, மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவோ நியாயமற்ற விதத்தில் பயனடைவதற்காகவோ நேர்மையற்ற காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்? எத்தகைய சவால்களை நாம் சந்தித்தாலும், சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும்: ‘அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், யெகோவாவையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.’—சங்கீதம் 40:4.
[பக்கம் 18-ன் படங்கள்]
திருட்டு ஆவணங்களை மெய்க் கிறிஸ்தவர்கள் வாங்கவும் மாட்டார்கள், பயன்படுத்தவும் மாட்டார்கள்