எந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமா?
ஷாப்பிங் செய்யும்போது நல்ல பொருள்களைத் தேர்ந்தெடுத்து வாங்கவே நாம் எல்லாரும் விரும்புகிறோம். மார்கெட்டில் விதவிதமான பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கும்போது அவற்றில் நமக்கு ரொம்பவே பிடித்தமானதையும் நம் குடும்பத்துக்குத் தேவையானதையும் நாம் பொறுக்கி எடுக்கிறோம். துணிக் கடையில், நல்ல டிசைன்களிலும் நிறங்களிலும் உடைகளைப் பார்க்கும்போது, நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கையில் நாம் செய்யும் சில தெரிவுகள் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்தவை. ஆனால், நம் நலனைப் பாதிக்கக்கூடிய வேறுசில தெரிவுகளும் இருக்கின்றன. உதாரணமாக, சத்துள்ள உணவு, நல்ல நண்பர்கள் ஆகியவை நம் நன்மைக்காகச் செய்யப்படும் தெரிவுகளாகும். அப்படியென்றால், நாம் தேர்ந்தெடுக்கும் மதத்தைப்பற்றி என்ன சொல்லலாம்? நம் சொந்த விருப்பப்படி ஏதாவது ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கலாமா? அல்லது இது நம் நலனைப் பாதிக்கக்கூடிய முக்கியமான ஒன்றா?
நாம் தேர்ந்தெடுப்பதற்கு ஏகப்பட்ட மதங்கள் இருக்கின்றன. இப்போது அநேக நாடுகள் மத சுதந்திரத்திற்கு இடம் அளிப்பதால், தங்களுடைய பெற்றோரின் மதத்தை விட்டுவிலகுவதைப்பற்றி மக்கள் கவலைப்படுவதே இல்லை. அமெரிக்காவிலுள்ள 80 சதவீதத்தினர், “ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்கள் இரட்சிப்புக்கு வழிநடத்தலாம் என நம்புவதாக” அங்கு நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. அதற்குப் “பதில் அளித்தவர்களில் ஐந்தில் ஒருவர், தாங்கள் பெரியவர்களானபோது மதத்தை மாற்றிக்கொண்டதாகச் சொன்னார்கள்” எனவும் அந்தச் சுற்றாய்வு குறிப்பிட்டது. பிரேசில் நாட்டவரில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் தங்களுடைய மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என அங்கு நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது.
முன்பெல்லாம், ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசமான கொள்கைகளைப்பற்றி மக்கள் காரசாரமாக விவாதித்தார்கள். ஆனால், இன்றைய பிரபல கருத்து என்னவென்றால், ‘நீங்க எந்த மதத்தைத் தேர்ந்தெடுத்தாலும் பரவாயில்லை.’ இது சரிதானா? நீங்கள் தேர்ந்தெடுக்கும் மதம் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துமா?
விவரமான ஆட்கள் ஷாப்பிங் செய்யும்போது, தாங்கள் வாங்கும் பொருள்கள் எப்படித் தயாரிக்கப்பட்டன என்று விசாரிக்கிறார்கள். அதுபோல, நீங்களும் இவ்வாறு கேட்பது ஞானமானது: ‘இந்த வித்தியாசமான மதங்கள் எல்லாம் எப்படி வந்தன, ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன?’ இதற்கு பைபிள் விடை அளிக்கிறது.
மதங்கள் எப்படி உருவாகின்றன?
இயேசு பூமிக்கு வருவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பண்டைக் கால இஸ்ரவேலில் யெரொபெயாம் ராஜா ஒரு புதிய மதத்தை உருவாக்கினார். இவர், இஸ்ரவேலிலிருந்து தனியாகப் பிரிந்த வடக்கு ராஜ்யத்தின் முதல் ராஜாவாக இருந்தார். தன்னுடைய ஆதாயத்துக்காக மக்களைத் தன் பக்கம் வைத்துக்கொள்வது எப்படியென அவர் தீவிரமாய் யோசித்தார். “ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, . . . உங்கள் தேவர்கள்” என்று சொன்னார். (1 இராஜாக்கள் 12:28) தங்கள் வணக்க ஸ்தலமான எருசலேம் மீதிருந்த பற்றை ஜனங்களின் மனதிலிருந்து எடுத்துப்போடுவதற்காகவே அந்தப் புதிய மதத்தை ராஜா உருவாக்கினார் என்பது தெளிவாகிறது. யெரொபெயாம் உருவாக்கிய அந்த மதம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது; என்றாலும், கடவுளைவிட்டு விலகிப்போன அந்த இஸ்ரவேலருக்கு எதிராகக் கடவுள் பிற்பாடு நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்தபோது ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்தார்கள், பலர் நாடுகடத்தப்பட்டார்கள். யெரொபெயாம் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே ஒரு புதிய மதத்தை உருவாக்கினார். இன்றுவரை நீடித்திருக்கிற சில பிரபல மதங்களும்கூட ஆட்சியை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மதங்களே.
ஒரு புதிய மதத்தை உருவாக்குவதற்கான மற்றொரு உள்நோக்கத்தைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்விதமாய் சொன்னார்: “நான் போன பின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:29, 30) பெருமைபிடித்த தலைவர்கள் மற்றவர்களின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்காகவே பெரும்பாலும் புதிய மதங்களை உருவாக்குகிறார்கள். கிறிஸ்தவ மதம் என பாவனை செய்கிற சர்ச்சுகளுக்குள் ஏகப்பட்ட பிரிவுகள் தலைதூக்கி உள்ளன.
மதங்கள் யாரைப் பிரியப்படுத்த விரும்புகின்றன?
மக்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு புதிய மதத்தை ஆரம்பிக்க சிலர் தூண்டப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, மெகாசர்ச்சுகள் என்றழைக்கப்படும் சில அமெரிக்க சர்ச்சுகளைப்பற்றி எக்கானமிஸ்ட் என்ற பத்திரிகை அறிக்கை செய்தது. இந்த சர்ச்சுகள் வளர்ந்துவருவதற்குக் காரணம், “அவை சக்கைபோடு போடும் வியாபார நிறுவனங்களின் தாரகமந்திரத்தை, அதாவது, உங்கள் தேவை எங்கள் சேவை என்பதைப் பின்பற்றுவதே” என அப்பத்திரிகை குறிப்பிடுகிறது. சில மெகாசர்ச்சுகளில், “வீடியோ, நாடகம், நவீன இசை ஆகியவற்றுடன் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.” இந்த சர்ச்சுகளின் மதத்தலைவர்கள் சிலர், “செல்வந்தராக, ஆரோக்கியமாக, கவலையற்றவர்களாக” வாழ்வது எப்படியென தங்கள் சர்ச் அங்கத்தினர்களுக்குக் கற்றுக்கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இவை, கலைநிகழ்ச்சிகளை நடத்துகிற அல்லது “சுய உதவி தொழில் செய்கிற” சர்ச்சுகள் என விமர்சிக்கப்பட்டாலும் “இவை மக்களின் விருப்பங்களையே திருப்தி செய்கின்றன” என அதே பத்திரிகை குறிப்பிடுகிறது. அது முடிவாக இவ்வாறு கூறுகிறது: “வியாபாரமும் மதமும் கைகோர்த்து பீடுநடை போடுகின்றன.”
பிற மதங்கள் அந்தளவுக்கு வியாபார ரீதியானதாய் இராவிட்டாலும் “மக்களின் விருப்பங்களைத் திருப்தி செய்கிற” சர்ச்சுகள், பவுல் கொடுத்த எச்சரிப்பை நமக்கு நினைப்பூட்டுகின்றன. அவர் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.”—2 தீமோத்தேயு 4:3, 4.
பல மதங்களும் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையினால் உருவானவை அல்ல; மாறாக, ஆட்சி, அந்தஸ்து, ஆதரவு என இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையினால் உருவானவையே. எனவே, இத்தகைய மதங்கள், குழந்தைகள் துஷ்பிரயோகம், மோசடி, போர், தீவிரவாதம் ஆகியவற்றில் ஈடுபடுவது ஆச்சரியமல்லவே! பெரும்பாலும், இவை போலி மதங்களாகவே இருக்கின்றன. இத்தகைய மதங்களால் மோசம்போகாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
பல மதங்களும் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையினால் உருவானவை அல்ல; மாறாக, ஆட்சி, அந்தஸ்து, ஆதரவு என இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையினால் உருவானவையே