இனச் சகிப்பின்மைக்கு என்னதான் தீர்வு?
நடுவர் ஒருவர், ஸ்பெயினில் நடந்துகொண்டிருக்கும் ஒரு கால்பந்தாட்டத்தை இடையில் நிறுத்திவிடுகிறார். ஏன்? ஏனெனில், பார்வையாளர்கள் பலர் சேர்ந்து கேமருனின் ஒரு விளையாட்டு வீரரை தரக்குறைவாக பேசத் தொடங்கியதால், அந்த வீரர் போட்டியைவிட்டு வெளியேறுவதாக மிரட்டுகிறார். ஆப்பிரிக்கர்கள், ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் ஆகியவர்களுக்கு எதிராக பயங்கர தாக்குதல்கள் நடைபெறுவது ரஷ்யாவில் சர்வசாதாரணம் ஆகிவிட்டது; அங்கே, 2004-ல் இனத் தாக்குதல்கள் 55 சதவீதம் அதிகரித்ததால் 2005-ல் 394 சம்பவங்கள் நடைபெற்றன. பிரிட்டனில் வாழ்ந்து வரும் ஆசியர்களையும், கருப்பு இனத்தவர்களையும் வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; அந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இனப் பகைமையின் காரணமாக தங்கள் வேலையை இழந்ததாக உணர்ந்தார்கள். இந்த உதாரணங்கள் உலகமுழுவதும் பரவியிருக்கும் ஒரு போக்கைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இனச் சகிப்பின்மை பல முகங்களை உடையதாயிருக்கிறது; கொஞ்சம்கூட யோசிக்காமல் தரக்குறைவான வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதிலிருந்து, தேசிய கொள்கையின் காரணமாக ஓர் இனத்தையே பூண்டோடு ஒழிக்க முயற்சி எடுப்பதுவரை அது வித்தியாசப்படுகிறது. இனச் சகிப்பின்மை துளிர்விடுவதற்கு மூலக்காரணம் என்ன? அதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? மனித குடும்பங்கள் எல்லாமே சமாதானமாக ஒற்றுமையோடு வாழும் காலம் ஒரு நாள் நிச்சயம் வரும் என்று நம்பலாமா? இந்தக் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை பைபிள் அளிக்கிறது.
ஒடுக்குதலும் பகைமையும்
“மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 8:21) அதனால்தான், மற்றவர்களை ஒடுக்குவதில் சிலருக்கு அலாதி சந்தோஷம் கிடைக்கிறது. பைபிள் மேலுமாக சொல்கிறதாவது: ‘இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டு கண்ணீர் சிந்துகிறார்கள், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை, அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கியிருக்கிறது.’—பிரசங்கி [சபை உரையாளர்] 4:1, பொது மொழிபெயர்ப்பு.
இனப் பகைமை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருந்து வந்ததாக பைபிள் காட்டுகிறது. உதாரணத்திற்கு, 3,700 வருடங்களுக்கு முன்பாக, எகிப்திற்கு வந்து குடியேறும்படி எபிரெயனாகிய யாக்கோபையும் அவருடைய பெரிய குடும்பத்தினரையும் எகிப்திய பார்வோன் அழைத்தான். ஆனால், குடியேறிய இந்தப் பெரிய கும்பலைப் பார்த்து பிற்பாடு வந்த வேறொரு பார்வோன் அஞ்சத் துவங்கினான். அதன் காரணமாக, ‘அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கு, . . . நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான். அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்’ என்று அந்தப் பதிவு சொல்கிறது. (யாத்திராகமம் 1:9-11) யாக்கோபின் வம்சத்தாருக்கு புதிதாய் பிறந்திருந்த ஆண் பிள்ளைகளை கொன்றுவிடவும் எகிப்தியர்கள் கட்டளையிட்டார்கள்.—யாத்திராகமம் 1:15, 16.
துளிர்விடக் காரணம்?
இனச் சகிப்பின்மையை ஒழிக்க உலக மதங்களால் எந்த உதவியையும் அளிக்க முடியவில்லை. ஒடுக்குதலுக்கு எதிராக சில தனிப்பட்ட நபர்கள் தைரியமாக குரல் எழுப்பியிருப்பது உண்மைதான் என்றாலும், மதங்கள் பொதுவாக ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் அதுதான் நடந்தது; கருப்பு இனத்தவரை சட்டத்தாலும் சட்டமுறையின்றி தாங்களாகவே தீர்ப்புகள் அளித்தும் ஒடுக்கி வந்தார்கள். கலப்பட திருமணங்களுக்குத் தடைவிதித்த சட்டங்கள்கூட 1967 வரையில் அமுலில் இருந்தன. இன ஒதுக்கீட்டுக்கொள்கையின் பிடியிலிருந்த தென் ஆப்பிரிக்காவிலும் அதே சூழல் நிலவியது. சிறுபான்மையினர், தங்களுடைய பதவிகளை காத்துக்கொள்ள சட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள்; அச்சட்டங்கள் இனக்கலப்பு திருமணங்களையும் தடைசெய்திருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, சகிப்பின்மையை ஆதரித்து வந்த இனத்தைச் சேர்ந்திருந்த சிலர் அதிக மதப்பற்றுள்ளவர்களாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், இனச் சகிப்பின்மைக்கு வேறொரு முக்கிய காரணம் இருப்பதாக பைபிள் வெளிப்படுத்துகிறது. ஏன் சில இனத்தவர்கள் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள் என்பதை அது விளக்குகிறது: “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:8, 20) இந்தக் கூற்று இனச் சகிப்பின்மை துளிர்விடுவதற்கான காரணத்தை அடையாளங்காட்டுகிறது. தாங்கள் மதப்பற்றுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களோ இல்லையோ, ஜனங்கள் சகிப்பின்மையை ஆதரித்து வருகிறார்கள்; ஏனெனில், தேவனை அவர்கள் அறியவில்லை அல்லது அவரில் அன்புகூரவில்லை.
கடவுளைப் பற்றிய அறிவு —இன ஒற்றுமைக்கு ஆதாரம்
கடவுளைப்பற்றி அறிந்துகொள்வதும் அவரில் அன்புகூருவதும் இன ஒற்றுமைக்கு எவ்வாறு வழிநடத்தும்? பார்ப்பதற்கு வித்தியாசமானவர்களாய் இருப்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பதிலிருந்து ஜனங்களைத் தடுக்க கடவுளுடைய வார்த்தை எப்படிப்பட்ட அறிவைப் புகட்டுகிறது? யெகோவாவே மனிதவர்க்கம் முழுவதற்கும் பிதா என்று பைபிள் கூறுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 8:6) ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணினார்’ என்று மேலுமாக சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:26) எனவே, எல்லா மனிதர்களும் சகோதரர்களே.
எல்லா இனத்தவர்களுமே கடவுளிடமிருந்து உயிரைப் பெற்றுக்கொண்டதற்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தாலும், நாம் அனைவரும் பெற்றிருக்கும் ஒன்று நம்மை வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது. பைபிள் எழுத்தாளரான பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘ஒரே மனுஷனாலே பாவம் உலகத்திலே பிரவேசித்தது.’ எனவே, ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானோம்.’ (ரோமர் 3:23; 5:12) யெகோவா பல்வகைமையை விரும்பும் கடவுள். அவர் படைத்தவற்றில் எந்த இரு படைப்புகளும் ஒன்றுபோல் இல்லை. எனவே, தங்களை மேலானவர்களாக நினைப்பதற்கு எந்தவொரு இன வகுப்பாருக்கும் அவர் எந்தக் காரணத்தையும் அளிக்கவில்லை. தன்னுடைய இனம் மற்றவருடைய இனத்தைவிட மேலானது என்ற பரவலான எண்ணம், பைபிள் சொல்கிற உண்மைகளுக்கு முரணாகவே இருக்கிறது. தெளிவாகவே, கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிவு இன ஒற்றுமையையே முன்னேற்றுவிக்கிறது.
எல்லா தேசத்தாரின் மீதும் கடவுள் அக்கறை காட்டுகிறார்
இஸ்ரவேலர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் மற்ற தேசங்களிலிருந்து அவர்கள் பிரிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதன் மூலமும் கடவுள் ஒருதலைப் பட்சபாதத்தைக் காண்பித்தாரா என்று அநேகர் சந்தேகிக்கின்றனர். (யாத்திராகமம் 34:12) ஒரு காலத்தில், இஸ்ரவேலின் முற்பிதாவான ஆபிரகாமின் தலைசிறந்த விசுவாசத்தின் காரணமாக கடவுள், இஸ்ரவேல் தேசத்தைத் தமக்குச் சொந்தமான விசேஷித்த ஜனமாகத் தேர்ந்தெடுத்தார். பூர்வ இஸ்ரவேலை கடவுள் தாமே வழிநடத்தினார். அவர்களுக்கு அரசர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து சட்டங்கள் இயற்றுவதுவரை அனைத்தையும் அவரே செய்தார். இந்த ஏற்பாட்டை இஸ்ரவேலர் ஏற்றுக்கொண்டபோது, கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ராஜ்யத்தின் செயல்பாட்டுக்கும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ராஜ்யங்களின் செயல்பாட்டுக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தை வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் தெளிவாகவே கண்டார்கள். கடவுளோடு ஒரு நல்ல உறவை மறுபடியுமாக புதுப்பித்துக்கொள்ள மனிதவர்க்கத்துக்கு ஒரு பலி தேவை என்பதை யெகோவா அன்றைய இஸ்ரவேலருக்குப் போதித்தார். எனவே, இஸ்ரவேலரை யெகோவா நடத்திய விதம் எல்லா தேசங்களுக்கும் பயனுள்ளதாய் இருந்தது. அவர் ஆபிரகாமுக்குச் சொன்ன வார்த்தைகளிலிருந்து அதை நாம் தெரிந்துகொள்கிறோம். ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.”—ஆதியாகமம் 22:18.
கூடுதலாக, தேவனிடமிருந்து பரிசுத்த வாக்கியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பாக்கியம் யூதர்களுக்கு கிடைத்தது, மேசியா தங்களுடைய தேசத்தில் பிறக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள். ஆனால் இவை, எல்லா தேசங்களும் பயனடைவதற்கே செய்யப்பட்டன. யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட எபிரெய வேதாகமத்தில் மனதிற்கு இதமான ஒரு செய்தி அடங்கியிருக்கிறது. எல்லா இனத்தவர்களும் மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெறப்போகும் காலத்தைப்பற்றி அது இவ்வாறு சொல்கிறது: “திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார் . . . என்பார்கள். . . . ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:2-4.
இயேசு கிறிஸ்து தாமே யூதர்களிடம் பிரசங்கித்தாலும், அவர் இவ்வாறும் சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.” (மத்தேயு 24:14) நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பு எல்லா தேசங்களுக்குமே கிடைக்கும். இவ்வாறு, எல்லா இனத்தவரிடமும் யெகோவா பாரபட்சமின்றி நடப்பதன்மூலம் ஒரு பரிபூரண முன்மாதிரியை வைக்கிறார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
பூர்வ தேசமாகிய இஸ்ரவேலுக்கு கடவுள் கொடுத்திருந்த சட்டங்கள்கூட, எல்லா தேசங்களின் மீதும் அவர் அக்கறை கொள்கிறார் என்பதைக் காட்டுகின்றன. தங்கள் தேசத்திலிருந்த இஸ்ரவேலர்கள் அல்லாதவர்களை வெறுமனே சகித்திருந்தால் மட்டும் போதாது, இன்னும் அதிகத்தைச் செய்யவேண்டும் என்று அந்தச் சட்டங்கள் எவ்வாறு வலியுறுத்தின என்பதை கவனியுங்கள். பின்வரும் வார்த்தைகள் அதை காட்டுகின்றன: ‘உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்களே.’ (லேவியராகமம் 19:34) தங்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்திருக்கிறவர்களை தயவோடு நடத்த வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு கடவுள் கொடுத்த சட்டங்களில் பல கற்பித்தன. எனவேதான், இயேசுவின் முற்பிதாக்களில் ஒருவரான போவாஸ், அந்நிய ஸ்திரீ ஒருத்தி தன் வயல்களில் கதிர் பொறுக்குவதைப் பார்த்தபோது, தன் வேலையாட்களிடம் கூறி அவளுக்குப் போதுமானளவு தானியம் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். இவ்வாறு கடவுளிடமிருந்து கற்றிருந்தவற்றுக்கு இசைவாக அவர் செயல்பட்டார்.—ரூத் 2:1, 10, 16.
இயேசு தயவைக் கற்பிக்கிறார்
வேறு எவரையும்விட இயேசுவே, கடவுளுடைய அறிவை அதிகமாக வெளிப்படுத்தினார். வேறு இனத்தவர்களை எவ்வாறு தயவோடு நடத்த வேண்டும் என்பதை அவருடைய சீஷர்களுக்கு எடுத்துக் காட்டினார். ஒருமுறை, ஒரு சமாரிய பெண்ணிடம் பேசத் துவங்கினார். சமாரியர்கள், யூதர்களில் அநேகரால் வெறுக்கப்பட்ட இனத்தவர்களாய் இருந்தனர். அப்படியிருக்கையில், இயேசு தன்னோடு பேசியதைக் கண்ட சமாரிய பெண் ஆச்சரியப்பட்டாள். அவர்களுடைய அந்த உரையாடலின்போது, நித்திய ஜீவனை அவள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதைப்பற்றி அவளுக்கு தயவாக இயேசு புரியவைத்தார்.—யோவான் 4:7-14.
ஒரு நல்ல சமாரியனைப் பற்றிய உவமையைப் பயன்படுத்தி, வேறு இனத்தவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதையும் இயேசு கற்பித்தார். கள்ளர்களால் பயங்கரமாகத் தாக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்த ஒரு யூதனை அந்தச் சமாரியன் பார்த்தான். ‘ஒரு யூதனுக்கு நான் ஏன் உதவ வேண்டும்? யூதர்கள் என்னுடைய ஜனங்களைப் பகைக்கிறார்களே’ என்று ஒருவேளை அவன் யோசித்திருக்கலாம். ஆனால், அந்தச் சமாரியனோ அந்நியர்களை வித்தியாசமாய்க் கருதியதாக இயேசு சொன்னார். மற்ற வழிப்போக்கர்கள் குற்றுயிராய் கிடந்த யூதனைக் கண்டும் காணாததுபோல் சென்றுவிட்டாலும், அவனுக்காக அந்தச் சமாரியன் ‘மனதுருகினான்.’ அவனுக்குத் தேவையானதைவிட அதிக உதவியை அளித்தான். கடவுளுடைய தயவைப் பெற விரும்பும் எவரும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று கூறி இயேசு இந்த உவமையை முடித்தார்.—லூக்கா 10:30-37.
கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிற யாவரும் தங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஜனங்களை கடவுள் நடத்தும் விதமாகவே நடத்த வேண்டும் என்றும் பவுல் கற்பித்தார். அவர் எழுதினார்: “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை . . . இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:9-14.
கடவுளைப் பற்றிய அறிவு ஜனங்களை மாற்றுமா?
யெகோவா தேவனைப்பற்றி அறிந்திருப்பது, ஜனங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களை நடத்தும் விதத்தை உண்மையிலேயே மாற்றுமா? கனடாவுக்கு குடிபுகுந்த ஆசியாவைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிய அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் இன வேற்றுமைக்கு இலக்கானதால் மனச்சோர்வடைந்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்து, அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். பிற்பாடு, அவர்களைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார். அதில்: ‘நீங்கள் தயவுள்ள, அருமையான வெள்ளையர்கள். மற்ற வெள்ளையர்களைவிட நீங்கள் வித்தியாசப்பட்டவர்களென உணர்ந்தபோது, ஏன் நீங்கள் மட்டும் வித்தியாசமானவர்களாக இருக்கிறீர்கள் என்று பல முறை யோசித்திருக்கிறேன். கடைசியில், ஒரு முடிவுக்கு வந்தேன். ஆம், நீங்களே கடவுளுடைய சாட்சிகள். பைபிளில் ஏதோ இருக்க வேண்டும். உங்களுடைய கூட்டங்களில் வெள்ளை, கருப்பு, பழுப்பு, மஞ்சள் ஆகிய நிறத்தவர்கள் அநேகரைப் பார்த்தேன். இவர்கள் வெவ்வேறு நிறத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லாருடைய மனதும் வெள்ளையாகவே இருந்தது. ஏனென்றால், அவர்கள் சகோதர சகோதரிகள். அவர்கள் அப்படி அருமையாய் இருப்பதற்கு காரணம் யார் என்று இப்போது எனக்குத் தெரியும். உங்களுடைய கடவுளே.’
“பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” காலத்தைப்பற்றி கடவுளுடைய வார்த்தை முன்னறிவிக்கிறது. (ஏசாயா 11:9) பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, இப்போதும்கூட “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த” லட்சக்கணக்கான திரளான கூட்டத்தார் மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) பகைமை முறியடிக்கப்பட்டு அன்பு நிலைநாட்டப்படும் ஓர் உலகளாவிய சமுதாயத்தை அவர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். அது கூடிய சீக்கிரத்தில் நிஜமாகையில், ஆபிரகாமிடம் கூறப்பட்ட யெகோவாவின் பின்வரும் நோக்கமும் நிறைவேறும்: “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”—அப்போஸ்தலர் 3:25.
[பக்கம் 4, 5-ன் படம்]
அந்நியர்களை நேசிக்கும்படி கடவுளுடைய சட்டம் இஸ்ரவேலர்களுக்கு கற்பித்தது
[பக்கம் 5-ன் படம்]
நல்ல சமாரியனின் உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 6-ன் படம்]
தங்களை மேலானவர்களாக நினைப்பதற்கு எந்தவொரு இன வகுப்பாருக்கும் கடவுள் எந்தக் காரணத்தையும் அளிக்கவில்லை