வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தனக்கு ஊழியனாய் இருக்க தாவீதை சவுல் ராஜா முன்பே வரவழைத்திருந்தபோதிலும், கோலியாத்தை தாவீது கொன்ற பிறகு, அவரைப் பார்த்து “வாலிபனே, நீ யாருடைய மகன்” என்று ஏன் கேட்டார்?—1 சாமுவேல் 16:22; 17:58.
சவுல் முதன்முறையாக தாவீதைச் சந்தித்தபோது கொஞ்ச நேரமே அவருடன் செலவிட்டிருந்ததால், தாவீதை அவர் மறந்துவிட்டார் என்பது ஓர் எளிய பதிலாக இருக்கலாம். ஆனால், அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை; ஏனெனில், முக்கியமாக தாவீதை வரவழைப்பதற்குத்தான் சவுல் ராஜா ஆள் அனுப்பினார் என்றும் அவரை மிகவும் சிநேகித்தார் என்றும் அவரைத் தன்னுடைய ஆயுததாரியாக நியமித்தார் என்றும் 1 சாமுவேல் 16:18-23-ல் உள்ள பதிவு சொல்கிறது. எனவே, தாவீதை சவுல் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
1 சாமுவேல் 17:12-31; 17:55–18:5 ஆகியவற்றிலுள்ள வசனங்கள் பிற்பாடு சேர்க்கப்பட்டதாக சில பைபிள் அறிஞர்கள் சொல்கிறார்கள்; ஏனெனில், எபிரெய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பான கிரேக்க செப்டுவஜின்டின் சில பிரதிகளில் இவை காணப்படுவதில்லை. இந்தக் கிரேக்க செப்டுவஜின்ட் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது. எனினும், இதன் பிரதிகள் சிலவற்றை வைத்து மட்டுமே நாம் இந்த முடிவிற்கு வருவது ஞானமாக இருக்காது; ஏனெனில், இந்தப் பகுதிகள் எபிரெய வேதாகமத்தின் வேறு அதிகாரப்பூர்வ கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகின்றன.
முதலில் அப்னேரிடமும், பிறகு நேரடியாக தாவீதிடமும் அவருடைய அப்பாவின் பெயரை சவுல் கேட்டுத் தெரிந்துகொண்டார். இதிலிருந்து, தாவீதினுடைய அப்பாவின் பெயரை மட்டும் தெரிந்துகொள்வதில் சவுல் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாவீதை முற்றிலும் வித்தியாசப்பட்ட கண்ணோட்டத்தில் சவுல் பார்த்தார். அதாவது, சற்று முன்பு கோலியாத்தை வீழ்த்திய தாவீதின் அசைக்க முடியாத விசுவாசத்தையும் அசாத்திய தைரியத்தையும் அவர் பார்த்தார். எனவே, இந்த வாலிபனை வளர்த்து ஆளாக்கியவர் எப்பேர்ப்பட்டவராக இருப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். ஒருவேளை, தாவீதின் அப்பாவான ஈசாயையோ அவருடைய குடும்பத்தாரையோ தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வதைப்பற்றி சவுல் யோசித்திருக்கலாம்; ஏனெனில், தாவீதிடம் தென்பட்ட தைரியமும் துணிச்சலும் அவர்களுக்கும் இருக்குமென அவர் நினைத்திருந்திருக்கலாம்.
“நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன்” என்று தாவீது சொன்ன சுருக்கமான பதிலை மட்டும் 1 சாமுவேல் 17:58 குறிப்பிட்டாலும், அதற்கடுத்த வசனத்தை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் நீண்ட நேரம் உரையாடியிருப்பார்கள் எனத் தெரிகிறது. இதைப்பற்றி சி. எஃப். கைல், எஃப். டெலிட்ஷ் என்பவர்கள் சொல்வதைச் சற்று கவனியுங்கள்; “‘அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு’ என்று [1 சாமுவேல் 18:1-ல்] குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து தாவீதின் குடும்ப விஷயங்களைப்பற்றி சவுல் அதிகம் பேசியிருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது; இந்த வார்த்தைகள், அவர்கள் நீண்ட நேரம் உரையாடியிருப்பார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன.”
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, “வாலிபனே நீ யாருடைய மகன்” என்று சவுல் கேட்டபோது தாவீதைப்பற்றி அறிந்துகொள்வதற்காக மட்டுமே அப்படிக் கேட்டிருக்க மாட்டார் என்பது தெரிகிறது. ஏனெனில், தாவீதை சவுலுக்கு முன்பே தெரிந்திருந்தது. ஆனால், தாவீதின் குடும்பப் பின்னணியைப்பற்றித் தெரிந்துகொள்ளத்தான் அவர் அப்படிக் கேட்டிருந்திருப்பார் என்ற முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.
[பக்கம் 31-ன் படம்]
தாவீது யாருடைய மகன் என்று சவுல் ஏன் கேட்டார்?