சீஷராக்குவதில் தலைசிறந்து விளங்கியவரைப் பின்பற்றுங்கள்
“நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்.”—லூக்கா 8:18.
1, 2. ஊழியத்தில் தாம் சந்தித்த ஆட்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார் என்பதற்கு நீங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
இ யேசு கிறிஸ்து மிகப்பெரிய போதகராகவும் சீஷர்களை உருவாக்குவதில் தலைசிறந்தவராகவும் விளங்கினார்; அதனால்தான் “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்” என்று தம் சீஷர்களிடம் சொன்னார். (லூக்கா 8:16-18) ஒரு கிறிஸ்தவராக நீங்கள் செய்யும் ஊழியத்திற்கும் இந்த நியமம் பொருந்துகிறது. கடவுளையும் அவரது நோக்கங்களையும் பற்றிய போதனைகளை நீங்கள் செவிகொடுத்துக் கேட்டால் அதன்படி செயல்படுவீர்கள், ராஜ்யத்தை அறிவிப்பதில் திறம்பட்டவராகவும் ஆவீர்கள். இன்று இயேசுவின் குரலை நீங்கள் கேட்க முடியாதென்பது உண்மைதான்; ஆனால், அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் வேதவசனங்களிலிருந்து நீங்கள் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். ஊழியத்தில் தாம் சந்தித்த ஆட்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார் என்பதைப்பற்றி அவை என்ன காட்டுகின்றன?
2 இயேசு நற்செய்தியை அறிவிப்பதில் தன்னிகரற்று விளங்கினார்; சத்திய வசனங்களைப் போதிப்பதில் மிகச்சிறந்த ஆசானாய்த் திகழ்ந்தார். (லூக்கா 8:1; யோவான் 8:28) சீஷராக்கும் வேலையில் பிரசங்கிப்பது மட்டுமல்ல கற்பிப்பதும் உட்பட்டுள்ளது; என்றாலும், நற்செய்தியைத் திறம்பட பிரசங்கிக்கிற கிறிஸ்தவர்கள் சிலர் பயனுள்ள விதத்தில் கற்பிப்பதைச் சவாலாகக் காண்கிறார்கள். பிரசங்க வேலை என்பது ஒரு செய்தியை அறிவிப்பதைக் குறிக்கிறது; ஆனால், யெகோவாவையும் அவரது நோக்கங்களையும்பற்றி கற்பிக்கும் வேலையோ கற்றுக்கொடுப்பவர் தன்னுடைய மாணவருடன் ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்வதைக் குறிக்கிறது. (மத்தேயு 28:19, 20) பெரிய போதகரும் சீஷர்களை உருவாக்குவதில் தலைசிறந்து விளங்கியவருமான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது நம்மால் இதைச் செய்ய முடியும்.—யோவான் 13:13.
3. இயேசுவைப் பின்பற்ற முயல்வது சீஷராக்கும் வேலையில் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
3 கற்பிப்பதற்கு இயேசு பயன்படுத்திய முறைகளை நீங்கள் பின்பற்றினால் அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைகளையும் கடைப்பிடிப்பீர்கள்: “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு [அதாவது, பதில்] சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:5, 6) சீஷராக்கும் வேலையில் இயேசுவைப் பின்பற்றுவதற்கு முயற்சி தேவை; என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி ‘பதில் சொல்ல’ அது உங்களுக்கு உதவுவதால் கற்பிப்பதில் நீங்கள் திறம்பட்டு விளங்குவீர்கள்.
இயேசு மற்றவர்களை பேசும்படி ஊக்குவித்தார்
4. இயேசு நன்கு செவிகொடுப்பவராய் இருந்தார் என்று ஏன் சொல்ல முடியும்?
4 சிறுவயதிலிருந்தே மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதும் அவர்களிடம் கேள்விகள் கேட்டு பதிலை வரவழைப்பதும் இயேசுவின் வழக்கமாக இருந்தது. உதாரணமாக, அவருக்கு 12 வயதாக இருந்தபோது, ஆலயத்தில் போதகர்களின் நடுவே அமர்ந்து ‘அவர்கள் பேசுகிறதைக் கேட்பதையும், அவர்களை வினாவுவதையும்’ அவருடைய பெற்றோர் கண்டார்கள். (லூக்கா 2:46) தம்முடைய அறிவைக்காட்டி அந்தப் போதகர்களை மட்டம்தட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் இயேசு ஆலயத்திற்குச் செல்லவில்லை. அவர்களிடம் அவர் கேள்விகள் கேட்ட போதிலும் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கே அங்கு சென்றார். மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க மனமுள்ளவராய் இருந்ததே கடவுளிடமும் மனிதரிடமும் அவர் தயவைப் பெறுவதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்.—லூக்கா 2:52.
5, 6. மற்றவர்கள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்தபோது இயேசு செவிகொடுத்துக் கேட்டார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
5 முழுக்காட்டப்பட்டு மேசியாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும், மற்றவர்களுடைய கருத்தைக் கேட்பதில் இயேசுவின் ஆர்வம் தணிந்துவிடவில்லை. தம் பேச்சைக் கேட்க வந்தவர்களை மறந்துவிடுமளவுக்கு தாம் போதித்த விஷயங்களிலேயே அவர் மூழ்கிப் போய்விடவில்லை. பேச்சை இடையிடையே நிறுத்தி, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டார்; அதோடு அவர்கள் சொன்ன பதிலையும் காதுகொடுத்துக் கேட்டார். (மத்தேயு 16:13-15) உதாரணமாக, மார்த்தாளின் சகோதரனாகிய லாசருவின் மரணத்திற்குப் பிறகு, இயேசு அவளிடம் “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்று சொன்னார். அதன் பிறகு, ‘இதை விசுவாசிக்கிறாயா?’ என்று கேட்டார். “ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று மரியாள் சொன்ன பதிலுக்கு இயேசு செவிகொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (யோவான் 11:26, 27) மார்த்தாள் விசுவாசத்தோடு இவ்வாறு சொன்னதைக் கேட்டபோது இயேசுவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!
6 சீஷர்களில் அநேகர் அவரைவிட்டுப் பின்வாங்கிய சமயத்தில், தம்முடைய அப்போஸ்தலர்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள இயேசு ஆர்வமாயிருந்தார். எனவே, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு பின்வருமாறு பதிலளித்தார்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” (யோவான் 6:66-69) இவ்வார்த்தைகளைக் கேட்டு இயேசு எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார்! உங்களுடன் பைபிளைப் படிப்பவர் இதேவிதமாக தன் விசுவாசத்தை வெளிக்காட்டும்போது நீங்களும் நிச்சயம் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
இயேசு மதிப்புக்கொடுத்துக் கேட்டார்
7. சமாரியரில் அநேகர் இயேசுவை விசுவாசித்ததற்குக் காரணமென்ன?
7 சீஷர்களை உருவாக்குவதில் இயேசு திறம்பட்டவராக விளங்கியதற்கு மற்றொரு காரணம் அவர் மக்களிடம் அக்கறை காட்டியதும் அவர்கள் சொல்வதை மதிப்புக்கொடுத்துக் கேட்டதும்தான். உதாரணமாக, ஒரு சமயம் சீகாரிலிருந்த யாக்கோபின் கிணற்றுக்கு அருகே ஒரு சமாரியப் பெண்ணுக்கு இயேசு சாட்சி கொடுத்தார். அவ்வாறு சாட்சி கொடுக்கையில், இயேசு மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் அவள் சொன்னதையும் காதுகொடுத்துக் கேட்டார். அப்போது, கடவுளை வழிபடுவதில் அவளுக்கு ஆர்வம் இருந்ததைக் கண்டுகொண்டார்; கடவுள் தம்மை ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற ஆட்களையே தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இயேசு அவளுக்கு மதிப்புக்கொடுத்து, அவளிடம் கரிசனையோடு நடந்துகொண்டார்; உடனே, அவள் அவரைப்பற்றி மற்றவர்களிடம் தெரிவித்தாள். “அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.”—யோவான் 4:5-29, 39-42.
8. மக்கள் பொதுவாக தங்கள் கருத்தைத் தெரிவிக்க ஆர்வமுள்ளவர்களாக இருப்பது ஊழியத்தில் உரையாடலைத் துவங்க உங்களுக்கு எப்படி உதவலாம்?
8 மக்கள் பொதுவாக தங்கள் கருத்தைத் தெரிவிக்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, பண்டைய அத்தேனே பட்டணத்துக் குடிகள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லவும் புதிய கருத்துகளைக் கேட்கவும் ஆர்வமாயிருந்தார்கள். இதனால், அப்போஸ்தலன் பவுல் அப்பட்டணத்தின் மார்ஸ் மேடையில் சிறப்பான சொற்பொழிவாற்ற முடிந்தது. (அப்போஸ்தலர் 17:18-34) இன்றோ, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஆட்களிடம் பேசத் துவங்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “[ஒரு குறிப்பிட்ட விஷயத்தின்] பேரில் உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.” அந்த நபர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்; அதன்பேரில் குறிப்பு சொல்லுங்கள் அல்லது அது சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கேளுங்கள். பிறகு கனிவோடு அதைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டுங்கள்.
உரையாடலை எப்படித் துவங்குவதென்று இயேசு அறிந்திருந்தார்
9. கிலெயோப்பாவுக்கும் அவருடைய தோழருக்கும் ‘வேதவாக்கியங்களை விளக்கிக் காட்டுவதற்கு’ முன்பு இயேசு என்ன செய்தார்?
9 பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இயேசு ஒருபோதும் தவிக்கவில்லை. நன்கு செவிகொடுப்பவராக இருந்ததோடு மக்களின் மனதில் இருந்ததையும் இயேசு பெரும்பாலும் அறிந்திருந்தார்; அவர்களிடம் எதைச் சொல்ல வேண்டுமென்பதையும் அவர் சரியாக அறிந்திருந்தார். (மத்தேயு 9:4; 12:22-30; லூக்கா 9:46, 47) ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: இயேசு உயிர்த்தெழுந்து சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய சீஷர்களில் இருவர் எருசலேமிலிருந்து எம்மாவு என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அதைக் குறித்து சுவிசேஷத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார்.” நசரேயனாகிய இயேசு மக்களுக்குப் போதித்ததையும் அற்புதங்கள் செய்ததையும் கொல்லப்பட்டதையும், இப்போதோ அவர் உயிர்த்தெழுந்துவிட்டதாக சிலர் சொல்லிக்கொள்வதையும் அவர்கள் விவரமாகச் சொன்னபோது பெரிய போதகரான இயேசு செவிகொடுத்துக் கேட்டார். கிலெயோப்பாவும் அவருடைய தோழரும் சொன்ன எல்லாவற்றையும் இயேசு பொறுமையாகக் கேட்ட பிறகு, ‘வேதவாக்கியங்களை விளக்கிக்காட்டி’ அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை எடுத்துரைத்தார்.—லூக்கா 24:13-27, 32.
10. ஊழியத்தில் சந்திக்கிற ஒரு நபருடைய மத நம்பிக்கைகளை நீங்கள் எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்?
10 ஊழியத்தில் சந்திக்கிற ஒரு நபரின் மத நம்பிக்கைகளைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமலிருக்கலாம். அதைத் தெரிந்துகொள்வதற்கு, ஜெபத்தைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்க விரும்புவதாக நீங்கள் சொல்லலாம். பிறகு இவ்வாறு கேட்கலாம்: “நம் ஜெபங்களை ஒருவர் உண்மையிலேயே கேட்கிறார் என நினைக்கிறீர்களா?” அந்நபர் சொல்லும் பதிலிலிருந்து அவருடைய சொந்தக் கருத்தையும் மதப் பின்னணியையும்பற்றி நீங்கள் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். அவர் மதப்பற்றுள்ளவராக இருந்தால், அவருடைய கருத்தைப்பற்றி இன்னுமதிகம் தெரிந்துகொள்ள நீங்கள் இவ்வாறு கேட்கலாம், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கடவுள் எல்லா ஜெபங்களையும் கேட்பாரா அல்லது சில ஜெபங்களை அவர் கேட்காமல் இருந்துவிடுவாரா?” அத்தகைய கேள்விகள் நல்ல உரையாடலை ஆரம்பிப்பதற்கு உதவலாம். அதற்கான பதிலை பைபிளிலிருந்து காட்டுவது பொருத்தமாக இருக்குமானால், அவருடைய நம்பிக்கைகளைத் தாக்காமல் சாதுரியமான விதத்தில் அதை எடுத்துக்காட்ட நீங்கள் விரும்பலாம். நீங்கள் சொல்லும் விஷயங்கள் அவரைக் கவர்ந்திருந்தால், நீங்கள் திரும்பவும் வந்து சந்திப்பதற்கு அவர் இஷ்டப்படலாம். ஒருவேளை, உங்களால் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வியை அவர் கேட்கிறாரென்றால் அப்போது என்ன செய்வது? அதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தீர்களென்றால், உங்கள் “நம்பிக்கையைக் குறித்து . . . சாந்தத்தோடும் வணக்கத்தோடும்,” அதாவது ஆழ்ந்த மரியாதையோடும் பதில்சொல்ல நீங்கள் தயாராகச் செல்லலாம்.—1 பேதுரு 3:15.
இயேசு தகுதியுள்ள மக்களுக்குக் கற்பித்தார்
11. கற்றுக்கொடுப்பதற்குத் தகுதியானவர்களைக் கண்டுபிடிக்க எது உங்களுக்கு உதவும்?
11 பரிபூரண மனிதனாகிய இயேசு பகுத்துணர்வைக் காட்டினார்; கற்றுக்கொடுப்பதற்குத் தகுதியுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க அது அவருக்கு உதவியது. ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களைக்’ கண்டுபிடிப்பது நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 13:48, NW) அப்போஸ்தலருக்கும்கூட அவ்வாறே இருந்தது; எனவேதான் இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும் போது, அதிலே பாத்திரமானவன் [அதாவது, தகுதியுள்ளவன்] யாரென்று விசாரியுங்கள்.” (மத்தேயு 10:11) இயேசுவின் அப்போஸ்தலரைப் போலவே நீங்களும் செய்ய வேண்டும்; அதாவது, பைபிள் சத்தியங்களைச் செவிகொடுத்துக் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் மனமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஊழியத்தில் சந்திக்கிற ஒவ்வொரு நபருடைய கருத்துகளையும் கவனமாகக் கேட்டு, ஒவ்வொருவரின் மனநிலையையும் கருத்தில் கொள்ளும்போது தகுதியானவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
12. ஆர்வம் காட்டிய நபருக்கு நீங்கள் எவ்வாறு தொடர்ந்து உதவியளிக்க முடியும்?
12 ராஜ்ய செய்தியில் ஓரளவு ஆர்வம் காட்டிய நபரைச் சந்தித்த பிறகு, இன்னும் என்னென்ன பைபிள் சத்தியங்களை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என அதைப் பற்றியே சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும். நற்செய்தியை ஒருவரிடம் அறிவிக்கும்போது, அந்த உரையாடலிலிருந்து அவரைப்பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள் என்பதை எழுதிவைத்தால், ஆன்மீக ரீதியில் அந்நபருக்கு தொடர்ந்து உதவியளிக்க முடியும். அந்நபருடைய நம்பிக்கைகள், மனப்பான்மைகள், அல்லது சூழ்நிலைகள் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், மறுசந்திப்புகளின்போது அவர் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்பது அவசியம்.
13. பைபிளைப்பற்றி ஒரு நபர் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு எது உதவும்?
13 பைபிளைப்பற்றி தாங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி மக்களை நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்கலாம்? சில பிராந்தியங்களில் இவ்வாறு கேட்பது பயனுள்ளதாய் இருக்கிறது: “பைபிளைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா?” அந்த நபர் பைபிள்மீது மதிப்பு வைத்திருப்பவரா இல்லையா என்பதை அவருடைய பதிலிலிருந்து பெரும்பாலும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மற்றொரு வழியானது, ஒரு வசனத்தை வாசித்துவிட்டு, “இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்பதே. இயேசுவைப்போல, பொருத்தமான கேள்விகளைக் கேட்பதன்மூலம் ஊழியத்தில் நீங்கள் அதிகத்தைச் சாதிக்கலாம். இருந்தாலும், ஒரு முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.
இயேசு கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தினார்
14. மக்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைக்காமலேயே அவர்களுடைய கருத்துகளை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
14 மற்றவர்களுடைய கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம்காட்டுகிற அதே சமயத்தில் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாமலும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், இயேசு பயன்படுத்திய முறைகளைப் பின்பற்றுங்கள். அவர் மக்களைப்பற்றி முன்பின் யோசிக்காமல் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைக்கவில்லை; மாறாக, அவர்களைச் சிந்திக்க வைக்கும் கேள்விகளைக் கேட்டார். இயேசு கரிசனையோடு கேட்பவராகவும் இருந்தார்; தம்மிடம் வந்த மக்கள் புத்துணர்வு பெற உதவியதோடு அவர்கள் தம்மிடம் தயக்கமின்றி வருவதற்கும் உதவினார். (மத்தேயு 11:28) அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய பிரச்சினைகளைப்பற்றி அவரிடம் பேசுவதற்கு முன்வந்தார்கள். (மாற்கு 1:40; 5:35, 36; 10:13, 17, 46, 47) பைபிளையும் அதன் போதனைகளையும் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆட்கள் உங்களிடம் தயக்கமின்றித் தெரிவிக்க வேண்டுமானால், நீங்கள் அவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
15, 16. மதசம்பந்தமான விஷயங்களைக் குறித்த உரையாடலில் ஆட்களை நீங்கள் எப்படி ஈடுபடுத்தலாம்?
15 கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துவதோடு, ஆர்வமூட்டும் ஒரு தகவலைச் சொல்வதன் மூலமும், அதற்கான பதிலைச் செவிகொடுத்துக் கேட்பதன் மூலமும் ஒருவரை உங்களுடைய பேச்சில் ஈடுபடுத்தலாம். உதாரணமாக, நிக்கொதேமுவிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான்.” (யோவான் 3:3) இந்த வார்த்தைகள் நிக்கொதேமுவின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருந்தன, எனவே அதைக் குறித்து கேள்வி கேட்பதற்கும் இயேசுவுக்குச் செவிகொடுப்பதற்கும் அவர் தயங்கவில்லை. (யோவான் 3:4-20) இதேவிதமாக நீங்களும்கூட மற்றவர்களை உங்களுடைய பேச்சில் ஈடுபடுத்தலாம்.
16 இன்று, ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் புதுப்புது மதங்கள் உருவெடுப்பதைப் பற்றிய பேச்சுதான் அதிகம் அடிபடுகிறது. அத்தகைய நாடுகளில், பெரும்பாலும் இவ்வாறு சொல்வதன்மூலம் நீங்கள் உரையாடலைத் துவங்கலாம்: “ஏன் இத்தனை மதங்கள் என்று நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், எல்லா தேசத்தாரும் உண்மை கடவுளை ஒன்றுபட்டு வணங்கும் காலம் சீக்கிரத்தில் வரப்போகிறதென நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட ஒரு காலத்தைப் பார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா?” உங்களுடைய நம்பிக்கையைப் பற்றிய ஆச்சரியமூட்டும் ஒரு தகவலைச் சொல்வதன்மூலம், மக்கள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லும்படி நீங்கள் ஊக்குவிக்கலாம். ஏனெனில், இருவிதமான பதில்களைச் சொல்ல முடிந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பது எளிது. (மத்தேயு 17:25) நீங்கள் கேட்ட கேள்விக்கு வீட்டுக்காரர் ஏதாவது பதிலைச் சொன்ன பிறகு, ஒன்றோ இரண்டோ வேதவசனங்களைக் காட்டி அதற்கு நீங்களே பதிலளியுங்கள். (ஏசாயா 11:9; செப்பனியா 3:9) கவனமாகக் கேட்பதன் மூலமும் அந்நபர் சொல்லும் குறிப்புகளைக் கருத்தில் கொள்வதன் மூலமும் அடுத்த முறை சந்திக்கும்போது என்ன பேசுவது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும்.
இயேசு பிள்ளைகளுக்குச் செவிகொடுத்தார்
17. பிள்ளைகள்மீது இயேசுவுக்கு அக்கறை இருந்ததை எது காட்டுகிறது?
17 பெரியவர்களிடம் மட்டுமல்ல சிறியவர்களிடமும் இயேசு அக்கறை காட்டினார். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளையும் அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களையும்பற்றி அவர் அறிந்திருந்தார். பிள்ளைகளைத் தம்மிடம் வரும்படியும் சில சமயங்களில் அவர் அழைத்திருக்கிறார். (லூக்கா 7:31, 32; 18:15-17) இயேசுவின் பேச்சைக் கேட்க வந்திருந்த கூட்டத்தாரில் அநேக பிள்ளைகளும் இருந்தார்கள். மேசியாவைத் துதித்து இளம் பிள்ளைகள் ஆர்ப்பரித்தபோது, இயேசு அதைக் கவனித்து, வேதவாக்கியங்களில் அது முன்னுரைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார். (மத்தேயு 14:21; 15:38; 21:15, 16) இன்று, பிள்ளைகள் பலர் இயேசுவின் சீஷர்களாகி வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?
18, 19. இயேசுவின் சீஷராகுவதற்கு உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
18 சீஷராகும்படி உங்கள் பிள்ளைக்கு உதவ விரும்பினால், அவன் சொல்வதை நீங்கள் செவிகொடுத்துக் கேட்க வேண்டும். ஒருவேளை அவனுடைய சில கருத்துகள் யெகோவாவின் சிந்தைக்கு முரணானதாக இருக்குமானால் அவற்றை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். உங்கள் பிள்ளை என்ன சொன்னாலும்சரி, முதலாவதாக அவனைப் பாராட்டுவதே ஞானமான காரியம். அதன் பிறகு, பொருத்தமான வசனங்களைப் பயன்படுத்தி, யெகோவா காரியங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவலாம்.
19 பிள்ளைகளின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதற்கு கேள்விகள் பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால், கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைப்பதை பெரியவர்களைப் போலவே பிள்ளைகளும் விரும்ப மாட்டார்கள். கஷ்டமான கேள்விகளைக் கேட்டு உங்கள் பிள்ளையை திணறடிப்பதற்குப் பதிலாக, உங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விஷயத்தைச் சொல்லலாம், அல்லவா? பிள்ளையிடம் தெரிவித்த அந்த விஷயத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்பதையும் ஏன் அப்படி நினைத்தீர்கள் என்பதையும் சொல்லலாம். பிறகு, “நீயும்கூட அப்படித்தான் நினைக்கிறாயா?” என்று கேட்கலாம். உங்கள் பிள்ளைச் சொல்லும் பதில், சுவாரஸ்யமான நல்ல பைபிள் கலந்துரையாடலுக்கு வழிவகுக்கலாம்.
சீஷராக்குவதில் தலைசிறந்து விளங்கியவரை தொடர்ந்து பின்பற்றுங்கள்
20, 21. சீஷராக்கும் வேலையில் ஈடுபடுகையில் நீங்கள் ஏன் நன்கு செவிகொடுப்பவராக இருக்க வேண்டும்?
20 உங்கள் பிள்ளையிடமாவது வேறு யாரிடமாவது ஒரு விஷயத்தை நீங்கள் உரையாடுகையில், கவனமாகக் கேட்பது முக்கியம். சொல்லப்போனால், அது அன்பின் வெளிக்காட்டாக இருக்கிறது. செவிகொடுப்பதன்மூலம் நீங்கள் மனத்தாழ்மையைக் காட்டுகிறீர்கள், உங்களுடன் உரையாடுபவருக்கு மதிப்பையும் கனிவான அக்கறையையும் காட்டுகிறீர்கள். உண்மைதான், செவிகொடுத்துக் கேட்பதற்கு அந்நபர் சொல்வதை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம்.
21 ஊழியத்தில் ஈடுபடும்போது, வீட்டுக்காரர் சொல்வதைக் கவனமாகக் கேட்பதை பழக்கமாக்குங்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் காதுகொடுத்துக் கேட்டால், பைபிள் சத்தியங்களின் எந்தெந்த அம்சங்கள் அவர்களுடைய மனதைத் தொடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு, இயேசு பயன்படுத்திய பல்வேறு கற்பிக்கும் முறைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவ முயலுங்கள். அவ்வாறு செய்யும்போது, சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவீர்கள்; ஏனெனில், சீஷராக்குவதில் தலைசிறந்து விளங்கியவரை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.
உங்கள் பதில் என்ன?
• மற்றவர்கள் தங்களுடைய கருத்துகளைச் சொல்வதற்கு இயேசு எவ்வாறு ஊக்கப்படுத்தினார்?
• தாம் யாருக்கெல்லாம் கற்பித்தாரோ அவர்கள் பேசுவதை இயேசு ஏன் செவிகொடுத்துக் கேட்டார்?
• ஊழியத்தில் நீங்கள் எவ்வாறு கேள்விகளைப் பயன்படுத்தலாம்?
• பிள்ளைகளுக்கு ஆன்மீக ரீதியில் உதவுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
[பக்கம் 28-ன் படம்]
பிரசங்கிக்கையில், காதுகொடுத்துக் கேளுங்கள்
[பக்கம் 30-ன் படம்]
பிள்ளைகளுக்கு ஆன்மீக ரீதியில் உதவுகையில் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம்