நீங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வீர்களா?
“என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.”—யோபு 27:5.
1, 2. நாம் எதைக் ‘கட்ட’ வேண்டும், இப்போது என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
நீங்கள் புது வீடு கட்டுவதற்கான வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அது சகல வசதிகளுடன் இருக்கப் போவதைக் கண்டு வியந்துபோகிறீர்கள். அந்தப் புது வீட்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னென்ன சௌகரியங்கள் இருக்குமென்று நினைத்துப் பூரித்துப்போகிறீர்கள். ஆனால் அதையெல்லாம் உண்மையிலேயே அனுபவித்து மகிழ்வதற்கு, அதன் வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதும் மட்டுமே போதுமா? நீங்கள் வீட்டை நிஜமாகவே கட்டி, அதில் குடியேறி, அதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், அல்லவா?
2 அதேபோல், உத்தமம் என்ற குணம் நமக்குப் பிடித்த குணமாக இருக்கலாம்; அது நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் மிகுந்த பயனளிக்கிற முக்கிய குணமென நாம் நம்பலாம். என்றாலும், இந்தக் குணத்தினால் உண்மையிலேயே நன்மையடைவதற்கு, அதைப் பற்றி உயர்வாக எண்ணிப் பார்ப்பது மட்டுமே போதுமா? நம் உத்தமத்தைக் ‘கட்டவும்,’ அதைத் தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும், அல்லவா? இன்றைய உலகத்தில் நிஜமான வீட்டைக் கட்ட நிறைய செலவாகிறது. (லூக். 14:28-30) அதுபோலத்தான், உத்தமத்தைக் ‘கட்டுவதற்கும்’ அதிக நேரம் செலவாகும், அதிக உழைப்பும் தேவைப்படும்; ஆனால் இவை எதுவுமே வீண் போகாது. ஆகவே, நாம் இப்போது மூன்று கேள்விகளைச் சிந்திக்கலாம்: நாம் எப்படி உத்தமர்களாக விளங்கலாம்? நம் உத்தமத்தை எப்படிக் காத்துக்கொள்ளலாம்? யாராவது சிறிது காலத்திற்கு உத்தமத்தைக் காட்டவில்லை என்றால் அவர்கள் என்ன செய்யலாம்?
நாம் எப்படி உத்தமர்களாக விளங்கலாம்?
3, 4. (அ) நாம் உத்தமத்தை ‘கட்டுவதற்கு’ யெகோவா என்னென்ன வழிகளில் உதவுகிறார்? (ஆ) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் எவ்வாறு உத்தமர்களாக விளங்கலாம்?
3 நாம் உத்தமர்களாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற தீர்மானத்தை யெகோவா நம்மிடம் விட்டுவிடுவதன் மூலம் நம்மைக் கண்ணியப்படுத்துகிறார் என்பதைச் சென்ற கட்டுரையில் கவனித்தோம். அதற்காக, அவர் எந்த உதவியும் தராமல் நம்மை அம்போவென்று விட்டுவிடுவதில்லை. மாறாக, இந்த அருமையான குணத்தை எப்படி ‘கட்டுவது’ என்று கற்றுத்தருகிறார்; அதன்படி நடப்பதற்கு அவரது சக்தியையும் தாராளமாகத் தந்து உதவுகிறார். (லூக். 11:13) அதுமட்டுமல்ல, உத்தமத்தில் நடக்க முயலுவோருக்கு ஆன்மீகப் பாதுகாப்பை அருளுகிறார்.—நீதி. 2:7.
4 உத்தமத்தைக் காட்டுவதற்கு யெகோவா நமக்கு எப்படிக் கற்றுத்தந்திருக்கிறார்? மிக முக்கியமாக, தமது மகன் இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பியதன் மூலமாகும். இயேசு எப்போதுமே முழுமையான கீழ்ப்படிதலைக் காட்டினார். அவர் ‘மரணபரியந்தமும் கீழ்ப்படிதலை’ காட்டினார். (பிலி. 2:8) தம் பரலோகத் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்தே எல்லாக் காரியங்களையும் செய்தார்; மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலும்கூட அப்படிச் செய்தார். “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று யெகோவாவிடம் சொன்னார். (லூக். 22:42) ஆகவே, ‘நானும் அப்படிப்பட்ட கீழ்ப்படிதலைக் காட்டுகிறேனா?’ என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் நல்லெண்ணத்தோடு கீழ்ப்படிந்து நடந்தோமென்றால் உத்தமர்களாக விளங்குவோம். வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களில் கீழ்ப்படிதலைக் காட்டுவது மிக முக்கியமென இப்போது கவனிக்கலாம்.
5, 6. (அ) மற்றவர்கள் நம்மைப் பார்க்காத சமயங்களிலும் உத்தமத்தைக் காட்டுவதன் அவசியத்தை தாவீது எவ்வாறு வலியுறுத்தினார்? (ஆ) தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவர்களின் உத்தமத்திற்கு என்ன சவால்கள் ஏற்படுகின்றன?
5 நாம் தனியாக இருக்கும்போதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். சங்கீதங்களை எழுதிய தாவீது, தான் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களிலும் உத்தமத்தைக் காட்ட வேண்டும் என்பதை அறிந்திருந்தார். (சங்கீதம் 101:2-ஐ வாசியுங்கள்.) தாவீது ஒரு ராஜாவாக இருந்ததால் எப்போதும் அவரைச் சுற்றி நிறைய பேர் இருந்தார்கள். பல சந்தர்ப்பங்களில், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும்கூட ஆட்கள் இருந்திருப்பார்கள் என்பது நிச்சயம். (சங்கீதம் 26:12-ஐ ஒப்பிடுங்கள்.) அப்படிப்பட்ட சமயங்களில் அவர் உத்தமத்தைக் காட்டுவது அவசியமாக இருந்தது; ஏனென்றால், ஒரு ராஜாவாக அவர் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியிருந்தது. (உபா. 17:19, 20) ஆனாலும், அவர் ‘தன் வீட்டிலே,’ அதாவது தனிமையிலே இருக்கும் சமயங்களிலும் உத்தமத்தில் நடப்பதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். நாமும் அதை உணர்ந்திருக்கிறோமா?
6 “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்” என்று தாவீது குறிப்பிட்டதை சங்கீதம் 101:3-ல் நாம் வாசிக்கிறோம். இன்று, முக்கியமாக நாம் தனிமையில் இருக்கும்போது, தீய காரியங்களை நம் கண்முன் நிறுத்தத் தூண்டும் சூழ்நிலைகள் அடிக்கடி வருகின்றன. இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது பலர் இந்தச் சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மோசமான காரியங்களை, சொல்லப்போனால் ஆபாசத்தைக்கூட பார்ப்பதற்கு அவர்கள் எளிதில் கவர்ந்திழுக்கப்படலாம். ஆனால் அவற்றைப் பார்த்து ரசிப்பது, தாவீதை அப்படி எழுதும்படி தூண்டிய கடவுளுக்குக் கீழ்ப்படிவதாக இருக்குமா? ஆபாசத்தைப் பார்ப்பது பாதிப்பை ஏற்படுத்தும்; ஏனென்றால், அது இச்சையையும் பேராசையையும் தூண்டிவிடும், மனசாட்சியை மழுங்கடித்துவிடும், மணவாழ்க்கையைச் சிதைத்துவிடும், மதிப்புமரியாதையைக் குலைத்துவிடும்.—நீதி. 4:23; 2 கொ. 7:1; 1 தெ. 4:3–5.
7. நாம் தனியாக இருக்கும்போது உத்தமத்தைக் காத்துக்கொள்ள எந்த பைபிள் நியமம் உதவும்?
7 யெகோவாவின் ஊழியர்கள் யாரும் உண்மையில் தனியாக இருப்பதில்லை. ஏனென்றால், நம் பரலோகத் தகப்பன் எப்போதும் நம்மை அன்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார். (சங்கீதம் 11:4-ஐ வாசியுங்கள்.) நீங்கள் தீய ஆசைக்கு இணங்காதிருப்பதை யெகோவா பார்க்கும்போது எந்தளவுக்கு சந்தோஷப்படுவார்! நீங்கள் அப்படிச் செய்தால், மத்தேயு 5:28-ல் காணப்படுகிற இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள எச்சரிப்புக்குச் செவிசாய்க்கிறவர்களாக இருப்பீர்கள். கெட்டதைச் செய்யத் தூண்டும் படங்களை பார்க்கப் போவதே இல்லையெனத் திடத்தீர்மானமாயிருங்கள். ஆபாசமானவற்றைப் பார்க்கிற அல்லது படிக்கிற வெட்கங்கெட்ட செயலுக்காக, உங்கள் அருமையான உத்தமத்தையே விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்!
8, 9. (அ) தானியேலும் அவருடைய நண்பர்களும் உத்தமம் சம்பந்தமாக என்ன சவாலைச் சந்தித்தார்கள்? (ஆ) இன்று இளம் கிறிஸ்தவர்கள் எவ்வாறு யெகோவாவையும் சக கிறிஸ்தவர்களையும் சந்தோஷப்படுத்துகிறார்கள்?
8 நாம் உலகத்தாருடன் இருக்கையிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உத்தமர்களாக விளங்கலாம். தானியேலையும் அவருடைய மூன்று நண்பர்களையும் நினைத்துப் பாருங்கள். அந்த இளைஞர்கள் பாபிலோனுக்குச் சிறைக்கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டார்கள். அங்கே, யெகோவாவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத அல்லது ஒன்றுமே தெரியாத ஆட்கள் மத்தியில் அவர்கள் வாழ வேண்டியிருந்தது; கடவுளுடைய சட்டம் தடைசெய்திருந்த உணவு வகைகளைச் சாப்பிடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அந்த இளைஞர்கள் நினைத்திருந்தால், அப்படிச் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லையென நியாயப்படுத்தியிருக்கலாம். தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோராலும் மூப்பர்களாலும் ஆசாரியர்களாலும் பார்க்க முடியாதே என்று நினைத்திருக்கலாம். ஆனால் யார் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்? யெகோவா பார்த்துக் கொண்டிருப்பார். ஆகவே, அவர்கள் அந்த வற்புறுத்தலையும் ஆபத்தான சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் உறுதியாக நின்று யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.—தானி. 1:3–9.
9 அவர்களைப் போலவே, இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ இளைஞர்கள் யெகோவாவின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தீய செல்வாக்குக்கு இணங்காதிருக்கிறார்கள். இளைஞர்களான நீங்கள் போதைப்பொருட்கள், வன்முறை, கெட்ட பேச்சு, ஒழுக்கக்கேடு போன்ற தீய காரியங்களில் ஈடுபடாதிருந்தால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவீர்கள். அப்போது, உத்தமர்களாக விளங்குவீர்கள். இதனால் நீங்கள் பிரயோஜனம் அடைவீர்கள்; அதுமட்டுமல்ல, யெகோவாவையும் சக கிறிஸ்தவர்களையும் சந்தோஷப்படுத்துவீர்கள்!—சங். 110:3.
10. (அ) பாலியல் முறைகேடு குறித்த என்ன தவறான கருத்துகளால் சில இளைஞர்கள் தங்கள் உத்தமத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்? (ஆ) நாம் உத்தமத்தைக் காட்டுகிறவர்களாக இருந்தால், பாலியல் முறைகேட்டின் ஆபத்தை எவ்வாறு தவிர்ப்போம்?
10 எதிர்பாலாரோடு பழகும் விஷயத்திலும் நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும். கடவுளுடைய புத்தகம் பாலியல் முறைகேட்டைக் கண்டனம் செய்கிறதென நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், கீழ்ப்படிய வேண்டுமென்ற எண்ணம் மறைந்து, மனம்போன போக்கில் வாழலாம் என்ற எண்ணம் நமக்குள் எளிதாகத் தலைதூக்கிவிடலாம். உதாரணத்திற்கு, சில இளைஞர்கள் வாய்வழி அல்லது ஆசனவழி பாலுறவிலோ பரஸ்பர சுயபுணர்ச்சியிலோ ஈடுபட்டிருக்கிறார்கள்; இப்படிப்பட்ட பழக்கங்கள் உண்மையில் “பாலுறவு” அல்லவென்று அவர்கள் நினைப்பதால் இவற்றில் தவறேதும் இல்லையென நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், தவறான இந்த எல்லா நடத்தையும் பைபிள் குறிப்பிடுகிற பாலியல் முறைகேட்டில் உட்பட்டிருப்பதால் அவற்றில் ஈடுபடுகிறவர்கள் சபை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை அந்த இளைஞர்கள் மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே அசட்டை செய்கிறார்கள்.a அதைவிடக் கொடுமை என்னவென்றால், தாங்கள் உத்தமத்தைக் காட்டுவது அவசியம் என்பதையும் அசட்டை செய்கிறார்கள். ஆனால், நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்ளக் கடினமாய் முயலுவதால், தவறுசெய்வதற்குச் சாக்குப்போக்குகளைத் தேடுவதில்லை. தண்டனையில் மாட்டிக்கொள்ளாமல் எந்தளவுக்குப் பாவவழியில் போக முடியுமோ அந்தளவுக்குப் போகத் துணிவதில்லை. தவறுசெய்தால் சபையிடம் சிட்சைபெற வேண்டியிருக்கும் என்பதை மட்டுமே நாம் நினைப்பதில்லை. மாறாக, யெகோவாவின் மனதைப் புண்படுத்தாமல் இருக்கவும், அவருக்குப் பிடித்ததையே செய்யவும் கவனமாக இருக்கிறோம். எந்தளவுக்குப் பாவவழியில் போக முடியுமெனப் பார்ப்பதற்குப் பதிலாக, நாம் அதைவிட்டுத் தூரமாகப் போய், ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுகிறோம்.’ (1 கொ. 6:18, NW) இவ்வாறு, நாம் உண்மையிலேயே உத்தமத்தைக் காப்பவர்களெனக் காட்டுகிறோம்.
உத்தமத்தை எப்படிக் காத்துக்கொள்ளலாம்?
11. ஒரு முறை கீழ்ப்படிதலைக் காட்டுவதும்கூட ஏன் முக்கியம்? விளக்குங்கள்.
11 நாம் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் உத்தமத்தைக் காட்ட முடியும்; அப்படியென்றால், எப்போதும் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் எப்போதும் உத்தமத்தைக் காட்ட முடியும். ஒரு முறை காட்டப்படுகிற கீழ்ப்படிதல், சாதாரண விஷயமாக ஏன் அற்ப விஷயமாகக்கூட தெரியலாம். என்றாலும், மீண்டும் மீண்டும் காட்டப்படுகிற கீழ்ப்படிதல் நாம் உத்தமர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதை இப்படி விளக்கலாம்: ஒரேவொரு செங்கல் பார்ப்பதற்கு அற்பமாகத் தெரியலாம், ஆனால் செங்கலுக்கு மேல் செங்கலை வைத்துக் கவனமாகக் கட்டினால் நாம் ஓர் அழகான வீட்டை உருவாக்கிவிடலாம். அவ்வாறே, நாம் மேன்மேலும் கீழ்ப்படிதலைக் காட்டினால் நம் உத்தமத்தைக் காத்துக்கொள்ளலாம்.—லூக். 16:10.
12. மோசமாக நடத்தப்படும்போதும் அநியாயம் இழைக்கப்படும்போதும் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு தாவீது எப்படி நமக்கு உதாரணமாய்த் திகழ்ந்தார்?
12 முக்கியமாகக் கஷ்டங்களைச் சந்திக்கும்போதோ, தவறாக நடத்தப்படும்போதோ, அநியாயம் இழைக்கப்படும்போதோ சகித்திருந்தால் நாம் உத்தமர்கள் என்பது தெளிவாகத் தெரியும். தாவீதின் உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் அதிகாரத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியிருந்த ராஜாவே கொடுத்த உபத்திரவத்தை அவர் சகித்தார். சவுல் ராஜா, யெகோவாவின் தயவை இழந்திருந்தார்; அதோடு, யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதித்திருந்த தாவீதின் மீதுள்ள பொறாமையால் குமுறிக்கொண்டிருந்தார். ஆனாலும், சில காலத்திற்கு அவர் ராஜாவாகவே இருந்தார்; இஸ்ரவேல் சேனையைக் கூட்டிக்கொண்டு தாவீதைத் துரத்திச் சென்றார். இந்த அநியாயத்தைக் கொஞ்ச காலத்திற்கு யெகோவா அனுமதித்தார். இதனால், தாவீது அவர்மேல் எரிச்சலடைந்தாரா? சகித்திருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தாரா? இல்லவே இல்லை. மாறாக, சவுல் கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்பதை மனதில்வைத்து அவருக்கு மிகுந்த மரியாதை காட்டினார்; வசமான சந்தர்ப்பம் கிடைத்தபோதும்கூட அவரைப் பழிவாங்கவில்லை.—1 சா. 24:2–7.
13. நாம் ஏமாற்றப்படுகையிலோ புண்படுத்தப்படுகையிலோ எவ்வாறு உத்தமத்தைக் காத்துக்கொள்ளலாம்?
13 தாவீதின் உதாரணம் இன்றும்கூட நமக்கு எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது! நாம் அபூரண மனிதர் அடங்கிய உலகளாவிய அமைப்பின் பாகமாக இருக்கிறோம்; ஆகவே யாராவது உண்மையற்றவராகிவிடலாம் அல்லது நமக்கு அநியாயம் இழைத்துவிடலாம். நம் காலத்தில் யெகோவாவின் மக்கள் ஒட்டுமொத்தமாகச் சீரழிந்துவிட மாட்டார்கள் என்பது உண்மைதான். (ஏசா. 54:17) ஆனாலும், அவர்களில் ஒருவர் நம்மை ஏமாற்றுகையிலோ புண்படுத்துகையிலோ நாம் எப்படி நடந்துகொள்வோம்? அவர்மீது நாம் மனக்கசப்பை வளர்த்தால் கடவுளுக்கு நாம் உத்தமமாய் இருக்க முடியாமல் போய்விடும். மற்றவர்களுடைய நடத்தையைக் காரணங்காட்டி, கடவுள்மீது எரிச்சலடைவதோ சத்தியத்திலிருந்து விலகிவிடுவதோ நியாயமானதாய் இருக்காது. (சங். 119:165) எனவே, கஷ்டங்களின் மத்தியிலும் சகித்திருப்பது உத்தமத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும்.
14. பைபிள் வசனங்களுக்கான விளக்கங்களில் அல்லது தேவராஜ்ய ஏற்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால், உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?
14 குறை சொல்வதையும் குற்றம் கண்டுபிடிப்பதையும் தவிர்ப்பதன் மூலமாகக்கூட நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும். அப்படியென்றால் நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவர் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு இப்போது தம் மக்களை ஆசீர்வதிக்கிறார். தூய வணக்கம் இன்று பூமியில் சரித்திரம் காணாதளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. (ஏசா. 2:2–4) பைபிள் வசனங்களுக்கான விளக்கங்களில் அல்லது தேவராஜ்ய ஏற்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால் நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் நாளில் ஆன்மீக ஒளி அதிகமதிகமாய்ப் பிரகாசிப்பதற்கான அத்தாட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். (நீதி. 4:18) ஒரு மாற்றத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், அதைப் புரிந்துகொள்ள உதவும்படி யெகோவாவிடம் கேட்கிறோம். அதுவரையில், தொடர்ந்து கீழ்ப்படிதலோடு இருப்பதன் மூலம் உத்தமத்தைக் காத்துக்கொள்கிறோம்.
யாராவது உத்தமத்தைக் காட்டவில்லை என்றால்?
15. உங்களுடைய உத்தமத்தை யாரால் மட்டுமே எடுத்துப்போட முடியும்?
15 இது சிந்தனையைத் தூண்டும் கேள்வி, அல்லவா? முந்தின கட்டுரையில் நாம் பார்த்தபடி, உத்தமத்தைக் காட்டுவது அத்தியாவசியம். இல்லையென்றால், நமக்கு யெகோவாவுடன் எந்தப் பந்தமும் இருக்காது, எதிர்கால நம்பிக்கையும் இருக்காது. இதை நினைவில் வையுங்கள்: இப்பிரபஞ்சத்தில் ஒரே ஒருவரால் மட்டும்தான் உங்களுடைய உத்தமத்தை எடுத்துப்போட முடியும். அது நீங்களேதான். இந்த உண்மையை யோபு நன்றாக அறிந்திருந்தார். “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று அவர் சொன்னார். (யோபு 27:5) அதே உறுதி உங்களுக்கும் இருந்தால், அதோடு யெகோவாவுடன் எப்போதும் நெருங்கி இருந்தால், நீங்கள் உத்தமத்தை விட்டுவிடவே மாட்டீர்கள்.—யாக். 4:8.
16, 17. (அ) ஒருவர் மோசமான பாவத்தில் ஈடுபட்டபின் என்ன செய்யக் கூடாது? (ஆ) அவர் என்ன செய்ய வேண்டும்?
16 இருந்தாலும், சிலர் உத்தமத்தைக் காத்துக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். அப்போஸ்தலருடைய காலத்தில் நடந்ததுபோலவே, இன்றும் சிலர் மோசமான பாவங்களைச் செய்து வருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், இனி உங்களால் மீண்டுவரவே முடியாது என்று அர்த்தமா? இல்லை. அப்படியென்றால் என்ன செய்யலாம்? முதலில், நாம் என்ன செய்யக்கூடாது என்பதைக் கவனிக்கலாம். ஒரு தவறைச் செய்துவிட்டால், அதைப் பெற்றோரிடமோ, சக கிறிஸ்தவர்களிடமோ, மூப்பர்களிடமோ தெரிவிக்காமல் மூடிமறைக்கப் பார்ப்பது மனித இயல்பு. ஆனால், பைபிள் இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.” (நீதி. 28:13) பாவங்களை மூடிமறைக்கப் பார்க்கிறவர்கள் ஒரு பெரிய தவறைச் செய்கிறார்கள்; ஏனென்றால், கடவுளிடமிருந்து எதையும் மறைக்க முடியாதே! (எபிரெயர் 4:13-ஐ வாசியுங்கள்.) சிலர் இரட்டை வாழ்க்கை வாழவும் முயலுகிறார்கள்; அவர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வதுபோல் காட்டிக்கொண்டு, அதே சமயத்தில் பாவத்தைச் செய்துவருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உத்தம வாழ்க்கை வாழ்வதில்லை; சொல்லப்போனால் அதற்கு நேர்மாறாகவே வாழ்கிறார்கள். தாங்கள் செய்த மோசமான பாவங்களை மறைக்கிறவர்களின் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுடைய பாசாங்குத்தனம் அவருக்குக் கோபத்தையே உண்டாக்குகிறது.—நீதி. 21:27; ஏசா. 1:11–16.
17 ஒரு கிறிஸ்தவர் மோசமான பாவத்தில் ஈடுபட்டுவிட்டதை உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அவர் மூப்பர்களின் உதவியை நாட வேண்டும். ஆன்மீக ரீதியில் மோசமாக வியாதிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக யெகோவா ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். (யாக்கோபு 5:14-ஐ வாசியுங்கள்.) சிட்சைக்கோ புத்திமதிக்கோ பயந்து, அந்த வியாதியிலிருந்து குணமடைவதற்கு வழிதேடாமல் இருந்துவிடாதீர்கள். உயிருக்கு ஆபத்தான நோய் வந்தால், ஊசிபோட வேண்டியிருக்கலாம் அல்லது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்; ஞானமுள்ள ஒருவர், அந்தத் தற்காலிகமான வலிக்குப் பயந்து, நோயைக் குணப்படுத்த வேண்டாமெனச் சொல்லிவிடுவாரா?—எபி. 12:11.
18, 19. (அ) உத்தம வழியிலிருந்து விலகியவர், மீண்டும் அவ்வழிக்குத் திரும்ப முடியும் என்பதை தாவீதின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (ஆ) உத்தமராய் இருப்பது சம்பந்தமாக உங்கள் தீர்மானம் என்ன?
18 ஒருவர் முழுமையாகக் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? உத்தம வழியிலிருந்து விலகியவர், மீண்டும் அவ்வழிக்குத் திரும்ப முடியுமா? தாவீதின் உதாரணத்தை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். அவர் மோசமான பாவத்தைச் செய்துவிட்டார். வேறொருவருடைய மனைவியை அவர் இச்சையோடு பார்த்தார்; அதன் பிறகு அவளோடு விபச்சாரம் செய்தார். அதுமட்டுமின்றி, அவளுடைய அப்பாவிக் கணவரைத் திட்டமிட்டுக் கொலைசெய்தார். அந்தச் சந்தர்ப்பத்தில், தாவீதை உத்தமரென்று யாராவது நினைத்திருப்பார்களா? அந்தச் சூழ்நிலையிலிருந்து மீளமுடியாத நிலையில் அவர் இருந்தாரா? தாவீதுக்குக் கடுமையான சிட்சை தேவைப்பட்டது, அதை அவர் பெற்றார். அதன் பின்பு, அவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதால் யெகோவாவின் இரக்கத்தைச் சம்பாதித்தார். அந்தச் சிட்சையிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டு, தொடர்ந்து கடவுளுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டியதன் மூலம் மீண்டும் உத்தம வழியில் நடக்க ஆரம்பித்தார். நீதிமொழிகள் 24:16-ல் சொல்லப்பட்டிருப்பதற்கு தாவீது உதாரணமாகத் திகழ்ந்தார்: “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.” தாவீதுக்குக் கிடைத்த பலன்? அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி சாலொமோனிடம் யெகோவா என்ன சொன்னார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (1 இராஜாக்கள் 9:4-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய நினைவில் தாவீது ஓர் உத்தமப் புருஷனாகவே இருந்தார். ஆக, பாவம் செய்தவர்கள் மனந்திரும்பினால் மோசமான பாவங்களிலிருந்தும்கூட அவர்களைச் சுத்தமாக்க நிச்சயம் யெகோவாவால் முடியும்.—ஏசா. 1:18.
19 ஆம், கடவுள் மீதுள்ள அன்பினால் அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நீங்கள் உத்தமராக விளங்கலாம். தொடர்ந்து உண்மையோடு சகித்திருங்கள்; மோசமான பாவத்தைச் செய்துவிட்டால், உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலைக் காட்டுங்கள். நாம் உத்தமத்தைக் காட்டுவது எவ்வளவு மதிப்புமிக்கது! “நானோ என் உத்தமத்திலே நடப்பேன்” என்று தீர்மானமாய் இருந்த தாவீதைப்போல் நாமும் இருப்போமாக.—சங். 26:11.
[அடிக்குறிப்புகள்]
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• நீங்கள் எப்படி உத்தமராக விளங்கலாம்?
• உங்கள் உத்தமத்தை எவ்வழிகளில் காத்துக்கொள்ளலாம்?
• உத்தம வழியிலிருந்து விலகியவர், மீண்டும் அவ்வழிக்கு எப்படித் திரும்பலாம்?
[பக்கம் 8-ன் பெட்டி]
“அற்புதத்திலும் அற்புதம்!”
ஐந்து மாத கர்ப்பிணியாயிருந்த ஒரு பெண் சொன்ன வார்த்தைகளே இவை; முன்பின் தெரியாத ஒருவரது கருணையையும் உத்தமத்தையும் புகழ்ந்து அவர் அவ்வாறு கூறினார். அவர், ஒரு காபி கடைக்குச் சென்றிருந்தார்; அங்கே தன்னுடைய பர்ஸை விட்டுவந்திருந்ததைச் சிறிது நேரத்திற்குப் பிறகே உணர்ந்தார். அதில், 2,000 டாலர் பணம் வைத்திருந்தார்; பொதுவாக, அவ்வளவு பணத்தை அவர் பர்ஸில் வைப்பதில்லை. “நான் அப்படியே இடிந்துபோய்விட்டேன்” எனப் பிற்பாடு உள்ளூர் செய்தித்தாள் நிருபர் ஒருவரிடம் சொன்னார். அந்த பர்ஸைக் கண்டெடுத்த ஓர் இளம்பெண் அது யாருடையதென்று உடனடியாகத் தேட ஆரம்பித்தார். அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, அதை போலீசாரிடம் ஒப்படைத்தார்; அது அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுடையது என்பதைக் கடைசியாக போலீசார் கண்டுபிடித்தார்கள். “ஆ, இது அற்புதத்திலும் அற்புதம்!” என்று இதயத்தில் நன்றிபொங்க அந்தப் பெண் கூறினார். பணத்தை ஒப்படைக்க அந்த இளம்பெண் ஏன் அவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டார்? யெகோவாவின் சாட்சியாகிய அவர், “தன் உத்தமச் செயலுக்குப் பின்னாலிருந்தது தனது மதமே” எனப் பெருமிதத்துடன் தெரிவித்ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
[பக்கம் 9-ன் படம்]
சோதனைகள் வரும்போது இளைஞர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும்
[பக்கம் 10-ன் படம்]
ஒரு சமயம் உத்தம வழியிலிருந்து விலகிய தாவீது மீண்டும் அவ்வழிக்குத் திரும்பினார்