மனப்பூர்வமாய்க் கொடுங்கள் மகிழ்ச்சி காணுங்கள்
நன்கொடை கொடுப்பது பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும்; ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்.” (2 கொ. 9:7) உண்மை வணக்கத்தை ஆதரிக்கும்படி யெகோவா யாரையும் வற்புறுத்துவதில்லை. தம்முடைய ஊழியர்கள் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் கொடுப்பதன் மூலம் தங்களுடைய தேவபக்தியைக் காட்டுவதற்கு அவர் வாய்ப்பளிக்கிறார். பூர்வ காலத்திலிருந்தே கடவுளுடைய மக்கள் ஆர்வம் பொங்க நன்கொடை கொடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கு மூன்று உதாரணங்களை இப்போது சிந்திப்போம்.
இஸ்ரவேலர்களை யெகோவா எகிப்திலிருந்து விடுவித்த பிறகு அவர்களிடம் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி சொன்னார். அதற்கு நிறையப் பொருள்கள் தேவைப்பட்டன; அதையொட்டி, இஸ்ரவேலர்கள் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ‘எவர்களுடைய இருதயம் தூண்டப்பட்டதோ, அவர்கள் எல்லாரும்’ தங்களிடமிருந்த தங்கத்தையும் வெள்ளியையும் நகைகளையும் பிற பொருள்களையும் நன்கொடையாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். மக்கள் அந்தளவு தாராளமாகக் கொடுத்ததால், இனி நன்கொடை அளிக்க வேண்டாமென்று அறிவிப்பு செய்யப்பட்டது.—யாத். 35:5, 21; NW; 36:6, 7.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆலயம் கட்டப்படவிருந்த சமயத்தில் உண்மை வணக்கத்தை ஆதரிக்க கடவுளுடைய மக்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. தாவீது ராஜா தன் பங்கில் பெருமளவு நன்கொடை அளித்தார்; மற்றவர்களையும் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் ஆர்வம்பொங்க அளித்தார்கள். சொல்லப்போனால், அவர்கள் கொடுத்த தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு மட்டும் 10,000 கோடி டாலர்! யெகோவாவுக்கு மனப்பூர்வமாய் நன்கொடை அளித்ததில் மக்கள் அலாதி ஆனந்தம் அடைந்தார்கள்.—1 நா. 29:3-9; 2 நா. 5:1.
இவர்களைப் போலவே இயேசு கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்களும் சந்தோஷத்தோடு நன்கொடை அளித்தார்கள். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்; அவர்களில் பெரும்பாலோர் தொலைதூரத்திலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தார்கள். அதிக வசதி இல்லாதவர்கள். புதிதாகத் தழுவிய கிறிஸ்தவ மதத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்வதற்காக அவர்கள் எருசலேமிலேயே இன்னும் கொஞ்ச நாள் தங்க வேண்டியிருந்தது; அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக அங்கிருந்த கிறிஸ்தவர்கள் நன்கொடை திரட்டினார்கள். தங்களுடைய உடமைகளை விற்று, அந்தப் பணத்தை அப்போஸ்தலர்களிடம் ஒப்படைத்தார்கள். கிறிஸ்தவர்கள் இப்படி விசுவாசத்தையும் அன்பையும் காட்டியதைப் பார்த்து யெகோவா எவ்வளவாய்ச் சந்தோஷப்பட்டிருப்பார்!—அப். 2:41-47.
இன்றும்கூட, கிறிஸ்தவர்கள் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் தாராளமாகக் கொடுத்து, உண்மை வணக்கத்தை மகிழ்ச்சியோடு ஆதரித்து வருகிறார்கள். நீங்களும் அவ்வாறு ஆதரிப்பதற்கான சில வழிகளை இங்குள்ள பெட்டி காண்பிக்கிறது.
[பக்கம் 18-ன் பெட்டி]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டுப் பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலை” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் உங்கள் நாட்டிற்குரிய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். (கீழ்க்காணும் விதங்களிலும் உங்கள் நாட்டிற்குரிய கிளை அலுவலகத்திற்கு நன்கொடை அனுப்பி வைக்கலாம்.) காசோலைகளை “Watch Tower”a என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனையின் பேரில் நன்கொடை டிரஸ்ட் ஏற்பாடுb
உலகளாவிய வேலைக்காக டிரஸ்ட் ஏற்பாடுமூலம் “Watch Tower”c என்ற பெயருக்குப் பணம் அளிக்கலாம். என்றாலும், கொடுப்பவரது கோரிக்கையின் பேரில் பணம் திரும்பக் கொடுக்கப்படும். கூடுதல் தகவலுக்காக, தயவுசெய்து உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
திட்டமிட்ட நன்கொடைd
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின்மூலம் அல்லது தன் மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது சட்டப்பூர்வமான உயிலில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்; அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம்வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்குக் கைமாறாகப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டு.
உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சொத்து அல்லது பணத்தைச் சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள்மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்குச் சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இதுபோன்ற திட்டமிட்ட நன்கொடைமூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.e பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாகக் கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்கக் கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இச்சிற்றேடு தயாரிக்கப்பட்டது. அநேகர் இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகு உலகமுழுவதும் நடக்கும் நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் உதவியிருக்கிறார்கள்; அதேசமயம், தாங்களும் அதிக வரிவிலக்கைப் பெற்றிருக்கிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
Jehovah’s Witnesses,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072
[அடிக்குறிப்புகள்]
a இந்தியாவில், “The Watch Tower Bible & Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும்
b இந்தியாவுக்குப் பொருந்தாது
c இந்தியாவில், “The Watch Tower Bible & Tract Society of India” என்ற பெயருக்குப் பணம் அளிக்கலாம்
d குறிப்பு: வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள். அதோடு, முடிவாக எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்குமுன் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளுங்கள்.
e இந்தியாவில் கிடைப்பதில்லை